ஒரு கோட்டுக்கு வெளியே/உலகம்மை நடந்தாள்…
22. உலகம்மை நடந்தாள்…
நாலைந்து நாட்கள் கடந்தன.
மாயாண்டிக்கு இறுதிச்சடங்குகள் முடிவடைந்துவிட்டன. அவர் உடம்பு எரிக்கப்பட்ட இடத்தில் நான்கு சதுரஅடிப் பரப்பிற்கு ஒரு மணல்மேடை வைத்து, அதைச் சுற்றி ஒரடி உயரச்சுவரை எழுப்பினார்கள். மணல்மேட்டின் ஒரத்தில் ஒரு சாதாரண லிங்கத்தின் உயரத்திற்கு ஒரு கல்லை நட்டார்கள். அதன் அருகில் எருக்கிலைச் செடிகள் நடப்பட்டன. அருணாசலத்திற்கே, காப்புக் கட்டுவதுமுதல் அதைக் களைவது வரை எல்லாச் சடங்குகளும் செய்யப்பட்டன.
உலகம்மை. அருணாசலத்தின் வீட்டிலேயே தங்கியிருந்தாள். அது அவளுடைய வீட்டைவிட வசதியான வீடு. ரேடியோகூட இருந்தது. சேரி மக்களின் ஆறுதலில், சின்னப்பிள்ளைகளின் விளையாட்டில், தன் துக்கத்தைக் கரைத்துக் கொண்டிருந்தாள். வேலைக்குப் போக வேண்டிய தருணம் வந்துவிட்டதையும் உணர்ந்தாள். எத்தனை நாளைக்குத்தான் அய்யாவின் ‘சமாதியையே பார்த்துக்கொண்டு இருக்க முடியும் மாயாண்டி, மகளின் போக்குப் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதாக ஊரில் அடிபட்ட ஒரு செய்தி வேறு. அவள் காதுக்கும் வந்தது.
ஒருநாள் அருணாசலம், சாவகாசமாகக் கேட்டான்.
“ஏம்மா, வீட்டுக்குப் போகலியா?”
உலகம்மைக்கு என்னவோ போலிருந்தது. முகங்கூடச் சுண்டிவிட்டது. விருந்தும் மருந்தும் மூணுநாளென்று சும்மாவா சொல்லுகிறார்கள்? அருணாசலத்தை - வெடவெடென்று ஒடிந்து போகப் போவது போலவும், 'அண்டங்காக்கா' நிறத்திலும் அதேசமயம் களையோடும் இருந்த உடம்புக்காரனையே சிறிது கூர்ந்து பார்த்துவிட்டுக் கேட்டாள்:
"நான் இங்கே இருக்கது ஒனக்குப் புடிக்கலியா?"
அருணாசலம், வாயிலும் வயிற்றிலும் செல்லமாக அடித்துக் கொண்டான்.
"அநியாயம், அக்ரமம். ஏம்மா ஒன்ன போகச் சொல்ல எனக்கு மனம் வருமுன்னு ஒனக்கு நெனப்பு வந்ததே தப்பு! மேல் ஜாதியைச் சேர்ந்த பெண்ணை எத்தனை நாளைக்குத்தான் இங்க வைக்க முடியும்? வீட்டுக்குப் போகணுமுன்னு நினைச்சி அத எப்டிச் சொல்றதுன்னு யோசிக்கியோன்னு எண்ணிக் கேட்டேன்! என்ன இருந்தாலும் சேரியில் நீ இருக்க முடியுமா? நானுந்தான் இருக்கச் சொல்லலாமா? சொல்லப்போனால் உன்ன நீன்னு சொல்றதே தப்பு. எப்டியோ பேசிப் பழகிட்டேன்.
"ஒனக்கு இவ்வளவு ஞாபக மறதி இருக்கே. எப்டி படிச்சி தேறின?"
"என்ன அப்டிச் சொல்ற முதல் ஆளு நீதான்! ஒருவனப் பாத்துட்டா அவன் மூக்கு எப்டி இருக்கு, வாய் எப்டி இருக்குன்னு சாவது வரைக்கும் நினைவில் வைக்கிறவன் நான். அதாவது, அவன் சாவது வரைக்கும்! என் பார்வ அவ்ளவு மோசம்! நீண்ட நாளக்கி நினைவுல வைக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆசாமி அவுட்டாயிடுவான்!"
அருணாசலம் சிரித்தான். அந்தச் சிரிப்பு உலகம்மையையும் தொற்றிக்கொண்டது. சிரிப்பதை நிறுத்திவிட்டு, சீரியசாகவே கேட்டாள்:
, ”அதுக்குல்ல. மேல் ஜாதியில் இருக்கிற ஏழைபாளைங்களும் ஹரிஜனங்கதான். அவங்களும் ஹரிஜனங்களோடே சேரணு முன்னு நீ சொல்லிட்டு, இப்ப இந்த ஹரிஜனப் பொண்ண துரத் தாத குறையாத் துரத்துறது நியாயமான்னு கேக்குறேன்." “நீ என்னம்மா சொல்றே புரியுது, புரியாமலும் போவுது.”
“நான் இங்கேயே இருக்கலாமுன்னு நெனைக்கேன். ஒனக்கு இஷ்டந்தானா அண்ணாச்சி? ஒன் தங்கச்சிய இப்டிப் போன்னு சொல்றது நியாயமா?”
அருணாசலம் அதிர்ந்து போனவன்போல், அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். உண்மையிலேயே அவள் அசாதாரணமானவள்தான். ஊரை செண்டிமென்டலா மட்டும் பகைக்கல. ஐடியலாஜிகலாகவும் பகைச்சிருக்காள்! மேல்ஜாதி நெருப்புல புடம்போட்ட ஹரிஜனப் பொண்ணா மாறியிருக்காள்!”
“ஒன்னப் பார்த்ததும் என் உடன்பிறவாச் சகோதரியா நினைச்சவன் நான்! என்னைக்கு அய்யாவுக்கு கொள்ளி போட் டேனோ அன்னைக்கே நீ என் உடன்பிறந்த சகோதரியாயிட்டே. நீ எடுத்த முடிவும் நியாயந்தான் தங்கச்சி! ஒனக்கு ஒரு தொல்லையும் வராமப் பாத்துக்கிடவேண்டிய பொறுப்பு என்னோடயது! நிஜமாவே நீ இங்கே வ்ந்து தாழ்ந்த ஜாதியாகி, தாழ்ந்த ஜாதிய மேல் ஜாதியாக்கிட்ட இந்த நாட்ல, ஹரிஜனங்களை மேல்ஜாதியாக்குறது இந்த ஜென்மத்துல நடக்காது. ஆனால், மேல்ஜாதி ஏழை எளியவங்களை, ஹரிஜனங்களாய் மாத்துறது லேசு. பிரபுத்துவ மனப்பான்மையில், தங்களோட நியாயமான நிலையைப் புரிஞ்சிக்காத மேல்ஜாதி ஏழை பாளைங்களை, கீழ்ஜாதி ஹரிஜனங்களாய் நடத்தணும். ராமானுஜர், ஹரிஜனங்கள. ஐயங்கார்களா மாத்துனதா ஐதீகம். அவரு, வைணவத்துக்காக மாத்துனாரு நாம. பாட்டாளி வர்க்கத்துக்காக தலைகீழாய் மாத்தணும். நாட்ல நிலவுற வகுப்புக்கள வர்க்கப்படுத்தணும். மேல் ஜாதி ஏழையும், கீழ் ஜாதி ஹரிஜனங்களும் ஒரே வர்க்கமாய் போற காலம் வரத்தான் போவுது. இதே முறையில பார்த்தால், நீ சேரியிலே சேரப்போற காரியம், எதிர்காலத்தில் ஒருவேளை நடக்கப்போற ஒரு சமதர்மப் புரட்சிக்கு ஒரு காரணமாய் அமையலாம். இந்த வகையில் இந்த ஊர்ல ஒரு புரட்சி ஏற்படுறதுக்கு ஒரு தாயாய் மாறிட்ட. உண்மையிலேயே நீ... என் தாயைவிட.. என் தாயைவிட..."
அருணாசலத்தால் மேற்கொண்டு பேச முடியவில்லை. குரல் தழுதழுத்தது. கண்ணீர்கூட வரும்போல் தோன்றியது. அவன் உணர்ச்சி வயப்பட்டதைப் பார்த்ததும், உலகம்மையாலும் பேச முடியவில்லை. அங்கு, மௌனமே மோனமாகி, அந்த மோனமே, மானசீகமாகப் பேசிக்கொண்டது. சிறிது நேரத்திற்குப் பிறகுதான், அருணாசலம், தன்னைப் புகழ்ந்தது அவளுக்கு முழுமையாகத் தெரிந்தது. லேசாகக் கூச்சப்பட்டாள்.
அருணாசலம் தலைதெறிக்க வெளியே ஓடினான்.
அன்றே, சற்று மேடான ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு. குடிசை போடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன. இரண்டடி ஆழத்திற்கு வாணம் தோண்டப்பட்டு, இரண்டு மூன்று நாட்களில், கல்லாலும் மண்ணாலும், ஆளுயரச் சுவர் எழுப்பப் பட்டது. பெண்களும், ஆண்களும், குழந்தைகளுமாகப் போட்டி போட்டுக்கொண்டு வேலையில் இறங்கினார்கள். வயற்காட்டிற்குப் போக வேண்டிய 'கூலிக்காரிகள்' கூட, ஒரு நாள் சிரமதானம் செய்தார்கள். பனங்கம்புகள் சுவரில் ஏற்றப்பட்டு, அவை பனை யோலைகளால் வேயப்பட்டு விட்டன.
நான்கைந்து நாட்களில், சேரி மக்களின் உழைப்பு 'ஹவு ஸாகவும்', அவர்களின் நேசம் 'ஹோம்' ஆகவும் மாறிவிட்டது!
வெள்ளிக்கிழமையில் நல்ல நேரத்தில், குடிசையில் 'பால் காய்ச்சப்பட்டது'. அதிகாலையிலேயே அய்யாவின் சமாதிக்குப் போய் இரண்டு மூன்று தங்கரளிப் பூக்களை வைத்துவிட்டு வந்த உலகம்மை, சேரி மக்களின் அன்பு வெள்ளத்தில் திக்குமுக் காடினாள். குடிசைக்கு இருபுறத்திலும், வாழை நடப்பட்டு. உள்ளூர் மேளம், நாதஸ்வரத்தோடு, ஊருக்குக் கேட்கும்படியாக ஒலித்தது. அருணாசலத்தின் வீட்டிலிருந்து ஒரு குத்துவிளக்கு அன்பளிப்பாக வந்தது. மற்றவர்கள், கும்பா, ‘கொட்டப்பெட்டி’ ‘ஓலைப்பாய்கள்’ ஆகியவற்றையும் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். உலகம்மைக்கு ஒரு வாரத்திற்குப் போதுமான ‘அரிசி, புளி, பருப்பு, கொடுக்கப்பட்டன. கொட்டுமேளக் குதூகலத்தைப் பார்த்துப் பல சிறுவர்கள் நாட்டியங்கூட ஆடினார்கள். அருணாசலத்திற்குப் பெருமை பிடிபடவில்லை. ‘சே. முன்னாலேயே இங்க வந்திருக்கலாம். அய்யாவும் செத்திருக்க மாட்டார்’ என்று நினைத்துக் கொண்டாள் உலகம்மை. அவள் கண்கள். அவள் கண்ட அன்புக்காகவும், அய்யாவிற்காகவும் மாறிமாறிக் கலங்கின. அய்யா, அங்கேயே அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது.
மறுநாள், ஊரில் இருக்கும் முன்னாள் வீட்டில் உள்ள தட்டுமுட்டுச் சாமான்களை எடுத்து வருவதற்காக, உலகம்மை புறப்பட்டாள். கூடமாட உதவி செய்ய முன்வந்த அருணா சலத்தையும், ஒருசில பெண்களையும் வர வேண்டாமென்று அவள் தடுத்துவிட்டு, ஓடையைக் கடந்து ஊருக்குள் நுழைந்தாள்.
எவர் கண்ணிலும் பட விரும்பாதவள்போல், வேகமாக நுழைந்து வீட்டுக்குள் போனாள். வீட்டைச் சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள். பிறகு மடமடவென்று செப்புக்குடத்தை தலைகீழாக எடுத்து. தேங்கிப் போயிருந்த தண்ணீரைக் கொட்டிவிட்டு, குடத்திற்குள், ஈய டம்ளர்களை எடுத்துப் போட்டுவிட்டு, கரண்டியையும் அதில் போட்டாள். பானைக்குள் இருந்த அரைக்கால்படி அரிசியையும், அதில் கொட்டிவிட்டு, இறுதியில் அரிவாள்மணையை அதற்குள் திணித்தாள்.
வீட்டுக்குள் கிடந்த ஒரு சின்னக் கோணிப்பைக்குள், அம்மியைப் பெயர்த்துப் போட்டாள். பிறகு, பருப்பு. புளி வகையறாக்களுடன் இருந்த சில டப்பாக்களையும் இரண்டு ‘கும்பாக்களையும்’ எடுத்துப் போட்டாள். ‘விளக்குமாற்றை’ எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதுபோல், அதை அங்குமிங்குமாக ஆட்டிப்பார்த்துவிட்டு, பிறகு அதையும் உள்ளே போட்டுச் 'சாக்கைக்' கட்டினாள்.
பானை சட்டி.களை எடுக்கவில்லை . 'உலமடியில்' இருந்த காகிதத்தை எடுத்தாள். லோகு. தன் கைப்பட எழுதிக்கொடுத்த முகவரி அது. அதைக் கிழிக்கலாமா என்று யோசித்தாள். பிறகு எடுத்ததை, இடுப்பில் செருகிக் கொண்டாள். ஒரு சட்டிக்குள் இருந்த இரண்டு ரூபாய் சில்லறைக் காசுகளை எடுத்து. முந்தானிச்சேலையில் முடிந்து கொண்டாள். கொடியில் தொங்கிய அய்யாவின் வேட்டியையும், துணியையும். தன் பழைய சேலையையும் எடுத்துச் சுருட்டிக்கொண்டு, கோணிப்பையை அவிழ்த்து, அதற்குள் திணித்துவிட்டு, பிறகு மீண்டும் அதைக் கட்டினாள்.
ஓலைப்பாயை, அங்கேயே விட்டுவிட்டாள். வாசல் கதவையும், 'நிலப்படியையும்' பெயர்க்கலாமா என்று நினைத்தாள். மூங்கில் கழிகளால் ஆன தட்டிக்கதவுதான் அது. ஆனால், 'சுண்டாக்காய் கால்பணம்; சுமக்கூலி முக்கால் பணம்' என்ற பழமொழியை ஞாபகப்படுத்திக் கொண்டு விட்டுவிட்டாள்.
செப்புக்குடத்தையும், கோணிப்பையையும், தூக்கப் போன வள் அப்படியே அசந்துப் போய் நின்றாள். அய்யா, இருந்து - இறந்த அந்த இடத்தைக் கண்கொட்டாது பார்த்தாள். அவள் பிறந்த இடமும் அதுதான். எத்தனை ஆண்டுக் காலமாக இருந்த வீடு அது! அய்யாவும் - அம்மாவும் கூடிக்குலவி வாழ்க்கை செய்த திருத்தலம் அது! உலகம்மைக்கு அழுகை அழுகையாக வந்தது. கண்ணில் ஈரக்கசிவு நிற்கும் வரை அழுதுகொண்டே இருந்த அவள், அய்யா உட்கார்ந்து சாப்பிடும் இடத்தையும், கட்டில் இருந்த இடத்தையும் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டாள். அந்த வீட்டைவிட்டுப் பிரிவது என்னவோ போலிருந்தது. அங்கேயே இருந்துவிடலாமா என்றுகூட நினைத்தாள்.வீட்டுக்கு வெளியே சத்தங்கேட்டு எட்டிப் பார்த்தாள். மாரிமுத்து நாடார். கணக்கப்பிள்ளை உட்பட, ஒரு பெருங் கூட்டம் அவள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. ‘எதுக்காக வாரானுக?’ என்று நினைத்த உலகம்மை சிறிது பயந்து விட்டாள். கூட்டத்தில் மாரிமுத்து பலவேச நாடார்களையும், பஞ்சாட்சர ஆச்சாரியையும், தற்செயலாகப் பார்த்த அவள் முகம் இறுகியது. அவர்கள் முன்னால் அழுவது இருக்கட்டும். அழுததாகக்கூடக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தவளாய், கண்களை முந்தானியால் துடைத்துக் கொண்டாள். செப்புக்குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு, கோணிப்பையையும், அதனருகே இருந்த மண்வெட்டியையும் ஒருசேரப் பிடித்துத் தோளில் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள்.
வழிமறித்து நிற்பதுபோல் நின்ற கூட்டத்தைவிட்டு விலகிப் போக முயற்சி செய்தாள்.
ஏற்கனவே சேரி மேளத்தைக் கேட்டு ஆடிப் போயிருந்த ஊர்க்காரர்கள் அங்கே வந்து நின்றார்கள். உலகம்மை, வீட்டுச் சாமான்களை எடுப்பதற்காக வந்திருப்பதைப் பண்ணையாள் சின்னான் மூலம் கேள்விப்பட ஊர்ஜனங்கள் ஒன்று திரண்டு வந்தார்கள். காத்தமுத்து டீக்கடையில், இப்போது சின்னாள் மட்டுந்தான் (கீழே) உட்கார்ந்திருந்தான். காத்தமுத்துவே இங்கு வந்து விட்டான்.
போகப்போன உலகம்மையைப் பார்த்த கூட்டம், அவள் தூரத்து உறவினரும், அவளுக்காக ஒரு காலத்தில் வக்காலத்துப் பேசி உதைபடப் போனவருமான கருவாட்டு வியாபாரி நாராயணசாமியை, முன்னால் தள்ளிவிட்டது. அவர் லேசாக இருமிக்கொண்டு. உலகம்மையின் பார்வை கிட்டியதும் பேசினார்:
“ஒலகம்மா. நீ செய்யுறது உனக்கே நல்லாயிருக்கா?”
“எது சின்னையா?”"மேல்ஜாதியில் பிறந்துட்டு ஹரிஜனங்களோடு போயி இருக்கது நல்லா இருக்குமா? நீ மேல்ஜாதிப் பொண்ணுங்றத மறந்துட்டியே! நியாயமா?"
"இப்படிப் பேச ஒமக்கு எப்படி மனம் வந்தது? வார்த்தைக்கு வார்த்த 'பனையேறிப்பய. பனையேறிப்பயன்னு' பனையேறிங் கள, அவங்களோட பெரியய்யா மக்களே ஒதுக்கி வைக்கப் பாத்தாச்சு! நானும் பனையேறி மவள் - போவ வேண்டிய இடத்துக்குத்தான் போறேன். வழியவிடும் சின்னையா!"
"ஒலகம்மா, ஒன் கோபம் நியாயந்தான். இனிமே ஒன்னக் கவனிச்சிக்க வேண்டியது சின்னய்யா பொறுப்பு. நீ இங்கேயே இரு. ஒன்மேல ஒரு தூசிகூட விழாம பாத்துக்கிட வேண்டியது என் பொறுப்பு. ஊரோட பொறுப்பு!"
"பாறாங்கல்லே விழுந்திச்சி! அப்பப் பாக்காத ஊர் ஜனங்களா இப்பப் பாக்கப்போவுது?"
"ஊர விடு. நானிருக்கேன். நான் ஜவாப்!"
"என்ன சின்னய்யா, நீரு? எனக்காவ ஒரு தடவை பேசப் போயி பலவேச நாடார்கிட்ட உதபடப்போனீரு! ஒம்மக்கூட 'கருவாடு விக்கற பயன்னு' கேவலமாப் பேசுறாங்க. ஒரு சின்னச் சண்டையிலும் ஒம்ம கருவாட்ட பிடிச்சிக்கிற மேல்ஜாதிகூட நீரு ஏன் ஒட்டிக்கிட்டு இருக்கணும்? பேசாம எங்கூட சேரிக்கு வாரும் சின்னய்யா! அங்க ஒம்ம மேல ஒரு தூசிகூட விழாம இருக்க, நான் பொறுப்பு."
நாராயணசாமியால் அவளின் கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை. முகத்தில் திடீரென்று வேர்வை பொங்கியது. ஒதுங்கிக் கொண்டார். உலகம்மை லேசாக நடக்கப் போனாள். ராமையாத் தேவர் முன்னால் வந்தார்.“ஒலகம்மா, நான் மூணாவது மனுஷன் சொல்றதக் கேளு. நம்ம ஜாதிகளயே நீ தல குனிய வைக்கதுமாதிரி நடக்கப் படாது. இனிமே ஒன்ன ஒருத்தரும் ஒண்ணுஞ் சொல்ல மாட்டாங்க!”
“நீரு எங்கய்யா கெஞ்சும்போது ஒண்ணுஞ்சொல்லாம இருந்தீரே, அதுமாதிரியா?”
ராமையாத்தேவருக்கு நம்பிக்கை போய்விட்டாலும், அய்யாவு நாடாருக்குப் போகவில்லை. முன்வந்து மொழிந்தார்:
“ஒலவு, நம்ம ஜாதியயே தலைகுனிய வச்சுட்டியே, பட்டி தொட்டி பதினெட்டு எடத்துலயும் குட்டாம்பட்டின்னா, ஒரு தனிமதிப்பு இருக்கு. நாங்கெல்லாம் தலைமிநிர்ந்து நடக்க முடியாம, குனிஞ்ச தல நிமிரமுடியாமப் பண்ணலாமா? நம்ம ஜாதில யாரும் இப்டி நடந்துக்கல! பெரியய்யா சொல்றதக் கேளு. நடந்தது நடந்துபோச்சி! நீ அபராதம் முழுசையும் கட்டாண்டாம். அடயாளமா நாலனாவுக்குக் கோவிலுக்கு எண்ணெய் வாங்கி ஊத்திடு. ஒண்ணாயிடலாம்.”
“ஒங்க புண்யத்துல எண்ணய அபராதமா குடுத்திட்டேன். அய்யாமேல எண்ணய ஊத்தி எரிச்சி அபராதம் கட்டியாச்சி. சரி, வழிய விடுங்க.”
கணக்கப்பிள்ளையால், பொறுக்க முடியவில்லை. அதுவும்
மாரிமுத்து நாடார் காதைக் கடித்ததும், அவருக்கு வாயில் நமைச்சல் ஏற்பட்டது.
“ஏ பொண்ணு, என்னோட அனுபவமும் ஒன்னோட வயசும் ஒண்ணு. நான் ஒனக்கு நல்லதுக்குத்தான் சொல்றேன். ஒனக்கு இங்க இருக்க இஷ்டமுல்லாட்டா ஆசாரிக்குடியில போயி இரு. செட்டியார் குடியில போயி இரு. அதுவும் முடியாதுன்னா எங்க பிள்ளைமார் குடியில வந்து இரு. ஆனால் பறக்குடியில போயி இருக்காதே! அது ஒனக்குக் கேவலம். எங்களுக்கும் கேவலம்”"கணக்கப்பிள்ள, என் ஜாதியப் பத்திக் கவலப் படாண்டாம். நான் இப்போ பறச்சிதான். அப்படி ஆனதுனால சந்தோஷம் இல்லாம போவல. நான் ஒருத்தி போறதால மேல்ஜாதி எல்லாம் போயிடுமுன்னா, ஒங்க சாதிங்க எவ்வளவு இத்துப்போயிருக்கணும்? மொதல்ல அதக் கவனிங்க."
கணக்கப்பிள்ளைக்குக் கோபந்தாங்கமுடியவில்லை. "இது ஊராய்யா, இது ஊராய்யா?" என்று சொல்லிக்கொண்டே 'வாக்கவுட் செய்தார். இப்போது, அவர் 'அவுட்டானதை' யாரும் பொருட்படுத்தவில்லை. இறுதி முயற்சி போல், தட்டாசாரி பஞ்சாட்சரம் பரபரப்போடு பேசினார்.
"ஒனக்கு இந்த ஊர்ல இருக்கப் பிடிக்காட்டா வேற எங்கேயாவது போயிடு! ஊர்ல அஞ்சிபத்துன்னு தலைக்குக் கொஞ்சமா வேணுமுன்னாலும் ரூபா வசூலிச்சித் தாரோம். கண்காணாத சீமையிலே போயி, கையோடே காலோட பிழச்சிக்க! அத விட்டுப்புட்டு காலனில போயி இருக்கது நல்லா இல்ல. ஊரக் கேவலப்படுத்துறது சாமிக்கே பொறுக்காது! ஊர் மானத்த விக்கப்படாது. பொட்டச்சிக்கு இவ்வளவு திமிரு ஆவாது."
"ஏன் ஆசாரி துடிக்கியரு? சப் இன்ஸ்பெக்டர வச்சிக்கிட்டு இருந்த ஒரு தேவடியா முண்ட ஊரைவிட்டுப் போறதுனால ஊரு துப்புரவாயிடும்! நீரு சந்தோஷப்படாம சடச்சிக்கிடுறீரே!"
உலகம்மை, சற்று வேகமாக நடக்கத் துவங்கினாள். மேல் ஜாதிகளின் மானத்தைக் காப்பதற்காக, ஒவ்வொருவரும் தத்தம் தன்மானத்தை இழக்கத் தயாராக இருப்பது போல், உலகம்மையைப் பார்த்துக் கண்களால் கெஞ்சினார்கள். எதிர்காலத்தில் வேறு ஒரு பட்டியுடன் சண்டைக்குப் போக வேண்டிய நிலைமை வந்தால், 'ஒங்க ஊரு சங்கதி தெரியாதா?" என்று உலகம்மையின் சேரிச் சங்கதியைக் கோடிட்டுக் காட்டுவதுபோல் காட்டினால், சொல்லுபவர்களின் பல்லை உடைக்க முடியாமல் போய்விடுமே என்பதற்காக, அவர்கள் உலகம்மையிடம் பல்லைக் காட்டினார்கள். அவள், அதை உடைக்காமல் உடைப்பதைப் பார்த்து. முகத்தை சுழித்தபோது, பலவேச நாடார் வாயைச் சுழித்தார்:
“ஆசாரியாரே அவ வேணுமுன்னா அருணாசலத்தோட தொடர்ப விடாண்டாம். தென்காசி கிங்காசில ரூம்கீம் எடுத்துக்கிட்டு எப்டி வேணுமுன்னாலும் வாரத்துல ஒரு நாளக்கி தெரியாமத் தொலையட்டும்! அதுக்காவ, நம்மள மனுஷங்களா நெனக்காம சேரில நிரந்தரமா இருந்து கொஞ்ச வேண்டாமுன்னு சொல்லுமய்யா!”
உலகம்மை பலவேசத்தை ஏறிட்டுப்பார்த்தாள். உதடுகள், கோபத்தால் துடித்தன.
“பலவேசம் ஒன் வாயி அழுவாமப் போவாது. அருணாசலம் என்னைக் கூடப்பிறந்த தங்கச்சியா நினைக்கான் நீரு ஒம்ம சித்திமவள நினைச்சீராமே அது மாதுரியில்ல.”
பலவேசம், துடித்துக்கொண்டும், பல்லைக் கடித்துக் கொண்டும், அவளைத் திட்டுவதற்காக வாயைத் திறக்கு முன்னால், இரண்டுபேர் அவர் தோளைப் பிடித்து உலுக்கிக் கொண்டு, “ஒம்மாலத்தான்வே வினயே வந்தது. ஏன்வே நாக்குல நரம்பில்லாம பேசுறீரு?” என்று அதட்டினார்கள்.
உலகம்மை, அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக்கொள்பவள் போல் வேகமாக நடந்தாள். சற்றுத் தள்ளி நின்ற பெண்கள் கூட்டம் அவளைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, பின்பு தன்னையும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டது. தொலைவில் போய்த் திரும்பிப் பார்த்தாள் உலகம்மை. பிறகு பொதுப்படையாகச் சொன்னாள்."என்னைப்பத்திக் கவலப்படாம ஒங்களப்பத்தி மட்டுமே கவலப்படுங்க. நான் மேல்ஜாதியில செத்து, கீழ்ஜாதியில பிழச்சிக்கிட்ட பொம்பிள!"
உலகம்மை, சேரியை நோக்கி வேகமாக நடந்தாள்.