எனது கதைகளின் கதைகள்/செய்திக்காக போனபோது

14
செய்திக்காக போனபோது...


கில இந்திய வானொலி நிலையத்தின் மூத்த செய்தியாளர் என்ற முறையில், நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம். வானொலி என்பதால், மாவட்ட நிர்வாகத்திடமிருந்து, கார், ஜீப், சர்க்யூட் மாளிகை ஆகியவற்றிற்கு குறைச்சலில்லை. செல்லுமிடமெல்லாம் கிட்டத்தட்ட ஆட்சித் தலைவர் தவிர அத்தனை அதிகாரிகளும் என்னுடன் வருவதுண்டு. இதில் ஒரு லாபமும் உண்டு, நட்டம் உண்டு. இவர்களின் முன்னிலையில் மக்கள் தங்களது குறைகளை கூறுவது கடினம். அதே சமயம் வானொலிக்கு உரிய செய்திகள் தாராளமாக கிடைக்கும். இந்த ‘பந்தாக்களையும்’ ஊடுருவி நான் மக்களை ரகசியமாகச் சந்தித்து பல்வேறு சங்கதிகளை விவாதித்திருக்கிறேன். அந்த அடிப்படையில் ஒருசில சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். எழுதப்போகிறேன்.

குடிக்கள்ளன்

அண்மையில் ஆறு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். மதுரைக்கு அருகே கிடாரிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே நிலச்சீர்திருத்த சட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மிகுதி நில விநியோகம் பற்றி கண்டறியச் சென்றபோது ஒரு ரசமான செய்தி கிடைத்தது. அந்தக் கிராமத்திலும் அதன் சுற்றுப்புற வட்டாரத்திலும், முக்குலத்தோரில் கள்ளர் பிரிவினர் அதிகம். இதற்கு அடுத்தபடியாக முஸ்லீம்கள் இடம் பெறுகிறார்கள். நாடார்கள், மூப்பனார்கள் ஆகியோரும் உள்ளார்கள். பொதுவாக இந்தப் பகுதியில் சாதிச் சண்டை கிடையாது. சமயச் சண்டையும் கிடையாது. அதுவும் இந்து-முஸ்லிம் என்ற பேதமே எள்ளளவும் இல்லை. இதற்கு காரணம் குடிக்கள்ளன் என்ற ஒரு முறைமை அந்தப் பக்கம் இன்னும் பழக்கத்தில் இருக்கிறது. அதாவது சிறுபான்மையினரான ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திற்கும் ஒரு கள்ளர் குடும்பம் அதன் நல்லது கெட்டதுகளை கவனித்துக் கொள்ளும். இதற்குக் குடிக்கள்ளன் குடும்பம் என்று பெயர். இந்தக் குடும்பத்திற்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்திற்கும் சகோதர பந்தம் உண்டு. இந்த முறை, இத்தகைய இரு குடும்பங்களுக்குமிடையே காலங்காலமாக இருந்து வருகிறது. உதாரணமாக ஒரு முஸ்லிம் குடும்பத்துப் பெண்ணை வெளியூரில் கட்டிக்கொடுத்து, அங்கே அவள் பல இன்னல்களுக்கு ஆளானபோது, அவளுடைய சொந்த ஊர் குடிக்கள்ளன் தனது சகாக்களோடு அவளது புகுந்த வீட்டிற்குப் போய் அவளைத் துன்புறுத்தியவர்களை மரத்தில் கட்டி வைத்து விட்டார். ஒரு முஸ்லிமிற்கும், ஒரு கள்ளருக்கும் ஏதோ ஒரு தகராறு வந்தால், இந்த குடிக்கள்ளன், முஸ்லிம் பக்கம் நிற்பார். இவருடைய கல்யாணத்தில் அந்த முஸ்லிம் வீட்டிற்கு முதல் வெற்றிலை, அந்த முஸ்லிம் வீட்டு கல்யாணத்தில் இவருக்கு முதல் பாக்கு. இந்த செய்தி தமிழகத்தில் பெரும்பாலோருக்கு குறிப்பாக நமது எழுத்தாளர்களுக்கு நிச்சயம் தெரியாது. இந்த முறை, இப்போது அருகிக் கொண்டிருந்தாலும், இது மேலும் புதுப்பிக்கப்பட வேண்டிய ஒன்று. இதை வைத்து குடிக்கள்ளன் என்ற தலைப்பில் செம்மலரில் கதை எழுதினேன். அந்தக் கிடாரிப்பட்டியில் பார்த்தவர்களையெல்லாம் கேரக்டர்களாக்கி கதையாக்கி விட்டேன். அண்மையில் நான் எழுதிய கதைகளில் எனக்கு பிடித்த கதை இது.

எழுத வேண்டிய இன்னொரு உலகம்மை

இதே போல் பசும்பொன் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது அரசு கடனுதவி பெற்ற ஒரு விவசாயத் தொழிலாளரின் ஊருக்குப் போனேன். இப்படி கடனுதவி பெறுகிறவர்களுக்கு, அவர்கள் அந்தக் கடனை திருப்பிக் கட்டினாலும் கட்டாவிட்டாலும் அவர்கள் இறக்க நேரிட்டால் இந்த கடனோடு இணைந்த இன்சூரன்ஸ் பணமான மூவாயிரம் ரூபாயை கொடுக்க வேண்டும். நான் குறிப்பிடுகின்ற தொழிலாளர் பாம்பு கடித்து இறந்தவர். அரசு விதிப்படி பாம்பு கடித்து இறந்தவர் குடும்பத்திற்கு மூவாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். இப்படி இரண்டு வகையில் தேறிய ஆறாயிரம் ரூபாயை, ஒரு நல்ல அதிகாரி, அவரது மனைவியைத் தேடி பிடித்து வாங்கிக் கொடுத்து விட்டார். அந்தப் பெண்ணை நான் நேரில் விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதன்படி அந்தக் கிராமத்திற்குப் போனேன். எங்களைப் பார்த்தவுடனேயே அந்தப் பெண் கண்கலங்கினாள். முப்பது வயதுக்கு உட்பட்டவர். எங்கிருந்தோ வந்த அவள் மாமியார் - அதாவது இறந்தவரின் அம்மா, விறகுக் கட்டைப் போட்டுவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்து மகனுக்காக அழுதார். பிறகு, அந்தப் பெண்ணிடம் கொடுக்கப்பட்ட ஆறாயிரம் ரூபாயில் மூவாயிரத்தை வசதியாக உள்ள தனது கல்யாணமான மகள்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அழுதபடியே சொன்னார். ஆனால், மருமகள்காரி, மிக கண்ணியமாகவும், அதேசமயம் அழுத்தம் திருத்தமாகவும், “இது என் ஐயாகூடப் பிறந்த அத்தை. இவுங்கள கண்கலங்காம காப்பாத்தணும் என்கிறதுக்காகத்தான் இங்கே இருக்கேன். இல்லன்னா இந்த ரூவாயோட பக்கத்து ஊர்லே இருக்குற எங்க அண்ணந்தம்பியோட போறதுக்கு எனக்கு அதிக நேரம் ஆகாது. நான் பிறந்த வீட்டுலேயே பிறந்த என் அத்தைய விட்டுட்டு நான் போகமாட்டேன். இந்த ஆறாயிர ரூபாய் இருந்தால்தான் பாங்கு வட்டியில் காலத்தை தள்ளலாம்” என்றாள். கோதிமுடிந்த கொண்டை, மொச்சக்கொட்டை மாதிரியான உடம்பு, அழுத்தமான பார்வை அப்பப்பா..... இப்படி ஒரு கவுரமான துயரச் சுமையை சுமந்து கொண்டு கண்ணியமாகப் பேசும் ஒரு பெண்ணை நான் கண்டதில்லை. இதைக் கதையில் வர்ணிக்கப் போவதால் இத்துடன் விட்டு விடுகிறேன். இந்தப் பெண் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் வாதாடினேன். முதலில் அவள் லேசாய் சிரித்து விட்டு தேவையில்லை என்றாள். நான் வற்புறுத்தியபோது “சரி, அந்த பேச்சு விட்டுட்டு அடுத்த பேச்சு பேசுங்க” என்று கண்டிப்புடன் கூறினாள். அந்தக் கண்டிப்பைக் கண்ணகி இவளைவிட அதிகமாகக் காட்டியிருக்க முடியாது. எனக்கு கண்ணகித் தன்மை பிடிக்காது என்றாலும், இந்தக் கோனார்ப் பெண் காட்டிய கற்பின் வலிமை, கண்மூடியபடியே காலங்கடந்த கணவனை நினைத்துப் பார்த்த சோகமயமான லாகவம், அத்தை மீது கொண்ட பாசம், சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் அதிகாரிகளிடம் விடுத்த வேண்டுகோள் என்னை ஒரு கலக்கு கலக்கிவிட்டது. ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவலில் வரும் உலகம்மை மாதிரியானவள். இவளை வைத்தே மிகப்பெரிய நாவல் ஒன்றை எழுதலாம். துவக்கத்தில் சிறுகதையாகச் செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன். இந்த ‘பாழும் வேலையில்’ மாட்டிக் கொண்டதால் அடுத்தவர்கள் சொல்வதைத் தான் செய்தியாக்க நேரம் இருக்கிறதே தவிர நான் சொல்ல வேண்டியதைச் சொல்ல காலநேரம் கிட்டவில்லை.

சுபேதாவா - சும்மாவா

வானொலி செய்தியாளர் என்ற முறையில் பல்வேறு தரப்பு மனிதர்களைப் பார்க்கும் அனுபவம் கிட்டுகிறது. ஒருதடவை, எழுத்தாளர் பொன்னிலன் அவர்களிடம் என்னால் எழுதமுடியவில்லை என்று குறைப்பட்டபோது “நாட்டின் நாடித்துடிப்பையே அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கும் நீங்கள் இப்படியா சொல்வது” என்றார். அவர் சொல்வது போல் நாட்டின் நாடித்துடிப்பை அறியமுடிகிறதோ இல்லையோ, அரசியல்வாதிகளின் ஆசாபாசங்களை அவர்களைச் சார்ந்திருக்கும் “ஒட்டுண்ணிகளை” கண்டறியமுடிகிறது. பெருந்தலைவர்கள் புதுதில்லியிலிருந்து வரும்போது பத்திரிகையாளர்களோடு நானும் விமான நிலையத்திற்குப் போவதுண்டு. அப்போது பல மாறுபட்ட கட்சித் தலைவர்களின் வரவேற்பின் போதெல்லாம் ஒரு சமூக ‘சேவகியை’ அடிக்கடி பார்ப்பதுண்டு. விசாரித்துப்பார்த்ததில், இந்த சமூகத்துக்கு ஆகாத சேவகி பெரிய பெரிய தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி அதை வீடியோவிலும் கேமராவிலும் எடுத்துக்கொள்ள செட்டப் செய்வாளாம். இவள் தலைவர்களுடன் அந்தரங்கமாக உரையாடுவது போல் பத்திரிகைகளில் பலதடவை புகைப்படங்கள் வந்திருப்பதை நானே பார்த்திருக்கிறேன். இவ்வளவுக்கும் இவள், விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் பலதடவை கைதுசெய்யப்பட்டவளாம். இத்தகையப் குற்றம் புரிந்த ஒரு பெண் சமூக சேவையில் ஈடுபடக்கூடாது என்ற அற்பத்தனமான எண்ணம் எனக்கில்லை. ஆனால் இவள், அதே தொழிலை இப்போது நாகரிகத்தோடும் கவுரவத்தோடும் செய்து வருகிறாள் என்பது தான். ஒரு தடவை குறிப்பிட்ட ஒரு கட்சியின் உள்ளூர் தலைவர்கள், இவளை ஒரங்கட்ட முயற்சித்தார்கள். ஆனாலும் அவள், எப்படியோ டில்லியிருந்து வந்த பெரிய தலைவரோடு காரில் ஏறிச்சென்று, மேடைக்கே போய், அவருக்கு இணையாக மக்களைப் பார்த்து ஆசீர்வதித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அந்த பெரிய தலைவரிடம், கிசுகிசுத்து, இந்த உள்ளூர் தலைவர்கள் கட்டாயத்தின் பேரில் நீட்டிய காப்பியை சுவைத்து சுவைத்து குடித்திருக்கிறாள். எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாத இந்த அம்மையார் இப்படி பல அரசியல் கட்சிகளின் ஒட்டுண்ணியாக இன்றும் இருந்து வருகிறாள்.

மாநிலத்தலைவர்களைப் பார்த்து தேசிய தலைவர் ‘அந்த மேடத்திற்கு காப்பி கொடுங்கள்’ என்ற கட்டளையை இடச்செய்தவள். இப்படி இனி என்னெல்லாம் செய்யப்போகிறாளோ, இந்த கேரக்டரை வைத்து “சுபேதாவா சும்மாவா” என்று நான் எழுதிய சிறுகதை இதயம் பேசுகிறது பத்திரிகையில் பிரசுரமாயிற்று.