உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்/கிரேக்க நாட்டின் அரசியல் கலைஞர்


கிரேக்க நாட்டின் அரசியல் கலைஞர்

1964-ஆம் ஆண்டு

கிரேக்க நாட்டுப் பொதுத் தேர்தல்

இரண்டு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. ஒன்று ஐக்கிய கட்சி. மற்றொன்று கம்யூனிஸ்ட் கட்சி. மத்திய ஐக்கிய நடைபெற்ற தேர்தலில் 53 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சி 13 சதவிகிதம் வாக்காளரின் ஆதரவு மட்டுமே பெற்றது. அதனால் தோல்வி அடைந்தது.

1961ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலுக்கு பின் கிரேக்க அரசியலில் நெருக்கடி ஏற்பட்டது. மத்திய ஐக்கிய கட்சி அப்போது இருந்து தீவிரப் பிரச்சாரம் செய்தது. அடுத்த பொதுத் தேர்தல் நேர்மையாக நடைபெறவும், ஜனநாயகம் மீண்டும் நாட்டில் நடைபெறவும் அது முழுமூச்சுடன் பாடுபட்டது.

ஆட்சி நிர்வாகப் பொறுப்பை 1950ஆம் ஆண்டு முதல் 52 வரையில் ஏற்றிருந்த அந்தக் கட்சி இரண்டாவது முறையாக இப்போது பதவியை ஏற்றிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதவியில் இருந்த பிரதமர் கரமன் லிஸ்ட் ஆட்சியின் கீழ் உருக்குலைந்தது ஜனநாயகம். பிரதமர் பதவிக்கு இன்று வந்துள்ள ஜார்ஜ் பாபன் திரியோவின் கீழ் ஜனநாயகம் மீண்டும் நாட்டில் நிலைபெற ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. முதுமையடைந்த பிரதமர் ஒய்வு எடுத்து கொண்டு அமைதியாக அமரவேண்டியவர் இப்படி இருந்தும் தம் சொந்த நலனைப் புறக்கணித்துவிட்டு ஜனநாயகத்துக்கு தொண்டாற்ற அவர் முன்வந்தார். ஒர் இளைஞனின் ஆர்வமும் ஊக்கமும் காட்டுகிறார். இவர் தேர்தலில் வாகை சூட இவருக்கு உதவியவை இரண்டு. ஒன்று இவர் சிறந்த சொற்பொழிவாளர். இவருடைய நாவன்மையால் திறமைமிக்க சொல்லாற்றலால், இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். இரண்டாவது இவருக்கு உதவியாக இருந்தது, தொழிலாளர்களிடையே மனம் குமுறி இருந்த வேதனைகளும், விரக்திகளும், வாழ்க்கை நெருக்கடிகளும், அதிருப்தி நிலைகளை உருவாக்கின. கஷ்டங்களைப் பாராமல் இவர் நாட்டிலே எட்டுத் திசைகளிலும் பன்முறை சுற்றிச்சுற்றி வந்து மக்கள் கூட்டங்களிலே சொற்பொழிவு ஆற்றினார். தொழிலாளர் துயரங்களையும், வேதனைகளையும் படும் கஷ்டங்களையும் மக்களிடையே விளக்கி முழக்கமிட்டார். கரமன் லிஸின் ஆட்சி நிர்வாகத்தை அதன் அலங்கோலத்தை, ஆணவப் போக்கை, ஏதேச்சாதிகாரத்தன்மையை, நிர்வாகப் பலவீனத்தை மக்களிடையே வன்மையாகக் கண்டித்து காரணகாரியங்களோடு சுட்டிக் காட்டினார். இவருடைய நீண்ட கால அரசியல் அனுபவமும், அரசியல் வாதிகளிடையே இவருக்கு இருந்த கவுரமும், மக்கள் மன்றங்களிடையே இவர் உருவாக்கி வைத்திருந்த மதிப்பும், மரியாதையும் இவரது வயதும் மக்களிடம் போராதரவு பெற மிக உதவிகரமாக இருந்தன.

ஜார்ஜ் பாபன் திரியோ மிகச்சிறந்த நாவலர். இன்று வரையில் இவரைப்போல் நாவன்மை படைத்த, நுட்பமான இராஜ தந்திரம் மிக்க ஒரு பேச்சாளரை அந்த நாடு கண்டதில்லை. நாடாளும் அனுபவங்கள் ஏராளமாகப் பெற்றவர், படித்த மேதை, சிறந்த கல்வியாளர், இலக்கியத்தில் வரம்பு மீறிய பற்றுக் கொண்டவர், வசனம், கவிதை இந்தத் துறைகளை விட நாடக இலக்கியத்தில் இவருக்குக் கவர்ச்சி அதிகம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இவர், கல்வி அமைச்சராகப் பதவி வகித்து நாட்டு நிர்வாகத்தில் பதவி ஏற்றபோது, நாட்டில் தேசிய நாடக அரங்கு ஒன்றை நிறுவினார். அதனால் அந்த நாட்டில் இவர் ஒரு கலைஞராகத் திகழ்ந்தார்.இவர் சகலகலா வல்லுனராகத் திகழ்ந்தார். முதல் உலகப்போர் முடிவடைந்த பிறகு, அந்த நாட்களில் புகழ்பெற்ற அரசியல் பயிற்சிகளைப் பெற்றார். அந்த நாட்களிலே தனது நாட்டு அரசியலில், தமக்கென சிறப்பான ஓர் இடத்தை இவர் பெற்றார். போராட்டங்களிலே கலந்து கொண்டு பலதடவை சிறை சென்றார். நாடுகடத்தல் போன்ற இன்னும் பல தண்டனையை அனுபவித்தார்.

இரண்டாம் உலகப்போரில் உலகை உலுக்கி எடுத்த இட்லரின் துருப்புகள் அவருடைய தாய்நாட்டை ஆக்கிரமித்துத் தாக்கியது. அதனால் இவர் அண்டைய நாட்டிற்கு சென்று தேசிய மாற்று அரசாங்கம் ஒன்றை உருவாக்கி அதன் நிர்வாகத்தை இயக்கினார். 1950-52 ஆம் ஆண்டுகளில் உதவிப் பிரதமராக பொறுப்பேற்று இருந்த இவர், அப்போது கிரேக்க புகையிலைக்கு ஜெர்மனியில் மார்கெட் தேடித் தந்தார். தனது தாய்நாட்டுக்கு இவர் செய்த சேவை மிகவும் சிறப்பாய் குறிப்பிடத்தக்கது, மக்களின் குடியுரிமை உணர்ச்சியைத் தூண்டியதுதான்.

இவருடைய தலைமையின் கீழ் இயங்கும் மக்களின் ஐக்கிய கட்சி இப்போது பதவிக்கு வந்தது, நாட்டில் ஒரு புதிய யுகம் உதயமாக இருப்பதின் அறிகுறியாகும். பிரதமரின் கவனம் பல துறைகளில் சீர்திருத்தங்கள் செய்வதில் ஈடுபடுவது நிச்சயம். சைப்ரஸ் பிரச்சனைக்கு தீர்வு காண இவர் வகுத்து இருக்கும் தீர்வை அந்நாட்டு மக்கள் ஆதரிக்கிறார்கள். பலவித இலவசக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பக் கல்வி துறைகள், பல்கலைக் கழகம் முதலியவற்றை நிறுவுவதற்கு இவர் வழி வகுப்பார்.

பாட்டாளிகளின் கடன் தொல்லைகளைத் தீர்க்கவும், வேளாண்மை அபிவிருத்திக்கு முக்கியமான உதவிகளை வழங்கவும் வழிகண்டார். தொழிலாளரின் வருவாயில் 12 சதவிகிதம் உயரவும், தொழிலாளர் சங்கங்களுக்கு வேண்டிய உரிமைகளையும் வழங்கினார். அரசியல் நிர்வாகத்தில் பதவி வகிக்கும் பிரதமர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்கட்சித்தலைவர்கள் அவர்களுடைய உறவினர்கள் ஆகியோர்கள் அரசியலில் தங்கள் பதவியை, பொதுநலத்திற்குப் பயன்படுத்தாமல் சுயநலத்திற்கு உபயோகித்தால் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதற்கான ஒரு மசோதாவை இவர் உருவாக்கினார்.

பொதுவாக இந்த நாள் வரையில் நாட்டில் நடமாடிய ஊழல்களைக் களைந்து நேர்வழியில் நிர்வாகத்தை இயக்கி நாட்டுப் பொருளாதார அபிவிருத்திக்கு வேண்டிய திட்டங்களை மேற்கொண்டார். திட்டமிட்டு இருக்கின்ற இவரது அரசுப் பணியில் வெற்றி கிடைத்தால், சமுதாய, பொருளாதார, அரசியல் துறைகளில் போதிய அளவு பலன்களை மக்கள் அனுபவிப்பார்கள். தோல்வி நேர்ந்தால் இவருக்கும் இவர் பதவிக்கு வரவிரும்பிய கட்சிகளுக்கும், மக்களிடையே இருக்கின்ற செல்வாக்குப் போய்விடும். இவருக்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சிகள் பல ஆனாலும், அரசியல் சமுதாய ஜனநாயகத்திற்கு அடிக்கல் போல் தோன்றும் தொழிலாளர் கட்சி மட்டும் இவரை ஆதரிக்கவில்லை. நாட்டின் அரசியலிலே தொழிலாளர் கட்சி என்று ஒன்று இடம்பெறவில்லை. இந்தக் குறைகளுக்கும் பிரதமர் பரிகாரம் கண்டு வெற்றி பெற்றார். மக்கள் அவரை மனமாரப் பாராட்டுகிறார்கள்.