எனது நாடக வாழ்க்கை/சின்னண்ணா திருமணம்

சின்னண்ணா திருமணம்

பம்பாயிலிருந்து நாங்கள் திரும்பியதும் நாகர்கோவிலைச் சேர்ந்த வடிவீசுரத்தில் சின்னண்ணா டி. கே. முத்துசாமிக்கும் செல்வி கோலம்மாளுக்கும் 30.4.1937 இல் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

திருமணம் முடிந்தபின் எல்லோரும் எட்டையபுரம் சென்றோம், நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்றன. எட்டைய புரத்திலும் கோவில்பட்டியிலும் சில நாடகங்கள் நடத்தினோம். அடுத்து, திருநெல்வேலியில் புதிய புதிய முறைகளில் பிரமாதமாக விளம்பரம் செய்து, புதிய காட்சிகளுடன் பாம்பாய் மெயில் நாடகத்தை நடந்தினோம். முன்பெல்லாம் பம்பாய் மெயில் கம்பெனியின் முக்கிய நாடகங்களில் ஒன்றாகவும், வசூலைத்தரும் நாடகமாகவும் இருந்தது. இப்போது புதிய காட்சிகளோடு நடித்தும் என்ன காரணத்தாலோ அதற்கு வசூல் ஆகவில்லை. படுமோசமாக இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றன. மனதைத் தளர விடாமல் உற்சாகத்தோடு நடித்து வந்தோம்.

தேசபக்திக்குத் தடை

அப்பொழுது, நடத்தப் போகும் நாடகங்களே முன்னதாகவே அறிவிக்க வேண்டுமென ஒரு புதிய உத்திரவு கலைக்டரிடமிருந்து வந்தது. நாங்கள் நாடகங்களைக் குறித்து அனுப்பினோம். தேசபக்தி, கதரின் வெற்றி, ஜம்புலிங்கம் ஆகிய மூன்றுநாடகங்களை மட்டும் தடை செய்திருப்பதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ்காரர்கள் சட்டசபையைக் கைப்பற்றி, தலைவர் ராஜாஜி முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த சமயம் அது.  தேசியவாதிகள் அமைச்சர்களாக இருக்கும் நேரத்தில் தேசீய நாடகங்களுக்குத் தடையா? எங்கள் உள்ளம் குமுறியது. திருநெல்வேலி மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரின் பெயர் ராமமூர்த்தி என்று நினைவு. அவருடைய போக்கைக் கண்டித்து எங்கள் சார்பில் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறை வேற்றியது. சுதந்திரச்சங்கு என்னும் பெயரால் அப்போது சென்னையில் நடைபெற்று வந்த காலணா வார இதழ், கலெக்டரின் செயலைக்கண்டித்துத் தலையங்கம் எழுதியது. கல்லிடைக்குறிச்சி எம்.எல்.ஏ. திருமதி லட்சுமி சங்கரய்யர் எவ்வளவோ முயற்சி எடுத்துக் கொண்டார். எதுவும் பயனளிக்கவில்லை. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செலுத்துகிறது; ஆனால் மாவட்டத்தில் கலெக்டர் ஆதிக்கம் செலுத்துகிறார்! நாங்களும் என்னென்னவோ செய்து பார்த்தோம். நாடகத்தின் தடை நீங்கவே இல்லை. அப்போது விளம்பர அமைச்சராக இருந்த திரு. எஸ். ராமநாதன் எங்கள் பழைய நண்பர். நாங்கள் பெரியார் அவர்களோடு தொடர்பு கொண்ட நாள் முதலே எஸ்.ராமநாதனோடும் நெருங்கி பழகினோம். அவரும் எங்கள் தேசப்பக்தியைப் பார்த் திருக்கிரு.ர். எனவே, அவருக்குத் தனிப்பட்ட முறையில் நிலைமையை விளக்கி ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.

அதற்கு அவர் ஆறுதல் கூறிப் பதில் எழுதியிருந்தார். தங்களுக்கிருக்கும் தற்போதைய அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்வதாக அறிவிக்கப்பட் டிருந்தது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. தேசபக்தியையும் கதரின் வெற்றியையும் திருநெல்வேலி மாவட்டத்தின் எந்த ஊரிலும் நடத்த முடியாமலை போய் விட்டது. அப்போது எட்டையபுரம் இளைய ராஜா அவர்களின் கம்பெனியிலிருந்த சில நடிகர்கள் எங்கள் குழுவில் சேர்க்கப் பெற்றார்கள், அவர்களில் டி. வி. நாரயணசாமி, பி. எஸ் வேங்கடாசலம், எஸ். பி. வீராச்சாமி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

சுசீந்திரம் கோமதி

முதலாவதாக எங்கள் கம்பெனியில் இருந்த நடிகை, நகைச் சுவை நடிகர் எம். ஆர். சாமிநாதனின் தங்கை மீனாட்சி. இவ ளுக்குப் பின் நீண்ட காலமாகப் பெண்கள் யாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவோடு இருந்தோம். ஆனால் 1936இல் பாலாமணி படம் முடிந்து மீண்டும் குழுவைத் தொடர்ந்து நடத்தியபோது சுசீந்திரம் கோமதி எங்கள் குழுவிலே சேர்க்கப் பெற்றார், இவர் நன்றாகப் பாடும் திறமை பெற்றவர். இவருடைய இசைஞானத்துக்காகவே இவரை விரும்பிச்சேர்த்துக் கொண்டோம். வயது வந்த பெண்ணாக இருந்ததால் வந்த உடனேயே முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்தார். ஏறத்தாழ அப்போது நடைபெற்ற எல்லா நாடகங்களிலும் கதாநாயகி வேடம் இவருக்கே கொடுக்கப்பட்டது. எட்டையபுரம், கோவில் பட்டி, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் ஏறக்குறைய ஏழுமாத காலம் இவர் கம்பெனியில் நடித்தார். நாகர்கோவிலில் இவர் தாமாகவே விலகிக் கொண்டார். நல்லமுறையில் நடித்து வந்த இவர் திடீரென்று விலகியது எங்களுக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. நாகர்கோவிலிலிருந்து திண்டுக்கல் வந்து சேர்ந்தோம்.

ரங்கராஜு நாடகங்கள் நிறுத்தப்பட்டன

அப்போது பெரும்பாலும் ரங்கராஜுவின் நாடகங்களே எங்கள் குழுவில் அதிகமாக நடைபெற்று வந்தன. இராஜாம்பாள் நாடகத்திற்கு இருபத்தைந்து ரூபாயும், இராஜேந்திரன், சந்திர காந்தா, மோகனசுந்தரம் ஆகிய நாடகங்களுக்கு நாடகம் ஒன்றுக்கு முப்பது ரூபாயும் ராயல்டியாகக் கொடுத்து வந்தோம். வசூல் மிக மோசமாக இருந்த நிலையில் இந்தத் தொகையைக்கொடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

நாவல் நாடகங்களுக்குச் சில சமயங்களில் ஐம்பது, அறுபது ஆான் வசூலாயிற்று. எனவே பெரியண்ணா ரங்கராஜாவுக்குக் கடிதம் எழுதினார். சுமார் பத்தாண்டுகளாகத் தங்கள் நாட கங்களை நாங்கள் நடித்து தருகிறோம்.இதுவரை பல ஆயிரங்களை ராயல்டியாகக் கொடுத்திருக்கிறோம். அதையெல்லாம் உத் தேசித்து. இப்போது வசூல் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில், ராயல்டி தொகையைக் கொஞ்சம் குறைத்துப் பெற்றுக் கொள்ள வேண்டும். பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களுக்குக் கொடுப்  பதுபோல நாடகம் ஒன்றுக்குப் பத்து ரூபாய் தாங்கள் நாடகங் களுக்கு அனுப்பி விடுகிறோம். தயவு செய்து அனுமதியுங்கள்” என்று உருக்கமாக எழுதினார். ரங்கராஜு அதற்கு எழுதிய பதில் சிறிதும் அனுதாபம் இல்லாததாகவும் கடுமையானதாகவும் இருந்தது.

“ராயல்டித் தொகையைச் சிறிதும்குறைத்துக் கொள்ளமுடி யாது. முழுத்தொகையையும் முன் பணமாக அனுப்பிவிட்டுத் தான் நாடகம் நடத்த வேண்டும். அதற்கு இஷ்டமில்லா விட் டால் என் நாடகத்தை நிறுத்திவிடலாம்.”

இவ்வாறு எழுதப் பெற்றிருந்த ஜே. ஆர். ரங்கராஜூ அவர்களின் கடிதத்தைக் கண்டதும் எங்கள் மனம் சொல்லொன வேதனை அடைந்தது. நாங்கள் நால்வரும் நீண்டநேரம் விவா தித்தோம். இறுதியாக இனிமேல் என்றுமே ரங்கராஜுவின் நாடகங்களை நடிப்பதில்லை யென்று முடிவு செய்தோம். அதே வேகத்தில் புதிய சமுக நாடகங்களை நடத்தத் திட்டமிட்டோம்.

தலைவர் காமராஜ் தலைமை

அரசியல் தலைவர்கள் பல்வேறு கட்சியினராயினும் அவர்கள் அனைவருடனும் எங்களுக்கு நெருங்கிய பழக்கமுண்டு. என்னைப் பொறுத்தவரையில் எனக்கென்று சில லட்சியங்களைக் கடைப் பிடிப்பவன் நான். அவற்றுக்கு மாருன கருத்துக்கொண்டவர் களோடும் நான் பகைமை கொள்வதில்லை. பண்புடனேயே பழகு வேன். தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களிடம் எனக்குப் பெரு மதிப்புண்டு. அந்த வகையில் தலைவர் காமராஜ் அவர்களிடமும் மட்டப்பாறை வெங்கட்ராமையர் அவர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தேன். தலைவர் காமராஜ் அவர்களைத் திண்டுக்கல்விலுள்ள எங்கள் நண்பர் திரு கருப்புச்சாமி அவர்களின் கதர் கடையிலேயே அடிக்கடி சந்தித்து உரையாடியதுண்டு. திண்டுக்கல் தங்கரத்தினம், நீராம் சேஷன், நகரமன்றத் தலைவர் பி. வி. தாஸ், மணிபாரதி, கணேசய்யர் போன்ற தேசீயப் பற்று டைய நண்பர்களோடெல்லாம் எங்களுக்குப் பழக்கமுண்டு. பொதுவாக எங்களுக்கு நண்பர்கள் அதிகம் நிறைந்த நகரங்களில் திண்டுக்கல்லும் ஒன்று எனச் சொல்லலாம்.  ‘தேசபக்தி’ நாடகத்தைப் பார்வையிட்டு ஆசி கூறும்படி தலைவர் காமராஜரையும், மட்டப்பாறை வெங்கட்ராமையரை யும் அழைத்திருந்தோம். 20. 11- 37ல் நடந்த தேசபக்தி நாடகத் ‘திற்குத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மட்டப்பாறை வெங்கட்ராமையரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இருவரும் நாடகத்தை மிகவும் பாராட்டினார்கள். அத்துடன் நற்சான்றுகளும் எழுதித் தந்து உதவினார்கள். அந்த நாளில் எங்களுக்கு வசூல் இல்லாது போனலும் இது போன்ற பாராட்டுக்களே மேன்மேலும் இத் துறையில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்து வந்தன.

18. 12. 37ல் பொதுவுடமைக் கட்சிப் பத்திரிக்கையான ஜனசக்திவார இதழுக்காக சந்திரகாந்தா நாடகம் நடிக்கப் பட்டது. அன்று தோழர் ஜீவானந்தம் தலைமை தாங்கிப் பாராட்டினார், அவரது கம்பீரமான ஊக்கம், உணர்ச்சி நிறைந்த பேச்சு மேலும் எங்களை உற்சாகப்படுத்தியது.

சின்னண்ணாவின் நாடகத் திறமை

எங்கள் நால்வரில் சின்னண்ணா டி. கே. முத்துசாமி அவர்களுக்கு நாடகம் புனையும் ஆற்றல் நன்கு அமைந்திருந்தது. அப்போது அன்னபூர்ணா மந்திரம் என்னும் மலையாள நாவல் ஒன்றை நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம். அது வங்காளியிலிருந்து மொழி பெயர்க்கப் பெற்ற கதை. அந்தக்கதையின் அமைப்பு எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தியிலிருந்து மொழி பெயர்த்ததாக மலையாள ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். எனவே நாங்கள் ‘அன்ன பூர்ணிகா மந்திர்’ என்னும் அதன் இந்திமொழி பெயர்ப்பை வரவழைத்துப் படித்தோம். நாகர்கோவிலில் ஒய்வாக இருந்த நாட்களில் நானும்சின்னண்ணாவும் ஒரளவு இந்தி படிக்கக் கற்றுக் கொண்டோம். மலையாளம், இந்தி ஆகிய இரு மொழி பெயர்ப்புகளின் துணையோடு அந்தக் கதையைத் தமிழ் நாடகமாக எழுதி முடித்தார் சின்னண்ணா. குமாஸ்தாவின் பெண் என்று அந்த நாடகத்திற்கு பெயரிட்டார்.

குமாஸ்தாவின் பெண்

எங்கள் நாடக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய சிறப்பு உண்டு. ஒரு எழுத்தாளருடைய நாவலையோ, நாடகத் தையோ அவரது அனுமதியின்றி நாங்கள் நடித்ததே இல்லை. எழுத்தாளருக்குச் சிறப்பளிக்க வேண்டுமென்பது எங்கள் லட்சி யங்களில் ஒன்று. எனவே ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தை எழுதி முடித்ததும் அந்தக் கதையை எழுதியவரைத் தேடி அவரிடம் அனுமதிபெற மிகவும் சிரமப்பட்டோம். இந்தி மலையாள நூல்களில் அதன் மூல ஆசிரியரின் முகவரி இல்லை. ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை வெளியிட்ட கல்கத்தா நூல் நிலையத்தின் முகவரி இந்தி நூலில் இருந்தது. எனவே அந்நூல் நிலையத்திற்கு எழுதிக் கதாசிரியரின் முகவரியைப் பெற்றோம். அதன்பிறகு அந்நூலின் ஆசிரியை கிருபாதேவிக்கு ஒரு தொகை கொடுத்து, அதன் உரிமையைப் பெற்று நாடகத்தை அரங் கேற்றினோம். 1937 டிசம்பர் 25ந் தேதி திண்டுக்கல்லில் *குமாஸ்தாவின் பெண் நாடகம் சிறப்பாக அரங்கேறியது. நாடக நுணுக்கங்களை நன்கறிந்த புலவர்கள் பலர் இத்தகையை ஒரு அற்புதமான நாடகம் தமிழ் நாடக உலகில் இதுவரை நடை பெற்றதில்லையெனப் புகழ்ந்தார்கள். பிரசித்தி பெற்ற தேசீயக வி க. ஆ. ஆறுமுகனார் இந் நாடகத்திற்கு அருமையான பாடல் களைப் புனைந்து தந்தார்.

கவி ஆறுமுகனார்

கவி ஆறுமுகளுர் அவர்களைப்பற்றி இங்கே சில வார்த்தை கள் குறிப்பிடுதல் கடமையென எண்ணாகிறேன். ஆறுமுகனார் பழம் புலவர்களின் அடிச்சுவட்டிலேயே பாடல்கள் புனைபவர். யாப்பிலக்கண விதிமுறைகளை முறையாகப் படித்தவர் மகாகவி பாரதி யிடம் அளவற்ற பக்தியுடையவர். யாரதி படிப்பகம் என் னும் பெயரால் தாம் வாழும் இராமலிங்கம்பதியிலே ஒரு படிப்ப கம் நிறுவி, நிரந்தரமாக ஹரிஜனத் தொண்டு புரிந்து வருபவர். விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்ற நல்ல தியாகி. சிறந்த பண்புடையவர். குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் இவர் எனக்கு அறிமுகமானார். அதன் பின் தயாரான வித்தியாசாகரர், மற்றும் பல நாடகங்களுக்கும், ஏற்கனவே நடைபெற்று வந்த பழைய நாட கங்களுக்கும் இவர் பாடல்கள் புனைந்தார். எங்கள் சமுதாய சீர் திருத்த நாடகங்களைப் பற்றி ஏராளமான கவிதைகள் பாடியிருக் கிறார். எனக்கு எழுதும் கடிதங்கள் பலவற்றையும் இவர் கவிதை யாகவே எழுதுவார். என்னுடன் ஆண்மீக உறவு கொண்டுள்ள நண்பர்களில் இவரும் ஒருவர்.

கே. ஆர். சீதாராமன்

குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்கு அமோகமான ஆதரவு கிடைத்தது. அப்போது எங்கள் குழுவில் முக்கிய பெண் வேடங்களைப் புனைந்து வந்தவர் கே. ஆர். சித்தாராமன் என்ற இளைஞர். இவர் நன்றாகப் பாடும் திறமையுடையவர். மிகுந்த சுறுசுறுப்புள்ளவர். குமாஸ்தாவின் பெண்ணில் கதா நாயகி சீதையாக இவர் நடித்தார். ரசிகர்களில் பலர் இவரைப் பெண்ணென்றே எண்ணி ஏமாற்றம் அடைந்தனார். எல்லா நாடகங்களிலும் கதாநாயகியாக இவர் திறம்பட நடித்தார். எனக்கு மகளாகவும், மனைவியாகவும், மாதாவாகவும் நடித்த பெருமை இவருக்குண்டு. நடிப்பதில் மட்டுமல்ல, நாடகத்தை மேடையில் உருவாக்குவதிலும் இவருக்கு நிறைந்த ஆற்றல் உண்டு. எங்கள் நாடகக் குழுவில் சட்டாம்பிள்ளை ஸ்தானத்தில் இவர் நீண்ட காலம் பணி புரிந்திருக்கிரு.ர். நாடகம் சிறப்பாக நடைபெற வேண்டு மென்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். பெண்களே பெண் பாத்திரங்களை நடிக்கத் தொடங்கியபின் பல் வேறுப்பட்ட ஆண் பாத்திரங்களையும் தாங்கி நடித்துப் புகழ் பெற்றார் இவர்.

1948இல் நாங்கள் கோயமுத்துTரில் இருந்தபோது பில்ஹணன் படப்பிடிப்பிற்காக நான்இரவு நேரங்களிலும் ஸ்டுடியோ வில் இருக்க நேர்ந்தது.அந்தச் சமயங்களில் சேர்ந்தாற்போல் பதி னேந்து நாட்கள் எனக்குப் பதில் ஒளவையார் வேடத்தை, சீதா ராமன் ஏற்றுத் திறம்பட நடித்தார். நானே சிலநாட்கள் அவரது ஒளவையார் நடிப்பைச் சபையில் வீற்றிருந்து பார்த்து பெருமிதம் அடைந்தேன். 1955இல் நாங்கள் தயாரித்த இராஜராஜ சோழன் நாடகத்தில் கதானாயகன் வீர விமலாதித்தனாக நடித்து மங்காத புகழைப் பெற்றார் கே. ஆர். சீத்தாராமன். இவருடைய நாடக நடிப்பினைப் பாராட்டித் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் இவருக்குக் கலைமாமணி என்ற விருதினை வழங்கியுள்ளது. 

எம். எஸ். திரெளபதி

திண்டுக்கல் முடிந்து தாராபுரம் வந்தோம். தாராபுரத்தில் நல்ல வசூலாயிற்று. ஆனால் நகரசபை அதிகாரிகளின் தொந்தரவு அதிகமாக இருந்தது. அதனால் நீண்ட காலம் நாடகம் நடத்த முடியாமல் திருப்பூருக்கு வந்தோம். திருப்பூரில் எம். எஸ். திரெளபதி எங்கள் குழுவில் சின்னஞ்சிறுமியாக வந்துசேர்ந்தாள். அதற்கு முன்பும் எங்கள் குழுவில் சுசீந்திரம் கோமதி, மீனாட்சி முதலிய நடிகையர் இருந்தார்கள் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். என்றாலும், நீண்டகாலம் பாலர் குழுவில் இருந்த முதல் தர நடிகையாக எம். எஸ். திரெளபதியைத்தான் குறிப்பிட வேண்டும். திரெளபதி நன்றாக பாடுவாள். அவள் முதன் முதலாகப் போட்ட வேடம் பபூன். ‘மஞ்சள் குருவி ஊஞ்ச லாடுதே’ என்னும் பாடலைப் பபூகை வந்து அவள் பாடும் போது சபையோர் தம்மை மறந்து கைதட்டி ஆரவாரிப்பார்கள். இராமாயண நாடகத்தில் குரங்குகளின் நடனம் உட்பட எல்லாக் கோஷ்டி நடனங்களிலும் திரெளபதி கலந்துகொள்வாள். சிறுவர் களிடையே அரைக்கால் சட்டையோடு நின்று கொண்டிருக்கும். அவளைப் பெண்ணாகவே யாரும் எண்ணவில்லை. ஒரே ஒரு பெண்ணை குழுவில் வைத்துக் கொண்டு அவளுக்குப் பிரத்தியேக வசதிகளைச் செய்து கொடுப்பது சிரமமாக இருந்தது. பெரியண்ணா அவளை விலக்கிவிட எண்ணினார். எனக்கு அவள் திறமையில் அபார நம்பிக்கை இருந்ததால் அவள் எதிர்காலத்தில் கம்பெனியின் சிறந்த நடிகையாக விளங்குவாளென்று அண்ணாவிடம் உறுதி கூறினேன். அதன் பிறகு அவளுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. திரெளபதி பிற்காலத்தில் நான் எதிர்பார்த்த படி எங்கள் சபையின் முதல்தர நடிகையாக விளங்கினாள். வீரம், காதல், சோகம் ஆகிய எச்சுவையையும் அதற்குரிய மெய்ப்பாட்டுணர்ச்சியுடன் திறம்பட நடித்துப் பெரும் புகழ் பெற்றாள். குமாஸ்தாவின் பெண், வித்யாசாகரர், ராஜா பர்த்ருஹரி பில்ஹணன், உயிரோவியம், முள்ளில் ரோஜா, அந்தமான் கைதி மனிதன் முதலிய நாடகங்களில் திரெளபதியின் அற்புதநடிப்பை இன்னும் என்னல் மறக்க முடியவில்லை. தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் திரெளபதியின் சிறந்த நாடக நடிப்பினைப் பாராட்டி கலைமாமணி என்னும் விருதினை வழங்கியுள்ளது.

வித்யாசாகரர்

திருப்பூரில் மற்றொரு புதிய நாடகம் தயாராயிற்று. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் வித்யாசாகரர் என்னும் நாவலை ஒரு சிறந்த நகைச்சுவை நாடகமாக எழுதினார் சின்னண்ணா. இக் நாடகம் 23. 6. 38இல் அரங்கேறியது. வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும் ஒரு சிறந்த நாடகம் வித்யாசாகரர். இதில் நான் வித்யாசாகரராக நகைச்சுவைப் பாத்திரமேற்று நடித்தேன். ஏற்கனவே நடைபெற்று வந்த சமுதாய நாடகங்களில் குறைந்தது முப்பது பாடல்களாவது இருக்கும். ஆனால் புதிதாக தயாரித்த குமாஸ்தாவின் பெண் வித்தியாசாகரர் நாடகங்களில் பாடல்களே வெகுவாகக் குறைத் தோம். அதை ஒரு குறையாக கூடப் பொதுமக்கள் அந்நாளில் குறிப்பிட்டார்கள். வித்தியாசாகரர் நாடகத்திற்கு மொத்தம் பத்தே பாடல்கள்தாம் பாடப்பெற்றன. ஏற்கனவே நடைபெற்று வந்த நாடகங்களிலும் பல பாடல்கள் குறைக்கப்பட்டன. இதன் காரணமாக, எல்லோரும் பாடத் தெரிந்திருக்க வேண்டு மென்ற கம்பெனியின் நீண்டநாள் கட்டுப்பாடு சிறிது தளர்ந்தது. சுமாராகப் பாடிக்கொண்டிருந்த நடிகர்கள் சிலரும் பாடுவதையே மறந்துவிட்டார்கள். ஒரு சிலர் பாடுவதற்கே வெட்கப்பட்டார்கள். நாடக மேடையில் பாடலுக்கு இருந்து வந்த ஆதிக்கம் ஆட்டம் கொடுக்கத் தொடங்கியது.

அறிவுச்சுடரும் அறிவு அபிவிருத்திச் சங்கமும்

நாடக மேடையையும், வேடிக்கை விளையாட்டையும் தவிர வேறு எதையும் அறியாதிருந்த நடிகர்களிடையே பொது அறிவு மலருவதற்காகச் சங்கம் ஒன்று தோற்றுவித்தேன். அறிவு அபி விருத்திச் சங்கம் என்பது அதன் பெயர். பல்வேறு நூல்களையும் பத்திரிகைகளையும் சங்கத்தில் வாங்கிப் போட்டேன். நடிகர்கள் உற்சாகத்தோடு படிக்கத் தொடங்கினார்கள். நான் எண்ணியபடி நடிகர்களின் பொது அறிவு மலர்ந்தது. நாட்டிலுள்ள தேசிய இயக்கங்களைப் பற்றியும் உலக நிகழ்ச்சிகளைப் பற்றியும் சொற் போர் நிகழ்த்தும் அளவுக்கு நடிகர்கள் பயிற்சி பெற்றார்கள்.  பண்ணுருட்டியில் 1934இல் நிறுத்தப் பெற்ற மாதக் கையெழுத்துப் பத்திரிகையாகிய அறிவுச்சுடர் மீண்டும் வார இதழாக மறு மலர்ச்சிபெற்றது. நடிகர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். நன்றாக எழுதவும் திறமை பெற்றார்கள். எழுதப் படிக்கத் தெரியாமல் கம்பெனியில் சேரும் இளைஞர்கள் பலர். அவர்களின் அறிவுப்பசியினைப் போக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்தோம். சுந்தரமூர்த்தி என்னும் தமிழாசிரியர் ஒருவரையும் தேவராஜு என்னும் ஆங்கில ஆசிரியர் ஒருவரையும் மாதச் சம்பளத்திற்குக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம் . அவர்கள் காலையிலும் மாலையிலும் பாடம் சொல்லித்தர வேண்டும். இரவு நேரங்களில் தேவைப்பட்டால் அரங்க வாயில்களில் நிற்க வேண்டும். இவை போன்ற பொது அறவு வளர்ச்சிக்குரிய முயற்சிகளெல்லாம் எங்கள் குழுவிலேதாம் நடை பெற்றன என்று சொல்லிக்கொள் வது எங்களுக்குப் பெருமையல்லவா? நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி, கடிகமணி டி.வி. நாராயணசாமி, நக்கீரர், என். எஸ். காராயணபிள்ளை, தம்பி பகவதி, பிரண்டு ராமசாமி மற்றொரு சிறந்த நடிகர் சி.வி. முத்து முதலிய பலர் அறிவுச் சுடரில் தொடர்ந்து கட்டுரை கதைகள் எழுதி, நன்கு பயிற்சி பெற்றார்கள். இப்போது அறிவுச் சுடர், வாரப் பத்திரிகையாதலால் எனக்குச் சிறிதும் ஒய்வே கிடைப்பதில்லை. ஆங்கிலம் பயில எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் நேரம் கிடைக்கவில்லை. பகல் உணவுக்குப்பின் உறங்குவதைக் கூட நிறுத்தி விட்டேன். எல்லோரும் இரவு நாடகத்தை முன்னிட்டு உறங்குவார்கள். நான் அமைதியாக அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். அறிவுச் சுடரை வாரந் தோறும் தவறாமல் வெளியிட்டு வந்தேன்.

இம்முறை ‘அறிவுச் சுடர்’ பத்திரிகையினுல் குழப்பம் எதுவும் உண்டாகவில்லை. நடிகர்கள் அனைவரும் உற்சாகமாக எழுதி வந்தார்கள். வாரந்தோறும் இரண்டு பிரதிகளை எழுதி வெளியிடுவது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. எல்லோரும் புனே பெயரிலேயே எழுதி வந்ததால் பத்திரிகை எழுதும் பொறுப்பை மற்றவரிடம் விடவும் முடியவில்லை. இரவு நாடகம் முடிந்து உறங்குவதற்கு மூன்று மணியாய்விடும். காலையில் மற்ற நடிகர்களைப் போல் பத்து மணிவரை உறங்கும் பழக்கமும் எனக் கில்லை. ஆறுமணிக்கே எழுந்துவிடுவேன். பகல் உணவுக்குப்பின் வழக்கமாக மூன்று மணிநேரம் உறங்குவேன். இப்போது அந்த நேரத்தில் பத்திரிகை எழுத நேர்ந்ததால் பகல் உறக்கம் இல்லாமல் போய் விட்டது. எனவே, இரவுநாடகத்தின் போது கொட்டாவி விடத்தொடங்கினேன். சில சமயங்களில் கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன. இந்நிலையில் கம்பெனி சேலம், ஆம்பூர் முதலிய ஊர்களுக்குச் சென்றது.

ஜீவானந்தம் பாடல்கள்

தோழர் ஜீவானந்தம் அடிக்கடி எங்களோடு வந்து தங்கு வாறென்று முன்னல் குறிப்பிட்டேனல்லவா?இது பற்றிச் சற்று விரிவாகச் சொல்ல வேண்டியது என் கடமையாகும். அவர் எங்க ளோடு தங்கியிருந்த நாட்களில் புதிது புதிதாகப் பல பாடல்களை இயற்றியதுண்டு. எல்லோரும் பாடும்படியான எளிய மெட்டுகளிலேயே பாடல்கள் அமைய வேண்டுமென்பது அவர் விருப்பம். எங்கள் நாடகங்களிலுள்ள புதிய மெட்டுகள் சிலவற்றை நான் பாடுவேன், கோவைத் தோழர் ராமதாஸ் திரைப்படப் பாடல்களைப் பாடுவார். அந்த மெட்டுகளிலெல்லாம் ஜீவா உடனுக்குடன் பிரசாரப் பாடல்கள் புனைந்து தருவார். அப்படி ஜீவா பாடிய பாடல்கள் எத்தனை எத்தனையோ!

சிவபெருமான் கிருபை வேண்டும்-அவர்
திருவருள் பெற வேண்டும்
வேறென்ன வேண்டும்

(சிவ)

இந்தப் பாடல் தியாகராஜ பாகவதர் அவர்களால் திரைப் படத்தில் பாடப் பெற்றது. அந்தக் காலத்தில் பொதுமக்கள் எல்லோருடைய நாவிலும் நின்றது. இதே மெட்டில் ஜீவா பாடினார்.

பொதுவுடமை பெற வேண்டும்-உடன்
புரட்சி செய்திட வேண்டும்
வேறென்ன வேண்டும்

(பொது)

இந்தப்பாடலை நான் எங்கள் தேசபக்தி நாடகத்திலே ஒரு காட்சியில் இணைத்துப் பாடினேன்.

நானோர் தொழிலாளி-ஒரு
நாய்க்குறும் சுகமேனும் வாய்க்கும் வழியில்லை
ஏனோ புவி வாழ்வு?



மிக உருக்கமான பாடல் இது. இப்பாடலைப் பதிபக்தி நாட கத்தில் தேயிலைத் தோட்டக் காட்சியிலே நான் பாடுவேன். சபை யோரில் சிலர் கண்ணிர் விட்டு அழுவதைப் பலமுறை பார்த் திருக்கிறேன். ஜீவாவின் பாடல்களில்,

“ஏழைத் தொழிலாளர் வாழ்வு இன்பம் சூழ்கவே”
“காலுக்குச் செருப்புமில்லை கால்வயிற்றுக் கூழுமில்லை”

ஆகிய இரு பாடல்களும் அந்நாளில் நான் பாடிய பாடல் களில் சிறப்பும், முதன்மையும் பெற்ற பாடல்களாகும். சபையோர் இவ்விரு பாடல்களையும் விரும்பிக் கேட்பது வழக்கம். எனவே, எந்த நாடகம் நடந்தாலும் இந்தப் பாடல்களை நான் அடிக்கடி பாட நேர்ந்தது.

மயில்ராவணனில் தொழிலாளர் வாழ்வு

ஒருநாள் மயில்ராவணன் நாடகம் நடந்துகொண்டிருந்தது. நான் ராமராக நடித்தேன். சபையிலிருந்து ஏழைத் தொழிலாளர் வாழ்வு என்ற குரல் எழுந்தது. இன்னும் சில குரல்கள் காலுக்குச் செருப்புமில்லை என்று கூவின. சத்தம் அதிகரித்ததால் நான் மேடைக்கு வந்தேன். “இந்த வேடத்தில் நின்றுகொண்டு அந்தப் பாடல்களைப் பாட என் மனம் இடம் தரவில்லை. அப்படிப் பாடினாலும் பாடுவதில் உணர்ச்சி இராது. நீங்கள் அமைதியாக இருந்தால் இறுதியில் வந்து பாடுகிறேன்” என்றேன். மக்கள் என் பேச்சைக் கைதட்டி வரவேற்றார்கள். நாடகம் முடிந்தது. சபையில் யாரும் எழுந்திருக்கவில்லை. வாக்களித்தபடி வேடத்தைக் கலைத்துவிட்டு வந்து, நான் அவ்விரு பாடல்களையும் பாடினேன். சபையோர் அமைதியாக இருந்து கேட்டுவிட்டுக் கலைந்து சென்றனார்.