என் சுயசரிதை/55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்
1928-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல் நான் கவர்ன்மெண்ட் வேலையிலிருந்து விலக வேண்டி வரும் என்று முன்பே அறிந்திருந்தபடியால் அதற்காக அது முதல் என் வாழ்நாட்களை எப்படி கழிப்பது என்று ஒரு தினசரிப் பட்டி ஏற்படுத்திக்கொண்டேன். அதை எழுது முன் எனது நண்பர்களில் பலர் நீ ஏன் மறுபடியும் வக்கீலாக பழகலாகாது என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அன்றியும் ஜனவரி மாதம் 31-ந்தேதி என் கோர்ட் வேலையை முடித்தவுடன் ஸ்மால்காஸ் கோர்ட் வக்கீல்கள் ஒன்றுகூடி காலஞ்சென்ற எனது நண்பர் பி. எம். சிவஞான முதலியார் மூலமாக என் பிரிவைப்பற்றி ஏதோ உபசார வார்த்தைகளை கூறிய பிறகு “நீங்கள் மறுபடியும் ஹைகோர்ட்’ வக்கீலாக வந்து கலந்து கொண்டால் எங்களுக்குத் திருப்திகரமாயிருக்கும்” என்று கூறியபோது “அப்படி செய்ய எனக்கு இஷ்டமில்லை, நீங்கள் கேட்பதை மறுப்பதற்காக மன்னிக்க வேண்டும்” என்று கூறினேன். அதற்கு முக்கிய காரணம் ஒருமுறை ஜட்ஜாயிருந்த பிறகு மறுபடியும் வக்கீலாக போவது சரியல்ல என்று நான் தீர்மானித்ததேயாம். மறு நாள் ஒரு தினசரி ஆங்கில பத்திரிகையின் ரிபோர்டர் (Reporter) என்னிடம் வந்து “இனி உங்கள் காலத்தை எப்படிக் கழிக்கப் போகிறீர்கள்” என்று கேட்டபோது, “ஈஸ்வரன் எனக்கு இனி அருளும் ஆயுட்காலத்தையெல்லாம் தமிழ் நாடகத்திற்காகவும் தமிழ் பாஷைக்காகவும் தொண்டு செய்யத் தீர்பானித்திருக்கிறேன்” என்று பதில் கூறினேன். அன்று முதல் இந்நாள் வரை அந்த இரண்டு தொண்டுகளையும் என்னாலியன்ற அளவு செய்து வருகிறேன் என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்கள் என்று நினைக்கிறேன். பிறகு வக்கீலாகப் புகவேண்டுமென்று என்னை வற்புறுத்திய என் பல பந்துக்களுக்கும் சிநேகிதர்களுக்கும் நான் கூறின பதிலை இங்கு எழுதுகிறேன். அவர்கள் என்னிடம் வந்து “நீங்கள் ஏன் மறுபடியும் வக்கீலாக சேரலாகாது?” என்று கேட்டதற்கு நான் “ஏன் மறுபடியும் வக்கீலாகும்படி கேட்கிறீர்கள்?” என்று நான் வினவினேன். அதற்கு அவர்கள் “இல்லை நீங்கள் 7 வருஷம் கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் இல்லாதபடியால் உங்களுக்கு பென்ஷன் (Pension) கூட ஒன்றும் கிடையாதே. ஆகையால் மற்றவர்கள் செய்வதுபோல் நீங்கள் மறுபடியும் சுலபமாக ஆட்வகேட் (Advocate) ஆகி வேலை பார்த்து பணம் சம்பாதித்து சுகமாய் வாழலாமே என்று கேட்கிறோம்” என்றார்கள். அதற்கு நான் “மறுபடியும் இந்த வேலை பார்த்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து அடையவேண்டு மென்கிற சுகத்தை அந்த கஷ்டமெல்லாம் இல்லாமல் இப்போது அநுபவித்துக் கொண்டிருக்கிறேனே. அதையேன் தடுக்கிறீர்கள்” என்று பதில் சொன்னேன்.
சிலர் உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளின் பொருட்டு நீங்கள் அப்படி செய்யலாகாதா? என்று கேட்டதற்கு அடியிற் கண்டபடி பதில் உரைத்தேன்:- “ஈசன் கருணையினால் எனக்கிருப்பது ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண்களும். அப்பிள்ளைக்கு நான் சம்பாதித்து வைத்த பொருளே போதுமானது. என் இரண்டு குமாரத்திகளையும் தக்க இடத்தில் விவாகம் செய்து கொடுத்து விட்டேன். அவர்கள் தங்கள் புருஷன் வீட்டில் பரமேஸ்வரன் கருணை யினால் சுகமாக வாழ்கிறார்கள். இப்படியிருக்க எதற்காக நான் மறுபடியும் கோர்ட் வியாஜ்ய வேலையில் கஷ்டப்பட வேண்டும்”. என்று சொல்லி “என் இச்சைப்படி, தமிழுக்காக உழைப்பதை தடுக்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டேன்.