உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்/துருக்கியின் விடுதலை வீரர்
துருக்கியின் விடுதலை வீரர்
முஸ்தபா கமால் பாஷா!
ஐரோப்பாக் கண்டத்தில் நோயாளி நாடு எது என்று கேட்டால், உடனே உலக வரலாறு "துருக்கி நாடு" என்று கூறும்.
ஆனால், இன்று அதேநோயாளி நாடு தான், தனது தீராத அடிமை ஆதிக்க முடியாட்சி என்ற நோயை, விடுதலை வீரன் முஸ்தபா கமால் பாஷா என்ற குடியாட்சி டாக்டரால் குணமாக்கி ஐரோப்பாவிலே மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே வீறுபெற்ற விடுதலை நாடாக விளங்குகின்றது.
மாவீரன் முஸ்தபா. கி.பி.1881-ம் ஆண்டில், சலோனிகா என்ற துறைமுகத்தில் மிகச் சாதாரண எடுபிடி வேலையாளாகப் பணியாற்றிய அலிரிசா என்பவருக்கும், சபீதா என்ற இஸ்லாமியப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தார்.
அலிரிசா என்ற துறைமுகப் பணியாள் ஒரு வேலைக்காரனாக இருந்தாலும் கூட, அவர் ஒரு சிந்தனையாளராகவும் இருந்தார். இருந்து என்ன பயன்? சிந்தித்ததைச் சுறு சுறுப்புடன் உடனடியாக முடிக்காமல், நாளை, நாளை என்று நாள் கடத்திவரும் திறமையற்ற ஓர் அப்பாவி மனத்திறன் இல்லாத, உடற் திறனில்லாத ஓர் அச்சம் வாய்ந்த சோம்பற் பிறவி அதனால் அவரது மனைவி சபீதா குடும்பப் பாராத்தைச் சுமந்து வாழலானார், பாவம்!
தந்தையைவிட, தாய் எடுத்தக்காரியத்தை உடனுக்குடன் முடிக்கும் திறன்பெற்ற பெண்ணாக இருந்தார். சபீதா தனது மகன் முஸ்தபாவை அருமையாக வளர்த்து, தன்னால் முடியும் அளவுக்குரிய கல்வியைக் கற்றுக் கொடுக்க கணவரின் நண்பர் ஒருவர் உதவியால், முஸ்தபா சலோனிகாநகரிலுள்ள ராணுவப் பள்ளியிலே சேர்ந்தார்.
இராணுவப் பள்ளியினர் நடத்திய தேர்வு ஒன்றில், வியக்கத்தக்க அளவுக்கு முஸ்தபா எழுதி போதிய மதிப்பெண் பெற்றதால், அவர் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
பெயர்தான் ராணுவப்பள்ளியே தவிர, பள்ளியில் சேர்ந்ததுமே ராணுவக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதில்லை. முதலில் பொது அறிவூட்டும் சிறப்புக் கல்வியைப் பயிற்சி அளித்தபின்னர் தான், ராணுவக் கல்வியை அப்பள்ளியிலே கற்பிப்பார்கள்.
பொதுக்கல்வியிலும் நல்ல பாராட்டும் புகழும் பெற்ற முஸ்தபா, அதே பள்ளிக்கு உதவி ஆசிரியராகவும் தனது பதினேழாம் வயதிலேயே வந்தார். அதற்குப் பிறகு மொனாஸ்டர் என்ற நகரிலே உள்ள ராணுவப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு, அங்கேயும் பாராட்டப்படும் வகையில் ராணுவப் பயிற்சியாளரானார்!
அந்தப் பள்ளியிலே ஏற்பட்ட ஒரு சிக்கல் என்னவென்றால், இராணுவ ஆசிரியர் பெயரும் முஸ்தபா! பயிற்சி பெறப்போன மாணவனது பெயரும் முஸ்தபா! இருவர்கள் பெயர்களும் ஒரே பேராக இருந்ததால் எல்லா நிலைகளிலும் குழப்பம், சிக்கல் ஏற்பட்டுவிட்டது.
அதனால் இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக, பள்ளியின் ஆசிரியர் தனது பயிற்சி மாணவனது பெயருக்குப் பின்னால், ‘கமால்’ என்ற தனது அன்புப் பெயரைச் சூட்டி ‘முஸ்தபா கமால்’ என்று அழைக்கலானார்!
வெறும் முஸ்தபா என்று சென்ற ராணுவப் பயிற்சி மாணவன், உலகமும், துருக்கியும் வியந்து அழைத்த முஸ்தபா கமால் பாஷாவாக ஆனான் என்பது வரலாறு போற்றும் உண்மையானது.
இராணுவப் பயிற்சி முடிந்த முஸ்தபா கமால் துணைப்படை ஒன்றுக்குத் தளபதி ஆனார்.
அந்த நேரத்தில் அவரது தாயார் சபீதா மறுமணம் செய்து கொண்டதால், தாயாரை வெறுத்தார் இருவருக்கும் எந்த உறவுமில்லை என்று கட்டறுத்து விட்டு, தன்மனம் போல தனிமையான வாழ்வை ஏற்றார்!
கமால், கான்ஸ்டாண்டி நோபிள் என்ற நகரில், அரசியல் தொடர்புடைய பல சங்கங்களது கொள்ளைகளைப் புரிந்து கொண்டார்.
துருக்கி நாட்டை அப்போது ஆண்டு கொண்டிருந்த சுல்தான் அப்துல் அமீது, ஒரு கொடுங்கோல் மன்னனாக மாறி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, மக்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த சுல்தானுடைய ஆணவ ஆட்சியை அகற்றி புரட்சிகரமான ஓர் ஆட்சியை அமைத்திட அப்போதைய வாலிபர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்த சங்கங்களிலே கமாலும் ஓர் உறுப்பினரானார்!
சுல்தானுடைய கொடுங்கோல் அதிகாரிகள் அந்தப் புரட்சி இளைஞர்களை எல்லாம் வேட்டையாடிப் பிடித்தார்கள்! விசாரணை செய்தார்கள்! சிறையிலே தள்ளினார்கள்! சித்திரவதை செய்தார்கள்! இவர்களில் முஸ்தாபா கமால் ஒருவர்தான் தப்பினார்!
தப்பினார் என்றால், அதிகாரிகளை ஏமாற்றிவிட்டுத் தப்பியோடிவிட்டார் என்பதல்ல; முஸ்தாபா கமாலின் ராணுவத்திறமை படை நடத்தும் பயிற்சி திட்டமிட்டுச் செயலாற்றும் யூகம் இவற்றை மனத்தில் கொண்ட சுல்தான், என்றாவது ஒருநாள் கமால் மனம் மாறும்போது, அந்தத் திறமைகள் அனைத்தும் சுல்தானின் எதிரிகளை எதிர்கொண்டு சமாளிக்க உதவும் என்ற சுயநல எண்ணத்தால்” முஸ்தபாவை மட்டும் விடுதலை செய்து, டெமாஸ்கஸ் நகரத்துக்கு அனுப்பப்பட்டார்!
போன இடத்திலாவது கமால் சுகபோகமாக இருந்தாரா என்றால் இல்லை! அங்குள்ள புரட்சிவாதிகளின் இயக்கங்களிலே, அவர்களது அரசியல் புரட்சிச் சதிகளிலே ஈடுபட்டார். அதிகாரிகள் அவரைக் கைது செய்யச் சென்ற போது கமால் தப்பி சொந்தஊரான சலோனிகா நகருக்கு ஓடிவிட்டார்.
சரோனிகா சென்ற கமால், அங்குள்ள புரட்சிக்காரர்களுடன் சேர்ந்து, அவர்களுக்குத் தலைவரானார். ஆனால், எதிலும் அவசரப்படாமல், அரைகுறை புரட்சித் திட்டங்களில் ஈடுபடாமல் காலத்துக்காக அவர் காத்திருந்தார்.
அந்த நேரத்தில் மாசிடோனியாவின் கிழக்குப்பகுதியில் அன்வர் என்பவர் தலைமையில் திடீரென ஒரு புரட்சி ஏற்பட்டது. அதை அடக்கிடச் சென்ற ராணுவம் அந்தப் புரட்சிக்காரர்களுடனேயே சேர்ந்துவிட்டது.
தான் நம்பி அனுப்பிய ராணுவப்படையே நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதைக் கண்ட சுல்தான், தனது ஆலோசனை சபையைக் கலைத்துவிட்டார். புரட்சிக்காரர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களிடம் சமரசம் பேசி புரட்சிக் காரர்கள் பங்கேற்ற ஓர் ஆலோசனை சபையைப் புதிதாக உருவாக்கினார்.
சுல்தான் சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்றவாறுதான் புதிய சபையை உருவாக்கினார்! அதே நேரத்தில் சுல்தான் எடுபிடிகள், ஜால்ராக்கள், ஆதரவாளர்கள், எல்லோருமாக தனித்தனிப் பலத்தோடு சுல்தானிடம் பணம் பெற்றுப் புரட்சிக்காரர்களுக்கு லஞ்சமாகக் கொடுத்து அந்த ஆலோசனை சபையினர்களையே துரத்தியடித்தார்!
மாசிடோனியா புரட்சிவாதியான அன்வரை, முஸ்தபா கமால் சந்தித்து, இருவரும் ஒரு திட்டம் தீட்டி சிதறுண்ட புரட்சிக்காரர்களைப் படையாகத் திரட்டி, அங்குள்ள சுல்தானின் படையோடு மோதவிட்டு, முறியடித்தார்கள்.
துருக்கி சுல்தானாக இருந்த அப்துல் ஹமீது பதவியிலே இருந்து விரட்டப்பட்டார். புரட்சிக்காரர்களின் எண்ணத்திற்கேற்ப, ஒரு புதிய சுல்தானை அன்வர் விருப்பப்படி முஸ்தபா நியமனம் செய்தார்.
துருக்கியில் ஏற்பட்ட அந்த சுல்தான் விரட்டல் புரட்சியில் முஸ்தபா கமால் உழைப்பு, யோசனை, வியூகப் போர் அதிகமிருந்தன என்று தெரிந்திருந்த அன்வர், முஸ்தபாவை ஒரு படைக்குத் தளபதியாக்கி விட்டு, வேண்டுமென்றே புதிய சுல்தானை உருவாக்கியதை, முஸ்தபா ஆழ்ந்து யோசித்த படியே இருந்தார்.
அன்வரால் நியமிக்கப்பட்ட சுல்தானின் புரட்சிக்காரர்கள், கடமை தவறி நடப்பனவற்றை எல்லாம் முஸ்தபா உணர்ந்தார். இதே எண்ணத்தை, கமால் நண்பர்களாக உள்ள புரட்சிக்காரர்களும் தெரிந்திருந்தார்கள். இதனால், அன்வருக்கும் முஸ்தபாவுக்கும் அடிக்கடி ஆலோசனைக் கலவரம் ஏற்பட்டு, மனத்தாங்கல்கள் மலையென உருவெடுத்து, கசப்பும் கண்டனமும் தலைதூக்கிய படியே இருந்தது.
அந்த நேரத்தில் அதாவது 1911-ம் ஆண்டில், அக்டோபர் மாதத்தின்போது, இத்தாலி நாடு, துருக்கியின் பக்கத்து முஸ்லிம் நாடான திரிப்போலியை காரணம் ஏதுமின்றிப் படைபலத்தால் பிடித்தது.
இந்த ஆக்ரமிப்பைக் கண்ட துருக்கி, அண்டை நாட்டுக்கு உதவ வேண்டும் என்று எண்ணியதால், அன்வர் தலைமையில் படை ஒன்று புறப்பட்டது.
அந்தப் போரில் அன்வர் முஸ்தபாவுக்கு வழங்கவேண்டிய மரியாதையை, பொறுப்பைக் கொடுக்காமல், படைத்தலைவனாக முஸ்தபா இருக்கும்போது அன்வரே படைத்தளபதியாக மாறி, துருக்கிப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்றது முஸ்தபாவுக்கு பெருத்த அவமானமாகப்பட்டது.
இதனால், அன்வரும் முஸ்தபாவும் பகிரங்கமாக, நேரிடையாகவே மோத ஆரம்பித்தார்கள். ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையே சிலர் செய்ய முயன்ற சமாதான முயற்சி தோற்றது.
திரிப்போலியில், இத்தாலிக்கும்-துருக்கிக்கும் இடையே போர் ஏற்பட்டபோது தனது மனக்குறைக்கு மதிப்பளிக்காமல், முஸ்தபா துருக்கிப் படைக்குத் தளபதியாக இருந்து போர் நடத்தினார். ஆனால், போரில் சமாதான நிலைதான் ஏற்பட்டது. அதனால், துருக்கியைச் சுற்றிலும் பகைவர்களின் ஆதிக்கம் அதிகமானது. அதைக் கண்ட ரஷ்யர்களும், ஆங்கிலலேயர்களும் துருக்கியைப் பிடிக்க அவரவர் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள்.
அன்வர் ஜெர்மன் நாட்டின் உதவியை நாடினார். அதன் உதவியால் சிதறிய தனது துருக்கிப் படையை ஒழுங்குபடுத்தினார். இந்தச் சீரமைப்புப் பணி ஜெர்மன் படைத்தளபதி லிமான் வான் திட்டப்படி நடந்தது. காரணம் அவர்தான் திரிபோலி போரின்போது துருக்கிப் படைக்குரிய ஆலோசகராக இருந்தார்.
இரஷ்சியர்களையும், ஆங்கிலேயர்களையும் எதிர்த்து நடைபெற்ற அந்தக் கடுமையான சண்டையில், முஸ்தபா கமால் மிகப்போர்த் தந்திர யூகங்களோடு வியூகங்களை அமைத்துப் போரிட்டதால், அவரது வீரத்தின் விளைவுகளை மக்கள் கண்டார்கள் கமால் போராற்றலை பெரும் வியப்போடு பாராட்டி மகிழ்ந்தார்கள்.
துருக்கி மக்களிடையே இந்த முஸ்தபாகமால் பெருமை, புகழ் அதிகமாக ஆக, அன்வருக்கு அழுக்காறு ஏற்பட்டது. அதனால், கமால் புகழைக் கெடுக்க அவதூறுகளையும், பழிகளையும் முஸ்தபாமீது பரப்பினான்.
துருக்கி சுல்தானை தனது கைப்பொம்மையாக்கிக் கொண்டு ஒரு முறை முஸ்தபா கமாலை அன்வர் பதவியைவிட்டு இறக்கிவிட்டார்.
சுல்தானுக்கு அதனால் உள்நாட்டு மக்களது எதிர்ப்பு வலுத்தது கலகங்கள் பரவலாக உருவாகின. அப்போது முஸ்தபா பிரிட்டன் படையுடன் போரிட்டு விரட்டியடித்தார். இதனால் துருக்கி சுல்தான் இருந்த இடம் தெரியாமல் எங்கோ தலைமறைவாகினார்.
புதிய பாராளுமன்றத்தை துருக்கி மக்கள் உருவாக்கினார்கள். அதன் தலைவராக முஸ்தபா கமால் ஆக்கப்பட்டார்.
இதனால் துருக்கி நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டன. மக்களின் தாக்குதல்களை எதிர்த்து நிற்க முடியாத துருக்கி துரோகிகள் கிரேக்க நாட்டுக்கு ஓடினார்கள். அங்கே ஓடிய அவர்கள் கிரேக்கர்களைத் தூண்டிவிட்டு துருக்கியைத் தாக்குமாறு கூறினார்கள்.
1922-ம் ஆண்டு துருக்கியை எதிர்த்து, துரோகிகள் படைகளும் கிரேக்கப் படைகளுடன் சேர்ந்து கொண்டு போராடின. ஆனால், கமால் ஓய்ந்து விடாமல், முன்பைவிடப் பலமாக, பயங்கரமாகக் கிரேக்கப் படைகளையும், துரோகப் படைகளையும் தாக்கிப் போராடினார். அதனால் எல்லாப் படைகளும் முஸ்தபாவின் போரை எதிர்த்து நிற்க முடியாமல் புறமுதுகு காட்டி ஓடின.
முஸ்தபா, மக்களுடைய மன நிலையை உணர்ந்து, சுல்தான் ஆட்சிக்கு ஒரு முடிவுகட்டி, முதன் முதலாகத் துருக்கியில் குடியரசு ஆட்சியை நிலைநிறுத்தினார். அதற்கான சட்டதிட்டங்களையும் உருவாக்கினதுடன் அவரே முதல் குடியரசுத்தலைவராகவும் பொறுப்பேற்றார்.
முஸ்தபா குடியரசுத் தலைவரானதும், நாட்டின் பழைய நிலைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு பல சீர்திருத்தங்களைச் செய்தார்.
முஸ்தபா செய்த சீர்திருத்தங்களை எல்லாம் முஸ்லிம் மதவாதிகள் ஒன்று கூடி எதிர்த்தார்கள். அவர்களது எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், அவர் வெற்றி பெற்று ஆட்சியை நிலைநாட்டினார்.
துருக்கிநாட்டில் பெண்களது வாழ்க்கை படு பயங்கரமாக இருப்பதை முஸ்தபா கண்டார். அடிமைகளாக மதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு, பெண்ணுரிமைச் சுதந்திரங்களை வழங்கினார். அவர் ஆட்சியின் போதுதான் இஸ்லாம் பெண்கள் அணியும் படுதா முறைகளை நீக்கினார். துருக்கி நாட்டுப் பெண்கள் எல்லாம் அவரது ஆட்சிக் காலத்தில் புதுமைப் பெண்களாக வாழ்ந்திட விழிப்புணர்ச்சி பெற்றார்கள்.
இது போன்ற பல சீர்திருத்தங்களைத் துருக்கி நாட்டு மக்களது நலவாழ்வுக்காக சட்டத்தின் மூலம் செய்து சாதனைகளைப் படைத்த முஸ்தபா கமால் பாஷா 1938-ம் ஆண்டு நவம்பர் 31-ஆம் நாள் மறைந்தார். அவருடைய ஆட்சியில் துருக்கிநாடு சொர்க்க பூமியாக மாறி வளம் பெற்றது.