எது வியாபாரம், எவர் வியாபாரி/011-017



இராமநாதபுரத்தில் வணிகம்

திரு. பக்கிரி மைதீன் ராவுத்தர் அவர்கட்குச் சலாம். 17-2-22இல் தங்களுக்கு அனுப்பிய சுருட்டுப் பெட்டியின் பாசும், பட்டியலும் கிடைத்திருக்கலாம்.

அன்புள்ள ,

கி. ஆ. பெ. விசுவநாதம்

24-2-1922

சலாம்! என் 24 ஆம் தேதி கார்டும் 17-2-22இல் அனுப்பிய பட்டியலும் கிடைத்திருக்கலாமே! பதில் இல்லையே ஏன்?

அன்புள்ள,

கி. ஆ. பெ. விசுவநாதம்

3-3-22

சலாம்! சுருட்டுப் பெட்டியை ஒப்புக்கொண்டு பணம் அனுப்பாமலும் எழுதும் கடிதங்களுக்குப் பதில் எழுதாமலும் இருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. தயவு செய்து பணமும் பதிலும் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

அன்புள்ள,

கி. ஆ. பெ. விசுவநாதம்

17-3-22

சலாம்! எழுதும் கடிதங்களை மதியாமலும் பாக்கிப் பணத்தை அனுப்பாமலும் இருப்பது வியாபார முறையல்ல என்பதை நீங்களும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். தயவு செய்து உடனே பணத்தை அனுப்பி வைக்கவும்.

அன்புள்ள,

கி. ஆ. பெ. விசுவநாதம்

24-3-22



பல கடிதங்கள் எழுதியும் பணமும் வரவில்லை;பதிலும் வரவில்லை; காரணம் என்னவென விளக்கவும் இல்லை. 31-3-22க்குள் தங்கள் பணம் வராவிட்டால் நானே வசூலுக்காக நேரில் வர நேரிடும்; வந்தால் செலவுத் தொகை தங்களைச் சாரும்.

அன்புள்ள,

கி. ஆ. பெ. விசுவநாதம்

34-3-22

தங்களிடமிருந்து பதில் வராததால் நான் நேரில் அவ்விடம் வசூலுக்காக 3 ஆம் தேதி காலை வந்து சேருவேன்.பாக்கிப் பணத்தைத் தயாராக வைத்திருக்கவும்.

அன்புள்ள,

கி. ஆ. பெ. விசுவநாதம்

7-4-22

சலாம்! நான் அவ்விடம் வந்திருந்தபோது தாங்கள் விவசாய சம்பந்தமாகக் கிராமத்திற்குப் போயிருப்பதாகவும், வந்தவுடனேயே பணம் அனுப்பி விடுவதாகவும் தங்கள் கணக்குப் பிள்ளை சொல்லி அனுப்பியபடி இன்று வரை தொகை வரவில்லை. தயவு செய்து உடனே அனுப்பித் தேவைக்கு ஆர்டர் செய்ய வேண்டுகிறேன்.

அன்புள்ள,

கி. ஆ. பெ. விசுவநாதம்

14-4-22

சலாம்! நான் அங்கு வந்திருந்த சேதியைக் கணக்குப்பிள்ளை மூலம் அறிந்திருக்கலாம். என் 7 ஆம் தேதி கடிதம் கிடைத்திருக்கலாம். இன்னும் தொகை வர்வில்லை.நெடுங்காலமாக நாணயத்தைக் காப்பாற்றிவந்த தாங்கள் இப்போது இவ்வாறு நட்ப்பது எனக்குப் பெரிதும் வியப்பை ஊட்டுகிறது, தயவு செய்து பணத்தை அனுப்பி மறுவேலை பார்க்கவும்.

அன்புள்ள,

கி. ஆ. பெ. விசுவநாதம்

21-4-22



சலாம்!

பட்டியல் பாக்கி

ரூ. 172-9-6

கடிதம் 9க்கு

0—4-6

நான் அங்கு வந்து திரும்பச் செலவு

6–4–3




179 - 2-3




ரூ. 179-2-3 (எழுத்தால் நூற்று எழுபத்து ஒன்பதும், அணா இரண்டும், பைசா மூன்றும்) இக்கடிதம் கண்ட ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கவும். இன்றேல் கோர்ட்டு நடிவடிக்கை எடுக்க வக்கீலிடம் ஆலோசிக்கும்படி நேரிடும்.

அன்புள்ள,

கி. ஆ. பெ. விசுவநாதம்

மகா-ா-ா-ஸ்ரீ ஐயா கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுக்கு சலாம். 1-5-22ல் உங்கள் வக்கீலிடமிருந்து நோட்டீஸ் வந்தது. உங்கள் கடிதப்படி,

பாக்கி

ரூ. 179-2-3

வக்கீல் நோட்டீஸ் செலவு

0—3-6

பட்டியல் பாக்கி மாதம் 2¼க்கு வட்டி

4-6-0

தங்கள் கடிதங்களுக்குப் பரிசு

10–0–0



ஆக 193 - 11-9




ஆக ரூ. 193-11-9க்குப் பூரா நோட்டுக்களும் தபால் ஸ்டாம்புகளும் இத்துடன் வைத்து இன்ஷ்யூர் செய்து அனுப்பியிருக்கிறேன். கணக்கை நேர் செய்து இக்கடித ஆர்டருக்கு 50,000 சுருட்டுகள் அனுப்பி வைக்கவும்.

தங்கள் கடிதங்களுக்குப் பதில் எழுதாமலும் பணம் அனுப்பாமலும் தங்களுக்குத் தொல்லை கொடுத்ததற்காக என்னை அருள் கூர்ந்து மன்னிக்கவும். இவ்விடம் கணக்குப்பிள்ளை பல பேருக்கு பாக்கி கொடுத்து வசூல் செய்யாமலும், கடிதம் எழுதாமலும், சிலருக்குக் கடிதம் எழுதிப் பகையைத் தேடி வியாபாரம் நின்று போனதினாலும் கடன் கொடுத்த வியாபாரிகளுக்குக் கடிதம் எழுதி வசூலிக்கும் முறையைத் தங்களிடமிருந்து தெரிந்து கொள்வதற்காகவே நான் இப்படி சும்மா இருக்க நேர்ந்தது. தங்கள் மகன் வந்தபொழுதும் நான் வீட்டில்தான் இருந்தேன். இந்தத் தவறுகளுக்கு என்னை மன்னிக்கவும்,

உண்மையுள்ள,

பக்கிரி மைதீன்

வியாபாரிகளுக்குக் கடிதம் எழுத இம்முறை பயன்படுமானால் பெரிதும் மகிழ்வேன்.