ஒரு கோட்டுக்கு வெளியே/அலைகள் ஓய்வதில்லை

அலைகள் ஓய்வதில்லை

பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


ஆசிரியர் சமுத்திரம் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதி நாடறிந்த எழுத்தாளராகத் திகழ்கிறார், அவரின் காகித உறவு, சத்தியத்தின் அழுகை, சமுத்திரம் கதைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அவருக்கென வாசகர்கள் நாளும் பெருகி வருகிறார்கள். வானொலி, தொலைக்காட்சி முதலிய மக்கள் தொடர்புச் சாதனங்களில் பணியாற்றுவதால் புலப்பாட்டு நெறி வாய்க்கப் பெற்றவர். எதையும் எளிதில் சொல்லும் கலையில் வல்லவராகத் திகழ்கிறார். அவருடைய அணுகுமுறைகளும் ?. த்திகளும் அவர் படைப்புக்கள் பரவுவதற்கு வழிவகுக்கின்றன. அவருக்கு என்று ஒரு தனிநடை அமைந்துள்ளது. அறிவு ஜீவிகள் என்று சொல்லக்கூடிய மேதாவி விமரிசகர்கள் குழு மனப்பான்மையுடன் இருட்டடிப்பு செய்தாலும் அவருடைய வாசகர் பரப்பளவு நாளும் விரியத்தான் செய்கிறது. வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒலிக்கும் பெயராக இருப்பதால் மக்கள் காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

சிறுகதையோ, நெடுங்கதையோ அவர் படைப்பில் அவருடைய தனித்தன்மை பளிச்சிடுகிறது. 75 ஆண்டு பத்திரிகை உலகில் தமிழ்ச்சாதி எழுத்தாளர்களுக்கு விளம்பரமின்மையும் மறைக்கப்படுதலும் மரபாகிவிட்டமை ஒன்றும் புதிதல்ல. காரிருளைக் கிழித்து வரும் கதிரவன் ஒளிபோலப் படைப்பாற்றலால் எழுத்தாளர்கள் ஒளிவீசத்தான் செய்கிறார்கள். அவ்வகையில் சமுத்திரம் தடைகள் பல கடந்து இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றுவிட்டார்.

அவர் படைப்புக்களில் அலுவலங்களின் அவலமும், அதிகாரிகளின் ஆணவப்போக்கும் லஞ்ச லாவணியங்களின் சீர்கேடும் மிகுந்த அழுத்தத்துடன் பேசப்படுகின்றன.

தீமைகண்டு பொங்கும் நெஞ்சினர்; சமூகக் கொடுமைகளை ஆவேசமாகச் சாடுகிறவர். அவரது சத்திய ஆவேசம் சுகவாசிகளுக்கு எரிச்சல் ஊட்டுகிறது. சிறுகதை, நாவல், நாடகம் முதலிய இலக்கிய வடிவங்களில் கடந்த 15 ஆண்டுகளில் இருபதுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்த அவர் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுவிட்டார். அண்மைக் காலங்களில் அவரைப் போல எழுதவும் அவர் பாணியில் எழுதவும் சிலர் முன்வந்துள்ளனர். கோபாவேசத்தோடு கொதித்தெழும் சமுத்திரத்தின் படைப்புக்களில் பிரச்சார நெடி இருப்பதாகச் சிலர் குறைகூறி மகிழ்கிறார்கள். தாங்கள் விரும்புகிற மொழிநடையில் எழுதவில்லை என்றும் சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள். தங்கள் குழுவைச் சேர்ந்த ஒரு சிலரின் படைப்பே சிறந்தது எனத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடுகின்றனர். இலக்கியத்தரம், தரமின்மையைக் காலம் உறுதி செய்யும்.

பத்தாண்டுகளுக்கு முன்பே நவீன விமர்சன உலகத்தின் மும்மணிகளாகிய கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலை ஆகியோர் சமுத்திரம் படைப்புக்களின் பன்முக நலன்களைத் திறனாய்ந்து தெளிந்து கூறியுள்ளார்கள். இது சமுத்திரத்தின் கதைக் களங்கள், கதை சொல்லும் முறை, சமுதாயப் பார்வை, படைப்பு வழங்கும் செய்தி என அவரின் படைப்பாளுமை பற்றி மிகத் தெளிவான மதிப்பீடுகள் நாளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

மத்திய, மாநில அரசுகள் பரிசுகள் தந்து சிறப்பளித்தன. நிறுவனங்களும் அவரது படைப்புக்களுக்குப் பரிசுகள் வழங்கி இவரைப் பெருமைப் படுத்தி வருகின்றன.

சமுத்திரத்தின் சக்தி வாய்ந்த எழுதுகோல் தொடர்ந்து நல்ல படைப்புக்களை நல்கும் என்பது எம் உறுதியான நம்பிக்கை. எதிர்ப்புகளிடையே வளரும் சமுத்திரம் எதிர்ப்புகளை வென்று ஏற்றம் பெறுவார். சமுத்திரத்தின் அலைகள் ஓய்வதில்லை . இலக்கிய உலகில் ஒரு நாளும் ஓயாது. புதிய அலைகளாய், உயாந்த அலைகளாய் உயரும். சிறக்கும்.