உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்/அயர்லாந்தின் விடுதலை வீரன்
வீரன் டிவேலரா
பகட்டான விளம்பரமே அவனுக்குப் பகை!
பணி செய்து தியாகத் தழும்புகள் ஏற்பதே அவனுக்கு நகை!
கடமை உணர்ச்சிகளே அவனுக்கு மனசாட்சி!
கட்டுப்பாடான அரசியல் அறமே அவனது உணர்ச்சி
கண்ணியமிக்கப் போராட்ட உணர்வான எழுச்சி!
இவைகளை மக்களுக்கு செய்வதே புரட்சி!
அயர்லாந்து நாட்டு மக்கள் இடையே இத்தகையத் தேசிய உணர்ச்சிகளைத் தட்டிஎழுப்பிக் கொண்டிருந்தான் அயர்லாந்து நாட்டின் விடுதலைத் தந்தையெனப் போற்றப்பட்ட மாவீரன்டிவேலரா!
ஐரிஷ் மக்களுக்காக அயராது உழைத்த அருந்தலைவன் என்று அயர்லாந்து மக்களால் புகழப்பட்டதால், அவனை உலக விடுதலை வரலாறு அயர்லாந்து நாட்டின் விடிவெள்ளி என்றும், ஐரிஷ் மக்களின் தந்தை என்றும் போற்றுகின்றது. அந்த நாட்டு மக்களும் அவனிடம் அளவிடற்கரிய அன்பையும், பெருமையையும், நம்பிக்கையையும் வைத்திருந்தார்கள்.
இன்றைக்கு ஏறத்தாழ நூற்றுப்பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஸ்பானிய நாட்டுத் தந்தைக்கும் அயர்லாந்து நாட்டு மாதரசிக்கும், அமெரிக்காவிலே உள்ள நியூயார்க் என்ற மாநகரிலே பிறந்தவர்தான் இந்த டிவெலரா! இவரது மூன்றாவது வயதிலேயே பெற்றோர்களை இழந்து, ஆனாதையானார்! அதனால் தாய்மாமனால் வளர்க்கப்பட்டார்.
இளம் வயதிலேயே தாய்தந்தையை இழந்த டிவேலரா, அங்குள்ள மக்களது அனுதாபத்தாலும், மாமனின் அன்பாலும் சிறிதுசிறிதாக கல்விப் பயிற்சி பெற்றுத் தேர்ந்து, கல்லூரிக் கல்வியையும் அரும்பாடு பட்டுப் பெற்று, பிறகு அமெரிக்கக் கல்லூரியிலே கணிதப் பேராசிரியர் பதவியைப் பெற்று பணியாற்றி வந்தார்!
இவ்வாறு கல்லூரி ஆசிரியராக இருந்தபோது, அரசியல் துறையிலே ஆர்வம் கொண்டார். அதற்கான வாய்ப்புகளும் அவரை அப்போது தேடி வந்தன.
கி.பி.1910-ஆம் ஆண்டில், தனது தாயின் தாய்நாடான அயர்லாந்து வந்து சேர்ந்தார். அப்போது அந்த நாட்டில் தேசிய எழுச்சிப்போர் பரவலாக உருவாகிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.
அந்த தேசிய எழுச்சியிலே கூட அவர் ஈடுபடாமல், மக்களுக்கு சேவை புரியும் இயக்கத்திலே சேர்ந்து, பொதுநலத் தொண்டிலே ஈடுபட்டார். பெயர் தான் மக்கள் பொது நலத் தொண்டு. ஆனால், அந்தத் தொண்டிலே தீவிரமாக ஈடுபட்டுச் சேவை புரிந்தவர்கள். பலர் தங்களது உயிர்களை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதற்குக் காரணம், அப்போது அயர்லாந்தில் நடந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட மக்களது தேசிய எழுச்சியின் கடுமையான போராட்டங்கள்தான்.
அத்தகைய உயிர் பாதுகாப்பற்ற போராட்டத்திலே, பொதுநலத் தொண்டு செய்து உயிர் இழக்காமல் பிழைத்த ஒரு சிலரிலே ஈமன் டிவேலராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அயர்லாந்து நாட்டு மக்களின் தேசிய உணர்ச்சி நெருப்பு கொழுந்து விட்டு எரியும் எழுச்சியைப் பார்த்தார் டிவேலரா. இது எதிர்காலத்தில் இந்த மக்களது பேராட்டம் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தது.
அதனால், அயர்லாந்து நாட்டு மக்களின் வாழ்வும், தாழ்வும் வெவ்வேறு அல்ல, நமது சொந்த வாழ்க்கையிலே ஏற்படும் வாழ்வும் தாழ்வும் வேறு அல்ல என்பதை அவர் பிரித்துப் பார்க்காமல், பொது நலமே தனது வாழ்வியல் நலம் என்று உணர்ந்தார்.
கி.பி. 1919-ஆம் ஆண்டில் அயர்லாந்து மக்கள் இடையே உருவான தேசியப் புரட்சியை, அப்போதைய அந்த நாட்டு பிரிட்டிஷ் அரசு, தேசியக் கலகம் என்ற பெயரைச் சூட்டி அடக்கு முறைகளை ஏவியது. இருந்தாலும், 1913-ஆம் ஆண்டு முதல் ஐரிஷ் நாட்டின் இளைஞர்கள் பலர் ஆயுதப் புரட்சிக்கு திட்டம் வகுத்து, அயர்லாந்து நாடு முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் புரட்சியை உருவாக்கி செயல்பட்டு வந்தார்கள்.
அந்த இளைஞர்கள் அணியிலே டிவேலரா சேர்ந்து ஒரு சிறு அணியைத் தலைமை தாங்கி நடத்தினார். இதற்கு முன்பு டிவேலராவுக்கு ராணுவ முறைப் பயிற்சியோ, ஆயுதப் புரட்சிக்குரிய ஆக்கப் பணிகளோ ஏதும் தெரியாது.
என்றாலும், ஆயுதப் புரட்சியைச் செய்த மற்ற இளைஞர் அணிகளின் வீரதீர சாகச போர்த்திட்டங்களைவிட, அரிய முறையிலே தனது அணியை நடத்தி, மற்ற ராணுவ அனுபவ சாலிகள் எல்லாம் வியந்து பாராட்டும் அளவுக்கு டிவேலரா செயல்பட்டார்!
இத்தகைய வீரப்போர் புரியும் ஆற்றல் பெற்ற டிவேலரா, கி.பி.1919-ஆம் ஆண்டில் நடந்த அயர்லாந்து மக்களின் தேசிய எழுச்சிப் போராட்டத்தின் போது பொதுநலத் தொண்டிலே மட்டுமே ஈடுபட்டாரே, ஏன்?
1919-ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் ஆட்சி எதிர்ப்பு ஆயுதப் புரட்சியாளர்கள், தாங்கள் நடத்திய அப்போதைய புரட்சி நன்றாகத் திட்டமிட்டு நடத்தப்படாததால், தடி தூக்கியவன் எல்லாம் புரட்சிக்காரன் என்று தங்களையே சிலர் அவ்வாறு எண்ணிக்கொண்டு மனம்போன போக்கிலே புரட்சியை நடத்தியதால், அந்தத் தேசிய எழுச்சியானது புரட்சியாக மற்றவர்களுக்குப் புலப்படாமல் தேசியக் கலகமாகத் தோற்றமளித்தது. அதனால் டிவேலரா அந்த எழுச்சியில் நேரிடையாக ஈடுபடாமல், மக்கள் பொதுநலச் சேவைப் பிரிவில் சேர்ந்து தொண்டாற்றிடும் நிலை ஏற்பட்டது.
அது மட்டுமல்ல; புரட்சியை நடத்த முற்பட்ட ஆயுதமேந்திய இளைஞர் படைகள் எல்லாம். தங்களது வெற்றியிலேயே தங்களுக்குள் நம்பிக்கை அற்றவர்களாகச் செயல்பட்டார்கள். அவர்களுக்குள் ஏன் அந்த எண்ணம் ஏற்பட்டுவிட்டது என்றால், நாம் நடத்தும் ஆயுதப் புரட்சி ஓர் அடையாளம்தான் என்ற அளவோடு அந்த இளைஞர்களது படை திருப்தி அடைந்து விட்டதும் ஒரு காரணமாகும்.
இந்த ஆயுதம் தாங்கிய புரட்சிப் படைகளுக்கு இடையேதான், டிவேலரா தலைமை தாங்கி நடத்திய எழுச்சிப்படை மூர்க்கத்தனமாகவும், திறமையாகவும் செயல்பட்டதால், ராணுவப் பயிற்சி பெற்றிருந்த அந்த ஆயுதப்புரட்சியாளர்கள் எல்லாம் டிவேலரா தலைமையைக் கண்டு பெருமூச்சுவிட்டு ஆச்சரியப்பட்டார்கள்.
டிவேலராவின் அந்த ஆயுதப் புரட்சிப்படையின் செயல் திறனைக் கண்ட பிரிட்டிஷ் தளபதிகளிலே ஒருவர், “எல்லாருமே டிவெலராவைப் போலவே திட்டமிட்டு அணி வகுத்துப் புரட்சியை நடத்திய திறமை சாலிகளாக இருந்திருந்தால், ஐரிஷ் கலகத்தை எளிதில் அடக்கி இருக்கமுடியாது” என்று ஆவேசத்தோடும் வியப்போடும் கூறினர்.
தேசிய எழுச்சிப் புரட்சியின் போது பலவீனப்பட்டுத் தோற்றுப்போன படையினர், பிரிட்டிஷார் படையினரிடம் சரணாகதி அடைந்து விட்டார்கள். ஆனால், டிவேலரா மட்டும் சரணடையாமல் தனது படையின் அணிவகுப்பைத் தளரவிடாமல், சோர்வடைய விடாமல் மூர்க்கத்தனமான வெறியோடு போராடவைத்தார்.
இருந்தாலும், டிவேலரா அணியிலே இருந்த ஒரு சில கோழைகளின் நச்சரிப்புத் தாங்க முடியாமல், கடைசியில் டிவேலராவும் பிரிட்டிஷ் படையினரிடம் சரணடைந்தார்.
பிரிட்டிஷ் ஆட்சி, டிவேலராவையும், அவருடன் வீர தீரமாகப் போரிட்ட நண்பர்கள் ஆறுபேரையும் கைது செய்து, நீதிவிசாரணை நடத்தி, அவர்களுக்கு ஆயுள் தண்டனையை வழங்கியது. அவர்கள் லீவிஸ் என்ற சிறையிலே அடைக்கப்பட்டார்கள்.
டிவேலராவையும், அவருடன் தீவிரமாகச் செயல்பட்ட ஆயுதமேந்திய இளைஞர்களையும் ஆயுள் தண்டனை கொடுத்துச் சிறையிலே பூட்டிவிட்டதால், அயர்லாந்திலே இனி புரட்சி வெடிக்க வழியில்லை என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தப்புக்கணக்குப் போட்டது.
வீரன் எங்கிருந்தால் என்ன? அவனுக்கு சிறையும் - வீடும், நாடும் ஒன்றுதான் என்று சிந்தித்த டிவேலரா, தன்னுடன் இருந்த நண்பர்களையும், மற்ற சரணாகதி அடைந்த இளைஞர்களையும் ஒன்று திரட்டி, பல விதமான புரட்சிகளைச் சிறைக்குள்ளேயே செய்து கொண்டிருந்தார்.
சிறை அதிகாரிகள் சரணாகதியடைந்தவர்களை நேர்மையாக, மனிதாபிமானத்தோடு, நடத்தாமல், கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிடும் கொடுங்கோலர்களாக இருக்கிறார்கள் என்ற காரணத்தை டிவேலரா பிரிட்டிஷ் ஆட்சிக்கு உணர்த்தி, சிறைக்குள்ளேயே ஒரு புரட்சி இயக்கத்தை நடத்தி ஆட்சியினரை, சிறை அதிகாரிகளை ஆட்டிப்படைத்தபடியே இருந்தார்.
எதற்கும் அஞ்சாமல் ஓர் ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து சிறைப் புரட்சி நடத்தும் டிவேலராவை, வேறு ஒரு சிறைக்கு மாற்றியது ஆங்கில ஆட்சி!
சிறையிலே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்த டிவேலராவின் சிறைப்புரட்சிச் செயல்கள், நாட்டு மக்களிடையே பெரும் கிளர்ச்சியையும், எழுச்சியையும், உணர்ச்சிகளையும் உருவாக்கி, டிவேலராவின் நாட்டுப்பற்றுத் தியாகங்கள் மீது பெரும் நம்பிக்கையை, மரியாதையை, மதிப்பை உருவாக்கியது மட்டுமல்ல; டிவேலராதான் நமக்குரிய தலைவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தின.
எதிர்பாராமல் டிவேலரா 1917-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்! மக்கள் அவர்மீது வைத்திருந்த உண்மையான நம்பிக்கையால், அவருக்கு மாபெரும் வரவேற்பை வழங்கி, வாழ்த்தினார்கள். அன்றைய வரவேற்புக் கூட்டத்தில் டப்ளின் நகர மக்கள் கடல்போலத் திரண்டு வந்திருந்தார்கள்.
சிறையிலே இருந்து விடுதலை பெற்ற டிவேலரா, மனம் மாறிக் காணப்பட்டார். ஓர் ஏகாதிபத்திய ஆட்சியை வன்முறைப் புரட்சிகளால் தூக்கி எறிய முடியாது. சட்டத்துக்கு உட்பட்ட செயல்முறைகளால் தான் அந்த அரசை அகற்ற முடியும் என்று உணர்ந்தார்.அதாவது, ஈமன் டிவேலரா என்ற அந்தப் புரட்சியாளன் கத்தியின்றி. ரத்தமின்றி, அகிம்சா முறைகளாலான சட்டத்துக்குட்பட்ட போராட்டங்களால் தான் ஐரிஷ் மக்களுக்குரிய சுநந்திரத்தைப் பெற்றுத் தரமுடியும் என்ற அயர்லாந்து காந்தியடிகளானார்.
தனது காந்தீய சிந்தனைக் கேற்றவாறு, அயர்லாந்து மக்களுக்காக ஐரிஷ் என்ற கட்சி, அதாவது ஐரிஷ் மொழியிலே சின்ஃபின் இயக்கம் என்ற ஒரு கட்சியைத் துவக்கினார்.
இந்தக் கட்சியிலே, நாட்டு மக்களை உறுப்பினராக்கினார்! அயர்லாந்து நாட்டு மக்களது விடுதலைக்காக அரும்பாடுபட்டு வந்தார்: “உடல் மண்ணுக்கு, உயிர் நாட்டு விடுதலைக்கு” என்று விடுதலைத் தாரக மந்திரத்தை உருவாக்கி மக்கள் இடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தினார்.
பிரிட்டிஷ் சட்டசபைக்கான தேர்தல், 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது. டிவேலரா கிஷேர் என்ற மாநிலத்தின் தொகுதியிலே இருந்து போட்டியிட்டு வாகைசூடினார்.
வெற்றிபெற்ற டிவேலரா, “சட்டமன்றத்தில் இருந்து கொண்டே அயர்லாந்து சுதந்திரத்திற்காக வாதாடிப் போராடி நாட்டை மீட்பேன்” என்று சங்க நாதம் செய்தார்! மக்கள், தங்கள் தலைவனின் தளராத போராட்ட உணர்வைக் கேட்டுப் போற்றி மகிழ்ந்தார்கள்.
ஆங்கில சட்டசபையில் அயர்லாந்தின் சுதந்திரம் பற்றி முழக்கமிட்டதற்காக, 1918-ஆம் ஆண்டின் போது டிவேலரா கைது செய்யப்பட்டார். ஏன் கைது செய்யப்பட்டார்?
அந்த நேரத்தில் ஜெர்மனி நாட்டுடன் பிரிட்டிஷ் கடும் போரில் ஈடுபட்டிருந்தது. அயர்லாந்து நாட்டு மக்கள் ராணுவச் சேவைக்காக கட்டாயமாகச் சேரவேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி கட்டாயக் கட்டளையிட்டது
இந்த ஏதேச்சாதிகார உத்தரவை எதிர்ந்து அயர்லாந்து நாடு வெடித்தெழுந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் கிளர்ச்சி வீறிட்டது. இந்த உத்தரவை எதிர்ந்து டிவேலரா வீரமுழக்கம் செய்து மக்களை விழிப்படையச் செய்தார் என்ற காரணத்தைக் குற்றமாகச் சாட்டி அவரைக் கைது செய்தது ஆங்கில ஆட்சி!
பிரிட்டிஷ் ஆட்சியின் ஏகாதிபத்திய ஆணவத்தின் முதுகெலும்பான இந்தக் கட்டாயக்கட்டளையை எதிர்த்துக் கட்டுக்கு அடங்காமல் கலகம் செய்து கொண்டிருந்த மக்களை ஆங்கிலேய அரசு கைது செய்தது அல்லவா? அந்தக் கிளர்ச்சிக் காரர்களுடன் டிவேலராவையும் சேர்ந்து லிங்கன் என்ற சிறையிலே அடைக்கப்பட்டார். இதனால் அயர்லாந்து மக்கள் கொதிப்படைந்து, கடலலைகளைப் போல பொங்கி எழுந்தார்கள்.
ஆங்கிலேய ஆட்சியின் உத்தரவுக்காக ராணுவத்தில் கூலிப்பட்டாளமாகச் சேருவதை விட, ‘அயர்லாந்து நாட்டுக்குச் சுதந்திரம் கொடு! இல்லையானால் போராடிச் சாவோம்’ என்ற விடுதலைக் கோஷங்களை வீதி வீதியாக எழுப்பிக் கொண்டு மக்கள் டப்ளின் நகரத்தையே முற்றுகையிட்டார்கள். இந்தச் சுதந்திரக் கொந்தளிப்பு அயர்லாந்து முழுவதும் வீராவேஷமாகப் பரவியது.
“எங்கள் தலைவர் டிவேலரா வாழ்க! அவர் என்ன கூறுகிறாரோ அதைத்தான் கேட்போம். பிரிட்டிஷ் உத்தரவை மதிக்கமாட்டோம்; மீறுவோம் அயர்லாந்து பிரிட்டிசுக்கு ஒத்துழைப்புத் தராது பிரிட்டிஷ் ஆட்சியே அயர்லாந்தை விட்டு வெளியேறு” என்று மக்கள் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியபடியே, வாழ்க டிவேலரா! ஓங்குக ஐரிஷ் இயக்கம் என்று ஊர்வலம் சென்றார்கள்! இந்த ஊர்வலத்தினர் வன்முறையிலும் ஈடுபட்டார்கள்.
1919 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஐரிஷ் சட்டமன்றத்தின் முதற்கூட்டம் கூடியது. சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அப்போது சிறையிலே அடைக்கப் பட்டிருந்ததால், சிலர்தான் சபைக்கூட்டத்துக்குப் போக முடிந்தது.
அந்த நேரத்தில் ஆங்காங்கே நகரில் பரவலாகக் குழப்பங்கள், கலகங்கள், சண்டைச் சச்சரவுகள் மூண்டன.
மக்கள்-போலீஸ்காரர்களோடும், ராணுவத்தோடும் ஆங்காங்கே ரகசியமாக மோதி பலரைக் கொன்றுக் குவித்தார்கள். பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் வீடுகளுக்கு தீயிடப்பட்டன! எங்கும் நெருப்பு வெடிப்பு; ஜூவாலை அலைகள்; மக்கள் ஓட்டக்கோஷங்கள்! ஒழிக பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி என்ற கோஷங்களை மக்கள் ஆக்ரோஷமாக எழுப்பிக்கொண்டு சுதந்திர வெறியர்களாய் அலைந்தார்கள்.
இந்தக் கிளர்ச்சியின் போது வீழ்ந்த பிணங்களை ஒன்றின்பின் ஒன்றாக, நீளவரிசையில் அடுக்கிப் பார்த்தால், ஏறக்குறைய 650 மைலுக்கும் நீளமாக பிணங்கள் வீழ்ந்துகிடந்தன என்று ஒரு முறை ‘ரீடர்ஷ் டைஜஸ்ட்’ பத்திரிகை எழுதி சோகத்தை வெளியிட்டது. அந்த அளவுக்கு பிணக்களம் போல அயர்லாந்து காணப்பட்டது.
இந்த நேரத்தில்தான், டிவேலரா லிங்கன் சிறையிலே இருந்து அதிசயமாகத் தப்பி ஓடினார். ஆனால், வளர்கின்ற நாட்டுப்பற்று அவரது குரலையே எதிர்நோக்கிக்கொண்டே நின்றது.
தப்பியோடிய டிவேலரா நேராக மான்ஜெஸ்டர் நகருக்குச் சென்று தலைமறைவானார். அவர் தலைமையில் ஏறு நடைபோட்ட சின்ஃபின் இயக்கத்திற்குக் கூட அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.
டப்ளின் நகரத்திலுள்ள அரண்மனை ஒன்றில் நடந்த மக்கட்கட்சியினர் கூட்டத்தில் டிவேலராவைப் பற்றி ஏதேனும் புதிய செய்திகள் உண்டா? என்று ஒருவர் எழுந்து கேட்டார்.
ஆனால், அக் கூட்டத்தினர் யாரும் ஒன்றும் கூறாமல் ஊமையாக இருந்துவிட்டார்கள். அந்த நேரத்தில் ஒன்றும் கூறாமல் இருந்து விடக்கூடாது என்று நினைத்து மைக்கேல் காவின்ஸ் என்பவர், டிவேலராவிடம் இருந்து தனக்கு ஏதோ ஒருசெய்தி வந்ததுபோல காட்டிக்கொண்டார்.
“நான் லிங்கன் சிறையில் இருந்தபடியே நாட்டுக்குரிய விடுதலைத் தொண்டுகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.” என்று அவர், தனக்கு வந்த செய்தியில் குறிப்பிட்டிருப்பதாகக் கூறினார்.
மைக்கேல் காலின்ஸ் சொல்லியது உண்மைதான என்றாலும், டிவேலரா தன்னைப் பற்றி அப்படிச் சொல்ல நினைக்க மாட்டாரே! நாட்டுத் தொண்டே அவர் செய்து கொண்டிருப்பதனால், அதற்காக, ‘நான் ஓடினேன்’ என்று அவர் கூற வேண்டியதில்லை. சிலநாட்களுக்குள் அவர் அயர்லாந்துக்கே கொண்டுவரப்பட்டார்.
டிவேலரா சட்டசபைத் தலைவராக இருந்ததால், அவர் தலைமறைவாக இருந்தபோதும் ஆங்கில ஆட்சியினைப் பொருட்படுத்தாமல், வருவது வரட்டும் ஒருகை பார்ப்போம் என்ற மன உறுதியோடு, அயர்லாந்து நாட்டை ஆளத் தொடங்கியது. ஆனால், இதற்குப் பணம் தேவை அல்லவா?
பணம் கிடைக்கும் இடம் அமெரிக்கா நாடுதான் என்று நினைத்த டிவேலரா, உடனே நியூயார்க் நகர் போய் சேர்ந்தார். தேவைக்கான பணமும் அவருக்குக் கிடைத்துவிட்டது. ஆனால், அயர்லாந்து நாட்டில் சண்டை பலமாக மூண்டுவிட்டது.
இந்தச் சண்டை 1921-ஆம் ஆண்டு சிறுபோராக, நடந்து கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் டிவேலரா மக்களுக்காக இந்தச் சண்டை நடுவிலே தோன்றினார்.
இதைக் கண்ட அயர்லாந்து மக்கள் அனைவரும் டிவேலராதான் எங்கள் தலைவர் என்று கோஷமிட்டார்கள். ஒருவாறாக அந்த இருபிரிவினர்களுக்கு இடையே அமைதி உருவானது.
டிவேலராவால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், லண்டன் மாநகருக்குச் சென்று அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் லாயிட் ஜார்ஜ் என்பவரைச் சந்தித்தார்கள். உடன்படிக்கையில் கையொப்பம் செய்தார்கள். ஆனால், டிவேலரா தன்னிடம் காட்டாமல் எந்த உடன்படிக்கையிலும் கையெழுத்துப் போடக்கூடாது என்று கூறியிருந்தார்.
ஆனால், அந்தப் பிரதிநிதிகள் கையெழுத்துப் போட்டுவிட்டார்கள். ஏனெனில் லாயிட் ஜார்ஜ், உடனே உடன்படிக்கையில் கையெழுத்துப் போடாவிட்டால் பெரிய போரே துவங்கும் என்று எச்சரித்தார். அதனால் டிவேலரா பிரதிநிதிகள் கையெழுத்தைப் போட்டுவிட்டார்கள்.
ஐரிஷ் சட்டசபையில் அந்த உடன்படிக்கை வந்தபோது, அயர்லாந்து நாட்டுக்குத் தேவையான சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்று டிவேலரா சாந்த உடன்படிக்கையைக் கண்டனம் செய்து தள்ளிவிட்டார். ஆனால், அவருக்கு அந்த உடன்படிக்கையை நிராகரித்து ஒரே ஒரு ஓட்டுரிமை தேவை என்பதால், பிரதிநிதிகளில் ஒருவராகிய ஆர்தர் சிரிவித் என்பவர் சட்டசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் உடன்படிக்கையைக் கண்டித்தபோது, மக்களைக் கவனியாது தாம் கொண்ட கொள்கையில் உறுதியான நம்பிக்கை மிகுதியாக வைத்திருந்தார்.
நீண்ட நெடுநாட்களாக அயர்லாந்து மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போர் செய்ததும், சொல்ல முடியாத வேதனைகளையும், கஷ்ட நஷ்டங்களையும் ஏற்றுக் கொண்டதும் அரைகுறையான சுதந்திரத்துக்காக அல்ல. தாங்கள் இழந்துவிட்ட முழு ஆதிக்கத்தைப் பெறுவதற்கே என்பதையே டிவேலரா நினைத்துக்கொண்டிருந்தார்.
ஆங்கில நிலை முதலாளிகள் விவாசாயிகளுக்குக் கொடுமை செய்யாதிருந்தால் மாத்திரம் போதும் என்று நினைக்கவில்லை. முழு சுதந்திரம் தவிர வேறொன்றையும் டிவேலரா பொருட்படுத்தவில்லை.
மறுபடியும் உள்நாட்டுச் சண்டை தொடங்கியது; அப்போது டிவேலரா குடியரசுக் கட்சிப் படையில் ஒரு தொண்டராய் சேர்ந்து உழைத்தார். அந்த நேரத்தில் மக்களில் பெரும்பாலோர் அவரைத் தலைவராக ஏற்கவில்லை ஏனென்றால், செயலுக்குக் கொண்டு வரக் கூடாத ஒன்றை அவர் விடாப்பிடியாய்ப் பிடிக்கும் முயலுக்கு மூன்று கால் என்ற பித்துப் பிடித்தவர் என்று அவரைக் குறித்து எண்ணியதால் அவரைத் தலைவராக ஏற்கும் எண்ணம் இல்லாதவராகப் பலர் இருந்தார்கள்.
1916-ஆம் ஆண்டில் அவரைச் சேர்ந்த மனிதர்களே அவரை இகழ்ந்து பேசினாலும், அவரிடம் வைத்த நம்பிக்கையை இழக்கவில்லை. இப்போது, அவரிடம் நம்பிக்கை வைத்திருந்த பலர், அதனை இழந்துவிட்டார்கள். தம்முடைய அரசியல் வாழ்க்கை தாழ்ந்து போவதைப் பற்றி அவர் வருத்தமோ-வேதனையோ படவில்லை.
ஆனால், மக்களுக்குத் தாம் நினைத்தபடி பயன்படவில்லையே என்ற வேதனைதான அவரை மீளா வருத்தத்தில் மூழ்கடித்தது. குடியரசுக் கட்சி, உடன்படிக்கையை எதிர்த்த கட்சி. அது, 1922-ஆம் ஆண்டுத் தேர்தலில் தோல்வி கண்டது. அதற்குச் சில மாதங்கள் கழித்துத்தான் உள்நாட்டுச் சண்டையும், மோதல்களும் தொடங்கின.
குடியரசு கட்சியார், மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முழு ஆதிக்கத்திலேயே குறிக்கோளாக இருந்தார்கள். ஆனால், டிவேலராவோ முழு ஆதிக்கத்துடன் மட்டுமல்ல; ஐரிஷ் மக்களின் நன்மையையும், நல்வாழ்வையும் முக்கியமாகக் கருதியிருந்தார்.
டிவேலரா உடன்படிக்கையை மறுத்த போது, ஒரு வகையாக மக்களின் விருப்பத்தையே அவர் தெரிவித்தார் எனலாம். உடன்படிக்கை கையெழுத்திடப் படாதிருப்பின் தேர்தல் உலகம் அதனைத் தள்ளியிருக்கும். டிவேலரா அந்தச் சமயத்தில் சற்று தாழ்வுற்றிருந்தாலும், அது மறுபடியும் அவர் உயர்வதற்கே காரணமாகவும் ஆனது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உடன் படிக்கையைத் தழுவின கட்சி கடைசியாக அவமானம் அடைந்தது. மக்களுக்குத் தேவையானது இன்னது என்று முன்னதாகவே அவர் அறிந்தபடி பிறர் எவரும் உணரவில்லை.
டிவேலரா, தனது இயற்கை அறிவு செல்லுகின்ற வழியில் அவர் போகுமளவும், மக்கள் என்றாவது எப்படியாவது அவரையே இறுதியாகப் பின்பற்றுவார்கள் என்றும் அப்போதைய ஐரிஷ் நாடு சிந்தித்துக் காத்திருந்தது.
1932-ஆம் ஆண்டில் டிவேலரா கட்சி புது ஆதிக்கத்திற்கு வந்தது. தற்கால நிலையையும், எதிர்கால முடிவையும் பற்றிப் பேசுவது கடினம் என்பதை 1932-ஆம் ஆண்டு உணர்த்தியது.
டிவேலரா இப்போது தவறினால், அவருடைய அரசியல் வைராக்கியத்தினாலாவது, பொருளாதாரத்துறையில் தப்பு செய்வதினாலாவது அந்த தவறுதல் ஏற்படாது.
இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் உள்ள பத்திரிகை உலகம் அவ்வாறு கணிக்கலாம். அவருடைய பொருளாதாரக் கொள்கை வெற்றிபெறுதலே ஆகும்.
பொருளாதாரத் துறையிலாவது, சமுதாயத் துறையிலாவது அவருக்குச் சோதனை வராது. முழு ஆதிக்கக் கொள்கை சார்பாக வேண்டுமானால் சோதனை ஏற்படக் கூடும்.
டிவேலரா தன்னை மக்களின் தொண்டனாகக் கருதி மக்களுடைய தற்காலத்துக்கு சம்மதித்து விட்டார். முழு ஆதிக்க ஆர்வத்தை அவர் கைவிட்டுவிட்டார் என்பதற்கு அடையாளங்கள் தோன்றுகின்றன.
அவ்வாறானால், அதற்கு ஒரு முடிவு தான் அமையக் கூடும். யாருக்காக டிவேலரா தன்னைத் தியாகஞ் செய்தாரோ, அந்த மக்கள் அவரைக் கடைசியாகக் கழித்து விடவும் கூடும். ஏனென்றால், நாட்கள் நகரநகர உச்ச நிலைக்குத் தங்களை நடத்துகின்ற தலைவரைத் தான் மக்கள் பின்பற்றுவார்கள். அயர்லாந்தில் உள்ள கர்வத்தின் உச்சத்தைப் பிறநாட்டினர் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியாது.
ஐரிஷ் மக்கள் தங்களது தலைவரான டிவேலராவை, தங்களை உயர்வழியில் உயர்த்துபவராகவே கருதிவந்தனர். ஆனால், சில நாட்களுக்குள் அதைப்பற்றிய ஒரு சிறிய சந்தேகம் சிலரிடம் தோன்றிவிட்டது.
அதனால், அயர்லாந்தில் ஒரு சிறு பொறி விரைவில் ஒரு சுடராக வளர்ந்து, அந்தச் சுடர் சுவாலையாகி விடும். டிவேலரா முற்போக்கினருக்குத் தம்மை எதிரியாகக் காட்டிக்கொண்டார்.
முன்புள்ள ஆட்சியினர் ஏற்படுத்திய இராணுவ மன்றத்தை ஏற்படுத்திக் குடி அரசினரை அதன் மூலம் விசாரிக்க ஏற்பாடு செய்துள்ளார். குடி அரசு வாரப் பத்திரிக்கையை அடக்கி இருக்கிறார்.
மற்ற நாட்டில் அவர் நிலையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு அப்படிப்பட்ட செய்கைகள் அவசியமாய் இருக்கலாம். ஆனால், அயர்லாந்தில் எவ்வளவு திறமை மிக்க அரசியல் தலைமையும் பல நூற்றாண்டுகளாகக் கனன்று கொண்டு, இடையிடையே சுடர் விட்டு எரிகின்ற முழு ஆர்வத்தீயை எதிர்க்குமாயின் அது வெற்றிபெறாது.
இந்த நூற்றாண்டின் அயர்லாந்து நாட்டின் தலைவர்களாக வந்தவர்களுள் டிவேலராவைப் போல் ஒரு விடுதலை வீரனைக் காணமுடியவில்லை.
டிவேலராவிடம் உள்ள பெருந்தன்மையும், தன்னலங்கருதாமையும், தியாக உணர்ச்சியும், மக்கள்நேய மாண்பும், நெஞ்சுரமிக்க வீர தீர சாகசபோர் வியூகங்களும்; சட்டத்தின் வழிகாட்டுதலில்தான் ஒரு நாடு விடுதலை பெற வேண்டும் என்ற அறப்போராட்ட உணர்வுகளையும், அயர்லாந்து நாட்டுத் தலைவர்களிடையே பார்ப்பதே அரிதாக உள்ளது.
அயர்லாந்து நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் டிவேலரா அயர்லாந்து காந்தியாகவே திகழ்ந்தார். அதனால்தான் அவரை, அயர்லாந்து நாட்டின் விடுதலைத் தந்தையாக அந்த நாட்டு மக்கள் போற்றுகிறார்கள்.