எனது திருமணப் பரிசு/ருக்மணி கல்யாணம்

ருக்மணி கல்யாணம்

அதோ! உயர்ந்த உருவம், நீண்ட மீசையும்கொண்டு மிடுக்கான தோற்றத்துடன் வரும் போலீஸ் பொன்னுசாமியை, அறியாதார், இரார்.

போக்கிரி! சாக்கிரி! கொலைகாரன், கொள்ளையடித்தவன்! எல்லாம் அவருக்குத், துரும்புபோல. விடமாட்டார்! திறமையைப் பாராட்டி மெடல்கள்கூட அளிக்கபட்டிருப்பவர்!!

அவருக்குச் சட்டம் என்றால் சட்டம்தான்.—அவ்வளவு கடமையுள்ளம் கொண்ட நல்லவர். யாருக்கும் பணியமாட்டார். இலஞ்சம், ஊழல். இதெல்லாம் அவருக்கு வேம்பு. அப்படி வாங்குவதால், அரசாங்கம் தண்டிக்கும் என்கிற பயத்தைவிட, நாளையதினம் இறந்த பிறகு நடக்குமே 'எமதர்மனின் விசாரணை' அதற்காசு மிகவும் அஞ்சுபவர்! நெற்றியில் பளபள வென்று மின்னும் நாமமே சொல்லும், அவர் எவ்வளவு பக்திமான் என்பதை!! "யாராயிருந்தா, நமக்கென்ன சார்? டூட்டின்னா டூட்டிதான்! பணக்காரனாயிருந்தா அவன் வீட்டிலே பலே கில்லாடின்னா, இரண்டு குத்திலே அலறனும்," என்று துணிச்சலோடு சொல்வார். ஆனால். கோயில் குருக்களைக் காணும்போது, போலீஸ் கொப்பியை கழட்டி விட்டு, அவர் கும்பிடத் தவறமாட்டார்! டி.எஸ். பியை விட, அய்யருக்கு போலீஸ் பொன்னுசாமியிடமிருந்து அதிக மரியாதை கிடைக்கும்!! அவ்வளவு, சனாதன நம்பிக்கையுள்ளவர்.

அவருக்கு இப்போது, ஒரு சிக்கல்! பக்கத்து கிராமத்துக்கு ஒரு கேசைப் பிடிக்கப் போகவேண்டும்—கொலைக்கேஸ் அல்ல! கலியாணக் கேஸ்!! ஆமாம் முதல்தாரம் இருக்கும்போது, இரண்டாம்தாரம் செய்து கொள்ள ஒருவர் முனைவதாகப் போலீஸ் இலாகாவுக்குத் தகவல் எட்டியிருக்கிறது. சட்டம் என்றால் சட்டம் தானே, அவருக்கு. அதனால் புறப்படப்போகிறார், கிராமத்துக்கு. சப்-இன்ஸ்பெக்டர், சம்பத்து ஒரு தினுசான ஆசாமி! அவருக்கு, பொன்னுசாமியைப்பற்றி, அதிகம் தெரியும்!!. கொஞ்சம், குறும்பு சுபாவம் உள்ளவர்.

அதனால் பொன்னுசாமி 'ஸ்டேஷனிலிருந்து' விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குப் போகும்போது கூப்பிட்டார் அவரை.

"பொன்னுச்சாமி!"

"சார்...!"

"உனக்கு என்ன 'டூட்டி' ஞாபகம் இருக்கிறதா?"

"கிராமத்துக்குப் போய் இரண்டாம்தாரக் கலியாணத்தைத் தடுத்து அந்த ஆளை 'அரஸ்ட்' செய்து கொண்டு வரவேண்டிய டூட்டி சார்...!"

"ஊம்! உம்முடைய பத்து வருஷத்து சர்வீசிலே சட்டத்தை மீறிய யாரையும் நீர் பிடிக்காமல் விட்ட துண்டா?"

"கிடையாது சார்! இவருக்குச் சட்டம்னா சட்டம் தாங்க!"

"அதை மீறுகிற யாரையும் விடமாட்டீரே?" "அண்ணன் தம்பின்னாகூட விடமாட்டேங்க—முதலிலே கையில் விலங்கைப் பூட்டிடுவேன்"...

"ரொம்ப சரி! ஒரு பெண்டாட்டி இருக்கும்போது, இன்னொரு பெண்டாட்டியைக் கட்டிக்கிறது தப்பு தானே?"

"சட்டப்படி, தப்பு சார்—தப்பு"

"சரி, இது என்ன? பாரும்"

பார்த்தார், பொன்னுசாமி ஏன் விழிக்கிறார் அப்படி? ஏன் அவர் முகம் ஒரு தினுசாகப் போய்க்கொண்டிருக்கிறது? முகத்திலே ஏன் அவ்வளவு வியர்வை? அப்பப்ப, மிகவும் சோகத்துடனல்லவா காணப்படுகிறார்!

விஷயம் இதுதான் ! பெரிய தெரு பீமராயர் வீட்டில் நாளைக்கு ருக்மணி கலியாணமாம்! விசேஷ போலீஸ் பந்தோபஸ்து வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார், பீமராயர். ருக்மணி என்பது பீமராயருடைய பெண்ணல்ல; சாட்சாத் எம்பெருமான் கிருஷ்ணபரமாத்மாவினுடைய மனைவி ருக்மணிதான்! அந்த ருக்மணிக்கு, மீண்டும் கலியாணம்.

நோட்டீசைக் காட்டிக் கேட்கிறார் சப் இன்ஸ் பெக்டர்—'என்ன பொன்னுச்சாமி! பாமா இருக்கப்ப, இந்தக் கிருஷ்ணன் இன்னொரு பெண்ணைக் கட்டிக்கலாமா?'

"கிருஷ்ணன்....சாமிங்க"

"சாமி, தப்புதாண்டா செய்யலாமா பொன்னுச்சாமி! சட்டம்னா சட்டம்தானே?

கேட்கிறார், சப்—இன்ஸ்பெக்டர்! விழிக்கிறார் பொன்னுசாமி. பாவம் என்ன பதில் சொல்லுவார், அவர்! எந்தச் சாமிதான், ஒரு மனைவியோடு வாழ்வதாக இருக்கிறது, நமது புராணத்தில்!! ஊம்....'அரெஸ்டு' செய்வதென்றால், சட்டப்படி போலீஸ் பொன்னுச்சாமி, எந்தக் கடவுளைத்தான் விட்டுவிடமுடியும்? சிக்கலான விஷயம் தானே! திகைக்கும் பொன்னுச்சாமியால், என்ன பதில் சொல்லமுடியும்! திகைக்கிறார்.