என் சரித்திரம்/67 சந்திரசேகர கவிராஜ பண்டிதர்

அத்தியாயம்—67

சந்திரசேகர கவிராஜ பண்டிதர்

சுப்பிரமணிய தேசிகரது அன்பு வர வர விருத்தியானதை நான் பல வகையிலும் உணர்ந்தேன். கும்பகோணம் முதலிய இடங்களிலுள்ள கனவான்களை ஏதேனும் முக்கியமான விஷயமாகப் பார்த்துப் பேசி வர வேண்டுமானால் தேசிகர் என்னை அனுப்புவார்.

சங்கட நிலை

அக்காலத்திற் கும்பகோணத்துக்கு இருப்புப்பாதை ஏற்படாமையால் திருவாவடுதுறையிலிருந்து நான் பெரும்பாலும் கும்பகோணத்துக்கு அடிக்கடி நடந்தே செல்வேன். கிட்டத்தட்ட 12 மைல் தூரம் இருக்கும். அங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துப் பேசவேண்டியவற்றைப் பேசி விஷயங்களை அறிந்து வருவேன். இரவு கும்பகோணத்தில் தங்கும்படி நேரிட்டால் எனக்கு ஆகாரம் கிடைப்பது கஷ்டமாகி விடும், தெரிந்தவர் யாரும் இல்லாமையால் எந்த வீட்டுக்கும் போவதில்லை. சாப்பாட்டு விடுதியில் போய்ச் சாப்பிடக் கையில் பணம் இராது. இந்நிலையில் எங்கேனும் தருமத்துக்குச் சாப்பாடு கிடைக்குமாவென்று விசாரிப்பேன்.

கும்பகோணம் மகாமகதீர்த்தத்தின் கீழ்பாலுள்ள அபிமுகேசுவர ஸ்வாமி கோவிலில் தேசாந்தரிகளுக்கு உணவு அளிப்பதற்கு ஒரு தர்மசாலை இருந்தது. அங்கே சென்று என் பசியைத் தீர்த்துக் கொண்டு தர்ம சாலையை ஏற்படுத்திய மகா புருஷனை மனமார வாழ்த்துவேன். சில சமயங்களில் நான் யாரைப் பார்க்கப் போவேனோ அவர் என்னோடு நெடுநேரம் பேசியிருந்துவிட்டால் தர்ம சாலையில் அகாலமாய்விடும். ஆகாரம் கிடைக்காது.

நான் போகும் இடங்களில் அங்கேயுள்ளவர்கள் எனக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுப்பார்களென்று சுப்பிரமணிய தேசிகர் எண்ணியிருப்பார். நான் மடத்தில் வேண்டிய பொருள்களை எளிதிற் பெற்றுக் கொள்பவனாதலால் இத்தைய சந்தர்ப்பங்களில் எனக்கு வேண்டிய சௌகரியங்களை நானே செய்து கொள்வேனென்று நினைத்திருக்கலாம். அக்கனவான்களோ, மடத்திலிருந்து வரும் எனக்கு மடத்தாராலேயே எல்லாவித சௌகரியங்களும் அமைந்திருக்குமென்று நினைப்பார்கள். இவ்விருசாராரும் இவ்வாறு நினைப்பதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் ஒன்றையும் வெளிக்காட்டாமல் நான் கஷ்டத்துக்கு உள்ளானேன். உண்மை தெரிந்தால் இருசாராரும் மிகவும் வருத்தமுறுவார். “அவர்களே தெரிந்து கவனித்தாலன்றி நாம் தெரிவிப்பது சரியன்று” என்று எண்ணி வந்த காரியத்தைக் கவனிப்பதையே கடமையாக நான் கொண்டிருந்தேன்.

புதிய பண்டிதர்

கும்பகோணம் காலேஜில் இருந்த தியாகராஜ செட்டியார் 1-8-1876 முதல் ஆறு மாதங்கள் ரஜா எடுத்துக் கொண்டார். அவருடைய ஸ்தானத்தில் சித்தூர் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக இருந்த தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதரென்பவரை நியமித்தார்கள். அவர் சென்னையில் மிக்க புகழ் பெற்ற வித்துவானாக விளங்கிய ஸ்ரீ விசாகப் பெருமாளையரிடம் பாடம் கேட்டவர்; அவர் எழுதிய பஞ்ச லக்ஷண வினாவிடை, பால போதவிலக்கணம் என்பவற்றையும், நன்னூல் விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுரை, தண்டி யலங்கார வுரை, வச்சணந்தி மாலை முதலிய நூல்களையும் அச்சிட்டவர்; தமிழ் நாட்டில் அங்கங்கே வழங்கும் தனிப் பாடல்களையெல்லாம் திரட்டித் தனிப் பாடற்றிரட்டு என்ற பெயரோடு முதல் முதல் வெளியிட்டவர் அவரே.

சென்னையில் பலகாலமிருந்து தாண்டவராய முதலியார் முதலிய வித்துவான்களோடு பழகிய அவரைப் பார்த்துப் பேச வேண்டுமென்ற விருப்பம் சுப்பிரமணிய தேசிகருக்கு இருந்தது. அவர் வேலையிலமர்ந்து ஒரு மாத காலமாயிற்று. சுப்பிரமணிய தேசிகருடைய புலமையையும் சிறந்த குணங்களையும் அவரும் கேள்வியுற்றவராதலின் அப் பெரியாரைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவலோடிருந்தார். ஆனாலும், “பெரிய இடமாயிற்றே; நாம் போனால் அவர்களைச் சுலபமாகப் பார்க்க முடியுமோ முடியாதோ! அவர்கள் விஷயமாக ஏதேனும் ஒரு பிரபந்தம் இயற்றிக் கொண்டு போய்ப் பார்க்கலாம்” என்று எண்ணிச் சுப்பிரமணிய தேசிகர் விஷயமாக ஒரு நான்மணிமாலையை இயற்றினார்.

தேசிகர் ஆவல்

சுப்பிரமணிய தேசிகருக்குப் பண்டிதரைப் பார்த்துப் பேச வேண்டுமென்ற ஆவல் அதிகமாயிற்று. ஆதீன வித்துவானும் தேசிகருக்குத் தமிழ்ப் பாடம் சொன்னவருமான தாண்டவராயத் தம்பிரானென்னும் புலவர் சிகாமணி சென்னையில் சில காலம் இருந்தவர். அங்குள்ள வித்துவான்களோடு பழகினவர். சுப்பிரமணிய தேசிகர் அத்தம்பிரான் மூலமாகச் சென்னைப் புலவர்களுடைய பெருமையை அறிந்திருந்தார். சந்திரசேகர கவிராஜ பண்டிதர் மூலமாகப் பின்னும் விரிவாகத் தெரிந்து கொள்ள அப்போது எண்ணினார்.

ஒரு நாள் தேசிகர் என்னை அழைத்து, “இன்று கும்பகோணம் வரையில் போய் வர வேண்டும்” என்று சொன்னார்.

வழக்கப்படி மடத்துக் காரியமாக யாரிடமேனும் அனுப்புவார் என்று எண்ணினேன். “சந்திரசேகர கவிராஜ பண்டிதரிடம் நாம் பார்த்துப் பேச விரும்புகிறோமென்று தெரிவித்து அவரை அழைத்து வர வேண்டும்” என்று அவர் சொன்னபோது ஒரு வித்துவானுடைய பழக்கத்தைத் தாமே வலிந்து செய்து கொள்வதை அவர் ஒரு குறையாக எண்ணவில்லையே யென்பதை உணர்ந்து நான் விம்மிதம் அடைந்தேன்.

சந்திரசேகர கவிராஜ பண்டிதரைப் பார்த்துப் பழக வேண்டுமென்ற விருப்பம் எனக்கும் மற்ற மாணாக்கர்களுக்கும் இருந்தது. என் இளமையில் தமிழில் சுவை உண்டாக்கிய தனிப்பாடற்றிரட்டு அவராற் பதிப்பிக்கப் பெற்றதென்ற நினைவு அவரிடம் எனக்கு அதிக மதிப்பை உண்டாக்கியது. நான் உடனே கும்பகோணத்தை நோக்கிப் புறப்பட்டேன்.

அவரது ஆவல்

கும்பகோணத்தில் அவரைக் கண்டு விஷயத்தைத் தெரிவித்த போது அவர், “நான் பெரிய அபசாரம் செய்துவிட்டேன். சந்நிதானத்தின் பெருமையை நான் நன்றாக கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த ஊருக்கு நான் வந்தவுடனே அங்கே வந்து ஸந்நிதானத்தைத் தரிசித்திருக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. ஒரு பிரபந்தமும் இயற்றியிருக்கிறேன்” என்று சொன்னார். திருவாவடுதுறை மடத்தைப் பற்றியும் சுப்பிரமணிய தேசிகரைப் பற்றியும் பிள்ளையவர்களைப் பற்றியும் விசாரித்தார். நான் சொல்லச் சொல்ல அவர் கேட்டு மிக்க மகிழ்ச்சியை அடைந்தார். அப்பால், “இன்று காலேஜூக்குப் போக வேண்டியிருக்கிறது. இந்தச் சனிக்கிழமை காலையில் அங்கே வந்து ஸந்நிதானத்தை அவசியம் தரிசிக்கிறேன். அப்படியே சொல்ல வேண்டும்” என்றார்.

திரும்பி நான் திருவாவடுதுறைக்குப் பிற்பகல் மூன்று மணிக்கு வந்து தேசிகரிடம் நடந்த விஷயத்தைத் தெரிவித்தேன். தாம் சொன்னபடியே சந்திரசேகர கவிராஜ பண்டிதர் சனிக்கிழமை காலையில் தம் குமாரராகிய சிவகுருநாத பிள்ளை என்பவரை அழைத்துக் கொண்டு திருவாவடுதுறைக்கு வந்தார். தேசிகர் அவரோடு மிக்க சந்தோஷமாகச் சம்பாஷணை செய்தார். விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர். மகாலிங்கையர், தாண்டவராய முதலியார், ராமானுஜ கவிராயர் முதலிய வித்துவான்களைப் பற்றி விசாரித்தார். அவர்களுடைய குணவிசேஷங்களையும், அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையுள்ள வரலாறுகளையும் பண்டிதர் எடுத்துச் சொன்னார்.

நான்மணி மாலை

தாம் தேசிகர் மீது இயற்றி அச்சிட்டுக் கொணர்ந்த நான்மணி மாலையை அன்று பிற்பகலில் பண்டிதர் மடத்திற் படித்துப் பிரசங்கம் செய்தார். அப்போது தம்பிரான்களும், வேறு மாணாக்கர்களும், மதுரை இராமசாமி பிள்ளையும், சில வித்துவான்களும் இருந்தார்கள். அப்பிரபந்தத்தில் செய்யுள்தோறும் சுப்பிரமணிய தேசிகருடைய பெயர் வரவில்லை. அது முறையன்றென்று தம்பிரான்கள் ஆட்சேபம் செய்தார்கள். அப்போது அங்கே வந்திருந்த கும்பகோணம் டவுன் ஹைஸ்கூல் ஸம்ஸ்கிருத பண்டிதர் சடகோபாசாரியரென்பவர் அவரை நோக்கி, “என்ன, பதில் சொல்லாமலிருக்கிறீர்களே? இந்த நூலை எடுத்துக் கொண்டு போய் மற்றோர் ஆதீனத்தில் இதே பாட்டைப் படித்துக் காட்டலாமே. இந்த ஆதீனகர்த்தரைப் பற்றியதுதானென்பதற்கு ஒவ்வொரு பாட்டிலும் அடையாளம் இருக்க வேண்டாமோ?” என்று கேட்டார். அப்படி அவர் வெட்டெனப் பேசியதைக் கேட்டபோது எனக்கே மிக்க வருத்தமுண்டாயிற்று. கவிராஜ பண்டிதரோ பொறுமையோடு பேசாமலிருந்து விட்டார். அந்தத் தடைக்கு விடை சொல்லும் ஆற்றல் அவருக்கு இருந்தாலும் அனாவசியமாக விவாதத்தைக் கிளப்ப அவர் விரும்பவில்லை.

பாராட்டு பாடல்

நான்மணிமாலை முற்றும் பிரசங்கம் செய்து நிறைவேறியது. மறுநாள் பண்டிதர் தேசிகர் மீது பல புதிய பாடல்களை இயற்றிச் சொல்லிக் காட்டினார். அவரைப் பாராட்டி அப்போது பின்வரும் பாடலை நான் சொன்னேன்:-

“வற்றா வருட்சுப் பிரமணி யப்பெயர் வள்ளல் மலர்ப்
பொற்றாட் புகழைப்பல் பாமாலையாகப் புனைந்தழகாச்
சொற்றா னியற்சந் திரசே கரபண்டித சுகுணன்
சற்றாய் பவர்களும் முற்றா மகிழ்வு தலைக்கொளவே.”

சுப்பரிமணிய தேசிகர் தம் ஸந்தோஷத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தினர். பண்டிதர் மகிழ்ந்து என்னைப் பாராட்டி,

“நேமிநா தன்வழுத்தும் நித்தன் கைலையுறை
வாமிநா தன்புகழை வாழ்த்து மென்மேல்-தோமினற்சீர்
சாமிநா தக்கவிஞன் சாற்றும் பனுவலைப் போல்
பாமினா ளும்பகர் வளோ”

என்ற செய்யுளைச் சொன்னார்.

[நேமிநாதன் - திருமால். வாமிநாதன் - சிவபெருமான்; வாமி - உமை. பாமினாள் - கலைமகள்.]

தம்பிரான்களும் சடகோபாசாரியரும் கேட்ட கேள்விகளால் மன அமைதியை இழந்திருந்த பண்டிதர் என்னுடைய பாட்டினால் மிக்க மகிழ்ச்சியுற்றார். அதன் விளைவாக எழுந்ததே இச்செய்யுள்.

தம்பிரான்கள் கூற்று

மடத்திலிருந்து எல்லோரும் வெளியே வந்தவுடன் அவர்கள் பண்டிதரைப் பற்றி என்னிடம் குறைகூறத் தொடங்கினார்கள். “என்னையா பண்டிதர் அவர்? தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு. அவரிடத்தில் சந்நிதானத்துக்கும் உங்களுக்கும் அவ்வளவு மோகம் ஏற்பட்டது ஏன்? அவர் பாட்டு ஒன்றாவது ரசமாயில்லையே. அவர் சொன்ன பாட்டு உங்களைப் பாராட்டுவதற்காக உத்தேசித்ததன்று. நீங்கள் பாடியது போல விரைவில் பாடத் தமக்கும் முடியு மென்பதைச் சந்நிதானத்துக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதுதான் அவர் நோக்கம். பாடினாரே அந்தப் பாட்டுத்தான் எவ்வளவு லட்சணம்! ‘வாமிநாதன் புகழை வாழ்த்து மென்மேல்’ என்று தம்மைத் தாமே புகழ்ந்து கொள்கிறாரே. கடைசியடியில் சரியான படி மோனையையே காணோமே.”

நான் அவர்களைக் கையமர்த்தி, “வித்துவான்களை இப்படி அவமதிப்பது பிழை. அவர் இந்த ஆதீனத்தைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்? உங்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமலா அவர் பேசாமலிருந்தார் சில பழைய நூல்களில் இத்தகைய அமைப்பு உண்டு. அவர் பெருமை உங்களுக்குத் தெரியாது. பெரிய வித்துவானிடம் பாடங் கேட்டவர்” என்று சமாதானம் சொன்னேன்.

பண்டிதர் சில நாள் திருவாவடுதுறையிலேயே தங்கினார். அப்போது நான் அவருடனிருந்து பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். சுப்பிரமணிய தேசிகரிடம் அவர் சாஸ்திர விஷயமான சந்தேகங்களைத் தெரிந்து கொண்டார். தனிப் பாடற்றிரட்டை இரண்டாமுறை பதிப்பிக்க உத்தேசித்திருப்ப தாகவும் எனக்குத் தெரிந்த தனிப் பாடல்களையும் திரட்டி அனுப்பினால் சேர்த்துக் கொள்வதாகவும் சொன்னார். தேசிகர் அவருக்குத் தக்க மரியாதை செய்து விடை கொடுத்தனுப்பினார்.

கவிராயர்

கும்பகோணத்தில் இருந்த காலத்தில் கவிராஜ பண்டிதர் சில முறை திருவாவடுதுறைக்கு வந்துபோனதுண்டு. பிற்காலத்தில் எனக்கும் அவருக்கும் அடிக்கடி கடிதப்போக்கு வரவு நடை பெற்றது. அவர் விரும்பியபடியே தனிப்பாடற்றிரட்டு இரண்டாம் பதிப்பில் உபயோகித்துக் கொள்ளும்படி நான் பல பாடல்களை எழுதியனுப்பினேன். அவற்றுள் என் பாடல்களும் சில உண்டு. அவர் எல்லாவற்றையும் சேர்த்துப் பதிப்பித்தார். அவர் என் பாடல்களை, “திருவாவடுதுறைச் சாமிநாத கவிராயர் பாடியவை” என்று தலையிட்டு அச்சிட்டிருந்தார். பார்த்த சுப்பிரமணிய தேசிகர் “சம்பிரதாயம் தெரியாமல் இப்படிப் போட்டிருக்கிறாரே!” என்று புன்முறுவல் பூத்தார்: நாங்களும் சிரித்தோம்: “கவிராயர் வாள்” என்று நண்பர் சிலர் என்னை அழைத்து நகைக்கலாயினர்.