எழு பெரு வள்ளல்கள்/அதிகமான்

அதிகமான்

தருமபுரி என்று கேட்டிருக்கிறீர்களா? சேலம் மாவட்டத்தில் உள்ள ஊர் அது. அந்தப் பேர் பிற்காலத்தில் வந்தது. அந்தக் காலத்தில் அதற்குத் தகடூர் என்று பேர் வழங்கியது. இப்போது தருமபுரிக்கருகில் அதிகமான் கோட்டை என்ற இடம் இருக்கிறது. அது முன் காலத்தில் தகடூரைச் சேர்ந்ததாக இருந்தது. அந்தக் கோட்டையை நடுவிலே பெற்று, நாற்புறமும் விரிவாகவும் அழகாகவும் அமைந்திருந்தது பழைய காலத்துத் தகடூர்.

அதைத் தன் அரசாட்சிக்குரிய தலைநகரமாகக் கொண்டு வாழ்ந்தவன் அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன். அதிகர் என்றும் அதியர் என்றும் அவலுடைய குலத்தோரை அறிஞர்கள் குறிப்பார்கள். அந்தக் குலத்தில் உதித்தவன் நெடுமான் அஞ்சி. அதில் தோன்றிய பலருக்குள்ளே அவனே இணையில்லாத புகழ் பெற்றவ தைலின், அதிகமான் என்றால் அவனையே குறிக்கும்படி ஆகிவிட்டது.

அதிகர் குலத்தின் முதல்வன் சேரர் குலத்தில் உதித்தவன். மிகப் பழங்காலத்திலேயே அதிகமானுடைய முன்னோர்கள் அக்குலத்திலிருந்து தனிக் கிளையாகப் பிரிந்து தனியே நாடாளும் உரிமையை மேற்கொண்டிருந்தார்கள். சேரர்களைப் போல முடியுடை மன்னர்களாக விளங்காவிட்டாலும் அவர்களுக்குரிய பனைமாலையை அணிந்து கொண் டார்கள். சேரர்களுக்கும் அதியர் குலத்தினருக்கும் அடிக்கடி பூசல் நிகழ்வது உண்டு.

அதிகமான் சிறந்த வள்ளல்; பெரு வீரன். புலவர்களிடையே இருந்து இனிதே பொழுது போக்குபவன். எதைச் செய்தாலும் அதில் ஈடுபட்டு ஒருமை மனத்தோடு செயல் செய்யும் இயல்புடையவன். போர் பற்றிய ஆலோசனையில் ஆழ்ந்திருந்தால் வேறு எதையும் கவனிக்காமல் தன் அமைச்சர்களுடனும் படைத் தலைவர்களுடனும் அதுபற்றிய பேச்சிலே ஈடுபட்டிருப்பான்.

அவனை நாடிப் பல புலவர்கள் வந்தார்கள்; பாடினார்கள்; பரிசு பெற்றார்கள். தமிழ்ப் புலமையிலே சிறந்த மூதாட்டியாகிய ஒளவையார் அவனிடம் வந்தார். அப்போது அதிகமான் ஏதோ இன்றியமையாத ஆலோசனையில் ஈடுபட்டிருந்தான். அத்தகைய சமயங்களில் யாரும் அவனை அணுக அஞ்சுவார்கள். அரசியல் அதிகாரி ஒருவர் ஒளவையாரை வரவேற்றுத் தாகத்திற்கு நீர் கொடுத்து அமரச் சொன்னார். ஒளவையார் அமர்ந்தார். "மன்னர் மிகவும் முக்கியமான ஆலோசனையில் இருக்கிறார். இதோ வந்துவிடுவார். சற்றுப் பொறுக்க வேண்டும்” என்று அதிகாரி பணிவாகச் சொன்னார். சிறிது நேரம் ஆயிற்று. அதிகமான் வரவில்லை.

ஒளவையார் பொறுமையை இழந்தார். 'எவ்வளவு நேரம் பிச்சைக்காரியைப் போலக் காத்திருப்பது?' என்று கோபம் மூண்டது. உடனே ஒரு பாட்டைப் பாடினர். அங்கே இருந்த வாயில் காவலனைப் பார்த்து அந்தப் பாடலைச் சொல்லத் தொடங்கினார். "வாற்காரா, வாசற்காரா, கொடையாளிகளின் காதுகளில் தம்முடைய சொற்களை விதைத்து, தம் காரியங்களை முடித்துக் கொள்கிறவர்கள் புலவர்கள். அவர் களுக்குப் பரிசு பெரிதன்று; தரம் அறிந்து பாராட்டும் வரிசைதான் பெரிது. அதற்காகவே அவர்கள் ஏங்கிக் கிடப்பார்கள். அத்தகைய பரிசிலர்களுக்கு அடையாமல் திறந்து வைத்திருக்கிற வாசலைக் காப்பவனே! உன்னுடைய அரசனாகிய நெடுமான் அஞ்சி தன் பெருமையைத் தான் அறியவில்லையோ? வந்தவர்களைக் காக்க வைப்பது அவன் பெருமைக்கு இழுக்கு என்பதைத் தெரிந்துகொள்ள வில்லையோ? அது கிடக்கட்டும். என்னையும் அவன் அறிந்துகொள்ள வில்லையோ? பிச்சைக்காரியைப் போலக் காத்திருக்கும் பேர்வழி நான் அல்லள் என்பதை அவன் உணர வில்லையே! அறிவுடையோரும் புகழுடையோரும் இந்த உலகத்தில் தோன்றுகிறார்கள்; மறைகிறார்கள். பிறகு யாரும் தோன்றாத சூனிய உலகம் அன்றே? எத்தனையோ பேர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கையில் கோடரியை யுடைய தச்சன் பெரிய காட்டில் மரத்தைத் தேடி அலையவா வேண்டும்? உபகாரியைத் தேடி நான் அலைய வேண்டியதில்லை. எந்தத் திக்கிலே சென்றாலும் அந்தத் திக்கிலே சோறு கிடைக்கும்" என்று பாடினார்.

பாட்டு முடிவதற்கும் அதிகாரி வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ஒளவையார் பாடிக்கொண்டிருந்த போது அங்கே வந்த அதிகாரி அப் பெருமாட்டியின் கோபத்தை உணர்ந்து ஓடிச் சென்று அதிகமானிடம் தெரிவித்தார். உடனே அதிகமான் வந்து விட்டான்.

"நான் செய்த பிழையைப் பொறுக்க வேண்டும். மிகவும் இன்றியமையாத கடமை இருந்தது. அதனால் கவனிக்காமல் இருந்துவிட்டேன். நான் செய்தது எவ்வளவு பெரிய பிழை என்பதை இப்போது நன்றாக உணர்கிறேன். தாங்கள் வந்திருப்பது எனக்குத் தெளிவாகத் தெரியாது. தெரிந்திருந்தால் அப்போதே வந்திருப்பேன்." - அவன் உண்மையில் மனம் குழைந்து மன்னிப்பு வேண்டினான் , அழாத குறைதான்.

ஒளவையார் உண்மையை உணர்ந்தார். அவர் வந்திருப்பதை யாரும் தெரிவிக்காத போது அவனைக் குறை கூறிப் பயன் என்ன? அவர் சினம் தணிந்தார். அதிகமான் அவரை உள்ளே அழைத்துச் சென்றான். சிறந்த இடத்தில் இருக்கச் செய்து அன்புடன் உரையாடினான்.

ஒளவையார் சினம் மாறியதோடு அதிகமானுடைய பண்பையும் உணரத் தொடங்கினர். இரண்டு நாட்கள் தங்கி விடை பெற்றுக்கொண்டார். "அடிக்கடி வந்து தமிழின்பத்தை நான் நுகரும்படி செய்ய வேண்டும்" என்று வேண்டிக்கொண்டான் அதிகமான்.

*

நெடுமான் அஞ்சியின் நாட்டில் கஞ்சமலை என்ற மலை ஒன்று உண்டு. பல மருந்துச் செடிகள் உள்ளது அது; முனிவரும் சித்தரும் நாடி மருந்துக்குரிய மூலிகைகளைத் தேடிப் பெறும் சிறப்புடையது. அங்கே ஓரிடத்தில் நெல்லி மரம் ஒன்று இருந்தது. அது எங்கும் காணுவதற்கரிய சிறப்பை உடையது; பல ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்க்கும் தன்மை பெற்றது. மருத்துவர்கள் அதன் பெருமையை உணர்ந்து அதிகமானிடம் சொல்லியிருந்தார்கள். "அந்த மரம் காய்த்துப் பழுப்பது அரிது. காய்கள் பிஞ்சிலே உதிர்ந்துவிடும். ஒன்று இரண்டு காய்கள் முற்றி விளைந்தால் அவற்றை அமுதம்போலப் பாதுகாக்க வேண்டும். அந்த நெல்லிக்கனியை உண்டால் நெடுநாளைக்கு வாழலாம்" என்று சொன்னார்கள். "அத்தகைய மரத்தை நாம் பாதுகாப்பது நல்லது" என்று எண்ணி அதிகமான் அதற்குக் காவலாளரை அமைத்தான். பல காலமாகியும் அது காய்ப்பதாகவே தெரியவில்லை.

அந்த மரத்தில் இப்போது பிஞ்சுகள் தோன்றின. அதிகமான் அதைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தான். ஆனால் மருத்துவர்கள் சொன்னது போல் பிஞ்சுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து வந்தன. "ஒரு காயாவது கனிந்தால் அரசருக்குப் பயன்படும். அவர் ஒருவர் நீடுழி வாழ்ந்தால் எத்தனையோ பேருக்கு நலம் உண்டாகும்" என்று சான்றோர் கூறினர்.

காலம் போய்க்கொண்டிருந்தது; பிஞ்சுகளும் உதிர்ந்து கொண்டே இருந்தன; சில, பெரிய பிஞ்சுகளாக முதிர்ந்தன; அவற்றிலும் சில உதிர்ந்தன. கடைசியில் சொல்லி வைத்தாற்போல ஒரே ஒரு காய் தான் மிஞ்சியது; பருத்தது; நன்றாகக் கனிந்தது.

ஒன்றாவது கிடைத்ததே என்று பெருமக்கள் உவகை அடைந்தனர். அந்தக் கனி அதிகமானுக்குத்தான் உரியது என்பதில் யாருக்கும் ஐயம் உண்டாகவில்லை. ஒரு நல்ல நாளில் அதைப் பறித்து இறைவன் திருமுன் வைத்து வணங்கி உண்ண வேண்டும் என்று ஏற்பாடு ஆகியிருந்தது.

அந்த நாள் வந்தது. கனியைப் பறித்து வந்து இறைவன் முன் வைத்து வழிபட்டார்கள். அதிகமான் இறைவனை வணங்கி ஓர் இருக்கையில் சென்று அமர்ந்தான். நெல்லிக் கனியை ஒரு பொற்றட்டில் ஒரு மங்கை ஏந்தி அவனிடம் கொண்டு வந்தாள்.

அந்தச் சமயத்தில் ஒளவையார் அங்கே வந்து சேர்ந்தார். அவரை வரவேற்றான் அதிகமான். அந்த இளம் பெண் நெல்லிக் கனியை ஏந்திக்கொண்டு அருகில் நின்றாள். ஒளவையார் நல்ல வெயிலில் நடந்து வந்திருந்தார். "என்ன கடுமையான வெயில்!" என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தார். உடனே ஒருவர் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். அதை அருந்திய அவர் அந்த இளம் பெண் கையில் பொன் தட்டை ஏந்திக் கொண்டு நிற்பதைக் கண்டார். "என்ன அது?" என்று கேட்டார் ஒளவையார்.

"நெல்லிக் கனி" என்று அதிகமான் கூறினான்.

"நெல்லிக் கணியா? இந்த வெயில் காலத்தில் தாகம் தீர்க்க உதவுவதல்லவா அது? நான் வரும் வழியில் ஒரு நெல்லிக்காயாவது கிடைக்காதா என்று ஏங்கினேன். நாக்கு அப்படி வறட்டியது."

"அப்படியா? இந்த நெல்லிக் கனியை உண்ணலாமே!” என்றான் அதிகன்.

அருகில் இருந்தவர்கள் துணுக்குற்றார்கள். ஒளவையார் அதைக் கவனிக்கவில்லை. அதிகமான் கூறியதற்கு, "உண்ணலாம்'"என்று விடை கூறினார். அதிகமான் மறு பேச்சுப் பேசவில்லை. தட்டில் இருந்த நெல்லிக்கனியை எடுத்தான். ஒளவையாரின் கையிலே கொடுத்தான். அவர் அதை வாயிலிட்டுத் தின்னத் தொடங்கினார்.

அங்கே இருந்தவர்களுடைய உள்ளத்தில் எத்தனையோ விதமான எண்ணங்கள் எழுந்தன. 'இவள் எங்கேயடா இப்போது வந்து சேர்ந்தாள்!' என்று சிலர் பல்லைக் கடித்தார்கள். 'இவன் இதன் அருமையைச் சொல்லாமல் இப்படிச் செய்யலாமா?' என்று அவன் மீது சினம் கொண்டார்கள்.

"நெல்லிக் கனி ஒரு புதிய சுவையுடன் இருக்கிறதே! இது போன்றதொன்றை நான் கண்டதே இல்லை” என்று ஒளவையார் மென்று கொண்டே சொன்னர்.

"ஆமாம்; இது புதிய கணிதான்" என்றான் அதிகமான்.

அதற்குள் அங்கே அமர்ந்திருந்த பெரியவர் ஒருவருக்கு ஆத்திரம் பொறுக்கவில்லை. "நம் அரசனுக் காகத் தவஞ் செய்து பெற்ற கனி அது" என்று வெடுக்கென்று சொல்லிவிட்டார்.

"இதில் ஏதோ சிறப்பிருக்கிறது போலிருக்கிறதே!" என்று ஒளவையார் அங்கே இருந்தவர்கள் முகத்தைப் பார்த்தார். ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டதென்ற செய்தியை அவர்கள் முகங்கள் தெரிவித்தன. ஒளவையார், "ஏதோ ஒரு புதுமை இக்கனியில் இருக்கிறது. நீ உண்ண வேண்டியதை நான் உண்டுவிட்டேன் என்று தெரிகிறது. உண்மையை ஒளிக்காமல் சொல்லவேண்டும்" என்று அதிகமானைக் கேட்டார்.

"நான் சொல்கிறேன்" என்று பெரியவர் முன் வந்தார்; கதையை யெல்லாம் சொல்லி முடித்தார்.

அப்போதுதான் ஒளவையார், அவசரப்பட்டுத் தாம் செய்த செயலின் விளைவை உணர்ந்து இரங்கினார். "அப்படியா? நான் என்ன காரியம் செய்து விட்டேன்! பல காலம் வாழவேண்டிய உனக்குக் கிடைக்க வேண்டியதை நான் இடையிலே தட்டிப் பறிப்பதற்காகவா வந்தேன்?" என்று துயரம் விம்மும் குரலோடு கேட்டார்.

அதிகமான் புன்முறுவல் பூத்தான்; "தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. இறைவன் திருவுள்ளத்தின் படியே யாவும் நடக்கும். நான் எத்தனை காலம் வாழ்ந்தால் என்ன? சில போர்களைச் செய்வேன்; பலரை மடியச் செய்வேன். உலகம் அரசர்களால் வாழ்வதில்லை; அறிவு சிறந்த சான்றோர்களால் வாழ்கிறது. தங்களைப் போன்ற பெரும் புலவர்கள் வாழ்ந்தால் உலகம் நன்மையை உணரும்; நேர்மை வழியை உணரும்; கவிதை விருந்தை நுகரும். இந்த அரிய கனி எங்கே போய்ச் சேரவேண்டுமோ, அங்கேதான் போய்ச் சேர்ந்திருக்கிறது" என்றான்.

ஒளவையாருக்கு அதிகமானிடம் உண்டான மதிப்பு ஆயிரம் மடங்கு உயர்ந்துவிட்டது. ‘இவன் தெய்வப் பிறவி' என்று மனம் குளிர்ந்து வாழ்த்தத் தொடங்கினார்.

"அதியர் குலத்தில் வந்த கோமானே, நீ வாழ்க! போரில் பகைவரை அழித்து வெல்லும் வீரத் திருவையுடைய நெடுமான் அஞ்சியே, நீ வாழ்க! வாழ்க! பால் போன்ற வெண்பிறையைத் திருமுடியிலே சூடும் நீல கண்டப் பெருமானைப்போல நீ என்றும் நிலைபெற்று வாழ்வாயாக! நீ எத்தனை அரிய ஈகையைச் செய்தாய்! மலையிலே விளைந்த அரிய நெல்லிக்கனியை, நாம் உண்டால் நல்லதென்று எண்ணாமல் எனக்குக் கொடுத்தாயே! இதனால் உண்டாகும் அரிய பயன் இன்னதென்று எனக்குச் சொல்லாமல் அடக்கி, சாவு நீங்கும்படி எனக்குத் தந்துவிட்டாயே! உன் பெருமையை என்னவென்று சொல்வேன்! வாழ்க, வாழ்க, வாழ்க!" என்று பாடி வாழ்த்தினார்.

"அந்தக் கனியைவிட இந்தப் பாடல் இனிமையாக இருக்கிறது. அதை உண்டால் இந்த நாற்ற உடம்பு ஒருகால் நெடிது வாழலாம், ஆனால் இந்தப் பாடலைப் பெற்றமையால் என் புகழுடம்பு சாவாமல் வாழும்" என்று மகிழ்ச்சி பொங்கப் பேசினான், அதிகமான் நெடுமான் அஞ்சி.

அதுமுதல் ஒளவையார் உள்ளத்தில் ஏறிக் கொண்டான் அதிகமான். அவர்களிடையே இருந்த நட்பு வலிமை பெற்றது."நான் உங்கள் தம்பி போன்றவன். எனக்குத் தமக்கை யாரும் இல்லை. உங்களையே அவ்வாறு கொள்கிறேன்" என்று பணிந் தான் அதிகமான். ஒளவையாரும் உடன்பிறந்தானை விட மிக்க அன்போடு அவனிடம் பழகலாயினர்.

நீண்ட காலம் வாழச்செய்யும் நெல்லிக் கனியைத் தான் உண்ணாமல் ஒளவைக்கு ஈந்தான் அதிகன் என்ற செய்தி தமிழ்நாடு எங்கனும் பரவியது. புலவர்கள் அவனைப் பாராட்டும்போது நெல்லிக்கனி வழங்கிய பெருஞ் செயலைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

*

திருக்கோவலூரில் காரி என்ற வள்ளல் இருந்தான். அவன் முடியுடை மன்னர்களுக்குப் போரில் துணையாகச் சென்று போரிட்டு வெற்றிபெற வைக்கிறவன். அக்காலத்தில் சேர நாட்டை ஆண்டிருந்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேரன். அவனுக்குக் கொல்லிமலையைத் தன் ஆட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற அவா இருந்தது. கொல்லிமலையைச் சார்ந்த ஒரு பகுதியை ஓரியென்பவன் ஆண்டு கொண்டிருந்தான். அவன்மேல் போர் தொடுக்க விரும்பிய சேரன், காரியைத் தன் படைக்குத் துணையாக வரும்படி ஆள் விட்டு அழைத்தான். காரி சேரமானைப் போய்ப் பார்த்துப் பேசினான். "ஓரி சிறிய நாட்டுக்குத் தலைவன். அவனோடு போரிட நீங்கள் போகவேண்டியதில்லை. நான் என்னுடன் இருக்கும் வீரர்களுடன் சென்று அவனை வென்று வருகிறேன்" என்றான். பெருஞ்சேரல் இரும்பொறை அப்படியே செய்யலாம் என்று ஒப்புக்கொண்டான்.

உடனே காரி ஓஒரியின்மேல் போர் தொடுத்தான். அப்போரில் ஓரி உயிர் இழந்தான். அவனுடைய கொல்லிக் கூற்றத்தைக் காரி சேரமானுக்கு வழங்கினான். அதிகமானுக்கும் ஓரிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு காரணமும் இல்லாமல் ஓரியின்மேல் படையெடுத்து அவனைக் கொன்ற காரியினிடம் அதிகமானுக்குக் கோபம் மூண்டது. சேரமானுக்குக் கையாளாக இருந்தே இப்படிக் காரி செய்திருக்கிறான் என்பதை உணர்ந்தபோது அதிகமானுக்குச் சினம் முறுகியது. சேரமானுக்கும் அவனுக்கும் வழிவழியே பகைமை இருந்து வருகிறதல்லவா?

அதிகமான் காரியைத் தொலைக்க வேண்டுமென்று கருதி அவன் வாழ்ந்த திருக்கோவலூரின்மேற் படையெடுத்தான். போர் நிகழ்ந்தது. காரி பெரிய வீரன்; அவனிடம் வீரம் மிக்க பல வீரர்கள் இருந்தார்கள். என்றாலும் அதிகமானுடைய படைவலிக்கு முன் காரியின் படை நிற்க முடியவில்லை; தோல்வியையே கண்டது. தான் எதிர்சென்று நின்று போர்செய்தால் அதிகமான் தன்னைக் கொன்றுவிடுவான் என்று அஞ்சிய காரி போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டான். நேரே வஞ்சி மாநகர் சென்று தனக்கு நேர்ந்த கதியைச் சொன்னான்.

பெருஞ்சேரலிரும்பொறை காரிக்கு ஆறுதல் கூறினான். "இதுவும் நல்லதாகப் போயிற்று. அதிகமானைப் பூண்டோடு அழிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவனை அழித்து உனக்கு மீட்டும் திருக்கோவலூரை உரிமையாக்குகிறேன்" என்றான் சேரமான். அன்று முதலே போருக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். காரியும் தன்னுடன் ஓடிவந்த வீரர்களைத் தொகுத்து ஒரு சிறிய படையாக அமைத்துக்கொண்டான். தக்க படைப் பலம் இருக்கிறது என்ற நம்பிக்கை தோன்றியவுடன் போர் முரசு கொட்டினான் சேரன். அதிகமான் அதற்கு அஞ்சவில்லை. சிங்கக் குட்டியைப் போலத் துள்ளிக் குதித்தான். அவனுடைய கோட்டை மிகவும் வலிமையுள்ளது. பகைவர்களால் அழிப்பதற்கரியது. கோட்டைக் குள்ளிருந்து புறத்தே செல்வதற்கு இரகசியமான சுரங்க வழி ஒன்று இருந்தது. பகைவர்கள் நெருங்கும்போது அதன் வழியே யாரும் அறியாமல் வெளியிலே சென்றுவிடலாம்.

அதிகமான் வெளியே வந்து போர் செய்வதை விரும்பவில்லை. கோட்டையைத் தக்கபடி பாதுகாத்து வாயில்களை இறுக மூடி உள்ளே இருந்தாலே போதும் என்று எண்ணினான். கோட்டைக்குள்ளே புக இயலாமல் சலித்துப்போய்ப் பகைவர்கள் போய்விடுவார்கள் என்று அவன் எதிர்பார்த்தான்.

சேரன் படை அதிகமான் கோட்டையை முற்றுகையிட்டது. அதிகமான் வெளியே வரவில்லை; கோட்டையை மூடிவிட்டு உள்ளே இருந்தான். சில நாட்கள் சென்றன. உள்ளே இருப்பவர்களுக்கு உணவு குறைந்துவிட்டால் தானே கோட்டைக் கதவுகளைத் திறந்து வெளியே வந்துவிடுவான் என்று சேரமான் எதிர்பார்த்தான்.

அதிகமானே கோட்டைக்குள் இருந்த சுருங்கை வழியாகச் சிலரை அனுப்பி உணவுப் பண்டங்களைக் கொண்டுவரச் செய்தான். அதனால் எத்தனை காலமானலும் உணவுக் குறை இன்றிக் கோட்டைக்குள் அதிகமானும் அவனைச் சேர்ந்தவர்களும் இருக்கமுடியும். இந்த இரகசியம் சேரமானுக்குத் தெரியாது. 'இவ்வளவு காலத்துக்கு வேண்டிய உணவுப் பொருள்களை எப்படி அவன் இந்தக் கோட்டைக்குள் சேமித்து வைத்திருக்கிருன்!' என்றே வியப்படைந்தான். அதிகமானுடைய ஊழ்வினை பொல்லாததாக இருந்தது. அவன் அரண்மனை அந்தப்புரத்தில் துணி வெளுத்துவந்த ஒரு வண்ணாத்திப் பெண்ணுக்கு அரண்மனையைச் சேர்ந்த யாரோ தீங்கு இழைக்க முற்பட்டார்கள். அதை அவள் அதிகமானிடம் முறையிட்டுக் கொண்டாள். அவன் அவள் முறையீட்டைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதனால் அவளுக்கு அதிகமானிடம் வெறுப்பு உண்டாயிற்று. அவளுக்கு அரண்மனை இரகசியம் எல்லாம் தெரியும்.

அந்தப் பெண் இப்போது கோட்டைக்கு வெளியே ஊருக்குள் இருந்தாள். அதிகமானிடம் இருந்த வெறுப்பு இப்போது வேலை செய்யத் தொடங்கியது. அவள் சேரமான் படைத் தலைவன் ஒருவனிடம் சுரங்க வழியைப்பற்றிச் சொன்னாள்.

அதனைத் தெரிந்துகொண்ட அவன் முதல் வேலையாக அந்த வழியை அடைத்துவிட்டான். அதிகமான் குகையுள் அகப்பட்ட சிங்கம்போல ஆயினான். வேறு வழியில்லாமல் கோட்டைக் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியிலே போர்க்களத்தில் குதிக்க வேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டது.

போர் கடுமையாக மூண்டது. வைரமேறிய தோளும் உரமேறிய உடம்பும் உறுதியேறிய உள்ளமும் படைத்தவர்கள் அதிகமானுடைய படைவீரர்கள். அவர்களை எளிதில் அடக்க முடியும் என்றிருந்தான் சேரமான். அது நடவாது என்பதை இப்போது உணர்ந்து கொண்டான்.

தன் படைத் தலைவர்களுக்கு ஊக்கமூட்டினான் பெருஞ்சேரலிரும்பொறை. யானையும் யானையும் மோதின. குதிரையும் குதிரையும் பொருதன. வில்லிலிருந்து அம்புகள் சோனாமாரியாகப் பொழிந்தன. வாளைப் பலர் வீசினர்; வேலை ஓச்சினர். யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்று தெளிய முடியாமல் பல நாட்கள் போர் நிகழ்ந்தது. கடைசியில் அளவிலே மிகுதியாக இருந்த சேரன்படை முன்னேறியது. காரி மானத்துடன் போர் புரிந்தான். இறுதியில் அதிகமான் படை தோற்றது. ஒரு வீரன் எறிந்த வேல் மார்பிலே பாய அதிகமான் வீழ்ந்தான். அவன் வீழ்ச்சியைக் கண்டு சேரன் படையினர் ஆரவாரித்தார்கள். பெருஞ்சேரல் இரும்பொறை, போர்க்களத்தில் மாண்டு கிடந்த அதிகமானக் கண்டான். அவன் நெஞ்சு நடுங்கியது. அதிகமான் புகழைப் புலவர்கள் பாடிய பாடல்களினால் உணர்ந்தவனாதலின் அவனுக்கே அவன் உயிரற்ற உடலைப் பார்க்கப் பொறுக்கவில்லை.

புலவர்கள் பாட்டால் அழுது புலம்பினர்கள். அதிகமானை எரித்து அங்கே நடுகல்லை நட்டு வீரர்கள் வழிபட்டார்கள். அந்த நடுகல்லைத் தெய்வமாகப் பின் வந்தவர்கள் கும்பிட்டு வணங்கினார்கள்.

ஈகையினாலும் வீரத்தாலும் சிறந்து நின்ற அதிகமான் இன்றும் பழம் பாடல்களில் மாயாமல் நிலைத்து நிற்கிறான்.