எனது கதைகளின் கதைகள்/சுண்டைக்காய் சுமப்பவர்கள்

18
சுண்டைக்காய் சுமப்பவர்கள்

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வாசுகி பத்திரிக்கையிலிருந்து பழம் பெரும் எழுத்தாளரான திரு தாமரை மணாளன் எனக்கு டெலிபோன் செய்து, உடனடியாக ஒரு சிறுகதை வேண்டும் என்றும் அதை முதல் இதழிலேயே வெளியிட விரும்பவதாகவும் குறிப்பிட்டார். எனவே உடனடியாக கதை அனுப்புவது என்று தீர்மானித்தேன். ஆகையால் வழக்கம் போல் கடற்கரை மண்ணில் உட்கார்ந்து சிந்தித்தேன்.

அதிகார வர்க்கம், எந்தச் சூழலையும் தனக்கு சாதகமாத் தன் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வல்லமை பெற்றது. பாரதப் பிரதமரின் புதிய பொருளாதார கொள்கையை எங்களைப் போன்ற ‘மூத்த’ அதிகாரிகளுக்கு, விளக்க வேண்டுமென்று, டில்லி, பம்பாய், திருவனந்தபுரம், கௌஹாத்தி ஆகிய இடங்களில், கான்பரன்ஸ்கள் போட்டார்கள். நூற்றுக்கணக்கான கார்கள் பறந்தன. டின்னர்கள், பார்ட்டிகள். நான் கூட விமானத்தில் பறந்து போய்க் கலந்து கொண்டேன். இதே போல் மகாபலிபுரத்தில் மனித சக்தியை பயன்படுத்துவது எப்படி என்று வானொலி நிகழ்ச்சியை உருவாக்குவதற்கு, அகில இந்தியாவிலிருந்தும் திரண்டுவந்த 60 பேர், ஒரு ஆலோசனைக் கூட்டம் போட்டார்கள். சென்னையில் போடாமல் ஏன் மகாபலிபுரத்தில் அதுவும் காட்டேஜ்களில் தங்கிக் கொண்டு போட வேண்டும் என்று நான் பொறுக்க முடியாமல் கேட்டேன். அதற்கு மனித சக்தியை பற்றி சிந்திக்க அமைதியான சூழல் தேவை என்று என் கிட்டவே ஒருவர் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சொன்னார். இந்த அறுபது பேரும், இரண்டு ‘டீலக்ஸ்’ பஸ்ஸில் போயிருக்கலாம். மனிதசக்தி மாநாடாயிற்றே? அப்படி போகலாமா? நான்கைந்து அம்பாஸிடர் கார்கள் மூன்று மூன்று பேராக ஏற்றிக் கொண்டு மகாபலிபுரத்திற்குப் போய் விட்டு ‘எம்டி’யாகத் திரும்பி, பழையபடியும் மனிதச் சுமைகளை ஏற்றிக் கொண்டு போவதும் வருவதுமாக இருந்தன. வருகிறவர்களுக்கோ ஏ.ஸி.ரூம்கள், விமான டிக்கெட்டுகள். ஆலோசனைக் கூட்டமோ, வேலையில்லாத குறிப்பாக பாமர மனித சக்தியை எப்படி உருவாக்கலாம் என்பது பற்றி என்னுள் எழுந்த ஒரு ஆவேசத்தில் “சுண்டைக்காய் சுமப்பவர்கள்” என்ற தலைப்பில் அன்று இரவே, இது குறித்து ஒரு சட்டயர் கதை எழுதினேன். இப்படிப்பட்ட மாநாட்டுக்கு வருகிறவர்கள், எப்படி ஒசைப்படாமல் பரமாசாரியாரைப் பார்க்கவும். ஏழுமலையானைத் தரிசிக்கவும் போகிறார்கள் என்பதை விளக்கினேன். இத்தகைய கூட்டங்களில் டிரைவர்களுக்கு ஓ.டி.கொடுக்காமல் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று பெரிய அதிகாரிகளை அறிவுரை சொல்ல மறக்க மாட்டார்கள். இந்த கதை ‘வாசுகியின்’ முதல் இதழில் பிரசுரமானது.

டிரைவர்கள் என்றதும் அவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு நினைவுக்கு வருகிறது. பொதுவாக, நான் பணியாற்றிய அத்தனை அலுவலகங்களிலும் உள்ள டிரைவர்கள், என் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர்கள். காரணம், அவர்களுக்கும் போலீஸுக்கும் ஏற்படுகின்ற தகராறுகளை நான் தீர்த்து வைப்பதுண்டு. ஒரு தடவை, ஒரு அம்பாஸிடர் காரில், நானும் எனது பெரிய அதிகாரியும் போய்க் கொண்டிருந்தோம். வழியில், ஒரு கான்ஸ்டேபிள் டிரைவரை மடக்கினார். பிரகாசமான விளக்கை வண்டிகளில் போடக் கூடாது என்பது போக்குவரத்து விதி. இதனால் எதிரில் வரும் டிரைவர்களின் கண் கூசி விபத்து ஏற்படும் என்பதற்காக போடப்பட்ட உத்தரவு. எங்கள் டிரைவர் இரவில், எரிந்த விளக்கை, பகலில் அணைக்க மறந்து விட்டார்! இந்த கான்ஸ்டபிள் எப்படி பிரகாசமாக லைட்டைப் போடலாம் என்று பகலில் மிரட்டினார். டிரைவரோ, அந்த விதி போடப்பட்ட காரணத்தைச் சுட்டிக்காட்டி, இப்போது எரியும் லைட், யார் கண்ணை கூச வைக்கிறது என்று கேட்டவரா? வழக்கு எழுதப் போனார். இந்த அநியாயத்தை தட்டிக்கேட்கும் தைரியமில்லாமல் எனது பெரிய அதிகாரி ஒரு தினசரி பத்திரிகைக்குள் தலையை முக்கிக் கொண்டார். நான், கான்ஸ்டேபிளிடம் கண்டிப்புடன் பேசப் போன போது “டிரைவர்பாடு, கான்ஸ்டபிள்பாடு விடுங்க” என்றார். நான் விடவில்லை. இந்த நிகழ்ச்சியோடு, இன்னொரு நிகழ்ச்சியும் நினைவுக்கு வந்தது. தாலுகா மட்டத்திலுள்ள ஒரு அதிகாரி, ரத கஜ துரகபதாதி அலுவர்களுடன் டூர் போனார். பொதுவாக சீனியர் அதிகாரி முன்னிருக்கையில், அதுவும் இடது பக்கம் உட்காருவார். ஜூனியர் அதிகாரி, டிரைவருக்கும் இந்த பெரிய அதிகாரிக்கும் மத்தியில் உட்காருவார். இந்த எழுதப்படாத விதியின்படி ஜீப் புறப்பட்டது. ஒரு ஓட்டலுக்கு போனது. அந்த அதிகாரியுடன் வந்த உதவியாளர்களும் அந்த பெரிய அதிகாரிகளும் எதிரும் புதிருமாக உட்கார்ந்தார்கள். டிரைவர் தெரிந்தோ, தெரியாமலோ அந்த அதிகாரியின் பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து விட்டார். உடனே அந்த பெரிய அதிகாரி “வேற இடமா போய் உட்காருய்யா” என்று அதட்டினார். டிரைவர், உடனடியாக எழுந்தார். ஜீப்பை அங்கேயே விட்டுவிட்டு, எங்கேயோ மாயமாய் மறைந்து போனார். அவர் திரும்பவே இல்லை. இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றாக்கி ‘செம்மலரில்’ கதை எழுதினேன்.

பனிப்போர்

குமுதத்திலிருந்து ஒரு அழைப்பு வந்தது. ‘அன்று இரவு எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை. காரணம் என்னவென்றும் தெரியவில்லை’ என்ற முதல் வரியோடு கதையைத் துவக்கவேண்டுமென்றும், இதே வரியை வைத்து எழுத்தாளர்கள் பாலகுமாரன், சுஜாதா முதலியோர் எழுதுகிறார்கள் என்று குறிப்பிட்டார்கள். இரண்டு நாட்களில் கதை வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். பொதுவாக பிறத்தியார் கொடுக்கும் இத்தகைய வரிகளையோ அல்லது கருத்துக்களையோ பிடித்துக் கொண்டு கதை எழுதுவது எனது வழக்கமல்ல. ஒரு தொடர் கதையை 12 பேர் ஒவ்வொரு அத்தியாயமாக எழுத வேண்டுமென்றும், அவர்களில் நான் ஒருவராக இருக்கவேண்டுமென்றும், வேறு ஒரு பத்திரிகை கேட்டபோது, நான் மறுத்துவிட்டேன். ஆனால் இந்தக் குமுதம் ஆரம்ப காலத்தில், என்னை உருவாக்கிய பத்திரிகைகளில் ஒன்று; லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டது. இந்த வாசக பரப்புடன் மீண்டும் ஒரு தொடர்பு ஏற்படுவதை நிராகரிக்க மனமில்லை. அதோடு நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எழுதுகிற எனக்கு இது ஒரு சவாலாக தோன்றியது. இது, இப்படி சவாலாக தெரியத் தெரிய, அதை எதிர்நோக்க வேண்டுமென்ற ஒரு வைராக்கியமும் என்னுள் ஏற்பட்டது.

ஞானமும் - பைத்தியமும்

கடற்கரையில் தனியாக உட்கார்ந்து சிந்தித்தேன். குமுதம் கொடுத்த இரண்டு வரிகளை எழுதிவிட்டு சம்பந்தமில்லாமல் கதையை வேறுபக்கம் எடுத்துக் கொண்டு போகலாம். இப்படித்தான் சுஜாதா தவிர, மற்ற எழுத்தாளர்கள், இந்த வரியை மட்டும் எழுதி விட்டு கதையை சம்பந்தமில்லாமல் எங்கோ கொண்டு போனார்கள். எனக்கோ தலைப்பை ஒட்டியே எழுத வேண்டுமென்று ஒரு எண்ணம். ஆகையால் தூக்கம் பிடிக்கவில்லை என்று பொருள் கொண்டேன். இந்தச் சந்தர்பத்தில் தூக்கம் வந்தாலும், தூங்க மனமில்லாமல் இரவில் நடமாடிய எனது உறவுக்காரப் பையன் ஒருவனின் அனுபவம் நினைவிற்கு வந்தது. பொதுவாக, மனநோயால் பீடிக்கப்படுகிறவர்களுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்படுவது தூக்க மாத்திரைதான். எனது உறவுக்கார இளைஞனுக்கு மனநோய் முற்றிவிட்டது. அவனது உறவினர்கள் என்னை அணுகினார்கள். உடனே நான், மனநோய் சிகிச்சையில் பிரபலமாக விளங்கும் டாக்டர் பாப்பா குமாரிக்கு, டெலிபோன் செய்தேன். தனியார் மருத்துவமனைக்கு வரும்படி கூறினார். மறுநாள் அந்த மருத்துவமனைக்கு அவனை கூட்டிக்கொண்டு போனேன். அவனோ விஷயத்தை யூகித்துக் கொண்டு, “அண்ணாச்சி எனக்கு பைத்தியமுன்னு நினைக்கிற உங்களுக்குத்தான் பைத்தியம், வேணுமின்னா பாருங்க... டாக்டரு, உங்களுக்குத்தான் பைத்தியமுன்னு, மருந்து கொடுக்க போறாங்க” என்று சொல்லிவிட்டு அட்டகாசமாகச் சிரித்தான். நான், அவனை உறவினர்களை வைத்து சமாளித்தேன். மருத்துவமனைக்கு டாக்டர் பாப்பா குமாரி அப்போது வரவில்லை. அந்த மருத்துவமனையில் மனநோய் அல்லாத, மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்கள். ஒரு பெண் டாக்டர், பல நோயாளிகளுக்கு நோய்களுக்கு தக்கபடி மருந்துகளை கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு தொண்டை வலி இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே அந்த டாக்டர் அம்மாவை அணுகி, நான் பாப்பா குமாரியை பார்க்க வந்திருப்பதாக சுருக்கமாய் சொல்லி விட்டு, தொண்டை வலிக்கு மருந்து தரும்படி கேட்டுக் கொண்டேன். உடனே அந்தம்மா, என்னை ஏடாகோடமாகப் பார்த்துவிட்டு “எது பேசணுமுன்னாலும் பாப்பா குமாரி வந்த பிறகு பேசுங்க” என்றார் உடனே, நான் அலறி அடித்து “எனக்கு ஒன்னும் அப்படி இல்லேம்மா” என்றேன். அந்தம்மாவோ, அனுதாபமாக என்னைப் பார்த்தபடியே, “டாக்டர் பாப்பா குமாரியை பார்க்க வருகிற எல்லாருமே இப்படித்தான் உளறுவாங்க” என்றார். பக்கத்தில் இருந்த அந்த உறவுக்காரப் பையனோ “பாத்தீங்களா அண்ணாச்சி, நான் நினைச்சது சரியா போயிட்டது பாருங்க” என்று அட்டகாசமாகச் சிரித்தான். உடனே நான் அவன் ஒரு ஞானவானாக இருப்பானோ என்று கூட ஆச்சிரியப்பட்டேன்.

இந்த நிகழ்ச்சி கடற்கரையில் உட்கார்ந்திருந்த எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்தது. ஞானத்திற்கும் பைத்தியத்திற்கும் நூல் இழை தான் வித்தியாசம் என்ற ஒரு பழமொழியும் நினைவிற்கு வந்தது. கதை கிடைத்து விட்டது. இந்த பின்னணியில் தூக்கத்தை ஒரு நடுத்தர வயதுக்காரர் ஒரு நாள் இரவு திடுதிப்பென்று வெறுப்பதாகவும், அன்று பகலில், நடந்த நல்லது, கெட்டதுமான அனுபவங்களை அவர், நினைத்துப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டேன். ஞானத்திற்கும், பைத்தியத்திற்கு கடந்தகால வாழ்க்கையும் ஒரு காரணமல்லவா? ஆகையால் தாயில்லாக் குழந்தையான அவரது இளமைக் கால துயர அனுபவங்களையும், அதே சமயம், அவரது சாதனைகளையும் ஒரு சேர கோடி காட்டினேன். அவரை திட்டுகிறவர்களையும் சுருக்கமாக விவரித்தேன். அவருக்கு யேகாமுறை ஒரளவிற்கு அரைகுறையாகத் தெரியும் என்பதையும் விளக்கினேன். (இரவில் நானும் ஒரு வித யோகமுறையைக் கையாளுகிறேன்).

இறுதியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை அவருக்கு பரிச்சியமான ஒரு சாமியார் விபூதியோடும், டாக்டர் ஊசியோடும் நெருங்குவதை குறிப்பிட்டு கதையை முடித்து, முடிவை வாசகர்களிடம் விட்டுவிட்டேன். இது எனக்கு மிகவும் பிடித்தகதை.

பெண் என்றால் பெண்

புதிதாக ஆரம்பிக்கப்பட்டு, வர்த்தகத்திற்கும், இலக்கியத்திற்கும் இடைப்பட்ட நிலைக்களத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் வாசுகி பத்திரிக்கையில் குடியும், குடித்தனமும் என்ற எனது சிறுகதை ஒன்று அண்மையில் வெளியானது. இது வழக்கம் போல் முழுக்க முழுக்க ஒரு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. எனது உறவினர் ஒருவர் உறவுக்காரருக்கே உரிய இலக்கணப்படி நடக்காமல் என்னுடன் அன்பாகப் பழகுபவர். ஊரில் எப்படியோ குடிப்பழக்கம் ஏற்பட்டு இருந்த சொத்தையெல்லாம் சிதைத்து விட்டவர். பிறகு மனம் திருந்திக் குடியை விட்டாலும் நொடித்துப் போன குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை. அவரது மனைவியும் எனக்கு உறவுக்கார பெண். ஆகையால் இருவரையும் சென்னைக்குக் கொண்டு வந்து தங்க வைத்தேன். பிறகு சென்னைத் தொலைபேசி வாங்கிக் கொடுத்தேன். ஒரு பேன்சி கடையையும் ஏற்பாடு செய்தேன். மீண்டும் குடிக்கக் கூடாது என்றும் அப்படிக் குடித்தால் தொலைபேசி துண்டிக்கப்படும் என்றும் ஒளிவு, மறைவு இல்லாமல், கண்டிப்புடன் சொல்லி வைத்தேன். இதற்குப் பிறகு நானே கடன் கேட்கும் அளவிற்கு மாதம் இரண்டாயிரத்துக்கு மேல் வருமானம் வந்தது. 400 ரூபாயில் ஒரு வீடும் வாடகைக்கு கிடைத்தது. ஓராண்டுக்கு பிறகு, ஒருநாள் அவர் குடித்து விட்டு வீட்டுக்கார அம்மாவை (வீட்டின் உரிமையாளரை) கலாட்டா செய்வதாக செய்தி வந்தது. நானும் ஓடிப்போய்ப் பார்த்தேன். பழைய வாடகைக்காரி ஒருத்தியை அரிவாள் மனையால் வெட்டிய அந்த வீட்டுக்கார அம்மா, இப்போது குடித்துவிட்டு, ‘மண் வாசனையுடன்’ அவளைத் திட்டிக் கொண்டிருந்த என் உறவுக்காரரைப் பார்த்து நடுநடுங்கிக் கொண்டிருந்தாள். அந்த குடிமன்னன் அந்த அம்மாவை நோக்கி கால்களை தூக்கிக் காட்டினார். கைகளை ஓங்கிக்காட்டினார். இது அதிக பட்சமாக தெரிந்தது. “உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று அந்த போதைக்காரரை மிரட்டி விட்டு வெளியேறினேன். எனது கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் அவர் சுபாவமே கூடாது என்றும் அதற்காக அவர் டெலிபோனை துண்டிப்பது என்றும், பேன்சி கடையை இழுத்து மூடி விடுவது என்றும் தீர்மானித்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் மனைவி என்னை வீட்டில் வந்து பார்த்தாள். அவர் விட்டுப்போன குடியை தொட்டதற்கான காரணத்தை விளக்கினாள், வீட்டுக்காரம்மா, அவர்களை நாயே, பேயே என்று திட்டுவதாகவும், கைப்பம்பை பூட்டிப் போடுவதாகவும் கழிவறையை மூடிப் போடுவதாகவும், இரவில் சாப்பிடும் சமயத்தில் மின்சார சுவிட்சை ஆப் செய்து விடுவதாகவும் குற்றம் சாட்டினாள். அவளை சமாளிப்பதற்காக, தானே, கணவனை குடிக்கச் சொன்னதாக ஆணித்தரமாகச் சொன்னாள். அவள் சொன்ன விதம் என் மனதில் இன்னும் அப்படியே இருக்கிறது. “இதுதான் கூகையாச்சே... குடிக்காட்டா ரோஷமே வராது. அதனால்தான் நானே குடிக்கச் சொன்னேன். இனிமே குடிக்காம பார்த்துக்கறதுக்கு நானாச்சு” என்றாள்.

இதையே ‘குடியும் - குடித்தனமும்’ என்று எழுதினேன். தமிழக அரசு திரு.ஜி.வி. -யை வைத்து எடுக்கும் மதுவிலக்கு பிரச்சாரப் படத்தில் குடியால் இருதயம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மேல்நாட்டில் சிகிச்சை அளிப்பதாக பல காட்சிகள் வருவாதகவும் அவற்றை படமாக்க படப்பிடிப்புக்குழு மேல்நாடு போகப்போவதாகவும் கேள்விப்பட்டேன். அதாவது நமது அரசுக்கு மேல் குடிமக்களே கண்ணில் படுகிறது. கதையின் முடிவில் இதைக் குறிப்பிட்டு விட்டு அந்த மதுவிலக்கு கமிட்டி எந்த உலகத்தில் இருக்கிறது என்று ஒரு வினாவை எழுப்பினேன். ஆனாலும் இந்தக் கதையை பிரச்சாரமாக கருதிவிடக் கூடாது என்று அப்படி எழுதியதை அடித்துவிட்டேன்.