எங்கே போகிறோம்/2. கல்விச் சிந்தனைகள்
உயிர்த் தொகுதி பரிணாம வளர்ச்சியில் புல், புழு, விலங்கு. என்று வளர்ந்து கடைசியாக ஐந்து அறிவினாலாகிய விலங்கினின்றும் ஆறறிவுடைய மனிதன் பரிணமித்தான். மனிதன், மிருகமும் அல்லன், முழு மனிதனுமல்லன். மனிதன் மிருகத் தன்மையிலிருந்து விலகி மனிதனாக வாழ்ந்து அமர நிலை எய்தவேண்டும். இதுதான் மனிதனின் பரிணாம வளர்ச்சி. குறிக்கோள்! ஆனால் எல்லா மனிதருமே விலங்குத் தன்மையிலிருந்து அறவே விலகியதில்லை. முழு மனிதனாகவும் வாழ்ந்ததில்லை; தெய்வமாகத் திகழ்ந்ததுமில்லை.
இம்மூன்றின் கலவையாகவே கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். கோடியில் ஒருவர் விலங்கியல் தன்மையை பூரணமாக வெற்றி கொண்டு, மனிதராக- மாமனிதராக விளங்கி, இந்த மண்ணிலேயே அமரர் சிறப்பினைப் பெற்று வாழ்ந்துள்ளனர்.
இன்று நமது நிலை என்ன? நாம் விலங்கினத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் தடத்தில் செல்கிறோமா? மனிதத் தன்மையுடன் வாழ்கிறோமா? இங்கேயே அமரர் சிறப்புக் காணும் தடத்தில் செல்கிறோமா? சிந்தனை செய்யுங்கள்! இன்றைய மனிதன் உணர்ச்சி வசப்படுகிறான். அவன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் விலங்குகளிலும் மோசமாகி விடுகிறான்; கலகம் செய்கிறான்; கொலை செய்கிறான்; சுயநலமே உருக்கொண்டது போல ஆகிவிடுகிறான். இன்றைய மனிதன் தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளை என்ற கடுகுப் புத்தியிலேயே நிற்கிறான்.
மனிதப் பிறவி அருமையானது என்று உணர்ந்து, அந்த அருமைப் பாட்டினை உலகு உணரும் தடத்தில் செல்வோர் எத்தனை பேர்? வாழ்வோர் எத்தனை பேர்?
“அரிது அரிது மானிடராதல் அரிது.
மானிடராயினும் கூன், குருடு, செவிடு,
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது.
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது.
தானமும் தவமும் தான்
செய்வராயின் வானவர் நாடு வழி திறந்திடுமே!”
என்று அவ்வையார் மனிதப் பிறவியைச் சிறப்பிக்கின்றார்.
“வாய்த்தது நந்தமக்கு ஈதோர்
பிறவி மதித்திடுமின்”
என்று அப்பரடிகள் அருளிச் செய்துள்ளார். ஆம்! மானுடப் பிறவி ஒரே ஒரு பிறவிதான்! இப்பிறவியிலேயே அறியாமையை அகற்றி ஞானம் பெறுதல் வேண்டும். மாணிக்கவாசகரும், “என்னால் அறியாப் பதந் தந்தாய்” என்றார். ஆம்! மானிடப் பிறவி ஒரு பதந்தான்! மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அறிகருவிகளுடன், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன தொடர்புச் சாதனங்களாகவும், நிறைவேற்றும் பொறிகளாகவும் விளங்குகின்றன.
அற்புதமான கருவிகள்! இந்த உடம்போடு கூடிய ஆன்மாவின் வாழ்க்கையை அறிந்து போற்றிப் பாதுகாத்து வாழ்பவன் மனிதன். திருமூலர் “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!” என்றார். உடம்பை வளர்த்தல் என்றால், எடை கூடுதலாக வளர்த்தல் என்பதல்ல. உடம்பின் பயன்பாட்டு ஆற்றலை வளர்த்தல்!
இன்று உடல் நலத்திற்கு எதிரான செயற்பாடுகளே மிகுதி. சமையல் தோன்றிய பிறகு மனிதன் உடலுக்கு உகந்ததை-உடல் நலத்திற்கு ஏற்றதை-உண்ணாமல், சுவைக்காக உண்ணத் தலைப்பட்டு விட்டான்! போதும் போதாததற்குப் புகையிலையரக்கன் பலவகைப் புனைவுகளில் மனிதனை அழித்துக்கொண்டு வருகிறான்.
காற்று சுவாசிப்பதற்காக அமைந்த மூக்கினை வாணக்குழியில் வெடி மருந்து திணிப்பதுபோல மூக்குப் பொடியைத் திணிக்கிறான். அடுப்பில் புகை இருத்தல் போல இன்று பலருடைய வாயில் புகை புகை பிடித்தல், சாராயம் குடித்தல் இன்னோரன்ன தீமைகள் நாளும் பலரின் உடல் நலத்தைக் கெடுத்து வருவதோடு அவர்களை மனிதப் பண்பிலிருந்து தடம் மாற்றி விலங்கியல் நிலைக்கு அழைத்துப் போகின்றன. இவர்களும் போய்க் கொண்டிருக்கிறார்கள்!
மனிதன் வரலாற்றின் உறுப்பு. மனிதன் வரலாற்றின் கருப்பொருள். மனிதன் இந்த உலகைப் பயன்படுத்தும் வகையில் அமைப்பவன். மனிதன் படைப்பாளி மனிதன் காலந்தோறும் இப்புவிக்கோளின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பவன். மனிதனை அளவு கோலாகக் கொண்டே இந்த உலகம் மதிப்பிடப்படுகிறது. மனிதப் படைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற, மனிதனுக்குக் கருவியாக அமைவது அறிவு!
என்பது திருக்குறள்.
மனிதகுலம் தோன்றிய நாள் தொட்டு, அறிவைத் தேடும் முயற்சி நடைபெற்று வருகிறது. மனித குலத்தினர் அனைவரும் அறிவு பெற்று விளங்கவேண்டும் என்பது நியதி. இத்திசையில் மனிதகுலம் எடுத்த முயற்சிகள் பலப் பல. ஆயினும் அறிவு பெற்றோர் கோடியில் ஒருவரே!
இன்று நாம் அறிவுடைமை பற்றி, கொண்டிருக்கிற கருத்து, பிழையானது. தகவல்கள் நிறைய வைத்திருப்பவர்கள், நிறைய படித்தவர்கள், பட்டம் பெற்றிருப்பவர்கள், இவர்கள் எல்லாம் அறிஞர்கள் என்று பிழையாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். இவர்களில் அறிஞர்கள் இருக்கலாம். தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால் திருக்குறள் கூறும் அறிவுடைமை எது? மனிதனை-மனித குலத்தைத் துன்பத்திலிருந்து காப்பதே அறிவு. இன்று நமது வாழ்க்கையில், துறைதோறும் துன்பந்தானே சூழ்ந்திருக்கிறது. மனிதரை மனிதர் கொன்று அழிக்கும் ஆற்றல் மிக்க கொலைக் கருவிகளை மனிதன் படைத்திருக்கிறான். அப்படியானால் நாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்?
இன்றைய உலகம் அறிவியல் உலகம் என்கிறார்கள். கூர்ந்து நோக்கின், உயர்தர அறிவியல் வளரவில்லை. அருவருக்கத்தக்க நிர்வாணமான சுயநலம் வளர்ந்து வருகிறது. வீட்டிலிருந்து, உலகத்தின் பெரு வீதிகள் வரை எங்கும் பண மதிப்பீட்டுச் சமுதாய அமைப்பு! ஆதிக்கப் போட்டிகள் மற்றவர் துன்பம் பொருத பண்பே அறிவுடைமை என்று கூறுகின்றது திருக்குறள்.
“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை”
என்பது திருக்குறள். இத்தகு அறிவைப் பெறும் கல்வி வழங்கப் பெறுகிறதா? இன்று நமது கல்வி உலகம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது? பட்டதாரிகளை உருவாக்குவதில் கல்வி உலகம் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆனால், படைப்பாளிகளை உருவாக்குவதில் பெற்ற வெற்றி, மிக மிகக் குறைவு! கல்வியே அறிவுடைமையல்ல. கற்றவர்கள் எல்லாம் அறிவுடையவர்களும் அல்லர். கல்வியும், கேள்வியும் அறிவு பெறுதலுக்குரிய வாயில்களே ஆகும்!
இன்று நமது கல்வியுலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? மனிதனின் ஆன்மாவுக்கு உணவு கல்வி. ஆன்மாவை வளர்ப்பது கல்வி! இன்றைய கல்வி முறை மூளையில் தகவல்களைத் திணிப்பதாக அமைந்திருக்கிறதே ஒழிய ஆன்மாவைத் தொடவில்லையே! இன்றுள்ள கல்விப் பெருக்கத்திற்கு, இக்கல்வி உலகம், அளப்பரிய ஆற்றல் வாய்ந்த கல்வியாய் இருப்பின், இந்த உலகத்தையே மாற்றியிருக்கும்.
எங்கே மாற்றங்கள்? மனிதன் வர வரச் சூழ்நிலையின் கைதியாகிப் போகிறானே தவிர, சூழ்நிலையை அவன் மாற்ற முற்படவில்லையே! விலங்குகள் சூழ்நிலையைச் சார்ந்தவை. ஆனால், மனிதனோ சூழ்நிலைகளைத் தன்னுடைய வாழ்நிலைக்கும், இலட்சியத்துக்கும் ஏற்ப, மாற்றி அமைத்துக் கொள்ளும் ஆற்றலுடையவனாக விளங்குமாறு செய்தல் கல்வியின் விழுமிய நோக்கம், இன்றைய கல்வி உலகு, கடமை உணர்வுகளை, காலம் போற்றும் உயர் பண்பினை, கட்டுப்பாடுகளைப் போற்றி வளர்த்துக்கொள்ளக் கற்றுத் தரவில்லை. வெற்றி வாய்ப்புகளுக்குரிய கட்டுப்பாடுகளை நெகிழ்த்தி விட்டது இன்றைய கல்வி உலகம். ஏன்?
இன்று அறிவியல் என்ற பெயரில் வரலாறு, இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆதலால், இன்றைய மனிதன் நாகரீகத்தை இழந்து காவல் நிலையங்களின் வளர்ச்சிக்கும், சிறைக் கூடங்களை நிரப்பவுமே உரியவர்களாகி விட்டார்கள். கடந்த சில ஆண்டுகளில் காவல் நிலையங்களின் வளர்ச்சியே குற்றங்களின் வளர்ச்சிக்கு நிரூபணமாகிறது. ஆணும், பெண்ணும் இணைந்து வாழவேண்டியது சமூக அமைப்பு.
இச்சமூகத்தில் இன்று கல்வித் துறையிலிருந்து காவல் துறை வரையில் ஆண், பெண், பிரிக்கப்படுகின்றனர். ஏன் இந்த அவலம்? இந்த அவலத்தை முதலில் செய்தது ஆண் ஆதிக்கச் சமுதாய அமைப்பு. திருக்கோயிலில் அம்மை அப்பனாக இருந்து வழிபடும் பொருளை-அர்த்த நாரீசுவரனாக இருந்த பரம்பொருளை-இருவேறாகப் பிரித்துத் தனித் தனியாக்கினார்கள்.
அதற்குப் பிறகுதான் புராணங்களில்கூட ஆண் சாமிக்கும், பெண் சாமிக்கும் சண்டைகள் தொடங்கின. இன்னும் அதே திசையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம். ஆண், பெண் சமத்துவத்தைக் கல்வியில்கூடக் காண முடியவில்லை. ஏன்? பண்பாட்டு வளர்ச்சிக்குரிய கல்வியை வழங்காததுதான் காரணம். வளரும் வரலாற்றுக்குரிய உயிர்ப்புள்ள கல்வியை மனிதனுக்குத் தரவேண்டும்.
கல்வி, தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமன்று. கல்வி, ஆன்மாவின் சக்தியைத் தூண்ட வேண்டும். நல்ல காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது! நல்ல காரியங்களைச் செய்யும் ஆர்வத்தைத் தரவேண்டும். ஒரு ஊர், ஒரு நாடு எப்படி இருக்கிறது என்பதை அளந்தறியப் பயன்படுவது கல்வியேயாம்.
ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்களுடைய நாடு விளங்குமானால் “கெட்ட போர்” அங்கு இராது. ஆன்ற கல்வி கற்றோர் நல்லவராயிருப்பர். நாடும் நன்றாகவே இருக்கும்.
“எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
என்பது புறநானூறு,
கல்வி என்பது கல்லுதல் அல்லது தோண்டுதல் என்னும் சொல் அடியில் பிறந்தது. மனிதனிடத்தில் இயல்பாக உள்ள அறியாமையைத் தோண்டி எறிந்து விட்டு, அறிவூற்றைக் கண்டு, அந்த உயர்ந்த சக்தியை வளர்ப்பதே கல்வியாகும். இதுவே கல்வியின் நோக்கம்-பயன். கல்வித்துறை மக்கள் தொகுதிக்குரியதான் பிறகு, இது நடைபெறவில்லை. ஆயினும், தக்க நாட்டுப் பற்றுள்ள சமூகச் சிந்தனையுள்ள ஆசிரியர்கள் மனமிருந்தால், இன்னும் செய்ய இயலும், செய்யவேண்டும்.
கல்வியின் தகுதி, கற்பிக்கும் ஆசிரியரையே மிகுதியும் சார்ந்திருக்கிறது. கற்பிக்கும் ஆசிரியரிடம் சிறந்த திறன் இல்லையானால் பள்ளியால் விளையும் நன்மையைவிட விபத்துக்களும் குழப்பங்களும்தான் ஏற்படும். வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கும்பொழுது, மாணவர் பகுதியுடன் ஒன்றியிருக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் என்ன நடக்கிறது? கற்கும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் தனக்கும் அந்நிலையில் உள்ள ஒன்றுதலில் உள்ள அமைவு அல்லது இடைவெளியைத் தெரிந்துசொண்டு கற்பிக்கும் ஆசிரியர்தான், கற்பிப்பதில் வெற்றி பெற இயலும்.
பாடம் என்பது கற்பிக்கும். ஆசிரியரும் கற்கும் மாணவரும் ஆகிய இருவரும் இணைந்து செயல்பட வேண்டிய முயற்சி என்பதை ஆசிரியர் நினைவில் கொள்ள வேண்டும். கற்பிக்கும் தனது ஆசிரியத் தன்மையுடன், கற்கும் மாணவரையும் ஒன்றச் செய்வதன் மூலம் -கற்கும், கேட்கும், சிந்திக்கும் திறனைத் தூண்டித் தம்பால் ஈர்த்து, வினா-விடை மூலம்-மாணவன் கற்றுக் கொள்கிறான்; தெளிவாக இருக்கிறான் என்பதை ஆசிரியர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
ஒரு செடி வளர்வதற்குப் பலவகை உணவுப் பொருட்கள், மருத்துகள் தேவைப்படும். அதுபோல், மனிதனும் வாழ்க்கையில் வளர, பண்பாட்டில் வளர கல்வி தேவை. கற்கவேண்டிய துறைகள், நூல்கள் மனிதர்களுக்கிடையில் வேறுபடும்! ஆன்மாவின் தேவைக்கு ஏற்பவும், ஆன்மாவின் வளர்ச்சிக்கேற்பவும் மாறுபடும்.
ஆதலால் கல்வியில் பொதுக் கல்வியும், சிறப்புக் கல்வியும் இடம்பெற வேண்டும். பொதுக் கல்வி என்பது பொது அறிவு, சமூக வாழ்க்கைக்கு-ஒரு பணி செய்யத் தேவைப்படும் அறிவு. சிறப்புக் கல்வி என்பது கற்போர் நிலைக்கேற்ப மாறும். அது அறிவியலாகவும் இருக்கலாம். அல்லது தத்துவத் துறையாகவும் இருக்கலாம். பிறவாகவும் இருக்கலாம். இங்ஙனம் கல்வி வழங்கப் பெற்றால்தான் மனிதர்களை, அறிஞர்களை, ஞானிகளை உருவாக்கலாம்.
நம்முடைய குழந்தைகளைச் சிந்திக்கிறவர்களாகப் பழக்கிவிடுதல் அவசியம். முதல் இரண்டு வகுப்பு வரை பாடப் புத்தகங்களே வேண்டியதில்லை என்பது நமது கருத்து. இந்த வகுப்புக்களில் கற்பது எப்படி? நினைவாற்றலைப் பெறுவது எப்படி? சிந்திப்பது எங்ஙனம்? ஆகிய கல்வி கற்றலின் அடிப்படைகளைச் செயல்வழிக் கற்பிக்க வேண்டும். கற்கும் குழந்தைகளின் சிந்திக்கும் திறமையே ஆசிரியரின் திறமைக்கு அளவுகோல் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு இயல்பாகவே அளவற்ற சக்தி இருக்கிறது. நாம் இங்கு குறிப்பிடுவது உடல்சக்தி, மூளை சக்தி இரண்டையுமே குறிப்பிடுகின்றோம். இந்த இருவகை சக்திகளையும் குழந்தைகள் உபயோகிக்கும்படி ஆசிரியர் பழக்கவேண்டும். நடக்கும்பொழுது கீழே விழுந்துவிடும் குழந்தை, தானே எழுந்துவிடும் திறமையுடையது; மனப்பாங்கு உடையது. நாம் தூக்கும் போதுதான் குழந்தையின் ஆற்றல் குறைகிறது. மற்றவர்களை எதிர்பார்ப்பது குழந்தைகளிடத்தில் வளர்ந்து விடுகிறது.
ஆசிரியர், கற்கும் மாணவர்களிடத்தில் வினா கேட்கலாம். ஆனால் ஆசிரியர் விடை கற்றுத்தரவே கூடாது. மாணவர் சற்று விடை தரத் தாமதித்தால் அடுத்து-Next-சொல்லி விடுகிறார் ஆசிரியர். சில அவசரமுடைய ஆசிரியர்கள் விடையைத் தாமே சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள். இது தவறு. வினாவுக்குரிய விடைகள் மாணவர்களே அவர்களின் அறிவிப்புலனால் தேடவேண்டும். தேவையானால் ஆசிரியர் துணை வினாக்களைத் தொடுத்து, மாணவர்களிடத்தில் விடை காணும் முயற்சியைத் தூண்டலாம். எந்தச் சூழ்நிலையிலும் ஆசிரியர் விடை கூறக்கூடாது.
ஆனால், இன்று நடப்பு, வினா-விடைகளை எழுதிப் போட்டு மனப்பாடம் செய்வதுதான்! இதனால், சிந்தனைத் திறனும், புதியன காணும் முனைப்பும் வளரவில்லை! கல்வி உலகு, தேர்வு மட்டுமே என்ற குறுகிய குறிக்கோளில் சென்று கொண்டிருக்கிறது. திசையை விரிவுபடுத்திக் கொண்டு, சிந்தனையாளர்களை, படைப்பாளர்களை உருவாக்கும் உலகை நோக்கிச் செல்ல வேண்டும். படிப்பாளிகளை உருவாக்கும் நிலையிலிருந்து படைப்பாளிகளை உருவாக்கும் உலகை நோக்கிச் செல்லவேண்டும்.
கல்விக்கு இதயம் தேவை. சோவியத் கல்வியாளன் சுகோம்லின்ஸ்கி “குழந்தைகளுக்கு இதயத்தைக் கொடுங்கள்” என்று எழுதினான். கல்வி, மூளையோடு மட்டுமோ, கற்கும் நூல்களோடு மட்டுமோ சம்பந்தமுடையதன்று. இதயத்தோடும் சம்பந்தமுடையது. கல்வி கற்பிக்கவும், கல்வி கற்கவும், அதற்கென ஒரு சிறந்த பாங்கு தேவை.
கற்பிக்கும் ஆசிரியருக்குச் சிறந்த உணர்வு நிறைந்த இதயம் தேவை. கற்கும் மாணவருக்கும் ஆசிரியரைப் பூரணமாக ஆசிரியரின் மனத்தைக் கூடப்புரிந்துகொள்ளும் உள்ளம் வேண்டும். அப்போதுதான் கற்பிக்கும் பணியும், கற்கும் பணியும் அர்த்தமுள்ளது ஆகும்.
இத்தகு கல்விச் சூழலுக்கு உரியமொழி தாய்மொழியே என்ற கருத்திற்கு இரண்டாவது கருத்து இருக்கமுடியாது. இயற்கை வழங்கும் கொடைகளில் ஒன்று தாய்மொழி. தாய்மொழியே சிந்தனைமொழி; உணரும்மொழி. ஒரு நாட்டு மக்களை அடிமைப்படுத்த முதற்சாதனம் அந்த நாட்டு மக்களைத் தாய்மொழியில் கல்வி கற்க அனுமதிக்காது இருப்பதே.
இன்று நம்முடைய நாட்டில் தாய்மொழி வழிக் கல்வியியக்கம் வெற்றிபெறவில்லை. தேசீயமொழியைக் கற்றபாடில்லை. ஆங்கிலத்திலிருந்து தாய்மொழிக் கல்விக்கு மாற மறுப்பது பலவீனம். இந்ததிசையில் செல்வது விரும்பத்தக்கதல்ல-தாய்மொழிக் கல்வியும், தேசீய மொழியறிவும் நாம் பெற வேண்டியவை. உலகத்தின் சாளரத்தை மூடவும்வேண்டாம். ஆங்கிலத்தையும் ஒரு மொழியாகக் கற்கலாம்.
தாய்மொழியை மதித்துப் போற்றும் கல்வி உலகமே நமக்குத் தேவை. தாய்மொழி வழி உள்ளத்தை உயர்வு செய்யும் கல்வி கற்போம்; அறிவை வளப்படுத்தும் கல்வி கற்போம். உலகக் கல்வியும் கற்று உலகமாந்தருடன் கைகோர்த்து நிற்போம்! சுய அறிவை வளர்ப்போம். அதற்குத் துணையாகக் கற்கும் கல்வியை ஆக்குவோம்!
பெரிய, பெரிய இலட்சியங்களை-இமயத்திலும் உயர்ந்த இலட்சியங்களைக் கொள்வோம்! அவற்றை அடைய உழைப்போம்! இதுவே இன்றைய கல்வி உலகு நம்மை அழைத்துச் செல்ல வேண்டிய இடம்.
நாளைய இந்தியா இன்றைய பள்ளியிலேயே தொடங்குகிறது என்பதை நமது அரசுகளும் சமூகமும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம். எதிர்கால இந்தியா ஏற்றமடைவது இன்றைய பள்ளியின் நடைமுறையையும், நமது குழந்தைகளுக்குத் தரப் பெறும் கல்வியையுமே பொறுத்திருக்கிறது.
நாம் இன்று சாதி, மத, இன எல்லைகளிலும், பகுத்தறிவுக்கு முரணான மூடநம்பிக்கைகளிலும் சிக்கிச் சீரழியும் போக்கினைத் தவிர்த்து, அடுத்த தலைமுறையினருக்குப் புதிய உலகைக் காட்டவேண்டும். நம்முடைய இளைஞர்கள் சிறந்த கல்வியையும், ஞானத்தையும் பெற்று, பொறுமை, உறுதி, முயற்சி, இவற்றோடு அர்ப்பணிப்பு உணர்வோடு பணிசெய்வதில் நம்பிக்கை வைக்கக்கூடிய கல்வியே இன்றையத் தேவை. இதுவே நாம் செல்லவேண்டிய திசை...!
கல்வி உலகம் இன்றைக்கு இரண்டாகப் பிரிந்து இருக்கிறது. மேலும் தெளிவாகச் சொல்லப் போனால் கல்வியில் இரண்டு ஜாதிமுறை தோன்றியிருப்பது போலத் தெரிகிறது. அதாவது கிராமப்புறகல்வி, நகர்ப்புறக் கல்வி என்று குறிப்பிடுகின்றோம். கிராமப்புறக் கல்விக்கும், நகர்ப்புறக் கல்விக்குமுள்ள இடைவெளி மிகவும் அதிகம் என்பதை வருத்தத்தோடு குறிப்பிட வேண்டி இருக்கிறது.
நகர்ப்புறத்து இளைஞர்கள், மாணவர்கள், தரமானக் கல்வி பெறமுடிகிறது. அவர்களது அறிவுப் புலன்களுக்கு நிறைய விருந்து கிடைக்கிறது. அதனால், தரமும் திறமையும் உடைய இளைஞர்கள், நகர்ப்புறத்தில் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் கிராமப் புறத்தில் அது இல்லை. கிராமப்புற பள்ளிக் கூடங்கள் எந்தவிதமான ஊட்டச்சத்தும் இல்லாத கல்வி நிலையங்களாக விளங்குகின்றன. சோதனைக் கருவிகள் கிடைப்பதில்லை. நல்ல நூலகம் அமைவது இல்லை. அவர்களுடைய செவிப்புலனுக்கு நிறைய விருந்துகள் கிடைப்பதில்லை. அதன் காரணமாக, கிராமப் புறக்கல்வியில், தரம் குறைந்திருக்கிறது என்பது இரண்டு கருத்துகளுக்கு இடமில்லாத ஒரு பொதுச் செய்தி. கிராமப் புறக்கல்வியை மேம்படுத்துவதில் இன்னும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு இப்படி ஒரு ஆலோசனைக் கூடச் சொல்ல முடிகிறது. கிராமப்புறத்தில் திருக்கோயில்கள் உண்டு. “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதை நாம் பின்பற்றுபவர்கள். ஒவ்வொரு கோயிலும், அந்தக் கிராமப்புறத்தினுடைய ஆரம்பப் பாடசாலையைத் தத்தெடுத்துக் கொண்டு, அந்த ஆரம்பப் பாடசாலையின் வளர்ச்சிக்கு, அங்கு பயிலுகின்ற சிறுவர்களுடைய வளர்ச்சிக்குரிய அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளலாம்; அப்படிச் செய்தால்தான் கிராமப்புறக்கல்வி வளரும்.
அடுத்து, ஏடுகளின் வழியாக, புத்தகங்களின் வழியாக, கல்வி கற்றுத் தருவதை விட செயல் வழிக் கல்வி கற்பிப்பது நல்லது என்று கருதுகின்றோம். செயல் வழிக் கற்கும் கல்வி நீண்ட நெடு நாட்களுக்கு, நினைவில் இருக்கும். அதனால் அதற்குரிய சாதனங்களை ஒவ்வொரு பள்ளியும் பெற வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுதோறும் புதிய புதிய நூல்கள் வாங்கவேண்டும்.
நம்முடைய நாட்டில் தீபாவளி கொண்டாடப்படுவது போல, பொங்கல் கொண்டாடப்படுவதைப்போல, கலைமகள் விழா கொண்டாடும் காலம் விரைவில் வர வேண்டும். அப்பொழுதான் கல்வியுலகில் புத்துணர்வும், ஆர்வமும் தோன்றும். இன்று கலைமகள் விழா என்று ஒன்று இருக்கிறதாகவே பலருக்குத் தெரியவில்லை. நூல்களை வாங்குவதுமில்லை. நூல்களைப் புதுப்பிப்பதுமில்லை.
இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் ஏதோ ஒரு மூட நம்பிக்கையில், அன்றைக்குப் படிக்கக் கூடாது என்றே, ஒரு கருத்து உலா வருகிறது. அன்றைக்கு, இருக்கும் புத்தகங்களையும் கட்டிவைத்துவிட்டு, பூப்போட்டு மூடிவிட்டு, படிக்கக் கூடாது என்று முடிவுசெய்து விடுகிறார்கள். இதையும் நாம் மறுத்துவிட வேண்டும்.
பள்ளிக்கூடங்கள் கலைமகள் விழாவன்று திறந்திருக்க வேண்டும். நூலகங்கள் திறந்திருக்க வேண்டும். அன்றைக்குக் கல்வி வேள்வி எங்கும் செய்யவேண்டும். கடைவீதியில் உள்ள புத்தகக்கடைகளில், நீண்ட, நெடிய வரிசையில் மக்கள் நின்று, தங்களுக்கும், தங்களுடைய குழந்தைகளுக்கும் தேவையான புத்தகங்களை வாங்கும் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும், தன்னுடைய அருமை மகனுக்கு, அல்லது அருமை மகளுக்கு, ஒரு பெற்றோர் வாங்கிக் கொடுக்கக்கூடிய உயர்ந்த பரிசு புத்தகமாகவே இருக்கவேண்டும். அந்தப் பழக்கத்தைக் குழந்தைகளும் கற்றுக்கொள்ள வேண்டும், பெற்றோர்களும் பயில்விக்க வேண்டும்.
பணிப் பாதுகாப்ரி என்பது இன்று வளர்ந்து வந்திருக்கக் கூடிய நாகரீகம். தவிர்க்க முடியாதது. வரவேற்கத் தக்கதும்கூட. பணிப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதைப் போலவே, அவனிடத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் தரமானவர்களாக, திறமானவர்களாக, அறிஞர்களாக உருவாவதில் ஆசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
அவர்களுடைய பணி தரமானதாக, எல்லோருக்கும் ஏற்றம் தரத்தக்கதாக அமையவேண்டும். அப்பொழுதுதான் பண்ணியினுடைய பாங்கு வளர்ச்சி அடைய முடியும். வெற்றி-பெற முடியும்; உயர்ந்த ஆசிரியர் பணி மேற்கொண்டிருக்கக் கூடியவர்கள், ஒரு நாட்டின் வரலாற்றை சீரமைக்க உதவி செய்கிறோம் என்ற எண்ணத்துடன் தம்முடைய பணியை அர்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும்.
வகுப்பறையில் உட்கார்ந்து படிக்கும் மாணாக்கன், நாளை நாட்டை ஆட்சி செய்பவனாக மாறமுடியும், மாற வேண்டும். அதற்குரிய வாயிலை பள்ளிக்கூடங்கள், சிறப்பாக, ஆசிரியர்கள் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.
எனவே இன்றைய கல்வியுலகத்தினுடைய தடத்தில் நாம் செல்லுவது போதாது. அகன்ற, விரிவான, உயர்ந்த குறிக்கோளுடைய, லட்சியமுடைய சிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன், நாம் செல்லும் திசையை அகலப்படுத்தி மிர்ற்ற வேண்டும். என்று கேட்டுக்கொள்ளுகின்றோம். சிறந்த கல்வி உலகம், அறிஞர் உலகம் தோன்ற வேண்டும். அதுவே நாம் செல்ல் வேண்டிய திசை.