ஏழாவது வாசல்/பரமனை அழைத்த பக்தன்
ஓர் ஊரில் ஒருமனிதன் இருந்தான். அவன் தெய்வபக்தி மிகுந்தவன். எப்போதும் அவன் கடவுளை மறப்பதில்லை.
ஒருநாள் அந்தப் பக்தன் மீது காரணமில்லாமல் ஏதோ ஒரு குற்றத்தைச் சாட்டி ஒரு வண்ணான் வம்புக்கு வந்தான். வம்பிழுத்த வண்ணான் அத்தோடு நிற்காமல் அந்தப் பக்தனைத் தடிகொண்டு அடிக்கவும் செய்தான். வலிப்பொறுக்காத பக்தன்,“நாராயணா! நாராயணா” என்று கூவினான்.
வைகுண்டத்தில் திருமகளோடு வீற்றிருந்த நாராயணனுடைய காதுகளில் இக் கூக்குரல் விழுந்தது. பக்தனின் துயர் பொறுக்க மாட்டாத நாராயணன், உடனே அங்கிருந்து புறப்பட்டார். இருக்கையிலிருந்து எழுந்து இரண்டு அடிகள் நடந்த நாராயணன், திரும்பவும் இருக்கையில் வந்து அமர்ந்தார்.
"அவசரமாகக் கிளம்பினீர்களே, பெருமானே, ஏன் அதற்குள் திரும்ப உட்கார்ந்து விட்டீர்கள்?’ என்று திருமகள் கேட்டாள்.
"நான் போகவேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது” என்றார் நாராயணப்பெருமான்.
திருமகள் அவர் கூறிய சொற்களின் பொருள் புரியாமல் விழித்தாள்.
“திருவே, என் பக்தன் ஒருவனை வண்ணான் அடித்தான். பக்தன் வலிதாங்காமல் துடித்தான். என்னைக் கூவி யழைத்தான். அவன் துன்பத்தைப் போக்குவதற்காக நான் புறப்பட்டேன். ஆனால், அதற்குள், என் பக்தனும் வண்ணான் ஆகிவிட்டான். தன்னையடித்த வண்ணானை அவனே திருப்பியடித்து விட்டான், இனி நான் அங்கு போய்ப் பயனில்லை என்றுதான் திரும்ப உட்கார்ந்து விட்டேன்” என்றார் பெருமான்.
முழுக்க முழுக்கக் கடவுளை நம்பியிருப்பவர்களுக்குத்தான் அவருடைய அருள் கிடைக்கும். முழு நம்பிக்கை யற்றவர்களுக்கு அவருடைய உதவி கிடைக்காது.