எனது நாடக வாழ்க்கை/தேவி பால ஷண்முகானந்த சபா

தேவி பால ஷண்முகானந்த சபா


நாகர்கோவிலில் எங்களுக்கு அமைதி ஏற்படவில்லை. தங்கைமார்கள் இருவரும் சிற்றப்பாவின் பராமரிப்பில் மிகவும் கஷ்டத்துடன் காலம் கழித்து வருவதை அறிந்தோம். நாங்கள் மாதம் மாதம் ஒழுங்காகப் பணம் அனுப்பியும் அவர்களுக்கு நிம்மதியான வாழ்வில்லையென்பதை அறிந்தபோது எங்கள் உள்ளம் வேதனைப்பட்டது. எதுவும் செய்ய முடியாத நிலையில் புழுங்கினோம்.

நாகர்கோவிலுக்கு நாங்கள் வந்த ஒரு மாதத்திற்குள் கொரடாச்சேரியைச் சேர்ந்த தர்மராஜபிள்ளை என்பவர் எங்களைச் சேர்த்துக் கொண்டு தேவி பால ஷண்முகானந்த சபா என்னும் பெயருடன் கம்பெனியை நடத்த முன் வந்தார். அவருடைய அழைப்பை ஏற்றுக் கொண்டோம். அவரைப் பெரிய செல்வந்தர் என எண்ணினோம். சாமான்களையெல்லாம் வாடகை பேசி அவரிடம் ஒப்படைத்தோம். எங்கள் நால்வருக்கும் மாதம் இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம் தருவதாகத் தர்மராஜபிள்ளை ஒப்புக் கொண்டார். என்.எஸ். கிருஷ்ணன் முதலிய எங்கள் குழுவினருக் கெல்லாம் தனியாகச் சம்பளம் பேசி முடிவு செய்யப்பட்டது. எல்லோருமாகத் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தோம்.

டி. எம். தியாகராஜன்

தஞ்சையில் தேவி பால ஷண்முகானந்த சபையின் நாடகங்கள் தொடங்கப்பட்டன. டி. எம். தியாகராஜன் என்னும் சிறுவன் புதிதாக வந்து சேர்ந்தான். அவனுடைய அற்புதமான சாரீரமும் சங்கீத ஞானமும் என்னைக் கவர்ந்தன. அபிமன்யு சுந்தரி நாடகத்தில் அவனுக்குச் சுந்தரி பாடம் கொடுக்கப்பட்டது. பாடல்களை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது எனக்கே ஆனந்தமாக இருக்கும். முன் எவரும் பாடாத முறையில் புதிய புதிய சங்கதிகளைப் போட்டுத் தியாகராஜன் பாடினன். ஒருநாள் பாட்டுச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அசட்டையாக எங்கோ கவனித்துக் கொண்டிருந்தான். எதிரேயிருந்த நான், கையில் பிரம்பை எடுத்து “எங்கே கவனிக்கிறாய்?” என்று அவனது தலையில் தட்டினேன். பிரம்பின் நுனி அவன் தலையில் பொத்துக் கொண்டது. கொட கொடவென்று ரத்தம் கொட்டிவிட்டது. நான் பதறிப்போய் விட்டேன். அவன் அழவேயில்லை; என்னுடைய அறியாத்தனத்திற்காக அன்றிரவு முழுதும் வருந்தினேன். உறக்கமே வரவில்லை.

வள்ளித்திருமணம் நாடகத்திலே தியாகராஜன் வள்ளியாக வேடம் தாங்கி வருவான். “எந்த மானிட வேடர் நீர்காண்” என்னும் விருத்தத்தைச் சங்கராபரணத்திலே அவன் பாடும் போது நான் வேடனாக நிற்பேன்; மெய் மறந்து நிற்பேன். என்றாவது ஒரு நாள் அவன் நாடகத்துறையை விட்டு இசைத் துறைக்குப் போய், அபாரத் திறமையோடு விளங்குவானென அன்றே எண்ணினேன். என் எண்ணம் வீண் போகவில்லை. அந்த இளஞ்சிறுவன்தான் இன்று சங்கீத விற்பன்னராக விளங்கும் இசைமேதை தஞ்சை டி. எம். தியாகராஜன்.

பசுவை விலை பேசினார்

தஞ்சையில் சில நாடகங்களை நடத்தி விட்டுத் திண்டுக்கல் வந்து சேர்ந்தோம். திண்டுக்கல்லில் வசூலாகவில்லை. தர்மராஜ பிள்ளை பெரும் செல்வந்தர் என எண்ணினோமல்லவா? அதற்கு முற்றிலும் மாறாக ஒட்டை மூங்கிலாக இருந்தார் அவர். அவரது மனப்பான்மையை விளக்குவதற்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறேன்.

கம்பெனிக்குக் காலை மாலை இரு வேளைகளிலும் காப்பிக்காகப் பால் வாங்குவது வழக்கம். ஏற்கனவே எங்களுக்குப் பழக்கமாயிருந்த ஒரு பால்காரர் பால் கொடுத்து வந்தார். திண்டுக்கல்லுக்கு வந்த மூன்றாம் நாள் பால்காரர் வரும்போது தர்மராஜபிள்ளையும் இருந்தார். பால்காரரிடம் பாலின் விலை, முதலிய விபரங்களையெல்லாம் விசாரித்தார். திடீரென்று “இந்தப் பசு என்ன விலை?” என்று கேட்டார். பால்காரர். ஏதோ ஒரு விலையைச் சொன்னார். “சரி, இந்தப் பசுவை எனக்குக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார் பிள்ளை. பால்காரரும் சம்மதித்தார். தர்மராஜபிள்ளை வாங்கிக் கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. இரண்டு மூன்று தினங்களில் பணம் கொடுத்து விடுவதாக முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு தர்மராஜபிள்ளை அடிக்கடி தஞ்சைக்குப் போய் வந்து கொண்டிருந்தார். ஆனால் பணம் கொண்டு வரவும் இல்லை; பசுவையும் வாங்கவில்லை. பால்காரர் வழக்கப்படி பால் கொடுத்து வந்தார். பணத்தை ஏப்பமிட்டார்

சுமார் இருபது நாடகங்களுக்குப் பின் பால்காரர் வந்து, மானேஜரிடம் பால் கொடுத்ததற்குப் பணம் கேட்டார். அந்தச் சமயம் கம்பெனி வீட்டிலிருந்த தர்மராஜபிள்ளை,

“எவ்வளவு பணம்?” என்று கேட்டார். பால்காரர் தமக்குச் சேர வேண்டிய தொகையைச் சொன்னார்.

“அடேயப்பா, அவ்வளவு தொகையா? பசுதான் என்னுடையதாச்சேப்பா!... பாலைக் கணக்குப் பண்ணாதே. நீ இத்தனை நாட்கள் பகவுக்குப் போட்ட தீவனத்திற்குரிய தொகையை மட்டும் வாங்கிக் கொள்” என்றார்.

இந்த வார்த்தையைக் கேட்டதும் பால்காரர் மட்டுமல்ல; நாங்களும் பிரமித்து விட்டோம். பசுவை வாங்கிக் கொள்வதாக வாயால் பேசியதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. அதற்காக முன் பணமும் கொடுக்கவில்லை. இந்த நிலைமையில் பசு தம்முடையது என்று உரிமை கொண்டாடத் தர்மராஜபிள்ளை துணிந்து விட்டாரென்றால் அவருடைய சுபாவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இந்தச் சம்பவம் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. பால்காரருக்கும் பிள்ளைக்கும் நீண்ட நேர வாதம் நடந்தது. இறுதியாகப் பால்காரர், பிள்ளையைக்கண்டபடி ஏசிவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.

மீண்டும் ஊர் திரும்பினோம்

வசூல் இல்லாமல் சாப்பாட்டு நிருவாகம் தத்தளித்தது. என்ன செய்வதென்று தோன்றவில்லை. ஒரு மாத காலம் நாடகம் நடந்தது. நீடித்து நடத்த முடியாமல் தர்மராஜபிள்ளை ஒரு நாள் சொல்லாமலே போய்விட்டார். நாடகக் கொட்டகைச் சொந்தக்காரர் தம் வாடகைப் பாக்கிக்காகச் சாமான்களை வைத்துக் கொண்டார். காட்சிகள், உடைகள் முதலிய எங்கள் சாமான்கள் கொட்டகையில் இருந்தன. அவை எங்களுடையதென்று கொட்டகைக்காரர் மீது வழக்குத் தொடர்ந்து, அவற்றை மீட்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விட்டது. எப்படியோ ஒரு வகையாகச் சாமான்களை மீட்டு, அவற்றையெல்லாம் ஒருவீட்டில் போட்டு வைத்தோம். புதிதாகச் சேர்ந்திருந்த சில பையன்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பும் எங்கள் தலையில் சுமந்தது. எல்லோரையும் அனுப்பிவிட்டு, ஊரிலிருந்து புறப்பட்ட எங்கள் சிறிய குழுவுடன் நாகர்கோவிலுக்குத் திரும்பினோம்.

பெரியண்ணா மனச் சோர்வு

பெரியண்ணாவுக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டுவிட்டது. எங்கள் மூவரை மட்டும் ஏதாவது ஒரு கம்பெனியில் சேர்ந்துவிட எண்ணினார். சில காலமாவது கம்பெனி நடத்தும் தொந்தரவி லிருந்து நிம்மதி பெற விரும்பினார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளைக்குக்கூட எழுதியதாக அறிந்தோம். எவரிடமிருந்தும் அனுகூலமான பதில் வரவில்லை.

இரண்டு மாதகாலம் அமைதியின்றிக் காலம் கழித்தோம். அதற்குள் என். எஸ். பாலகிருஷ்ணன், என். எஸ் வேலப்பன் இருவரும் சாரதாம்பாள் கம்பெனிக்குப் போய்விட்டார்கள். நாங்கள் கம்பெனி ஆரம்பிக்கப் போவதை எதிப்பார்த்து என். எஸ். கிருஷ்ணன் மட்டும் காத்திருந்தார். நாட்கள் செல்லச் செல்ல அவருடைய உறுதியும் தளர்ந்தது. எல்லோரிடமும் வறுமை தாண்டவமாடியது. தினமும் என். எஸ். கிருஷ்ணன் எங்களைச் சந்திப்பார். கம்பெனியைத் தொடங்கச் சொல்லி வற்புறுத்துவார். ஒருநாள் பெரியண்ணா, எங்களுக்காக நீ காத்திருக்க வேண்டாம். எந்தக் கம்பெனியிலாவது சேர்ந்து கொள். பிறகு நாங்கள் கம்பெனி தொடங்கும்போது உன்னை அழைத்துக்கொள் கிறோம்” என்று சொன்னார். என். எஸ். கிருஷ்ணன் வருத்தத்துடன் பின்னும் சில நாட்கள் இருந்து பார்த்தார். பயனில்லை. நாயுடு அடிக்கடி அவருக்குக் கடிதம் எழுதி வற்புறுத்தினார். அச்சமயம் கோல்டன் கம்பெனியே நாகர்கோவிலுக்கு வந்து விட்டது. நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்றன. நானும் என். எஸ். கே.யும் அடிக்கடி நாடகங்கள் பார்த்தோம். சாரதாம்பாள் என்.எஸ்.கிருஷ்ணனைத் தம் கம்பெனியில் சேர்ந்து விடும்படி நேரில் கேட்டுக்கொண்டார். என். எஸ். கே. அதுபற்றி யோசிப்பதாகக் கூறினார். நாகர்கோவில் முடிந்து கம்பெனி திருவனந்தபுரம் சென்றது. அங்கு சென்ற பிறகும் நாயுடுவின் வற்புறுத்தல் கடிதங்கள் வந்தன. இறுதியாக வேறு வழியில்லாத நிலையில் என். எஸ். கிருஷ்ணன் ஒருநாள் எங்களிடம் வந்து கண்களில் நீர் ததும்பப் பிரியாவிடை பெற்று, சாரதாம்பாள் கம்பெனிக்குப் போய்ச் சேர்ந்தார்.