ஏழாவது வாசல்/ஆட்டுப்புலி


ஆட்டுப் புலி

ஒரு காட்டில் ஒரு பெண்புலி யிருந்தது. அது அப்போது கர்ப்பமாயிருந்தது. அதன் வயிற்றில் ஒரு புலிக்குட்டி தோன்றிப் பிறக்க விருந்தது. இன்றோ நாளையோ புலி குட்டி போட்டு விடக் கூடிய நிலையில் இருந்தது. அப்போது அந்தப் புலி இருந்த வழியாக ஓர் ஆட்டு மந்தை போய்க் கொண்டிருந்தது. ஆட்டு மந்தையைக் கண்டவுடன் பெண்புலியின் மனத்தில் ஆசை பிறந்தது. ஆட்டு ரத்தத்தைக் குடிக்க வேண்டுமென்று அது ஆசைப்பட்டது. எனவே, அது அந்த ஆட்டுமந்தையின் மேல்பாய்ந்தது. நன்றாக கொழுத்த ஓர் ஆட்டை நோக்கி அது பாய்ந்தது. அது பாயும் போது அந்த ஆடு விலகிச் சென்றபடியால் அது குறி தவறித் தரையில் மோதி விழுந்தது. அந்த அதிர்ச்சியில் அதன் உயிர் போய் விட்டது. அதே சமயத்தில் அதிர்ச்சியின் காரணமாக வயிற்றில் இருந்த குட்டியும் பிறந்து விட்டது, உயிருடன் பிறந்த புலிக்குட்டி ஆடுகளோடு சேர்ந்து வாழலாயிற்று. பிறந்ததிலிருந்தே ஆடுகளோடு சேர்ந்து அது வளர்ந்து வந்ததால் அதற்கு ஆடுகளின் பழக்க வழக்கமே உண்டாயிற்று. ஆடுகள் மேயும் புல், பூண்டு, இலை, தழைகளையே அதுவும் மேய்ந்து வந்தது. ஆடுகள் கத்துவதுபோலவே “அம்மம்மே மெம்மம்மே” என்று அதுவும், கத்திப் பழகியது. உருவம்தான் புலியாக இருந்ததே ஒழிய அதன் செயல்கள், ஆட்டுப் போக்காகவே இருந்தன. இப்படியே வளர்ந்து அது ஒரு பெரிய புலியாகி விட்டது.

ஒரு நாள் வேறொரு புலி இந்த ஆட்டு மந்தையுள் புகுந்து வேட்டையாடியது. அந்தப் புலியைக் கண்டு ஆடுகள் பயந்து ஓடின. ஆட்டுக் கூட்டத்துப் புலியும் பயந்து அலறிக் கொண்டு ஓடியது. புதுப் புலிக்கு இந்த ஆட்டுப் புலியின் செயல் வினோதமாகப் பட்டது. அது ஆடுகளின் மீது பாய்வதை நிறுத்திவிட்டு ஆட்டுப் புலியைத் துரத்திச் சென்று கழுத்தைப் பற்றிப் பிடித்தது. பிடிபட்ட புலி, ‘அம்மம்மே’ என்று கத்தியதும் புதுப் புலிக்கு மிக அருவருப்பாயிருந்தது. அது ஆட்டுப் புலியைத் தர தர வென்று இழுத்துக் கொண்டு குளத்துக்குச் சென்றது. குளத்தின் கரையில் அதை நிறுத்தி நீருக்குள் அதன் உருவத்தைக் காட்டியது.

"இதோ பார். நீயும் நானும் ஒரே மாதிரிதான் இருக்கிறோம். நாம் இருவரும் புலிகள். ஒரு புலி பயந்து ஓடலாமா? தின்னப்பட வேண்டிய ஆடுகளோடு சேர்ந்து வாழலாமா? இதோ பார் இந்த ஆட்டிறைச்சியைத் தின்னு” என்று கூறிப் புதுப்புலி ஆட்டிறைச்சித் துண்டொன்றை நீட்டியது.

ஆட்டுப் புலி தின்ன மாட்டேனென்று மறுத்தது. “நான் புலியல்ல ஓர் ஆடுதான். என்னை விட்டு விடு. ‘மெம்மெம்மே’ என்று கத்தியது.

புதுப்புலி சும்மா விடவில்லை. இரத்தம் வழியும் இறைச்சித் துண்டு ஒன்றைப் பழைய ஆட்டுப் புலியின் வாயில் பலவந்தமாகத் திணித்தது. தன் நாக்கில் இரத்தம் பட்டதும், அந்த இரத்தச் சுவை அதற்குப் புதிய உணர்ச்சியை ஊட்டியது. அதை மேலும் மேலும் பருக வேண்டும் என்று தன்னையறியாமலே அதற்கு ஓர் ஆசை தோன்றியது. புதுப்புலி வைத்திருந்த இறைச்சித் துண்டுகளை யெல்லாம் கடித்துக் கடித்துத் தின்னத் தொடங்கியது. இத்தனை நாளும் தான் அடையாத ஓர் இன்பத்தை அடைந்தது போல அதற்குத் தோன்றியது. பழக்க வழக்கத்தால் மறைந்திருந்த அதன் புலிக்குணம் அதனிடம் திரும்பிவிட்டது. தானும் ஒரு புலி என்ற உணர்வு அதற்கு வந்து விட்டது.

“இப்பொழுது தெரிகிறதா, நீயும் என்னைப் போல் ஒரு புலிதான். இந்த ஆடுகள் நாம் அடித்துத் திண்பதற்காகவே இருக்கின்றன; சேர்ந்து வாழ்வதற்காக அல்ல. வா, வா குகைக்குப் போகலாம்” என்று புதுப்புலி அழைத்தது. பழைய புலி உறுமிக் கொண்டு அதைப் பின் தொடர்ந்தது.

தான் யாரென்று அறியாத வரையில் மனிதன் தன் குணத்துக்கு மாறான மூடச்செயல்களைச் செய்கிறான். அவன் தன்னையறிந்த பிறகுதான், இறைவனுக்குகந்த இனிய செயல்களைச் செய்யத் தொடங்குகின்றான். தான் யார் என்பதை மனிதன் அறியும் போது தன்னுள் இருக்கும் கடவுள் உணர்வைப் பெறுகின்றான்.