எனது நாடக வாழ்க்கை/முத்தமிடும் காட்சி

முத்தமிடும் காட்சி

நானும் ருக்மணியும் நடிக்க வேண்டிய காதல் காட்சி வந்த போது ஒத்திகையை நினைத்து என் உள்ளம் வெட்கத்தால் குன்றியது. காதல் கட்டம் என்றால் எப்படி?... அன்றுவரை நான் கேள்விப்பட்டிராத முறையில் புது மாதிரியாகக் காதல் செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது. நான் ருக்மணியை ஒரு கையால் அணைத்தபடி அவருடைய வலது கையிலே முத்தம் கொடுக்க வேண்டும். எப்படி? சாதாரண முத்தமா? கைவிரல்களிலிருந்து தொடங்கித் தோள் வரையில் முத்தமழை பொழிந்த கொண்டே போகவேண்டும். சரியாக ஒரு டசன் முத்தங்கள்!... கூச்சத்தால் என் உயிரே போய்விடும் போலிருந்தது. ராஜா இதை நடித்தும் காண்பித்தார். நானும் ஒரு வகையாக நடிக்க முயன்றேன். அதிகமாக வெட்கப்படுவதைக் கண்ட ராஜா, சிரித்துக் கொண்டே படமுதலாளிகளில் ஒருவரான திரு எம். சோமசுந்தரம் அவர்களை நோக்கி,

“என்ன சோமு, இந்தப் பயல் சுத்தப் பேடியாக இருக்கிறான். சொந்தப் பெண்டாட்டியிடத்திலேயே இப்படிக் கூச்சப் படுகிறானே, அப்புறம் அன்னியன் மனைவியான மேனகாவை எப்படி பலாத்காரம் பண்ணப் டோகிறான்?” என்று கூறினார். எனக்கோ மானம் போயிற்று! ஆத்திரம் ஆத்திரமாகவும் வந்தது. எப்படியோ நடித்தேன். எனக்கும் குக்மணிக்கும் உள்ள காதல் காட்சி இரண்டு நாள் தொடர்ந்து நடைபெற்றது. இரண்டாம் நாள் புகைப்படம் பிடிப்பதற்காக எங்கள் இருவரையும் ‘லவ்போஸ்’ கொடுத்து நிறுத்தினார் ராஜா. அவர் நிறுத்தியபடி நான் ருக்மணியின் இடுப்பை அணைத்தவாறு நின்றேன். மின்சார  விளக்குகளைப் போட்டுச் சரிசெய்யச் சில நிமிடங்கள் ஆயின. எவ்வளவு நாழிதான் இந்தக் கோலத்தில் நிற்பது? இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். ஒத்திகையில் வந்த சிரிப்பு மீண்டும் தலையாட்டும்போல் தோன்றியது. கொஞ்சம் விலகி நின்று கொண்டேன். ‘ரெடி’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிய ராஜா, நான் சற்று விலகி நிற்பதைக் கண்டு அருகில் வந்து எங்கள் இருவரையும் பிடித்துச் சேர்த்து வைத்துவிட்டு, பட முதலாளி எஸ். கே. அவர்களை நோக்கி, நல்ல பையன்களைப் பிடித்துக் கொண்டு வந்தீர்களேயா!... அழகான இந்தப் பெண்ணை அணைக்கத் தெரியாமல் முழிக்கிறானே! ... என்று கூறி விழுந்து விழுந்து சிரித்தார். இப்படியாக என் சொந்த மனைவியிடம் காதல் செய்யும் படலம் ஒருவாறு முடிந்தது. அடுத்தது இன்றாெருவன் மனைவியைப் பலாத்காரம் செய்யும் படலம். சொந்த மனைவியிடமே காதல் செய்யக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்த நான், இன்னொருவன் மனைவியைத் தூக்கிக் கொண்டுவந்து எப்படித்தான் பலாத்காரம் செய்வதாக நடிக்கப் போகிறேனோ என்ற டைரக்டரின் திருவாக்குப்படி விழித்துக் கொண்டிருந்தேன்.

பலாத்காரக் காட்சி

நைனமுகம்மது மேனகாவை எட்டிப் பிடிக்கப் போகும் பொழுது மேனகா அவனை ஆத்திரத்தோடு கீழே தள்ளுவதாக ஒரு கட்டம். இது எங்கள் நாடகக்தில் இல்லாதது. மேனகாவாக நடித்த எம்.எஸ். விஜயாள் என்னைத் தள்ளினார். அவர் தள்ளியதில் சிறிதும் பலம் இல்லாததால் நான் வேண்டுமென்றே கீழே விழுவது போலிருந்தது. நடிப்பு இயற்கையாக இல்லையென்று கூறி ராஜா இரண்டாவது முறையும் அதை எடுத்தார். வேகமாக என்னைத் தள்ள விஜயாள் அஞ்சுகிறார் என்று எண்ணிய நான், அன்றுதான் முதன் முறையாகத் துணிந்து விஜயாளிடம் பேசினேன்,

“அம்மா, நல்ல பலத்தோடு தள்ளுங்கள். நான் சமாளித் கொள்கிறேன். பரவாயில்லை”. 305

என்று ரகசியமாகக் கூறினேன். மீண்டும் ஒத்திகை நடந்தது. விஜயாள் முழுப் பலத்தோடு என்னைத் தள்ளுவாரென்று எண்ணி நான் வேகமாக அவரைப் பிடிக்கச் சென்றேன். அவர் தள்ளியது முன்போலவே இருந்ததால், விரைந்து சென்ற நான் அவர் மார்போடு மோதிக் கொள்ள நேர்ந்தது. விஜயாள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

“சீனில் குஸ்தி போட எனக்குத் தெரியாது” என்றார், அந்த நிகழ்ச்சி மீண்டும் ஒருமுறை எடுக்கப்பட்டு முடிந்தது. அடுத்த ‘ஷாட்’டுக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். நான் ஒரு புறம் அமர்ந்து நடந்த சம்பவத்தை எண்ணிப் பார்த்தேன். வேண்டுமென்றே நான் மோதிக்கொண்டதாக விஜயாள் எண்ணியிருக்க வேண்டும்! அதனால்தான் ‘குஸ்திபோட எனக்குத் தெரியாது’ என்று கோபித்துக் கொண்டிருக்கிறார்.

தேம்பி அழுதேன்

இதை நினைத்ததும் எனக்குத் தாங்க முடியாமல் அழுகை வந்து விட்டது. முதல் ஒத்திகையில் சிரிப்பை எப்படி நிறுத்த முடியவில்லையோ அதேபோல் அன்று அழுகையையும் என்னால் நிறுத்த முடியாமல் போயிற்று. நம்மைப்பற்றி விஜயாள் தவறாக நினைக்கும்படி நடந்துவிட்டோமே என்பதை எண்ணியெண்ணி அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன். விஷயமறிந்த ராஜா என்ன அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார். எஸ். கே., சோமு எல்லோரும் என்னைச் சமாதானப்படுத்தினார்கள். அன்று ஸ்டுடியோவில் சகோதரர்கள் யாருமில்லை. அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று ஏங்கினேன். ஸ்டூடியோ முழுவதும் விஜயாளியின் மீது சினந்தது. அவருடைய தாயார்கூட அவரைக் கண்டித்தாகச் சொல்லிக் கொண்டார்கள். ஏறக்குறைய மூன்று மணி நேரம் அழுது தீர்த்த பின்னரே என்னால் நடிக்க முடிந்தது. அன்று அப்படி அழுததை எண்ணினால் இன்றுகூட வெட்கமாக இருக்கிறது! பல நாட்களுக்குப் பின் எங்கள் மேனகா நாடகங்களில் ஸ்பெஷலாக நடிக்க எம். எஸ். விஜயாள் வந்தபோதுகூட என்னால் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்துப் பேச முடியவில்லை.

கீழே விழுந்தார்

மறுநாள் எடுத்த காட்சியில் ஒரு ரசமான கட்டம். கதையின்படி நைன முகம்மது ஐயாயிரம் கொடுத்து மேனகாவைத் தன் வீட்டிற்குக் கொண்டு வந்து விடுகிறான். அவள் தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பி வெளியே ஒடுகினாள். நைனமுகம்மது வழி மறித்து அவளைத் துக்கிக் கொண்டு கட்டிலை நோக்கிச் செல்கிறான். இப்படித் தூக்கிக் கொண்டு செல்வது எங்கள் நாடகக் கதையிலோ, வடுவூராரின் நாவலிலோ இல்லாத சம்பவம். டைரக்டர் ராஜாவின் சொந்தக் கற்பனை. தூக்கிக் கொண்டு போவது வேண்டாமென்று நான் ராஜாவிடம் எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். ராஜா சாண்டோ அலட்சியமாக,

“போடா, ஐயாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டுத் தொட்டுத் தொந்தரவு பண்ணாமல் விட்டு விடுவானா?” என்றார்.

என்னைப்போலவே விஜயாளும் தகராறு செய்தார். ராஜா பிடிவாதமாய் இருக்கவே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. இதற்கு ஒத்திகை நடைபெறவில்லை. ‘டேக்’ என்று காமிராவை முடுக்கியதும் விஜயாள் ஓடினார். நான் வழி மறித்து அவரைத் தூக்கினேன். இயற்கையாக நடிப்பதானால் நான் அவரைக் கொஞ்சம் இறுகப் பிடித்து அணைத்தபடி இருந்திருக்கவேண்டும். முதல் நாள் சம்பவம் என் நினைவில் இருந்ததால் நான் அவரை அப்படியே எடுத்துக் கைகளில் தாங்கிய வண்ணம் கட்டிலை நோக்கிச் சென்றேன். விஜயாள் என் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முயல்பவரைப்போல் கைகால்களை உதறிக் கொண்டார். நான் அவரை மார்போடு தழுவி அணைத்துக் கொள்ளாததால் எனது பிடியிலிருந்து விடுபட்டுத் தொப்பென்று கீழே விழுந்து விட்டார். எல்லோரும் சிரித்து விட்டார்கள். ராஜாவும் கலகல வென்று சிரித்து, “நல்லாக் கட்டிப்பிடிடா” என்றார். ஆனால் விஜயாள் அதை இரண்டாம் முறை படம் எடுக்க அனுமதிக்கவில்லை. பெருத்த சண்டைக்குப் பின், “சரி, வேண்டாம்” என்று ராஜாவும் விட்டு விட்டார். படம் திரையிடப்பட்ட போது நான் தூக்கிச்  சென்ற அந்தக் காட்சி அப்படியே இருந்தது. விஜயாள் கீழே விழுந்ததை மாத்திரம் வெட்டி விட்டார்.

தீண்டாத காதல்

மற்றொரு சுவையான நிகழ்ச்சி நடந்தது. சாமா ஐயராக நடித்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், தாசி கமலம் வீட்டில் அகப்பட்டுக் கொள்ளும் ரசமான காட்சி. முதலில் சாமாவுக்கும் கமலத்துக்கும் சிங்காரப் பேச்சுகள் நடக்கின்றன. இறுதியில் திருடர்கள் சாமாவைப் பிடித்து அடித்துச் சாக்குப் பையில் போட்டுக் கட்டி விடுகிறார்கள். இதை வேடிக்கை பார்க்க எங்கள் நடிகர்கள் பலரும் கூடியிருந்தார்கள். மேனகா நாடகத்தில் நான் முதலில் நைனமுகமதுவாக நடித்துவிட்டுப் பிற் பகுதியில் தாசி கமலாவாகவும், நடிப்பேன். எனவே என்னோடு நடித்த என். எஸ். கே. பெண்ணாேடு எப்படி நடிக்கிறார் என்பதைப் பார்த்து ரசிக்க எல்லோரையும் விட எனக்கு ஆவல் அதிகமாக இருந்தது.

படப்பிடிப்பு தொடங்கியது. டைரக்டர் ராஜா சுறுசுறுப்பாக வேலை செய்தார். சாமா ஐயரும் தாசி கமலமும் கட்டிலில் அமர்ந்தார்கள்; உரையாடினார்கள். சாமா ஐயர் காதல் பாட்டுப் பாடினார். படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. வேடிக்கை பார்க்க நின்ற நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம் படாதிபதிகளான எஸ். கே. மொய்தீனும், எம். சோமசுந்தரமும் செய்வது புரியாமல் விழித்தார்கள், நான் கலைவாணரை வியப்புடன் பார்த்தேன். கலைவாணர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்தக் சிரிப்பில் சினமும் கலத்திருந்ததை நான் உணர்ந்தேன். காரணம் என்ன தெரியுமா? படப் பிடிப்பு நாங்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நடந்தது. சாமா ஐயரை மயக்கிக் கொள்ளை யடிக்கும் நோக்கோடு அழைத்து வந்த தாசி கமலம், சாமாவைத் தொடவும் இல்லை; அவர் பக்கத்தில் நெருங்கி உட்காரவும் இல்லை. தீண்டாத காதலாக இருந்தது. ஒரு முழத் தூரத்திலேயே இருந்தபடி எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டார்.

படாதிபதிகளின் ஏமாற்றம்

நாடகத்தில் நானும், என். எஸ். கேயும் இந்தக் காட்சியில் நடிப்பதைப் பல முறையும் பார்த்து ரசித்திருந்த படாதிபதிகள் அதைவிடச் சிறப்பாக சினிமாக் காட்சி அமையுமென எதிர்பார்த் திருந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஏமாற்றம். டைரக்டர் ராஜா ஏன் இப்படிச் செய்கிறார் என்று புரியவில்லை. ஆத்திரமும் கோபமும் அவர்கள் கண்களில் தெரிந்தன . ராஜாவிடம் நெருங்கிப் பேசப் பயம். நிலைமையைச் சரிப்படுத்த ஒரு வழியும் தோன்றாமல் திகைத்தார்கள்.

சாமாவின் சல்லாபப் பேச்சு முடிந்ததும் திருடர்கள் கட்டிலைச் சூழ்ந்து கொள்ளுகிறார்கள். தாசி கமலம் அவர்களைக் கண்டு பயந்தவள்போல் சாமா ஐயரைக் கட்டிக் கொள்ள வேண்டும். சாமா அவளை அணைத்தபடி திருடர்களோடு போராட வேண்டும்.

டைரக்டர் ராஜா இந்த விவரங்களையெல்லாம் நன்றாக விளக்கிச் சொல்லத் தொடங்கினார்.

“கிருஷ்ணா, நீ இப்படி இருக்கிறே; கமலம் அங்கே நிக்கிரு; திருட்டுப் பசங்க வந்ததும் அவ பயந்து ஓடி வந்து உன்னைக் கட்டிக்கிறா. நீ உடனே வீராவேசத்தோட திருடனுங்க மேலே பாயனும்” -

என்று சொல்லிவிட்டுக் காமிரா அருகில் சென்றார். கலைவாணர் அதுவரையில் அடக்கிக் கொண்டிருந்த ஆத்திரமும் சினமும் அமைதியாக வெளிவரத் தொடங்கின.

“எல்லாம் சரி; ஆனா, அந்த அம்மா வந்து என்னைக் கட்டிக்காதபடி வேறே ஏதாவது வழி பண்ணாங்கோ”......என்றார்.

நான் பதிவிரதன் !

என். எஸ். கே. யின் இந்தப் பேச்சைக் கேட்டதும் ராஜா திடுக்கிட்டார்.

ஸ்டுடியோவில் பூரண அமைதி நிலவியது. நாங்கள் எல்லோரும் ராஜாவின் வாயிலிருந்து என்ன வார்த்தை வரப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் கொண்டு நின்றோம். 

“ஏண்டா! உன்னைக் கட்டிக்கப்படாது?” என்றார் ராஜா. கலைவாணர் மேலும் அமைதியாக, “நான் பதிவிரதன்” என்றார்.

“பதிவிரதனா?... அதென்னடா, புதுசாயிருக்கு?” இது ராஜாவின் கேள்வி.

“புதுசு ஒண்ணாமில்லையே! பொம்பளையிலே பதி விரதையில்லே? அது மாதிரி ஆம்பிளேயிலே நான் பதிவிரதன். என் மனைவி நாகம் மாளைத் தவிர வேறே எந்தப் பொம்பளையும் என்னைத் தொட அனுமதிக்க மாட்டேன். நான் ஏக பத்தினி விரதன்” என்றார் கலைவாணர்.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இப்படிச்சொன்னதும் டைரக்டர் ராஜா திடுக்கிட்டார். ஏதோ காரணத்தோடுதான் கிருஷ்ணன் இவ்வாறு பேசுகிறார் என்பது ராஜாவுக்குப் புரிந்து விட்டது. உடனே அவர் எஸ். கே. மொய்தீனை நோக்கி, என்ன எஸ். கே. ஒங்க கிருஷ்ணன் தகராறு பண்றானே? தொட்டு ஆக்டு பண்ணாதே போன படம் நல்லாயிருக்குமோ?”... என்று கேட்டார். விஷயம் இவ்வளவு தூரத்திற்கு வந்ததும் எஸ். கே மொய் தீனுக்கும் பேசத் துணிவு வந்துவிட்டது. அவர் அதுவரையில் பொருமிக்கொண்டிருந்த தம் உணர்ச்சிகளையெல்லாம் வார்த்தைகளாகக் கொட்டத் தொடங்கினார்.

“பின்னே என்னுங்க, இந்த சீன நீங்க இப்படியா எடுக்கிறது? கிருஷ்ணனும் ஷண்முகமும் நாடகத்திலே எப்படி அற்புதமா நடிப்பாங்க; பொம்பளையாச்சே நாடகத்தை விட நல்லா அமையும் சினிமாவிலேண்ணா நாங்க சந்தோஷமா யிருந்தோம். நீங்க ஆரம்பத்திலேயிருந்தே சாமாவும் கமலமும் தொடாமலே எடுத்து முடிச்சிட்டீங்களே? பின்னே கிருஷ்ணனுக்கு வருத்தம் வராதுங்களா? நீங்க கேட்டதையே திரும்பிக் கேக்கிறேன். அந்த அம்மா கிருஷ்ணனைத் தொட்டு ஆக்டு பண்ணாத போனா படம் நல்லாயிருக்குங்களா? நீங்க முன்னாடி தாசி கமலத்தைத் தொட கிருஷ்ணனை அனுமதிக்கவேயில்லை... அதனாலேதான் இப்போ கிருஷ்ணன் தொட்றதுக்குத் தகராறு பண்றாரு ! என்று மேலும் படபடப்போடு பேசிக்கொண்டே போனார். அப்போதுதான் ராஜா தம் தவறை உணர்ந்தார். தாசி கமலமாக நடித்த அம்மையாரும் அவரது சகோதரிகளும் ஆரம்ப முதலே ராஜா வோடு நெருங்கிப் பழகிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட வினை இது. ஆனால் உண்மையை யுணர்ந்ததும் ராஜா சிறிதும் தகராறு செய்யவில்லை. அவரல்லவா பெரிய மனிதர்! உடனே;

“அடடே, அப்படியா? இதை அப்பவே சொல்லியிருக்கலாமே. சரிடா கிருஷ்ணா, இந்த சீன மறுபடியும் எடுக்கிறேன். ஒன் இஷ்டம்போல் ஆக்டு செய்”

என்று சொல்லிவிட்டு மீண்டும் கேமரா அருகில் சென்றார் .

ராஜாவின் தனிச்சிறப்பு

இதுதான் ராஜாவிடமுள்ள தனிப் பெருங்குணம், ‘நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ என்னும் வள்ளுவர் வாக்குக்கு இலக்கியமாக விளங்கியவர் ராஜா. தவறு என்று உணர்ந்தால் உடனே அதைத் திருத்திக் கொள்ளத் தயங்கமாட்டார். ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால்’ என்று சாதிக்கும் பிடிவாதக் குணம் அவரிடம் இல்லை. ஒருநாள் ஸ்டுடியோவில் ஒருவரோடு பிரமாதமான சண்டை நடக்கும். மறுநாள் அதே மனிதரோடு ராஜா களிப்புடன் பேசிக் கொண்டிருப்பதைக் காணலாம். பழகுபவர் எவரையும் உரிமை பாராட்டி ஒருமைப்பதங்களால் அழைப்பது ராஜாவின் இயற்கை குணம். புதிதாகப்பழகுபவர்கள். இதைத் தவறாக எண்ணவுங் கூடும். ஆனால் மற்றவர்களின் விருப்பையோ வெறுப்பையோ ராஜா பொருட்படுத்து வதில்லை.

அந்தக்காலத்தில் பிரபல நடிகர்களாக விளங்கிய பில்லி மோரியா ஈஸ்வர்லால், ஜால்மார்ச்செண்ட், கோஹர், சுலோசன முதலியோர் எங்கள் மேனகா படப் பிடிப்பைப் பார்க்க வருவார்கள். அவர்களிடம் ராஜா,

“பார்த்தீர்களா, உங்கள் தமிழ்நாட்டு இளங் குழந்தைகளின் திறமையை? இன்னும் இரண்டொருபடங்களில் நடித்தால் உங்களையெல்லாம் தோற்கடித்துவிடுவார்கள்.”

என்று பெருமையோடு கூறுவார்.

ராஜாவின் இன உணர்ச்சி

ஒரு நாள் மேனகாவில் டிப்டிக் கலெக்டர் பங்களாக் காட்சிக்கு ஸ்டுடியோவிலுள்ள மட்டரகமான சோபாக்களையும், நாற்காலிகளையும் போட்டுவிட்டு செட்டிங் மாஸ்டர் அலட்சியமாக இருந்து விட்டார். அப்பொழுது ராஜா ரஞ்சித் மூவிடோனிலேயே நடிகராகவும், டைரக்டராகவும் மாதச் சம்பளத்திற்கு இருந்தபடியால் இதுபற்றி சிரத்தை எடுத்துக் கொண்டு கேட்பாரென செட்டிங் மாஸ்டர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ராஜா படப்பிடிப்பின்போது வந்தார். செட் அமைந்திருந்ததைச் சுற்றிப் பார்த்தார். கண்களில் கோபக்கனல் வீசியது.

“யாரடா அவன் ஸெட்டிங் மாஸ்டர், ரஞ்சித் மூவிடோனில் நல்ல சோபாக்கள் கிடையாதா? ஏன் இந்த ஒட்டை உடைசல்களே யெல்லாம் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்?”

என்று இந்தியில் கேட்டார். செட்டிங் மாஸ்டரும், ஸ்டோர் கீப்பரும் முனகிக் கொண்டே,

“மற்ற சோபாக்களெல்லாம் நமது இந்திப் படங்களுக்கு ஸ்பெஷலாக உபயோகிப்பது” ... என்று மேலும் ஏதோ சொல்ல முயன்றார்கள். உடனே ராஜா கடுங் கோபத்தோடு இடை மறித்து,

“ஏண்டா ஸ்டுடியோவுக்கு முள்ளங்கிப் பத்தைப்போல் ரூபாய் பதிமூவாயிரம் வாங்கவில்லையா! எங்கள் தமிழ் நாட்டான் காசு உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா?” என்றார். அதற்குள் ஸ்டோர் அறையின் சாவி வேறு யாரிடமோ இருப்பதாகச் சிப்பந்திகள் முணுமுணுத்தார்கள்.

“கொண்டாடா சுத்தியலேயும், கடப்பாறையையும்” என்று ஆவேசத்துடன் கூறிவிட்டு, சோபாக்கள் வைத்திருந்த ஸ்டோர் அறையின் பெரிய பூட்டை உடைப்பதற்குத் தயாரானார் ராஜா. உள்ளே இவ்வாறு கலவரம் நடந்துகொண்டிருந்தபோது வெளியிலிருந்து வந்த ஸ்டூடியோ முதலாளி திரு சந்துலால்ஷா நடந்த விஷயத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு, ராஜா 

இஷ்டப்படி செய்யுமாறு சைகை காட்டி விட்டு, வந்த சுவடு தெரியாமல் போய் விட்டார். பிறகு முறைப்படி காரியங்கள் ஒழுங்காக நடைபெற்றன. ராஜாவின் வலிமைக்கு அந்த நாளில் வடநாட்டார் அவ்வளவு தூரம் பயந்திருந்தார்கள்.

பட அதிபர்களும் நடித்தனார்

எஸ். கே. மொய்தீன், எம். சோமசுந்தரம், கேசவலால் காளிதாஸ் சேட் ஆகிய சண்முகானந்தா டாக்கீசின் படாதிபதிகளும் மேனகாவில் எங்களோடு நடித்தது படத்திற்கு ஒரு தனிச் சிறப்பினைத் தந்தது. சோமு, இன்ஸ்பெக்டர் சஞ்சீவி ஐயராக நடித்தார். எஸ். கே. டாக்டராகவும், ‘கேசவலால் சேட், வராக சாமி காரில் அடிபட்ட இடத்திற்கு வரும் வணிகராகவும் நடித் தார்கள். இவர்களே யெல்லாம் நடிப்பதற்குத் துரண்டியவரே ராஜாதான். இன்ஸ்பெக்டர் சஞ்சீவி ஐயர் கொஞ்சம் பெரிய பாத்திரம். நடிப்புத் துறையில் சிறிதும் பழக்கமில்லாத சோமு அவர்களே இவ்வேடம் தாங்கச் செய்து வெற்றிகரமாக நடிக்க வைத்த ராஜாவை எல்லோரும் புகழ்ந்தார்கள்.

முப்பதே நாட்களில் படம் முடிந்தது

படப்பிடிப்பு மிக விரைவாக நடைபெற்றது. இன்றைய நிலையைப்போல் ‘டீ’ வராத சண்டையோ, கார் வராத தாமதமோ, வேஷம் போடாத தடங்கலோ, செட்டிங் தயாராகாத தொல்லையோ எதுவும் மேனகா படப் பிடிப்பில் ஏற்படவில்லை. நடிகர்கள் பெரும்பாலும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். டைரக்டர் பூரணமாக ஒத்துழைத்தார். பெண் நடிகையரும் எவ்விதக்குழப்பமும் செய்யவில்லை. முப்பதே நாட்களில் மேனகா படப் பிடிப்பு முடிந்தது. ஏறத்தாழ இரண்டு மாத காலம் பம்பாயில் தங்கினோம். மேனகா படப்பிடிப்பு முடிந்து, நவம்பர் 9ஆம் நாள் நாங்கள் பம்பாயிலிருந்து தமிழகத்துக்குப் புறப்பட்டோம். அப்போது எங்களை வழியனுப்ப ரயில் நிலையத்துக்கு வந்த ராஜா, இரு கரங்களையும் மேலே உயர்த்தியபடி கண்களில் நீர் பெருக, 

“டேய் பசங்களா, தொழில்நேரத்தில் உங்களைக் கோபமாக ஏதாவது திட்டியிருப்பேன்; தாறுமாருகப் பேசியிருப்பேன் என்ன தவறு செய்திருந்தாலும் மறந்திடுங்கடா!” என்று கூறியதை எண்ணும்போது இன்றும் என் விழிகளில் நீர் பெருகுகிறது! இத்தகைய வீர நடிக ராஜா 1944 நவம்பர் 24இல் கோவையில் மாரடைப்பினால் மாண்டார் என்ற செய்தி கேட்டு நாங்கள் எல்லாம் கண்ணிர் விட்டோம். வியப்பென்னவென்றால் தமிழ் நாட்டிலிருந்து வடநாடு சென்று, திரையுலகில் முப்பதாண்டு காலம் தனியரசு செலுத்திய அந்தக் கலைச்செம்மல் - வீரத் தமிழனின் மரணச்செய்தி எந்தப்பத்திரிகையிலும் முக்கியத்துவம் பெறவில்லை. தமிழன் என்ற இன உணர்வும் எழுச்சியும் இந்த நைந்த தமிழகத்திற்கு என்றுதான் வருமோ என்று அன்றே ஏங்கினேன்.