என் சரித்திரம்/87 கவலையற்ற வாழ்க்கை

அத்தியாயம்—87

கவலையற்ற வாழ்க்கை

நான் வேலையை ஒப்புக்கொண்டபோது கும்பகோணம் காலேஜில் ஹைஸ்கூல் வகுப்புக்களும் இருந்தன. அவ் வகுப்புக்களுக்கு ஸ்ரீ தி.கோ.நாராயணசாமி பிள்ளை என்பவர் தமிழ்ப் பாடம் சொல்லி வந்தார்.

காலேஜ் வேலை தானாக என்னைத் தேடி வந்தாலும் அதனைப் பெறுவதற்குப் பலர் முயற்சி செய்தார்களென்ற செய்தியை நான் அறிந்த போதுதான் அவ்வேலையின் அருமை எனக்குப் புலப்பட்டது. பங்களூர்க் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த நாராயணசாமி பிள்ளையும், இராமாயண வெண்பாவும் பல புராணங்களும் பாடிய தஞ்சைச் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரும், சேலம் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சரவணப் பிள்ளையும் அவ்விதம் முயன்றவர்களிற் சிலர். அவர்கள் கல்வியிலாகாத் தலைவருக்கு நேரே விண்ணப்பம் செய்து கொள்ள, அவற்றை அவர் கோபாலராவுக்கு அனுப்பி விட்டனர். “தக்கவர் கிடைத்து விட்டமையால் இந்த விண்ணப்பங்களைக் கவனிக்கக்கூட வில்லை” என்று ராயர் பதில் அனுப்பி விட்டதாகத் தெரிந்தது.

கோவிந்த பிள்ளையின் முயற்சி

நான் விடுமுறையில் திருவாவடுதுறைக்குச் சென்றிருந்தபோது திரிசிரபுரம் வித்துவானும் வித்வஜ்ஜன சேகரருமாகிய கோவிந்தபிள்ளை கும்பகோணத்திற்கு வந்தார். தியாகராச செட்டியார் வேலையினின்று விலகியதை மட்டும் அறிந்த அவர் கோபாலராவிடம் சென்று தம் குமாரருக்குக் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் வேலையைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பிரின்ஸிபால், “வேறொருவரை நியமித்து விட்டோம்” என்று சொல்லவே, கோவிந்த பிள்ளை வேகமாக, “யார் அவர்?” என்று கேட்டார். நான் வேலைக்கு வந்திருப்பதாக அவர் சொல்லவே பிள்ளை, “அப்படியா மிகவும் சந்தோஷம். அவரை எனக்குத் தெரியும். நன்றாகப் படித்தவர்” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார்.

தியாகராச செட்டியாருக்கு பிரிவுபசாரம்

தியாகராச செட்டியார் வேலையை விட்டு நீங்கினாலும் பென்ஷன் விஷயமாகச் சில சிக்கல்கள் இருந்தமையால் அவற்றைக் கவனிப்பதற்காக ஆறு மாத காலம் வரையில் அவர் கும்பகோணத்திலேயே தங்கியிருந்தார். அப்பால் அவர் தம் ஊருக்குப் போக ஏற்பாடு செய்தார். பல வருஷங்கள் கும்பகோணத்திலிருந்து புகழ்பெற்ற அவருக்கு நகரத்தில் நண்பர்கள் பலர் இருந்தனர். காலேஜ் ஆசிரியர்களும் வேறு கமலசாலை ஆசிரியர்களும் அவரிடம் மிக்க மதிப்பு வைத்திருந்தனர். செட்டியார் கும்பகோணத்தை விட்டுப் புறப்படப் போகிறாரென்ற செய்தியை அறிந்து யாவரும் வருத்தமுற்றனர். அவருக்குத் தக்க உபசாரம் செய்து அனுப்ப வேண்டுமென்றும் ஞாபகார்த்தமாக நல்ல பொருள்களை வழங்க வேண்டுமென்றும் எண்ணினர். முடிவில் ஏறுமுக ருத்திராக்ஷ கண்டியொன்றையும், நல்ல சால்வை ஒன்றையும் கொடுப்பதாக அபிமானிகள் நிச்சயித்தனர். செட்டியார் புறப்படுவதற்கு முதல் நாள் மாலையில் கலியாணராமையர் தெருவில் உள்ள வக்கீல் டி.சுந்தரமையர் பங்களாவில் கோபாலராவ் தலைமையில் செட்டியாருக்கு உபசாரம் நடைபெற்றது. அநேகர் செட்டியாருடைய திறமைகளைப் பற்றிப் பேசினர். நான் அவர் விஷயமாகப் பத்துப் பாடல்கள் இயற்றிப் படித்து அவரைப் பாராட்டிப் பேசினேன். அப்பாடல்களில் ஒன்று வருமாறு:-

”வருந்தியருந் தமிழ்நமக்கு யார்புகல்வா ரென்றேங்கும்
     மனத்தி னோர்கள்
திருந்தியசெந் தமிழ்ச்செல்வன் தியாகரா சப்புலவர்
     திலகன் றன்பாற்
பொருந்தியவன் விளங்கவெடுத் துரைத்திடுநல் லுரைகளைத்தம்
     புந்தி வைப்பின்
மருந்தியலைந் தியலுணர்வார் கலிபுகல்வார் பிரசங்கம்
     வகுப்பார் மன்னோ.”

[புந்தி - அறிவில், ஐந்தியல்-ஐந்திலக்கணங்கள்.]

எல்லாம் நிறைவேறிய பிறகு செட்டியார் கோபாலராவை நோக்கி, “நாளைக் காலையில் நான் ஊருக்குப் புறப்படுகிறேன். விடையளிக்க வேண்டும். நான் சிபார்சு செய்தவர் திருப்தி உண்டாகும்படி நடந்து கொள்ளுகிறரா?” என்றார்.

ராயர் உடனே, “தாங்கள் சொல்லியபடி அவர் எல்லாவகையிலும் திருப்தியாகவே நடந்து கொள்ளுகிறார். பிள்ளைகளுக்கும் அவரிடம் மிக்க திருப்தி இருக்கிறது. இந்தச் சபையிலும் தம் திறமையை வெளிப்படுத்தி விட்டாரே” என்று சந்தோஷமாகச் சொன்னார். இந்த விஷயத்தைச் செட்டியார் அடிக்கடி விசாரித்துப் பலவாறாகத் தெரிந்து கொண்டிருந்தாலும் தாம் விடை பெறும் போது ராயருடைய வாயாலேயே ஒருமுறை கேட்டுவிட வேண்டுமென்று எண்ணியிருந்தார். ராயருடைய வார்த்தைகளைக் கேட்டவுடன் செட்டியார் முக மலர்ச்சியோடு என்னைப் பார்த்தார் நாணத்தால் நான் முகங் கவிழ்ந்தேன்.

கூட்டங் கலைந்த பின் செட்டியாரோடு அவர் வீடு சென்றேன். அவர் மறுநாள் ஊருக்குப் புறப்படுவாரென்பதை நினைத்தபோது எனக்கு ஏதோ ஒரு விதமான துயரம் உண்டாயிற்று. அவரோடு எப்போதும் இருக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. வீட்டில் தம்மிடம் பாடங் கேட்டு வந்த மாணாக்கர்களை எனக்குக் காட்டி ஒவ்வொருவரைப் பற்றியும் தனித் தனியே எடுத்துக் கூறி, “இவர்கள் என்னிடம் சில சில நூல்களைப் பாடம் கேட்டு வருபவர்கள். இனிமேல் இவர்களுக்கு நான் பாடம் சொல்ல இயலாது. ஆதலால் இவர்களை உங்களிடம் ஒப்பிக்கிறேன். நான் சொல்லி வந்த பாடங்களைத் தொடர்ந்து சொல்லி வரவேண்டும்” என்றார்.

“தங்கள் உத்தியோகத்தை ஏற்றுக்கொண்ட எனக்கு இது முக்கியமான கடமை தானே?” என்று கூறினேன். அவ்வாறு என்னிடம் பாடம் கேட்கத் தொடங்கியவர்கள் சதாசிவ செட்டியார், குமாரசாமி ஐயர் (வீர சைவர்), ராமலிங்க பண்டாரம், சாமி பண்டாரம், கிருஷ்ணசாமி உடையார் என்பவர்கள்.

பாடம் சொல்லும் பழக்கம்

காலேஜில் பாடம் சொல்லுவது எனக்குச் சிரமமாகத் தோற்றவில்லை. ஒவ்வொரு நூலையும் முதலிலிருந்து இறுதி வரையில் விரிவாகப் பாடம் சொல்லப் பழகிய எனக்குக் காலேஜ் வகுப்புக்களுக்குப் பாடமாக வந்துள்ள சில நூற்பகுதிகளைச் சொல்லுவது ஒரு பெரிய காரியமன்று. தனியே யாருக்கேனும் மடத்திற் சொல்லியபடி பிரபந்தங்களையும் வேறு இலக்கண இலக்கியங்களையும் சொல்ல வேண்டுமென்று விரும்பினேன். என் கல்வியறிவு மழுங்காமல் இருப்பதற்கு அதுதான் வழியென்பதை அறிந்தவன் நான். இந்த நிலையில் தியாகராச செட்டியார் தம் மாணாக்கர்களை என்னிடம் ஒப்பித்தது எனக்கு மிக்க திருப்தியைத் தந்தது. அவர்களுக்கு உசிதமான பாடங்களைச் சொல்லத் தொடங்கினேன். காலேஜ் பிள்ளைகளிற் சிலர் தனியே என் வீட்டிற்கு வந்து சில நூல்களைப் பாடம் கேட்கலாயினர். கும்பகோணத்திலுள்ள வேறு சிலரும் தமக்கு வேண்டிய நூற்களை என்னிடம் பாடம் கேட்டனர்.

செட்டியார் கடிதங்கள்

உபசாரம் நடந்த மறுநாள் செட்டியார் கும்பகோணத்தை விட்டுப் புறப்பட்டுத் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த திருவானைக்காவை அடைந்து அங்கே வசித்து வரலானார். அவ்விடம் சேர்ந்தபின் கும்பகோணத்திலுள்ள நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதினார் எனக்கனுப்பிய கடிதத்தில் விடுமுறைக் காலங்களில் வந்து தம்முடன் இருக்கவேண்டுமென்று வற்புறுத்தி எழுதினார். பின்னும் அடிக்கடி கடிதங்கள் எழுதினார். நானும் அவ்வப்போது பதில் எழுதினேன்.

செய்யுட் பழக்கம்

முதலில் நான் செட்டியாருக்கு வசன நடையிலேயே கடிதங்கள் எழுதினேன். ஒரு பதிற் கடிதத்தில் அவர், “இப்படி எழுதினால் உங்களுக்குச் செய்யுள் செய்யும் பழக்கம் நின்றுவிடும். ஐயா அவர்கள் எழுதும் வழக்கப்படியே முதலில் ஒரு செய்யுளெழுதி அப்பாற் செய்திகளைத் தெரிவிக்கவேண்டுமென்பது என் கருத்தன்று. உங்களுக்குச் செய்யுட் பழக்கம் விடாமலிருக்க வேண்டு மென்பதே என் எண்ணம்” என்று குறிப்பித்திருந்தார். அப்பால் நான் அவ்வாறு செய்யுட்களெழுதி வரலானேன். சில சமயங்களில் கடிதம் முழுவதையும் செய்யுளாகவே எழுதியதுண்டு. அவரும் தம் கடிதங்களின் தலைப்பில் என்னைப் பாராட்டிச் செய்யுட்களை எழுதுவார். என் செய்யுட்களையும் பாராட்டுவார்.

செட்டியார் வற்புறுத்தியதுமுதல், தோத்திரங்களும் சமயோசிதப் பாடல்களும் செய்து வந்தேன். ஸ்ரீ கும்பேசுவரர் விஷயமாகத் தனித் தோத்திரங்களும் ஸ்ரீ நாகேசுவரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பெரியநாயகி விஷயமாக ஓர் இரட்டை மணிமாலையும் ஸ்வாமிமலை முருகக் கடவுள் மீது பல செய்யுட்களும் இயற்றினேன்.

ஆடிக் காற்றும் வெள்ளமும் மிகுந்து அவ்வருஷம் மரங்களெல்லாம் மிக்க சேதமடைந்தன. அந்த விஷயத்தை வைத்துச் சில செய்யுட்கள் இயற்றி நண்பர்களுக்குப் படித்துக் காட்டினேன் அவற்றுள் இரண்டு செய்யுட்கள் வருமாறு:

“கழுத்துயர முறுமுடலொட் டகமாதி பன்மிருகம்
     கவலப் பல்வீக்
குழுத்துயரக் கமுகுபனை தெங்காதி மரங்கள்குலை
     குலைய வேரோ
டிழுத்துயர வெறிந்துயிர்கள் விழுத்துயர மருவமருத்
     தியற்றும் நோயாம்
முழுத்துயர மாயவிதைக் காற்றுயர மெனவெவரும்
     மொழிவா ரென்னே”

[கழுத்து உயரம் உறும் - உடலையுடைய ஒட்டகம். கவல-கவலையை அடைய, பல்வீ குழு துயர-பல பறவைக் கூட்டங்கள் துயரத்தை அடைய. வேரோடு இழுத்து-உயர எறிந்து. விழுத் துயரம்-மிக்க துன்பத்தை. கால் துயரம்-காற்றினால் உண்டான துயரம்; காற்பங்காகிய துயரம்.)

“உரம்பயிலும் பலமரமு மரம்பையுமிக் காற்றினால்
     ஒடிந்து சாய்ந்த
வரம்பையறு காலுதையா லெவ்வுயிருந் தலைசாய்தல்
     மரபா மன்றோ
சிரம்பயிலும் பந்தருறும் பலகாலிவ் வொருகாலிற்
     சிதைந்து வீழ்ந்த
தரம்பயிலீ ததிசயங்கொ லொன்றுபல வற்றைவெலல்
     சகச மன்றோ.”

(அரம்பை-வாழை. கால் உதையால்-காற்று அடித்தலினால், காலால் உதைத்தலால். பந்தருறும் பலகால்-பந்தலிலேயுள்ளபலகால்கள். ஒரு காலில்-ஒரு காற்றால்; ஒற்றைக் காலால்.)

“இப்படியே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழும் நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு பாடல் இயற்றுவது மேல் நாட்டார் வழக்கம்” என்று அவர்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். அந்தப் பாடல்களில் கருத்தைக் காட்டிலும் பதங்களின் சமற்காரம் அதிகமாக இருக்கும். அத்தகைய பாடல்களைப் படித்தும் கேட்டும் அக்காலத்தினர் மிக்க இன்புற்றார்கள்.

திருப்பனந்தாள் தலைவர் பாராட்டு

திருப்பனந்தாளில் காசி மடத்துத் தலைவராக இருந்த இராமலிங்கத் தம்பிரானை ஒரு சமயம் கண்டு எனக்கு வேலையானதைத் தெரிவித்து வரவேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் சொல்லவே நான் ஒரு சனி ஞாயிறு விடுமுறையில் சென்று அவரோடு சல்லாபம் செய்து இருந்து வந்தேன். அவர், “உங்கள் தந்தையார் செய்த பூஜா பலன். பிள்ளையவர்கள் உங்கள் பால் வைத்த அன்பு வீண்போகவில்லை. தியாகராசசெட்டியார் மூலமாக அது பயனளித்தது” என்று பாராட்டினார்.

சில மாதங்களுக்குப் பிறகு இராமலிங்கத் தம்பிரான் தமக்கு இளவரசாக என் நண்பரும் திருவாவடுதுறையாதீன வித்துவானாக இருந்தவருமான குமாரசாமித் தம்பிரானை நியமித்தார்.அந்தச் செய்தி தெரிந்தபோது எனக்கு உண்டான சந்தோஷம் அளவு கடந்து நின்றது. உடனே திருப்பனந்தாள் சென்று அவரைப்பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன் இருந்தேன். சந்தர்ப்பம் கிடைத்தவுடன் போய்ப் பார்த்து என் சந்தோஷத்தைத் தெரிவித்து வந்தேன்.

அவர், “எல்லாம் சந்நிதானத்தின் பரிபூர்ண கிருபையால் உண்டானவை. உங்களுக்கு ஒரு பதவி கிடைத்தது. உங்கள் நண்பனான எனக்கு இந்தப் பதவி கிடைத்தது” என்று நன்றியறிவோடு சொல்லிச் சுப்பிரமணிய தேசிகருடைய குணாதிசயங்களை மிகவும் பாராட்டினார்.

குமாரன் ஜனனம்

எனக்குக் காலேஜில் வேலையான சில மாதங்களுக்குப் பிறகு இறைவன் திருவருளால் நான் குடியிருந்த வீட்டில் எனக்கு ஒரு குமாரன் பிறந்தான். இந்தச் சந்தோஷச் செய்தியைத்தெரிவிக்க என் பிதா திருவாவடுதுறைக்குச் சென்றார். கற்கண்டு சர்க்கரையுடன் சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்துச் சொன்னபோது அவர் பரம சந்தோஷ மடைந்தார். உடனே வீசைக் கணக்காகக் கற்கண்டு கொண்டு வரச் செய்து மடத்திலுள்ள யாவருக்கும் அளித்து, “நம்முடைய சாமிநாதையருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது” என்று தாமே சொல்லிச் சொல்லி இன்புற்றார். அவருடைய மாசு மறுவற்ற அன்பைக் கண்டு என் தந்தையார் விம்மிதமுற்றார். குழந்தையின் ஜாதகத்தைக் கவனித்தவர்கள், “இக்குடும்பத்திற்கு இனி மேன்மேலும் நன்மை உண்டாகும்” என்று சொன்னார்கள். என் தந்தையார் அந்தச் செய்தியைக் கேட்டு ஆறுதலுற்றார். உத்தமதானபுரத்திற்கு அருகிலிருக்கும் சிறந்த சிவஸ்தலமாகிய திருநல்லூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள ஸ்ரீ கலியாண சுந்தரேசுவரருக்குச் செய்து கொண்ட பிரார்த்தனையின் மேல் பிறந்தமையால் குழந்தைக்கு ‘கலியாண சுந்தரம்’ என்று நாமகரணம் செய்தார்கள். மதுரைப் பெருமானுக்கும் உரிய திருநாமமாகிய அது ஒரு வகையில் என் ஆசிரியருடைய ஞாபகத்தையும் உண்டாக்கியது.

தந்தையார் செய்த உபகாரம்

நான் ஒரு குழந்தைக்குத் தந்தை யென்னும் நிலையை அடைந்தும் குடும்பப் பாதுகாப்பில் நான் குழந்தையாகவே இருந்தேன். நான் உண்டு, என் வேலை உண்டு, என் புஸ்தகங்கள் உண்டு. - இவ்வளவோடு நான் நின்றேன். குடும்பப் பாதுகாப்பைப் பற்றியோ, வரவு செலவைப் பற்றியோ, விசேஷங்களைப் பற்றியோ நான் கவலை கொள்ளுவதில்லை. அவற்றைக் கவனிக்கும் பொறுப்பு முழுவதையும் என் தந்தையாரே மேற்கொண்டார். சம்பளம் வந்தவுடன் அதை அவர் கையில் கொடுத்து விடுவேன். ஒரு பைசா வேண்டுமானாலும் அவரிடமிருந்து பெற்றே செலவிடுவேன். இந்நிலையில் எவ்வளவோ சௌகரியம் இருப்பதை நான் அனுபவத்தில் உணர்ந்தேன். உப்பில்லை, புளியில்லை யென்ற குறை காதில் விழாதிருப்பதைப்போன்ற சுகம் வேறு இல்லை. குடும்பப் பாதுகாப்பு விஷயத்தில் அவசியமான செலவை முன்பே யோசித்துச் செட்டாகச் செய்யும் கடமையை என் தந்தையார் ஏற்றுக் கொண்டார். இல்லையேல், ஒரு நாளில் பாதி நேரம் அதிலேயே எனக்குச்" சென்றிருக்கும். என்தந்தையார் எனக்கு இளமை முதல் உதவி புரிந்தாலும் குடும்பச் சுமையை என் தலையில் வைக்காமல் யான் கவலையின்றி வாழும்படி செய்த உபகாரத்தை யான் என்றும் மறக்க இயலாது. தமிழுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு வர வரப் பெருகி வளர்வதற்கு அந்த உதவியே காரணமாயிற்று.