எனது கதைகளின் கதைகள்/பெண்ணிய அனுபவங்கள்

9
பெண்ணிய அனுபவங்கள்


ந்த மாதம் பெண்கள் மாதம் என்பதால், பெண்களைப் பற்றி நான் எழுதிய கதைகளை நினைத்துப் பார்த்தேன். கற்பழிப்பு என்ற ஒன்றை வில்லன் மூலம் நடத்த விட்டு, பிறகு அந்தப் பெண்ணிற்காக பரிதாபப்பட்டு, எழுதும் எழுத்து வகையை, நான் தொட்டதில்லை. இது பெரும்பாலும் செக்ஸ் உப்பு போட்டு, கொடுக்கின்ற ஒரு பாசாங்கு எழுத்து என்பதுதான் என் கருத்து. இலக்கியத்தைப் பற்றி லியோ டால்டாய் சொல்லுகின்றபோது, “எழுத்தாளன் ஒருவன், அல்லது ஒருத்தி என்ன மனவுணர்வோடு எழுதுகிறாரோ, அந்த உணர்வு வாசகர் மனதில் பதிய வேண்டும். நல்லுணர்வு படிந்தால், அது நல்லியக்கியம், நச்சுணர்வு பதிந்தால், அது நச்சிலயக்கியம்” என்றார். நமது எழுத்தாளர்களில் பெரும்பாலோர், மானசீகமாக ஒரு பெண்ணை கற்பழித்துக் கொண்டே கதை பண்ணுவதால், வாசகன் மனதில் செக்ஸ் ரசனையே மிஞ்சி நிற்கிறது. தார்மீகக் கோபம் ஏற்படுவதில்லை. ஆகையால் பெரும்பாலும் பெண்களின் செக்ஸ் அல்லாத பிரச்னைகளை எழுதுவது என்றே, நான் தீர்மானித்தேன். ஆனால், செக்ஸ் மனோபாவம் பற்றி எழுதியிருக்கிறேன். பொதுவாக எனது கதைகளிலும், நாவல்களிலும், படிக்காத கிராமத்துப் பெண்கள் பண்புள்ளவர்களாகவும், படித்த பெண்கள் ஒரு தினுசாகவும் வந்திருக்கிறார்கள். இந்த அணுகு முறையிலிருந்து இப்போது நான் மாறி இருக்கிறேன். பெண்களை மேன்மைப்படுத்தும் வகையில்தான் எனது பெரும்பாலான கதைகள் வந்துள்ளன.

சோற்றுப் பட்டாளம்

28 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சியே சோற்றுப்பட்டாளமாக வடிவெடுத்தது. எனது அம்மாகூடப் பிறந்த சித்தியை, அவரது சொந்த தாய்மாமா மகனுக்கு சென்னையில் கட்டிக்கொடுத்திருந்தது. எனக்கு, சித்தியும் சித்தப்பாவும் எவ்வளவோ செய்திருக்கிறார்கள். சித்தி நாற்பது வயதில் இறந்து போனாள். சித்தப்பாவிற்கு 50 வயது இருக்கும். இன்னொரு கலியாணம் செய்ய ஊருக்குப் போன அவருக்கு, இருபது வயது நிரம்பிய எனது கடைசி சித்தியை கலியாணம் செய்து கொடுக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. சென்னையில் கல்லூரியில் படித்த நான், விஷயத்தைக் கேள்விப்பட்டு, ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு, அந்தக் கல்யாணத்தைத் தடுப்பதற்காக ஒடினேன். ஆனால் அதற்குள் திருமணம் முடிந்து விட்டது. அந்த ஊரில் அப்போதைய ஒரே படித்த மனிதரான உள்ளுர் ஆசிரியர்தான் இந்த அநியாயத்தை நியாயப்படுத்தி, செயல்பட வைத்த பெரிய மனிதப் பேர்வழி. சம்பந்தப்பட்ட உறவினர் ஒவ்வொருவரும் அந்தத் திருமணத்தால் தனக்கு என்ன லாபம் வரும் என்று யோசித்தார்களே தவிர, சித்தியின் பாதிப்பைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை. கோபத்தோடு குமுறிய என்னைப் பார்த்து பரிகாசம் செய்தார்கள். ஊரில் உள்ள பெரிய மனிதர்கள்கூட அந்தத் திருமணம் அநியாயமானது என்று தெரிந்தாலும், அதைத் தடுக்க முன்வரவில்லை. இந்தப் பின்னணியில் எழுந்ததுதான் “சோற்றுப்பட்டாளம்”. வெறுமனே ஒருத்தியை சாகடிக்காமல் சற்று முற்போக்காகக் காட்ட வேண்டும் என்பதற்காக சோற்றுப்பட்டாள நாயகி சுந்தரி, இறுதியில் பொருந்தாக் கலியாணத்தை எதிர்த்து புரட்சி செய்கிறாள். இதை அப்போது கற்பனாவாதம் என்று சொன்னார்கள். ஆனால், ஒருசில பத்தரிகைகளில், வரதட்சணை அதிகமாகக் கேட்கப்பட்டது என்பதற்காக, மேடையிலிருந்து குதித்த மணமகளையும் தாலி கட்டுவதற்கு முன்போ அல்லது பின்போ அக்னி சுற்றி வலம் வந்தபோது, மணமகனுக்கு தொழுநோய் இருப்பதைக் கண்டுபிடித்து, அந்தத் திருமணத்தை அங்கீகரிக்காத ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியும் வெளியாயின. “ஒரு கோட்டிற்கு வெளியே” நாவலை நான் முன்னதாக எழுதினாலும், ஆனந்தவிகடனில் தொடர் கதையாக வெளியாகி, பின்னர் பேராசிரியர் பாக்கியமுத்து அவர்களால், சி.எல்.எஸ். நிறுவனம் மூலம் முதலாவதாக வந்த நாவல் இந்தச் “சோற்றுப்பட்டாளம்”. இது பத்தாண்டுகளுக்கு முன்பு டி.வி.யில் நாடகமாக வந்தது. இன்னும் மிகச் சிறந்த நாடகமாகப் பேசப்படுகிறது. பின்னர் இது “பாசம் ஒரு வேசம்” என்ற தலைப்பில் திரைப்படமானது. ஆனால் எடுக்கத் தகுதியில்லாதவர்கள் எடுத்ததால், அது பார்க்கத் தகுதியில்லாமலேயே போய்விட்டது.

மானுடத்தின் நாணயங்கள்

பெண்ணைப் பற்றி எழுதிய எனக்குப் பிடித்த ஒரு சிறுகதை, ‘மானுடத்தின் நாணயங்கள்! என் மனைவி வழி சொந்தக்காரப் பெண் ஒருத்தி, கிராமத்திலிருந்து கணவனுடன் எண்ணூரில் வசித்து வந்தாள். அவள் கணவன், இன்னொருத்தியைச் சேர்த்துக் கொண்டு, அவளைக் கொடுமைப்படுத்துவதாகத் தகவல் வந்தது. எப்படியாவது அந்தப் பெண்ணை மீட்டு அவளுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்று சொந்தக்காரர்கள், என்னைக் கேட்டுக் கொண்டார்கள். பப்ளிசிட்டி ஆபீசராக, சற்று போலீஸ் செல்வாக்கில் உள்ள நான், அந்தப் பெண்ணின் சித்தப்பாவுடன் எண்ணூருக்குப் போனேன். அங்கிருந்த டிஎஸ்பி என்னுடைய நண்பர். “ஐயோ இதெல்லாம் பொம்பள விவகாரங்க. போலிஸ்காரனை கிழிச்சிப்பிடுவாங்க” என்றார் அவர். உடனே ஒரு கான்ஸ்டபிள் டமார் என்று சல்யூட் அடித்து, தான் இந்த விவகாரத்தை முடித்து வைப்பதாகக் குறிப்பிட்டார். டிஎஸ்பி நண்பர் வேண்டாவெறுப்பாகச் சம்மதித்தபோது, (பின்னால் அந்தக் கான்ஸ்டேபிளுக்கு, சம்மன் இல்லாமல் ஆஜரானதற்காக டோஸ் கிடைத்திருக்கலாம்) அந்தக் கான்ஸ்டேபிளுடன், இன்னும் நான்கைந்து போலீஸ்காரர்களுடன் என் சொந்தக்காரப் பெண் வீட்டிற்குப் போனோம். அவள் தலை மொட்டையடிக்கப்பட்டு, கூனிக்குறுகி இருந்தாள். அவளின் தாலி கட்டாத சக்களத்தி, இரண்டு குழந்தைகளோடு கும்மென்று இருந்தாள். கான்ஸ்டேபிள் எடுத்த எடுப்பிலேயே அந்தக் காதல் மன்னனை நாயே பேயே என்று பேசினார். அடிக்கக்கூட போய் விட்டார். அதற்குள் அவன், அவர் காலிலும் என் காலிலும் விழுந்து, என்ன சொன்னாலும் கட்டுப்படுவதாக வாக்களித்தான். என்னுடன் வந்த பெண்ணின் சித்தப்பாவும் அந்த கான்ஸ்டேபிளும், அவன் வைப்பாட்டியை அப்போதே துரத்திவிட வேண்டும் என்று மிரட்டினார்கள். அவனும் போலிஸைப் பகைத்து அந்த ஏரியாவில் வாழ முடியாது என்பதால், அதற்கு உடன்பட்டான். ஆனால் எனக்கோ மனசு கேட்கவில்லை. நான் இதை என் சொந்தக்காரப் பெண் ஒருத்தியின் பிரச்னையாக அனுகாமல், ஒரு பெண்ணின் பிரச்னையாக அணுகியதால், எனக்கு அவனது வைப்பாட்டி பிரச்னையும் மனதை நெருடியது. இவனால் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக்கப்பட்ட அவள், எங்கே போவாள்? என்ன செய்வாள்? என் சொந்தக்காரப் பெண்ணும் அவளும் பிரச்னையைப் பொறுத்த அளவில் இடம் மாறுகிறார்களே தவிர, பிரச்னை தீர்ந்தபாடில்லை. நான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, அவள் இரண்டு பெண்களோடும் வாழட்டும்; இருவரில் எவளையாவது கொடுமை செய்தால், போலீஸ் அவனை உதைக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன். இதனால் என் சொந்தக்காரப் பெண்ணுக்கும் அவள் சித்தப்பாவிற்கும் என்மேல் வருத்தம் தான். ஆனால் என் முடிவு எனக்கு இன்னும் சரியானதாகவே தெரிகிறது. இந்த அடிப்படையில், ‘மானுடத்தின் நாணயங்கள்’ என்று, ஒரு சிறுகதை எழுதினேன். குமுதத்தில் பிரசுரமாயிற்று. இதேபோல் காவல்துறையிடம் கள்ளக்காதலியுடன் பிடிபட்ட கணவன், வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட போது அவன் மனைவி, கணவனைத் துரத்திவிட்டு அவன் காதலிக்குப் பாதுகாப்பு கொடுத்தாள் என்று ஒரு கற்பனைக் கதையையும் எழுதினேன். மானுடத்தின் நாணயங்கள், டி.வி. நாடகமாக ஒளிபரப்பானது. நாடகத்தில் கணவன், மனைவியை காட்டுத்தனமாக அடிப்பதைக் குறைத்திருக்க்லாம் என்று நமது ‘மனிதாபிமானிகள்’ மனம் பொறுக்காமல் கூப்பாடு போட்டார்கள். அடிக்கின்ற காட்சியையே காணக்கூசும் இவர்களால், நிதர்சனத்தை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

ஆபீஸ் மோகினி

ஒரு பிரச்னையை உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும் என்று எண்ணுவதால் படித்த சில பெண்கள் அலுவலகங்களில் மேலிடத்தை கண்வீச்சால் அடித்து சகாக்களை காலால் உதைக்கும் பல சம்பவங்களைக் கண்டிருக்கிறேன். பாதிக்கப்பட்டு இருக்கிறேன். சென்னை வானொலியில் என்னுடைய சகா, ஒரு பெண். போலீசில் ஒருவர், சினிமாவில் ஒருவர், தனது இலாகாவில் ஒருவர், அடியாட்களில் ஒருவர் என்று விதவிதமான மனிதர்களைப் பரிச்சயம் கொண்டவர். புதிதாக வேலைக்கு வந்த, என்னை இவர் படாதபாடு படுத்திவிட்டார். ஒரு பெண்ணின் திருமணத்தையே நிறுத்துவதற்கு முயற்சி செய்தவர். தன்னை வேலையில் சேர்த்த ஒருவரையே தூக்கியெறியும்படி செய்தவர். இவர் பேசினால் அசல் கண்ணகியே மறுபிறவி எடுத்தது போல் தோன்றும். என்னிடத்திலும் இவர் வேலையைக் காட்டத் துவங்கினார். ஆனால் நான் விட்டுக் கொடுக்கவில்லை. திருப்பி போராடினேன். இந்த அம்மையாரைப் பற்றி புதுதில்லியில் உள்ள அதிகாரிகளுக்கு புகார் கடிதங்கள் எழுதிப்போட்டேன். விளைவு அவர் மாற்றப்பட்டார். அப்படியும் திருப்தியுறாமல், “அவள் ராட்சஸி” என்ற ஒரு சிறுகதையை குமுதத்தில் எழுதினேன். “ஆபீஸ் மோகினி” என்ற எனது மாத நாவல் இந்த அம்மையாரை மையமாக வைத்து வெளி வந்தது. குமுதத்தில் மாலைமதி வெளியான முதல் ஐந்து மாதங்களில் பிரசுரமான நாவல் இது. இதில் ஒரு வேடிக்கை; இவரது மகளை நல்ல பெண்ணாகவும், யோகத்தில் ஈடுபாடு கொண்டவளாகவும் அம்மாவை எதிர்த்துப் போரிடுபவளாகவும் காட்டினேன். உண்மையிலேயே அந்தப் பெண் இப்போது யோகத்தில் ஈடுபடுபவளாக, அம்மாவின் போக்குப் பிடிக்காமல் அவளிடமிருந்து விடுபட்டு, தனித்து நிற்கும் பண்புள்ள பெண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும் போது, ஒரு சகாவை இழிவுபடுத்தி இப்படி எழுதியது சரிதானா என்று தோன்றுகிறது. நீலபத்மநாபன் விவகாரத்தில், அவருக்காக நான் இன்னும் அனுதாபம் கொள்கிறேன் என்றாலும், ஒரு அலுவலக சகாவைப் பற்றி அவர் இழிவாக எழுதக் கூடாது என்று எழுத்தாளர் விக்ரமனிடம் வாதித்தேன். உடனே அவர், “நீங்கள் மட்டும் என்னவாம்?” என்று ஆபீஸ் மோகினியைச் சுட்டிக்காட்டினார். அதிலிருந்து அந்த நாவலை எழுதியிருக்க வேண்டாம் என்றே நினைக்கிறேன். இதற்காக அலுவலக சமாச்சாரங்கள் எழுதக் கூடாது என்பதல்ல. ஆனால் அந்தப் பாத்திரம் நமக்குத் தெரிந்த ஒருவரின் உருவத்தை வர்ணிப்பதாகவோ, முழுக்க முழுக்க அவரைப் பற்றி வருவதாகவோ இருக்கலாகாது என்பது என் கருத்து. எழுத்தில் நிராயுதபாணிகளாக இருக்கும் அவர்களை, நமது எழுத்தாயுதத்தால் தாக்கக் கூடாது என்று இப்போது நினைக்கிறேன். இதே நாவல் ‘பிற்பகல்’ என்ற பெயரில், வானதியால் வெளியிடப்பட்டது.

அம்மாவைத் தேடி.....

பெண்மையை மேன்மைப்படுத்தி நான் எழுதிய ஒரு கதை இன்னும் என் உடம்பை புல்லரிக்க வைக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு “அம்மாவைத் தேடி” என்று ஆனந்தவிகடனில் எழுதிய சிறுகதை. ஒரு நாள் காரிலோ, ஸ்கூட்டரிலோ போய்க் கொண்டு இருக்கும்போது, மரணத்தின் தருவாயில் இருக்கும் ஒருவர், யாரைப்பற்றி சிந்திப்பார் என்ற ஒரு கற்பனை வந்தது. நிச்சயம் அவர் குழந்தையாகி, தனது அம்மாவைப் பற்றியே சிந்திப்பார் என்று தோன்றியது. உடனே ஒரு கற்பனை ஏற்பட்டது. இப்படி எல்லோருமே அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று நினைத்து மரணமடைகிறார்கள். ஆகையால் அனைவருமே ஆவிக் குழந்தைகளாய் ஆகிறார்கள். அம்மாவைத் தேடி ஆகாயத்தில் பறக்கிறார்கள். அங்கே ஆதி பராசக்தியின் முன்னால் லட்சக்கணக்கான குழந்தைகள் நிற்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் தனது அம்மாவைத் தேடுகிறது; அம்மா இல்லை. இரண்டு குழந்தைகள் பேசிக் கொள்ளும் போதுதான் ஒரு குழந்தைக்கு இன்னொரு குழந்தை அம்மா என்பது தெரிகிறது. ஆனால் அந்த அம்மா குழந்தையும் கடைசிக் காலத்தில் தனது அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இறந்ததால், குழந்தையாகவே வடிவம் பெறுகிறது, எல்லாக் குழந்தைகளும் திகைத்து ஆதிபராசக்தியைப் பார்த்தபோது, அவள், ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தாய்போல் வடிவம் காட்டுகிறாள். மீண்டும் சுயவடிவுக்கு வருகிறாள். ஆவிக் குழந்தைகளுக்கு இந்த ஆதிபராசக்தி தான் அனைவருக்கும் தாய் என்ற ஒரு எண்ணம் ஏற்படுவதாக சிறுகதையை முடித்தேன். இது இந்து மதக் கதை போல் தோன்றினாலும் அப்போது ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராக இருந்த முஸ்லிம் நண்பரான எழுத்தாளர் ஜே.எம். சாலி, இந்தக் கதை தான் தனக்குப் பிடித்த கதை என்று அடிக்கடி சொல்லுவார். அனுபவத்தின் அடிப்படையில் எழுதாமல், கற்பனாவாதத்தில் எழுதப்பட்ட கதை இது என்றாலும், இந்தக் கதை பெண்மையின் தாய்மையை மேன்மைப்படுத்தியதுபோல் வேறு எந்தக் கதையும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். அதாவது எனது கதைகளில்.

தாய்மை

‘தாய்மை’ என்ற தலைப்பில் சென்னை வானொலி நிலையத்தில் அகிலன் அவர்களின் துண்டுதலின் பேரில் ஒரு சிறுகதை படித்தேன். அதுவும் அனுபவக் கதையே, ஒரு தடவை சென்னைக் கடற்கரையில் ஒரு கதைக்கு கரு தேடி அங்குமிங்குமாக சுற்றியபோது, நான்கைந்து வாட்டசாட்டமான ஆசாமிகள் ஒரு இளம் பெண்ணுடன் வந்து என்னைச் சுட்டிக்காட்டி “இவன் தான் உன்னிடம் வாலாட்டியவனா?” என்று கேட்டபடியே, என்னைக் கோபமாகப் பார்த்தார்கள். அவள் தற்செயலாக மேலும் கீழும் தலையை ஆட்டியிருந்தால் கூட போதும், நான் அப்பளமாகியிருப்பேன். ஆனால் அவள் நானில்லை என்று தலையாட்டிவிட்டாள். உடனே ஒரு சின்ன கற்பனை ஏற்பட்டது. இப்படி வாலாட்டியவனை அவள் கண்டு கொண்டாலும், அண்ணன் தம்பிகளிடம் சொல்லி அவனை அடித்துத் துன்புறுத்த அவள் தாய்மை இடம் கொடுக்கவில்லை; ஆகையால் தப்புச் செய்தவனையே சம்பந்தப்படாதவன் போல் சொல்லுகிறாள் என்னும் வகையில் எழுதினேன். இப்படி மட்டும் கதையை முடித்தால் அவள் ஏதோ அந்தப் பயலின் கண்ணசைவில் ரசனை கண்டவள்போல் ஆகிவிடும். ஆகையால் யாருக்கும் தெரியாதபடி, அந்தப் பயலுக்கு மட்டும் தெரியும்படி, அவனைக் காப்பாற்றி விட்டு, காறித்துப்பியபடியே நடந்தாள் என்று கதையை முடித்தேன். ஒரு நிகழ்ச்சியை, உள்ளது உள்ளபடிச் சொல்லல் நடப்பியல், அதையே நடப்பியலுக்குப் புறம்பாகாதபடி நடக்கும் வகையில் சமூகத்திற்குப் பயன்படும் வகையில், மனிதனை மேன்மைப்படுத்தும் வகையில் முடிப்பது யதார்த்தம். சென்னை வானொலி நிலையத்தில் ‘தாய்மை’ என்ற தலைப்பில் ஒலிபரப்பாயிற்று.

பதிலடி

நான் இருக்கும் திருவான்மியூருக்கருகே என் வீட்டுப் பக்கமாக ஒரு குடிசை. அங்கே ஒரு குடிகாரக் கணவன். அவன் மனைவி பிள்ளை குட்டிகளோடு இருந்தான். இருவருமே இளம் வயதினர். புருஷன் குடிகாரன். வேலைக்கு வேறு போக மாட்டான். இவள் வீட்டு வேலைக்குப் போய்விட்டு வருகிற எஞ்சிச் சோறை சாப்பிட்டு விட்டு, இவள் சம்பாதிக்கிற பணத்தில் குடிப்பது தான் அவனுடைய ஒரே வேலை. குடிகாரன் சமயத்தில் மிகவும் நல்லவன். ஆனால், தொடர்ச்சியாக அவன் குடித்ததால், அவனின் நல்லவனைக் காண்பது கடினம். இரவில் திடீரென அவன் மனைவி வெளியே அலறி அடித்து அங்குமிங்குமாக ஓடுவாள். இவன் கையில் கம்பை வைத்துக்கொண்டு அவளை விரட்டுவான். “என்னைக் காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்று அவள் அலறுவாள். பக்கத்தில் உள்ள அனைவரும் பங்களாக்காரர்கள். லைட்டைப் போட்டு வேடிக்கை பார்த்து, அந்தச் சம்பவத்தை லைட்டாகத்தான் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் எனக்கோ மனசு கேட்கவில்லை. பல தடவை நான் வெளியே வந்து, அவனைத் திட்டியிருக்கிறேன். போலீசில் பிடித்துக்கொடுப்பதாக மிரட்டியிருக்கிறேன். அவன் அடங்கிப் போவான். அவள் அழுது தீர்ப்பாள். இப்படிப்பட்ட சூழலில், அந்தக் குடிசைக்குள் வேலை தேடி அவள் தாய்மாமன் வந்தான். அங்கேயே தங்கி ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இவனும் சின்ன வயசுக்காரன். ஒருநாள் வழக்கம் போல், சாராயப் புருஷன் மனைவியை இரவில் துரத்த, இந்தத் தாய்மாமன், அவள் கணவனை புடம்போட்டு விட்டான். நான் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினேன். ஆனால் அந்த பெண் தாய்மாமன் தூண்டுதலில் கணவன் மீது போலீசில் புகார் கொடுக்க, புகார் கொடுத்த நாள் மாதக்கடைசி என்பதால் போலீசார் புருஷன்காரனை வாரிக்கொண்டு போய் விட்டார்கள். மறுநாள் அந்தப் பெண் என்னிடம் கண்ணீரும் கம்பலையுமாக வந்தாள். கணவனை போலீசில் ஒப்படைத்ததற்காக, அழுது தீர்த்தாள். அவனை எப்படியாவது மீட்டுத் தாங்க சார் என்று என்னிடம் மன்றாடினாள். நானும் என் பதவியைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு டெலிபோன் செய்து, அவனை விடுதலை செய்யும்படி கேட்டுக் கொண்டேன். இந்தப் பெண், கணவனுக்கு மசால் வடைகளையும், பீடிகளையும் வாங்கிக் கொண்டு ஆசையோடு போயிருக்கிறாள். அவளுடைய அன்பைப் புரியாத அந்தப் பயல், போலீசாரிடம் அவள் தாய்மாமனை வைத்துக் கொண்டிருப்பதாகவும், இருவரும் சேர்ந்து, தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் சொல்லியிருக்கிறான். இந்தப் பின்னணியில் அங்கிருந்த போலீசார், கணவனை மீட்கப் போன இந்தப் பெண்ணை, கண்டபடி திட்டியிருக்கிறார்கள். ‘விபச்சாரி’ என்று ஏசியிருக்கிறார்கள். விபச்சாரத்தடை சட்டத்தில் வழக்குப் போடப் போவதாகவும் பயமுறுத்தியிருக்கிறார்கள். பிறகு அவனையும் விடுதலை செய்துவிட்டார்கள். ஆனால் இந்தப் பெண் புருஷனை சேர்க்க மறுத்துவிட்டாள். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் கேட்கவில்லை. தாய்மாமனோடு வாழத் துவங்கினாள். என்னைக் கண்டதும் தலையைக் குனிந்து கொள்வாள். இரண்டு மாதங்களில் தாய்மாமன் நடுரோட்டில் அவளை உதைத்திருக்கிறான். பயங்கரமாக அடித்திருக்கிறான். அக்கம்பக்கம் இருந்த சேரிப்பெண்கள், “புருஷனைத் துரத்திய அவளுக்கு சரிதான்” என்பதுபோல், சும்மா இருந்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட நான், ஒருதடவை அவளை வழியில் பார்க்கும்போது, “தாய்மாமனோடாவது ஒழுங்காகக் குடித்தனம் செய்யக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு அவள் எனக்குப் போட்ட பதில் கேள்வி, கிட்டத்தட்ட பகவத் கீதையைப் படித்ததுபோல் இருந்தது.

“ஏன் சாரே, ஒருத்தி ஒரு ஆம்புடையானோட வாழனும்னா, அவன் கொடுக்கிற உதையை வாங்கிட்டுத்தான் இருக்கணுமா? ஒருத்தனோடு அடிபட்டுகிட்டு தான் வாழனும்னா, அது இன்னா கொடும்பம்? இன்னா வாழ்க்கை? அந்தக் கசமாலமும் அடிச்சான் இந்தக் கசமாலமும் அடிச்சான். இனிமேகாட்டி எனக்கு எந்த கசம்மாலமும் வேணாம்.”

இந்தப் பெண் இப்போது எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. அவள் கேட்ட கேள்வி என்னை இன்னும் உறுத்திக் கொண்டே இருக்கிறது. கணவன்காரன், பிறகு அவளிடம் எவ்வளவோ கெஞ்சியும், அவள் அவனோடு வாழ சம்மதிக்கவில்லை. இதை வைத்து, “பதிலடி” என்று ஒரு சிறுகதையை குங்குமம் பத்திரிகைக்கு அனுப்பினேன். அப்படியே பிரசுரித்தார்கள்.