என் சுயசரிதை/வக்கீலாக வேலை பார்த்தது
என் தமையனார் ஐயாசாமி முதலியார் இதற்கு முன்பாகவே ஐகோர்ட் வக்கீலாக இருந்தார். ஆகவே அவரது அறையிலேயே நான் வக்கீலாக அமர்ந்தேன். குமாஸ்தா, வேலையாள் முதலிய சௌகர்யங்களுக்கெல்லாம் நான் கஷ்டப் படாதபடி ஆயிற்று.
நான் என்ரோல் (enrol) ஆன தினமே அவருக்கு பதிலாக ஒரு வியாஜ்யத்தை நடத்தினேன். சென்னையில் ஸ்மால்காஸ் கோர்ட்டில் நான் முதல்முதல் ஒரு வியாஜ்யத்தில் பீஸ் பெற்றது, அக் கோர்ட்டில் ரிஜிஸ்டிரர் முன்பாக. ஜேம்ஸ் ஷார்ட்டிற்காக ஒரு சிறு வியாஜ்யத்தை நடத்தி வெற்றி பெற்றேன்.
அதுமுதல் சின்ன கோர்ட்டிலேயே பெரும்பாலும் வக்கில் வேலை பார்த்து வந்தேன். சில சமயங்களில் சிடி சிவில் கோர்ட். (City Civil Court) டுக்கும் போவேன். சீக்கிரம் போலீஸ் கோர்ட்டுக்கும் போக ஆரம்பித்தேன். ஐகோர்ட்டில் கார்த்திகை பிறைபோல் தோன்றுவேன்! இதைப்பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். முதல் இரண்டு வருஷம் என் வக்கீல் வரும்படி சராசரியாக மாதத்திற்கு 50 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை இருந்தது. பிறகு உயர்ந்து கொண்டு போய் சுமார் 1000 ரூபாய் சம்பாதித்தேன். இருந்தபோதிலும் நான் வக்கீலாக பெரும் பதவியையாவது ஊதியத்தையாவது பெறவில்லை என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இதற்கு முக்கிய காரணம் வக்கீல் உத்தியோகத்தில் என் மனம் பலமாக ஈடுபாடாததேயாம். பெரிய வக்கீல் என்று பெயர் எடுத்து ஏராளமாக பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நான் விரும்ப வில்லை. வெளிப்படையாகக் கூறுமிடத்து என் மன உற்சாக மெல்லாம் தமிழ் நாடகங்களில் நடித்தும், தமிழ் நாடகங்களை எழுதியும் பெரிய பெயர் எடுக்கவேண்டுமென்றே இருந்தது! இதன் பொருட்டு என் ஓய்வு காலத்தையெல்லாம் லா புஸ்தகங் களையும் லா ரிபோர்ட்களையும் படிப்பதில் செலவிடாது சுகுண விலாச சபைக்காக உழைப்பதிலேயே செலவழித்தேன். இதற்காக நான் எப்பொழுதும் வருத்தப்பட்டவனன்று. இப் பொழுதும் வருத்தப்படவில்லை; சந்தோஷமே படுகிறேன். நான் கொஞ்சம் பிரபல நடிகனும் நாடக ஆசிரியனுமான பிறகு ஒரு நாள் ஆந்திர நாடகப் பிதா மகனான பல்லாரி V. கிருஷ்ணமாச்சார்லு அவர்கள் தன்னுடைய அனுபவத்தை எனக்குத் தெரிவித்து “நீ சிறந்த வக்கீலாக வேண்டுமென்றால் நாடகத்தைத் தூரத்தில் விட்டுவிட வேண்டும்” என்று போதித்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அவரது போதனையை நான் ஒப்புக்கொள்ள வில்லை என்று எழுதவேண்டியது அநாவசியம்’
நான் வக்கீலாக பணம் சம்பாதிக்கும் போது, என் இல் வாழ்க்கை சுகமாய் நடத்தவும், என் நாடகங்களை அச்சிட வேண்டியதற்கும் போதுமான பொருள் கிடைத்தால் போதும் என்று உழைத்துவந்தேன். மேற்சொன்ன காரணங்கள் பற்றியே கூடுமான வரையில் எனது வக்கீல் வேலையையெல்லாம் சுகமாய்க் காலம் கழிக்கக் கூடிய ஸ்மால்காஸ் கோர்ட்டில் பெரும்பாலும் சிடிசிவில் கோர்ட்டில் சில பாகமும் போலீஸ் கோர்ட்டில் சில பாகமும் வைத்துக்கொண்டேன். எப்பொழுதாவது கஷ்டப்பட்டு உழைக்கவேண்டிய பெரிய வியாஜ்யங்கள் வந்தால் அவைகளை மெல்ல, எனக்கு அவகாசமில்லை’ என்று தட்டிவிடுவேன்.
இக்காரணம் பற்றியே கட்சிக்காரர்கள் என்னிடம் வருவதென்றால் காலை 9½ மணிக்குள் வரவேண்டும் என்றும் சாயங் காலங்களில் 5 மணிக்குமேல் ஒருவரும் வரக்கூடாது என்றும் ஒரு நிபந்தனை செய்து கொண்டேன்.இந்த நிபந்தனையினின்றும் சுமார் 25 வருடங்கள் நான் வக்கீலாக வேலை பார்த்த காலமெல்லாம் மாறவில்லை. ராத்திரியில் யாராவது என் வீட்டிற்கு வந்து ‘அர்ஜென்ட் வியாஜ்யம்’ என்று என்னை தொந்தரவு செய்பவர்களுக்கெல்லாம் ஒரு பதில், ஏற்பாடு செய்து கொண்டேன். அதாவது “உங்கள் வியாஜ்யம் இன்றிரவு ஏதாவது நடக்கப் போகிறதா? இல்லையே!நாளைக் காலை 11 மணிக்குத்தானே. கேஸ் (case) ஆகவே தயவுசெய்து நாளை காலை வீட்டிற்கு வந்துவிடுங்கள்” என்று பதில் சொல்லி அனுப்பிவிடுவேன். இந்த வழக்கத்தை அறிந்த என் மாமூலாக வரும் கட்சிக்காரர்கள் என்னை சாயங்காலங்களில் தொந்தரவு செய்வதில்லை. மற்றவர்களிடமும் “இந்த வக்கீல் சாயங்காலத்திற்குமேல் கோர்ட் வியாஜ்யங்களைப் பார்க்கமாட்டார்-- பீஸ் (Fees) கொடுத்த போதிலும் நாளை காலை கொண்டு வா என்று அனுப்பிவிடுவார். ஆகை பால் அவரை 5 மணிக்குமேல் போய் பார்ப்பதில் பிரயோகன மில்லை”, என்று தடுத்துவிடுவார்கள்.
இந்த கோட்பாட்டினால் எனக்கு ஒரு பெரிய நன்மை கிடைத்தது. சாதாரணமாக ஹைகோர்ட் வக்கீல்கள் நாற்பது ஐம்பது வயதாவதற்குள் நீர் வியாதி, குன்ம நோய் முதலிய ஏதாவது வியாதிக்கு உள்ளாகின்றனர் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் காலக்கிரமப்படி போஜனம் கொள்ளாததும், தக்கபடி சாயங் காலங்களில் வியாயாமம் (exercise) எடுத்துக் கொள்ளாததுமாம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கின்றார். எத்தனை சிறந்த வக்கீல்கள் சுமார் 50 வயதிற்குள் வியாதிக்கு ஆளாகி மடிந்திருக்கின்றனர்! தேகத்தில் சிறு வயது முதல் தக்க பலமில்லாத நான் இப்ப ஏதாவது வியாதிக்கு ஆளாகாமல், தடுத்தது காலக்கிரமப்படி போஜனங் கொண்டதும் சாயங் காலங்களில் ஏதாவது வியாகாமமும் எடுத்துக்கொண்டு தக்கபடி ஓய்வையும் எடுத்துக்கொண்டு ஓய்வு காலங்களில் மனத்திற்கு உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கத்தக்க மனதிற்கினிய தொழில் (Hobby), ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு நடந்துவந்ததே, இதுவரையில் ஈஸ்வரன் கிருபையில் என் தேக நலத்தை காப்பாற்றிக்கொண்டு வரச் செய்தது என்று உறுதியாக நம்புகிறேன்.
நான் வக்கீலாக நடவடிக்கை நடத்திய காலத்தில் எனக்கே மற்றொரு நிபந்தனை ஏற்படுத்திக் கொண்டேன். அதாவது கட்சிக்காரர்கள் என்னிடம் வந்தால் அவர்கள் வியாஜ்யம் பொய்யானது, தப்பானது; நியாயமல்ல என்று என் புத்திக்குப் பட்டால் அவர்கள் வியாஜ்யத்தை எடுத்துக்கொள்ளக் கூடாதென்பதாம். இதனால், என்னிடம் வந்த பல வியாஜ்யங்களை ஒதுக்கியிருக்கிறேன். இருந்தும் இதனால் நான் ஒரு நன்மை பெறாமல் போகவில்லை. அதாவது “சம்பந்தம் சாதாரணமாக தப்பான கேசுகளை எடுத்துக்கொள்ளமாட்டான்” என்னும் பெயர் பெற்றேன் என்று நினைக்கிறேன். என்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்கெல்லாம் ஆரம்பத்தில் ஒரு கதை சொல்வேன். “ஐயா, வைத்தியனிடம் போய் உங்களுக்கு ஒரு வியாதி இருக்க அதை மறைத்து வேறொன்றைக் கூறினால் அந்த வைத்தியன் உங்கள் உண்மையான வியாதியைக் குணப்படுத்த முடியுமா? அதுபோல வக்கீலாகிய என்னிடம் உண்மையைக் கூறுங்கள். பிறகு உங்கள் வியாஜ்யத்திற்குப் பரிஹாரம் தேடுகிறேன்” என்று சொல்வேன்.
இப்படி சொல்வதினால் சில கட்சிக்காரர்கள் என்னை விட்டு அகன்றபோதிலும் நான் எடுத்துக்கொண்ட வியாஜ்யங்களில் பெரும்பாலும் வெற்றி பெற்றதனால் கோர்ட்டு ஜட்ஜிகளுக்கு என்னிடம் ஒரு மதிப்பு உண்டாயிற்றென்றே சொல்ல வேண்டும். சில சமயங்களில் நான் உண்மையை அறியாத சில தப்பான வியாஜ்யங்களை நடத்திக்கொண்டு வருகையில் இடையில் இது பொய் கேஸ் என்று கண்டறிந்தால் கோர்ட்டில் நடவடிக்கையை நடத்திவிட்டு முடிவில் சம்அப் (Sumap) செய்ய வேண்டி வரும்போது நான் வேறொன்றும் சொல்லாமல் “இந்த வியாஜ்யத்தில் கோர்ட்டார் காலத்தை இன்னும் எடுத்துக்கொள்ள எனக்கிஷ்டமில்லை” என்று முடித்திருக்கிறேன். இப்படி செய்ததினால் ஜட்ஜ்கள் இதர கேசுகளில் நான் வற்புறுத்தி பேசினால் அவைகளில் ஏதோ உண்மை இருக்கவேண்டுமென்று என்னைப் பொறுமையுடன் கேட்டிருக்கின்றனர். இதைப்பற்றி சில கோர்ட்டு வக்கீல்கள் நான் செய்தது தவறு “நிஜமோ தப்போ கடைசிவரையில் மன்றாடித்தான் தீரவேண்டியது வக்கீல் கடமை” என்று என்னிடம் கூறியிருக்கின்றனர். ஹைகோர்ட்டில் ஒரிஜினல் வியாஜ்யம் ஒன்றை ஆனரபில் ஜஸ்டிஸ் பாடம் முன்பாக நான் ஒருமுறை நடத்திய போது பிரதிவாதிக்காக வக்காலத்து வாங்கிக்கொண்ட நான் வாதியையும், வாதி சாட்சிகளையும் இரண்டு நாள் குறுக்கு கேள்விகள் (Cross Examination) கேட்டேன். அது முடிந்தவுடன் பிரதிவாதிக்காக சாட்சிகள் ஒருவரையும் நான் கூப்பிடவில்லை. அன்றியும் சம்அப் (Sumup) செய்ய வேண்டி வந்த போது “வாதியின் சாட்சிகளை கிராஸ் (Cross) பண்ணவேண்டியதை என் கடமைப்படி செய்தேன். சம்ஆப் செய்யவேண்டியது என் இச்சையில் இருக்கிறது. அதை செய்து கோர்ட்டார் அவர்களுடைய காலத்தை வியாஜ்யத்தில் வீணாக போக்குவ தற்கு எனக்கிஷ்டமில்லை” என்று கூறி உட்கார்ந்தேன். பாடம் துரை நான் செய்தது சரியானது என்று ஒப்புக்கொண்டு ஏதோ புகழ்ந்தனர். கட்சிக்காரர்கள் சொல்வதை பொறுமையுடன் கேட்டு இந்த வியாஜ்யத்தை ஜெயிப்பது கஷ்டம் என்று எனக்குத் தோன்றினால் கட்சிக்காரர்களிடம் உண்மையைக் கூறி “ஏன் எனக்கு பீஸ் கொடுக்கிறீர்கள் ? இந்த பணத்தை ஏதாவது தர்மம் செய்யுங்கள்” என்று சொல்லியனுப்பி இருக்கிறேன் பல தடவைகளில்.
இப்படி செய்ததால் கட்சிக்காரர்களுடைய நட்பைப்பெற்று எனக்கு ஸ்மால்காஸ் கோர்ட்டில் முக்கியமாக அதிக கேசுகள் வந்தன. இதுதான் பிறகு மேல் அதிகாரிகள் என்னை ஸ்மால் காஸ் கோர்ட் ஜட்ஜாக நியமித்ததற்கு அஸ்திவாரமாக இருந்ததென நம்புகிறேன்.
குறுக்கு கேள்விகள் கேட்பதில் கொஞ்சம் வல்லவன் என்ற பெயர் பெற்றபடியால் எனக்கு சென்னையிலும், வெளியிலும் கிரிமினல் வியாஜ்யங்கள் கிடைத்தன. இந்த அனுபவம் பிறகு சிலகாலம் சீப் பிரசிடென்ஸி மாஜிஸ்டிரேட்டாக நியமிக்கப்பட்டபோது எனக்கு உபயோகமாயிருந்தது.
நான் முக்கியமாக வியாஜ்யம் நடத்திய சில ஜட்ஜ்களைப் பற்றிக் கொஞ்சம் எழுத விரும்புகிறேன். நான் வக்கீலாக வேலை செய்ய ஆரம்பித்தபோது ஸ்மால்காஸ் கோர்ட்டில் இரண்டாவது ஜட்ஜாக இருந்தவர் டி. ரொஸொரியோ (D. Rozorio) என்பவர் அவர் மிகுந்த பொறுமையான சுபாவமுடையவர். அவர் தினம் சரியாக பதினோறு மணிக்கு நிமிஷம் தவறாமல் கோர்ட்டுக்கு வந்து உட்காருவரர். அன்றியும் வியாஜ்யங்களை சீக்கிரம் தீர்மானிப்பார். இந்த இரண்டு குணங்களையும் நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பிறகு அதே கோர்ட்டில் அதே நாற்காலியில் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாக நான் சில வருஷம் நடவடிக்கை நடத்திய போது இவ்விரண்டும் எனக்கு மிகவும் பயனளித்தன. ஆனால் அவருடைய பொறுமையை நான் கற்றுக் கொள்ளவில்லை!
ஸ்மால்காஸ் கோர்ட்டில் என்காலத்தில் மற்றொரு ஜட்ஜாக இருந்தவர் மண்டயம் O.பார்த்தசாரதி ஐயங்கார் அவரிடம் நான் கற்றது வியாஜ்யத்தில் முடிவில் சம்அப் (Sum.up) செய்யும்போது முக்கியமான அம்சங்களை எவ்வளவு சுருக்கமாய் சொல்கிறோமோ அவ்வளவு நல்லது என்பது. இவருடன் காஸ்மாபாலிடன் கிளப்பில் சனிக்கிழமைகளில் சீட்டாடுவேன். அச்சமயம் கோர்ட்டில் நடக்கும் பல வேடிக்கைகளைப்பற்றிய கதைகளை மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எங்களுக்கெல்லாம் சொல்லி சிரிப்புண்டாக்குவார். அவற்றுள் ஒன்றை இங்கு எழுதுகிறேன். ஒருநாள் “சம்பந்தம், நான் கோர்ட்டுக்கு வரும்போது மிகவும் தலைகுனிந்தபடி வருகிறேனே அதற்குக் காரணம் தெரியுமா?” என்று கேட்டார். “வணக்கமாய் வருவது நல்லது என்று நீங்கள் அப்படி செய்கிறீர்கள்” என்று பதில் சொன்னேன். அதற்கவர் “அது. ஒருபுறமிருக்கட்டும். நான் முதல் முதல் கோர்ட்டில் என் ஆசனத்தில் உட்கார வரும்போது தலை நிமிர்ந்து கொண்டு வத்தேன். அப்போது பங்கா இழுக்கும் கோர்ட்டுக்கு பின்புறமிருக்கும் வேலையாள் வேகமாய் பங்காவை இழுத்துவிட்டான். உடனே என் தலை குட்டை பங்காவினால் தாக்கப்பட்டு எகிரிப் போய் விழுந்தது. அது முதல் நான் வரும்போதெல்லாம் மிகவும் தலை குனிந்து கொண்டுவர ஆரம்பித்தேன்” என்று பதில் சொன்னார். இது நடந்தபோது ஹைகோர்ட்டில் இப்போதிருப்பது போல் மின்சார பங்கா (electric fan) கிடையாது.
இதன்பிறகு இந்த கோர்ட்டில் ஜட்ஜாக நியமிக்கப்பட்டவர் சர் வி. சி. தேசிகாச்சாரியார். சாதாரணமாக இவர் கோர்ட்டில் எனக்கு அதிக கேசுகள் கிடைக்கும். இதற்குக் காரணம் நான் அவரது நன்மதிப்பைப் பெற்றதே என்று நினைக்கிறேன். இவர் ஒரு சிநேகிதரிடம் ஆங்கிலத்தில் சொன்னதாக அந்த சிநேகிதர் எனக்கு தெரிவித்ததை தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். “தங்கள் கட்சிக்காரர்களின் ஊழல்களை மறைத்து கோர்ட்டார் கண்ணில் மண்ணைப் போட்டு வியாஜ்யங்களை ஜெயிக்க விரும்பாத வக்கீல்கள் இரண்டு பெயர்கள்தான். ஒருவர் பி. எம். சிவஞான முதலியார், மற்றொருவர் சம்பந்த முதலியார்” என்றனராம்.
சிவில், வியாஜ்யங்களில் பீஸ் (Fees) விஷயத்தில் கோர்ட்டார் சட்டப்படி, ஒவ்வொரு வியாஜ்யத்திற்கும் என்ன பீஸ் உண்டோ அதற்குக் குறைவாக வாங்குவதில்லை என்று தீர்மானித்து அதன்படியே நடந்துவந்தேன்.
எனது ஆருயிர் நண்பரான சி. ரங்கவடிவேலு முதலியார் தானும் பி. எல். பரிட்சையில் தேறினவுடன் அவரை எனது ஜூனியர் (Junior) ஆக வைத்துக்கொண்டு கோர்ட் வேலையைப் பார்த்துவந்தேன். அவர் 1923-ஆம் வருஷம் எனது துரதிர்ஷ்டத்தால் காலவியோகமாக வக்கீல் வேலையில் முன்பே குறைந்திருந்த ஆர்வம் மிகவும் குன்றியது. ஆகவே ஸ்ரீமான் சர் சி. பி. ராமசாமி ஐயர் அவர்கள் 1924-ஆம் ஆண்டு என்னை அழைத்து ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜ் வேலையை ஒப்புக் கொள்கிறாயா என்று கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன், இதனுடன் என் நடுப்பருவ அனுபவங்களை முடித்துக் கொள்கிறேன்.