எண்ணித் துணிக கருமம்/தனிநாடு 4

பொதுக்குழுவில் பேசிய பலரில், மிகப்பெரும்பாலோர், இது வரையில், இது குறித்து என்னிடம் இது பற்றிக் கலந்து பேசாதது, எனக்கு ஆச்சரியத்தை மட்டும் அல்ல, அதிர்ச்சியையே கொடுத்தது.

பொதுக்குழுவில் ஒரு முறை கூடி, கருத்து வழங்கி உடனே முடிவு எடுத்துவிடக்கூடிய அவ்வளவு சாதாரணப் பிரச்சினையா இது - அவ்வளவு எளிதான பிரச்சினையா இது? இல்லை, நண்பர்களே! இல்லை! எத்தனையோ இரவுகள் என்னைத் தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கும் பிரச்சினை இது. இதற்குப் பரிகாரம் இதோ என்று சிலர், மிக வேகமாக, மிக அழுத்தமாக, மிக ஆவேசமாகக் கூறியபோது நான் திகைத்துப் போனேன்.

எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், அது, இந்த நாட்டு நிலையையே மாற்றி அமைக்கக்கூடிய அவ்வளவு, முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான், அவசரப்பட்டு முடிவு எடுப்பது, மிகுந்த தீமையைத் தரும் என்று நான் அஞ்சுகிறேன்.

பரிகாரம் தேடும்போது, பிரச்சினையின் சகல கோணங்களையும் கவனிக்க வேண்டும் - நமது விருப்பு வெறுப்பு மட்டும், நமது அளவுகோலாகி விடக்கூடாது.

நான் முன்பே சொன்னபடி, பிற கட்சிகள் இப்படிப்பட்ட நிலையிலே என்ன செய்தன என்று முன்மாதிரிக்காகப் பார்ப்பதற்கு இடமில்லை - ஏனெனில் எந்த கட்சிக்கும், அதன் மூலாதாரக் கொள்கையை அழிக்கக்கூடிய சட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை.

வெளிநாட்டு விடுதலை வரலாறுகளை, மிக அக்கறையுடன் இதற்காகப் படித்துப் பார்த்திருக்கிறேன்.

பல இடங்களிலும், விடுதலைக்கான வழி பலாத்காரம் நிரம்பியதாகத்தான் இருந்திருக்கின்றன - ஆகவே நாம் சந்திக்கும் சிக்கல் அங்கு எங்கும் ஏற்படவில்லை.

ஆனால் சில இடங்களில், அமைப்புகளின் பேரில் தடைவிதிக்கப் பட்டபோது, அமைப்புகளின் பெயரை மாற்றிக் கொண்டு, இயங்கியது தெரியவருகிறது:

உதாரணமாக, ஐயர்லாந்தில் கத்தோலிக்க சங்கம், என்ற விடுதலைக்கான அமைப்பு தடை செய்யப்பட்டபோது, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, அந்த அமைப்பு தன் பெயரை கத்தோலிக்க தருமஸ்தாபனம் என்று மாற்றிக் கொண்டு இயங்க ஆரம்பித்தது.

நமது நாட்டில், உங்களில் சிலருக்கு நினைவிருக்கும்? என்று எண்ணுகிறேன், குடிஅரசு பத்திரிக்கைக்கு ஜாமின் கேட்டு சர்க்கார் தொல்லை கொடுத்தபோது, பெரியார் அதன் பெயரை புரட்சி என்று மாற்றினார்; அதற்கும் தொல்லை வந்தபோது, பகுத்தறிவு என்று மாற்றினார்; நிலைமை சரியானதும், பழையபடி குடிஅரசு வெளியிட்டார்.

காங்கிரசுக்கு, வெள்ளையர்கள் நெருக்கடி உண்டாக்கிய போது, மகாஜன சங்கம் என்ற அமைப்பு இயங்கிற்று. காங்கிரஸ் தொண்டர்படை என்ற அமைப்புக்கு ஆபத்து உண்டாக்கப்பட்ட போது வானர சேனை என்று புதிய பெயருடன் அமைப்பு வேலை செய்ய முன்வந்தது.

இப்படி, பெயர் மாற்றிக் கொண்டு, அமைப்புகள் இயங்கி வந்தன - ஏனெனில், சர்க்கார் ஒரு அமைப்பை அழிக்க வேண்டும் என்ற சூதான எண்ணத்துக்காகவே ஒரு முறையை மேற்கொள்ளும்போது, அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் தந்திரமுறையை மேற்கொள்ளுவதைத்தான் அந்த அமைப்புகள் கையாண்டன. அதனைக் கோழைத்தனம் என்றோ, கொள்கைத் தடுமாற்றம் என்றோ எவரும் கூறவில்லை, போர்முறை மாற்றம் என்றும், தந்திரத் திட்டம் என்றும் கூறினர்; வரவேற்றனர்.

ஆனால் இவைகள் எல்லாம் கூட, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முழுவதும் வழிகாட்டுவனவாக இல்லை.

நமக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஒரு பரிகாரம் காண வேண்டுமானால், நாம் இந்த நிலைமையை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சி, முதலில் என்னென்ன செய்து பார்த்தது, என்பதைக் கவனிக்க வேண்டும்.

தடைச்சட்டம் எனும் இந்த ஆயுதத்தை நம்மீது வீசுவதற்கு முன்பு, காங்கிரஸ், நம்மை அழிக்க வேறு என்னென்ன முறைகளைக் கையாண்டன என்பதனைப் பார்த்தால்தான், ஒரு ஆளுங்கட்சி என்னென்ன செய்து பார்த்துத் தோற்று இந்த சட்டம் கொண்டு வந்திருக்கிறது என்பது புரியும். அது புரிந்தால்தான், நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி நமக்கு பொறுப்பும் கவலையும் ஏற்படும்.

பிரிவினை பேசுவது இன்று நேற்று அல்ல.

தி. மு. கழகம் தோன்றிய பிறகிருந்துகூட அல்ல, திராவிடர் கழகமாக இருந்த போதே பேசத் தொடங்கினோம்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பேசிவரும் பிரிவினை பற்றி, இப்போது தடைச்சட்டம் போட வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவசரம் என்ன? என்பதை ஆராய வேண்டும்.

கழகம், ஒரு பலமான அமைப்பாக வளராது – யாரோ விரல்விட்டு எண்ணக் கூடிய நாலைந்து பேச்சாளர்களோடு நின்றுவிடும், என்று சிலகாலம் எதிர்பார்த்தார்கள். அது போல் ஆகவில்லை; அமைப்பு வளர்ந்தது.

படித்தவர்கள், நகர மக்கள் இவர்களோடு தான் கழகம் நின்றுவிடும், கிராமத்தார் வரவேற்க மாட்டார்கள், கிராமத்தார் ஆதரிக்காத வரையில், ஆபத்து எழாது என்று எண்ணினர். அதிலும் எமாந்தனர், எங்கும் அமைப்பு பரவிவிட்டது.

அமைப்பு எப்படியோ பரவிவிட்டது, ஆனால் தலைமைச் சண்டை ஏற்படும், உடைபடும் என்று எதிர்பார்த்தனர் – அதற்கு மாறாக கழகம் ஒரு குடும்பமாகிவிட்டது.

குடும்பத்திலேயே கலகம் மூட்டிவிட முடிகிறதே, கழகம் அதற்கு விதிவிலக்கா என்று எண்ணி வித்திட்டனர் - சதி முளைத்தது – அது காய்ந்ததே தவிர கழகம் அழியவில்லை.

கழகத்திலே முன்னே நிற்பவர்களைக் கேவலப்படுத்தலாம், மாசு கற்பிக்கலாம், மதிப்பு மடியும் என்று எண்ணி, நாக்கில் நரம்பின்றி ஏசினர் - குறிப்பாக என்னை - என் மீது வீசப்படாத இழிமொழி இல்லை, சுமத்தப்படாத குற்றச்சாட்டு இல்லை – அறிவீர்கள். ஆனால் அதனால் என்னிடம் நீங்கள் காட்டும் பரிவு குறையவில்லை, வளர்ந்தது.

மேடையிலே பேசலாம், மக்கள் கைதட்டுவார்கள், ஆனால் ஓட்டு போடுவார்களா என்று பேசி உசுப்பிவிட்டார்கள் - தேர்தலில் ஈடுபட்டால் தகர்ந்து போவோம் என்று - அந்தக் களத்திலும் நாம் வெற்றி பெற்றோம்.

தேர்தலில் வெற்றி பெற்று என்ன? என்ன சாதித்துவிடப் போகிறார்கள்? என்று ஏசினர் - அதனால் பாதகம் ஏற்படவில்லை. 15 - 50 ஆயிற்று.

எதிர்ப்பு பிரசாரம் செய்தனர் - பலிக்கவில்லை.

எதிர்ப்பு கூட்டணி அமைத்தனர் - பலன் இல்லை.

கலகம் விளைவித்தனர் - பலன் ஏற்படவில்லை.

போலீசால் தொல்லை, சட்டத்தைக் கொண்டு தாக்குதல் நடத்திப் பார்த்தனர் தணலில் தங்கமாயிற்று கழகம்.

இவ்வளவு முறைகளிலும் தோல்வி ஏற்பட்ட பிறகே, இவ்வளவு வழிகளையும் கையாண்டு பார்த்தான பிறகே, காங்கிரஸ் சர்க்கார் தடைச்சட்டம் கொண்டு வந்தனர்.

கழகம் என்ற ஒரு அமைப்பு இருக்கும் வரையில், வளர்ச்சியைத்தடுக்க முடியாது.

பிரசாரத்தினால், கொள்கையை அழிக்க முடியாது.

கழகமே அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் இவர்கள் நோக்கம்.

பிரிவினைக் கொள்கையைத்தான் ஒழிக்க வேண்டும் என்று கருதி இருப்பார்களானால், நமது பிரசாரத்தை முறியடிக்க மேலும் மேலும் மும்முரமாக முயற்சிப்பார்கள்.

ஆனால் அவர்களின் உண்மையான நோக்கம், தி.மு. கழகம் என்ற ஜனநாயக அமைப்பு இனியும் இருக்கக் கூடாது - இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்து என்பதுதான்.

எனவேதான் மிக ஜாக்ரதையாக,

பிரிவினைப் பேசக்கூடாது

என்று மட்டும் அல்ல,

பிரிவினை கொள்கை கொண்ட ஒரு கட்சியே இருக்கக் கூடாது என்றும்,

பிரிவினை கேட்போர் தேர்தலில் ஈடுபடக் கூடாது

என்றும், தடைச்சட்டம் வகுத்திருக்கிறார்கள்.

இதிலே சில தோழர்கள், ஒரு பகுதியை மட்டும் கவனத்திற்கொண்டு பரிகாரம் காண முயற்சிக்கிறார்கள் - அதனால் விபரீதமான பரிகாரம் கூறுகின்றனர்.

எத்தனையோ விதவிதமான ஆயுதங்களைக் கொண்டு, நம்மை அழிக்கப் பார்த்து முடியாது போகவே, இப்போது, தடைச்சட்டம் எனும் புதிய ஆயுதம் வீசுகிறது காங்கிரஸ்.

எப்படி நம்மை ஒழிக்க காங்கிரஸ் ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு முறையையும், ஒவ்வொரு கருவியையும் நாடிற்றோ, அது போலவே நாமும், ஒவ்வொரு கட்டத்திற்கு ஏற்ற முறையையும் கருவியையும் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

இதனை போர்முறைத் தந்திரம் (Tactics) என்று கூறலாம்.

தடை வருகிறது என்றதும், தடைச்சட்டத்துடன் கழகத்தை மோதவிட்டு, தடைச்சட்டம் உடைபடுகிறதா, கழகம் உடைபடுகிறதா பார்த்து விடுவோம் என்று பேசுவது சரியான போர்த்தந்திர முறையாகாது.

எப்படி, நமது கொள்கையுடன் மோதிக்கொள்ள, அதனைத் தாக்கித் தகர்க்க, காங்கிரசிடம் ஏக இந்தியா எனும் ஒரு கொள்கை இருந்தும் அந்தக் கொள்கையைக் கொண்டு நமது கொள்கையைத் தாக்கிட காங்கிரஸ் முயற்சி எடுத்துக் கொள்வதை மேற்கொண்டால் போதும் என்று இருந்துவிடவில்லையோ, எப்படி கழகம் என்ற நமது அமைப்பைத் தாக்கித் தகர்க்க காங்கிரஸ் என்ற தனது அமைப்பைப் பயன்படுத்தினால் போதும் என்று எண்ணி இருந்துவிடவில்லையோ, எப்படி ஏக இந்தியா எனும் கொள்கையையும், காங்கிரஸ் என்ற அமைப்பையும் களத்துக்கு அனுப்பாமல் தடைச்சட்டம் எனும் புதிய கருவியைக் களத்திலே, காங்கிரஸ் ஏவுகிறதோ, அதுபோலவேதான் நாமும், தடைச்சட்டத்தைத் தகர்க்க, அதனுடன் மோதிக்கொள்ள ஒரு புதிய கருவியை ஒரு போர்த்தந்திரத்தைக் கண்டாக வேண்டும்.

கொள்கையுடன் கொள்கை மோதுதல், அமைப்புடன் அமைப்பு மோதுதல் என்ற முறையிலே காங்கிரஸ், போர் நடத்தவில்லை; நடத்திப் பார்த்துத் தோற்றுப் போனதால் இப்போது, நமது கொள்கையுடன் அவர்கள் ஏவும் புதிய கருவி மோதிக்கொள்ளும் புதுமுறைப் போர்தந்திரத்தை அவர்கள் கையாளுகிறார்கள்.

இதை நாம் நன்கு உணராமல், கழகம் எனும் நமது அமைப்பை, அவர்கள் ஏவும் புதிய கருவியுடன் மோதிடச் செய்து, கழகத்தை அழித்துக் கொண்டோமானால், பிறகு கொள்கை, தங்கி இருக்க, நடமாட, வளர, செயலாக்கம் பெற, ஒரு அமைப்பு இழந்து, பிறகு மெள்ள மெள்ள உருக்குலைந்து போகும்.

கொள்கை எப்படியும் இருக்கும், என்றேனும் ஓர் நாள் எவர் மூலமாகவேனும், வெற்றி பெறும் என்பது, நம்பிக்கைப் பேச்சு, எழுச்சியூட்டும் முறை, தத்துவ விளக்கம்.

ஆனால் இன்று, கொள்கையும் கழகமும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுப் போயுள்ள நிலை இருக்கிறது. கழகம் அழிக்கப்படும்போது, கொள்கைக்கு ஒரு தங்குமிடம், கிடைக்காது – உடனடியாக் கிடைக்காது; பலருடைய உள்ளங்களிலே கொள்கை இருக்கும், ஆனால் செயலாற்றத்தக்க நிலை பெற ஒரு வடிவம் வேண்டும் – அந்த அமைப்பு தலைகாட்டும் போதெல்லாம், சட்டம் தாக்கும், அமைப்பை உடைக்கும், மற்றோர் அமைப்பு தேடி கொள்கை அலையும், மற்றோர் அமைப்பு ஏற்பட்டாக வேண்டும், யாரேனும் அவ்விதம் ஒரு அமைப்பு உடைபட்டதும் மற்றோர் அமைப்பு ஏற்படுத்தும் வேலையைச் செய்தபடி இருக்க வேண்டும்.

மற்றோர் முறையிலே இதனை விளக்குகிறேன்.

பாசறை என்பது ஒன்று. படைவரிசை என்பது மற்றொன்று. பாசறை பல படைவரிசைகளைக் கொண்டது மட்டுமல்ல, புதிய புதிய படைவரிசைகளை உண்டாக்கக்கூடியது. பாசறை அழிந்து பட்டுப் போகுமாறும், புதிய புதிய படைவரிசைகளை அமைத்திட எளிதில் முடியாது.

களம் நோக்கி ஒரு படைவரிசை செல்லும் அது அழிக்கப்பட்டாலோ அல்லது அது போதுமானதாகத் தோன்றுவிட்டாலோ, மேலும் படைவரிசையை, பாசறை அமைக்கும்.

எனவே தான், பாசறைகளை, படைவரிசையைக் காப்பதை விட மிக ஜாக்ரதை யாகக் காப்பாற்றுகிறார்கள்.எதிரியின் தாக்குதலுக்கு சுலபத்தில் இலக்காகிவிடக்கூடாது என்ற முறை இருக்கிறது. ஆங்கிலத்தில் காமாப்ளுவேஜ் என்று கூறுகிறார்கள். தந்திரமுறைகளால், தன்னைத் தானே மறைத்துக்கொள்ளும் முறை கையாளப்படுகிறது.

போர்வீரர்களுக்குக் கூட இந்நாட்களில், களம் அமைந்துள்ள இடத்திற்கு ஏற்றபடியான, உடை கருவிகள் தரப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். காடுசூழ் இடத்தை ஒட்டி களம் இருக்குமாறும், புதர்களுக்கு பின்புறமாக நின்று போரிடவேண்டுமாறும் போரிடுபவர்களை எதிரிகள் சுலபத்தில் கண்டுபிடித்துத் தாக்கிடமுடியாதபடியும், விமானக்குண்டுவீச்சுக்கு இரையாக்கிட முடியாதபடியும் போரிடுபவர்களின் தொப்பியிலும் உடையிலும் தழை கொடி முதலியனவற்றை இணைத்துவிடுகிறார்கள். தொலைவிலிருந்தோ, மிக உயரத்திலிருந்தோ எதிரிகள் பார்க்கும்போது, செடி கொடி போலத் தோற்றமளிக்கவேண்டும். படைவீரர் நடமாடுகின்றனர் என்று தெரிந்தuவிடக்கூடாது என்பதற்காக

வீணாக அழிக்கப்பட்டுவிடுவது வீரமுமல்ல, போர் முறையுமல்ல

தாக்கினோம் தாக்கப்பட்டோம் என்பதே போர் தாக்கவந்தனர், தாக்கினர், சாய்ந்தோம் என்பது போர் முறை அல்ல

தடைச்சட்டத்தை எதிர்த்துத்தாக்க நமக்குப் படைவரிசை தேவை ஒன்று இரண்டு அல்ல, பலப்பல தேவை.

ஒரு படை அழிக்கப்பட்டால் மற்றோர் படை என்ற முறையில் படைவரிசை கிளம்பியபடி இருக்கவேண்டும்


போரும் ஓயக்கூடாது, படைவரிசை கிடைக்கவில்லை கையிருப்பு செலவாகிவிட்டது என்ற நிலையும் ஏற்படக்கூடாது அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டால் அடக்குமுறை ஆட்சி கொக்கரிக்கும் கொண்டாட்டம் நடத்தும்

தடைச்சட்டத்தை தாக்க வேண்டும், விளைவு பற்றி கவலைப்படாமல் என்று பலர் பேசும்போது தான் பேருமகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், எந்த முறையில் என்பதை அவர்கள் விளக்கும் போது, அது பாசறையையே போருக்கு அனுப்பும் தவறான முறைபோல, கழகமே தடைச்சட்டத்தை மீற வேண்டும் என்று கூறும் போது, பேரார்வம் நிரம்ப உள்ளவர்களிடம் ஆர அமர யோசிக்காத காரணத்தால் போர்தந்திர முறை Tactics இல்லையே என்று எண்ணுகிறேன் – ஏக்கம் அடைகிறேன்.

தடைச்சட்டத்தை தாக்க வேண்டும், படை கொண்டு – ஒரு படை அழிக்கப்பட்டால் மற்றோர் படை கொண்டு – தொடர்ந்து. பாசறை மீதே தாக்குதல் நடைபெற இடம் கொடுத்துவிடக்கூடாது - ஏனெனில் ஒரு படை அழிந்தால், மற்றோர் படை எழலாம், எழுப்பலாம்; பாசறை அழிக்கப்பட்டுப் போனால், புதிய பாசறையை அமைப்பது எளிதான காரியமுமல்ல, விரைவிலே செய்திடக்கூடிய செயலுமல்ல.

விதை நெல்லைச் சோற்றுக்குப் பயன்படுத்துவது போலாகிவிடும், தடைச்சட்டத்தைத் தாக்க, பாசறையைப் பயன்படுத்துவது.

தி மு கழகம் போன்ற பாசறையை அமைத்துக் கொண்டுள்ள நாம், இந்தப் பாசறையிலிருந்து, தடைச்சட்டத்தைத் தாக்க படை வரிசைகளை அமைத்து அனுப்பியபடி இருக்க வேண்டும். அப்படித் தொடர்ந்து படை வரிசைகளை நாம் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டுமானால் பாசறை, எதிரியின் இலக்குக்கு இரையாகாதபடி, Tactics, தந்திரமுறை அல்லது காமாப்ளுவேஜ், மாற்று உருவம் தேடிக் கொள்ளுதல் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவை பற்றி நான் எண்ணிய வண்ணம் இருக்கின்றேன் - எண்ண, எண்ண பலப்பல புதுப்புது கருத்துகள், முறைகள் எனக்குத் தோன்றுகின்றன.

தோன்றிடும் கருத்துகளெல்லாம், திட்டங்களாகிவிடாது. கருத்தாழமற்ற திட்டங்கள் கவைக்கு உதவாதனவாகிவிடும்.

ஆகவே, நிலைமைக்கு ஏற்ப, முறைகளை வகுத்து செயல்பட, என் திறமையிலும் தூய்மையிலும் நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், எனக்கு அந்த உரிமையை வழங்க வேண்டுகிறேன்.

நான் பொதுவாகப் பேசி வருவதைக் கவனித்திருப்பீர்கள். எனது நோக்கம்,

கொள்கையையும் விடக்கூடாது

கழகம் எனும் அமைப்பும் கலையலாகாது நம்மிலே எவரும் கோழைகளாகி விடுதல் ஆகாது

என்பதாகும்.

எப்படி இவைகளை ஒரு சேரப் பெற வழி வகுப்பது என்பதுதான் எனக்கு இப்போது உள்ள சிக்கல் நிறைந்த சிந்தனை.

உங்கள் ஒவ்வொருவருடைய கருத்தும் எனக்கு ஒவ்வோர் விதத்தில் உதவி தருவனவாகவுள்ளன.

உங்கள் யோசனைகளில் ஒன்றிரண்டு தவிர, மற்ற எல்லாவற்றையும் நான் பெருமதிப்பு வைத்து கவனத்திற் கொண்டிருக்கிறேன் - உரிய நேரத்தில் உரியனவற்றைச் செயல்படுத்த எடுத்துக் கொள்ள எண்ணியிருக்கிறேன்.

பதவிகளை விட்டுவிடுவது என்ற யோசனைகூட என் மனதில் உள்ள பட்டியலில், இடம் பெறுகிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொள்கையையும் பாதுகாத்து, கழகமும் அழியாமல் இருக்கச் செய்வதற்காக, - இரண்டு உத்திகள் - இரு பிரிவுகள் – அமையலாம் என்று நான் கூறிவருகிறேன். அது பற்றிய விளக்கம் பெற என்னிடம் கலந்து பேசிடாத நண்பர்கள்; ஓரு தவறான கருத்துக்கு வந்திருப்பதிலே ஆச்சரியமில்லை.

நான் கருத்தில் கொண்டிடும் இரு பிரிவுகள் என்பது,

பாசறை – படைவரிசை

விதைநெல் – பயிர்

என்பது போன்றது. நண்பர்கள் கருதுவது போல,

வீரர்கள்
வீணர்கள்

தியாகிகள்
சுகபோகிகள்

தீவிரவாதிகள்
மிதவாதிகள்

எனும் பிரிவுகள் அல்ல.

பாசறையினர்

சட்டத்தல் தாக்கப்படாத பாதுகாப்பு பெற்றுக்கொண்டு, சட்டத்தைத் தாக்கும் படைவரிசை அமைத்தபடி இருக்கும், போர் முறை அது. அது கோழைத்தனத்திற்குத் திரையிடுவது என்று எவரும் கருதிவிட வேண்டாம் என்று பணிவன்புடன் கூறிக் கொள்கிறேன்.

உதாரணத்துக்குச் சொல்கிறேன்; சட்டத்தால் தொடமுடியாத நிலையில் பாசறையை அமைத்துக் கொள்கிறோம்; அதிலே சிலர் எப்போதும் இருப்பார்கள் – அவர்களே இருப்பார்கள் – அவர்கள் மட்டுமே இருப்பார்கள் – படை வரிசைக்கு என்று வேறுசிலர் இருப்பார்கள், அவர்களின் வேலை களம் செல்வது, மடிவது என்று இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.

நான் திட்டமிட்டுக் கொண்டிருப்பது, அது அல்ல.

எனக்கு, சட்டத்தால் அழிக்கப்பட முடியாத பாதுகாப்புடன் ஒரு பாசறை வேண்டும் – அதிலே நிரந்தரமாக ஒரு பிரிவினர், இருந்திடுவர் என்பதற்காக அல்ல.

நாவலரும் நடராசனும் பாசறையினர், கருணாநிதியும் மதியும் படைவரிசையினர், நிரந்தரமான முறை இது என்பது அல்ல என் திட்டம்.

நாவலர் நடராசன் கருணாநிதி மதி, இவர்களைப் படைவரிசைக்கு அனுப்பி வைக்கும் பாசறையை ஒரு முறை அன்பழகனும் சோழனும் பார்த்துக் கொள்ளலாம், மற்றோர் முறை மற்றவர்களைப் படை வரிசைக்கு அனுப்பி வைக்கும் பாசறை வேலை நாவலரிடம் ஒப்படைக்கலாம் - எவரும் எந்தப் பிரிவுக்கும் நிரந்தரச் சொந்தக்காரர்கள் அல்ல - முறை மாறியபடி இருக்கும், இருக்க வேண்டும்.

அவ்விதம், உத்தி பிரியும் நிலைமை ஏற்படும்போது, நான் தி.மு.கழகத்திலிருந்து விலகி, படைவரிசை நடத்துவதாக இருக்கிறேன் – என் அழைப்பு கிடைக்கும் போதெல்லாம், பாசறைப் பிரிவிலிருந்து என் போலவே, விலகல் ஏற்படுத்திக் கொண்டு, நண்பர்கள் வரவேண்டும், படைவரிசை சட்டத்தைச் சந்திக்கும். அதன் விளைவுகளை நாம் அனுபவிக்கும்போது, பாசறையினர், மற்றோர் படைப்பிரிவைத் தயாரித்து அனுப்புவர்.

பாசறையினருக்கும் படைவரிசையினருக்கும் ஒரு தொடர்பு, எழுதாத ஒப்பந்தமாக இருந்துவர வேண்டும்.

இம்முறையில் என் எண்ணம் உருவாகியபடி இருக்கிறது. சில நண்பர்கள் வேகமான முடிவினை அவசரமாக எடுத்துக் கூறியது போல என்னால் கூற முடியாததற்காக வருந்துகிறேன்.

என்னால், நிலைமைகளுக்கு ஏற்றபடி முறைகளை வகுக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்குக் குறைந்து போனாலும், எனக்கே என்னால் அப்படிச் செய்ய முடியாது என்ற எண்ணம் தோன்றினாலும், வேறு வழி கிடைக்கிறதா என்பது பற்றி யோசிக்கலாம்

என்னால், ஒரு முறையும் கூற முடியாது என்று எனக்கே தோன்றிவிடுமானால், நான் அதனைக் கூறத் தயங்க மாட்டேன் – எந்த வழியும் தெரியவில்லை, கழகம் எனும் அமைப்பு அழியட்டும் என்று விட்டுவிடுவோம், நடப்பது நடக்கட்டும், நாம் வரலாற்றில் இடம் பெறுவோம் என்று உங்களிடம் அறிவித்துவிடுவேன்.

நான், பல முறைகளை, நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்களைக் கையாள வேண்டும் என்று கூறும் போதும், அதற்காக வாதிடும்போதும், ஓரளவு மனச்சங்கடத்துடன்தான் இருக்கிறேன்.

பலருக்கு உள்ள தீவிரத்தின் அளவுக்கு தீரத்தின் அளவுக்கு, எனக்கு எழுச்சி இல்லை, என்று எங்கே உங்களிலே சிலராகிலும் கருதிவிடுகிறீர்களோ என்ற மனச் சங்கடம்தான்.

அந்த எண்ணம் ஏற்படுவதற்கும் காரணம், முன்பு, நம்முடன் இருந்த சிலர் உங்களில் சிலரிடம் அப்படி ஒரு கருத்தை ஊட்டினார்கள், என்பது எனக்கு நினைவிலிருப்பதுதான்.

ஒன்று தெளிவாக, திட்டவட்டமாகக் கூறிவிடுவேன், எவருடைய தீவிரத்துக்கும் மட்டமானதாக என்னுடையது இருக்காது – என்னுடைய தீவிரம், திட்டமிடப்பட்டதாக, நீண்ட நாள் நிலைத்திருக்கத் தக்கதாக, கோலிடும் பலனைப் பெற்றுத் தரத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதிலேயே நான் மிகுந்த கவலை கொண்டவன்.

அந்த என் முறை உங்களை இதுவரையில் தலைகுனிய வைத்ததில்லை; இனியும் அந்த நிலை ஏற்படாது.

அந்த முறை நமக்கு வீழ்ச்சியை, சரிவை, தளர்ச்சியைக் கொடுத்ததில்லை, இனியும் அப்படித்தான்.

கழகம் எனும் வடிவம் நிலைத்திடவும், கொள்கை உலவிடவும், போர் நடந்திடவும், ஏற்ற சூழ்நிலை உருவாக்கும் பணியில் என்னுடன் ஒத்துழைக்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தடைச்சட்டம் வந்தது, காங்கிரசை வீழ்த்தும் அளவு வளர்ந்திருந்த கழகம், புயலிற்சிக்கிய பெருமரமெனச் சாய்ந்தது என்ற நிலையும் ஏற்படாமல்,

பிரிவினை பேசாதே என்று சட்டம் கட்டளையிட்டது, மூச்சுப் பேச்சு இல்லை, பிரிவினைப் பேச்சே இல்லை என்ற அவச் சொல்லும் ஏற்படாமல், ஒரு நிலை ஏற்பட, வழிகாண வேண்டும். சிக்கலான பிரச்சினை - இதற்கு உங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும் எனக்கு ஒளி தருவனவாக நான் கொள்ளுகிறேன்.

நீங்கள் ஒவ்வொருவரும் இது பற்றி இதற்கு முன்பே சிந்தித்து பார்த்திருப்பீர்கள் என்ற போதிலும், இதுதான், முதல்முறை, இது பற்றி எவரெவர் என்னென்ன கருதுகிறார்கள் என்பதை ஒரு சேர நாமெல்லாம் கேட்டிடும் வாய்ப்பினைப் பெறுவது.

இதுவே போதும் என்று இருந்துவிடாதீர்கள் - மேலும் இது பற்றிச் சிந்தித்தபடி இருக்க வேண்டுகிறேன்.

எண்ணித்துணிக

கருமம்

துணிந்தபின் எண்ணுவம்

என்பது இழுக்கு.