எது வியாபாரம், எவர் வியாபாரி/004-017



ஏமாற்றம்

ஏமாறுகிறவர்கள் இல்லாவிடில் ஏமாற்றுகிறவர்கள் இல்லை. ஏமாறுகிறவர்கள் இருப்பதினாலேயே ஏமாற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். ஒரு நல்லவியாபாரி பிறரை ஏமாற்றவும் மாட்டான்; தானும் ஏமாறமாட்டான்.

வேலையில்லாத் திண்டாட்டம்

தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகின்றது.ஏறத்தாழப் பல லட்சம் பட்டதாரிகள் வேலையின்றி இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் இவர்களுடைய கல்லூரிப் படிப்பு இவர்களை கிளார்க் வேலைக்கு மட்டுமே தயார்செய்து அனுப்பி வைப்பதுதான். இவர்கள் வேறு எந்தத் தொழிலுக்கும் தகுதி உடையவர்களாக இருப்பதில்லை. கொல்லு வேலை, உழவு வேலை, தச்சு வேலை, கொத்து வேலை முதலிய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. நாடு தவிக்கிறது. இவர்கள் வேலை கிடைக்கவில்லை என்று அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு நாட்டை ஆளும் அரசு வெறும் கிளார்க் வேலைக்கு மட்டும் தயார் செய்யும் கலைக் கல்லூரிகளை மூடித் தொழிற்கல்லூரிகளைத் திறந்தால் அவரவர் தாங்கள் கற்ற தொழிலைக் கொண்டு அரைவயிற்றையேனும் கழுவி வாழ்வார்கன். இன்றைய கல்லூரிப் படிப்பு அதையும் செய்வதில்லை. அதனால் இவர்களுக்கு வாழ வழியில்லை இவர்கள் வாழ்வதற்கு வழி இல்லாததால் எல்லோராலும், எளிதாக செய்யக்கூடிய வியாபாரத்தில் இவர்கள் புத்தி போகிறது. இதனால் வியாபாரம் பெருகாமல் கடை-கள் மட்டுமே பெருகுகின்றன. 1000 வீடுகள் உள்ள ஓர் ஊரில் 50 கடைகள் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு கடைக்காரரும் அதிக வியாபாரத்தை எண்ணி விலையைக் குறைக்கத் தொடங்குகிறார்கள். அதற்கேற்ப மட்ட சரக்குகளை விற்கிறார்கள். அதிலும் சிலர் கலப்படம் செய்து விற்று வாழத் தொடங்கிவிட்டார்கள்.

படித்த பிள்ளைகளுக்கு ஒரு போக்கும் இல்லாததால் அவர்களுடைய புத்தியின் போக்கு வியாபாரப் போக்கில் போகிறது, வியாபாரப் போக்கில் இலாபம் குறைவதால் அவர்களுடைய புத்தியின் போக்கு கலப்படப் போக்கில் போகிறது. இதை வாங்கி உண்ணும் மக்களுக்கு வயிற்றுப் போக்கு போகத் தொடங்குகிறது. இந்தப் போக்கு நாட்டின் போக்குக்கு நல்லதல்ல. இதை அரசும் மக்களும் வணிகரும் கவனிப்பது நல்லது.

எது நாடு?

ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டுமானால் அந்த நாட்டின் வணிகம் சிறந்து விளங்க வேண்டும். அதுமட்டுமல்ல. அந்த நாட்டை வணிகர்கள் ஆள வேண்டும். இன்றைக்கு உலகில் சிறந்து விளங்கும் நாடுகளில் பல நாடுகள் வணிகர்களையே நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கொண்டு விளங்குகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக இங்கிலாந்தையும், ஜெர்மனியையும், ஜப்பானையும், கூறலாம். அதிலும் ஜப்பானிய அரசு வியாபாரிகளாலேயே ஆளப்படுகிறது. இந்த நிலைக்கு இந்தியாவும், தமிழகமும் உயர வேண்டுமானால், இந்நாட்டு வணிகப் பெருமக்களின் எண்ணிக்கை, இந்தியப் பேரரசின் பாராளுமன்றத்திலும், தமிழக அரசின் சட்டமன்றத்திலும் பெருகியாக வேண்டும்.