என் சரித்திரம்/17 தருமம் வளர்த்த குன்னம்

அத்தியாயம்—17

தருமம் வளர்த்த குன்னம்

த்தமதானபுரத்தில் நாங்கள் சில காலம் இருந்த போது என் தந்தையார் பாபநாசம் முதலிய இடங்களில் உள்ள செல்வர்களிடம் சென்று வருவார். ஒருமுறை பாபநாசத்திற் சில பிரபுக்களுடைய வேண்டுகோளின்படி சில தினங்கள் நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்களை அவர் பாடிப் பொருள் கூறி வந்தார். சரித்திரம் நிறைவேறியவுடன் அப்பிரபுக்கள் 70 ரூபாய் (20 வராகன்) சேர்த்துச் சம்மானம் செய்தார்கள். என் தந்தையாருடைய கதாப்பிரசங்கத்தின் முடிவில் இருபது வராகன் சம்மானம் அளிப்பதென்பது ஒரு பழக்கமாகி விட்டது பாபநாசத்திற் பெற்ற தொகையைக்கொண்டு அவர் இடையிடையே தாம் வாங்கிய கடன்களைத் தீர்த்து வந்தார்.

குன்னம் சென்றது

மறுபடியும் நாங்கள் குன்னம் சென்று இராமையங்கார் வீட்டில் இருந்து வரலானோம். சிதம்பரம் பிள்ளை முதலிய செல்வர் பன்னிருவரும் தாங்கள் எழுதிக் கொடுத்தபடி மாதந்தோறும் பத்து ரூபாய் வீதம் அளித்து வந்தனர். என் தந்தையாருக்கு வரவர என் விஷயத்திற் கவனம் அதிகமாயிற்று. குடும்பப் பாதுகாப்பைப் பற்றிய கவலை குன்னத்தில் அவருக்குப் பெரும்பாலும் இல்லை. அவருடைய கதாப்பிரசங்கத்திற்கு மதிப்பு உயரஉயர அன்பர்களது ஆதரவு விரிவு பெற்றது. நான் சுறுசுறுப்புள்ளவனாகவும் கல்வியில் விருப்பமுள்ளவனாகவும் இருப்பதை உணர்ந்த அவருக்கு என் கல்வியபிவிருத்தியில் ஊக்கமும் கவலையும் இருந்தன. சங்கீதத் துறையில் எனக்குப்பழக்கம் மிகுதியாகி வந்தாலும் தமிழில் தனி விருப்பம் இருப்பதை அவர் அறிந்து கொண்டாரென்றே தோற்றியது அதனால் தம்முடைய கதாப்பிரசங்கங்களுக்கு என்னை உதவியாக வைத்துக்கொண்டதோடு தமிழ் நூல்களை நான் கற்றுவருவதற்குரிய ஏற்பாடும் செய்யத் தொடங்கினார்.

சிதம்பரம் பிள்ளையிடம் பாடம் கேட்டது

சிதம்பரம் பிள்ளையின் நட்பு எங்களுக்கு உண்டானதில் பல லாபங்கள் கிடைத்தன. அவர் தமிழிற் பயிற்சியுடையவர்; சில பிரபந்தங்களிலும் திருவிளையாடற் புராணம் முதலிய நூல்களிலும் சிறந்த பழக்கத்தைப் பெற்றிருந்தார். அவரிடம் நான் பாடம் கேட்கத் தொடங்கினேன். முதலிற் சில சிறு நூல்களைக் கேட்டுவிட்டுப் பிறகு திருவிளையாடற் புராணத்தை முறையாகக் கேட்டு வரலானேன். அவ்வூரிலிருந்த முத்தப் பிள்ளை என்ற அன்பர் நான் கேட்டுக்கொண்டபடி திருவிளையாடற் புராணப் புஸ்தகம் ஒன்றும் குறள் மூலமும் எனக்கு அளித்தார்; குறள் தெளிபொருள் விளக்கவுரைப் புஸ்தகம் ஒன்றையும் சில காலம் படித்துவிட்டுத் தரும்படி கொடுத்தார். அதை வைத்துக் குறளைப் படித்து வந்தேன்.

உதவிக் கணக்கு

என் வாழ்க்கையில் எனக்கு ஜீவனத்திற்கு ஏற்ற வழிகள் சில தெரிந்திருக்க வேண்டுமென்பது என் தகப்பனார் விருப்பம். “நாலு வித்தை தெரிந்திருந்தால் சமயம்போல் ஏதாவது ஒன்றைக்கொண்டு பிழைக்காலம்” என்பது அவர் எண்ணம். சங்கீதமும் தமிழும் ஒருகால் என் ஜீவனத்துக்கு உபயோகப் படாவிட்டால் வேறொரு தொழில் இருந்தால் நல்லதென்று அவர் நினைத்தார் போலும்! அக்காலத்தில் கிராமக் கணக்குப் பிள்ளைக்கு இருந்த கௌரவமும் செல்வாக்கும் மிக அதிகம். கணக்குப் பிள்ளையே ஒரு கிராமத்தில் பிரதான புருஷர். அவர் வைத்தது சட்டம். அவருக்கு அபசாரம் பண்ணினவன் தப்ப முடியாது. ஆதலால் இங்கிலீஷ் படிக்காத எனக்கு ஒரு கணக்குப்பிள்ளை வேலை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என் தந்தையார் மனோபாவம் அப்படியெல்லாம் விரிந்து சென்றது.

அரியிலூரிலேயே நான் ஒருவரிடம் கணக்குப் பழக்கம் செய்து வந்தேனல்லவா? அப்பழக்கத்தை விட்டுவிடாமல் குன்னத்திலும் சிதம்பரம் பிள்ளையிடம் இருந்து கணக்கு வேலை பழகி வந்தேன். என் தகப்பனார் எனக்குக் கணக்கு வேலை பழக்கி வைக்க வேண்டுமென்று மிக்க ஆவலாக அவரிடம் கேட்டுக் கொண்டார்.

நான் சிதம்பரம்பிள்ளையிடம் உதவிக் கணக்கு உத்தியோகத்தை வகிக்கலானேன். கிராமக் கணக்கு வகைகளைப் பதிவதற்குத் தனித் தனியே அச்சிட்ட ‘நமூனா’க்கள் வரும். அவற்றில் ஒழுங்காக ‘ரூல்’ போடுவது முதல் கணக்குகளைப் பதிவு செய்வது வரையில் எல்லா வேலைகளையும் நான் செய்து வந்தேன்.

இயற்கை தந்த இன்பம்

சிதம்பரம் பிள்ளை தினந்தோறும் கிராமத்திலுள்ள புன்செய்க் காடுகளுக்குச் சென்று வருவார்; கணக்குப் பிள்ளை உத்தியோக முறையில் நிலங்களிற் செய்யப்படும் சாகுபடி முதலியவற்றைக் கவனிப்பதற்குச் செல்வார். அச்சமயங்களில் நானும் அவருடன் செல்வேன். அவர் வழக்கப்படி காரியங்களைக் கவனிப்பார். அக்காடுகளின் தோற்றம் எனக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.

பயிர்கள் வகை வகையாகக் கொல்லைகளில் விளைந்து கதிர்விட்டிருப்பதும், அங்கங்கே புன்செய் நிலங்களில் இடையிடையே மொச்சை, துவரை முதலியவை வளர்ந்திருப்பதும் என் கண்களைக் கவரும். எவருடைய பாதுகாப்பையும் வேண்டாமல் இயற்கையாகப் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிகளும் துளசியும், நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கும் வில்வம், வன்னி முதலிய மரங்களும், மலர்ந்திருக்கும் அலரியும் பிறவும் இயற்கைத் தேவியின் எழிலைப் புலப்படுத்திக்கொண்டு விளங்கும். கம்பு விளையும் நிலத்தருகே கரைகளில் துளசி படர்ந்திருக்கும். கணக்குப்பிள்ளை கம்புப் பயிரை மாத்திரம் கண்டு மகிழ்வார்; அதனால் உண்டாகும் வருவாய்க் கணக்கில் அவர் கருத்துச் செல்லும். நான் அவரோடு பழகியும் அத்தகைய கணக்கிலே என் மனம் செல்வதில்லை. கம்பங் கதிர் தலை வளைந்து நிற்கும் கோலத்திலும் அழகைக் கண்டேன்; துளசி கொத்துக் கொத்தாகப் பூத்துக் கதிர்விட்டிருக்கும் கோலத்திலும் அழகைக் கண்டேன். “கம்பிலே தான் காசு வரும்; துளசியிலே என்னவரும்?” என்ற வியவகார புத்தி எனக்கு இல்லை. இரண்டும் என் கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சியை அளித்தன. வில்வமரமும் வன்னிமரமும் எனக்கு இயற்கைத் தாயின் எழில் வடிவத்தின் ஒரு பகுதியாகவே தோற்றின. மனிதன் வேண்டுமென்று வளர்க்காமல் தாமே எழுந்த அவற்றில் இயற்கையின் அழகு அதிகமாகவே விளங்கியது.

அங்கங்கே நீரோடைகள் உண்டு. அவற்றின் கரையிலே படர்ந்திருக்கும் பசுஞ்செடிகளின் காட்சியில் நான் ஊன்றி நிற்பேன். தினந்தோறும் காலையில் எழுந்து அவ்விடங்களுக்குச் சென்று பத்திர புஷ்பங்களை எடுத்து வந்து என் தந்தையார் பூஜைக்குச் சேர்ப்பிப்பேன்!

குன்னத்தில் என் மனத்திற்கு உத்ஸாகம் உண்டாவதற்கு மேலே கூறிய நிகழ்ச்சிகள் காரணமாயின. அடிக்கடி அவ்வூருக்கு வருவோர்களுடைய பழக்கத்தாலும் எனக்கு நன்மை உண்டாயிற்று.

தருமங்கள்

திருவையாறு முதலிய இடங்களிலுள்ள வைதிக பிராமணர் சிலருக்குக் குன்னத்தில் மான்யங்கள் இருந்தன. வருஷந்தோறும் அவர்கள் வந்து சில தினம் அங்கே தங்கிக் குத்தகைக்காரர்களிடமிருந்து தமக்குரிய தொகையைப் பெற்றுச் செல்வார்கள். அவர்களுக்கு ஊரினரும் பொருள் உதவி செய்வதுண்டு.

நாட்டாண்மைக்காரரிடம் ஊரின் பொதுப்பணம் இருக்கும். ஊரினர் தங்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் விசேஷங்களிலும் அறுவடைக் காலங்களிலும் தங்களுக்குரிய பங்கை உதவுவார்கள். அத்தொகைகளெல்லாம் பொதுப்பணமாக இருக்கும். வெளியூர்களிலிருந்து வரும் வித்துவான்களையும் பெரியோர்களையும் ஆதரிப்பதற்கும், ஊரின் பொதுச் செலவுகளுக்கும் அப்பணம் உபயோகமாகும்.

கிராமத்தில் தருமம் பொதுச்சொத்தாக இருக்கும்போது அங்கே பொருளுதவி பெற வருபவர்களுக்குக் குறைவு ஏது? மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி இரந்து அழைப்பாரும் வேண்டுமோ?

தருமத்தை இவ்வாறு வளர்த்து வந்த கிராமங்களுள் குன்னம் ஒன்று. அங்கே அடிக்கடி புலவர்களும் கவிராயர்களும் பாகவதர்களும் இவர்களைப் போன்றவர்களும் வந்து சில தினம் இருந்து தங்கள் தங்கள் ஆற்றலைக் காட்டிப் பரிசு பெற்றுச் செல்வார்கள்.

புலவர் வருகை

திருநெல்வேலியைச் சார்ந்த புளியங்குடி முதலிய இடங்களிலிருந்தும் கோயம்புத்தூர், சேலம் முதலிய இடங்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாகவும் இருவர் மூவராகவும் தனியாகவும் புலவர்கள் வருவார்கள். எல்லோரும் இலக்கண இலக்கியப் பயிற்சி நிரம்ப உடையவர்க ளென்று சொல்ல முடியாது. சிலருக்கு எளிய நடையில் விரைவாகச் செய்யுள் இயற்றும் பழக்கம் இருக்கும். சிலருக்குச் சில நூல்களில் மாத்திரம் பயிற்சி இருக்கும். ஆனால் எல்லோரும் தனிப் பாடல்கள் பலவற்றைப் பாடஞ்செய்து சமயத்துக் கேற்றபடி அவற்றைச் சொல்லிக் கேட்போரை மகிழ்விப்பார்கள். சிலர் மிக்க ஆடம்பரத்தோடு சில பேரைக் கூட்டிக்கொண்டு ஆரவாரம் செய்துகொண்டு வருவார்கள். வேறு சிலர் அடக்கமாக வருவார்கள். அவர்களுக்குக் கிராமத்தார் அளிக்கும் சம்மானம் ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரையில் இருக்கும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றபடி புலவர்களின் நடையுடை பாவனைகளில் வேறுபாடு காணப்படும். புளியங்குடியிலிருந்து வரும் புலவர்கள் ஆடம்பரத்தோடு வருவார்கள். பூவந்திக் கொட்டைச் சாயம் ஏற்றிய தலைக்குட்டையும் துறட்டுக் கடுக்கனும் அணிந்து கொண்டிருப்பார் புலவர் தலைவர். அவர் தம் கையில் ஒரு தடி வைத்திருப்பார். அவரோடு சிலர் மாணக்கர்களென்று சொல்லிக்கொண்டு வருவார்கள். ஒருவிதமான இசையோடு புலவர் சடசடவென்று சலிப்பின்றித் தனிப்பாடல்களைச் சொல்லுவார். தென்பாண்டி நாட்டுக் கவிராயர்கள் பாடல் சொல்லும் இசை ஒருவிதம்; கொங்கு நாட்டுப் புலவர்கள் சொல்லும் இசை ஒருவிதம்; திருச்சிராப்பள்ளியைச் சார்ந்தவர்கள் சொல்லுவது ஒருவிதம்.

இத்தகைய புலவர்கள் குன்னத்திற்கு வந்தால் முதலில் சிதம்பரம் பிள்ளையைப் பார்ப்பார்கள். பிறகு பலருடைய முன்னிலையில் தங்கள் புலமையை வெளிப்படுத்தி நன்கொடை பெற்றுச் செல்வார்கள். புலவர்கள் வருஷந்தோறும் வந்து செல்வார்கள். இக்கிராமங்களை நம்பியே அவர்கள் புலவர்களாகவும் கவிராயர்களாகவும் வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறு புலவர்கள் வரும்போது அவர்கள் கூறும் செய்யுட்களைக்கேட்டு நான் பாடம் பண்ணிக் கொள்வேன். அவர்களுடைய பழக்கம் என் தமிழ்ப் பசியை அதிகமாக்கிற்று.

ஆடம்பரப் புலவர்

ஒரு நாள் ஒரு புலவரும் அவரைச் சேர்ந்த பரிவாரங்களும் பெரிய ஆரவாரத்துடன் குன்னத்திற்கு வந்தார்கள். புலவர் ஒரு சிவிகையில் ஏறிவந்தார். அவரைச் சேர்ந்த மாணக்கர்களும் ஏவலாளர்களுமாகப் பத்துப் பதினைந்து பேர் ஒரு கூட்டமாக உடன் வந்தனர். பழங்காலத்தில் புலவர்களுக்கு அரசர் பல்லக்கு அளித்தனரென்று நான் கேட்டிருந்தேன். “இக்காலத்திலும் இந்தச் சிறப்பைப்பெற்றுள்ள இவர் பெரும்புலவராகத்தான் இருக்க வேண்டும். இவரிடமிருந்து பல விஷயங்களை நாம் தெரிந்துகொள்ளலாம்” என்று நான் சந்தோஷம் அடைந்தேன்.

சிவிகை சிதம்பரம் பிள்ளை வீட்டு வாயிலில் வந்து நின்றது. அதிலிருந்த புலவர் கீழே இறங்கினார். அதற்குள் அவருடைய மாணாக்கர் சிலர் தாம் கொணர்ந்திருந்த ஒரு விரிப்பை எடுத்துத் திண்ணையில் விரித்தார். ஒருவர் திண்டைக் கொணர்ந்து சாத்தினார். புலவர் மிகவும் கம்பீரமாகத் திண்ணையில் வந்து அமர்ந்தார். மற்றவர்கள் கை கட்டிக்கொண்டு நின்றார்கள். சிலர் வாரிய பனையேடும் கையுமாக நின்றார்கள். இக்கூட்டத்தைக் கண்டு ஊரார் கூடி விட்டனர்.

சிதம்பரம் பிள்ளை வந்து புலவரைக் கண்டார். “நீங்கள் எந்த ஊர்?” என்று விசாரித்தார்.

அவர், “நாம் பிறந்தது திரிபுவனம்; பிரதாப சிம்ம மகாராஜாவின் ஆஸ்தான வித்துவான்; வரகவி” என்று கூறினார். அப்பால் சிதம்பரம் பிள்ளை விஷயமாகத் தாம் இயற்றி வந்த செய்யுட்களை அவர் சொன்னார்.

அவருடைய ஆடம்பரமும் தொனியும் சூழ்ந்திருக்கும் பரிவாரத்தின் படாடோபமும் அவர் ஒரு ஸமஸ்தானத்து வித்துவானாகவே இருக்க வேண்டுமென்ற எண்ணத்தை யாவருக்கும் உண்டாக்கின. ஆனால் அவர் கூறிய செய்யுட்கள் அவருடைய உண்மையான சக்தியை வெளிப்படுத்தின. சிதம்பரம் பிள்ளை நல்ல தமிழறிவுடையவராதலின், “இவர் வெறும் ஆடம்பரப் புலவர்” என்பதை உணர்ந்து கொண்டார். அவர் கூறிய விருத்தம் ஒன்றில் நாலடிகளும் ஒத்து இராமல் இரண்டு அடிகள் அளவுக்கு மேற்பட்ட சீர்களை உடையனவாக இருந்தன. சிதம்பரம் பிள்ளை அப்புலவரை நோக்கி, “இவற்றில் சீர்கள் அதிகமாக இருக்கின்றனவே!” என்று கேட்டார்.

அவர் சிறிதும் அஞ்சாமல், “தங்களுக்கு சீர் அதிகமாக வேண்டுமென்று பாடியிருக்கிறேன். சீரைக் குறைத்து விடலாமோ?” என்று விடை கூறினார். கூறிவிட்டு அயலில் நின்றவர் முகங்களை நிமிர்ந்து பார்த்தார். சிதம்பரம்பிள்ளை மேலும் சில கேள்விகளைக் கேட்டார். புலவரோ சம்பந்தமில்லாத விடைகளை உரத்த குரலிற் சொன்னார். சிலருக்குச் சிதம்பரம் பிள்ளை கேட்ட வினாக்களுக்கு அப்புலவர் அநாயாசமாக விடை சொல்லுகிறாரென்றே தோன்றியது. சிதம்பரம்பிள்ளைக்கு ஒருபால் சிரிப்பும் ஒருபால் கோபமும் உண்டாயின.

அப்புலவர் இலக்கண இலக்கியப் பயிற்சி சிறிதும் இல்லாதவர். பழம் பாடல்களைச் சொல்லி இடையிடையே தாம் காணும் பிரபுக்களின் பெயர்களைச் செருகித் தாம் பாடியனவென்று ஏமாற்றிப் பணம் பறிப்பவர். சில இடங்களில் பொருள் தராதவரை வைது பாடுவதும் உண்டு “அறம் வைத்துப் பாடுவோம்” என்று பயமுறுத்தி ஜனங்களை நடுங்கச் செய்வதிலும் வல்லவர். ஒருவர் மேல் அறம் வைத்துப் பாடினால் அவர் இறந்து விடுவாரென்ற நம்பிக்கையொன்று அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தது. அவர் பெரும்பாலும் கல்விமான்கள் இல்லாத கிராமங்களாகப் பார்த்துச் சென்று ஜனங்களை மருட்டிப் பணம் ஈட்டி வருவார். இந்த ஊரையும் அப்படியே நினைத்து வந்தார் போலும்!

சிதம்பரம் பிள்ளைக்கு அவர்பால் கோபம் உண்டாயினும், “தமிழின் பெயரைச் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறானே; இவ்வளவு பேர்களையும் காப்பாற்ற வேண்டும்?” என்றும், அவர்களுக்கு ஒருவேளை உணவுக்காவது உதவ வேண்டுமென்றும் எண்ணி மூன்று ரூபாய் கொடுத்தார்.

அப்பொழுது புலவருக்கு வந்த கோபத்தைப் பார்த்தபோது அங்கு நின்ற பலர், “ஐயோ, இவர் சிதம்பரம் பிள்ளையின் மேல் அறம் வைத்துப் பாடிவிடுவாரோ’ என்ற பயத்தாலே கலக்கமடைந்தனர்.

“நான் பிச்சை எடுக்கவா வந்தேன்? ராஜாங்கத்து வித்துவானாகிய என் கௌரவத்தை நீங்கள் அறிந்ததாகத் தெரியவில்லையே” என்று அவர் படபடத்துப் பேசினர்.

தைரியசாலியாகிய சிதம்பரம் பிள்ளை புன்னகை செய்துகொண்டே அவரைத் தனியே அழைத்துச் சென்றார். “இம்மாதிரி என்னை மருட்டிவிடலாமென்று எண்ண வேண்டாம். உம்முடைய கல்வியின் ஆழம் இவ்வளவென்று எனக்குத் தெரிந்து விட்டது. இந்த மூன்று ரூபாயும் உம்மேல் இரக்கத்தால் கொடுப்பதேயன்றி உமது புலமைக்காக அன்று. அது வேண்டாமென்று பிடிவாதம் செய்தால் இதுவும் இல்லாமல் பட்டினியோடு வந்த வழியே போகவேண்டியதுதான். உம்முடைய ஆடம்பரத்தைக் கண்டு மயங்குவேனென்றும், வீண் வார்த்தைகளைக் கேட்டு அஞ்சுவேனென்றும் நினைக்க வேண்டாம்” என்று எச்சரித்தார். பாவம்! அந்தப் புலவர் அடங்கினார்; அந்த மூன்று ரூபாயை வாங்கிக்கொண்டு தம் கூட்டத்துடன் திரும்பிப் போய்விட்டார்.