என் சரித்திரம்/114 சிலப்பதிகாரப் பதிப்பு

அத்தியாயம்—114

சிலப்பதிகாரப் பதிப்பு

திருக்குற்றாலத்திற்குப் போன போது மேலகரத்திலிருந்து திரிகூடராசப்பக் கவிராயர் அங்கே வந்திருந்தார். அவரைக் கண்டவுடன் அந்தப் பக்கங்களில் உள்ள பல ஊர்களுக்குச் சென்று ஏடு தேடலாமென்ற ஊக்கம் ஏற்பட்டது. “நான் ஊற்றுமலை போய் வந்தேன். கும்பகோணம் போனவுடன் சிலப்பதிகாரத்தை அச்சிட ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன் சுவடிகள் கிடைக்கக் கூடிய இடங்களுக்கு உங்கள் துணையைக் கொண்டு சென்று பார்த்து வர எண்ணுகிறேன்” என்றேன்.

அவர், “அப்படியே செய்யலாம்” என்றார்.

பிரபந்தச் சுவடிகள்

அவருடன் சொக்கம்பட்டி முதலிய பல ஊர்களுக்குப் போனேன். அங்கங்கே பல வித்துவான்கள் வீடுகளைப் பார்த்தேன். வித்துவான்கள் பலர் வறுமையால் வருந்துவதைக் கண்டு மிக வருந்தினேன். பழைய காலத்தில் இருந்த ஜமீன்தார்கள் நிறுவிய தர்மஸ்தாபனங்களைப் பார்த்தேன். ஸம்ஸ்தானாதிபதிகளைப் பற்றியும் வித்துவான்களைப் பற்றியும் பழங்கதைகளைச் சொல்லுவோர் அங்கங்கே இருந்தனர். சொக்கம்பட்டி ஜமீனில் மந்திரியாக இருந்த பொன்னம்பலம்பிள்ளை என்பவருடைய திறமையை விளக்கும் பல வரலாறுகளைக் கேட்டறிந்தேன்.

அப்பால் வாசுதேவநல்லூர், புளியங்குடி முதலிய ஊர்களுக்குப் போய்ப் பழைய நூல்கள் உள்ளனவா என்று தேடினேன். புளியங்குடியில் புலவர் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த ஊரின் பழம் பெயர் பூழியன்குடி என்று சொன்னார்கள். நான் அப்புலவர்களோடு பேசினேன். பல பழைய பாடல்களைச் சொன்னார்கள். தங்களிடமுள்ள ஏட்டுச் சுவடிகளைக் காட்டினார்கள். பள்ளு, குறவஞ்சி, குளுவ நாடகம், காதல், முளைப்பாட்டு, விதைப்பாட்டு, திருமுக விலாசம் முதலிய பிரபந்தவகைகளே இருந்தன. அவற்றில் அப்போது என் புத்தி செல்லவில்லை. ஆழ்ந்த தமிழ்ப் பயிற்சியும் சிறந்த கவித்துவமும் மங்கியிருந்த காலத்தில் ஜமீன்தார்கள் மனத்துக்கு உவப்பு உண்டாக்கவேண்டி இத்தகைய பிரபந்தங்களைப் புலவர்கள் இயற்றிப் பரிசு பெற்றார்கள். காப்பியகதியும் பழைய நூல் மரபும் புலவர்கள் ஆராய்ச்சிக்கு உட்படவில்லை. சொல்லடுக்குகளும், சிருங்காரமுமே அந்தப் பிரபந்தங்களில் மீதூர்ந்து நின்றன.

தென்காசி நிகழ்ச்சி

பிறகு தென்காசிக்கு வந்தேன். நைடதம் முதலியவற்றை இயற்றிய அதிவீரராமபாண்டியருடைய ஆசிரியர் வாழ்ந்து வந்த மடமொன்று அங்கே உண்டு. அவ்விடத்திற் போய்ப் பார்த்தேன். எனக்கு வேண்டியது ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு வீட்டில் சுப்பையா பிள்ளை என்ற கனவான் ஒருவரைச் சந்தித்தேன். அவர் தமக்குச் சில பழம் பாடல்கள் பாட முண்டென்று சொல்லி,

“உள்ளார் கொல்லோ தோழி சிள்ளெனப்
பருந்துவீழ்ந் தெடுத்த பைந்தலை யரவம்
காதறு கவண தேய்க்கும்
தீதுறு கள்ளியங் காடிறந் தோரே”

என்னும் செய்யுளைச் சொன்னார். நடையிலிருந்து அது சங்கச் செய்யுளாக இருக்குமென்று தோன்றியது.

“இவற்றை எங்கிருந்து தெரிந்து கொண்டீர்கள்?”

“என்னிடம் உள்ள ஏட்டுச் சுவடியில் இத்தகைய பல பாடல்கள் இருந்தன.”

“அப்படியா! அந்தச் சுவடிகளை நான் பார்க்கலாமா?”

“என் வீடு என் ஸ்வாதீனத்தில் இல்லை. என்னிடம் இருந்த சுவடிகள் என் சொத்தோடு பிறர் கையிற் போய் விட்டன.”

நான் ஒன்றை ஆவலோடு எதிர்பார்க்கும்போது அது நிறை வேறாமல் ஏமாற்றத்தை அடைதல் எனக்கு வழக்கமாகி விட்டது. சுப்பையா பிள்ளை சொன்ன பாடல்களும் அவர் முதலிற் கூறிய செய்திகளும், “இதுகாறும் பாராத ஒரு நூலை இன்று பார்க்கப் போகிறோம்” என்ற ஆவலை உண்டாக்கின. அவர் கடன் தொல்லை யால் எல்லாவற்றையும் இழந்து விட்டுத் தலைமறைவாக இருந்தாரென்பதைப் பிறகு அறிந்து மிகவும் வருந்தினேன். அவர் தம் சொத்தை இழந்தாரென்பதற்காக நான் வருந்தாமல், தமிழ்ச் செல்வம் அவர் கையை விட்டுப் போயிற்றே என்பதற்காக வருந்தினேன்.

“அப்படியானால் உங்களிடம் இப்போது ஒரு சுவடியும் இல்லையா? என்று மெலிந்த குரலோடு கேட்டேன்.

“சில ஒற்றை ஏடுகளும் இரண்டொரு புத்தகமும் உள்ளன” என்றார்.

அவற்றைக் காட்டும்படி கேட்டபோது அவர், “ஒரு வீட்டின் மச்சில் வைத்திருக்கிறேன். பகல் நேரத்தில் வந்து எடுத்துக் கொடுக்க முடியாது; ராத்திரி எடுத்து வருகிறேன்” என்று கூறினார்.

அன்று இரவு அந்த ஒற்றை ஏடுகள் அவரிடமிருந்து கிடைத்தன. அவற்றில் ஆறு செய்யுட்கள் இருந்தன.

சிற்றட்டகம் என்ற பழைய நூலைச் சேர்ந்தனவாக இருக்கு மென்று கருதினேன். இன்றளவும் அந்நூல் கிடைக்கவில்லை.

ஒற்றை ஏடுகளைப் பெற்றாலும் ஒரு பெருநூலையே பெற்றது போன்ற மகிழ்ச்சியை நான் அடைந்து சுப்பையா பிள்ளையைப் பாராட்டி விடைபெற்றுக் கொண்டேன். தென்காசியிலிருந்து வேறு சில ஊர்களுக்குப் போய்ப் பார்த்தும் சிலப்பதிகாரப் பதிப்புக்குப் பயன்படும் சுவடிகள் கிடைக்கவில்லை. ஆதலால் திரிகூடராசப்பக் கவிராயரிடம் விடைபெற்றுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

அடியார்க்கு நல்லாருரையிலுள்ள குறையைப் போக்கிக் கொள்ளுவதற்கு நான் அலைந்த அலைச்சலும் பட்ட சிரமமும் கொஞ்சமல்ல, ஐம்பது ஊர்களுக்கு மேல் பிரயாணம் செய்தேன். எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. இனிமேல் பிரயாணத்தை நிறுத்திக் கொண்டு சிலப்பதிகாரத்தை அச்சிடற்குரிய முயற்சிகளைச் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தேன். உடனே சிறுவயல் ஜமீன்தாருக்கெழுதித் திருமானூர்க் கிருஷ்ணையரைக் கும்பகோணத்திற்கு வருவித்தேன். அவரையும் வேறு அன்பர்களையும் வைத்துக்கொண்டு முடிந்தது முடித்தலாகப் பதிப்புக்கு வேண்டிய அங்கங்களைச் செப்பஞ் செய்யலானேன்.

அச்சுப் பிரதிகள்

சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டத்தின் மூலத்தை மாத்திரம் பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ஸ்ரீநிவாச ராகவாசாரியரென்பவர் முன்பு பதிப்பித்திருந்தார். ‘சேரமான் பெருமாணயனார் இயற்றிய சிலப்பதிகாரம்’ என்று அவர் பதிப்பித்தார். 1880-ஆம் வருஷத்தில் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் அக்காண்டத்தின் மூலத்தை அடியார்க்கு நல்லார் உரையோடு அச்சிட்டார். இரண்டு பதிப்புக்களும், அக்காலத்தில் சிலப்பதிகாரம் பாடமாக வந்தமையால் வெளியானவை. அவற்றிற் பல வகையான பிழைகள் இருந்தன. செட்டியார், கடின நடையாயுள்ளனவற்றை எளிய நடைகளாகச் செய்தும், வேண்டிய இடங்களில் விரித்துஞ் சுருக்கியும், கானல்வரிக்கு உரையின்மையால் உரையெழுதியும், அரங்கேற்று காதையுள் வரம்பின்றிப் பரந்த இசை நாடக இலக்கணங்கள் பல விடங்களிலும் வருதலால் ஆங்காங்குணர இங்குச் சுருக்கியும், அக்சிட்டதாக முகவுரையில் தெரிவித்திருக்கிறார். அதனால் அடியார்க்கு நல்லாருரை முழுதும் அப்படியே அப்பதிப்பில் அமைந் திருக்கவில்லை யென்பது தெரியவரும். அவர் மதுரைக் காண்டத்தையும் அச்சிட முயன்றும் அது நிறைவேறவில்லை.

ஏட்டுப் பிரதிகள்

இந்த இரண்டு அச்சுப் பிரதிகளால் எனக்கு ஒரு நன்மையும் உண்டாகவில்லை. நான் தேடித் தொகுத்தவற்றில் உரைப் பிரதிகள் பதினான்கும் மூலப் பிரதிகள் எட்டும் இருந்தன. அவற்றை நன்கு பரிசோதித்துத் தீர்மானமான பாடத்தைக் கைப்பிரதியில் அமைத்துக் கொண்டேன். பிறகு நூலுக்கு அங்கமான பகுதிகளைத் தொகுக்கத் தொடங்கினேன். தமிழ் நூற்பதிப்பில் நாளாக ஆக உண்டான ஆராய்ச்சிப் பழக்கமும் பண்டைத் தமிழ் நூலறிவும் புதிய புதிய முறைகளைத் தோற்றுவித்தன. சிந்தாமணிப் பதிப்பைக் காட்டிலும் பத்துப் பாட்டிற் சில புதிய பகுதிகளைச் சேர்த்தேன். அதைக் காட்டிலும் சிலப்பதிகாரத்தில் இன்னும் சில பகுதிகளை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு உதவியாகச் சேர்க்க வேண்டுமென்று தோற்றியது. அவற்றிற்குரிய விஷயங்கள் சிலப்பதிகார மூலத்திலும் உரையிலும் பல இருந்தன. அடியார்க்கு நல்லார் உரையினால் தெரியவரும் நூல்களைப் பற்றிய குறிப்புக்களை அவசியம் எழுத வேண்டுமென்ற ஆசை எனக்கு மிகுதியாக எழுந்தது. நூலாலும் உரையாலும் அறியப்படும் அரசர் முதலியோர் பெயர்களை வகைப்படுத்தி அகராதி வரிசையில் அமைக்க வேண்டுமென்பது மற்றொரு விருப்பம். இப்படி என்னுடைய ஆராய்ச்சி வகை விரிந்து கொண்டே சென்றது. தனித்தனியே விஷயங்களைப் பிரித்து வகைப்படுத்தி ஒவ்வொரு தலைப்பிட்டுத் தொகுத்து அகராதி வரிசையாக எழுதச் செய்தேன். என்னுடன் இருந்து உழைத்த மாணாக்கர்களும் அன்பர்களும் இந்த வேலையில் துணையாக இருந்தார்கள். காங்கேயம் ஜே. வி. சுப்பிரமணிய ஐயர் என்ற மாணாக்கர் மிகுதியான உதவியைச் செய்தார்.

பதிப்புக்குரிய ஆராய்ச்சி

அரும்பதங்களையெல்லாம் தொகுத்து அகராதியாக எழுதிக் கொண்டேன். அரிய விஷயங்களையெல்லாம் ஒன்றாக்கி விஷய சூசிகை என்ற தலைப்பிட்டுத் தனியே ஓர் அகராதி சித்தம்செய்தேன். இப்படியே நூலாலும் உரையாலுந் தெரிந்த அரசர்கள், நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள் பெயர்களுக்குத் தனித்தனியே அகராதியும் அடியார்க்கு நல்லாருரையிற் கண்ட நூல்களுக்கு அகராதியும், தொகையகராதியும், விளங்கா மேற்கோளகராதியும், அபிதான விளக்கமும் எழுதி முடித்தேன்.

சிலப்பதிகாரக் கதைச் சுருக்கமும், இளங்கோவடிகள் வரலாறும், அடியார்க்கு நல்லார் வரலாறும், மேற்கோள் நூல்களைப் பற்றிய குறிப்புக்களும் எழுதப் பெற்றன.

எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு முகவுரையை எழுதத் தொடங்கினேன். முந்தின நூற்பதிப்புக்களில் நூல் அச்சாகும் காலத்தில் முகவுரையை எழுதினேன். இதற்கு முதலிலே எழுதி விட்டால் பிறகு வேண்டியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாமென்றெண்ணினேன்.

ஏட்டுச் சுவடிகளின் நிலையைப் புலப்படுத்த வேண்டுமென்பது என் விருப்பம். ஆகவே முகவுரையில், “மேற்கூறிய பழைய பிரதிகள் பல, இனி வழுப்பட வேண்டுமென்பதற்கு இடமில்லாமற் பிழை பொதிந்து, அநேக வருடங்களாகத் தம்மைப் படிப்போரும், படிப்பிப்போரும் இல்லை என்பதையும், நூல்களைப் பெயர்த்தெழுதித் தொகுத்து வைத்தலையே விரதமாகக் கொண்ட சில புண்ணியசாலிகளாலேயே தாம் உருக் கொண்டிருத்தலையும் நன்கு புலப்படுத்தின. ஒன்றோடொன்றொவ்வாது பிறழ்ந்து குறைவுற்றுப் பழுதுபட்டுப் பொருட்டொடர்பின்றிக் கிடந்த இப்பிரதிகளைப் பரிசோதித்த துன்பத்தை உள்ளுங்கால் உள்ள முருகும்” என்று எழுதினேன்.

இவ்வாறு சிலப்பதிகாரத்தை அச்சிடுவதற்கு ஏற்ற நிலையில் அமைத்து நிறைவேறும் தருணத்தில் கொழும்பு பொ. குமாரசுவாமி முதலியாருக்கு அச்செய்தியைத் தெரிவித்தேன். சிலப்பதிகாரப் பதிப்புச் செலவை அவர் ஏற்றுக் கொள்வதாக முன்னர் எழுதியிருந்ததோடு அடிக்கடி அந்நூலைப்பற்றி விசாரித்து வந்தனர். அவர் தாம் ரூ. 300 அனுப்புவதாகத் தெரிவித்தார். சிலப்பதிகாரப் பதிப்பை நிறைவேற்றுவதற்கு அத்தொகை போதா விட்டாலும் ஏற்றுக்கொண்டேன்.

பதிப்பு ஆரம்பம்

1891-ஆம் ௵ ஜூன் ௴ கோடை விடுமுறையில் சென்னைக்குச் சென்று சிலப்பதிகாரத்தைப் பதிப்பிக்கத் தொடங்கினேன். திராவிட ரத்நாகர அச்சுக்கூடத்தார் கேட்ட அச்சுக்கூலி அதிகமாகத் தோன்றியமையால் வெள்ளைய நாடார் ஜூபிலி அச்சுக் கூடத்தில் அச்சிட ஏற்பாடு செய்தேன். பூந்தமல்லி ஹைரோடில் உள்ள அச்சுக்கூடத் தலைவராகிய தவசி முத்துநாடார் பங்களாவில் முதலில் தங்கினேன். பிறகு திவான் ராமையங்கார் தோட்டத்தில் ஜாகை வைத்துக்கொண்டேன். ராமையங்கார் மாப்பிள்ளையும் என் மாணாக்கருமாகிய வக்கீல் கே. ராஜகோபாலாசாரியரென்பவர் எனக்கு இடம் கொடுத்து வேண்டிய சௌகரியங்களையும் செய்வித்தார். திருமானூர்க் கிருஷ்ணையர் உடனிருந்து வேலைகளைக் கவனித்து வந்தார்.

சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரை மிகவும் சிதைந்திருந்தமையால் அதனைப் பதிப்பிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ‘சிலப்பதிகாரம் நிறைவேறட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஒரு முடிவு செய்யாமல் நிறுத்தினேன்.

சென்னையில் தங்கிய அக்காலத்தில் அந்நகரத்திலுள்ள பல வித்துவான்கள் வீட்டுக்குச் சென்று ஏட்டுச்சுவடிகளைத் தேடினேன். சரவணப் பெருமாளையருடைய கொள் பேரராகிய குருசாமி ஐயரென்பவர் வீட்டில் சிலப்பதிகார அரும்பத உரையில் பத்து ஒற்றையேடுகள் கிடைத்தன. அவற்றைப் பெற்று என்னிடமுள்ள ஏட்டோடு ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்தங்களைச் செய்து கொண்டேன். மற்றப் பகுதிகள் எங்கே போயினவென்று குருசாமி ஐயரைக் கேட்டபோது அவை போனவிடம் தமக்குத் தெரியவில்லை என்று சொல்லி விட்டார்.

இரு விருந்து

சிலப்பதிகாரப் பதிப்பு வேகமாகவே நடைபெற்று வந்தது. அச்சுக்கூடத்துக்கும் சாப்பாட்டு விடுதிக்கும் இடையே இரண்டு மைல் தூரம் இருக்கும், காலையில் 10 மணிக்கு ஆகாரம் செய்து விட்டுச் சென்றால் இரவு வந்து தான் உணவு கொள்வேன். ஒருநாள் இரவு 8 மணிக்கு உணவு கொள்ளும் விடுதியில் வந்து சாப்பிடும் போது ஆகாரம் நன்றாயிராமையால் தடுமாறினேன். நாற்றமுள்ள நெய்யும் உப்புக்காரம் இல்லாத குழம்பும் வேகாத அன்னமும் குடலைக் குமட்டிக் கொண்டு வந்தன. அப்போது அவ்விடுதிக்கு வடக்கேயுள்ள ஹநுமார் கோயிலில் இராமர் சந்நிதியில் சிலர் திவ்யப் பிரபந்த ஸேவை செய்து கொண்டிருந்தனர். அது காதில் விழுந்தது. உற்றுக் கவனிக்கையில் பெருமாள் திருமொழியென்று தெரிந்தது. உடனே எழுந்து கை கழுவிக்கொண்டு அங்கே சென்றேன்.

அன்று புனர்வசு நக்ஷத்திரம். ஸ்ரீ வைஷ்ணவப் பெரியார் பலர் குலசேகரப் பெருமாள் வாக்கிலிருந்து தசரதன் புலம்பலென்னும் பகுதியிலுள்ள பாசுரங்களை நிறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தனர். சிலர் எனக்குப் பழக்கமானவர்கள். நான் போனவுடன் எனக்கு இடம் கொடுத்துப் பின்னும் மெல்லச் சொல்லலாயினர். அந்தப் பாசுரங்களைக் காது குளிரக் கேட்டேன்; பசியை மறந்தேன். உடலிளைப்புக் கூடத்தீர்ந்தது போலத் தோன்றியது. இந்தச் செவி விருந்தோடு நிற்கவில்லை. அதன் பிறகு, நிவேதனமான சித்திரான்னங்களும் கிடைத்தன. இரட்டை விருந்து பெற்று மகிழ்ந்தேன்.

விடுமுறை நாட்கள் தீர்ந்து விட்டமையால் பதிப்பு வேலையைத் திருமானூர்க் கிருஷ்ணையரைக் கவனித்துக் கொள்ளும்படியும் புரூபை எனக்கு அனுப்பும்படியும் ஏற்பாடு செய்துவிட்டுக் கும்பகோணத்திற்கு வந்தேன்.