உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நரகம்

8. நரகம்

நரகத்திற்குச் செல்ல மனிதர் எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கின்றனர். அதில் நேர்பாதி போதுமே சுவர்க்கத்திற்குச் செல்ல - அதை நல்வழியில் எடுத்துக் கொள்ளும் துணிவுமட்டுமே தேவை.

-பென் ஜான்ஸன்

நரகம் என்பது வேறெங்குமில்லை. நன்றாய் ஆராய்ந்தால், அது பாவமே யாகும். கடவுளினின்று பிரிந்திருப்பதே நரகம்.

-பாஸ்ட்

நரகம் என்பது யாது? காலங் கடந்து கண்ட உண்மை; பருவம் கடந்து செய்த கடமை.

-எட்வார்ட்ஸ்

நரகத்திற்குள்ள வழி எளிது, கண்களை மூடிக்கொண்டே போகலாம்.

-பியன்

நான் நரகம் உண்டென்று நம்ப மட்டும் செய்யவில்லை. நரகம் உண்டென்று அறியவும் செய்பவன். அது மட்டுமா? நரகத்துக்கு அஞ்சி அறநெறி நிற்பவர் யாவரும் நரகத்தில் கால் வைத்துவிட்டவரே என்பதையும் அறிவேன்.

-ரஸ்கின்

சாஸ்திரிகளும், சாவோரும் நரகத்தைப்பற்றிப் பேசட்டும். ஆனால் நரக வேதனைகள் எல்லாம் என் இதயத்திலேயே உள்ளவை.

-ஷேக்ஸ்பியர்