உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்/அமெரிக்க காந்தி


அமெரிக்க காந்தி மார்ட்டின் லூதர் கிங்

அமெரிக்க நாட்டின் வெள்ளைகாரர்கள் அங்குபோய் ஒண்டி வாழ்ந்து வந்தவர்கள். அங்குள்ள நீக்ரோ மக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தி சொல்லமுடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கி அழிக்க முற்பட்டனர். நிக்ரோ இனத்தவரிடையே அடிக்கடி இனஉரிமை உணர்ச்சி எழுந்தது. ஆனால் அந்த உணர்ச்சி பலாத்கார வெறி உணர்ச்சியாகப் பல முறை வெடித்தது. வெள்ளைக்காரர்கள் நிக்ரோ மக்களின் இனஉரிமை போராட்டத்தை வன்முறைகளைக் கொண்டே அழித்து வந்தார்கள். இந்த நேரத்தில் மார்ட்டின் லூதர் கிங் புது வாழ்க்கையில் ஈடுபட்டார். வன்முறை வெறிக் கிளர்ச்சி எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்பதை கிங் உணர்ந்தார். சட்டத்திற்கு உட்பட்ட அகிம்சை அடிபடையிலான அறப்போர் என்றும் தோல்வியுறாது என்பதைப் புரிந்தார்.

கத்தியின்றி, இரத்தமின்றி, அறப்போராட்ட அடிப்படையிலே அடிமைத் தளையை அறுத்தெறிந்து விடுதலை பெற்று சுதந்திர சுகம் அளிக்கும், காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவம் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு ஒரு பாடமாக அமைந்தது. ஆனால் காந்தியடிகளை தனது அரசியல் ஆசானாக ஏற்றுக் கொண்டதினால் அவரை அமெரிக்க காந்தி என்று நீக்ரோ மக்கள் அழைத்தார்கள். தனது இனமக்களின் உரிமை உணர்வை ஒற்றுமைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, அதன் போக்கை, செயலை, நடவடிக்கைகளை, காந்திய வழியில் திருப்பிவிட்டார்.

நீக்ரோ மக்களின் உரிமை நோக்கத்தை அமெரிக்கா முன்னாள் குடியரசுத் தலைவர் கென்னடி மனப்பூர்வமாக ஏற்று அதைச் சட்டமாக்க வழிவகுத்தார். அவருக்கு பிறகு ஜனாதிபதி ஜான்சன் தனது மனப்பூர்வமான அங்கீகாரத்தை அளித்து நீக்ரோ மக்களின் சாசனத்தை சட்ட வடிவமாக்கி நிலைநிறுத்திவிட்டார்.


“வன்முறை வெறி முயற்சி அடிப்படையில் எங்களுடைய கிளர்ச்சி நடைபெற்றிருக்குமானால் உலக மக்களின் அனுதாபத்தை எங்களால் பெற்றிருக்க முடியாது, மாறாக இழந்திருப்போம். வெறும் ஆயுதங்களின் பலம் கொண்டு அந்தக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டிருக்கும் அல்லது நசுக்கப்பட்டிருக்கும்.காந்திய வழியை நான் முழு மனதோடு நம்பினேன், ஏற்றேன். காந்தி நெறிகளிலே இருந்து எள்ளளவும் தவறாமல் கிளர்ச்சிகளை நடத்தி வருகிறேன். வெள்ளையர்களின் வெறித்தனத்திற்கு எதிராக நடத்தப் பட்டிருக்கும் இன உரிமைக் கிளர்ச்சியிலே நல்ல மனம் படைத்த மனித நேயம் கொண்ட ஆங்கிலேயர்கள் ஏராளமாகப் பங்கேற்றார்கள். இந்த அற்புதச் சாதனைக்கு நான் காந்தியத்தைக் கடைபிடித்ததுதான் காரணம். எங்களுடைய கிளர்ச்சி தனிப்பட்ட யார் மீதும் பகை உணர்ச்சியைத் தூண்டவில்லை. அது அநீதிக்கு எதிரான அகிம்சைப் போராட்டமாக அமைந்தது. எனவே நீதியிலே, நேர்மையிலே நம்பிக்கையுடைய யாராலும் எங்களை அலட்சியப்படுத்த முடியவில்லை என்று மார்ட்டின் லூதர் கிங் பெருமிதத்துடன் முழக்கமிட்டார்.”


1964-ம் ஆண்டு, நோபல் சமாதானப் பரிசை கிங் பெற்றார். இந்த உலகப் பரிசு காந்திய தத்துவத்திற்காகக் கிடைத்த உலகப் பரிசு என்று கூறலாம். ஐக்கிய அமெரிக்கா நாட்டில் இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்து மார்ட்டின் லூதர்கிங் போராடினார். அதன் விளைவாக இன ஒதுக்கல் கொள்கையை சட்டவிரோதமானது என சிவில் உரிமை அமெரிக்க அரசினால் 1964-ல் சட்டமாக்கப்பட்டது.இந்தச் சமாதான் பணியின் தலைவர் என்ற காரணத்திற்காக அவர் நோபல் பரிசு பெற்றார்.

அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்றவர்களின் வரிசையில் கிங் 14-ம் இடத்தில் இருக்கிறார். நீக்ரோ சமுகத்தினரின் இரண்டு பேர் மட்டுமே இந்த பரிசை பெற்றிருக்கிறார்கள். அவர்களில் இரண்டாம் நபர் நம்முடைய கிங்.

அமெரிக்காவில் ஜியார்ஜியா அட்லாண்டா நகரில் லூதர் கிங் பிறந்தார். இவருடைய தந்தை அந்த வட்டார கிருத்துவ தலைவர், மகனும் தன்னைபோலவே ஒரு மதகுருவாக விளங்கவேண்டும் என்பது தந்தையின் விருப்பம். அந்த எண்ணத்தில் லூதர் கிங் பாஸ்டன் பல்கலைக் கழத்தின் கிருத்துவ மதத் தத்துவங்களைக் கற்று 1954-ம் ஆண்டில் சமயத்துறைக்கான டாக்டர் பட்டம் பெற்றார்.

நீக்ரோ மக்கள் படும் தொல்லைகளையும் அனுபவிக்கும் கொடுமைகளையும் கண்ணாரக் கண்டு அவர் அடிமைத்தனத்தை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டார். இதன் காரணமாக மதத்தலைவராகப் பயிற்சி பெற்ற கிங் மக்கள் தலைவரானார்.

தனது இன மக்களான நீக்ரோவினர், தாய்நாட்டில் வெள்ளையரின் பயங்கரக் கொடுமைகளுக்குப் பலியாகி நலிந்த காட்சி கிங் நெஞ்சத்தை உருக்கியது. காந்தியடிகளின் தத்துவம் உலகத்துக்கு ஒரு புதுமையாக விளங்கியதால். அதன் வழிவகைகளும் கிங் சிந்தனையைத் தூண்டிவிட்டன. தன் இனத்தவர் முன்னேற, சமத்துவம் பெற, காந்திவழி அல்லாமல் வேறு வழியில்லை என்ற முடிவிற்கு கிங் வந்தார். காந்தியடிகளின் தத்துவம் பற்றி பல மேடைகளில் கருத்துரையாற்றி நீக்ரோ மக்களின் மனத்தை பண்படுத்தி உரம் ஏற்றினார். இவருடைய காந்திய தத்துவ சொற்பொழிவினால் ஈர்க்கப்பட்ட வெள்ளையர் பலர் ஆவர். ஆங்கில இளைஞர்களும், மாணவிகளும் கிங் ஆற்றிய தத்துவ விளக்கத்தால் அவரைப் பின்பற்றலானார்கள். கிங்கினுடைய இலட்சியப் போராட்டத்திற்கு உலக மக்களது ஆதரவும், அனுதாபமும் ஏற்பட்டன. அவரதுக் கருத்துகளை கேட்க உலகமெங்கும் உள்ள முற்போக்கு வாதிகள், பகுத்தறிவுவாதிகள், மனித நேயவாதிகள் விருப்பம் கொண்டனர். உலகத்தின் பல பாகங்களுக்கும் சொற்பொழிவாற்ற வருமாறு அவருக்கு அழைப்புகள் வந்தன.


கிங் நடத்திய முதல் போராட்டம் பேருந்துக் கிளர்ச்சி அறப்போராகும். அமெரிக்காவில் பஸ்களில் பயணம் செய்யும் போது வெள்ளையர்கள் ஏறினால் நீக்ரோக்கள் எழுந்து தம்முடைய இருக்கையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தவறினால் அடி, உதை, குத்து, வெட்டு, ஆங்கிலேயர்களான பஸ் அதிபர்களும் நீக்ரோக்களுக்கு எதிராகவே செயல்பட்டனர். கிங் இந்தப் பழக்கவழக்கத்தை எதிர்த்தார். நீக்ரோக்கள் அனைவரும் பேருந்துகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் கூறியவாறு நீக்ரோ மக்கள் பஸ்ஸில் ஏறுவதை நிறுத்திவிட்டார்கள். இதனால் பஸ் அதிபரின் பாடு நெருக்கடி ஆகிவிட்டது. பஸ்ஸில் கூட்டம் படு மோசமாக குறைந்துவிட்டது. பஸ் நிறுவனங்களில் முக்கியமான வேலைகளை வகித்து வந்த நீக்ரோக்கள் தங்களது வேலைகளைத் தூக்கி எறிந்து வெளியேறினார்கள். இதனால் பஸ் தொழிலே நிலைகுலைந்தது.

பேருந்து உரிமையாளர்கள் கிங்கிற்கு இலஞ்ச ஆசை காட்டி மயக்கினார்கள். மயங்கவில்லை லூதர்; மிரட்டிப் பார்த்தார்கள், மிரளவில்லை லூதர். கடைசியாக எல்லா பஸ் அதிகாரிகளும் ஒன்று கூடி கிங் மீது வழக்குத் தொடுத்தார்கள். கிங் தூண்டுதலால் பஸ் தொழிலே நசிந்துவிட்டதாக குறைகூறினார்கள். நாட்டின் பெரிய வழக்குரைஞர்களெல்லாம், பஸ் உரிமையாளர்களுக்கு ஆதரவாக வாதாடி வந்தார்கள். மார்ட்டின் லூதர் கிங் தானே தனித்து நின்று வெள்ளையர்களை எதிர்த்து, தனது இன மக்களுக்காக வாதாடினார்.

உலக மக்களைக் கவர்ந்த அந்த வழக்கு இறுதியில் நீக்ரோ மக்களுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கியது. பஸ்களில் வெள்ளையருக்கு சமத்துவமான உரிமை நீக்ரோ மக்களுக்கு உண்டு என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். வழக்கின் முடிவு கிங்கிற்கு உலகப் புகழைப் பெற்றுதந்தது. அது முதல் இவர் உலகம் புகழும் தலைவரானார். இந்த வழக்கு நடைபெறும் போது லூதருக்கு வயது என்ன தெரியுமா?26 வயது.

ஆங்கில இனவெறிக் கொள்கை வெள்ளையர் வட்டாரத்தில் இந்த பஸ் வழக்கிற்குப் பிறகு பெருமளவில் பேய்விரித்து ஆடியது. பள்ளிகளில் நீக்ரோ மாணவர்கள் அவமானப் படுத்தப்பட்டார்கள், சிற்றுண்டிச் சாலையில் அடித்து நொருக்கப்பட்டார்கள், பொது இடங்களில் நடமாடவே முடியவில்லை.

28-9-1964-ம் ஆண்டில் மார்ட்டின் லூதர் கிங் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தினார். இரண்டு லட்சம் நீக்ரோ மக்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். வெள்ளையரும், வெள்ளை இனத்தவர்களான மாணவ, மாணவிகளும் ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். அந்த ஆர்ப்பாட்டப் பேராட்டம் ஊர்வலம் வாஸிங்டன் நகரில் ஆப்ரகாம்லிங்கன் நினைவுச் சின்னத்தின் அருகே சென்று அடைந்தது. அங்கு நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில் லூதர் கிங் ஆற்றிய சொற்பொழிவு உலகப்புகழ் பெற்ற உரிமைப் போர் முழக்கமாகத் திகழ்ந்தது. இந்த மகத்தான அறப்போரின் விளைவாக அமெரிக்க அரசு உடனடியாக அசைந்து கொடுத்து ஆவன செய்ய முன்வந்தது. தலைமுறை தலைமுறையாக நடைமுறையில் இருந்து வந்த இனவெறி மனப்பான்மையைத் தடைசெய்து சிவில் உரிமை மசோதாவாக அமெரிக்க ஆட்சியினர் சட்டமாக்கினர். இனி அமெரிக்காவில் எந்த நிலையிலும் நீக்ரோ இன மக்களுக்கு சம உரிமை உண்டு. அந்த உரிமையைத் தடுப்பவர்கள் சட்டபடி குற்றவாளியாவார்கள்.

இந்த நீக்ரோ இன சமத்துவ சட்டம் மனிதநேய உரிமையைப் பாதுகாக்கும் சட்டம் அமெரிக்கா அரசினால் கொண்டுவரபடுவதற்கு, காந்தியடிகளது அறப்போர் வழியைப் பின்பற்றி அகிம்சா தத்துவப்படி போராடிய அமெரிக்க காந்தி என்று அழைக்கப்படும் மார்ட்டின் லூதர் கிங் தனது இன மக்களுக்காகத் துப்பாக்கியால் சுடப்பட்டு துடிதுடித்து பலியானார்.