எனது நாடக வாழ்க்கை/அண்ணாவின் சந்திரோதயம்
பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய முதல் நாடகம் சந்திரோதயம். அஃது காஞ்சிபுரத்தில் ஒத்திகைப்போல் ஒருமுறை நடைபெற்றது, ஈரோட்டில் பெரியார் அவர்கள் முன்னிலையில் தான் அந்நாடகத்தின் உண்மையான அரங்கேற்றம் நடைபெறப் போகிறது என்று அண்ணாவே என்னிடம் கூறினார். அண்ணாவிடம் , பற்று கொண்டிருந்த எங்கள் நடிகர்களுக்கெல்லாம் ஒரே ஆனந்தம். நாடகத்தில் அண்ணாவே முக்கிய வேடம் தாங்கி நடிக்கப் போகிறார். என்பதை அறிந்ததும் எங்களுக்கெல்லாம் எல்லையற்ற மகிழ்ச்சி. நாடகத் தேதியை எதிர்பார்த்துக் காத்தி திருந்தோம். 19-11-43இல் சந்திரோதயம் நடைபெறப் போவதாக விளம்பரம் செய்யப் பெற்றது
தேதியும் நெருங்கியது. சந்திரோதயம் நாடகத்திற்கு முதல் நாள் எங்கள் சம்பூர்ண இராமாயணம் நடைபெற்றது. காலை 6 மணிவரை நடைபெறும் நாடகமல்லவா? நாடகம் முடிந்ததும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, காலை எட்டு மணிக்கே சாப்பாட்டை முடித்துக் கொண்டு எங்கள் நடிகர்கள் அஃனவரும் நன்றாக உறங்குவது வழக்கம். ஆனால், அன்று மேடையில் சந்திரோதயத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதால், எங்களில் பெரும்பாலோர் உறங்கவில்லே. இரவு நாடகத்திற்காக நாடக மேடையில் தேவையான காட்சிகள்-நடிகர்களுக்குரிய உடைகள் யாவற்றையும் ஒழுங்குபடுத்துவதில் பெரும் பங்கு கொண்டோம்.
பெரியார் முன்னிலையில்
சந்திரோதயம் நடிகர்களுக்கு ஒப்பனை செய்வதில் நாங்கள் எல்லோரும் பங்கு கொண்டோம். சி. வி. இராஜகோபால் எம். எல். சி.,வி. எம். அண்ணாமலை எம். எல். ஏ, ஈழத்து அடிகள் முதலியோர் அன்று நாடகத்தில் நடித்ததாக நினைவிருக்கிறது. மற்றவர் களைப்பற்றி எனக்குச் சரியாக நினைவில்லை. நாடகம் நன்றா யிருந்தது, அண்ணாவின் ஜமீந்தார் நடிப்பு அற்புதமாக அமைந்தது. நாடகப் பேராசிரியர் பம்பல் சம்மந்த முதலியாரைப் போலவே அண்ணா நாடகாசிரியராகவும் நாடகத்தில் முக்கியப்பொறுப்பேற்றது எங்களுக்கெல்லாம் பெருமை அளிப்பதாக இருத்தது. கோவை விஞ்ஞான மேதை ஜி. டி, நாயுடு அவர்கள் அன்று தலைமை தாங்கியதாக நினைக்கிறேன். பெரியார், நாடகத்தைப் பிரமாதமாகப் பாராட்டினார். என்னையும் சில வார்த்தைகள் பேசும்படியாகக் கேட்டுக் கொண்டார். பெரியார் அவர்களின் ஆணைப்படி நானும் பேசினேன். இப்படியே தொடர்ந்து சில நாடகங்களில் அண்ணா அவர்கள் நடித்துவிட்டால் பரம்பரை நடிகர்களான எங்களையெல்லாம் மிஞ்சி விடுவார் போல் தோன்றுகிறது. நாடகத்தையே தொழிலாகக் கொண்ட நாங்கள் பல நாட்கள் பயிற்சி பெற்று, ஒத்திகைகள் நடத்தி அதன் பிறகு நாடகங்களை நடிக்கிறோம். அத்தகைய வாய்ப்பும் வசதியும் இல்லாமல், பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவரும் திராவிட நடிகர் கழகத்தினர் இன்று நடிப்பதைப் பார்த்தால், எங்களை போல் நிரந்தரமாகவே இவர்கள் நாடகத்துறையில் ஈடுபடுவர்களானால், நாங்களெல்லாம் இந்தத் தொழிலையே விட்டுவிட வேண்டியதாக இருக்குமென நினைக்கிறேன்” என்று கூறினேன். அவ்வளவு அருமையாகவும் இயற்கை யாகவும் நடித்தார் அறிஞர் அண்ணா.
என் காலைத் தூக்கி மேலே வை
நாடகத்தில் ஒரு கட்டம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அண்ணா ஜமீந்தராக வந்து ஜமீந்தாரிசத்தின் ஆணவம், சோம்பேறித்தனம், மற்றவர்களை அலட்சியமாகக் கருதும் மனப் போக்கு அத்தனையையும் அப்படியே அப்பட்டமாகக் காட்டினார். எதிரே நின்ற வேலையாளிடம், “அடே, என் காலைத் தூக்கி மேலே வை” என்று சொல்லி, காலைத் தூக்குவதற்குக் கூடப் பண மூட்டைகளுக்குப் பணியாட்கள் வேண்டுமென்ற உண்மையை மிக அழகாகக் காட்டினார். சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டு எதிரேயிருந்த முக்காலியைச் சுட்டிக் காட்டி அவர் வெளிப்படுத்திய அந்த மெய்ப்பாடு பிரமாதமாக இருந்தது.
எல்லோரும் பாராட்டிப் பேசிய பிறகு நன்றி கூற வந்த அண்ணா எங்களைப் பாராட்டினார். முத்தமிழ்க்கலா வித்துவ ரத்தின டி. கே. எஸ். சகோதரர்களின் நாடக அரங்கில், அவர்களுடைய அற்புதமான காட்சிகளோடு நடிக்க எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பினை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம், நான் நன்றாக நடித்ததாகப் பாராட்டுப் பெறுவதற்குரிய வகையில் ஏதாவது நடித்திருந்தால் அதற்கெல்லாம் டி.கே. எஸ். சகோதரர்களின் நடிப்பைத் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பார்த்து வந்ததே காரணமாகும் என்பதை மிகுந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன் என்று கூறினார் .
அவருடைய அந்த நன்றியுரை எங்களுக்குப் பாராட்டாக அமைந்ததோடு அறிஞர் அண்ணா அவர்கள் எங்கள் பால் வைத்துள்ள அன்புக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்கியது.
நாடகம் கேட்டேன்
சந்திரோதயம் முடிந்த மறுநாள் நாங்கள் அண்ணாவிடம் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது நான் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டேன்.
‘சந்திரோதயம்’ போன்ற அப்பட்டமான பிரசார நாடகங்களை நாங்கள் நடிக்க இயலாது. எங்களைப் போன்றவர்கள் நடிக்க இயலாத கருத்துக்கள் இந்த நாடகத்தில் இருக்கின்றன. எனவே, பொதுவான சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்களை வைத்து ஒரு நாடகம் எழுதித்தாருங்கள்; நடிக்கிறோம்” என்றேன். விரைவில் எழுதித் தருவதாக வாக்களித்தார் அண்ணா. ஆனால் அந்த அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமிக்குக் கிடைத்தது. அவற்றைப் பின்னல் கூறுவேன். இரு குழுவினருக்கும் பாராட்டு
அன்று மாலை 20-11-48 இல் காஞ்சி திராவிட நடிகர் கழகத்தார்க்கும் எங்களின் ஸ்ரீ பால சண்முகானந்த சபையார்க்கும் கோவை மாவட்டத் திராவிடக் கழகத்தின் சார்பில் ஒரு தேநீர் விருந் தும் பாராட்டும் நடைபெற்றன. இருகுழுவினரும் கலந்து கொண்டனார். பெரியார், பெருமாள் முதலியார் எம். ஏ.எல். டி. பழைய
கோட்டை அர்ச்சுனன் முதலியோர் பாராட்டிப் பேசினார். நான் நன்றி கூறுகையில்,
“இராமாயணம், சிவலீலா, கிருஷ்ணலீலா, கந்தலீலா, மகாபாரதம் முதலிய புராண இதிகாச நாடகங்களையே பெரும் பாலும் நடித்து வரும் எங்கள் குழுவுக்கும், நேற்று சந்திரோதயம் என்னும் ஒர் அருமையான சீர்திருத்த நாடகத்தை நடித்துப் பெருமை பெற்றுள்ள அண்ணா அவர்களின் திராவிட நடிகர் குழுவுக்கும் சேர்த்து இந்தப் பாராட்டை நடத்தியது, கோவை மாவட்டத் திராவிடக் கழகத்தின் பெருந்தன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. ஆனால் நாங்கள் இந்தப் பாராட்டுக்கு தகுதியுடையவர்கள் அல்லர் என்பதை மிகப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினேன்.
எனக்கு அடுத்தபடியாக நன்றி கூற வந்த அறிஞர் அண்ணா அவர்கள் என் பேச்சை மறுத்தார்.
தோழர் டி. கே. ஷண்முகம், தாம் இந்த பாராட்டுக்குத் தகுதியுடையவர் அல்ல என்று கருதினார். அது அவருடைய அடக்கத்தைக் காட்டுகிறது. அவர் கூறிய நாடகங்களுக்காக மட்டும் இந்தப் பாராட்டினை வழங்கவில்லை. அன்றும் இன்றும் அவர்கள் நடத்தி வரும் குமாஸ்தாவின் பெண், வித்தியாசாகரர், பதிபக்தி, பம்பாய் மெயில், மேனகா, தேசபக்தி போன்ற சமுதாயச் சீர்திருத்த நாடகங்களுக்காகத் தான் பெரியார் அவர்கள் ஷண்முகம் குழுவினரைப் பாராட்டுகிறார். இனியும் பாராட்டுவார். எங்களைப்போல் முழுதும் சீர்திருத்தப் பிரசாரக் குழுவாக டி. கே. எஸ். குழு இருக்க வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை யென்பதை கழகத்தின் சார்பில் நான் சொல்லுகிறேன். அவர்களுடைய ஒளவையார் நாடகத்தில் புராணக் கற்பனைகள் சில இருந்தாலும் தமிழுணர்வினை ஊட்டும் சிறந்த நாடகமாக அது அமைந்திருப்பதை நாம் மறந்துவிடுவதற்கில்லை” என்று கூறிவிட்டுப் பெரியாரைப் பார்த்தார். பெரியார் அவர்கள் சிரித்துக்கொண்டே அதனை வரவேற்பது போல் தலையை அசைத்தார். அன்று அண்ணா அவர்கள் பேசிய அழகிய பேச்சு இன்னும் பசுமையாக என் நெஞ்சத்தில் நிலைத்திருக்கிறது.