எது வியாபாரம், எவர் வியாபாரி/014-017
கலை பல வகை. அதில் சேமிப்பு ஒரு கலை. ஒருவன் சேமிக்கத் தொடங்கி விட்டால், அவனைத் தடைப்படுத்த முடியாது. அவன் சேமித்துக் கொண்டே இருப்பான்.
சேமிப்பது கடினமல்ல. ஒருவனுக்கு முதலில் வேண்டுவது “சேமிக்க வேண்டும்” என்ற ஆசைதான், அவன் தன் வாழ்நாளில் ஒரே ஒரு தடவை, தான் குடிக்கும் காப்பிக் குடியை நிறுத்தி, அந்த ரூபாயை வங்கியில் போட்டால், நூறு ஆண்டுகளில் ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய் கிடைக்கும். இது கற்பனையல்ல, உண்மை. மாதம் நூற்றுக்கு ஒன்று வீதம் வட்டிக்கு வட்டி சேர்க்கும் நிதியில் போட்டால், அது ஆறு ஆண்டுகளில், இரட்டிப்புத் தொகையாக வங்கியிலிருந்து கிடைக்கும்.
நூறு ஆண்டுகளில் பதினாறு ஆறும், ஒரு நான்கு ஆண்டுகளும் இருக்கின்றன. இரட்டித்துக் கணக்கைப் பாருங்கள். ஒரு ரூபாய் இரண்டு ரூபாயாகி பின் நான்கு, எட்டு, பதினாறு, முப்பத்திண்டு, அறுபத்து நான்கு, 125, 250, 500, 1000, 2000, 4000, 8000, 16000, 32000, 64000 96-ம் ஆண்டில் 64,000 ஆக வளர்ந்து மீதி 4 ஆண்டுகளுக்கு, மூன்றில் 2 பங்கு ரூபாய் 42000/- சேர்த்து நூற்றி ஆறு ஆயிரமாகக் கிடைக்கும். ஆனால் இத்தொகையை நீங்கள் வாங்க முடியாது. உங்கள் பேரன்தான் வாங்குவான்.
ரூபாய் 100/- என்று வங்கியில் போட்டால் 60-ம் ஆண்டில் ரூபாய் நூற்றி ஆறாயிரம் கிடைக்கும் இத் தொகையை உங்கள் மகன்தான் வாங்குவான். நீங்களே வாங்க வேண்டுமானால் ரூபாய் ஆயிரத்தை இன்று வங்கியில் போடுங்கள் 40-ம் ஆண்டில் ரூபாய் நூற்றி ஆறாயிரத்தை வங்கியிலிருந்து நீங்களே வாங்க முடியும்.
இதிலிருந்து தெரிவது என்னவெனில் நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும், உங்கள் பேரன் அடைய வேண்டிய சொத்தில் நூற்றி ஆறாயிர ரூபாயைப் பாழாக்குகிறது என்று தெரிகிறது.
மாதம் ரூ. 300/- வருமானம் உள்ளவர்கள் வீட்டு வாடகை ரூ. 80/- அரிசி ரூ. 45/- பலசரக்கு ரூ. 45/-காய்கறி ரூ. 30/- பால் ரூ 30/- பலகாரம் ரூ. 6/- துணி வெளுக்க ரூ. 9/- சவரம் ரூ. 6/- இதர செலவுகளுக்கு ரூ. 18/- சேமிப்பு 15/- எனத் திட்டமிட்டு அக்காலத்தில் செலவு செய்து வந்தார்கள். இக்காலத்திற்கு ஏற்றபடி இத்திட்டத்தை அமைத்துக் கொள்வது நல்லது. இதிலும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறும், சூழ்நிலைக்கு ஏற்றவாறும் இத்திட்டத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். திட்டமில்லாத குடித்தனமும் குறிகோள் இல்லாத வாழ்க்கையும் ஒருபோதும் வெற்றியடையாது. திட்டமிட்டு வாழ்க்கை தடத்துகிறவர்கள் மீதப்படுத்த முடியாமற் போனாலும், கடன்காரர்களாக வாழ மாட்டார்கள் என்பது உறுதி.