எனது கதைகளின் கதைகள்/010-022

10
அனுபவ படிப்பினை

னக்கு எல்லோருக்கும் ஏற்படுவது போன்ற ஒரு அனுபவம் ஏற்பட்டது, அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதே, அனுபவத்தைவிட முக்கியம் என்று, லியோ டால்ஸ்டாய் சொன்னதுபோல், அந்த அனுபவத்தில் எனக்கொரு மகத்தான படிப்பினை கிடைத்தது. அது என் வாழ்க்கை அணுகும் முறையையும், எதிர்காலப் படைப்புகளையும் மாற்றக்கூடியது. ஆகையால் இந்த இதழில், என்னென்ன எழுதினேன் என்பதைவிட, என்ன எழுதப் போகிறேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

எதிர்கால நாவல்

சென்ற டிசம்பர் மாத மத்தியில் குடியரசுத் தலைவர் திரு. ஆர்.வி. அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வைர விழாக் கூட்டத்தில் உரையாற்றுவதை செய்தியாக்குவதற்காகச் சென்றிருந்தேன். வயலுக்கு களையெடுத்தது மாதிரியாயிற்று, மாட்டுக்கு புல் வெட்டியது மாதிரியும் ஆயிற்று என்பது போல், அங்கே படிக்கும் என் மகனை கடமையாற்றும் சாக்கில் பார்க்கப்போகிற மகிழ்ச்சியில் போனேன். இந்த மகிழ்ச்சியில், அதற்கு முன்பு மூன்று நாட்களாகச் சாப்பிடுவதில் ஒரு ஈடுபாடு இல்லாமல் போனதை உதாசீனம் செய்துவிட்டேன். பல்கலைக்கழகத்திலும் இரண்டு நாட்கள் இருந்தேன். உடம்பு ஒரு மாதிரி தோன்றியது. அந்த இரண்டு நாட்களிலும் காபி, பன் தவிர எதையும் சாப்பிடவில்லை. அதைப்பற்றி அலட்டிக்கவும் இல்லை. அங்கிருந்து மதுரை பாத்திமா மகளிர் கல்லூரிக்குச் சென்று, கண்ணகி கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றியதாகக் கூறப்படும் பேச்சு வழக்கு, கல் கொண்டு வந்த செங்குட்டுவன், ஆகிய அபத்தங்களால் தமிழகம் மக்காகியிருப்பதை மாணவிகளுக்கு எடுத்துரைத்தபோது, அவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. பேராசிரியை சக்திபெருமாள் அவர்கள், கொடுத்த விருந்திலும் சாப்பிடவில்லை. வழக்கம்போல் இதையும் பொருட்படுத்தாமல், வானொலி நிலையத்திற்கு என் நண்பர்களைப் பார்க்கப்போகும் போது, மேகநாதன் என்ற நண்பரிடம் எதேச்சையாக என் பிரச்னையைச் சொன்னேன். உடனடியாக அவர், தனது மைத்துனரான வயிற்று நோய் நிபுணரிடம் கூட்டிச் சென்றார். அங்கே ரத்தத் துளிகளோடு வாந்தி எடுத்தேன். அந்த நிபுணர், எனக்கு மஞ்சக்காமாலை வந்திருக்கிறது என்றும், இதற்குமேலும் தாமதித்தால் சிறுநீரகம் கெட்டுவிடும் என்றும் - ஒருவேளை இப்போதே கெட்டிருக்கலாம் என்றும் சொன்னதுடன், என்னை ஒரு நர்சிங்ஹோமில் சேர்த்துவிட்டார். நிலைய இயக்குனர் திருவேங்கடம் உட்பட பல அன்பர்கள், காட்டிய அன்பில் நெகிழ்ந்தேன். நோயின் வலிமையை குறைத்து மதித்துவிட்டேன். மஞ்சக்காமாலைதானே என்ற மெத்தனத்தில் சென்னைக்கு வந்தேன். மகாராஷ்டிர ஆளுநர் திரு. சி. சுப்ரமண்யத்தின் பேரனும், பிரபல வயிற்று நோய் நிபுணருமான திரு. பழனிச்சாமியிடம் சென்றபோது, அவர் சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார். எதிர்பார்த்ததுபோல் மஞ்சக்காமாலை 20 நாளாகியும் கூடியதே தவிர குறையவில்லை. இந்தப் பின்னணியில், எனக்கு ஆஸ்திரேலியா ஆன்டிஜீனா என்ற விஷக்கிருமியின் தாக்குதல் இருப்பதாக ஒரு சோதனை கூறியது. எனது உறவினர் டாக்டர் கலைவாணனிடம், “வெளிநாட்டுக் கிருமியப்பா” என்ற விளையாட்டாகச் சொன்னபோது, அவரோ “ஐயோ இது கான்சருக்கு ஆரம்பமாகக் கூட இருக்கலாம்” என்று உண்மையிலேயே பதறிச் சொன்னார். நான் துடித்துப் போய் விட்டேன். இறக்கப் போவது போல, உடனடியாக டாக்டர் பழனிச்சாமியிடம் சென்று, “அப்படியா” என்று கேட்டேன். அவரும் புன்முறுவல் செய்யாமல் பேசாமல் இருந்தார். “எதற்கும் ஒரு ஸ்கானிங் எடுங்கள்” என்று பட்டும் படாமலும் சொல்லிவிட்டார். அதாவது எனக்கு வந்த மஞ்சக் காமாலை கான்சரின் துவக்கமாக இருக்கலாம் என்பது மாதிரியான ஒரு அனுமானத்தைக் கொடுத்தார். எனக்கோ உடனடியாக சோதனை செய்து, அப்படியில்லை என்றாக வேண்டும் என்ற துடிப்பு. ஆனால் ஸ்கானிங் எடுப்பதற்கோ, மூன்று நாள் இடைவெளி இருந்தது. இதற்கிடையே இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த ஒரு கட்டுரையும் ஆஸ்திரேலிய கிருமி கேன்ஸரின் முதலீடு என்பதை உறுதிபடுத்தியது. நான் என்ன பாடுபட்டிருப்பேன் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையும், எழுதிய எழுத்தும், பொய்யாய், பழங்கனவாய் போனதுபோல் தெரிந்தது. வாழ்க்கையின் வரவுசெலவு கணக்கைப் போட்டுப் பார்த்தால் ஒரு வெறுமையே மிஞ்சியது. வாழ்ந்ததெல்லாம் வீண் என்பது மாதிரி; ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பிலே மரணம் பிறந்திருக்கிறது என்று தெளிவாகத் தெரிந்தபோதிலும் மனிதன் ஆடுகின்ற ஆட்டமும், (அதாவது நான்தான்) குதித்த குதியும், பரிகாசமாகத் தோன்றின. இதுவரை புரியாத ஒரு உண்மை புலப்பட்டது. மரம் செடி விழுந்தால் கூட, விறகாகும். ஆனால் மனிதன் இறந்தாலோ, ஒருபிடிச் சாம்பலாகிறான். இந்தப் பின்னணியைப் பார்க்கின்றபோது நமக்கப்பால் ஏதோ ஒரு சக்தி மட்டுமே நிரந்தரமாக நிற்கக்கூடியது என்ற எண்ணம் வந்தது. இந்த எண்ணம் எல்லோருக்கும் ஏற்படும் தான். ஆனால் மரணத்தின் கோரப்பிடியில் இருப்பதாக நினைக்கும் ஒருவருக்கு வந்தால் அது எப்படியிருக்கும் என்பதை, எழுத்தில் இயம்ப இயலாது. வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவலை பல ஆண்டுகளாகப் படித்திருந்தாலும், அதன் புதிய தாத்பரியம் இந்தக் காலக்கட்டத்தில்தான் தெரிந்தது. நல்ல வேளையாக அப்படிப்பட்ட கிருமி போய்விட்டதாகவும், வயிற்றில் அத்தகைய நோய்க்குரிய (ஐயோ அதன் பெயரைச் சொல்லவே பயமாக இருக்கிறது) எதுவும் இல்லை என்றும் சோதனைகளில் தெரிந்து விட்டது. நாளாக நாளாக ஆன்மீக உணர்வு போய் “உங்களுக்கு பழையபடியும் கொழுப்பு வந்துவிட்டது” என்று என் மனைவி சொல்லும் அளவுக்கு, உணர்வுகள் மாறிவிட்டன. நான் திடுக்கிட்டேன். ஒருவாரத்திற்கு முன்பு இருந்த வாழ்க்கை பற்றிய அனுமானத்தை மீண்டும் மாயை வந்து பற்றிக் கொண்டதே ‘என்று பழைய உணர்வுகளுக்கு என்னை ஆட்படுத்தப் பார்த்தேன். இதிலிருந்து தெரிந்து கொண்டது, சங்கடங்கள், சஞ்சலங்கள் வரும்போது, ஒவ்வொருவரும் தனக்கு ஏற்படும் உணர்வுகளை எழுதி வைத்தால், அதுவே ஒரு காவியமாகும். நிலையற்ற வேளைக்குவேளை மாறுகின்ற மனித உணர்வுகளை, அத்தகைய டயரி, பரிகாசம் செய்து பக்குவப்படுத்தும். இந்தச் சமயத்தில் குசலம் விசாரிக்க வருவார்கள் என்று எதிர்பார்த்த சில நண்பர்கள் வரவில்லை. எதிர்பாராத சகாக்கள் வந்தார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பேராசிரியர் பாக்கியமுத்து, உடல்நலக்குறைவிலும், உச்சி வெயிலில் என்னைப் பார்த்தார். தில்லி தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் திரு. விஸ்வநாதன், 60 வயதைத் தாண்டிவிட்டாலும் கண்தெரியாத இரவில் தட்டுத்தடுமாறி என் வீட்டிற்கு வந்தார். இந்த இரண்டு பெரியவர்களும் என்னைவிட்டுப் பிரிந்தபோது, அவர்களின் முதுகுகளையே பார்த்துக் கொண்டு, அதேசமயம், அவர்களோடு சிறிது நடந்து வழி அனுப்பமுடியாத நிலையில் இருந்த நான், அல்லோகல்லோலப் பட்டேன். எந்தவிதப் பிரதிபலனும் இல்லாத அவர்களின் தூய்மையான அன்பு, வாழ்க்கை என்பது அன்பு ஒன்றையே அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டைப் பதித்தது. நட்சத்திரங்கள் ஒன்றையொன்று ஈர்ப்பதுகூட அன்பால் தான். செடிகொடிகள் வளருவது கூட சூரியசக்தியின் அன்பால்தான். இத்தகைய அன்பு மானிடத்திடம் ஏன் அதிகமாக இல்லை என்ற ஒரு ஆய்வு நோக்கையும் ஏற்படுத்தியது.

சென்னை மயிலையில் வாழும் மாமுனிவர் குறிஞ்சி சுந்திர சாமிகளை நானும் என் துணைவியாரும் மருத்துவமனைக்குப் போய்விட்டு வரும் வழியில் பார்த்தோம். மரண விளிம்பில் இருக்கும் ஒரு நோயாளியாக அவரை நான் நோக்கினேன். காலையில் எட்டு மணிக்கு பத்மாசனம் போட்டு இரவு எட்டு மணி வரை அப்படியே அமர்ந்திருக்கும் இந்த எண்பது வயது முனிவர் எனக்கு ஆறுதல் கூறியதோடு, ஒரு எலுமிச்சம் பழத்தையும் கொடுத்து இது சுருங்கச் சுருங்க உன் நோயும் போய்விடுமென்றார். எனக்கு இது ஒரு பெரிய மனோதிடத்தைக் கொடுத்தது.

நான் படுத்து விட்டால் இலக்கிய உலகமே துடித்துப் போகும் என்று நினைத்தேன். சென்னை வானொலி நிலையச் செய்திப் பிரிவே இயங்காது என்ற மாய எண்ணம் எழுந்தது. அந்த மாதிரி எந்தப் பிரளயமும் ஏற்படவில்லை. ஒருவேளை மரித்திருந்தால் ஒரு சினிமா நடிகையின் கல்யாணச் செய்திக்குக் கீழே, ஒரு சின்னச் செய்தி வரலாம். அதுவும் எனக்கு சலுகை காட்டுவது போல்.

இந்தப் பின்னணியில், ஒரு நாவல் எழுதலாம் என்று இருக்கிறேன். ஒருவருக்கு நோய் வருவதோ, அல்லது வருவதாக அச்சுறுத்துவதோ சாதாரண சம்பவம்தான். ஆனால் சாதாரண சம்பவத்தையும், அசாதாரணமாகச் சொல்ல முடியும் என்ற தாக்கத்தை நோய்க் காலத்தில் நான் படித்த ஒரு நாவல் ஏற்படுத்தியது. ஞானபீடப் பரிசு பெற்றவரும், காங்கிரஸ், ஜனதா தள பெருந்தலைகள் மோதிய கர்நாடக மாநில தார்வார் தொகுதியில், எழுத்தாளர் என்ற ஒரே காரணத்திற்காக 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவரும், ஒரு தேவதாசியைத் துணிந்து மணந்தவருமான சிவராம் கரந்தின் “எல்லாம் அழிந்த பிறகு” என்ற கன்னட நாவலின் தமிழாக்கத்தைப் படித்தேன். பேராசிரியர் சித்தலிங்கய்யா, மொழி பெயர்ப்பு என்ற எண்ணம் ஏற்படாதவகையில் அதை அழகாக இயல்பாகச் செய்திருந்தார். சராசரிக்கு சற்றே மேற்பட்ட ஒருமனிதர், குடும்பத்தைத் துறந்து, தன்னந்தனியாக வாழ்ந்தாலும் எவ்வளவு மனிதாபிமானியாக இருந்தார் என்பதை சித்தரிக்கும் நாவல். அந்தப் பாத்திரத்தின் மனிதாபிமானம் நமக்கும் இருக்கும். வானத்தை வில்லாய் வளைக்கும் அளவிற்கான மனிதாபிமானமல்ல. நம்மைப் போன்ற நல்லவர்களின் மனிதாபிமானத்தைப் போன்றதுதான். அதாவது கதைக்குரிய “கிளைமாக்ஸ் மனிதாபிமானமல்ல” ஆனாலும் சிவராம் கரந்த், அதைச் சொன்ன விதம் இருக்கிறதே, அது ஒரு சராசரி மனிதனையும் தன் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர வைக்கக்கூடியது. இந்தத் தாக்கத்தில், எனது அனுபவத்தை மையமாக வைத்து நாவல் எழுதப்போகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=எனது_கதைகளின்_கதைகள்/010-022&oldid=1150096" இலிருந்து மீள்விக்கப்பட்டது