எதிர்பாராத முத்தம்/பாடல் 7


7


பண்டாரத்தைக் கண்டாள் தத்தை


பண்டாரம் இரண்டு நாளாய்ப்
பூங்கோதை தன்னைப் பார்க்கத்

திண்டாடிப் போனான்! அந்தச்
செல்வியும் அவ்வாறே யாம்!

வண்டான விழியால், அன்னாள்
சன்னலின் வழியாய்ப் பார்த்துக்

கொண்டிருந்தாள், பண்டாரம்
குறட்டினிற் போதல் பார்த்தாள்.



ருமினாள், திரும்பிப் பார்த்தான்!
தெருச்சன்னல் உள்ளிருந்தே,

ஒருசெந்தா மரை இதழ்தான்
தென்றலால் உதறல் போல,

வருக என் றழைத்த கையை
மங்கை கை என்றறிந்தான்.

“பொருளை நீர் கொள்க இந்தத்
திருமுகம் புனிதர்க்” கென்றே

பகர்ந்தனள்,போவீர் போவீர்
எனச்சொல்லிப் பறந்தாள்! அன்னோன்,

மிகுந்த சந்தோஷத்தோடு
"மெல்லியே என்ன சேதி?

புகலுவாய்” என்று கேட்டான்.
புகலுவ தொன்று மில்லை

அகன்று போ வீர்; எனக்கே
பாதுகாப் பதிகம்“ என்றாள்.

“சரிசரி ஒன்றே ஒன்று
தாய் தந்தைமார் உன் மீது

பரிவுடன் இருக்கின்றாரா?
பகை யென்றே நினைக்கின்றாரா?

தெரியச் சொல்“ என்றான், அன்னாள்
“சீக்கிரம் போவீர்“ என்றாள்.

“வரும்படி சொல்ல வா உன்
மச்சானை“ என்று கேட்டான்.

“விவரமாய் எழுதியுள்ளேன்
விரைவினிற் போவீர்“ என்றாள்,

“அவரங்கே இல்லா விட்டால்
ஆரிடம் கொடுப்ப“ தென்றன்.

“தவறாமல் அவரைத் தேடித்
தருவதுள் கடமை“ என்றாள்.

“கவலையே உனக்கு வேண்டாம்
நான் உனைக் காப்பேன். மேலும்........“

என்றின்னும் தொடர்ந்தான்.
“என்அன்னை வருவாளையா

முன்னர் நீர் போதல் வேண்டும்“
என்று தன் முகம் சுருக்கிப்

பின்புறம் திரும்பிப் பார்த்துப்
பேதையும் நடுங்க லுற்றாள்.

“கன்னத்தில் என்ன“ என்றன்
“காயம்” என் றுரைத்தாள் மங்கை

“தக்கதோர் மருந்துண்“ டென்றான்.
“சரி சரி போவீர்“ என்றாள்.

அக்கணம் திரும்பினாள்; பின்
விரல்தொடித் தவளைக் கூவிப்,

“பக்குவ மாய் நடக்க
வேண்டும் நீ“ என்றான், பாவை

திக்கென்று தீப் பிடித்த
முகங்காட்டச் சென் றெழிந்தான்.