என் சுயசரிதை/கடன் இல்லா வாழ்வே கண்ணிய வாழ்வாம்
இதை நன்றாய் அறிந்திருந்த எனது தந்தையார் பல வருடங்கள் கடனின்றி வாழ்ந்துவந்தார். ஆயினும் எங்கள் எழும்பூர் பங்களாவைக்கட்ட ஆரம்பித்தபோது அது முடிவாவதற்கு தான் போட்ட திட்டத்திற்கு இரு மடங்கிற்குமேல் செலவாகிவிட்டது. ஆகவே அவர் கடன் வாங்கவேண்டிவந்தது. அவர் அந்திய காலத்தில் இக்கடன் சுமார் 8000 ரூபாய் ஆயிற்று. அதற்காக அவர் மாதம் மாதம் 40 ரூபாய் வட்டி கொடுக்கவேண்டியதாய் வந்தது. அவர் காலமானவுடன் அவர் சொற்படி என் அண்ணன் ஐயாசாமி முதலியாரும் நானும் அந்தக் கடனை முதலில் தீர்த்துவிடும்படி தீர்மானித்தோம். அதற்காக எங்கள் எழும்பூர் பங்களாவை குடிக்கூலிக்கு விட்டுவிட்டு இப்போது நானிருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டோம். அவர் கருமாந்திரமானபின் ஒரு மாதத்திற்கெல்லாம் எங்கள் மனைவிகளை அழைத்து எங்கள் குடும்ப நிலையை அவர்களுக்குத் தெரிவித்து அவர்கள் போட்டுக் கொண்டிருந்த நகைகளில் கட்டுக்கழித்திகளுக்கு இருக்கவேண்டிய முக்கியமான நகைகளை விட்டு மற்றவைகளை யெல்லாம் வாங்கிக்கொண்டோம். அன்றியும் நாங்கள் இருவரும் போட்டுக் கொண்டிருந்த ரவை கடுக்கன், பொன் அரைஞாண், பொன் கடிகாரங்கள், மோதிரங்களை கழட்டி இந்நகைகளை யெல்லாம் எங்கள் நம்பிக்கையுள்ள ஒரு சிநேகிதர் மூலமாக விற்றுவிட்டு கடனை முன்பு தீர்த்தோம். அச்சமயம் நம்மவர்களில் சிலர் என்ன இது தகப்பனார் இறந்த மூன்று மாதத்திற்குள்ளாக இப்படி குடும்ப நகைகளையெல்லாம் விற்றுவிடுகிறார்களே என்று இகழ்வார்களே என்று பயந்ததுண்டு. ஆயினும் என் பந்துக்களில் பலர் இப்படி செய்ததற்காக புகழ்ந்ததுண்டு. நாங்கள் மேற்சொன்னபடி உடனே கடனைத் தீர்த்திராவிட்டால் சில வருடங்களில் பெருந்தொகையாகி எங்கள் குடும்பத்தையே அழிந்திருக்கலாம். இதன்பின் நாங்கள் சம்பாதிக்க ஆரம்பித்த போது எங்கள் மனைவிமார்களுக்கு அவர்கள் கொடுத்த நகைகளுக்கு இரண்டுபங்கு அதிகமாக கடவுள் கிருபையால் செய்து போட்டோம் என்று சந்தோஷத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் பி. ஏ. வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது கம்ப ராமாயணத்தில் “கடன்கொண்டார் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்னும் வரியை படித்த போது என் ஜன்மத்தில் ஒரு காசும் கடன் வாங்கக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டேன். அதன்படி இன்றுவரையில் ஒருவரிடமிருந்தும் எந்த அவசரத்திலும் நான் கடன் வாங்கியவன் அன்று. இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அப்படியே நடப்பார்களாக.