எதிர்பாராத முத்தம்/பாடல் 1
எதிர் பாராத முத்தம்
1
பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு
உலகம் விளக்கம் உறக், கீழ்த் திசையில்
மலர்ந்தது செங்கதிர் ! மலர்ந்தது காலை!
வள்ளியூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப்
புள்ளிமான் வெளியிற் புறப்பட்டதுவாம்!
நீலப் பூவிழி நிலத்தை நோக்கக்,
கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்,
செப்புக்குடத்தில் இடதுகை சேர்த்தும்.
அப்படி இப்படி வலதுகை யசைத்தும்
புறப்பட்ட மங்கைதான் பூங்கொடி என்பவள்
நிறப்பட்டாடை நெகிழ்ந்தது காற்றில்!
பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்
சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்!
பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில்,
வண்ணக் கலாப மயில்போல் மற்றொரு
வனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள்;
புனிதை அவள் பெயர். புனல்மொள்ளு தற்கு
குளிப்ப தற்கும் சென்றார்
குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே!