எங்கே போகிறோம்/6. வேளாண்மைச் சிந்தனைகள்


 


6. வேளாண்மைச் சிந்தனைகள்


இன்றைய பொருளாதாரம் எப்படி இருக்கிறது? வேளாண்மைப் பொருளாதார வகையில் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? நாம் எங்கே போக வேண்டும்? நமது நாடு வேளாண்மை நாடு. வேளாண்மைக்குரிய நிலப்பரப்பு, நிலவளம், மனித சக்தி மிகுந்த நாடு. நமது இலக்கியங்களில், காப்பியங்களில் தவறாமல் வேளாண்மையைப் புகழ்ந்து பேசாத கவிஞர்கள் இல்லை.

ஆனால், இன்றைய தலைமுறையில் வேளாண்மைத் துறையில் போதிய ஆர்வம் இல்லை! அரசுப் பணிகளை விட, வியாபாரத்தைவிட விவசாயம் இரண்டாந்தரத், தொழில் என்று கருதப்படுகிறது. இது முற்றிலும் தவறு.

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” என்றும்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்”

என்றும் திருக்குறள் கூறுகிறது.

உடலோடு கூடிய உயிர் வாழ்க்கைக்கு உணவுப் பொருள்கள் இன்றியமையாதன. உணவுப் பொருள்களை வழங்குவது விவசாயத் தொழிலே! அதனாலேயே “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்று இலக்கியங்கள் பாராட்டுகின்றன.

நடைமுறையில் பால் தரும் பசு, புண்ணியமானது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஆனால், தமிழர் வாழ்வியலில் எருதே முதன்மை பெற்றுள்ளது. நாம் வணங்கும் கடவுள்-சிவபெருமான், தனது ஊர்தியாகவும் உயர்த்திப் பிடிக்கும் கொடியாகவும் பயன்படுத்துவது எருதுதான் என்பதை உணர்க. திருக்கோயில் முகப்பில் வரவேற்பது உம் எருதே!

“உழுத நோன் பகடு அழிதின்றாங்கு”

என்ற புறநானூற்று வரி, என்றும் போற்றத்தக்க வரி. உழுததின் பயனாகிய செந்நெல் லரிசியை, செங்கரும்பின் சாற்றை மனித உலகத்துக்கு உண்ணக் கொடுத்துவிடும் பண்புடையவை எருதுகள். ஆதலால்தான், தமிழர் வாழ்வில் பொங்கல் விழா உழவர் திருநாளாக உருக் கொண்டது.

மனிதன் உண்டு உயிர் வாழ்தலுக்கு ஒரு நாளைக்குச் சராசரி எவ்வளவு உணவு-கூட்டுணவு தேவையோ அது அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் வலிமையிழந்து நிற்கின்றான். நமது நாட்டில் உணவுப் பொருள் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கும் திசையில் சென்று கொண்டிருக்கிறோம். அன்றாடத் தேவைக்குரிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதைக் கூடுதலாக்க வேண்டும்.

இலாப நோக்கில் பணப் பண்டங்களை உற்பத்தி செய்வதையும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விளை நிலங்களையும் கண்மாய்களையும் பற்றிக் கொண்டு வருவதையும் தவிர்க்க வேண்டும். ஊட்டி வளர்க்கும் தாய் போன்றது நிலம். உணவளிப்பவர்கள் விவசாயிகள்! உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!

நமது இந்திய நாட்டுப் பொருளாதாரத்தில் விவசாயம் கணிசமான பங்கைப் பெற்று வந்துள்ளது, பெற்று வருகிறது. நமது நாட்டுப் பொருளாதாரத்தில் விவசாயம் வகிக்கும் பங்கு 39 விழுக்காடு. அது மட்டுமல்ல. விவசாயத் தொழில் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு 79-விழுக்காடு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை பெற்றுள்ள பொருளாதார விகிதம் 28 விழுக்காடு. வேலை வாய்ப்பு 62 விழுக்காடு. இந்திய நாட்டுப் பொருளாதாரத்தை விவசாயத்தின் மூலம் மேலும் கூட்ட வாய்ப்புண்டு.

அதுபோலவே தமிழ்நாட்டிலும் கூட்ட அதிக வாய்ப்புக்கள் உள்ளன. அந்த வாய்ப்புக்களை நாம் முழுமையாகப் பயன்படுத்தினால் பொருளாதாரத் துறையில் தற்சார்பு நிலையை அடைய முடியும். எல்லோரும் பசிதீர உண்பது மட்டுமன்றி, பசி, பட்டினியை அறவே ஒழித்து. வெளியேற்ற இயலும், “வறுமையே வெளியேறு” என்ற கோஷத்திற்கு வெற்றி சேர்க்க முடியும்.

இன்று நமது பொது உணவுப் பொருள், உற்பத்தியில் 20 விழுக்காடு அயல் நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. நமது உணவுத் தேவையில் 33 விழுக்காடு பற்றாக்குறைதான். ஆயினும் மகிழ்ச்சியான ஒரு செய்தி, மக்கள் தொகையை ஈடுகொடுத்து உணவுப் பொருள் உற்பத்தியாகி உள்ளது.

இந்திய மக்கள் தொகை, இந்திய நாட்டளவில் 2.3. தான் கூடியிருக்கிறது. ஆனால், விவசாயத்தில் வளர்ச்சி 4.2; தமிழ் நாட்டில் வளர்ச்சி 3.1. தேவையைவிட உற்பத்தி கூடுதலாகியுள்ளது.

இப்படி உற்பத்தி இருந்தும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் முதலியன பற்றாக் குறையேயாம். இவற்றை உற்பத்தி செய்யக்கூடிய நிலங்கள் நம்மிடத்தில் இல்லையென்று கூறமுடியாது. நாட்டளவில் நிலங்கள் உள்ளன. நமது பகுதிகளில் செம்மண் சரளை மணல் நிலம் நிறைய உள்ளது.

விவசாயத்தை ஒரு தொழிலாகக் கருதிச் செய்ய வேண்டும். ஏனோ தானோ என்று செய்தால் விவசாயம் போதிய பயனைத் தராது. இன்று விவசாயத் தொழிலில் அதிகமான பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் குறைந்தபட்சம் நான்கில் ஒரு பங்கினரையாவது வேறு தொழில்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

இந்திய மக்கள் தொகையில் 4.2 பேர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்களில் 3.3 மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் விவசாயிகளிடம் நிலம் நபருக்கு 4.8 ஹெக்டேராக இருந்தது. இப்போது நபருக்கு 1.5 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.

பொதுவாக ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் பராமரிப்புக்குக் குறைந்தது ஐந்து ஏக்கர் தேவை. விளை நிலத்தின் அடிப்படையில் மக்கள் செறிவு 2.5க்குள் இருத்தல் நல்லது. இப்போது விவசாயம் செய்யப் பெறும் நிலங்களைவிட வரப்புகளே அதிகம்.

இதேபோல நெல் சாகுபடி செய்யும் நிலம் குறைந்து வருகிறது. முன்பு சாகுபடி செய்யும் நிலம் 27 இலட்சம் ஹெக்டேராக இருந்தது. இபபோது 21 இலட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. நிலத்தில் நெல் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக பணப் பயிர்கள், கரும்பு, முதலியன உற்பத்தி செய்வது, வீட்டு மனைகளாக மாற்றி விற்பது போன்ற மனப்போக்கு வளர்ந்து வருவதால் விவசாய நிலம் குறைந்து வருகிறது.

இந்தப் போக்கு நீடித்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட வழி வகுத்ததாகி விடும். முன்பே நமக்கு, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் பற்றாக்குறை என்று கூறியதை நினைவில் கொள்க.

மண் என்பது ஓர் உயிரியல் பொருள் என்பதை நம்மில் பலரும் உணரவேண்டும். பொதுவாக மண்ணில் அங்ககச் சத்து (இயற்கை உரம் 5 சதம், மணிச்சத்து 45 சதம், காற்று 25 சதம், நீர் 25 சதம், தொழு உரச்சத்து 50 சதம் இருத்தல் நல்ல விளை நிலத்திற்கு அடையாளம்.

நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மணலே, அதாவது நான்கு அங்குலம் மேற்பரப்பே வேளாண்மைக்கு ஏற்றது. இப்புவிக் கோளத்தில் கல் தோன்றிய பிறகே மண் தோன்றியது. இந்த மண் தோன்ற, குறைந்தது 10 இலட்சம் ஆண்டுகள் பிடித்தன என்று உணர்ந்தால், நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண் கண்டத்தின் அருமை நமக்குப் புரியும்.

தமிழகத்தின் நிலப்பரப்பில்-விளை நிலப் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் செம்மண் நிலமேயாகும். இந்தச் செம்மண் கண்டமும் ஆழமற்றது; இளகிய இயல்புடையது. கார நிலையுமின்றி அமில நிலையுமின்றி, சம நிலையில் இருக்கிறது.

மண் உயிரற்ற பொருள் அன்று. பல்வகை உயிரினங்களின் வாழிடம் அது. நுண்ணாடிக்கும் புலப்படாத வைரஸ் முதல் பாக்டீரியா, ஆக்டினோமை சீட்ஸ், பாசி, ஆம்பி, ப்ரோட்சோவர், மண்புழு, எறும்பு, இன்னும் பிற பூச்சிகள், பிராணி இனங்கள் அதில் வாழ்ந்து வருகின்றன.

ஒரு கைப்பிடி மண்ணில் கோடானு கோடி உயிர்கள் இருக்கின்றன. அவற்றில் சில, சூழ்நிலை செம்மையாக வாய்ந்திருப்பின் மிக மிக விரைவாகப் பெருக்கமடைகின்றன. குளிர் மண்ணில் உயிர்களுடைய செயல் குறைவுபடுகிறது. மண்ணில் ஈரம், வெப்பம், காற்று. ஆகிய மூன்றும் செவ்வையாக அமைந்தால் அவ்வுயிர்களுக்குத் தகுந்த சூழ்நிலை ஏற்படுகிறது.

சுறுசுறுப்பாக மண் புழுக்கள் நிறைந்திருக்கும் மண், வளம் நிறைந்திருப்பதை உணர்த்தும். அதேபோல் பல்வகை உயிரினங்கள் கண்ணுக்குப் புலனாகாவிடினும் ஒரு வாரத்தில் எண்ணற்றனவாக கணக்கிலடங்காதனவாகப் பல்கிப் பெருகி வளர்கின்றன.

மண் வளம் என்பது அளவற்ற சொத்து மதிப்புடையது. வேளாண்மை பொருளாதாரத்தின் உயிர்நாடி, மண்வளத்தைப் பாதுகாத்தலேயாம். மண்வளத்தை இரசாயன உரங்கள் மூலம் பாதுகாக்க முடியாது. இரசாயன உரங்கள் உரம் என்பது கூறப்படுவதே, ஒரு உபசார முறைதான்.

நிலத்தின் வளத்தைக் காப்பது, இயற்கைத் தொழு உரமும், தழைச்சத்து உரமுமே என்பதை நம் விவசாயிகள் நினைவில் கொள்ள வேண்டும். இரசாயன உரங்கள் நிலத்தில் உள்ள உரத்தை விரைந்து பயிர்களுக்கு எடுத்துத் தரும் கிரியா ஊக்கிகளே என்பதை நாம் உணர வேண்டும்.

மண் வளத்திற்குப் பகை, மண் அரிப்பு. இந்த மண் அரிப்பு, விவசாயத் தொழிலைச் சீர்குலையச் செய்து, மனிதகுலத்துக்கே அழிவைத் தரும். ராஸ்டன் செப் என்ற விஞ்ஞானி மண் வளம் பற்றி ஆராய்ந்து புகழ்பெற்ற விஞ்ஞானி ரோம் சாம்ராஜ்யத்தின் அழிவுக்குப் பயிர்த் தொழில் சீர்குலைந்ததும் ஒரு காரணம் என்று கூறி உள்ளார் அவர்.

மண்வளம் குறைதல் ஒரு நாட்டு மக்களின், வாழ்க்கை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாகும். மனிதரின் உடல் நலிவுக்கு ஊட்டச்சத்து இன்மை காரணம். ஊட்டச்சத்து தரும் உணவின்மைக்குக் காரணம் விவசாயச் சீர்குலைவு.

விளையும் நன்செய்—புன்செய் புலங்களையோ, பழத் தோட்டங்களையோ கால்நடைகள் மேயும் மேய்ச்சல் தரையாக மாற்றுவதும் அல்லது தாமே ஆகும்படி விட்டு விடுவதும் கூடாது. கால்நடைகளைக் கண்டபடி கட்டுப் பாடில்லாத வகையில்—குறிப்பாக ஆடுகளை மேய்க்கும் முறைகேடுகளால் மண் அரிப்பு ஏற்பட்டு மண்வளம் கெடும்.

இன்று தமிழ்நாட்டில் மேய்ச்சல் தரை என்பதே இல்லை. சில இடங்களில் புல்லே இல்லாத மந்தை வெளிகளை மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்துகின்றனர். ஊர்கள்தோறும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மேய்ச்சல் தரையையும், கால்நடைத் தீவனத் தழைகளைத் தரும் மரங்களையும் வளர்த்தால்தான் நம்முடைய நிலத்தின் மண்வளத்தைக் காப்பாற்ற முடியும். வேளாண்மையிலான பொருளாதாரமும் செழிப்பாக இருக்க முடியும்.

காற்றினாலும் மண் அரிப்பு ஏற்படுவது உண்டு. அதாவது காற்றினால் மண் பறந்து போய்விடுதலாகும். இதனைத் தடுக்கப் புலங்களின் எல்லையில்—வேலிகளில் காற்றுப் தடுப்பு மரங்களை—உயர்ந்த மரங்களை உதி, பூவரசு, பலா முதலியவைகளை நடுவது நன்மை பயக்கும். இதனால், காற்றால் மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

நமக்குத் தீங்கு செய்யும் மண் அரிப்பு, மனிதனால் அவனுடைய அக்கறையின்மையால், அலட்சியத்தினால் ஏற்படுவதேயாகும். மண் அரிப்பு, மனிதனுடைய கட்டுப்பாட்டுக்குள் அடங்கியதே! தடைபடா மண் அரிப்பு, வறுமைக்குரிய வாயில், சமுதாயத்தின் வலிமைக்கும் பொருளாதாரச் செழிப்புக்கும் உலைவைக்கும்.

இன்று நம்முன் உள்ள தலையாய பிரச்சனைகளுள் ஒன்று, உடனடியாகக் கவனிக்க வேண்டிய பிரச்சனைகளுள் தலையாயது மண் அரிப்பேயாகும். மண் அரிப்பு, இந்தியப் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும். ஆதலால்,

நிலத்தினை உழாமல் தரிசாகப் போடாதீர்!

நிலத்தினை மேடு பள்ளமாக அமைய விடாதீர்!
சமநிலைச் சமுதாயம் காண முதல் முயற்சி,
சமநிலை நில அமைப்பு!
பெய்யும் மழை நீர்,
நின்றும் நிற்காமலும்
மெல்ல நிலமகளைத் தழுவி ஓடச் செய்வீர்!
மனிதனுக்கு ஆடைபோல
நிலத்திற்கு ஒரு பசுமை, போர்வை!
கண்டபடி ஆடு மாடுகளைக்
கட்டுப்பாடில்லாமல் மேயவிடாதீர்!
விரைவில் கொள்ளை லாபம் தரும் எதுவும்
அழிவையே தரும்.
காடுகளை அழிக்கும் வெள்ளாடுகளைத் தவிர்ப்பீர்!
நிலத்தை ஊட்டி வளர்க்கும்
செம்மறியாடுகளைச் சேர்த்திடுவீர்!

காற்றுத் தடுப்பு மரங்களை
வேலிகள் தோறும் நடுவீர்!
காலத்தால் அமைந்த மண்வளத்தை இழக்காதீர்!
மண்வள இழப்பு,
மனிதகுலத்திற்கு அழிவு என்று உணர்வீர்!

நம்முடைய விவசாயப் பாதிப்புக்கும் வேளாண்மை அடிப்படையிலான பொருளாதாரப் பாதிப்புக்கும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, வறட்சி.

நமது நாட்டில் பெய்யும் மழை 76 சென்டி மீட்டருக்கும் குறைவு. இந்தியாவில் பெய்யும் மழையைத் தென்மேற்கிலிருந்து வீசும் காற்று இந்துமாக் கடலில் படிந்து நீர் சுமந்துகொண்டு வந்து தருகிறது. இதுவே, தென்மேற்குப் பருவக் காற்று மழை. தென்மேற்குப் பருவ மழையே பெய்யும் மழையில் பெரும் பகுதி, தோராயமாக 75 விழுக்காடு.

அடுத்துப் பெய்வது வடகிழக்குப் பருவ மழை. ஒரு ஆண்டில் 76 சென்டி மீட்டருக்கும் குறைவாக மழை பெய்தால் அந்தப் பகுதி வறட்சியால் பாதிக்கும்.

நம் தமிழ்நாடு இவ்வகையில் பாதிப்புக்குள்ளாவது. இங்ஙனம் வறட்சியால் பாதிப்பதைத் தவிர்க்கவும். மழையை கூடுதலாகப் பெறவும் காடுகளின் அளவைக் கூடுதலாக்க வேண்டும். வேளாண்மை முறைப்படி மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடு இருக்க வேண்டும். இப்போது அவ்வளவு இல்லை.

பெய்யும், குறைந்த மழைத் தண்ணீரை முறையாகப் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கோடை மழை—தென்மேற்குப் பருவ மழைக் காலத்தில் நிலத்தை உழுதுவிட வேண்டும். இதனால் நிலம், பெய்த மழைத் தண்ணீரைத் தன்பால் ஈர்த்து வைத்திருக்கும்.

அடுத்து வரும் வடமேற்குப் பருவ மழைக் காலத்தில் நடவு செய்யத்தக்க வகையில் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டு நாற்றுப் பாவி வைத்துக்கொள்ள வேண்டும்.

வடமேற்குப் பருவ மழை பெய்தவுடன் உழுத நிலத்தை ஒன்று அல்லது இரண்டு உழவில் சேறு கலக்கி நட்டுவிட்டால் தண்ணீர்ப் பாசனம் இல்லாமலே மழை நீரிலேயே பயிரை வளர்த்து மகசூல் கண்டுவிடலாம்.

நாளுக்கு நாள் பருவ காலம் மாறி வருகிறது. மழையின் அளவும் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலைகளையெல்லாம் கவனத்தில் கொண்டு விவசாயிகள் நடந்துகொண்டால்தான் வேளாண்மை அடிப்படையிலான பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியும்.

ஆற்றில் தண்ணீர் வரட்டும், கண்மாயில் நீர் நிறையட்டும் என்பது இன்றைய சூழ்நிலைக்கு ஒத்து வராதது. அதோடு பெய்யும் மழைத் தண்ணீரைச் சொட்டு நீர்கூட வீணாகாமல் சேகரிக்கும் மனப்பான்மை தேவை.

நிலத்தில் புல், பூண்டு முளைத்து வளர்ந்து மூடியுள்ள இடங்கள் மழை நீரை மிக மந்த கதியில் தத்திச் செல்லும். காடு அடர்ந்த நிலத்து மண், தன்மேல் விழும் நீரைக் கடற் பஞ்சுபோல் உறிஞ்சித் தேக்கி நிறுத்திக் கொள்ளும்.

ஆதலால், நீர்ச் சேர்க்கை நிலப்பகுதி, நீர்ப் புரளி நிலப்பரப்பு, கண்மாய்கள், வாய்க்கால்கள், கண்மாய்க் கரைகள் முதலியவைகளில் மரங்களை வளர்ப்பது நல்லது. இந்த மரங்கள் தண்ணீரைக் குடித்துவிடும் என்ற அச்சம் தவறானது. 10 விழுக்காட்டுத் தண்ணீரைக்கூட மரம் குடிப்பதில்லை.

அவை, பெய்யும் மழை நீரை நிலத்துக்குள் செலுத்தி நிலத்தடியில் நீரைத் தேக்கி வைத்து, கிணறுகளில் நீர் வளத்தைப் பாதுகாத்துத் தரும். புவியீர்ப்பு ஆற்றல் நீர்த் திவலைகளை நிலத்துக்குள் இழுத்து வைத்துச் சேமிக்கிறது.

இங்ஙனம் மரம், புல் முதலியவைகளால் மழை நீரை முறைப்படுத்திய மிதமான நீரோட்டமாக அமைய விடாமல், ஓடையாக விரிவடைந்து ஓட அனுமதித்தல் கூடாது. உடன் தடுத்துச் சீர்செய்ய வேண்டும். இல்லையேல் அவை மாபெரும் ஓடைகளாகி நிலம், பண்ணை, ஊர் முழுதும் கூட அழித்துவிடும்.

வேளாண்மை பொருளாதாரத்தில் நிலமும் நிலத்தின் வளமும் பெரும்பங்கு வகிப்பதால் மண்வளம் பற்றியும் மண் அரிப்பைப் பற்றியும் அதிகம் சொல்ல நேரிட்டது.

வேளாண்மைக்கு அடிப்படையான மண்வளத்தைப் பற்றி அறிந்துகொண்டோம். நமது தமிழ் நாட்டின் நிலப்பரப்பு, பெய்யும் மழை, இயற்கைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உள்ள தொழில், பழமரம் வளர்ப்பு. செம்மண் சரளை கலந்ததாக இருப்பதால் மாவும், பலாவும் நன்றாக வளரும்.

மாவிற்கு, வைத்த முதலாண்டிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும். பின் வரும் ஆண்டுகளில் மழைநீர் மரத்தைச் சுற்றித் தங்குவதற்கு ஏற்றவாறு மண்ணை கட்டினாலும், நிலத்தை உழுதாலும் போதும். தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதிக முதலிடும் தேவையில்லை. ரூ 5000 இருந்தால் போதும். பின் ஆண்டுதோறும் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் ரூ 2000 வரை செலவாகும்.

மா, பயிர்செய்யும் நிலத்தில் முதல் ஆறு வருடங்கள் வரையில் ஊடு பயிர் பயறுவகைகள், கடலை முதலியன சாகுபடி செய்யலாம். இதில் பராமரிப்புச் செலவுக்குரிய தொகை கிடைத்து விடும்.

மாம்பழ வகையில் நீலம், பெங்களூர் நமது பகுதிக்கு ஏற்றது. இது பணப்பயிரும் ஆகும். இந்தப் பழ மரங்கள் ஆண்டுதோறும் தவறாமல் காய்க்கும். மரம் முழுவதும் காய்க்கும். ஐந்து வருடத்திலிருந்தே காய்க்க ஆரம்பித்து விடும். 10 வருடத்திலிருந்து நன்றாகக் காய்க்கும்.

சராசரி மரம் ஒன்றுக்கு 50 கிலோ காய்க்கும். ஒரு கிலோ விலை 10 ரூபாய். 40 மரங்களுக்கு 2000 கிலோ. இதன் மதிப்பு 20000 ரூபாய். இவ்வளவு வருமானம் வேறு எந்தச் சாகுபடியிலும் கிடைப்பதில்லை. மாவின் வயது 35 வருடம் முதல் 40 வருடம் வரையாகும்.

அடுத்து, பலாமரம். பயிரிடும் செலவு, பராமரிப்புச் செலவு ஆகியவை மாவைப் போலவேதான் இதற்கும் ஆகும். ஆனால், ஒரு ஏக்கருக்கு 70 மரங்கள் நடலாம். பலாவும் 5 வருடம் முதல் பலன்கொடுக்க ஆரம்பித்து 10 வருடத்திலிருந்து முழு மகசூல் தரும். அதாவது பலாமரம் ஒன்றுக்கு 10 பழம் 70 மரங்களுக்கு 700 பழம். ஒரு பழத்தின் விலை ரூ 80 பலா சாகுபடியின் மூலம் ஆண்டு ஒன்றுக்குச் சராசரி ரூ 50,000 வருவாய் கிடைக்கும்.

ஆதலால், நம் நாட்டுப் பொருளாதாரத்தில் குறிப்பாக அந்நிய நாட்டுச் செலாவணியில் பழத்தின் பங்கு அதிகம். நம்முடைய நாட்டின் ஏற்றுமதியில் 25 விழுக்காட்டுக்கும் மேலாகப் பழங்களும் பழப்பக்குவப் பொருள்களும் பங்கு வகிக்கின்றன.

பழத்தோட்டம் அமைக்கும் தொழிலை அறிய பழக் கன்றுகளை வாங்க பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்திலுள்ள நேமம், அரசு பழப் பண்ணையை நாடலாம்.

நமது நாட்டில் பலபகுதிகளில் தென்னை நன்றாக வளரும். தென்னை, நல்ல பணப் பயிர்; நல்ல வருமானம் தரக் கூடியது. தென்னை ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 வரை நடலாம்.

சில உயர்ரகங்கள் அல்லது கவனிப்பு அடிப்படையில் 5 வருடத்திலேயே காய்ப்புக்கு வந்து விடும் காலதாமதமாயின் 7 வருடங்களில் காய்க்கத் தொடங்கிவிடும். நல்ல முறையில் உரம் வைத்து மாதம் 2 தண்ணீர் பாய்ச்சினால் ஒரு மரம் சராசரி 200 காய் காய்க்கும். குறைந்தாலும் 100 காய்க்குக் குறையாது.

ஆனால், நாட்டில் இப்போது சராசரி மரம் ஒன்றுக்கு 80 காய்தான் காய்க்கிறது. 200-க்கும் 50-க்கும் உள்ள வித்தியாசம் இழப்பு இது நம்முடைய பொருளாதாரத்தைப் பாதிக்கும். சராசரி ஒரு தென்னை ஆண்டு ஒன்றுக்கு ரூ 800 கொடுப்பதற்குப் பதில் ரூ 240 தான் தருகிறது.

இந்தியப் பொருளாதாரத்தில் தேங்காயின் பங்கு கணிசமானது. ஆதலால், தென்னையை நன்றாகப் பராமரித்து உரிய பயனை அடைவதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும். நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயப் பொருள்களின் விலைக் கொள்கை, விவசாயிகளுக்கு ஏற்றதாக இல்லை. விவசாயப் பொருளாதாரத்தில் ஏற்படும் இலாபத்தைப் பெரும்பாலும் இடைத் தரகர்களே அடைகின்றனர்.

பழம், காய்கறிகளை அழுகாமல் பாதுகாக்கும் வசதிகள் உற்பத்தியாகும் தலங்களில் இல்லை. நெல்லும் கூடப் போதிய பாதுகாப்புச் செய்யப் பெறாமல் பலலட்சம் டன்கள் வீணாகின்றன.

வேளாண்மைப் பொருளாதாரத்தில் சீரான நிலை, நிலவ வேண்டுமானால் மற்றப் பொருள்களுக்குப் போல, உற்பத்தி செய்பவர்களே, விலை நிர்ணயிப்பவர்களாக இருக்க வேண்டும்.

உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் இடைத்தரகர் இல்லாமல் இருப்பது நல்லது. தவிர்க்க இயலாது எனில், தரகர்களின் எண்ணிக்கையையாவது குறைக்க வேண்டும். அப்போதுதான் விலைகுறையும்: விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும்.

நமது நாடு, காய்கறி உற்பத்தியிலும் பற்றாக்குறையுடையதேயாகும். அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதும் கூடக் காய்கறியே என்பதை மறந்து விடக் கூடாது. ஒரு ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்ய ரூ 1100 செலவாகும்; ஆனால் வரவு ரூ 4750 ஆகும். தண்ணீர்த் தேவையும் குறைவே. பராமரிப்பில் மட்டுமே அக்கறை தேவை.

அடுத்து நமது நாட்டுப் பொருளாதாரத்தில் நெல் கணிசமான பங்கு வகிக்கிறது. நெல் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பது மகிழத்தக்கது.

ஆயினும், நமது நாட்டில் நெல் உற்பத்தி ஹெக்டேர் ஒன்றுக்கு 3½ டன்னுக்குப் பதில் 1½ டன்னாகத்தான் இருக்கிறது. நெல் உற்பத்தியை மேலும் கூட்டினால் வேளாண்மைப் பொருளாதாரம் சிறக்கும்.

இந்தியப் பொளாதாரத்தில் வேளாண்மைப் பொருளாதாரம் முதல் இடத்தை வகிக்க வேண்டும். தரிசு நிலங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் மேம்பாடு அடைய வேண்டும்.

விவசாயத்தைப் பன் முகமாகச் செய்தால்தான் நெல், பழமரங்கள், தென்னை, காய்கறிகள் என்று நிலத்தைப் பிரித்துச் சாகுபடி செய்தால்தான் ஆண்டு முழுவதும் வருமானம் வரும்.

கூடுதலான நிலப்பரப்பில் வியாபார ரீதியான பழங்கள், தென்னை போன்றவைகளை உற்பத்தி செய்தால்தான் இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் அந்நியச் செலாவணியை அதிகமாக அடைய முடியும்.

வேளாண்மைத் தொழில் எல்லாத் தொழிலையும் விடச் சிறந்தது; சுதந்திரமானது; நிலையானது. விவசாயப். பொருள்களின் விலை நிர்ணயம், உற்பத்தி செய்த பொருள்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு உரிய ஏற்பாடுகள் தேவை.

வேலை தேடிப் போக வேண்டாம்
வேளாண்மையில் ஈடுபடுவோம்!

17-9-94 அன்று மதுரை வானொலியில் ஒலிப்பரப்பான உரை.