என் சரித்திரம்/55 சிறு பிரயாணங்கள்

அத்தியாயம்—55

சிறு பிரயாணங்கள்

நான் பட்டீச்சுரம் சென்ற பின் என் தாய், தந்தையர் சூரியமூலையில் ஒருவாரம் இருந்துவிட்டு உத்தமதானபுரத்துக்குச் சென்று அங்கே என் சிறிய தந்தையார் முதலியவர்களுடன் வசிக்கலானார்கள். பட்டீச்சுரத்திலிருந்து ஒருமுறை என் ஆசிரியரும் ஆறுமுகத்தா பிள்ளையும் திருவலஞ்சுழி, ஆவூர், நல்லூர் முதலிய ஸ்தலங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்கள். நானும் உடன் சென்றேன். நல்லூரில் சுவாமிதரிசனம் செய்த பிறகு ஆசிரியர் என்னைப் பார்த்து, “உத்தமதானபுரம் இங்கேதானே இருக்கிறது! இங்கிருந்து எவ்வளவு தூரம் இருக்கும்?” என்று கேட்டார். நான் உடனே மிகவும் சந்தோஷமாக, “இதற்கு மேற்கே அரைமைல் தூரத்தில் இருக்கிறது; ஒரு நாழிகையிற் போய்விடலாம்” என்றேன்.

உடனே அவ்விருவரும் புறப்பட்டனர். அவ்விருவரையும் நான் அழைத்துக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தேன். ஊரில் என் பெற்றோர் முதலியவர்கள் திடீரென்று எங்களைப் பார்த்தபோது அளவற்ற சந்தோஷமடைந்தனர். அப்போது காலை பத்துமணி இருக்கும். உடனே என் பெற்றோர்கள் பிள்ளையவர்களுக்கும் ஆறுமுகத்தா பிள்ளைக்கும் ஒரு விருந்து செய்விக்க எண்ணி அதற்கு வேண்டியவற்றைக் கவனித்தார்கள். அவர்கள் இருவருக்கும் திருப்தியாக இருக்க வேண்டுமே என்று கருதி நானும் அம்முயற்சியில் இருந்தேன். என் சிறிய தந்தையாரும் மிக்க ஊக்கத்துடன் இருந்தார். அப்போது ஊராரும் இன்றியமையாத உதவியைச் செய்தார்கள்.

நாங்கள் செய்த விருந்து

எவ்விதமாக ஆகாரமாக இருந்தாலும் உள்ளன்பையே பெரிதாகக் கவனிப்பது என் ஆசிரியர் இயல்பு. ஆறுமுகத்தா பிள்ளையோ வெளிப்பகட்டான காரியங்களை விரும்புகிறவர். உபசாரங்களில் ஏதேனும் குறைவு இருந்தால் அவருக்கு வருத்தம் உண்டாகும். பிள்ளையவர்களுடன் வேறு சில இடங்களுக்குச் சென்றபோது அங்கே நிகழ்ந்த உபசாரங்களை ஆறுமுகத்தா பிள்ளை கவனித்து ஆராய்ந்து குறைகூறியதை நான் பார்த்ததுண்டு.

ஆகையால் அவர் மனம் திருப்தி அடையும்படி நடக்க வேண்டுமே என்ற கவலைதான் எனக்குப் பெரிதாக இருந்தது. ஏதோ ஒருவாறு அவர்களுக்கு விருந்து நடந்தது. ஆசிரியர் மிக்க திருப்தியைப் புலப்படுத்தினார். ஆறுமுகத்தா பிள்ளை அதிருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. என் தந்தையார் பிள்ளையவர்களோடு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்பு அவரும் சிறிய தந்தையாரும் சில தமிழ்ப்பாடல்களையும் அருணாசலகவி ராமாயண கீர்த்தனங்களையும் இசையுடன் பாடினார்கள். ஆசிரியர் கேட்டு மிகவும் மகிழ்ந்தனர். ஊரிலுள்ளவர்களெல்லாம் வந்து வந்து பிள்ளையவர்களைப் பார்த்துச் சென்றார்கள்; என் படிப்பின் வளர்ச்சியையும் தெரிந்துகொண்டார்கள். அன்று எங்கள் வீடு பெரிய கலியாண வீடுபோல இருந்தது. பிள்ளையவர்கள் உத்தமதானபுரத்துக்கு வந்திருப்பதை அறிந்து மாளாபுரம், பாபநாசம். உத்தமதானி முதலிய இடங்களிலிருந்து பலர் வந்து அவர்களைப் பார்த்துவிட்டுப் போனார்கள். ஒருநாள் முழுவதும் உத்தமதானபுரத்திலிருந்துவிட்டு நாங்கள் மூவரும் அப்பால் பட்டீச்சுரம் வந்து சேர்ந்தோம்.

பாடல் இயற்றும் பழக்கம்

ஒருநாள் பட்டீச்சுரத்தில் ஆறுமுகத்தா பிள்ளையின் காரியஸ்தர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். நான் இயற்றிய சில பாடல்களைச் சொல்லிக்காட்டினேன். பழநியாண்டவர் விஷயமாக நான் இயற்றியிருந்த ஒரு பாடலைச் சொன்னபோது அவ்வழியே என் ஆசிரியர் வந்தார். அப்பாட்டின் இறுதியடியாகிய “ஆபத்தை நீக்கியருள்வாய் பழநி யறுமுகனே” என்பது மாத்திரம் இப்போது என் ஞாபகத்தில் இருக்கிறது.

“என்ன பாட்டு அது?” என்று ஆசிரியர் கேட்டார். நான் பாடல் முழுவதையும் சொன்னேன். “யார் பாடியது?” என்று கேட்டபோது நான் இயற்றியதென்று தெரிவித்தேன். அதனைக் கேட்டு, “உமக்கு வாக்கு இருக்கிறது; அடிக்கடி செய்யுள் இயற்றிப் பழகிவர வேண்டும். பழகிவந்தால் நாளடைவில் சுலபமாக இருக்கும்” என்று சொன்னார். பிறகு, “நீர் செய்யும் பாடலை என்னிடம் சொல்வதில்லையே. ஏதாவது பாடல் செய்து சொன்னால் அவ்வப்போது திருத்திக்கொள்ளலாம்” என்றார்.

“என் பாடல்களில் பிழை மலிந்திருக்கும். அவற்றை ஐயாவிடம் சொல்ல நாணமாயிருக்கிறது” என்றேன்.

“இனிமேல் அப்படி இருக்க வேண்டாம். அடிக்கடி பாடல் செய்து சொல்லிக்காட்டும்” என்று அவர் கட்டளையிட்டார். நான் அது முதல் சில சில பாடல்களைச் சொய்து சொல்லிக்காட்டுவேன். “இன்னது இன்னபடி இருந்தால் இன்னும் நன்றாயிருக்கும்” என்று அவர் சொல்லுவார். அப்பழக்கத்தால் செய்யுள் செய்யும்போது கவனிக்கவேண்டிய சில விஷயங்களை ஆசிரியர் மூலம் நன்றாக உணர்ந்துகொண்டேன்.

பால போத இலக்கணம்

மற்றொரு நாள் பிற்பகலில் ஆசிரியரும் நானும் கும்பகோணம் சென்று தியாகராச செட்டியார் வீட்டில் தங்கியிருந்தோம். அன்று இரவு அங்கே இருந்து மறுநாள் பட்டீச்சுரம் போகலாமென்று செட்டியார் கேட்டுக்கொண்டதால் அப்படியே இருந்தோம்.

விசாகப் பெருமாளையர் எழுதிய பால போத இலக்கணமென்ற புஸ்தகம் மிகவும் விளக்கமாகவும் சுருக்கமாகவும் உள்ளதென்று தியாகராச செட்டியார் சொன்னார். அப்போது, “நான் அதை ஐயாவிடம் பாடங் கேட்கலாமா?” என்று கேட்டேன். “அப்படியே செய்யலாம்” என்று செட்டியார் சொன்னார். என்னிடம் அப்புஸ்தகம் இல்லாமையால் ஆசிரியர் செட்டியாரிடம் அவரது பிரதியை எனக்குக் கொடுக்கும்படி சொன்னார். அவர் பல காலமாக வாசித்துப் பழகின புஸ்தகமானதால் அதைக் கொடுக்க உடன்படவில்லை. புஸ்தகத்தை மாத்திரம் வாங்கி ஒருமுறை பார்த்துவிட்டு ஆசிரியர் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

மறுநாட் காலையில் நான் படுக்கையிலிருந்து எழுந்தபோது அருகில் பிள்ளையவர்களைக் காணவில்லை. தினந்தோறும் காலையில் அவர் விழித்தவுடன் என்னையும் எழுப்பி வெளியே அழைத்துச் செல்வது வழக்கம். அன்று அவர் விரைவில் எழுந்து வெளியே சென்றுவிட்டார் என்று அறிந்து திடுக்கிட்டேன். எனக்குக் காரணம் புலப்படவில்லை. வெளியே வந்து பார்க்கையில் அங்கே திண்ணையில் என் ஆசிரியர் உட்கார்ந்திருந்தார். அவர் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வந்திருப்பதாக அவர் தோற்றத்தால் உணர்ந்தேன். அவருக்கு அருகே கும்பகோணம் காலேஜில் உதவித் தமிழ்ப்பண்டிதராக இருந்த தி. கோ. நராயணசாமி பிள்ளை என்பவர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

என்னைக் கண்டவுடன் ஆசிரியர் தம் கையில் உள்ள ஒரு புஸ்தகத்தைக் காட்டி, “இதோ பால போத இலக்கணம்; இவரிடமிருந்த வாங்கினேன்; நீர் பாடம் கேட்கலாம்” என்றார். என் ஆசிரியர் விடியற்காலையிலே எழுந்து தனியே சென்று அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு அரை மைல் தூரத்திற்கு அப்பால் இருந்த நாராயணசாமி பிள்ளை வீட்டிற்குச் சென்று பாலபோத இலக்கணத்தை அவரிடமிருந்து வாங்கி வந்தனரென்றும், செட்டியார் புஸ்தகம் தர மறுத்ததை எண்ணி இவ்வாறு செய்தாரென்றும் தெரிந்துகொண்டேன்.

உடனே விரைவில் எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்து பாலபோத இலக்கணத்தைப் பாடங் கேட்க ஆரம்பித்தேன். நன்னூலைப் பாடங் கேட்டவனாதலின் அப்புஸ்தகத்தின் அருமை எனக்கு விளங்கியது. அதனை முற்றும் இரண்டுமுறை பாடங் கேட்டேன். இடையிடையே ஆசிரியர் அப்புஸ்தகத்தின் அமைப்பைப் பாராட்டியதோடு விசாகப் பெருமாளையரைப் பற்றிய வரலாற்றையும் எடுத்துச் சொன்னார். அன்று காலையில் நாங்கள் பட்டீச்சுரம் வந்து சேர்ந்தோம்.

உத்தியோக விருப்பம்

இடையிடையே நாங்கள் கும்பகோணத்துக்குச் சென்று தியாகராச செட்டியாரோடு பேசிப் பொழுதுபோக்குவோம். விடுமுறை நாட்களில் செட்டியாரே பட்டீச்சுரத்திற்கு வருவார். அவ்வாறு வரும்போது பட்டீச்சுரத்தில் ஆறுமுகத்தா பிள்ளையின் வீடு கலகலப்பாக இருக்கும். செட்டியார் கண்டிப்பாகப் பேசினாலும் அப்பேச்சில் ஒரு சுவை இருக்கும். அவர் வந்தாலே பிள்ளையவர்களுக்கும் எனக்கும் மிக்க சந்தோஷமுண்டாகும்.

இவ்வாறு அடிக்கடி தியாகராச செட்டியாருடைய சந்திப்பு நேர்ந்ததனால் எனக்கும் அவருக்கும் உள்ள பழக்கம் வரவர வலிமை பெற்றது. உள்ளொன்று வைத்துப் புறம்பே அன்புடையார் போல நடவாமல் வெளிப்படையாகத் தம் எண்ணங்களை வெளியிடும் அவரிடம் எனக்கும் அன்பு உறுதிபெறத் தொடங்கியது. ஒரு காலேஜில் அவர் ஆசிரியராக இருந்தமையாலும் சிறந்த அறிவாளியாதலாலும் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்ததை நான் உணர்ந்தேன். கும்பகோணத்தில் அவர் வீட்டில் தங்கின காலங்களிற் பல கனவான்கள் அவரிடம் வருதலையும் பிறரிடம் அவர் நடந்துகொள்ளும்விதத்தையும் கவனித்தேன். அதனால் அவருக்கிருந்த நன்மதிப்பு எனக்கு நன்றாக வெளியாயிற்று. செட்டியார் தம் உத்தியோகத்தின் சார்பினால் ஒருவருடைய தயையையும் எதிர்பாராதநிலையில் இருந்தார். பிள்ளையவர்கள் சில சமயங்களில் தம் ஜீவனத்துக்குப் பிறர் கையை எதிர்பார்க்கும் நிலைமையில் இருந்ததையும் கவனித்த நான் “நாமும் இப்படியே இருக்க நேரும்” என்பதை அவ்விருவருடைய இயல்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்து அறிந்துகொண்டேன்.

இந்த உணர்ச்சி ஏற்பட்டது தொடங்கி, “நமக்கும் ஓர் உத்தியோகம் இருந்தால் பொருட் கவலையின்றி இருக்கலாமே” என்ற நினைவு எனக்கு உண்டாயிற்று. ஒருமுறை தியாகராச செட்டியாரைச் சந்தித்த காலத்தில், “எனக்கு எங்கேனும் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்துக்கொடுத்தால் மெத்த உபகாரமாக இருக்கும். அதையும் பார்த்துக்கொண்டு ஒய்வு நேரங்களில் ஐயாவிடமும் படித்து வருவேன்.” என்று சொல்லியிருந்தேன். இது பிள்ளையவர்களுக்குத் தெரியாது. “சமயம் வந்தால் பார்க்கலாம்” என்று செட்டியார் சொல்லியிருந்தார்.

என்‌ நன்மையை உத்தேசித்தது

ஒருநாள் தியாகராச செட்டியார் பட்டீச்சுரம் வந்திருந்தபோது அவர் என்னிடம், “கும்பகோணத்தில் (ராவ் பகதூர்) அப்பு சாஸ்திரிகள் முதலிய மூன்று கனவான்கள் சேர்ந்து நேடிவ் ஹைஸ்கூல் என்ற பெயருடன் ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள். அம்மூவரும் என்னிடத்தில் அன்புள்ளவர்கள். அப்பள்ளிக்கூடத்திற்கு ஒரு தமிழ்ப்பண்டிதர் வேண்டும், தக்கவர் ஒருவரைப் பார்த்துச் சொல்லவேண்டும் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடனே உம்முடைய ஞாபகம் வந்தது. முதலில் மாதம் பதினைந்து ரூபாய் தருவார்கள். பிறகு சம்பளம் உயரும்” என்றார். அதைக் கேட்டபோது ஏற்றுக்கொள்ளலாமென்ற எண்ணமே எனக்கு முதலில் உண்டாயிற்று. பிள்ளையவர்களிடம் நாங்கள் இருவரும் இவ்விஷயத்தைத் தெரிவித்தோம்.

அவர் சிறிது நேரம் பேசாமல் இருந்தார். அவர் மனத்துள் பலவகையான எண்ணங்கள் ஓடினவென்று தோற்றியது. பிறகு தியாகராச செட்டியாரைப் பார்த்தார். “தியாகராசு, இப்போது என்ன அவசரம்! இவர் இன்னும் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கவில்லை. உத்ஸாகமாகப் படித்துவருகிறார். இப்பொழுதே உத்தியோகத்துக்குப் போய்விட்டால் இவ்வளவு ஊக்கமாகப் படிக்க முடியாது. நேரமும் கிட்டாது. இன்னும் சில வருஷங்கள் படிக்கட்டுமே; அப்பால் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம்” என்றார். என் விருப்பத்தைக் கேளாமலே அவர் சொன்னாலும் எனக்கு எது நன்மையோ அதை யோசித்தே அவர் அவ்வாறு கூறினார். செட்டியாரும் அவர் சொன்னதை ஒப்புக்கொண்டார். “ஐயா சொல்வது உண்மைதான். இளமையிலே படிப்பதுதான் நிற்கும். நாள் ஆக ஆக உயர்ந்த உத்தியோகம் உம்மையே தேடிவரும். நீர் கவலைப்பட வேண்டாம். இவர்களிடம் நன்றாகப் படித்துக்கொண்டிரும்” என்று என்னிடம் சொன்னார்.

நானும் யோசித்துப் பார்த்தேன். அவ்விருவரும் என் நன்மையை உத்தேசித்தே சொல்வதை உணர்ந்து என் விருப்பத்தை மாற்றிக்கொண்டேன்.

திருச்சிராப்பள்ளி யாத்திரை

ஸ்ரீமுக வருஷம் ஐப்பசி மாதம் (1873 அக்டோபர்) என் ஆசிரியர் சில முக்கியமான காரியங்களின்பொருட்டுத் திருச்சிராப்பள்ளிக்குப் பிரயாணமானார். அவருடன் நானும் சென்றேன் அக்காலத்தில் நாகபட்டினத்திலிருந்து தஞ்சாவூர் வழியாகத் திருச்சிராப்பள்ளி செல்லும் ரெயில்பாதை ஒன்றுதான் இருந்தது. அதனால் நாகபட்டினத்திற்கும் தஞ்சைக்குமிடையேயுள்ள நீடாமங்கலம் சென்று அங்கே ரெயிலேற வேண்டியிருந்தது. பட்டிடீச்சுரத்திலிருந்து நீடாமங்கலம் வரையில் வண்டியிலே சென்றோம் அப்படிப் போகும்போதே திருப்பெருந்துறைப் புராணத்திலே பெருந்துறைப் படலத்தில் முப்பது செய்யுட்களை ஆசிரியர் சொல்ல நான் எழுதினேன்.

நீடாமங்கலத்தில் ரெயிலேறித் திருச்சிராப்பள்ளி போய்ச் சேர்ந்தோம். அங்கே சிலகாலம் தங்கியிருந்தோம். பிள்ளையவர்கள் பிறந்த ஊராதலின் இளமையிலே அவர்களோடு பழகியவர்களும் பாடங் கேட்டவர்களுமாகிய பலர் வந்து வந்து பார்த்துப் பாராட்டிச் சென்றார்கள். அப்பொழுதப்பொழுது என் ஆசிரியர் தம் இளமைக்காலத்து நிகழ்ச்சிகளைச் சொல்லக்கேட்டு நான் மகிழ்ந்தேன். வந்தவர்களிடம் அவர்கள் விருப்பத்தின்படி திருப்பெருந்துறைப் புராணச் செய்யுட்களைப் படித்துக்காட்டச் செய்து ஆசிரியர் பொருள் கூறுவார். அவர்கள் கேட்டு அவருடைய கவித்துவம் எவ்வளவு விருத்தியடைந்திருக்கிறதென்பதை அறிந்து புகழ்வார்கள்.

திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள சிவஸ்தலங்களுக்கு நாங்கள் சென்று வந்தோம். அந்த யாத்திரையில் ஒவ்வொரு நாளும் நான் புதிய புதிய மனிதர்களையும் புதிய புதிய இடங்களையும் கண்டுகளித்துக் கவலை எள்ளளவுமின்றி இருந்தேன். பிரயாண காலத்தில் ஸ்தல தரிசனம் செய்யும்போது அந்த அந்த ஸ்தலத்து மூர்த்திகளின் பெருமைகளையும், ஸ்தல வரலாறுகளையும் ஆசிரியர் மிகவும் விரிவாக எனக்குச் சொல்லுவார். அப்போது என் மனத்துக்கு மிக்க இன்பமாயிருக்கும். பல புஸ்தகங்களைப் படித்தும் பல பெரியோர்களைக் கேட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய அருமையான விஷயங்களை ஆசிரியர் சொல்லுகையில், “இதுவும் ஒரு சிறந்த படிப்புத்தானே” என்று நான் எண்ணுவது உண்டு. சில வாரங்களுக்குப் பின் ஆசிரியரும் நானும் பட்டீச்சுரம் வந்து சேர்ந்தோம்.