ஏழாவது வாசல்/மூன்று கிணறுகள்


மூன்று கிணறுகள்

ஒரு முறை ஒரு மனிதன் தோட்டம்போட்டான். தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச ஒரு கிணறு இருந்தால் நல்லதென்று நினைத்தான். அதற்காக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் கிணறு வெட்டத் தொடங்கினான்.

மிக முயன்று இருபது முழம் ஆழம் வரை வெட்டினான். இருபது முழம் வரை வெட்டியும் அந்த இடத்தில் தண்ணிர் ஊற்று எதுவும் தென்படவில்லை. அதை அப்படியே நிறுத்தி விட்டான்.

இரண்டாவதாக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான். அந்த இடத்தில் முப்பது முழம் ஆழம் வரை வெட்டினான். அப்படியும் தண்ணீர் ஊற்றுத் தோன்றவில்லை. ஆயாசத்துடன் அந்த இடத்தில் வெட்டுவதையும் நிறுத்தி விட்டான். மூன்றாவதாக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான். மிகவும் பாடுபட்டு அந்த இடத்தில் ஐம்பது முழம் வரை வெட்டினான். அப்படியும் தண்ணிர் வரவில்லை. அவனுக்கு அலுத்துப் போய்விட்டது. கிணறு தோண்டும் எண்ணத்தையே விட்டுவிட்டான்.

ஒருநாள், அனுபவசாலியான ஒரு பெரியவரிடம் தன் முயற்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். மூன்று முறை கிணறு வெட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லையென்றும், பூமியில் தண்ணீரே அற்றுப் போய் விட்டதென்றும் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

பெரியவர் அவனை நோக்கினார். “தம்பீ, மூன்று இடத்திலும் நீ வெட்டிய மொத்த ஆழம் எவ்வளவு இருக்கும்?” என்று கேட்டார்.

"மொத்தம் நூறு முழம் இருக்கும்” என்று பதில் சொன்னான் அந்த மனிதன்.

“இந்த நூறு முழத்தையும் ஒரே இடத்தில் தோண்டியிருந்தால், எப்படியும் தண்ணீர் தோன்றியிருக்குமே!” என்றார் அந்தப் பெரிய மனிதர். அந்த மனிதன் அசட்டு விழி விழித்தான்.

“தம்பீ, நீ மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததில் தவறில்லை. ஆனால் ஒரே இடத்தில் கருத்தைச் செலுத்தி நீ சலிப்பில்லாமல் தோண்டியிருந்தாயானால், நூறுமுழம் ஆழம் ஆவதற்கு முன்னாலேயே கூட நீர் கிடைத்திருக்கும். எப்போதும் விடாநம்பிக்கையுடன் ஒருமுகப்பட்ட முயற்சியிருந்தால் எடுத்த செயல் வெற்றி பெறும்” என்றார் அந்தப் பெரியவர்.

கடவுளை அடைவதற்காக மதம் மாறுபவர்களின் செய்கையும் இப்படிப்பட்டதுதான். எத்தனை முறை மதம் மாறினாலும், தீவிர நம்பிக்கை இல்லாவிட்டால் அவர்கள் கடவுள் உண்மையை அறிய முடியாது. முதலில் இருக்கும் மதத்திலேயே இருந்து கொண்டு உறுதியான நம்பிக்கையுடன், தொழுதுவந்தால், கடவுள் உண்மையை உறுதியாக அறிந்து கொள்ள முடியும்.