என் சரித்திரம்/122 நான் பெற்ற பட்டம்

அத்தியாயம்—122

நான் பெற்ற பட்டம்

ணிமேகலையின் பதிப்பு நடக்கையில் அந்நூலுக்கு அங்கமாக மணிமேகலையின் வரலாற்றைச் சேர்க்க எண்ணி அவ்வாறே கதைச் சுருக்கத்தை எழுதி முடித்தேன். பௌத்த சமய சம்பந்தமான செய்திகள் இந்நாட்டில் வழங்காமையால் அவற்றை மணிமேகலையின் குறிப்புரையில் அங்கங்கே விளக்கியுள்ளேன். ஆனாலும் தொடர்ச்சியாக அந்த மதக் கொள்கைகளைத் தனியே எழுதி நூலுக்கு அங்கமாகச் சேர்த்தால் படிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கு மென்பது என் கருத்து. மளூர் ரங்காசாரியரோடு மணிமேகலையைப் பற்றிப் பேசி விஷயங்களைத் தெரிந்து கொண்ட காலங்களிலெல்லாம் அவர் கூறுவனவற்றைத் தனியே குறித்து வைத்துக் கொண்டேன். பௌத்த மத சம்பந்தமான ஆங்கிலத்திலுள்ள நூற் பகுதிகள் சிலவற்றைச் சில அன்பர்களைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்தும் வைத்துக் கொண்டேன்.

மும்மணிகள்

புத்தர், பௌத்த தருமம், பௌத்த சங்கம் என்னும் மூன்றையும் பௌத்தர்கள் மும்மணிகள் என்று வழங்குதல் மரபு. என்னிடமிருந்த குறிப்புக்களின் உதவியால் அம் மும்மணிகளைப் பற்றிய வரலாறுகளை எழுதத் தொடங்கினேன். ரங்காசாரியர் கும்பகோணத்தில் இருந்த காலத்தில் நான் எழுதியவற்றை அவ்வப்போது அவரிடம் படித்துக் காட்டிச் செப்பம் செய்து கொண்டேன். மாற்றலாகி அவர் சென்னைக்குச் சென்ற பிறகு நான் சென்னைக்கு வரும் போதெல்லாம் அதுகாறும் எழுதியவற்றைப் படித்துக்காட்டுவேன். இடையிடையே தமிழ்ச் செய்யுட்களை நான் அமைத்திருத்தலைக் கண்டு அவர் மிக்க மகிழ்ச்சியடைந்து பாராட்டுவார்.

பாண்டித் துரைத் தேவர் வருகை

1896-ஆம் வருஷம் நவம்பர் மாதம் பாலவநத்தம் ஜமீன்தாராகிய பொ. பாண்டித்துரைத் தேவர் கும்பகோணத்திலிருந்த மௌன ஸ்வாமிகளைத் தரிசித்தற்கு வந்தார். அக்காலத்தில் அவரைத் தக்கபடி வரவேற்று உபசரித்துப் பல கனவான்கள் கூடிய மகா சபையில் அவரைப் பேசச் செய்தேன். இரண்டு மூன்று நாட்கள் அவர் கும்பகோணத்தில் தங்கியிருந்தார்; என் வீட்டுக்கு ஒரு முறை வந்தார். அப்போது பல அன்பர்களையும் அழைத்து உபசரித்து அவருடன் வந்திருந்த சங்கீத வித்துவான் சீனுவையங்கார், திருக்கோடிகா கிருஷ்ணையர் முதலியவர்களைக் கொண்டு என் வீட்டில் ஒரு சங்கீத விநிகை நடை பெறச் செய்தேன். என்னிடமிருந்த ஏட்டுச் சுவடிகளையெல்லாம் பாண்டித்துரைத் தேவர் பார்த்துப் பெருவியப்புற்றார். மணிமேகலை அப்போது அச்சாகி வருவது தெரிந்து அதற்குப் பொருளுதவி செய்வதாக வாக்களித்தார்.

என்னிடம் இருந்த புறத்திரட்டை அச்சமயம் அவரிடம் காட்டி அது பல பழைய நூல்களிலிருந்து திரட்டிய பல செய்யுட்களைக் கொண்டதென்பதைத் தெரிவித்தேன். “நான் பல நூல்களிலிருந்து நீதிகளைக் கூறும் செய்யுட்களைத் திரட்டி வகுத்து ஒரு நூல் வெளியிடலாமென்று எண்ணியிருக்கிறேன். இதை ஒரு முறை பார்த்தால் எனக்கு உபயோகமாக இருக்கும்” என்றார். அந்தச் சுவடியைச் சில மாதங்களுக்குப் பிறகு அவர் கும்பகோணத்துக்கு மகாமகத்துக்காக வந்த சமயம் பெற்றுக் கொண்டார்.

உத்தம சம்பாவனை

1897-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. அப்போது கும்பகோணத்திற் கூடிய கூட்டம் கணக்கில் அடங்காது. திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள மடத்தில் விஜயம் செய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து கூடினர்.

அப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில் வித்துவான்களுடைய உபந்நியாசங்களும் சல்லாபங்களும் நடைபெற்றன. ஒரு நாள் மிகச்சிறந்த வித்துவான்களைப் பூசித்து உத்தம சம்பாவனை செய்வதாக ஏற்பாடாகியிருந்தது. அம்பலவாண தேசிகர் ஆறு ஆசனங்களைப் போடச் சொல்லிப் பிரசித்தமான ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஐவரை ஐந்து ஆசனங்களில் அமரச் செய்தார். அவர்கள் அமர்ந்த பிறகு என்னை நோக்கி “அந்த ஆசனத்தில் இருக்க வேண்டும்” என்று ஆறாவது ஆசனத்தைக் காட்டினார். எனக்குத் துணுக்கென்றது. வாழ்நாள் முழுவதும் சாஸ்திரப் பயிற்சியிலே ஈடுபட்டு எழுத்தெண்ணிப் படித்துத் தாம் கற்ற வித்தைக்கே ஒளியை உண்டாக்கிய அந்தப் பெரியவர்கள் எங்கே! நான் எங்கே? நான் யோசனைசெய்து நிற்பதை அறிந்த தேசிகர், “என்ன யோசிக்கிறீர்கள்? அப்படியே இருக்க வேண்டும்” என்றார். “இவர்களுக்குச் சமானமாக இருக்க எனக்குத் தகுதி இல்லையே” என்றேன். தேசிகர், “தகுதி உண்டென்பதை இந்த உலகம் அறியும். இவர்களைப் போன்ற மகா வித்துவான்கள் இந்த நாட்டில் தேடிப்பார்த்தால் ஒருவேளை கிடைத்தாலும் கிடைப்பார்கள். தங்களைப் போல ஒருவர் அகப்படுவது அரிது” என்று அன்பொழுகக் கூறி வற்புறுத்தவே அந்த மகா மேதாவிகளுடைய வரிசையிலே பணிவோடு அமர்ந்தேன். இரட்டைச் சால்வையும் சம்மானமும் பெற்றேன். மணிமேகலையில் மேற்கொண்ட உழைப்பே அந்தப் பெருமைக்குக் காரணமென்று நான் எண்ணி இறைவன் திருவருளை வாழ்த்தினேன்.

பன்னூற்றிரட்டு

மகா மகத்துக்குப் பாண்டித்துரைத் தேவரும் அவருடைய நண்பரும் சிறந்த தமிழ் வித்துவானுமாகிய வீர. லெ. சிந்நய செட்டியாரும் வந்திருந்தனர். அவ்விருவர்களுடைய சல்லாபத்தாலும் நான் இன்புற்றேன். அப்போதுதான் புறத்திரட்டுப் பிரதியைப் பாண்டித்துரைத் தேவரிடம் சேர்ப்பித்தேன். பலநீதிச் செய்யுட்களை அவர் திரட்டிப் பன்னூற்றிரட்டு என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதற்குப் புறத்திரட்டு மிகவும் உதவியாயிருந்ததென்று தெரிய வந்தது.

குமாரனுக்கு விவாகம்

1897-ஆம் வருஷம் ஜுன் மாதம் என் குமாரன் சிரஞ்சீவி கலியாண சுந்தரத்துக்கும் நாகபட்டினத்தில் இருந்த ஸ்ரீ சக்கரபாணி ஐயரென்பவருடைய குமாரி கமலாம்பாளுக்கும் விவாகம் நடந்தது. அதைத் தொடர்ந்து கும்பகோணத்தில் வதூகிருகப் பிரவேசம் நடந்தது. அப்போது அம்பலவாண தேசிகர் முதலியவர்கள் எனக்குப் பல வகையில் உதவி புரிந்தார்கள். என் குமாரனுடைய விவாக தினம் விக்டோரியா மகாராணியாருடைய வைர ஜூபிலிக் கொண்டாட்ட நாள். பல இடங்களிலும் அக்கொண்டாட்டம் நடந்தது. கரூரில் ஜில்லா முன்ஸீபாக இருந்த ஸ்ரீ ஏ. சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் அவ்வூரில் நடந்த வைபவத்துக்கு மகாராணியார் விஷயமாகச் சில பாடல்கள் எழுதி அனுப்ப வேண்டுமென்று விரும்பியபடி எழுதியனுப்பினேன்.

மணிமேகலைப் பதிப்பு

மணிமேகலை மூலமும் அரும்பதவுரை முதலியனவும் 1898-ஆம் வருஷம் ஜுலை மாதத்தில் அச்சிடப் பெற்று நிறைவேறின. முகவுரையும், புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம், மணிமேகலைக் கதைச் சுருக்கம் என்பவையும் முதலில் சேர்க்கப் பெற்றன.

புத்தகம் வெளி வந்து உலாவியபோது எனக்குக் கிடைத்த பாராட்டுக்கள் பல. 59 தமிழ் நூல்களிலிருந்தும் 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள்களை என் குறிப்புரையிற் காட்டியிருந்தேன். இவற்றையன்றி, தமிழ் வடமொழி நூல்களின் உரையாசிரியர்கள் வாக்கிலிருந்து பல செய்திகளை அங்கங்கே கொடுத்தேன். அந்த நூல்களைப் பற்றியும் உரையாசிரியர்களைப் பற்றியும் நான் அறிந்துகொண்ட செய்திகள் யாவும் ‘அரும்பதவுரையிலடங்கியவை’ என்னும் பகுதியில் உள்ளன. புறத்திரட்டினால் தெரிந்த குண்டலகேசிச் செய்யுட்கள் சிலவற்றை அந்நூலைப் பற்றிச் சொல்லுமிடத்தில் சேர்த்திருந்தேன். அப் பகுதியைக் கண்ட அன்பர்கள், “இங்கிலீஷில் ‘என்ஸைக்ளோபீடியா’ என்று ஒரு வகை அகராதி உள்ளது. அதைப் போல இருக்கிறது இது. இந்த மாதிரி நீங்கள் ஒவ்வொரு நூலுக்கும் எழுதினால் கடைசியில் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு புத்தகமாகப் போட்டு விடலாம்” என்றார்கள். அத்தகைய பொருள் விளக்க அகராதி தமிழில் வேண்டுமென்ற ஆவல் இயல்பாகவே எனக்கு உண்டு. அவ்வன்பர்கள் கூறிய பிறகு அந்த ஆவல் அதிகரித்தது.

முதல் முதலாக நான் உரையெழுதிய நூல் மணிமேகலை. எனது உரை எளிய நடையில் அமைந்தமை பற்றிப் பலர் பாராட்டினர். பல விஷயங்களை விளக்குகின்றதென்று பலர் புகழ்ந்தனர். கிறிஸ்டியன் காலேஜில் தமிழாசிரியராக இருந்த வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார், “யான் இம் மணிமேகலைப் பதிப்பைப்பற்றி முகமனா வொன்றும் எழுதுகின்றிலேன். மிகவும் அற்புதமாயிருக்கின்றது. யான் விரும்பியாங்கே குறிப்புரையும் பிறரால் இது வேண்டும் இது வேண்டாவென்று சொல்லப்படாதவாறு செவ்வனே பொறித்திருக்கும் பெற்றிமையை யுன்னுந் தோறு மென்னுள்ளங் கழிபேருவகை பூக்கின்றது. இப்போழ்தன்றே யெந்தஞ் சாமிநாத வள்ளலைக்குறித்துக் குடையும் துடியும் யாமும் எம்மனோரும் ஆடிய புகுந்தாம். இன்னும் எம் மூரினராய் நின்று நிலவிய நச்சினார்க்கினிய நற்றமிழ்ப்பெருந்தகை போன்று பன்னூற் பொருளையும் பகலவன் மானப்பகருமாறு பைந் தமிழமிழ்தம் பரிவினிற்பருகிய பண்ணவர் பெருமான் எந்தம் மீனாட்சிசுந்தர விமலன் நுந்தமக்கு வாணாள் நீட்டிக்குமாறு அருள்புரிவானாக’ என்று எழுதினார்.

எனக்குக் கிடைத்த பட்டம்

இப்படி நாள்தோறும் மணிமேகலை புகுவித்த மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் கடிதங்களும் வார்த்தைகளும் என் பால் வந்து கொண்டேயிருந்தன. 1899-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 7-ம் தேதி வெளிவந்த ‘விவேக திவாகரன்’ என்னும் ஒரு பத்திரிகையில் ‘ஆனந்தன்’ என்ற புனை பெயரோடு ஓரன்பர் ‘பௌத்த சமயப் பிரபந்த பிரவர்த்தனாசாரியர்’ என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினார். தலைப்பைப் பார்த்தவுடன் பௌத்த சமய ஆசிரியர் ஒருவரைப் பற்றியது போலும் என்ற ஆவலோடு படிக்கத் தொடங்கினேன். ஆனால் விஷயம் என்னைப் பற்றியதாக இருந்தது.

“கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதரான உத்தமதானபுரம் சாமிநாதையரவர்கள் தனது கால முழுவதும் சங்கத்து நூல்களின் ஆராய்ச்சியினையே செய்து அதி புராதன அரிய பௌத்த சமய பிரபல கிரந்தங்களான சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலையாதி யச்சிட்டுத் தமிழ் நாடு முழுவதும் பரவச் செய்து அவர் படைத்த கீர்த்தி எத்தகையராலும் கொண்டாடத் தக்கதேயாம். ஐயரவர்கள் காலமெல்லாம் பௌத்த சமய நூல்களின் கையெழுத்துப் பிரதிகளைத் தேச தேசமாய், நாடு நாடாய், ஊரூராய், கிராமங் கிராமமாய், வீதி வீதியாய், வீடு வீடாய்ச் சென்று சம்பாதிப்பதிலும், அகப்பட்ட நூல்களைப் பரிசோதிப்பதிலும் அவற்றிற்கு அரும்பதவுரை எழுதுவதிலும், அவற்றிலுள்ள பௌத்த சமய ஆசாரியர்களின் சரித்திரங்களைத் தெரிந்து கொள்வதிலும் அவர்கள் மரபறிவதிலும் அவரெடுத்துக் கொண்ட முயற்சியும், கழிந்த காலமும், அடைந்த வருத்தமும் அளவு படுவனவல்ல. பௌத்த சமய ஆராய்ச்சியிலேயே எந்நாளும் அவர் மனம் நாடிக் கொண்டிருக்கும். அவர் இருக்கும் போதும் நடக்கும் போதும் சந்தியாவந்தனம் புரியும் போதும் சிவ பூஜை செய்யும் போதும் தூங்கும் போதும் பௌத்த சமய சிந்தனையே யன்றி வேறு கிடையாது. இங்ஙன மிலையேல் இத்தகைய அரிய கிரந்தங்களை வெளிப்படுத்தல் முடியாது. இவ்வுண்மை அவரச்சிட்ட நூல்களின் முகவுரைகளிற் காணலாம். புத்தர் பிராமணர் கொள்கைக்கு விரோதஞ் செய்தாரில்லை யெனப்பல ஐரோப்பியர்களின் அபிப்பிராயங்களை எடுத்தெழுதியிருக்கிறார். புத்தர் ஈசன் உண்டென்றாவது ஆன்மாக்கள் உண்டென்றாவது விளங்கக் கூறாமையினாலேயே திருஞானசம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் முதலியோர் மறுத்துரைத் தாரேயன்றி வேறு காரணமில்லையென்று காட்டியிருக்கின்றார்.

பௌத்த நூலின் கடைப் பக்கத்திலே சில தேவாரங்களையும் அச்சிட்டனர். ஜன்மாந்தர புண்யத்தினாலேயே இவ்வாராய்ச்சி ஐயரவர்கட்குச் சித்தித்திருக்கும் போலும். என்னை! உயிர் உடம்பினீங்குங் காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எந்நூல்களுக்கும் ஒத்த துணிபாகலின், இவ்வுண்மை, ‘மன்னுயிர் தாங்குங் கருத்தொடு ஆவயிற்றுதித்தனன்’ என்று கூறிய மணிமேகலை பாத்திர மரபு கூறிய காதையினும் 358-ஆம் திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய விசேட வுரையானும் காணலாம். பௌத்த சமய நூல்கள் ஆராய்ச்சி செய்பவர் இவரைக் காட்டிலும் வேறு இக்காலத்தில் அகப்படுவது அருமை. ஆதலின் பல தேயங்களிலுமுள்ள பௌத்த சமயர்கள் இவர்பால் நன்றி பாராட்டித் தங்கள் சமயத்துக்கேற்ற ஒரு பெரும் பட்டப் பெயர் இவருக்குச் சூட்டி அன்பு பாராட்டுவார்களென நம்புகின்றனம். அங்ஙனம் செய்யாரேல் அவர்கள் செய்ந்நன்றி கொன்றவரே யாவர். ஐயரவர்களின் முயற்சியின் பலனாக அடுத்த ஜன்மத்தில் ஐயர் புத்த குருவாக விளங்கினும் விளங்குவர். அங்ஙனமே பௌத்த சமய போதிநாதன் ஐயரவர் கட்கு அருள் புரிவாரென்பது நிச்சயம்.”

என்பால் இவ்வளவு மதிப்புடைய அவ்வன்பருடைய கட்டுரையைக் கண்டு நான் நகைத்தேன். அவருடைய ஸ்துதி நிந்தை எனக்கு வருத்தத்தை உண்டாக்கவில்லை. சிந்தாமணி முதலியவற்றையும் பௌத்த நூல்களின் வரிசையிலே சேர்க்கும் இந்த ஆனந்தருக்குத் தமிழ் நூல்களில் எவ்வளவு அன்பு உண்டென்பதை நானா சொல்லவேண்டும்?

என்னுடைய அன்பர்கள் இதைக் கண்டு சிரித்தார்கள். ‘பௌத்த சமயப் பிரபந்தப் பிரவர்த்தனாசாரியர்’ என்று எதிர்பாராமல் எனக்குக் கிடைத்த அப்பட்டத்தை நான் பெட்டியில் வைத்துப் போற்றி வந்தேன். வெளியிடும் சந்தர்ப்பம் இப்போதுதான் வாய்த்தது. முன்னே சிந்தாமணி பதிப்பித்த காலத்தில் ஒரு ஜைனப் பெண்மணி என்னை ‘பவ்ய ஜீவன்’ என்று அன்போடு அழைத்ததனால் நான் ஜைனனாகவில்லை. இப்போது இவர் குறிப்பாகப் புத்த சமய குருவென்றதால் நான் பௌத்தனாகவில்லை.

மேலே ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, பெருங்கதை என்பவற்றில் என் கருத்தைச் செலுத்தலானேன்.