எங்கே போகிறோம்/9. இலட்சிய சமுதாயம்


 


9. இலட்சிய சமுதாயம்


மானுட வாழ்க்கை தற்செயலாக ஏற்பட்டதும் அல்ல. அஃதொரு விபத்தும் அல்ல. இயற்கை நியதி. திட்டமிட்டுப் பரிணாம வளர்ச்சியில் வாய்த்தது இந்த வாழ்க்க்கை. அற்புதமான ஆற்றல்மிக்க புலன்களுடனும் பொறிகளுடனும் அமைந்தது இந்த வாழ்க்கை.

இப்படி அமைந்ததொரு வாழ்க்கை பயனுடையதாக, புகழ்மிக்கதாக அமைய வேண்டாமா? அமைவுகள் மிகுதியுமுடைய இந்த வாழ்க்கை எதற்காக? அறிவு அறியும் கருவிகள், செயல் செய்யும் பொறிகள் அனைத்தும் அமைந்த வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன? பயன்தான் என்ன? அறிந்துகொள்ள வேண்டாமா? காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டாமா?

உடம்பொடு உயிர் பொருந்திய நிலையில் வாழ்வுக்கு உயிர்ப்பாக இருப்பது மூச்சுக் காற்று மூச்சுக் காற்று அடங்கினால்-உயிர்ப்பு நின்றால் மரணம். அதனால், உடலில் உயிர்ப்பு நிலை இருக்கும்பொழுதே தகாதனவற்றையெல்லாம் புறத்தே தள்ளி, நல்லன கொள்ள வேண்டாமா? எண்ணுங்கள்! சிந்தனை செய்யுங்கள்!

தேடி, சோறு நித்தம் தின்று, சின்னஞ் சிறுகதைகள் பேசி, வேடிக்கைமனிதராய் மாண்டு போகக் கூடாது. புகழ்மிக்க வாழ்க்கை வாழ்தல் வேண்டும். அதனாலன்றோ, திருக்குறள் அறத்துப்பால்-இல்லறவியலின் முடிவில் ‘புகழ்’ என்று ஓர் அதிகாரம் வைத்தது. புகழ் பெறுதல் என்பது எளிதன்று; இமயத்தின் உச்சியில் ஏறுவதினும் கடினமானது. பேச்சால், எழுத்தால் பாராட்டு வரலாம். அது புகழன்று. பதவிகளால் சுற்றி நின்று பயனடைவோர் வானளாவப் புகழலாம். அதுவும் போலியயோம்! விளம்பரம் தான்! புகழன்று!

செயல்வழிச் சாதனைகள் செய்வதுதான் புகழ் பெறுதற்குரிய வழி! அந்தச் சாதனைகளும் கூட நாட்டின் வரலாற்றை நகர்த்துவதாக அமைய வேண்டும்; மானுடத்தை அரித்துத் தின்று அழிக்கும் சாதிப்பிரிவினைகள், கொடிய நோய்கள், வறுமை ஆகியவற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் பணியே புகழ்மிக்க பணி! அதுவே வாழ்க்கையின் குறிக்கோள்! இலட்சியம்!

சென்ற காலத்தில் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்த சிலர் சாதித்த சாதனைகளாலேயே இன்று நம்முடைய வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும், மனித சமுதாயத்திற்கும் குறிக்கோள் தேவை! இலட்சியம் தேவை! இன்று, இலட்சியம் உடைய மனிதர் களைத் தேடினும் காணக் கிடைப்பதில்லை. ஒரு சிலர், சின்னஞ்சிறு செயல்களையே இலட்சியம் என்று கருதிக் கொண்டுள்ளனர். வேறு சிலர் பணம் சம்பாதிப்பதையே இலட்சியமாகக் கொண்டுள்ளனர்.

கற்றவர்களும் அறிஞர்களும் வீரர்களும் பணம் சம்பாதிப்பதை ஒரு நாளும் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளமாட்டார்கள். சின்னஞ்சிறு செயல்கள் செய்வது, பணம் சம்பாதிப்பது இவையெல்லாம் இலட்சியங்கள் ஆகா. வாழ்க்கையின் படிக்கற்கள் என்று வேண்டுமானால், கொள்ளலாம்.

“குறிக்கோள் இலாது கெட்டேன்” என்று பாடுகின்றார் அப்பரடிகள் உடலுக்கு ஆன்மா; மரத்திற்கு வேர்! மனிதனுக்கு இலட்சியம்; வாழ்க்கையில் மனிதன் அடிமையாக இருக்கக் கூடாது!

ஒரு வேலையை ஊதியத்தையே குறிக்கோளாகக் கொண்டு செய்வது அல்லது பயந்து கொண்டு செய்வது என்ற குணமிருந்தாலும் அடிமைத் தனமேயாம்;

ஒரு வேலையை-ஒரு பணியை அந்த வேலைக்காகவே தாமே ஆர்வத்துடன் பயன்பாடு கிடைக்கும் வகையில் செய்வது சுதந்திரமான வாழ்க்கையாகும். தாம் எடுத்துக்கொண்ட பணியை முறையாகச் செய்வதே இலட்சியம்; சுதந்திரம்; இன்பம்!

ஒருவன் தன்னுடைய வாழ்க்கையின் இலட்சியம் எது என்று சிந்தனை செய்து முடிவு செய்ய வேண்டும். ஒரு சிலருக்குத் தன் வாழக்கைக்கு என்று இலட்சியம் நிர்ணயம் செய்துகொள்ளும் சூழல் அமையாதுபோகலாம். அப்போது நீரும் நிழலும் போலத் தன்னுடைய தோழமையாகப் பழகும் சில நண்பர்களையும் உடன் சேர்த்துக்கொண்டு ஒரு கூட்டு இலட்சியமாக எடுத்துக்கொள்ளலாம். பலர் வாழ்வில் இதுவே நடைமுறையில் சாத்தியம்; அப்படி எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காகவே வாழ்தல் வேண்டும்; போராட வேண்டும்.

இலட்சியம் என்பது பெரும்பாலும் நாட்டையும் மக்கட்சமுதாயத்தையும் மையமாகக்கொண்டுதான் அமையும். மற்ற உயிர்க்குலத்தை மையமாகக் கொண்டு இலட்சியம் தோன்றலாம். மொழி, சமய அடிப்படையிலும் கூட இட்சியம் தோன்றலாம். எடுத்துக்கொண்ட இலட்சியத்தை அடைவதற்கேற்றவாறு தன்னுடைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இலட்சியம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. கடந்த காலத் தோல்விகளையும் துன்பங்களையும் மறத்தல், தன்முன்னே நிற்பனவற்றை நாடுதல், நிகழ்காலத்தை மதித்தல், எதிர்காலத்தை நோக்கி விரைந்து பணி செய்தல் முதலிய குணங்கள் வேண்டும்.

பழக்கம், குணத்திற்கு அடிப்படை, குணம், இலட்சியத்தை இனம் காட்டும். எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்குரிய பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்க! எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காகப் போராடு! உயிரைக் கொடுத்துப் போராடு!

வெறும் சோற்றுப் பிண்டமாக நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட இலட்சியத்துடன் சில ஆண்டுகள் வாழ்ந்தாலே போதும். வரலாற்றில்-செய்திகளில் இடம் பெறுவது. இலட்சியம் அல்ல, நீயே நாட்டின் வரலாற்றை உருவாக்க வேண்டும். அதுவே, இலட்சியம் நிறைந்த வாழ்க்கை: தெளிவான இலட்சியத்தை தேர்வு செய்து கொள்க! அந்த இலட்சியத்திற்காகப் போராடுக! இடையூறின்றிப் போராடுக! இலட்சியமே வாழ்வென வாழ்க!

வாழ்க்கை, முன்னர்க் கூறியபடி அறிவு சார்ந்தது; அறிவியல் சார்ந்தது. புலன்கள் அனைத்தும் அறிவை, அறியவும், அறிந்த அறிவை உணர்த்தவும் கூடியன. பொறிகள் நுகர்வுச் சாதனங்கள் மட்டுமல்ல. அறிவு அடிப்படையில் செயற்படும் தொழிற் கருவிகளுமாகும். இலட்சியத்தையும், இலட்சியத்தின் அடிப்படையிலான செயலையும் ஆய்வு செய்து இலட்சியத்தைத் தேர்வு செய்துகொள்வதே அறிவியல் பாங்கு.

அன்பாக இருப்பது என்பது ஒரு குணம்-பண்பு இந்த அன்பு கூட, சுயநலத்தின் காரணமாக அமையலாம். அத்தகைய அன்புக்குக்கூட இடைமுறிவுகள் உண்டு. ஆனால், அன்பே இலட்சிய அடிப்படையிலிருப்பின் அந்த அன்புவளரும். பிறைநிலாப்போல வளரும்; எல்லா இடர்ப்பாடுகளையும் கடந்து வளரும். பிரிவதற்குறிய காரணங்கள் தோன்றினாலும் அக்காரணங்கள் புறக்கணிக்கப்படும்.

மானம்கூட கூடப்பிறந்ததுதான். அதுவே இலட்சிய அன்பு. இத்தகைய அன்புடையோர் சில பொழுது மரணத்திலும் கூட ஒன்றாகிவிடுவர். இந்த அன்பு, இலட்சிய அன்பு, இங்ஙனம் அன்பு, இலட்சிய அன்பாக மாறவேண்டுமானால், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இயல்பு தேவை. அறிவறிந்த நட்பும் உறவுமே இலட்சிய அன்பாக, உறவாக முடியும்; வளர முடியும்.

எடுத்துக்கொண்ட இலட்சியத்தில் நிலையாக நின்று உழைத்திட, தளர்ச்சியில்லாமல் அந்தத் திசையில் செல்ல அறிவு வேண்டும். இலட்சியத்தின் வழியில் நடைபெறும் பணிகளை, செய்யும் காரியங்களை அறிவியல் பார்வையுடன் ஆய்வு செய்து, குறைகளை நீக்கச் செய்து கொண்டே போக வேண்டும்.

இலட்சிய வாழ்க்கையை விரும்புபவர்கள் தங்களுடைய சூழ்நிலைகளின் காரணமாகப் பலவீனம் அடைந்து விடக்கூடாது. சூழ்நிலைகளையும் சரிப்படுத்திக் கொண்டு அவற்றைக் கருவிகளாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

அறிவியல் என்பது எதையும் ஆராய்ந்து தெளிந்து முடிவுகளை எடுப்பது, விருப்பங்களின் படியும் ஆசைகளின் அடிப்படையிலும் உணர்ச்சிகளின் நிலையிலும் முடிவு எடுத்தல் கூடாது.

வாழ்வதற்கும், பலர் கூடிவாழ்வதற்கும், இம்மாநிலம் பயனுறத்தக்க வகையில் இலட்சியத்தை தேர்வு செய்யவும், தேர்வு செய்த இலட்சியத்தை அடையும், முயற்சிகளுக்கும் அறிவு தேவை. அறிவியல் பார்வை தேவை. அறிவியல் சார்ந்த முடிவுகளும் செயல்களுமே வெற்றியைத் தரும். இலட்சியத்தைத் தேர்வு செய்க, அறிவியல் முறையில் ஆய்வு செய்து இலட்சியத்தைத் தேர்வு செய்க, அந்த இலட்சியத்தை அடையும் முயற்சியுடன் வாழ்க!

மனிதன் தனியே வாழ்ந்துவிட முடியாது. அவன் பலருடன் கூடி வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதனால், கூடிவாழ்கிறான். அதனால், அப்படிக் கூடி வாழ்வது அன்பின் அடிப்படையில், உறவுகளின் அடிப்படையில் இல்லை. நாடகம் நடத்துகிறான்; சுயநலத்திற்காகவும், பயத்திற்காகவும் கூடிவாழ்வதைப்போல நடித்து வாழ்கின்றான்.

அவன் அன்புடன் கூடிய உறவு வாழ்க்கையை-கூடி வாழ்தலைப் பெரும் பேறாகக் கருதுவதில்லை. இத்தகைய மனிதக் கூட்டத்தில் அன்பு, கடைச் சரக்கேயாம்.

நம்முடைய நாட்டில் இன்னமும் சமுதாயம் உருவாகவில்லை. “ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும்” என்ற சமுதாய நியதி, ஒழுங்கு, ஒழுக்கம் வெற்றி பெற்றால்தான் சமுதாயம் உருவாகும். இன்று மனிதகுலத்தை வருத்தும் தீமைகளை எதிர்த்துப் போராடவேண்டுமாயின், முதலில் சமுதாய அமைப்பு உருவாக வேண்டும். அங்ஙனம் ஒரு சமுதாயம் திடீரென்று உருவாகிவிடாது. ஒரு இலட்சியம் தோன்றினால்தான் சமுதாயம் உருவாகும்.

இன்று. நம்பிக்கையும் நல்லெண்ணமும் நிறைந்த ஒரு இலட்சிய நோக்கமுடைய சமுதாயத்தைக் காண்பதற்கு, தடைகள் பலப்பல உள்ளன. அவற்றுள் தலையாயது பணம்!

அடுத்த தடைகள் அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீயபண்புகள்! இத்தீய பண்புகளின் படைக்கலன்களாக உள்ளவை பூட்டுக்கள், களவு-காவல், சுவர்கள், வேலிகள் பட்டங்கள், பதவிகள் முதலியன. இவையெல்லாம் ஒருங்கிணைந்துகொண்டு சமுதாயம் அமைத்தற்குரிய அடிப்படைகளைத் தகர்க்கின்றன; மனிதனைப் பிரித்து விடுகின்றன.

இன்று ஊர், அரசுக் கணக்கின்படிதான் உள்ளது. ஊர் என்று இலக்கணப்படி “ஒருவருக்காக எல்லாரும், எல்லாருக்காகவும் ஒருவர்” என்ற இலட்சியம் மக்களிடத்தில் இல்லை, ஆரோக்கியமில்லாத போட்டிகள், இலாப வேட்டைகள், தலைமைத்தனத்திற்கு ஆசை முதலியன ஊரை நாள்தோறும் அழித்து வருகின்றன. இவற்றை நாளும் எதிர்த்துப் போராடிச் சமுதாயத்தை விரிவாக்க வேண்டும்; இலட்சியத்தை உருவாக்க வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் மனிதகுலத்தில் ஏற்பட்டுள்ள பிரிவுகளை அகற்றி, மனிதகுலத்தைச் சமுதாயமாக உருவாக்கலும், ஊர் கூடிவாழ அமைத்தலும் கூட ஒரு நல்ல இலட்சியமாகும். இந்த இலட்சியத்தை இந்தத் தலைமுறையில் அடைந்தால் இந்தியா வளரும்; வாழும்!

“பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை” என்பது வள்ளுவம்! “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும் என்பது மாணிக்கவாசகரின் வாக்கு சமூகத்தை இயக்கும் சக்தி பொருளுக்கே உண்டு நமது நாடு, வளமான நாடு பொருள் உற்பத்திக்கு ஏற்ப, இயற்கை வளமும் மனித சக்தியும் உள்ள நாடு. ஆயினும், இந்தியர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்.

ஏன்? உடைமை உடையவர்களிடத்தில் உழைப்பைக் காண்பது அரிது! உழைப்பவர்களிடத்தில் உடைமையைக் காண்பது இயலாது. இது நாட்டின் சமூக, பொருளாதார அமைப்பு.

நமது நாட்டில் சோஷலிசம் அல்லது சர்வோதயம் அல்லது பொதுவுடைமைச் சமுதாயம் காண இயலாது. “உடைமைக்கு ஊழே காரணம்” என்ற சித்தாந்தம் மக்களின் மூளையில் இடம்பெற்றுள்ளவரை, மக்கள் தங்களிடம் பொருளின்மை அல்லது உடைமையின்மை குறித்து வருந்தமாட்டார்கள்!

நமது நாட்டில் ஏழ்மை, வறுமை இன்று நேற்றுத் தோன்றியதல்ல, பன்னூறாண்டுகளுக்கு முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக வறுமையும், ஏழ்மையும் தொடர்ந்து வருகின்றன. இதற்கு என்ன மாற்று? முதல் மாற்று கூட்டுடைமைச் சமுதாய அமைப்பு அல்லது கூட்டுறவுப் பொதுநலச் சமுதாய அமைப்பு.

கம்பன், “எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாம்” என்று ஒரு இலட்சியப் பொருளாதார சமுதாயத்தைக் காண்கிறான். “உடைமையைப் பொதுமை செய்!” என்றான் பாவேந்தன் பாரதிதாசன். நமது பொருளாதாரம் கடன் பொருளாதாரமாக அமையக் கூடாது; உற்பத்திப் பொருளாதாரமாகவே இருக்க வேண்டும்.

தனியார் துறை கட்டுப்படுத்தப்படுதல் வேண்டும். பொதுத் துறையையும், கூட்டுச் சமுதாய அமைப்புப் பொருளாதாரத்தையும் பேணி வளர்க்க வேண்டும். துறைதோறும் தன்னிறைவு காணவேண்டும். மக்களுக்கு இலவசம், இனாம் தருவது கூடாது. தூறலால் பயிர் விளைந்துவிடாது. அதுபோலச் சலுகைகளால் மக்கள் வளர்ந்துவிட மாட்டார்கள்.

ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவுள்ள குடும்பமாக அமையவேண்டும்; வளரவேண்டும். நாடு, நாடா வளத்ததாக அமையவேண்டும். ஒவ்வோர் இளைஞனும் சுய முயற்சியில் பொருள் ஈட்டி, அப்பொருளால் தானே முயன்று கட்டிய வீட்டில் குடியிருக்க வேண்டும். தான் ஈட்டிய பொருளில் பலரோடு கூடி உண்ணவேண்டும்.

“தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால்” என்றார் திருவள்ளுவர். இலட்சிய சமுதாயத்தில் உழவுக்கும் தொழிலுக்கும் மதிப்பு உண்டு. காடுகளைத் திருத்திக் கழனிகளாக்குவோம்! ஆலைகளையும் தொழிற்சாலை களையும் அமைப்போம்! உழைப்பவர் உலகை மதிப்போம்! பொருளினைச் செய்வோம்!

வாழ்க்கை உணவினால் மட்டும் ஆனதல்ல. வாழ்க்கைக்குக் களிப்பும், மகிழ்ச்சியும் தேவை களிப்பும் மகிழ்ச்சியும் நாடகம், திரைப்படம் ஆகியவைகளினால் கிடைக்கும். திரைப்பட உலகம் தோன்றிய பிறகு, நாடக உலகம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இன்று எங்கும் திரைப்பட மயக்கம். அந்தத் திபைப்படங்களாவது மனிதர்களை அவர்கள் நிலையிலிருந்து உயர்த்துகின்றனவா என்றால் அதுவும் இல்லை.

இன்றைய திரைப்படங்களில் காமக்களியாட்டம், வன்முறை நிகழ்ச்சிகளே அதிக இடம்பெறுகின்றன. திரைப்படம் ஒரு நல்ல கலையே. திரைப்படத்தில் நல்ல இசை மற்றும் கலையம்சங்களும் உண்டு. இசையை அனுபவிக்கும் வாழ்வு தேவை. இலங்கையை வருணித்த கம்பன் “களிக்கின்றார் அலால் கவல்கின்றார், இவர்” என்றான். கலையும் இலக்கியமும் ஆன்மாவைப் பக்குவப்படுத்தும் தன்மையன.

தமிழ், முத்தமிழாகவே பிறந்தது; வளர்ந்தது. தமிழிசை வளர்ந்த இசை. கிராமங்கள் தோறும் இசைக் கலைப் பயிற்சி மையங்கள் தோன்ற வேண்டும். பழைய காலம் போல் கிராமங்களில் திருக்கோயில்களில், தமிழ் நாட்டின் தனித்துவம் பெற்ற நாதசுர இசை முழங்க வேண்டும். மக்கள் கலை, இசை ஆகியவற்றில் கவனம் செலுத்தினாலேயே குடும்ப வாழ்க்கை வெற்றி பெறும்.

கிராமங்கள் தோறும் இளைஞர்கள் நாடக மன்றம் அமைத்து, நல்ல நாடகங்களை எழுதி நடித்துப் பயிலவேண்டும். நிறை நிலா நாளின்போது தவறாமல் இசை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் நடக்கவேண்டும். மக்கள் வாழ்க்கையைச் சுமையாகக் கருதாமல் நடத்துவதற்குக் கலை, துணைசெய்யும். இசைக்கலையில் பழகிப் பக்குவப்படுபவர்கள் ‘மனிதர்’களாக இருப்பர்.

நமது சமுதாய அமைப்பில் நாடகக் கலைக்கும் பல வகையான இசைக் கலைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தாலாட்டில் தொடங்கும் நமது இசைக் கலை வாழ்க்கை முழுதும் தொடரவேண்டும். ஓவியமும் சிற்பமும் தமிழகத் திற்கே உரிய கலைகள் இந்தக் கலைகளை மேலும் மேலும் நம்முடைய சமுதாயம் வளர்க்க வேண்டும்.

ஏழிசையை, பண்ணொடு பொருந்திய பாடலை, மக்கள் மாலைப்பொழுதில் மன்றங்கள் தோறும் அனுபவிக்க வேண்டும். பண்ணும் பரதமும் கலந்த கலையை அனுபவிக்க வேண்டும். இந்த மண்ணை விண்ணகமாக்கும் கண்ணன் குழலோசையும் ஆடல் வல்லானின் ஆடற்கலையும் நமது நாட்டின் வழி வழிவந்த கலைகள்! மேலும் சந்தத் தமிழும், சாம கானமும் நமது உரிமைக் கலைகள்! பயிலுவோமாக! வளர்ப்போமாக!

நமது நாடு அரசியலில், ஆட்சியியலில் வளர்ந்த நாடு. மனிதர்களுக்குள் உறவுகளை நிர்ணயம் செய்யும் நோக்கில் அரசியல் தோன்றியது; காலப்போக்கில் ஆட்சி முறை வந்தது! நமது நாட்டை ஆண்ட அரசர்கள் மக்கள் நலம் நாடியவர்கள். அதனால்தான் பிரான்சு, சோவியத் போன்ற நாடுகளில் தோன்றிய புரட்சிகளைப் போல நமது நாட்டில் புரட்சி தோன்றவில்லை. என்றும் நமது நாட்டின் ஆட்சி, நீதியைச் சார்ந்திருந்தது. அந்த நீதி சார்ந்த ஆட்சிமுறையை நாம் தொடர்ந்து காப்பாறற வேண்டும்.

“ஒரு குலத்துக்கு ஒரு நீதி” என்ற கொள்கையை மறுத்து வளரும் நாம் “ஆட்சிக்கு ஒரு நீதி” என்ற முறையை மேற்கொள்ளக் கூடாது. மிக உயர்ந்த தரமான மக்களாட்சி முறையை நாம் நடத்தவேண்டும். தேர்தலில் மட்டும் ஜனநாயகமல்ல. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பெருநெறி நமது நாட்டு அரசியலில் -ஆட்சியில் இடம்பெற வேண்டும்.

பொற்கைப் பாண்டியன் வரலாறு கண்ட நாடு நமது நாடு. இந்த நாட்டில் காவல்துறைக்கு மகத்தான் பொறுப்புள்ளது. காவல்துறை அதன் ஒழுகலாறுகளை உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் போலீசு ஆட்சி வருவதை, போலீசுக்காரர்களும் விரும்ப மாட்டார்கள். இது நம்முடைய நம்பிக்கை. ஏன்? கோபுரத்திற்குக் கலசம் போல, நாட்டிற்குக் காவல்துறை அமையவேண்டும்.

மக்கள், நாட்டின் வளர்ச்சியில் தனிப்பட்ட முறையிலும் கூட்டு முறையிலும் பங்கேற்க வேண்டும். நம்முடைய நாடு சட்டத்தால் ஆளப்படுவது. ஆதலால், சட்டத்திற்கு மக்கள் மதிப்பளித்து ஒழுகவேண்டும்; நடந்து கொள்ள வேண்டும். சட்டங்களும் விதிமுறைகளும் மதிக்கப்படும் நாட்டில்தான் மக்களாட்சி முறை பயன் தரும். சட்டத்தை முடமாக்குவது அராஜகத்திற்கு வழிவகுக்கும்.

நம்முடைய நாட்டில் தேசியக் குடிமைப் பண்புகளைப் போற்றி வளர்ப்போம்! அரசின் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒத்துழைப்போம்! அரசு தீட்டும் ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் உடன் நிற்போம்! அரசின் அந்நியக் கடன்களைக் குறைக்க, சிறுசேமிப்பில் முதலீடு செய்வோம்! எங்கும் அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் கூடிய வாழ்க்கை நடத்துவோம்! வளர்ப்போம்!

நமது நாடு ஆன்மிகத்தில்-சமய நெறிகளில் செழித்து வளர்ந்த நாடு. வேதங்களும், உபநிடதங்களும், சாத்திரங்களும், திருமுறைகளும், திவ்வியப்பிரபந்தமும் பெற்று விளங்கும் நாடு. இன்றும் இந்தியா உலகிற்கு அளிக்கக் கூடியது ஞானம் ஆன்மிகம் என்பது கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல; வழிபாடு மட்டுமல்ல; சமய நெறி சார்ந்த சடங்குகளும் அல்ல.

ஆன்மிகம் என்பது ஆன்மாவின்-உயிரின் தரத்தை, தகுதிப்பாட்டை உயர்த்திக் கொள்ளும் கொள்கை. வாழ்க்கை முறை நாத்திகர்களுக்கும் கூட ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டு. அன்பு, பொறுத்தாற்றும் பண்பு, மனிதர்கள் மீது விருப்பு-வெறுப்பற்ற உளப்பாங்குடன் பழகுதல், பிறிதின் நோய், தந்நோய் போல் போற்றுதல் ஆகிய உயர் பண்புகளைப் பெறும் முயற்சி முதலியன ஆன்மிகம்.

இந்த முயற்சியுடைய வாழ்க்கை ஆன்மிக வாழ்க்கை. இவைகளைத் தனியே பெற முடியாத நிலையில் பெறுதலுக்குரிய சாதனம் கடவுள் வழிபாடு! கடவுளை “எண் குணத்தான்” “குறைவிலா நிறைவு” “கோதிலா அமுது” “என்னுடைய அன்பு” என்றெல்லாம் போற்றுவர்.

கடவுளை வழிபடுதல் என்பது கடவுள் வழி நிற்றல்-வாழ்தல் என்பதாகும். கடவுளை முன்னிட்டு வழிபாடு நிகழினும் அந்த வழிபாடு கடவுளுக்கல்ல; ஆன்மாக்களுக்கே அன்பில் பழுத்த மனம் பெறுதல் ஆன்மிகம். பிறருக்கென முயலும் வாழ்க்கை நெறி, ஆன்மிக நெறி. தியாகங்கள் செய்வது, ஆன்மிக வாழ்க்கையின் அடையாளம். “தியாகமில்லாத வழிபாடு பயனற்றது” என்றார் அண்ணல் காந்தியடிகள்!

நாம் அனைவரும் ஆன்மாவில் சிறந்து விளங்குவதே இலட்சியம்! ஆன்மாவை உசுப்பிக்கொள்ள, விழிப்புறச் செய்யத் தேவையான அளவு சடங்குகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், சடங்குகளே ஆன்மிகம் அல்ல; சமயமும் அல்ல!

எங்கும் சோலைகளை வளர்ப்போம்! இயற்கையோடு இயைந்து வாழ்வோம்! நெஞ்சத்தை தண்ணளி உடையது ஆக்குவோம்! அன்பில் வளர்வோம்! அன்பில் வாழ்வோம் வாழ்வித்து வாழ்வோம்!, உயிர்க்கு ஊதியம் சேர்க்கும் தொண்டு செய்வோம்! வன்முறை தவிர்ப்போம்! எங்கும் எந்தச் சூழ்நிலையிலும் கொலையை பழிதூற்றும் சிறுமையைத் தவிர்ப்போம்! யாரிடமிருந்தும் எவரிடமிருந்தும் அந்நியமாக மாட்டோம். ஒருமையுணர்வுடன் எவ்வுயிரிடத்தும் பேதமுறாது பேணிக் காப்போம்!

மானிட சமுத்திரம் நம்முடன் பிறந்து வளர்ந்தது; உடன் வருவது. அந்த மானிட சமுத்திரத்திற்குள் சங்கமம் ஆவதே ஆன்மிக வாழ்வு! “இவர் தேவர், அவர் தேவர் என்று இரண்டாட்டாது சமயக் கலகம் செய்ய வேண்டாம்! என்றார் அப்பரடிகள் “ஒன்றே குலம், ஒருவனே தேவன்!” இதுவே ஆன்மிக வாழ்க்கையின் தாரகமந்திரம்.

“ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி”

என்ற சிந்தனை நமது வாழ்வாக மலரவேண்டும்.

அன்பர்களே! நமது வாழ்க்கை எங்கே போய்க்கொண்டிருக்கிறது? உண்டியை, உடையை உகந்து மகிழும் வெற்று வாழ்க்கையாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் போக்கை மடைமாற்றம் செய்வோம்! வாழ்வாங்கு வாழும் திசையில் நடைபோடுவோம்! அறிவறிந்த ஆள்வினை மேற்கொள்வோம்! பொருள் செய்து குவியுங்கள்! உலகம் உண்ண உண்ணுங்கள்! உலகம் உடுத்த உடுத்துங்கள்! சிறந்த ஆன்மிக வாழ்க்கை வாழ்வோம்! அன்பையே உயிர் எனக் கொள்வோம்! வளமுடன் வாழ்வோம்! இலட்சிய சமுதாயம் அமைப்போம்!


8-10-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை