என் சரித்திரம்/111 பல ஊர்ப் பிரயாணங்கள்

அத்தியாயம்—111

பல ஊர்ப் பிரயாணங்கள்

1890-ஆம் வருஷம் கோடை விடுமுறையில் சிலப்பதிகாரப் பிரதிகளைத் தேடுவதற்காகத் தென்பாண்டி நாட்டை நோக்கிப் புறப்பட்டேன். அங்கங்கே உள்ள கிளை மடங்களில் அதிகாரிகளுக்கு என் வரவைத் தெரிவித்து வேண்டிய உதவி புரியும்படி திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் உத்தரவு அனுப்பினார்.

திருநெல்வேலி

முதலில் திருநெல்வேலியை அடைந்து அங்கே முன்பு பாராத இடங்களில் ஏட்டுச் சுவடிகளைத்தேட எண்ணியபோது கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளை மிக்க உதவியாக இருந்தார். முந்திய தடவை தேடிய இடங்களிலேயே மீண்டும் தேடலானேன். பத்துப் பாட்டைத் தேடும்போது அந்த நூலில் மாத்திரம் கவனம் இருந்தது. இப்போது சிலப்பதிகாரத்தின் மேற் கருத்துச் சென்றது. சாலிவாடீசுவர ஓதுவார் வீட்டில் சிலப்பதிகார மூலப் பிரதி ஒன்றும் மூலமும் உரையும் உள்ள பிரதி ஒன்றும் கிடைத்தன. அந்த உரைப்பிரதியில் உரை குறையாகவே இருந்தது. அப்பால் திருப்பாற்கடனாதன் கவிராயர் வீட்டுக்கும் பிறகு பாளையங்கோட்டையில் சில இடங்களுக்கும் போய்ப் பார்த்தேன். சிலப்பதிகாரம் கிடைக்கவில்லை. ஸ்ரீவைகுண்டம் முதலிய இடங்களுக்குச் செல்ல எண்ணினேன். பெருங்குளமென்னும் ஊரில் செங்கோல் மடம் என்ற ஆதீனமொன்று இருக்கிறதென்றும் அதன் தலைவர் தமிழ்ப் பயிற்சியுள்ளவரென்றும் தெரிந்தது. அங்கே போய்ப் பார்க்கவும் கருதினேன். என் கருத்தை யறிந்த என் நண்பராகிய வக்கீல் ஏ. கிருஷ்ணசாமி ஐயர் அந்த மடாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார்.

ஸ்ரீவைகுண்டம்

முதலில் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கவிராயர் வீட்டுக்குச் சென்றேன். அங்கே எண்பது பிராயமுள்ள வைகுந்தநாதன் கவிராயரென்பவர் உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது பல பழைய தமிழ்ப் பாடல்களைச் சொன்னார். பிறகு நான் ஏடு தேட வந்திருப்பதை அவரிடம் சொல்லி அவர் வீட்டில் உள்ள ஏடுகளைப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அந்த முதியவர் சிரித்தபடியே, “இந்தக் காலத்தில் ஏட்டுச் சுவடிகளைத் தேடுபவர்களும் இருக்கிறார்களா? இங்கிலீஷ் படிப்பு வந்த பிறகு தமிழை யார் கவனிக்கிறார்கள்? தமிழ் ஏடுகளை யார் பாதுகாக்கிறார்கள்? எல்லாம் அச்சுப் புத்தகங்களாக வந்து விட்டனவே” என்றார்.

“அச்சுப் புத்தகங்கள் எப்படி வந்தன? ஏட்டுச் சுவடிகளை உங்களைப் போன்றவர்கள் பாதுகாத்து வைத்திருந்தமையால் அவற்றைப் பார்த்து அச்சிடுகிறார்கள். உங்கள் வீட்டிலுள்ள ஏடுகளைப் பார்க்கும்படி அனுமதி செய்யவேண்டும்” என்று கேட்டேன்.

“என்னிடம் பழைய ஏட்டுச் சுவடிகள் பல இருந்தன. என் பிள்ளைகள் இங்கிலீஷ் படித்து உத்தியோகத்துக்குப் போய் விட்டார்கள். இனிமேல் இந்த ஏடுகளை யார் காப்பாற்றப் போகிறார்களென்ற எண்ணத்தால் யார் யார் எது எதைக் கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் கொடுத்து விட்டேன்.”

“நாம் அப்பொழுதே வராமற் போனோமே” என்று இரங்கினேன். கிழவர் தாம் படிப்பதற்காக வைத்திருந்த சில ஏட்டு சுவடிகளை எடுத்துக் காட்டினார். எனக்கு வேண்டியது ஒன்றும் கிடைக்கவில்லை.

பெருங்குளம்

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு பெருங்குளத்தை அடைந்து அங்குள்ள செங்கோல் மடத்துக்குப் போய் மடாதிபதியைக் கண்டேன். நான் போனபொழுது அவர் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். மிக்க அன்போடு பேசி என்னை உபசரித்தார். “தங்களுக்கு யமகந்திரிபுகளில் நல்ல தேர்ச்சியுண்டு என்று கேட்டிருக்கிறோம். சிலவற்றைச் சொல்ல வேண்டும்” என்றார். எல்லாவரையும் வசப்படுத்தும் கலையாகிய சங்கீதத்திலே இன்பம் காணும் அவர் மிகவும் சிரமப்பட்டுப் பொருள் தெரிதற்குரிய யமகந்திரிபுகளிலும் இன்பங் காணும் இயல்பினராக இருந்தமை எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. அவர் விரும்பிய பொருள் என்னிடம் நிரம்ப இருந்தது. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திரிபுயமக அந்தாதிகளிலிருந்து பல பாடல்களைச் சொன்னேன். 3 எழுத்து முதல் 13 எழுத்துக்கள் வரையில் யமகமாக அமைந்த செய்யுட்களையும் அவற்றின் பொருளையும் சொன்னேன். கேட்டுக் கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். நான் வந்த காரியத்தை அறிந்து தம்மிடமுள்ள ஏடுகளெல்லாவற்றையும் நான் பார்க்கும்படி செய்தார். பல பிரபந்தங்களும் புராணங்களும் அச்சிட்ட நூல்களும் இருந்தன. குறுந்தொகை மூலம் ஒரு பிரதி இருந்தது.

அன்று முழுவதும் அங்கே தங்கி அவருடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தேன். அவ்வூரிலுள்ள ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்று அதன் சிறப்பை அவர் எடுத்துரைத்தார். அங்கே உக்கிரபாண்டியர் அரசாட்சி செய்தாரென்றும், அவராற் பூசிக்கப் பெற்றமையின் அவ்வூர்ச் சிவபெருமானுக்கு உக்கிரவழுதீசுவரர் என்னும் திருநாமம் வழங்குகிறதென்றும் அறிந்தேன். அந்தப் பாண்டியர் முன்னிலையில் நக்கீரனார் முதலிய சங்கப் புலவர்கள் கூடிய இடத்தில் திருக்குறள் அரங்கேற்றம் நடைபெற்றதென்றும் அங்ஙனம் நடந்த இடம் அதுவேயென்றும் கூறி, அதற்கு அடையாளமாகச் சிவாலயத்தில் 49 புலவர்களின் வடிவமும் உக்கிர பாண்டியர் வடிவமும் அமைந்துள்ள இடத்தை அவர் காட்டினார். ‘இங்கே அவர்கள் இருந்தார்களோ இல்லையோ, தமிழ்ப் புலவர்களைத் தெய்வத்தோடு ஒன்றாக வைத்துப் போற்றும் வழக்கம் இந்த நாட்டில் இருப்பதை நாம் பாராட்டவேண்டும’ என்று நான் எண்ணினேன்.

ஆறுமுக மங்கலம்

பெருங்குளத்துக்குக் கிழக்கேயுள்ள ஆறுமுக மங்கலவாசியும் தூத்துக்குடி கால்டுவெல் காலேஜில் தமிழ்ப் பண்டிதருமான குமாரசாமி பிள்ளையென்பவர் வைத்திருந்த சிந்தாமணி, பத்துப் பாட்டு என்னும் இரண்டு நூல்களின் ஏட்டுச் சுவடிகள் எனக்கு முன்பு கிடைத்தன. அவை திருத்தமான பிரதிகளாக இருந்தன. அவர் வீட்டுக்குச் சென்று தேடினால் வேறு நூல்கள் கிடைக்கலாமென்ற நினைவினால் பெருங்குளத்திலிருந்து ஆறுமுக மங்கலம் சென்றேன். குமாரசாமி பிள்ளையின் மருகராகிய சுந்தரமூர்த்திப்பிள்ளை என்பவர் அங்கே இருந்தார். அவர் தம் வீட்டிலுள்ள சுவடிகளையெல்லாம் காட்டினார். பல பழைய ஏடுகள் இருந்தன. அகநானூறு, புறநானூற்றின் குறைப்பிரதி ஒன்று, சிலப்பதிகார உரை, தமிழ் நாவலர் சரித்திரம் என்பவை எனக்குக் கிடைத்தன.

சுந்தரமூர்த்திப் பிள்ளை அவ்வூர் அக்கிரகாரத்தில் ஒரு வீட்டில் என் ஆகாரத்துக்கு ஏற்பாடு செய்தார். அங்கே அன்று பகற்போசனம் செய்து கொண்டேன். எனக்கு அந்த வீட்டுக்காரர் பெரிய விருந்து நடத்தினாரென்றுதான் சொல்ல வேண்டும். அந்த விருந்துணவை உண்டபோது அவ்வூர் சம்பந்தமான வரலாறு ஒன்று எனது நினைவுக்கு வந்தது.

ஆண்டான் கவிராயரென்ற பிராமண வித்துவான் ஒருவர் ஆறுமுக மங்கலத்துக்கு வந்தார். ஆறுமுக மங்கலம் பெரிய ஊர். ஆயிரத்தெட்டுப் பிராமணர் வீடுகள் முன்பு அங்கே உண்டென்றும், அவருள் விநாயகர் ஒருவரென்றும் சொல்வார்கள். அங்குள்ள விநாயகருக்கு ஆயிரத்தெண் விநாயக ரென்பது திருநாமம்.

அவ்வளவு பெரிய ஊரில் ஆண்டான் கவிராயருக்கு என்ன காரணத்தாலோ பசிக்கு உணவு கிடைக்கவில்லை. அவர் வசை பாடுவதில் வல்லவர். பிற்காலத்துக் காளமேகமென்று சிலர் அவரைச் சொல்வதுண்டு. பசி மிகுதியால் அவர் வருந்தியபோது கோபத்தால், “ஆறுமுகமங்கலத்துக்கு யார் போனாலும், சோறு கொண்டு போங்கள், சொன்னேன், சொன்னேன்” என்று சொல்லிச் சில வசை கவிகளும் பாடினாராம்.

இந்த வரலாற்றுக்கும் எனக்குக் கிடைத்த விருந்துக்கும் நேர்மாறாக இருந்தது. “ஆண்டான் கவிராயர் இந்த ஊரைப் பற்றி இழிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் எங்கும் சாப்பிடாத புதிய புதிய உணவுகள் எனக்கு இங்கே கிடைக்கின்றனவே!” என்று உடன் உண்ட ஒருவரிடம் நான் சொன்னேன்.

“ஆம், அந்த இழிவைப் போக்குவதற்காகவே யார் வந்தாலும் இவ்வூரார் விசேஷமான விருந்து செய்வித்து அனுப்புவது வழக்கம்” என்று அவர் விடை பகர்ந்தார்.

வெள்ளத்தில் விட்ட தமிழ்

ஆறுமுக மங்கலத்திலிருந்து திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனைத் தரிசித்து ஆழ்வார் திருநகரிக்குப் போய்ச் சில இடங்களில் ஏடு தேடிவிட்டு மீட்டும் திருநெல்வேலிக்கு வந்தேன். தெற்குப் புதுத்தெருவிலிருந்த வக்கீல் சுப்பையா பிள்ளை யென்பவரிடம் சில ஏடுகளுண்டென்று கேள்வியுற்று அங்கே சென்றேன். அவ்வீட்டிற்கு ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய சகோதரரும் என் நண்பருமாகிய திருகூடராசப்பக் கவிராயர் வந்திருந்தார். சுப்பையா பிள்ளைக்கு அவர் உறவினர். நான் வந்த காரியத்தைச் சொன்னபோது கவிராயரும் சுப்பையா பிள்ளையிடம் என் கருத்தை எடுத்துச் சொன்னார்.

“எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக் கணக்காக இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமற் போய்விட்டன. இடத்தை அடைத்துக் கொண்டு யாருக்கும் பிரயோசனமில்லாமல் இருந்த அவற்றை என்ன செய்வதென்று யோசித்தேன். அவற்றில் என்ன இருக்கிறதென்று பார்ப்பதற்கோ எனக்குத் திறமை இல்லை. அழகான அச்சுப் புத்தகங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் இந்தக் குப்பையைச் சுமந்து கொண்டிருப்பதில் என்ன பயனென்று எண்ணினேன். ஆற்றிலே போட்டுவிடலாமென்றும், ஆடிப் பதினெட்டில் சுவடிகளைத் தேர்போலக் கட்டிவிடுவது சம்பிரதாயமென்றும் சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடிமாதம் பதினெட்டாந்தேதி வாய்க்காலில் விட்டு விட்டேன்” என்றார். அவர் அதைச் சொல்லும்போது சிறிதும் வருத்தமுற்றவராகக் காணப்படவில்லை. எனக்குத்தான் மனம் மறுகியது. கரிவலம் வந்த நல்லூரில் ஏடுகளைத் தீக்கு இரையாக்கிய செய்தியைக் கேட்டபோது என் உள்ளம் எப்படியிருந்ததோ அப்படியே இங்கும் இருந்தது. தமிழின் பெருமையைச் சொல்லிய பெரியோர் சிலர் அது நெருப்பிலே எரியாமல் நின்றதென்றும், நீரிலே ஆழாமல் மிதந்ததென்றும் பாராட்டியிருக்கிறார்கள். அதே தமிழ் இன்று நெருப்பில் எரிந்தும், நீரில் மறைந்தும் புறக்கணிக்கப்படுவதை அவர்கள் பாராமலே போய் விட்டார்கள். பார்த்து இரங்குவதற்கு நாம் இருக்கிறோம்.

“உங்கள் வீட்டு ஏடுகளெல்லாம் வெள்ளத்திலே போய் விட்டனவென்று சொல்லுகிறீர்களே. இப்படிச் செய்வது நியாயமா?” என்று வருத்தந் தொனிக்கும் குரலில் கேட்டேன்.

அப்போது திரிகூட ராசப்பக் கவிராயர், “நான் வந்திருந்த சமயத்தில் கடைசித் தடவையாக ஏட்டுச் சுவடிகளை வாய்க்காலில் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அதைப் பார்த்தேன். கடைசியில் மிஞ்சியிருந்த சில ஏடுகளைக் கொண்டு போன ஒரு பையன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்து அந்தக் கட்டைப் பிடுங்கி உள்ளே பீரோவின் மேல் வைத்திருக்கிறேன். அதை எடுத்து வாருங்கள்” என்று வீட்டுக்காரரை நோக்கிச் சொன்னார்.

அந்தக் கட்டைக் கொணர்ந்து என் முன் போட்டார்கள். எனக்கு முன்பே எலி அந்தச் சுவடியை ஆராய்ச்சி செய்திருந்தமையால் பல ஏடுகள் துண்டு துண்டுகளாகக் கிடந்தன. அவை திருப்பூவண நாதருலா முதலிய சில பிரபந்தங்களின் பகுதிகளாக இருந்தன. சிலப்பதிகாரத் துணுக்குகளும் கிடைத்தன. அவற்றைப் பொறுக்கி எடுத்து வைத்துக்கொண்டேன். எழுத்துக்கள் தெளிவாகவும் பிழையின்றியும் இருந்தன. அவற்றைக் காணக் காண அகப்படாமற் போன ஏடுகளின் சிறப்பை நான் உணர்ந்து உணர்ந்து உள்ளழிந்தேன்.

‘சிறப்பதிகாரம்’

திருநெல்வேலியிலிருந்து திரிகூட ராசப்பக் கவிராயரையும் அழைத்துக்கொண்டு அம்பாசமுத்திரம் சென்றேன். இடையே ஓர் ஊரில் ஓர் அபிஷிக்தர் (சைவர்களின் குரு) வீட்டுக்குப் போனோம். எங்களை நெடுந்தூரத்தில் கண்டதும் அவ் வீட்டுக்காரராகிய அபிஷிக்தர் உள்ளே எழுந்து சென்றார். அவருக்கு எழுபது பிராயம் இருக்கும், அவருடைய குமாரன் ஒருவன் எங்களை வரவேற்றான். பிறகு உள்ளே சென்று ஒரு பலகை எடுத்து வந்து திண்ணையில் போட்டான். மற்றொரு பலகையைச் சுவரோரமாகச் சார்த்தினான். அவ்வாறு ஆசனம் அமைத்தவுடன் உள்ளிருந்து பெரியவர் வந்தார். காதில் ஆறு கட்டி சுந்தர வேடமும், தலையில் ருத்திராட்ச மாலையும், கழுத்தில் ருத்திராட்ச கண்டியும் அணிந்து கொண்டு அவர் வந்து பலகையின் மேலமர்ந்து, “வாருங்கள்” என்று எங்களை வரவேற்றார். அந்த அலங்காரமில்லாமல் சாதாரண மனிதராக மற்றவர் கண்களில் படக்கூடாது என்பது அவர் எண்ணம் போலும்! அவர் என்னுடன் வந்த திரிகூட ராசப்பக் கவிராயருக்குப் பழக்கமானவர்; அவருடைய உதவியைப் பெறுபவர்.

நாங்கள் திண்ணையில் அமர்ந்தோம், “எங்கே வந்தீர்கள்? அடிக்கடி உங்களைப் போன்ற கனவான்கள் இங்கே விஜயம் செய்கிறார்கள். நான் அவ்வளவு மரியாதைக்கு ஏற்றவனல்ல. என்ன விசேஷம்?” என்றார்.

“உங்களிடம் ஏட்டுச் சுவடிகள் இருப்பதாகக் கேள்வியுற்றேன். அவற்றைப் பார்க்கலாமென்று வந்தேன்” என்றேன்.

“அப்படியா? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

நான், “சிலப்பதிகாரம் வேண்டும்” என்றேன்.

“சிறப்பதிகாரமா? இருக்கும்” என்று அழுத்தந்திருத்தமாகச் சொன்னார்.

“சிறப்பதிகார மல்ல; சிலப்பதிகாரம்” என்று நான் இடை மறித்துச் சொன்னேன்.

“சிறப்பதிகார மென்றுதான் சொல்ல வேண்டும்; நீங்கள் சிறு பிள்ளை; உங்களுக்குத் தெரியாது” என்று கூறியபோது கவிராயர், “அது கிடக்கட்டும். புத்தகத்தைக் காட்டச் சொல்ல வேண்டும்” என்றார்.

“அவ்வளவு சுலபமாகக் காட்ட முடியுமா? இப்போதெல்லாம் அவற்றைத் தொடலாமோ? ஸரஸ்வதி பூஜையில்தான் அர்ச்சனை பண்ணிப் பூஜை செய்து எடுக்க வேண்டும்” என்றார்.

அவர் பேச்சிலிருந்து அவரிடம் பண்டம் ஒன்றும் இராதென்றே எனக்குத் தோன்றியது. ஆனாலும் கவிராயர் விடவில்லை. அந்தப் பெரியவருக்கு உதவி செய்பவராகையால், அவர்குமாரனை அழைத்து உள்ளே சென்று, “அந்தப் புத்தகத்தைக் காட்டு” என்று அதிகார தோரணையில் கூறினார். அவன் எடுத்துக் காட்டினான். பத்துப் பதினைந்து சுவடிகள் இருந்தன; அவை ஆகம ஏடுகளும் அந்திமக் கிரியையைப் பற்றிய சுவடிகளுமாக இருந்தன. நாங்கள் பேசாமல் விடை பெற்றுக் கொண்டோம்.

நாங்குனேரி

அப்படியே நாங்குனேரி போய் அங்குள்ள வானமாமலை மடத்தில் ஏடு தேடினேன். அங்கே எல்லாம் ஸம்ஸ்கிருதச் சுவடிகளாக இருந்தன. ஒரே ஒரு தமிழ்ச் சுவடி மாத்திரம் இருந்தது; அதுவும் நைடதம். தகடூர் யாத்திரைப் பிரதி கிடைக்குமோ என்ற கருத்தால் பல வீடுகளில் தேடினேன். கிடைக்கவில்லை. கணக்குத் தாதர் என்ற ஒருவர் வீட்டுக்குப் போய்ப் பார்த்தேன். ஏட்டுச் சுவடிகளின் கயிறுகளையெல்லாம் உருவி எடுத்துக் கொண்டு ஒரு கயிற்றில் பல சுவடிகளைக் கட்டியிருந்தார்கள். சுவடிகளைக் காட்டிலும் கயிறுதான் அவர்களுக்குப் பெரிதாகப் பட்டது கணக்குச் சுருணைகளும் கம்பராமாயண ஏடுகளும் கலந்திருந்தன. அவற்றில் என் கண்ணிற்பட்ட கம்ப ராமாயண ஒற்றை ஏடுகளை மாத்திரம் பெற்றுக் கொண்டேன்.

களக்காடு

நாங்குனேரியிலிருந்து களக்காட்டை அடைந்தேன். அங்கே இரண்டு சைவ மடங்கள் உண்டு. அவற்றுள் தெற்கு மடத்திற்குப் போய்ப் பார்த்தேன். அதன் தலைவராகிய சாமிநாத தேசிகரென்பவர் கல்வியிலும் குணத்திலும் சிறந்தவராக இருந்தார். நான் வந்த காரியத்தைத் தெரிந்து கொண்ட அவர் உடனே தாம் சுவடிகள் வைத்திருந்த மரப் பத்தாயத்தில் ஏணி வைத்து ஏறி அங்கிருந்த சுவடிகளையெல்லாம் எடுத்துப் போட்டார். இரண்டு நாட்கள் இருந்து எல்லாவற்றையும் பார்த்தேன். பல பிரபந்தங்களும், புராணங்களும், ஸம்ஸ்கிருத புத்தகங்களும் இருந்தன. சிலவற்றிற்குப் பெயர் இல்லாமல் இருந்தது. நான் பெயர் எழுதி வைத்தேன்.

பத்துப் பாட்டு மூலம் முழுவதும் அடங்கிய பழைய பிரதி அங்கே கிடைத்தது. ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினேன். “இதற்காக நான் எவ்வளவு அலைந்திருக்கிறேன்! முன்பே கிடைத்திருந்தால் எவ்வளவு அனுகூலமாக இருந்திருக்கும்! இரண்டாவது பதிப்புக்கு இதை உபயோகித்துக் கொள்வேன்” என்று கூறி அதைப் பெற்றுக் கொண்டேன்.

அதைப் பெற்ற சந்தோஷத்தால் மூன்றாவது நாளும் அங்கே இருந்தேன். அன்று அங்கே உள்ள ஆலயத்துக்குச் சென்று சத்தியவாகீச ரென்னும் திருநாமத்தையுடைய மூர்த்தியைத் தரிசித்தேன். மகா மண்டபத்தில் 21 கதிர்கள் உள்ள தூண்கள் இருந்தன. அந்த 21 கதிர்களையும் ஒருவர் தட்டினார். மூன்று ஸ்தாயியிலும் உள்ள 21 ஸ்வரங்கள் முறையே உண்டாவதைக் கேட்டு வியந்தேன். ‘கல்லை மென் கனியாக்கும் விச்சை’ என்று மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். அங்கே கல்லை மென்னரம்பாக்கும் விச்சைத் திறத்தைக் கண்டு மிக்க உவகை கொண்டேன். வீரமார்த்தாண்ட பாண்டியரென்பவர் திருப்பணி செய்த ஆலயம் அது என்று சொன்னார்கள்.

பிறகு, கிடைத்த சுவடிகளை எடுத்துக் கொண்டு திருநெல்வேலி வழியாகக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.