ஏலக்காய்/வரலாற்றுப் பெருமைக்குரிய ஏலம்

வரலாற்றுப் பெருமைக்குரிய ஏலம்!


பாரதம், பாருக்குள்ளே நல்ல நாடு; அது பழம்பெரும் நாடு. வரலாறு படைத்து, வரலாற்றில் வாழ்ந்து வரும் பாரதநாடு — இந்திய நாடு, எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக வாசனைத் திரவியங்களின் தாய்நாடாகவும் மரபு வழிச் சிறப்போடும் பண்பாட்டு முறைப் பெருமை யோடும் விளங்கி வருகிறது! — இது உலகம் அறிந்த நடப்பு!

உலகத்தின் அரங்கத்திலே விலைமதிப்பற்ற நவரத் தினக் கற்களுக்கு இருந்து வந்த மதிப்பும் மரியாதையும் இந்திய நறுமணப் பொருட்களுக்கு ஏற்படலாயிற்று.

இது வரலாற்றுச் சேதி! — இதில், இந்திய வாசனைத் திரவியப் பொருட்கள், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மத்தியக்கிழக்கு நாடுகளிலே மணம் பரப்பத் தொடங்கிய விவரமும் அடங்கும்.


ரோமாபுரியில்

இந்தியாவின் நறுமண விளைபொருள்களுக்காகவே இந்தியாவோடு சர்வதேச வாணிகத்தை ஏற்படுத்தி நிலைப் படுத்திக் கொண்ட முதற்பெருமை கட்டாயம் அரேபியர் களைத்தான் சேரவேண்டும்! — அரபுக் கலாசாரத்தில் முதல் மரியாதை பெற்ற பெருமையும் இந்திய வாசனைத் திரவியங்களுக்கே உண்டு! பிறகு, எகிப்து நாட்டினர் இந்தியாவுடன் தொடர்பு கொள்ளலாயினர்.

எகிப்தைப் படைதொடுத்து வெற்றிபெற்ற ரோம், வாசனைப் பொருள் வர்த்தகத்தில் இந்தியாவோடு. தொடர்பு வைத்துக் கொள்ளவும் தவறவில்லைதான் . காலம் ஒரு புள்ளிமான் ஆயிற்றே!

இந்திய நறுமணப் பொருள்களுக்கு மத்தியில் ஏலக்காய் மனம் உலகத்தை வெகுவாகவே கவர்ந்தது.

வாசனைத் திரவியங்களுக்குள் ஒரு வாசனைப் பொருளாகக் கருதப்பட்ட ஏலக்காய்க்கு வாசனைத் திரவியப் பொருள்களின் ராணி என்கின்ற புதிய அந்தஸ்து ஏற்படலாயிற்று!

இது பழங்கதை,

உலகத்தின் நாடுகளிலே இந்திய ஏலக்காயை விரும்பி வரவேற்காத நாடு எதுவுமே கிடையாது!

புதிய கணக்கு இது!

இப்படியாகத் தொன்றுதொட்டு உலக மக்களின் உள்ளந் தொட்டுப் பேரும் புகழும் ஈட்டிக் கொண்ட இந்திய ஏலக்காய் ராணி, நமது இந்திய நாட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அந்நியச் செலாவணி வருவாயைத் தற்போது ஈட்டித் தருவதிலும் உண்மையில் ராணி. யாகவே திகழ்கிறாள்!—திகழ்கிறது!