என் சரித்திரம்/81 பிரியா விடை

அத்தியாயம்—81

பிரியா விடை

கும்பகோணம் காலேஜில் வேலை பார்க்கும்படி என்னை அனுப்புவதற்குச் சுப்பிரமணிய தேசிகர் சம்மதித்தனரென்ற செய்தி மிக விரைவில் எங்கும் பரவியது. மடத்தின் தொடர்புடையவர்களெல்லோரும் இது கேட்டு வருந்தினார்கள். தியாகராச செட்டியார் பகற்போசனத்திற்குக் கூட இராமல், “வீட்டில் ஒரு திதி நடக்க வேண்டும்” என்று சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்லி விரைவில் விடைபெற்றுக் கும்பகோணம் போய்விட்டார்.

நான் வீட்டுக்குச் சென்று என் தாய் தந்தையரிடம் விஷயத்தைச் சொன்னபோது அவர்கள் சந்தோஷமென்றும் துக்கமென்றும் தெரியாத ஒரு நிலையில் இருந்தார்கள், எனக்கோ ஒரே மயக்கமாக இருந்தது. பழகிய இடத்தின்பாலுள்ள பற்றும் புதிய இடத்தின் கௌரவமும் ஒன்றனோடு ஒன்று போராடி என்மனத்தை அலைத்தன.

தேசிகர் கருத்து

சுப்பிரமணிய தேசிகர் தீபாரதனை செய்து விட்டுப் பெரிய பூஜையிலிருந்து அடியார்களுக்கு விபூதி கொடுப்பதற்கு ஒடுக்கம் செல்வது வழக்கம். தம்பிரான்கள் பலரும் அடியார்கள் பலரும் பின் தொடர்ந்து செல்வார்கள். அப்போது சின்னப்பண்டார ஸந்நிதிகள் சுப்பிரமணிய தேசிகருக்குக் கை கொடுத்து அழைத்து வருவார்.

அன்றைத் தினம் பூஜை நடந்த பிறகு தேசிகர் ஒடுக்கத்துக்கு வந்தனர். என்னைக் கும்பகோணத்திற்கு அனுப்பும் விஷயத்தைப் பற்றியே அவர் மனமும் சிந்தித்திருக்க வேண்டும். அப்போது அவர் சின்னப் பண்டார சந்நிதியைப் பார்த்து, “சின்னப் பண்டாரம், சாமிநாதையரைத் தியாகராச செட்டியார் வேலைக்குப் போகும்படி சிபார்சு செய்து விட்டோம். செட்டியார் நேற்று வந்து சென்றது அவரை அழைத்துப் போவதற்காகத்தான். நாமும் சம்மதித்து யோக்கியதா பத்திரிகையும் சிபார்சுக் கடிதமும் எழுதிக் கொடுத்திருக்கிறோம்” என்றார்.

நமசிவாய தேசிகர் வியப்புற்று, “அப்படிச் செய்யலாமா? இடத்தின் வழக்கங்களெல்லாம் அவர் நன்றாகத் தெரிந்தவர். வருகிற வித்துவான்களுக்கும் பிரபுக்களுக்கும் பிரியமாக நடந்துகொள்பவர். மாணக்கர்களுக்கு நன்றாகப் பாடம் சொல்லிவருகிறார். அவர் இருப்பது இவ்விடத்திற்கு உபயோகமாகவே இருக்கிறது. அவரை அனுப்புவதில் அடியேனுக்குச் சம்மதம் இல்லை” என்றார்.

மடத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் இத்தகைய எண்ணமே இருந்தது. எல்லோரும் சுப்பிரமணிய தேசிகர் இதற்கு எவ்வாறு சம்மதித்தாரென்றே எண்ணி வியந்தனர். மற்றவர்கள் வற்புறுத்தினாலும் என்னை மடத்தை விட்டு வெளியே அனுப்ப அவர் உடன்படாரென்றே அவர்கள் நினைத்திருந்தனர்.

நமசிவாய தேசிகர் கூறியதைக் கேட்ட ஆதீனத் தலைவர் தம் கருத்தைத் தெளிவாக்கலானார். “நீர் சொல்வது சரியே; அவரால் மடத்துக்கு எவ்வளவு உபயோகம் உண்டென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் அவருடைய நிரந்தரமான நன்மையைக் கருதியே இதற்கு நாம் சம்மதித்தோம். இங்கே நாம் உள்ள வரைக்கும் அவருக்கு ஒரு குறைவும் நேராது. காலம் ஒரே மாதிரி இராது. நம் காலத்திற்குப் பிறகு அவரிடம் நம்மைப்போலவே அன்பு செலுத்திப் பாதுகாப்பார்களென்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. யாரேனும் ஒருவர் இங்கே திடீரென்று தோன்றி, ‘இவர் சொல்லுகிற பாடத்தை நானே சொல்கிறேன். இவருக்குச் சம்பளம் கொடுப்பது அனாவசியம்’ என்று சொல்லக்கூடும். பிறகு அவர் என்ன செய்வார்! இந்தமாதிரி இடங்களில் பல பேருடைய தயை இருந்தால் தான் நிலைத்து நிற்க முடியும். தலைவர் முதல் உக்கிராணக்காரன் வரையில் எல்லோருடைய பிரியத்தையும் ஒருவர் பெற்று இருப்பதென்பது அருமையிலும் அருமை. நம்மால் ஆதரிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் சௌக்கியமாக இருக்க வேண்டுமென்பது நம் கருத்து. அதனால் சாமிநாதையர் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து விட்டால் பிறகு அவருடைய விருத்திக்கு ஒரு குறைவும் நேராதென்று எண்ணியே அவரை அனுப்பலானோம். அவர் சௌக்கியமான நிலையில் இருப்பதை நாம் இருக்கும்பொழுதே கண்ணாற் பார்த்து விட வேண்டும்” என்றார்.

தேசிகர் உள்ளக் கருத்தை யாவரும் அறிந்து அவருடைய தீர்க்க தரிசனத்தை வியந்தனர். அப்போது உடன் சென்ற மதுரை இராமசாமி பிள்ளை இச்சம்பாஷணையை அப்பால் எனக்குத் தெரிவித்தார்.

பிற்பகலில் தேசிகர் என் தந்தையாரையும் சிறிய தாயார் கணவரையும் அழைத்து வரச் செய்து தம்முடைய தீர்மானத்தைச் சொன்னார். அவர்கள் கலங்கினார்கள். தேசிகர் தக்க சமாதானங்களை எடுத்துச் சொன்னார்.

நல்ல வேளை

அப்பால் மூன்று மணிக்கு ஜோஸ்யரை வருவித்து நாள் பார்க்கச் சொன்னதில் அவர், “இன்று ராத்திரி எட்டு மணிக்கே நல்ல வேளையாக இருக்கிறது; அப்பொழுது அனுப்பலாம்” என்று சொன்னார். உடனே தேசிகர் எனக்குச் சொல்லியனுப்பி வருவித்து, “இன்று ராத்திரி உம்மை அனுப்புவதாக இருக்கிறோம். ஸித்தமாக இருக்க வேண்டும்” என்று கூறினார். எனக்கு மனம் மிகவும் கலங்கியது. அவ்வளவு சீக்கிரத்தில் பிரிய வேண்டியிருக்குமென்று நான் நினைக்கவே இல்லை. வியாழக்கிழமையன்று இந்தப் பிரஸ்தாவம் ஆரம்பமானதிலிருந்து இதன் சம்பந்தமாக நடந்து வந்த ஏற்பாடுகள் தெய்வ சங்கற்பம் எதை நடத்துகிறதோ அது மிக வேகமாக நடைபெறுமென்பதையும் மற்ற நிகழ்ச்சிகளெல்லாம் அதனைச் சார்ந்து அனுகூலம் விளைவிக்குமென்பதையும் உணர்த்தின.

“இன்றைக்கு ராத்திரியேயா புறப்பட வேண்டும்?” என்று நான் மெல்லத் தழுதழுத்த குரலுடன் கேட்டேன்.

“ஆமாம், ஜோஸ்யரைக் கொண்டு நாள் பார்த்ததில் ராத்திரி எட்டு மணிக்கு மேல் புறப்படுவது மிகவும் நல்லதென்று சொன்னார். நல்ல காரியத்தை விரைவிலே நிறைவேற்றுவதுதான் சிறந்தது” என்றார் தேசிகர்.

எனக்குப் பேச நா எழவில்லை. வீட்டுக்குப் போய்ப் பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்யத் தொடங்கினேன். ஏற்பாடு என்ன செய்யப் போகிறேன்! எதைக் கொண்டு போவது, எதை விட்டுப் போவது என்று விளங்கவில்லை. ஏதோ கைக்கு அகப்பட்ட ஆடைகளையும் புஸ்தகங்களையும் எடுத்துகொண்டேன்.

தேசிகர் விடை தருதல்

மாலையில் சுப்பிரமணிய தேசிகர் கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்துவிட்டு மடத்துக்கு வந்து என்னை வரும்படி சொல்லியனுப்பினார். போனேன். “சரியான காலத்தில் நீர் புறப்பட வேண்டும்” என்று அவர் சொல்லி ஒரு மகமல் சட்டை, ஒரு தலைக்குட்டை, ஒரு சின்னச் சட்டை, சரிகை போட்ட பெரிய வெள்ளைத் துப்பட்டா, உயர்ந்த சால்வை ஒன்று ஆகியவற்றை அளித்து, “எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்ளும்” என்று அன்பு ததும்பச் சொன்னார். பிறகு, கருங்காலிப் பெரிய கைப்பெட்டி ஒன்று, கை மேஜை ஒன்று, ஒரு சிறிய கைப் பெட்டி, கொழும்பிலிருந்த அடியார் ஒருவர் கொண்டு வந்து கொடுத்திருந்ததும் நாற்பது ரூபா விலையுள்ளதுமாகிய தந்தப் பிடியமைந்த பட்டுக் குடை ஒன்று ஆகியவற்றையும் கொணரச் செய்து ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வோர் அரைக்கால் ரூபாய் போட்டு எனக்கு வழக்கினார். மெய்க்காட்டு உத்தியோகத்தில் இருந்த ஷண்முகம் பிள்ளை என்பவரை அழைத்து, “நாளைத்தினம் நீர் கும்பகோணத்துக்குப் போய் இவர் காலுக்குப் பாப்பாஸ் ஜோடு வாங்கிக் கொடுத்து இந்தக் குடைக்கு உறையும் போட்டு இன்னும் இவருக்கு என்ன என்ன ஆக வேண்டுமோ அவற்றைச் செய்து விட்டு வாரும்” என்றார்.

என்னைப் பார்த்து, “சாமிநாதையர், நாம் மதுரை கும்பாபிஷேகத்திற்குப் போயிருந்த போது ஒரு மகா சபையில் மணி ஐயரவர்களுக்கு முன்பு வேதநாயம் பிள்ளை பாடலைச் சொல்லி விட்டு ‘இறுமாப்புடைய நடையும் குடையும் என்னிடம் இல்லை’ என்று சொன்னது நினைவில் இருக்கிறதா? அந்தக் குறை இரண்டும் இப்போது தீர்ந்து விட்டன” என்று சொன்னர். நான் வெகு நாளைக்கு முன் சொன்னதை ஞாபகம் வைத்திருந்து தேசிகர் அப்போது செய்ததையும் அவர் அன்பையும் நினைந்து உருகினேன். “இறுமாப்புடைய நடை என்றும் வராது” என்று சொன்னேன்.

“நீர் தியாகராச செட்டியார் ஸ்தானத்தை வகித்து நல்ல புகழ் பெறுவதன்றிச் சென்னைக்கும் சென்று தாண்டவராய முதலியாரும் மகாலிங்கையரும் விசாகப் பெருமாளையரும் இருந்து விளங்கிய ஸ்தானத்தைப் பெற்று நல்ல கீர்த்தியடைந்து விளங்க வேண்டும்” என்று கூறித் தாம்பூலம் கொடுத்தார்.

ஒரு தாய் தன் பிள்ளைக்கு உயர்ந்த பதவிகளெல்லாம் கிடைக்க வேண்டுமென்று மனமார நினைந்து வாழ்த்துவதைப் போல இருந்தன அவர் வார்த்தைகள். அந்தப் பேரன்பிலே ஊறியிருந்த போது அதன் முழு அருமையும் எனக்குத் தெரியவில்லை. பிரியப் போகின்றோமென்ற நினைவு வந்ததுந்தான் அதன் அருமை பன்மடங்கு அதிகமாகத் தோற்றியது.

என் மனநிலை

நல்ல வேளை வந்து விட்டது. நான் விடை பெற்றுக் கொண்டேன். என் கால்கள் மெல்ல நடந்தன. உடம்பு நகர்ந்ததேயன்றி என் மனம் அங்கேயே கிடந்தது. வரும் போது உக்கிராண வாசலில் என்னை அறியாமலே நின்றேன். நான் எந்தச் சமயத்தில் எந்தப் பண்டம் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளும் இடமாகிய அதைப் பிரிய மனம் வரவில்லை. வேறு எங்கே அத்தகைய இடம் கிடைக்கப் போகிறது! மேலே நடந்தேன். அங்கங்கே உள்ள தீபஸ்தம்பங்களைப் பார்த்தேன். அவற்றின் அடியில் அமைதியாக அமர்ந்து எவ்வளவு தினங்கள் படித்திருக்கிறேன்! கவலை ஒன்றும் இல்லாமல் புஸ்தகத்திலே கண்ணும் கருத்துமாக ஒன்றிப்போய் வாசிக்க உதவிய அவற்றை விட்டுச் செல்லப் போகிறேனென்ற நினைப்போடு துக்கமும் கலந்து வந்தது. கொலு மண்டபத்துக்கு வந்தேன். அங்கே சகபாடிகளுடன் படித்த இடங்களைப் பார்த்து மனங் குழம்பி நின்றேன். பல இரவுகள் அந்த இடத்தில் கணக்குச் சுருணைகளைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு மெய்ம்மறந்து தூங்கியிருக்கிறேன். அந்தச் சுருணைகளைப் பார்த்தேன். அங்கே உள்ள ஒவ்வொரு பொருளும் உயிர்கொண்டு என்னிடம் பேசுவது போல் இருந்தது. அவற்றினிடம் நான் விடை பெற்றேன். “அவை ஜடப் பொருள்களல்லவா? அவற்றின் மேல் அவ்வளவு பற்றிருப்பது பைத்தியகாரத் தனமல்லவா?” என்று பிறருக்குத் தோற்றும். எனக்கு உலகமெல்லாம் திருவாவடுதுறை மடத்திலே இருந்தது. அங்குள்ள பொருள்களைப் பிரியும்போது உலகத்தையே பிரிவது போன்ற உணர்ச்சிதான் எனக்கு ஏற்பட்டது.

புறப்பாடு

வழியில் கண்ட அன்பர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். ஆகாரம் செய்து கொண்டு மடத்திலிருந்து வந்த வண்டியிலேறி நரசிங்கம் பேட்டை ரெயில் நிலயத்துக்கு வந்தேன். எனக்குத் துணையாக என் அம்மான் பிள்ளை கணபதி ஐயரென்பவரை என் தந்தையார் அனுப்பினார். என்னை வழியனுப்பத் தம்பிரான்களும் நண்பர்களும் மாணாக்கர்களும் வந்தார்கள். அவர்கள் பிரிவாற்றாமையால் வருந்தினார்கள், நான் கண்ணீர் துளும்ப எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டேன்.

புகைவண்டி வந்தது. ஏறிக்கொண்டு கும்பகோணம் சேர்ந்தேன்.