ஐந்து செல்வங்கள்/கிழட்டுச் செல்வம்


3. கிழட்டுச் செல்வம்

“வாங்கம்மா! வாங்க! வர இவ்வளவு நேரமா ஆயிற்று?”

“இல்லை பாட்டி! பள்ளியிலிருந்து முன்னமேயே வந்துவிட்டேன். செல்லம் என்னை அவள் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனாள். பேசிக்கொண்டே இருந்து விட்டேன். கொஞ்சம் நேரமாய்ப் போய் விட்டது.”

பாட்டி : கண்னு உனக்கு எத்தனை தரம் சொல்கிறது, செல்லத்தோடு சேராதே என்று? இனிமேல் நீ கண்டிப்பாகச் சேரக்கூடாது. செல்லம் கெட்ட பிள்ளை. அவளோடு சேர்ந்தால் நீயும் கெட்டுப் போவாய். தெரியுமா?

கண் : பாட்டி! நான் நல்ல பிள்ளையா பாட்டி?

பாட்டி : ஆமா கண்ணு! நீ நல்ல பிள்ளைதான்!

கண் : அப்படியானால், செல்லம் என்னோடு சேர்ந்து விளையாடட்டுமே பாட்டி.

பாட்டி : என்ன சொன்னாய்? அவள் உன்னோடு சேர்ந்து விளையாடுவதா?

கண் : ஆம் பாட்டி! செல்லம் கெட்ட பிள்ளை . அவளோடு சேர்ந்தால் நான் கெட்டுப்போவேன். நானோ நல்ல பிள்ளை; என்னோடு அவள் சேர்ந்தால் அவளும் நல்ல பிள்ளையாகி விடமாட்டாளா? அதற்காகத்தான் பாட்டி, அப்படிச் சொன்னேன்.

பாட்டி : கண்ணு! உன் உடல் வளர்கிற மாதிரியே உன் அறிவும் வளர்கிறது. இந்த அழகை, உன் தாயும் தந்தையும் இருந்து கண்டு களிக்காமற் போனார்களே என்றுதான் வருந்துகிறேன்.

கண் : ஆமா பாட்டி! பண்டிட் மோதிலால் நேரு கூட இப்போது இருப்பாரானால், விஜயலெட்சுமி பண்டிட்டைப் பார்த்து எவ்வளவு மகிழ்ச்சியடைவார்? என்ன செய்கிறது? உங்கள் பேச்சு, செத்துப்போன மாடு இருந்தால் உடைந்து போன கலயத்தில் தினம் நான்கு கலயம் கறக்கலாம் என்பதுபோல இருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும் பாட்டி! என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

பாட்டி : இப்படியெல்லாம் பேச எப்படிக் கற்றுக் கொண்டாய் கண்ணு? உன் கேள்வி என்ன?

கண் : செல்லத்தோடு சேர்ந்தால் நான் கெட்டுப் போவேன் என்று சொன்னீர்களே, அது எப்படி?

பாட்டி : ‘பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் உண்ணும்’ என்பது தமிழ்நாட்டுப் பழமொழி கண்ணு!

கண் : நான் அதைத்தான் கேட்கிறேன், கன்றோடு சேர்ந்த பன்றியும் புல் தின்னாதா என்று?

பாட்டி : தின்னாது அம்மா! தின்னாது!

கண் : ஏன் அப்படி?

பாட்டி : கன்றுக்கும், பன்றிக்கும் உள்ள பற்களின் அமைப்பே வெவ்வேறு! கன்று மலத்தை உண்டாலும், பன்றி புல்லைத் தின்னாது; தின்னவும், மெல்லவும் அதன் பற்கள் துணை செய்யா!

கண் : அப்படியானால், எனக்கும் செல்லத்திற்கும் அப்படிப்பட்ட வேற்றுமைகள் எதுவுமில்லையே!

பாட்டி : பன்றிக்கும் கன்றுக்கும் பல் வேற்றுமை: செல்லத்திற்கும் உனக்கும் மனவேற்றுமை.

கண் : என்ன பாட்டி! ஏமாற்றுகிறீர்கள். அந்த மன வேற்றுமையைத் தான் குறிப்பிட்டுக் கேட்கிறேன். என்னோடு அவள் சேர்வதால், அவ்வேற்றுமை கெட்டு, என் மனத்தோடு அவள் மனமும் ஒன்றுபடாதா என்ன?

பாட்டி : நன்றாகக் கேட்கிறாய் கண்ணு! நன்கு பேசக் கற்றுக் கொண்டுவிட்டாய்!

கண் : பாராட்டுதல் இருக்கட்டும் பாட்டி! பதில் வேண்டும் எனக்கும்.

பாட்டி : நல்லதைக் கெட்டது எளிதாக வென்று விடுகிறது. ‘நல்லது கெட்டதின் முன்பு நிலைத்து நிற்பது’ என்பது மிகவும் கடினமானது.

கண் : பாட்டி! நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. தயவு செய்து விளக்கமாகச் சொல்லுங்கள்.

பாட்டி : நல்லதை நினைக்கவும், நல்லதைச் சொல்லவும், நல்லதைச் செய்யவும், அதிக மனவலிமையும் உறுதியும் வேண்டும். கெட்டதை நினைக்க, கெட்டதைச் சொல்ல, கெட்டதைச் செய்ய எவராலும் எளிதாக இயலும். நல்லவளாக வாழ ஆண்டுகள் பல வேண்டும். கெட்டவள் ஆக ஒரே வினாடி போதும். இந்த வலிமைக் குறைவினால்தான் கண்ணு, நம் நாட்டில் நல்ல மனம் படைத்தவர்கள் அருகியும், கெட்ட மனம் படைத்தவர்கள் பெருகியும் காணப்படுகிறார்கள் பெருமீனுக்குச் சிறு மீன் இரையாவது இயல்புதானே?

கண் : அப்படியானால் என் மனது நல்லது என்றும் செல்லத்தின் மனது கெட்டது என்றும் தாங்கள் கருதுகிறீர்கள். இது அவரவர் பிள்ளைகளின் மீது அவரவர்கள் வைக்கும் பற்றுதலாக இருக்க முடியுமே தவிர, உண்மையாக இருக்க முடியாதே பாட்டி!

பாட்டி : கண்ணு! நீ கூறுவது உண்மைதான். செல்லத்தின் பெற்றோர்களும் கூடச் செல்லத்தை அப்படித் தான் எச்சரிப்பார்கள். எச்சரித்துப் பயன் என்ன?

கண் : என்ன பாட்டி? அப்படிப் பெருமூச்சுவிட்டுச் சொல்லுகிறீர்கள்?

பாட்டி : பிள்ளைகள் கெடுவது பெரும்பாலும் தாய் தந்தைகளால்தான். பெற்றோர்களின் கெட்ட பழக்கங்களும் வழக்கங்களுமே பிள்ளைகளின் உள்ளத்தில் நன்றாகப் பதிகின்றன. அதை அறியாத பெற்றோர்களிற் சிலர், பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்தித் திருத்த முயலுவார்கள் முயன்றால் முடியுமா? பிள்ளைகளைத் திருத்துவதைவிட்டு, அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முயன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

கண் : பாட்டி! செல்லத்தின் பெற்றோர்களை உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அவ்வளவு கெட்ட பழக்க வழக்கங்கள் உள்ளவர்களா?


பாட்டி : அவர்களைப் பற்றியாவது, அவர்களின் குடும்பத்தைப் பற்றியாவது, அவர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியாவது எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள ஆசைப்பட்டதுமில்லை. ஆசைப்படுவதும் நல்லதல்ல. ஆனால், செல்லத்தின் தாய் பொய் பேசுவாள் என்பது மட்டும் எனக்குத் தெரியும்

கண் : பொய்சொல்வது அவ்வளவு பெரிய தவறா? பாட்டி!

பாட்டி : ஆம், கண்ணு! பொய் என்றதுமே என் உடல் நடுங்குகிறது. ஒரே ஒரு பொய்யால்தான் நம் குடும்பம் இத்தகைய அழிவிற்கு வந்தது. உன் தாய் உப்பு வாங்க எதிர் வீட்டில் நுழைந்தாள். உன் தந்தை வரும் பொழுது அதைப் பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தான் பின்னாலேயே உன் தாயும் வந்துவிட்டாள். ‘எங்கே போயிருந்தாய்?’ எனக் கேட்டான். ‘இங்கேதான் இருந்தேன்’ என்றாள். இப்பொய்யைச் சகியாத உன் தந்தை, முன்கோபி ஆதலின், ஓங்கி ஒரு அறை அறைந்து விட்டான் அடியைப் பெற்ற உன் தாய், அன்று முதல் உணவு அருந்தவில்லை பத்தாம் நாள் படுக்கையில் வீழ்ந்தாள். நாட்கள் பல ஆயின. எழுந்திருக்கவில்லை. உன் பாட்டன் என்னிடம் வந்து, “உன் மகன் மருமகளை அடித்தானா?” என்று கேட்டார். ‘ஆம்’ என்றால் அப்பன் மகனுக்குள் வருத்தம் வருமோ என அஞ்சி, அரைப் பொய்யாகத் ‘தெரியாது’ என்று கூறினேன், அவர் மகனைக் கேட்டார். அவன் “ஆம்” என்று உண்மையைக் கூறி, மனைவி கண்முன்னே பொய் கூறியதால், சகிக்க முடியாமல் ஆத்திரம் வந்து அடித்துவிட்டேன் என்று வருந்தி அழுது, அவன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டான். உன் தாயும் தான் பொய்சொன்ன தவறுக்காக வருந்தி, உன் தந்தையிடம் மன்னிக்கும்படி வேண்டினாள். உன் தந்தையும், உன் தாயிடம், தான் அடித்ததை மறந்து மன்னிக்கும்படி வேண்டினான், அடுத்த நாள் உன் தாய் அமைதியாக இவ்வுலகத்தைத் துறந்துவிட்டாள்!

உன் தந்தைக்கு இவ்வுலகமே இருண்டு விட்டது போலத் தெரிந்தது. அவனுக்கு மன அமைதியில்லை. மறுமணம் செய்துகொள்ள எவ்வளவோ வேண்டியும் உன் தந்தை மறுத்து விட்டான். அடிக்கடி அவன் தன்னைப் “பாவி! பாவி!” என்று கூறிக்கொண்டேயிருந்தான். அடுத்த ஆண்டு தொடங்குவதற்குள் அவனும் உயிர்நீத்தான்!

உன் பாட்டனோ, நான் சொன்ன அரைப் பொய்க்காக 3. ஆண்டுகள் என்னோடு பேசவேயில்லை. இந்த அரைப் பொய்யையும் ‘பயந்துதான் சொன்னேன்’ என்று பல தடவை உன் பாட்டனிடம் கூறி மன்னிப்பை வேண்டியும், அவர் மரணப் படுக்கையிலிருந்தும்கூட, மன்னிப்பு அளிக்க மறுத்து விட்டார். உயிர் பிரியும்போது, அவர் சொன்ன சொல் என்ன தெரியுமா? ‘கண்ணம்மாளைக் காப்பாற்று அவள் முன்பு பொய் பேசாதே’ என்பதுதான் கண்ணு! உனக்காகவே என் உயிர் உடலில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எனக்கு இவ்வுலகமே நீதான் நான் ஒருத்தியே உனக்கு மீதி. ஆ! ஒரு சிறிய பொய்யைப் பேசாதிருந்தால், இக்குடும்பம் எவ்வளவு சிறப்பாக இருத்திருக்கும்?

கண் : பாட்டி! வருந்தத்தக்க இச்செய்தி என் உள்ளத்தை வருத்துகிறது என்றாலும், ‘கோடானு கோடிப் பேர் மிக எளிதாகக் கருதிப் பேசிவருகிற பொய்யை, மிகப் பெரிதாகக் கருதி வாழ்ந்து வந்தது நம் குடும்பம்’ என்று எண்ணும்போது, அதைவிட அதிகமாக மகிழ்ச்சி உண்டாகிறது பாட்டி?

பாட்டி : கண்ணு! இச்சிறிய வயதிலே உனக்குப் பரந்த நோக்கமும், விரிந்த மனப்பான்மையும் அமைந்திருப்பதைக் கண்டு என் உள்ளம் குளிர்ச்சியடைகிறது. கண்ணம்மா! நீ நன்றாக இருத்தல் வேண்டும்!

கண் : உங்கள் வாழ்த்துதல் பொய்க்காது பாட்டி! செல்லத்தின் தாயும், என் தாயைப்போலச் சிறு பொய் சொல்லியிருக்கக்கூடும். அதற்குச் செல்லம் குற்றவாளியானால், நானும் குற்றவாளிதானே பாட்டி!

பாட்டி : அப்படியல்ல...கண்ணு கொலுப் பொம்மைகளை விற்கக் கூடையோடு ஒருத்தி வந்தாள். செல்லத்தின் தாய் 4 பொம்மைகளை விலைபேசி எடுத்துக்கொண்டு பணம் கொடுத்துவிட்டாள். செல்லம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் சிறுபிள்ளைதானே! அப்பொழுது அவளுக்கு 8 வயது இருக்கும். பொம்மை ஒன்றைப் பொம்மைக்காரி அறியாமல் எடுத்துப்போய் அவள் தாயாரிடம் கொடுத்துவிட்டாள். கடைசியாகப் பொம்மை ஒன்று குறைவதைக் கண்ட பொம்மைக்காரி, செல்லத்தின் தாயைக் கேட்டாள். செல்லம் பொம்மையை எடுக்கவுமில்லை, தன்னிடம் கொடுக்கவுமில்லையென்று பொய் கூறிவிட்டாள்.

கண் : இது எப்படி உங்களுக்குத் தெரியும்?

பாட்டி : மறுநாள் பொம்மைக்காரி கொலுப் பார்க்கும் கூட்டத்தோடு கூட்டமாகச் செல்லத்தின் வீட்டிற்குப் போனாள் அங்கு அந்த ஐந்தாவது பொம்மையைப் பார்த்து விட்டாள். அவள், அங்கேயே உட்கார்ந்து கொண்டு கொலுப்பார்க்க வருகிறவர்கள் எல்லோரிடமும் இக்கதையைச் சொல்லிக் கொண்டிருந்தாள். செல்லத்தின் தந்தை வெளியிற் சென்றிருந்து வந்தவர், மனைவியை விசாரித்தார். ‘பொம்மைக்காரி சொல்வது பொய்’ என்று அவரிடமும் சொல்லிவிட்டாள். ‘எது எப்படியானாலும் காசைக் கொடுத்துவிடு, போகட்டும்’ என்றார். அதற்கு அவள், காசைக் கொடுத்தால் பொய் வெளிப்பட்டுவிடுமே எனப் பயந்து மறுத்துவிட்டாள். பொம்மைக்காரியும் போகவில்லை. செல்லத்தின் தந்தை, அவளை விரட்டினார். “திருட்டுப் பெண்டாட்டியை மிரட்ட முடியவில்லை. என்னை மிரட்டவருகிறீரே!” என்றாள். பொம்மைக்காரியை அடித்துவிட்டார். அவ்வளவுதான், தெருவில் நடந்த இரைச்சல் ஊரில் பரவத் தொடங்கிவிட்டது. இறுதியில் போலீசார் தலையிட்டனர். செல்லத்தின் தந்தை இதற்காகத் தண்டனையும் பெற்றார்.

கண் : பாட்டி! இதையா நீங்கள் பொய் என்று கூறினிர்கள்? பொய், திருட்டு, வஞ்சகம், சூது, ஏமாற்றம், ஆத்திரம், அடிதடி, அவமானம் அத்தனையுமல்லவா இதில் கலந்திருக்கிறது?

பாட்டி : ஆம் கண்ணே! பொய் உள்ளத்தே புற்று வைக்கும். கரையான் காட்டிலே புற்று வைக்கும். கறையான் புற்றில் நுழைந்தபின் எலி, பாம்பு முதலியவைகள் நுழைவதுபோல, பொய் உள்ளத்தில் புகுந்தபின் அப்புற்றில் திருட்டு, வஞ்சகம், சூது, நெறிதவறல் அத்தனையும் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்துவிடும்.

கண் : பாட்டி! இதனால் பெருங்கேடு விளையுமே!

பாட்டி : ஆம் கண்ணே! புற்றில் எலியும், பாம்பும் நுழைவதைக் கண்டுவிட்டால், கண்டவர்கள் சும்மா விடுவார்களா? அப்புறம் கடப்பாறை, மண்வெட்டிகளெல்லாம் நுழைந்து, புற்றையே நாசமாக்கிவிடும்.

கண் : பொய்யை உள்ளத்தில் நுழையவிட்டவர்கள் கதியும் அதே நிலைதான் போலும்!

பாட்டி : ஆம் கண்ணு! அதனால்தான் செல்லத்துடன் சேராதே என்றேன்.

கண் : பாவம்! செல்லம் இதை ஒன்றும் அறியாள் பாட்டி!

பாட்டி : ஆம். அவள் அறியாமல்தான் செய்தாள். அவள் தாய் அப்போதே அவளைக் கண்டித்துத் திருத்தியிருக்க வேண்டும். அவள் செய்யவில்லை. அதற்கு மாறாக அவள் திருட்டை ஆதரித்து, அதை மறைத்துப் பொய்யையும் கூறியிருக்கிறாள். அதனால், செல்லத்திற்குத் தான் செய்தது சரி என்றுதானே படும்? அதையே அவள் மேலும் தொடர்ந்து செய்து கெடுவாள். பல குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களே பெரிய பகைவர்களாக இருந்து வருகிறார்கள். பிறகு, குழந்தைகளை யார் எப்படித் திருத்தமுடியும்?

கண் : அப்படியானால், பாட்டி! பிள்ளைகள் இளமையிலேயே கெட்டுவிடுகிறார்களா?

பாட்டி : ஆம் கண்ணு! குழந்தைகளுக்கு மூன்றாவது வயது நிறையும்போதே அறிவு வளரத் தொடங்கி விடுகிறது. அப்பொழுதிருந்தே அது உலகத்தை ஆராயவும் தொடங்குகிறது. அதன் உள்ளம் மாசு மறுவற்றது. அது படம் எடுக்கப் பயன்படுகிற (Plate of photo) உருவப் பதிவுக் கண்ணாடியைப் போன்றிருக்கும். எது தன்னெதிரில் தோன்றுகிறதோ அதை அப்படியே தன்னில் பதிப்பித்துக்கொள்ளும்.

மோர் விற்பதைக் கண்டால், ஒரு கொட்டாங்கச்சியைத் தலையில் வைத்துக்கொண்டு, ‘மோரோ மோர்!’ என்று கூவும். வீடு கட்டுவதைக் கண்டால் மணலைக் குவித்து வீடுகட்டத் தொடங்கும். குதிரை ஏறுவதைக் கண்டுவிட்டால், குட்டிச்சுவரில் ஏறியாவது குதிரை ஒட்டி ஆடும். திட்டுவதைக் கண்டால் திட்டும். மரியாதையாகப் பேசுவதைக் கண்டால் மரியாதையாகப் பேசும். தொட்டிற்பழக்கம் சுடுகாடுவரை போகும். குழந்தைகளின் பேச்சிலிருந்தும், செயலிலிருந்தும் அவ்வீட்டாரின் குணம், நடத்தை முதலியவைகளை எளிதாக அறிந்து கொள்ள எவராலும் இயலும். ஆகவே, பெற்றோர்களிடத்தில் சில தவறான குணங்கள் இருந்தாலும், அவற்றைப் பிள்ளைகள் அறியாதவாறு வாழ்க்கையை நடத்தியாக வேண்டும். இன்றேல் பிள்ளைகளின் வாழ்வும் கெடும். செல்லத்தின் உள்ளம் அவள் தாயின் தவறுதலால் அழுக்குப் பட்டுவிட்டது. நீ அவளோடு சேர்ந்தால் அந்த அழுக்கு உன் உள்ளத்திலும் படிந்துவிடும் என்றே எச்சரிக்கிறேன்.

கண் : அது எப்படிப் பாட்டி, நாங்கள் இருவரும் சேர்வதால், என் குணம் அவளுக்குப் படியாது? அவள் குணம்தான் எனக்குப் படியும் என்று கூறுகிறீர்கள்? இது ஒன்றை மட்டும் என்னால் ஒப்பமுடியவில்லையே! கெட்டதை நல்லது வெல்லாதா என்ன?

பாட்டி : முதலிலிருந்தே நீ இப்படித்தான் கேட்டு வருகிறாய் அதற்கு விடை இதுதான். நீயே சொல். நெருப்பை நீர் வெல்லுமா? நீரை நெருப்பு வெல்லுமா?

கண் : நெருப்பு மிகுந்திருந்தால் நீர் அழியும்; நீர் மிகுந்திருந்தால் நெருப்பு அணையும். இல்லையா பாட்டி?

பாட்டி : ஆம் கண்ணு! சரியாகச் சொன்னாய், இதிலிருந்து என்ன தெரிகிறது?

கண் : வலிமை மிகுந்த ஒன்று, வலிமை குறைந்த ஒன்றை விழுங்கிவிடும் என்று தெரிகிறது.

பாட்டி : ஆம் கண்ணு; அதுதான் உண்மை. நல்லது மிகுந்தால் கெட்டதை விழுங்கிவிடும். கெட்டது மிகுந்தால் நல்லதை விழுங்கிவிடும். பாலோடு சேர்ந்த நீர் பாலாகும். நீரோடு சேர்ந்த பால் நீராகவே இருக்கும். இப்படித்தான் நீ செல்லத்தோடு சேர்வதும்; செல்லம் உன்னோடு சேர்வதும் ஆகும். அது மட்டுமல்ல; நற்குணத்திற்கு இழுக்கும் வலிமை குறைவு, தீக்குணத்திற்கு இழுக்கும் வலிமை அதிகம் கண்ணு! இப்பொழுது தெரிகிறதா. உன் கேள்வி எப்படிப்பட்டது என்று?

கண் : பாட்டி! நன்றாகத் தெரிகிறது. இனி ஐயம் இல்லை. இவையெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது பாட்டி? நீங்கள் கல்லூரியில் படித்தீர்களா? என்ன?

பாட்டி : இல்லையம்மா! என் காலத்தில் கல்லூரி ஏது: பள்ளிப் படிப்பு இருந்தாலும், நல்வாழ்வு வாழ உலகத்தையும் படித்தாக வேண்டும் கண்ணு!

இச்சமயத்தில் வந்த,

செல்லம் : கண்ணம்மா! கிழடு என்ன உளறுகிறது? கிழத்தோடு சண்டையா, என்ன?

கண் : செல்லம்! வா! இனிமேல் பாட்டியைக் ‘கிழடு’ என்று கேலியாகப் பேசாதே! எப்போதும் மரியாதையாக பேசக் கற்றுக்கொள். கிழடுகள்தாம் நம் நாட்டின் உயர்ந்த செல்வங்கள்! அவர்களிடம் நிறைந்துள்ள அனுபவக் குவியல்கள் எதிர்காலக் கிழடுகளாகிய நமக்கு இப்போது தேவை. கிழட்டுச் செல்வங்களை இழந்தால் நாம் ஒரு நற்செல்வத்தை இழந்தவர்களாவோம்’ செல்லம்! நாம் இருவரும் நட்புடையவர்களாக இருக்க வேண்டுமானால், நான் சொல்கிறபடி நீ நடந்தாக வேண்டும். முதலில் பாட்டியிடம் மன்னிப்பைக் கேட்க வேண்டும். அடுத்து, நாள்தோறும் பள்ளிப் படிப்பு முடிந்ததும், பாட்டியிடம் வந்து படித்துக்கொள்ள வேண்டும். நீ ஒப்புகிறாயா என்ன?

செல்லம் : அப்படியே செய்கிறேன், பாட்டி! மன்னியுங்கள் பாட்டி! நாள்தோறும் வருகிறோம். எங்களை வாழ்த்துங்கள் பாட்டி!

பாட்டி : அப்படியே செய்யுங்கள். வயது நிறைந்தவர்களைப் போற்றுவது நற்குணங்களில் ஒன்றாகும். நான் இவ்வுலகிற்பட்டு அறிந்த சிலவற்றை உங்களுக்குக் கூற முடியும். வேறென்ன செய்யமுடியும்? நீங்கள் இருவரும் நல்லவைகளை எண்ணி, நல்லவைகளைச் செய்து நல்வழி யில் நடந்து நல்வாழ்வு வாழ்ந்து செல்லக் கண்ணுகளாகத் திகழவேண்டும் என்பதே எனது ஆசை எனக்கென்ன! காடு, வா! வா! என்கிறது ... என்றோ ஒரு நேரத்தில்...

செல்லமும் கண்ணும் : பாட்டி! பாட்டி!! அப்படிச் செய்துவிடாதீர்கள். எங்கள் குழந்தைகளையும் கண்டு வாழ்த்திவிட்டு அப்புறம்தான் பிரியவேண்டும்.

பாட்டி : உங்கள் எண்ணம் வலிமை மிகுந்ததாக இருக்குமானால், அப்படியே நடைபெறும். நேரம், ஆகிறது. போய்ப் படியுங்கள்.

இருவரும் : வணக்கம் பாட்டி! வணக்கம்!