எனது நாடக வாழ்க்கை/பாகவதரின் கலைக்குடும்பம்

பாகவதரின் கலைக் குடும்பம்


காரைக்குடி வைரம் அருணசலம் செட்டியாரின் தியேட்டரில் 5.5.44-இல் சிவலீலா தொடங்கியது. தியேட்டரில் நாடகம் நடத்துவதற்கு லைசென்ஸ் கொடுக்க நகர சுகாதார அதிகாரி ஏதோ தகராறு செய்தார். அவரைச் சரிபடுத்தி லைசென்ஸ் வாங்குவதற்குள் 14 நாட்கள் ஓடிவிட்டன. ஏப்ரல் 21ம் தேதி காரைக்குடிக்கு வந்தோம். மே 5-ம் தேதிதான் நாடகத்திகுரிய லைசென்ஸ் கிடைத்தது.

சிவலீலா தொடர்ந்து நல்ல வசூலில் நடைபெற்றது. சூல மங்கலம் பாகவதரின் பிள்ளைகளான டாக்டர் மீனாட்சி சுந்தரமும் சங்கீத பூஷணம் ராதாகிருஷ்ணனும் திருமயத்தில் இருந்தார்கள். டாக்டர் மீனாட்சி சுந்தரம் சிறந்த ரசிகர். அவருடைய மனைவி கற்பகம் அம்மையார் அவரைவிடப் பிரமாத ரசிகை. கணவனும் மனைவியும் குழந்தைகளோடு இரண்டு நாளைக்கு ஒரு முறை சிவ லீலா பார்க்க வருவார்கள். வரும்போதெல்லாம் எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொண்டு வருவார்கள். பலகாரங்களைச் சுவை யோடு தயாரிப்பதில் கற்பகம்மாளுக்கு நிகர் அவரேதான். கொண்டுவரும் காபிக்காகவும், கோதுமை அல்வாவுக்காகவும் எங்கள் சிவதாணுவும், பிரண்டு ராமசாமியும் காத்துக் கிடப்பார் கள். கற்பகம்மாளின் அன்புக்கும் ஆர்வத்துக்கும் ஈடு இணை சொல்ல முடியாது. நல்ல சங்கீதக் குடும்பம் அது. டாக்டரும் அவர் துணைவியும் பேசிக் கொள்வதைக் கேட்பதற்கே சுவையாக இருக்கும் டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஏதாவது சொல்லுவார்; உடனே கற்பகம் அம்மையார் “பாத்தேளோ! இப்படித்தான் இவர் சதா ஏதானும் உளறிண்டிருப்பார். இவாளுக்கெல்லாம் என்ன தெரியும்? எல்லாம் பெரியவாள் போட்ட பிச்சை, ஏதோ அந்தக் குடும்பத்தில் வந்து, அவர் புள்ளையாப் பொறந்த தனாலே இவாள்ளாம் மனுஷா மாதிரி நடமாடறா!” என்று மாமனார் சூலமங்கலம் பாகவதரை எப்போதும் உயர்த்தியே பேசுவார். மாமனரிடம் இந்த அளவுக்கு அன்பும் மரியாதையும் காட்டும் ஒரு மருகியை நான் இதுவரை கண்டதில்லை. பாகவதர் குடும்பம் நாடகத்திற்கு வந்து விட்டால் ஆயிரம் ரசிகர்கள் வந்தது போல, எங்களுக்கெல்லாம் ஒரே குதுரகலமாயிருக்கும்.

அக்குடும்பத்தாரின் ஒவ்வொரு செயலிலும் கலையம்சம் நிறைந்திருக்கும். குலமங்கலம் பாகவதர் அவர்களுடைய ஒவ்வொரு பேச்சிலும் நகைச்சுவை ததும்பி நிற்கும். அனுபவப் பேருண்மைகளை அனாயசமாகக் கொட்டுவார். இத்தகைய புலமையும் அன்பும் நிறைந்த பெரியவர் 1943-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி இறைவன் திருவடியில் அமைதி பெற்றதை அறிந்தபோது நாங்கள் அனைவரும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தோம். அவருடைய திருப்பெயரால் குலமங்கலத்தில் ஒரு சங்கீதமகால் நிறுவ அப்போது நிதி சேகரித்துக் கொண்டிருந்தார் கள். அந்த நிதிக்கு நாங்களும் ஒருநாள் நாடக வசூலை காணிக்கையாக அளித்தோம்.

22வது நாள் நடந்த சிவ லீலாவுக்கு குமரராஜா முத்தையா செட்டியார் அவர்கள் வந்திருந்தார். மூன்று பெரிய வெள்ளிக் கோப்பைகளைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார். மொத்தம் 37 நாட்கள் சிவலீலா நடைபெற்றது. 37 வது சிவலீலா நாடகம் சூலமங்கலம் பாகவதர் நிதிக்காக நடத்தப் பெற்றது. அன்று ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் வசூலாயிற்று. அந்தத் தொகையை அப்படியே டாக்டர் மீனாட்சி சுந்தரத்திடம் கொடுத்தோம். 1937-இல் ஐம்பதும் நூறும் வசூலான காரைக்குடியில் இப்போது ஆயிரக்கணக்கில் வசூலாயிற்று.

தனி வீட்டில் குடியிருந்தேன்

கம்பெனிக்கு ஒரு பெரிய வீடும், அதற்கு ஒரு பர்லாங் துரத்தில் திரெளபதி தம்பதிகள், அக்கா மற்றும் பெண்களுக்காக ஒரு வீடும் பார்த்துக் குடியிருந்தார்கள். ஒத்திகை முதலியவை பார்ப்பதற்கு வசதியாக நானும் எனக்குத் துணையாக எங்கள் குழுவின் நீண்ட காலப் பணியாளர் அனந்தன் நாயரும் குடியிருந்தோம். அனந்தன் கம்பெனியில் ஆரம்பகால முதலே இருந்து வருபவர். இடைக்காலத்தில் ஆடை அணிவிப்போராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். என்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இடையே சில ஆண்டுகள் நோயினல் பீடிக்கப்பட்டு காசி-கயா முதலிய வட இந்தியத் தலங்களுக்கெல்லாம் சென்று சன்னியாசியாகவே காலம் கழித்தவர். மதுரையில் 108-வதுநாள் சிவலீலா நடைபெற்ற போது ஏறத்தாழ ஆயிரம் பரதேசிகளுக்கு அன்னம் பாலித்தோம். அப்போது பரதேசிகளுள் ஒருவராக வந்த அனந்தனை நாங்கள் அடையாளம் கண்டு பிடித்தோம். சந்நியாசிக் கோலத்தைக் களைத்து விட்டுக் கம்பெனியிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டோம். அதன் பிறகு அனந்தன் எனக்கு அன்புப் பணியாளராகக் கம்பெனியிலேயே இருந்தார்.

கம்பெனிப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் முறைப்படி பரத நாட்டியம் கற்றுத்தர பிரபல நட்டுவனார் திரு முத்துக்குமா சாமிப்பிள்ளையைக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம். அவர் அதிகாலையிலேயே நீராடி பூஜை புனஸ்காரங்களெல்லாம் செய்யக் கூடியவர். நானிருந்த தனிவீட்டிலேயே அவருக்கு ஒர் அறை ஒதுக்கிக் கொடுத்தேன். தினமும் காலை 10 மணிமுதல் 12மணி வரை நானிருந்த இடத்திலேயே நடனப் பயிற்சி நடைபெறும். கம்பெனிப் பிள்ளைகளில் சிறப்பாக ஜெயராமன், செளந்தராஜன், சங்கரன் ஆகிய மூவரும் மற்றும் சிலரும் இவரிடம் மிகுந்த சிரத்தையோடு நடனம் கற்றுக் கொண்டார்கள். அவர்கள் மூவரும் இப்போது பரதநாட்டிய ஆசிரியர்களாக நல்லமுறையில் பணியாற்றி வருகிறார்கள்.

ஈரோட்டில் வந்த இளஞ் சிறுமியர்

ஈரோட்டில் சிவலீலா நடை பெற்ற போது, எங்கள் கம்பெனியின் பழைய பலசாலி கோபாலபிள்ளை தம் சொந்த ஊராகிய கோட்டயத்திலிருந்து இரு சிறுமியரை அவர்கள் தந்தையோடு அழைத்து வந்தார். இருவரில் மூத்தவள் சீதாவுக்குப் பதினான்கு வயதிருக்கும். நன்றாகப் பாடினாள். அவள் தங்கை இரத்தினம் சுமாராகப் பாடினாள். இருவருக்கும் குரல் நன்றாயிருந்தது. எனவே, கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம். இரு சிறுமியரும் சின்னஞ்சிறு வேடங்களில் நடித்தார்கள். சீதா இராமாயணத்தில் பால சீதையாக நன்றாக நடித்தாள். பில்ஹணன் நாடகம் தயா ரான போது யாமினியின் தோழி மஞ்சுளா வேடத்தைச் சீதாவுக்குக் கொடுத்தோம். அதனையும் அழகாகச் செய்தாள். எதிர் காலத்தில் சிறந்த நடிகையாக வருவதற்குரிய அறிகுறிகள் அவளிடமிருந்தன. இவ்விரு சகோதரியரும் முத்துக் குமாரசாமிப் பிள்ளையிடம் நடனப்பயிற்சி பெற்றனார்.

கடையம் சகோதரிகள்

இவர்களைப் போலவே மற்றும் இரு சகோதரியர் காரைக்குடியில் சேர்ந்தார்கள். அவர்களுக்கும் இதே வயதுதான் இருக்கும். இருவருக்கும் நல்ல குரல். மூத்தவள் பெயர் ராஜம். இளையவள் சந்திரா. இவ்விருவரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் துணைவியார் திருமதி செல்லம்மாள் பாரதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த கடையம் என்ற சிற்றுார். எனவே ராஜம் சந்திரா சகோதரியரைக் கடையம் சகோதரிகள் என்றே நாங்கள் குறிப்பிட்டு வந்தோம். இவ்விளம் சிறுமியரும் நட்டுவனார் முத்துக்குமாரசாமிப் பிள்ளையிடம் மிகுந்த ஆர்வத்தோடு நடனப் பயிற்சி பெற்றார்கள்.

வள்ளல் டாக்டர் அழகப்பச் செட்டியார்

காரைக்குடியில் தமிழ்க்கடல் ராய சொக்கலிங்கம்அவர்கள். தேசபக்தர் சா. கணேசன் அவர்கள், பட அதிபர் ஏ. வி.மெய்யப்பன் அவர்கள் ஆகிய எல்லோரும் ஒளவையார் நாடகம் பார்க்க ஆர்வத்தோடு வந்தார்கள். ஒளவையார் தொடர்ந்து ஒருமாதத்திற்கு மேல் நடைபெற்றது. 26-8-44இல் நடந்த ஒளவையார் நாடகத்திற்குக் கோட்டையூர் கொடை வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார் அவர்கள் தலைமை தாங்கி அருமையாகப் பேசினார். பெரிய வெள்ளிக் கோப்பையொன்று பரிசளித்தார். தமிழ் வளர்ச்சிக்குரிய புதிய நாடகம் ஏதாவது தயாரிக்கும் போது, அதற்குரிய காட்சித் தயாரிப்புச் செலவு முழுவதையும் தாமே ஏற்றுக் கொள்வதாகத் தமது செயலாளரிடம் சொல்லி யனுப்பினார். எங்களுக் கெல்லாம் நிரம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒளவையாருக்கு ஆச்சியர் வருகை நாளாக ஆக அதிகமாகிக் கொண்டே வந்தது. தாய்மார்களுக்காக ஆண்கள் பகுதியிலிருந்தும் கொஞ்சம் இடம் ஒதுக்கினோம்.

கலைவாணர் வருகையும் கலையுணர்வும்

கந்தலீலா நாடகம் ஒருமாத காலம் தொடர்ந்து நடைபெற்றது. திடீரென்று ஒரு நாள் கலைவாணரும், ஏ. எஸ். ஏ. சாமியும் காரில் வந்து நான் தங்கியிருந்த தனி வீட்டின் முன் இறங்கினார்கள். நான் அவர்களை வரவேற்றேன். கலைவாணர் உள்ளே வந்து என்னோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். சாமி, பெரியண்ணாவைப் பார்த்து வரச்சென்றார். கே. ஆர். இராமசாமியைப்பற்றிக் கேட்டேன். “இராமசாமி இனி நாடகத்துக்கு வருவது சந்தேகம். திரைப்படத் துறையில் அவனுக்கு நல்ல சந்தர்ப்பம் இருக்கிறது” என்று கூறினார் கலைவாணர். முத்துக்குமாரசாமி நட்டுவனரை நான் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன், “ஓ! இவரைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன்.” என்றார் கலைவாணர். நட்டுவனார் மிகுந்த ஆர்வத்தோடு ‘சிறிது அபிநயம் பார்க்கிறீர்களா?’ என்று சொல்லிவிட்டு கலைவாணரின் அனுமதிக்காகக் காத்திராமல் உட்கார்ந்த நிலையிலேயே பாடி அபிநயம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். கலைவாணர் அவரைத் தடுத்து நிறுத்தாமல் முழுதும் கேட்டார். பாட்டு முடிந்ததும் தன் சட்டைப் பையிலிருந்த 10 ரூபாய் நோட்டை யெடுத்து ‘மன்னிக்க வேண்டும்; இப்போது என் கையிலிருப்பது இதுதான்; கட்டாயம் நீங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்’ என்று நட்டுவனார் கையில் கொடுத்தார். நட்டுவனார் இயன்றவரையில் நோட்டை வாங்க மறுத்தார். கலைவாணர் விடவில்லை, “தங்களைப் போன்ற கலைஞர்களுக்கு நான் எவ்வளவோ செய்ய வேண்டும். தற்சமயம் இதை வாங்கிக் கொள்ளுங்கள். சென்னைக்கு வரும்போது அவசியம் என்னை வந்துபாருங்கள்” என்றார். கலைவாணரின் அந்த உணர்வைக் கண்டு என் மெய்சிலிர்த்தது. பின்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சென்றார் கலைவாணர். நாடகம் பார்க்க வருமாறு அழைத்தேன், “வேறு காரியமாக வந்தேன். இருந்தால் வருகிறேன்” என்று புறப்பட்டு விட்டார்.

சென்னைப்பயணம்

பில்ஹணன் நாடக நூலை அச்சிட விரும்பினோம். சென்னையில் அச்சிட வேண்டுமென்று ஆசைப்பட்டார் ஆசிரியர் சாமி. எங்கள் சார்பில் அதன் முழுப்பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொள்வதாக வாக்களித்தார். பெரியண்ணாவின் ஒப்புதலோடு சென்னையில் அதற்கான வேலைகளைத் தொடங்கினார். ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அதற்குப் பொறுத்தமான நிழற்படங்களை வரைய ஏற்பாடு செய்தார். நாடகத்தை மூன்று அங்கங்களாகப் பிரித்து, மொட்டு, மலர், மணம் என்று மூன்று அங்கங்களுக்கும் பெயர்சூட்டி ஒவ்வொன்றுக்கும் தனியேஒவியங்கள் தீட்டச் செய்தார். சென்னை கமர்ஷியல் பிரிண்டிங் அச்சகத்தில் பில்ஹணன் அச்சாகிக் கொண் டிருந்தது, ஈரோட்டில் நடந்த தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மாநாட்டு நடவடிக்கைகளையும் அப்படியே அச்சிட விரும்பினார். மாநாட்டின் செயலாளர் சிவதாணு. அந்நூல் காரைக் குடி குமரன் பவர் பிரஸ்ஸிலேயே அச்சிடப்பெற்றது. மேலட்டையை மட்டும் சென்னையிலேயே அச்சிட ஏற்பாடு செய்தோம். இருநூல்களுக்குமான வரைபடங்கள் சென்னையிலிருந்து வந்தன. இவை சம்பந்தமான வேலைகளைக் கவனிக்க நான் சென்னைக்குப் பயணமானேன்.

சென்னையில் கலைவாணரைச் சந்தித்தேன். ஜூபிடர் அலுவலகத்தில் ஏ. எஸ். ஏ. சாமியைப் பார்த்தேன். பில்ஹணன் நாடக நூலின் மேலட்டை மிக அழகாக இருந்தது. கண்ணைக் கவரும் முறையில் அச்சிடப் பெற்றிருந்தது. நடிப்பிசைப் புலவரையும் பார்த்தேன். நான்கு நாட்கள் அங்கு தங்கினேன். நாடகக் கலை மாநாட்டு நூலின் மேலட்டையையும் பில்ஹணன் நாடக நூலையும் விரைவாக அனுப்பச் சொல்லி விட்டுக் காரைக்குடிக்கு வந்து சேர்ந்தேன்.

நாடகக்கலை மாநாட்டு நூல்

நாடகக்கலை மாநாட்டு நூல் அழகாக அமைந்தது. அப்போது தமிழ் நாட்டிலிருந்து வந்த அத்தனை நாடக சபையினரும் விளம்பரம் கொடுத்து ஆதரித்தனார். மாநாட்டுக்கு,

நன்கொடை வரவு ரூ. 1154-00

மாநாட்டன்று டிக்கட் விற்பனை வரவு ரூ. 1819-00

ஆக மொத்த வரவு ரூ 2973-00
2973–0–0

செலவு விபரம் ரூ. 2365-3-0

இருப்பு ரூ. 607.13-0

இருப்புத் தொகையையும் விளம்பரத் தொகையையும் வைத்துக் கொண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மாநாடு என்னும் நூலை மிகச் சிறப்பாக வெளியிட்டார் சிவதாணு. காரைக்குடியில் பில்ஹணன் நாடகம் நடை பெற்றபோது மாநாட்டு நூலும், பில்ஹணன் நாடக நூலும் வெளியிடப் பெற்றன. பில்ஹணன் காரைக்குடியில் ஒரு மாத காலம் நடைபெற்றதால் நாடக அரங்கிலேயே முன்னுாற்றுக்கும் மேற்பட்ட நாடக நூல் விற்பனை ஆயிற்று.

அடுத்தபடியாக திருச்சிராப்பள்ளியில் நாடகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 1-11-44 இல் மனோகராவை பட்டா பிஷேக நாடகமாக நடத்தி முடித்துக் கொண்டு திருச்சிக்குப் பயணமானோம்.