எனது நாடக வாழ்க்கை/அரசியல் பிரவேசம்
1931-ஆம் ஆண்டில் தான் நாங்கள் அரசியல் விஷயங்களில் நேரடியாகத் தொடர்புகொள்ள ஆரம்பித்தோம். அன்னையார் இறந்த சில நாட்களில் பண்டித மோதிலால்நேரு இறந்ததாகச் செய்திப் படித்தோம். கும்பகோணம் காந்தி பார்க்கில் அவருக்காக ஒரு அனுதாபக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் நான் முதன் முதலாகப் பாரதி பாட்டுக்கள் பாடினேன். தஞ்சைக்கு வந்தபின், பகவத்சிங் டில்லி சட்டசபை யில் குண்டு போட்ட செய்திகளையும், அதுபற்றிய வழக்குகளையும் நாங்கள் தொடர்ந்து படித்து வந்தோம்.
திடீரென்று ஒருநாள் பகவத்சிங் தூக்கிலிடப்பட்ட செய்தியைப் பத்திரிக்கைகளிலே படித்தபோது எங்களுக்கெல்லாம் உள்ளம் குமுறியது. அரசியல் விஷயங்களில் மனத்தை ஈடு படுத்திக் கொண்டிருந்த எங்களுக்கு, இச்செய்தி அதிர்ச்சியைத் தந்தது. அன்று மாலே தஞ்சை பெரியகோயிலுக்கு அருகேயுள்ள மைதானத்தில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. தேச பக்தர் வேங்கடகிருஷ்ணபிள்ளை தலைமை வகிப்பாரென அறிவிக்கப் பெற்றிருந்தது. அப்போது எங்கள் கம்பெனியில் சின்னண்ணா டி. கே. முத்துசாமியும் என். எஸ், கிருஷ்ணனும் தீவிரவாதிகள். இருவரும் இணைபிரியாத தோழர்கள். நாடகமேடை சம்பந்தமான பொறுப்புகளானலும் சரி, வேறு எதுவானாலும்சரி, இருவரும் கலந்தே முடிவு செய்வது வழக்கம். அப்போதெல்லாம் நான் சுயேச்சையாக வெளியே செல்லும் வழக்கமில்லை. அன்று நடைபெறும் கண்டனக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் போல் என்னுள்ளம் துடித்தது. அன்று கூட்டம் நடைபெறாதென்றும், தடை செய்யப்பட்டிருப்பதாகவும் வதந்திகள் வந்தன. சின்னண்ணாவும் கலைவாணரும் கூட்டத்திற்குப் போயிருந்தார்கள். கூட்டத்தில் வேங்கடகிருஷ்ணபிள்ளை கைது செய்யப்பட்டார். பிரம்மாண்டமான கூட்டத்தைப்போலீசார் தடியடி கொடுத்துக் கலைத்தார்கள். சில அடிகள் சின்னண்ணாவுக்கும் கலைவாணருக்கும் கிடைத்தன. வீட்டுக்கு வந்து அவர்கள் இச்செய்தியை அறிவித்த, போது என்னால் தாங்க முடியவில்லை. உணர்ச்சி விவரிக்க இயலாததாக இருந்தது. என்னை ஈன்ற தாய்நாட்டிற்கு என்னால் இயன்ற பணியைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் மேலெழுந்தது. ஒரு முடிவுக்கு வந்தேன். மறுநாள் என்னுடைய மேனியைப் புனிதமான கதராடை அழகு செய்தது.
நாற்பத்தொரு ஆண்டுகள் கடந்தன. அன்று முதல் இன்று வரை நான் தொடர்ந்து கதராடைதான் உடுத்தி வருகிறேன். தொடக்கத்தில் சாக்கு, சமுக்காளம் இவற்றை உடுத்துவது போன்ற சிறு உணர்வு தோன்றியதுண்டு. ஆனால் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்த தேசிய உணர்ச்சிக்குமுன் இந்த மென்மை உணர்வுகளெல்லாம் பறந்தோடிவிட்டன. எங்கள் நாடகக் குழுவின் நெருக்கடியான காலங்களில் அதிகப் பணம் கொடுத்து உடைகள் வாங்குவதற்கும் இயலாதிருந்த எத்தனையோ சந்தர்ப்பங்களில் கதரே உடுத்துவது என்ற இலட்சியத்தை நிறைவேற்ற நான் பட்ட கஷ்டங்களெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன.
வாத்தியார் மீண்டும் விலகினார்
தஞ்சையிலிருந்து ஒருவகையாகத் தட்டுத் தடுமாறி மதுரைக்கு வந்து சேர்ந்தோம். பழைய நாடகங்களுக்கு வசூல் இல்லாததால் புதிய நாடகம் தயார் செய்யும்படி வாத்தியார் முதலியாரிடம் பெரியண்ணா வற்புறுத்தினார். ‘சுந்தர திரன்’ என்னும் ஒரு நாவல் நாடகம் பாடம் கொடுக்கப் பெற்றது. இரண்டொரு நாட்கள் ஒத்திகையும் நடைபெற்றது. அதற்குள் வாத்தியாரோடு சம்பளத் தகராறு ஏற்பட்டுவிட்டது. அதிகச் சம்பளம் கொடுத்தால்தான் இரவு நாடகத்திற்கு வரமுடியு மென்று வாத்தியார் கண்டிப்பாகக் கடிதம் எழுதியனுப்பி விட்டார். இந்தக் கடிதத்தைக் கண்டதும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் நேராக வாத்தியார் இருப்பிடம் சென்றார். கம்பெனியின் நிலையை உணராமல் அதிகச் சம்பளம் கேட்பது முறையல்லவென எவ்வளவோ எடுத்துக் கூறினார்.
வாத்தியாருக்கும் என். எஸ். கிருஷ்ணனுக்கும் வாக்கு வாதம் வளர்ந்தது. கடைசியாகக் கலைவாணர் வாத்தியாரைக் கண்டபடி பேசிவிட்டு வந்தார். அன்றிரவு மோகனசுந்தரம் நாடகம். முதல் மணியடிக்கும்வரை வாத்தியாரும், எம். கே. ராதாவும் வரவில்லை. பெரியண்ணா சுந்தரமுதலியார் வேடத்தைப் போடத் தொடங்கினார். அந்தச் சமயம் திடீரென்று ராதாவோடு வாத்தியார் வரவே பெரியண்ணா வேடத்தைக் கலைத்துவிட்டு ராதாவையே போடச் சொன்னார், மறுநாள் காலை வாத்தியார் கணக்குத் தீர்த்துக் கொண்டு கம்பெனியை விட்டு விலகிக் கொண்டார். அடிக்கடி இவ்வாறு கம்பெனிக்கு வருவதும் போவதுமாக இருந்த வாத்தியாரின் போக்கு எங்களுக்குப் பிடிக்க வில்லை. இருந்தாலும் என்ன செய்ய முடியும்? மேதைகள் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள்!