என் சரித்திரம்/99 மகிழ்ச்சியும் வருத்தமும்
அத்தியாயம்—99
மகிழ்ச்சியும் வருத்தமும்
சீவகசிந்தாமணி அச்சில் இருந்தாலும் வேறு ஏட்டுச்சுவடிகள் கிடைத்தால் ஒப்பிட்டுப் பார்க்கலாமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய உதவியால் எனக்குக் கிடைத்த ஏடுகளுள் திருநெல்வேலிப் பக்கத்துப் பிரதிகள் திருத்தமாக இருந்தன. அவர் திருநெல்வேலியில் யாத்திரை செய்த காலத்தில் அங்கங்கே உள்ள பரம்பரைத் தமிழ்ப் புலவர்கள் பலர் அவரைத் தரிசிக்க வந்ததை நான் கவனித்திருக்கிறேன். அவர்களுடைய பழக்கமும் எனக்கு உண்டாயிற்று. அவர்களிடம் நூற்றுக்கணக்கான தமிழ் நூற்சுவடிகள் உள்ளனவென்றும் அவர்கள் அவைகளை நன்றாகப் பாதுகாத்து வைத்துள்ளார்களென்றும் நான் கேள்வியுற்றிருந்தேன். அவ்விடங்களுக்கு நேரிற் சென்று ஏட்டுச் சுவடிகளைக் கவனித்துப் பார்த்தால் சீவகசிந்தாமணிப் பிரதிகள் கிடைக்கலாமென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆகவே ஒரு சமயம் ஏடு தேடும் யாத்திரையை மேற்கொண்டேன்.
திருநெல்வேலிப் பிரயாணம்
ஒரு நல்ல நாளிற் புறப்பட்டு நேரே திருநெல்வேலி சென்றேன். அங்கே சிலரைப் பார்த்து விட்டுத் திருக்குற்றாலத்துக்குப் போகும் வழியிலுள்ள மேலகரத்துக்குப் போனேன். சுப்பிரமணிய தேசிகர் உதித்தது அவ்வூரே. அங்கே அவருடைய இளைய சகோதரராகிய திரிகூட ராசப்பக் கவிராயர் இருந்தார். அவருடைய வீட்டிலுள்ள பழைய ஏடுகளைப் பார்த்ததில் சிந்தாமணிப் பிரதியொன்றும் கிடைக்கவில்லை. அங்கிருந்து திருக்குற்றாலம் சென்று திரிகூடாசலபதியைத் தரிசித்துக்கொண்டு செங்கோட்டைக்குப் போனேன். அவ்வூரில் கவிராச பண்டாரம் என்ற புலவர் பெருமானுடைய பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர் அவருடைய வீட்டுக்குச் சென்று அவரைப் பழக்கம் செய்து கொண்டு, அவ்வீட்டிலுள்ள ஏடுகளைத் தேடிப் பார்த்தேன் எவ்வளவோ பிரபந்தங்களும் புராணங்களும் இருந்தன. சிந்தாமணியில் சில பகுதிகள் மட்டும் கிடைத்தன. பிறகு அதன் அருகிலுள்ள கிருஷ்ணாபுரம், கடையநல்லூர் என்னும் ஊர்களுக்குச் சென்று அங்கிருந்த கவிராயர்கள் வீடுகளில் ஏடுகளைக் கவனித்தபோது அங்கும் சிந்தாமணியின் சில பகுதிகளே கிடைத்தன. அச்சமயம் சேற்றூர்ச் சுப்பிரமணியக் கவிராயர், திருநெல்வேலி கால்ட்வெல் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த குமாரசாமி பிள்ளையினுடைய சிந்தாமணிக் கையெழுத்துப் பிரதியை வாங்கிக் கொடுத்தார். முற்றும் இருந்தது அது தூத்துக்குடி வீரபாண்டிய கவிராயரென்பவரது பிரதியைப் பார்த்து எழுதியது; திருத்தமாக இருந்தமையால் எனக்கு மிகவும் பயன்பட்டது.
செங்கோட்டைக் கனவான்
செங்கோட்டையில் சிந்தாமணிக்காக முன்னமே கையொப்பம் செய்திருந்த ஒரு கனவான் இருந்தார். என்னுடன் வந்தவர் கையொப்பப் பணத்தை அவரிடம் கேட்கப் போன போது அவர், “இவர் பதிப்பு எனக்கு வேண்டாம். இவர் பிழையாகவல்லவா பதிப்பிக்கிறார்? நான் வேறு ஒருவர் பதிப்பிக்கும் சுத்தப் பதிப்பையே வாங்கிக் கொள்ளப் போகிறேன்” என்றாராம். இவ்விஷயம் எனக்குத் தெரிந்தபோது என் பதிப்புக்கு விரோதமான புரளிகள் செங்கோட்டையிலும் பரவியிருத்தலை உணர்ந்து வருந்தினேன். “ஏடு தேடியது போதும்; இனி விரைவில் புஸ்தகப் பதிப்பை நிறைவேற்ற வேண்டும்” என்று உடனே புறப்பட்டுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.
அஷ்டாவதானம் சபாபதி முதலியார் பாராட்டு
அந்த எண்ணத்தால் அது முதல் காலேஜில் இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் ஓய்வு கிடைத்தாலும் சென்னைக்குச் சென்று சிந்தாமணிப் பதிப்பு வேலையைக் கவனித்து விட்டுவரும் வழக்கத்தை மேற்கொண்டேன். அவ்வாறு போயிருக்கையில் ஒரு முறை அஷ்டாவதானம் சபாபதி முதலியாரிடம் சென்றேன். சிந்தாமணியைப் பதிப்பித்தல் மிகவும் கடினமான காரியமென்று முன்னமே அவர் அச்சுறுத்தியிருந்தாலும் அவர் நல்ல அறிவாளியாதலால் அவரைப் பார்த்தலில் எனக்கு விருப்பமுண்டு. பல நூல்களில் அவர் பழக்கமுள்ளவர்; மிகவும் ரசமாகப் பேசுவார். அன்று அவரோடு நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். எங்கள் சம்பாஷணை பல புலவர்களையும், தமிழ் நூல்களைப் பற்றியும் நிகழ்ந்தது. நான் இடையிடையே பல பழைய பாடல்களை எடுத்தெடுத்துச் சொன்னேன். பிள்ளையவர்களிடம் பாடங் கேட்ட பிரபந்தங்களிலும் புராணங்களிலுமிருந்து தங்கு தடையின்றிப் பல செய்யுட்களைச் சொல்லி வந்தேன். திடீரென்று முதலியார் எதையோ நினைத்துக் கொண்டவர் போல, “ஐயா, நீஙகள் சிந்தாமணியைப் பதிப்பிக்கத் தகுதியுடையவர்களே” என்று சொன்னார். நாங்கள் பேசி வந்த விஷயத்துக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை. ஆனாலும் என்னோடு பேசியபோது முதலியார் தமிழ் நூல்களில் எனக்குள்ள பயிற்சியைத் தனியே நோக்கிக் கவனித்தார் போலும். முன்பு தாம் கூறிய கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று அப்போது அவருக்குத் தோற்றியிருக்கலாம். எனக்கு மிக்க வியப்பும் சந்தோஷமும் உண்டாயின. “என்ன, திடீரென்று இப்போது இப்படிச் சொன்னீர்களே!” என்று அவரைக் கேட்டேன்.
“முன்பு ஒரு நாள் சிந்தாமணிப் பதிப்பை நீங்கள் கைவிட்டுவிட வேண்டுமென்று நான் சொன்னேனல்லவா? அதை ஏன் சொன்னோமென்று இப்போது தோற்றியது. உங்களுடைய பரந்த தமிழறிவை இப்போதுதான் நன்றாக அறிந்து கொண்டேன்” என்று சொல்லிப் பின்னும் பாராட்டினார்.
அன்று முழுவதும் அந்த மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தேன். ஆனால் நிலையான மகிழ்ச்சி எனக்கு உண்டாகாதபடி மற்றொரு விஷயம் என் காதிற் பட்டது.
சில விஷமிகளின் செயல்
மற்றொரு நாள் நான் பூண்டி அரங்கநாத முதலியாரைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் சிந்தாமணியில் எதுவரை நிறைவேறியுள்ளதென்று வழக்கம் போல் அன்புடன் விசாரித்தார். நான் விவரத்தைச் சொன்னேன். பிறகு அவர், “இராமநாதபுரம் அரசராகிய பாஸ்கர ஸேதுபதி அவர்களை நான் சந்தித்தேன். அவர் தமிழில் மிக்க அன்புடையவர். தங்கள் சிந்தாமணிப் பதிப்பைப் பற்றிய பேச்சு வந்தது. தமக்கும் அது முன்னமே தெரியுமென்று சொன்னதோடு, மிகவும் நல்ல நூலாகிய சிந்தாமணியைப் பதிப்பிக்கத் தங்களுக்குத் தகுதியில்லையென்று தம்மிடம் யாரோ கூறியதாகவும் சொன்னார், நல்ல காரியத்துக்கு இடையூறு விளைவிக்க எத்தனையோ விஷமிகள் காத்திருக்கிறார்கள்” என்று சிறிது வருத்தத்தோடு சொன்னார். அதைக் கேட்டவுடன் எனக்கு முன்பு உண்டான மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாமற் போய் விட்டது.
என் வாட்டத்தை அறிந்த அரங்கநாத முதலியார், “இதைப் போன்ற விஷயங்களை நீங்கள் காதிலேயே வாங்கிக் கொள்ளக் கூடாது. எடுத்த காரியத்தைப் பின் வாங்காமல் நிறைவேற்றி விடவேண்டும். உங்கள் திறமை எனக்குத் தெரியாதா? தைரியமாக இருந்து வேலையைக் கவனியுங்கள். நீங்கள் கொடுத்த கையொப்பப் புஸ்தகத்தில் என் நண்பர்கள் சிலர் கையெழுத்திட்டிருக்கிறார்கள். சவலை ராமசுவாமி முதலியார், பம்மல் விஜயரங்க முதலியார் முதலியவர்கள் மிக்க விருப்பத்தோடு கையொப்பம் செய்தார்கள்” என்று சொல்லி எனக்கு மிக்க உத்ஸாகத்தை உண்டாக்கினார்.
இராசகோபால பிள்ளை
மற்றொரு சமயம் கோமளீசுவரன் பேட்டை இராச கோபால பிள்ளையைப் பார்த்தேன். அவர் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தவர். நான் அவரைப் பார்க்கப் போனபோது அவருடன் காஞ்சீபுரம் இராமசாமி நாயுடு என்னும் வித்துவானும் இருந்தார். பல நூல்களுக்கு உரை எழுதியவரும் பிற்காலத்தில் இராமானந்த யோகியென வழங்கப் பெற்றவரும் அந்த நாயுடுவே.
பாகவதம் முழுவதையும் இராசகோபால பிள்ளை அச்சிட்டிருந்தார். அதிற் சில பகுதிகள் ஒரு வருஷம் பி. ஏ. பரீட்சைக்குப் பாடமாக இருந்தன. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் நான் படிக்க வருவதற்கு முன்பிருந்தே பாகவதத்தில் எனக்குப் பழக்கம் இருந்தது. பாகவத ஏட்டுச் சுவடிகள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். இராசகோபால பிள்ளையின் பதிப்பில் நூலாசிரியரின் பெயர் “ஆரியப்பப் புலவர்” என்று இருந்தது. “சிந்தகத்துக் கீழமர்ந்த” என்ற சடகோபர் வணக்கச் செய்யுளொன்றும் இருந்தது. இவ்விரண்டையும் ஏட்டுப் பிரதிகளில் நான் கண்டதில்லை. அதனால், இராச கோபால பிள்ளையிடம், “நான் பார்த்த பிரதிகளிளெல்லாம் ஆசிரியர் பெயரே காணப்படவில்லை. இந்தச் செய்யுளும் இல்லையே இவற்றை நீங்கள் எங்கே கண்டு பிடித்தீர்கள்?” என்று கேட்டேன். அவர், “அந்த நூலை நான் பதிப்பிக்கவில்லை. சில பாகம் மாத்திரம் பார்த்த துண்டு. என் பெயரைப் போட்டு யாரோ அச்சிட்டு விட்டார்கள். ஆதலால் இந்த விஷயத்துக்கு நான் பொறுப்பாளியல்ல” என்று சொல்லவே நான் வியந்தேன். பிற்காலத்தில் பாகவதத்தின் ஆசிரியர் வேம்பத்தூர்ப் புலவர்களுள் ஒருவரான செவ்வைச் சூடுவா ரென்பதும், “சிந்தகத்து” என்னும் முதலையுடைய செய்யுள் அச்சிட்டவர்களால் சேர்க்கப்பட்டதென்பதும் எனக்குத் தெரிய வந்தன.
நினைத்ததும் நடந்ததும்
சிந்தாமணிப் பதிப்பு நடக்கையில் எனக்கு எவ்வகையிலேனும் உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தினால் பூண்டி அரங்கநாத முதலியார் முயன்று நாமகளிலம்பகத்தை, பி. ஏ. பரீக்ஷைக்குப் பாடமாக வைக்கச் செய்தார். அதைத் தனியே நான் அச்சிட்டு வெளியிட்டால் பல பிரதிகள் செலவாகுமென்றும், அதனால் எனக்கு ஓரளவு பொருள் வருவாய் ஏற்படுமென்றும் அவர் எண்ணினார். நான் கும்பகோணத்தில் இருந்தமையால் இந்தச் செய்தி உடனே எனக்குத் தெரியவில்லை காலேஜ் பாட புத்தகங்களுக்கும் ஹைஸ்கூல் பாட புத்தகங்களுக்கும் உரையெழுதிப் பதிப்பித்து விற்றுவரும் முயற்சியில் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் ஈடுபட்டிருந்தார். அங்கங்கே உள்ள நண்பர்கள் மூலமாகப் பள்ளிக் கூடப் பிள்ளைகளை வாங்கும்படி செய்து பிரதிகளை விற்று வந்தார். இந்த விஷயமாக அவர் தியாகராச செட்டியாருக்கும் பிறகு எனக்கும் கடிதங்கள் எழுதுவார். நானே புத்தகங்களை வருவித்துப் பல பள்ளிக்கூடங்களிற் சொல்லி மாணாக்கர்களை வாங்கச்செய்வேன். சிந்தாமணிப் பதிப்புக்கு அவர் ‘புரூப்’ பார்த்து உதவி செய்து வந்தார். அக்காலத்தில் நாமகள் இலம்பகத்தை யூனிவர்ஸிடியார் பாடமாக வைத்தது தெரிந்ததும் அவர் அதனைத் தனியே அச்சிட்டு எனக்குத் தெரிவியாமலே வெளிப்படுத்தி விட்டார் இப்படி அவர் செய்ததில் எனக்கு மிகுதியான வருத்தம் உண்டாயிற்று. அரங்க நாத முதலியாருக்கு இது தெரிந்தபோது, “நான் ஒன்று நினைக்க இது வேறு விதமாக முடிந்ததே” என்று அவர் வருந்தினார். அது முதல் சுப்பராய செட்டியாரைப் ‘புரூப்’ பார்க்க வேண்டாமென்று சொல்லி விட்டேன்.
சிந்தாமணிப் பதிப்பைப் பற்றி அவ்வப்போது சுதேசமித்திரனில் என் நண்பரும் விவேகசிந்தாமணிப் பத்திரிகையின் ஆசிரியருமான சி. வி. சாமிநாதையரும், யாழ்ப்பாணம் விசுவநாத பிள்ளையென்பவரும் இன்ன இன்ன பாகங்கள் நடக்கின்றனவென்று எழுதி வருவார்கள். பத்திரிகையின் மூலமாக உணர்ந்த பல அபிமானிகள் அடிக்கடி எனக்குக் கடிதம் எழுதி விசாரித்து வந்தனர். முன்னமே கையொப்பம் செய்த ஊற்றுமலை ஜமீன்தாராகிய ஹிருதயாலய மருதப்பத் தேவர் நூறு ரூபாய் அனுப்பினார். பாலைக் காட்டில் நகரசபைத் தலைவராக இருந்த ராவ்பகதூர் பா. ஐ. சின்னசாமி பிள்ளை என்பவர் அடிக்கடி, “இப்போது எது வரையில் ஆகியிருக்கிறது?” என்று எழுதுவார்.தாமோதரம் பிள்ளையின் கடிதங்கள்
புதுக்கோட்டையிலிருந்த சி. வை. தாமோதரம் பிள்ளையும் பல முறை கடிதங்கள் எழுதினார். அவர் அப்போது கலித்தொகையை உரையுடன் பதிப்பித்து வந்தார். அதை முற்றும் ‘புரூப்’ பார்த்துத் தர வேண்டுமென்று எனக்கு எழுதினார்.
“சிந்தாமணிப் பதிப்பு வேலையில் என் கவனம் முற்றும் இருப்பதால் மற்றவற்றை இப்போது கவனிக்க இயலவில்லை” என்று அவருக்குப் பதில் எழுதினேன். ஆனாலும் அவர் விடாமல் கடிதம் எழுதிக் கொண்டும் கலித்தொகையின் புரூப்களை அனுப்பிக் கொண்டும் வந்தார். தளர்ச்சி யில்லாமல் அவர் செய்த முயற்சிகளால் நான் ஈடுபட்டு அவ்வப்போது சில சில பகுதிகளை மட்டும் பார்த்து எனக்குத் தோற்றிய திருத்தங்களை எழுதியனுப்பினேன். அவற்றை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார் அந்தக் கலித்தொகைப் பதிப்பிலிருந்து சிந்தாமணியில் வந்துள்ள மேற்கோள்கள் சிலவற்றைத் தெரிந்து கொண்டேன். அவர் பதிப்பித்து வந்த இலக்கண விளக்கத்தைப் பற்றியும், தொல்காப்பியத்தைப் பற்றியும் அவ்வப்போது எழுதுவார். அதனால் பழைய தமிழ் நூல்கள் வெளிவர வேண்டுமென்பதில் அவருக்கிருந்த பேரூக்கத்தை நான் உணர்ந்து கொண்டேன். சிந்தாமணியில் இன்ன இன்ன பாகம் நடக்கிறதென்றும் நான் என் விடைக் கடிதங்களில் தெரிவிப்பேன்.
கடன் வாங்கியது
சிந்தாமணிப் பதிப்பில் அச்சுக்கூலி, காகித விலை முதலியவற்றிற்கு எனக்குப் போதிய பணம் கிடைக்கவில்லை. பலர் முன் பணம் கொடுப்பதாகக் கையொப்பமிட்டிருந்தாலும் சிலரே பணம் அனுப்பினர். இந்த நிலையில் அச்சுக் கூலிக்கும், காகித விலைக்கும் பணம் அனுப்ப வேண்டுமென்று சென்னையிலிருந்து கடிதம் வரும் போது அதனைத் தொகுத்து அனுப்புவதில் மிக்க கஷ்டத்தை அடைந்தேன். நூறும் ஐம்பதுமாக அனுப்பி வருவேன். கையொப்பமிட்ட கனவான்களுக்கு நான் கடிதம் எழுதினேன். சிலர் உடனே பணமனுப்பி உதவினார்கள்.
ஒரு சமயம் சில பாரங்கள் அச்சிடுவதற்குக் காகிதம் தேவையாக இருந்தது. அச்சுக்கூடத் தலைவர் காகிதத்துக்குப் பணம் அனுப்ப வேண்டுமென்று எழுதிவிட்டார். கையிலோ பணமில்லை, இன்னது செய்வதென்று தெரியவில்லை. நான் சிரமப்படுவதை அறிந்து தாமோதரம் பிள்ளை தமக்குத் தெரிந்த காகிதக் கடைக்காரர் ஷண்முகஞ் செட்டியார் என்பவரிடம் காகிதம் வாங்கிக் கொள்ளலாமென்றும் சில மாதங்கள் பொறுத்துப் பணம் கொடுக்கலாமென்றும் எனக்கு எழுதியதோடு சென்னையிலிருந்த அக்கடைக்காரருக்கும் எழுதி எனக்கு வேண்டிய காகிதத்தைக் கொடுக்கும்படி செய்தார். காகிதத்தின் விலை நூற்றைம்பது ரூபாய். குறிப்பிட்ட காலத்துக்குள் என்னிடம் பணம் சேராமையால், காலேஜ் ஆசிரியர் சிலரிடம் கடன் வாங்கி அந்தத் தொகையை அனுப்பிவிட்டேன். அடிக்கடி இந்த மாதிரியான முட்டுப்பாடுகள் நேரும். அப்போது, “எப்போது இந்தச் சிந்தாமணி முடியும்! இந்தச் சிரமங்களுக்கெல்லாம் முடிவு காலம் எப்போது வரும்?” என்ற எண்ணம் எனக்கு உண்டாகும்.