ஒரு கோட்டுக்கு வெளியே/ஒதுங்கி வாழ்ந்து…

18. ஒதுங்கி வாழ்ந்து…

சிரோஜாவின் திருமண நாள் நெருங்க, நெருங்க, உலகம்மை மீது மட்டில்லாக் கோபங்கொண்ட மாரிமுத்து நாடார் என்ன பண்ணினாலும் கவலைப்படாமல் திரியும் உலகம்மையைப் பழிவாங்க முடியாததுபோல் தோன்றியதை தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டார். சரோஜா வேறு, “கடைசில தங்கப்பழந்தானா எனக்குக் கிடைக்கனும்?” என்று அய்யாவுக்குக் கேட்கும்படியாய் அழுததை, அவரால் மறக்க முடியலாம்; ஆனால் உலகம்மையை மன்னிக்க முடியாது.

ஊர்க்கூட்டத்தில் அய்யாவுவை கைக்குள் போட்டுக்கொண்டு. ராமசாமியின் gpt), கணக்கப்பிள்ளையின் மூலமும் உலகம்மையை, திட்டமிட்டபடி உசுப்பிவிட்டு வெற்றி பெற்ற அவர், பலவேச நாடாரிடம் தோற்றுப்போனதை நினைத்து உள்ளுக்குள்ளே புழுங்கிக்கொண்டார். ஊர் பகிஷ்காரம், குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். சிலர் “கொசுவ அடிக்கதுக்கு கம்பு தேவையா? ஒருத்திய தள்ளி வைக்கது ஊருக்குத்தான் கேவலம்” என்று பேசுவதாகக் கேள்விப்பட்டார். அவர் அப்பப்போ பொட்டப் பயலுகன்னு சொல்லிட்டாளே என்று ஊர்க்காரர்களுக்கு உத்வேகம் மூட்டினாலும். கொஞ்சம் பயப்படத் துவங்கினார். யாரையும் அதட்டிப்பேச முடியவில்லை. ஒருசமயம், வாங்குன கடனைக் கொடுக்காத ஆசாமி ஒருவர் “நீரு இப்டி திட்டினா உலகம்மையோட வீட்டுக்குப் போவேன்” என்று கூட அதட்டினார். ஆக, உலகம்மையோடு யாராவது பேசினால், அது மாரிமுத்து நாடாருக்கு எதிரான செயலாக, அவர் நினைக்காமலே, ஊர் நினைக்கத் துவங்கியது. பச்சையாகச்

சொல்லப்போனால், மாரிமுத்து - உலகம்மையின் தனிப்பட்ட விவகாரம் ஊர்மீது அனாவசியமாகச் சுமத்தப்பட்டது போலவும், போனால் போகிறது என்று ஊர்க்காரர்கள் பற்களைக்

கடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு அபிப்பிராயம் நிலவி வருவதாக, பலவேச நாடார், அவரிடம் தம் அபிலாஷையை அதில் சேர்த்துச் சொன்னார். உலகம்மை அந்த ஊரில் இருக்கும் வரை, அவரது மரியாதை நிலையாக நீடிக்காததுபோல் அவருக்குத் தோன்றியது.

ஆகையால்தான், பலவேச நாடாரிடம், உலகம்மையின் வீட்டுக் கூரையைப் பிய்த்துப் போட்டுவிடும்படி சொன்னார். பலவேசத்திற்கு. அது அதிகப்படியாகத் தெரிந்தது. அதே சமயம் நிச்சயதாம்பூலமான பின்னும், நின்றுபோன கல்யாணங்களும் நினைவிற்கு வந்தன. சேரியில் வேறு, அருணாசலம், பெட்டிஷன் எழுதுவதற்கென்றே பிறந்தவன் போல், முழுநேர விண்ணப்பதாரனாக மாறிவிட்டான். ஆகையால் “செருக்கி மவள கோர்ட்டு வழக்குன்னு இழுத்தா அலைய முடியாம ஓடிப்போயிடுவா. நம்மளையும் ஒரு பயலும் குற சொல்ல முடியாது” என்று அத்தான்காரரிடம் சொல்லி, அவரது அரைகுறை சம்மதத்தைப் பெற்ற பின்னர் வக்கீல் நோட்டீஸ் விட்டுவிட்டார்.

இதற்கிடையே, உலகம்மையை ஊர்க்காரர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்றும், கோனச்சத்திரம் போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும், அருணாசலம் பெட்டிஷன் போட்டான். போலீஸ் ஸ்டேஷன் சார்பில், ‘காளிமார்க் கலர் புகழ்’ ஹெட்கான்ஸ்டபிள் யோசித்தார். ஏற்கனவே உலகம்மையைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்து, பல்வேறு அலுவல்கள் நிமித்தத்தால், அதை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போன அவர். பெட்டிஷனைப் பற்றிக் கேள்விப்பட்டதும், உலகம்மை மீதிருந்த பழைய விரோதத்தைப் புதுப்பித்துக் கொண்டார். இவ்வளவுக்கும் உலகம்மைக்கு, இந்த பெட்டிஷன் விவகாரம் இதுவரை தெரியாது.

ஹெட்கான்ஸ்டபிளே, மாரிமுத்து நாடார் வீட்டிற்கு வந்தார். உலகம்மையைச் சமூக விரோதியாகச் சித்தரித்தாலொழிய, சமூகம் அவளுக்கு எதிரியாக இருக்கும் விஷயத்தை மறைக்க முடியாது என்று மறைக்காமல் சொன்னார். அதோடு ஐ.ஜி. லெவலுக்குப் போயிருக்கும் பெட்டிஷனால் கோனச்சத்திரப் போலீஸ் நிலையத்திற்கே கெட்ட பெயர் என்றும், இந்தக் கெட்ட பெயரை நீக்க வேண்டுமானால், போலீஸ் நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவிற்கு உலகம்மை சமூக விரோதச் செயல் செய்து வருபவள் என்று ‘ரிக்கார்ட்’ பூர்வமாக நிரூபிக்க வேண்டும், என்றும் எடுத்துரைத்தார். அப்படி நிரூபிக்கத் தவறினால், ‘கோடு கிழித்த’ பழைய சமாச்சாரங்கள்கூட கிளப்பப்பட்டு, தனக்கு மட்டுமில்லாமல் மாரிமுத்து நாடாருக்கும் மானபங்கத்தோடு மற்ற பங்கங்களும் வரும் என்றும் சற்று மிரட்டினார்.

போலீஸை எதிர்ப்பவர்கள் சமூக எதிரிகளாக சித்தரிக்கப்பட வேண்டும் என்ற - (போலீஸ் நிலைய) க‘ல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி நின்ற’ - வழிவழி மரபை ஹெட்கான்ஸ்டபிள் பிடித்துக்கொண்டே, லாக்கப்பில் செத்த ஒருவனை, தப்பியோடித் தகாத செயலைச் செய்யும்போது ‘தற்காப்புக்காகச்’ சுடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகச் சொல்லித் தப்பித்த நிகழ்ச்சி ஒன்றையும் அவர் நினைவுபடுத்திக் கொண்டார்.

சமூக விரோதியாவதற்குரிய தகுதிகள் என்ன என்பதைத் தீர்மானிக்க நினைத்தவர்கள்போல், மாரிமுத்து நாடாரும், பலவேச நாடாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபோது இருவர் முகத்தையும் பார்த்த ஹெட்கான்ஸ்டபிள், எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார்.

“பட்டைச் சாராயம், விபச்சாரம், சாமி சிலையைக் கடத்துவது. திருட்டு.”

இறுதியில், ஊரில் பிரபலமாகியிருக்கும் பட்டைச் சாராயமே எடுத்துக் கொள்ளப்பட்டது. சமயம் வாய்க்கும்போது, காய்ச்சிய சாராயம், சட்டியுடன், உலகம்மையின் வீட்டில் வைக்கப்படவேண்டும் என்றும், தகவல் அறிந்ததுமே, ஹெட்கான்ஸ்டபிள், தானாக வருபவர்போல், வருவார் என்றும் போர் வியூகம் வகுக்கப்பட்டது. அந்த வியூகத்தைக் கலைக்கும் எதிர் வியூகமாக, கான்ஸ்டபிளுக்கு ‘காளி மார்க்கை’ உடைக்கிற சாக்கிலும், வெற்றிலைபாக்கு வாங்கிக் கொடுக்கிற சாக்கிலும், தலையைச் சொறிந்து கொண்டு நின்ற ஒரு ஹரிஜனப் பண்ணையாள், நேராகப் போய் அருணாசலத்தின் காதைக் கடித்தான். அருணாசலம் பல்லைக் கடித்துக்கொண்டு. பல பெட்டிஷன்களைத் தட்டி விட்டான். உலகம்மையின் வீட்டுக்கு வந்து, தனியாக இருந்த மாயாண்டியையும் எச்சரித்துவிட்டுப் போய் விட்டான். பல அட்டூழியங்களை‘தற்காப்புக்காகச்’‘தற்காப்புக்காகச்’ இதுவரை ‘இம்பெர்ஸனலாகச்’ செய்து வந்த கான்ஸ்டபிள், கள்ளச்சாராய அட்டுழியத்தை ‘பெர்ஸனலாக’ நடத்த நினைத்து. மாரிமுத்து நாடாரின் சமிக்ஞைக்காகக் காத்திருந்தார். அப்போது அருணாசலம் போட்ட மனு அவருக்கு எஸ்.பி.யால் அனுப்பப்பட்டதுடன், அவரது விளக்கமும் கேட்கப்பட்டிருந்தது. நிச்சயம் டிரான்ஸ்பர் வந்துவிடும் என்பதைப் புரிந்துகொண்ட ஹெட்கான்ஸ்டபிள், அது வருவதற்குள், உலகம்மைக்கும், அருணாசலத்திற்கும் ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்தார்; தவியாய்த் தவித்தார்.

இதே சமயத்தில் உலகம்மையின் வீட்டுக்குப் பல ஹரிஜனப் பெண்கள் வந்துபோகத் துவங்கினார்கள். ஓரளவு அமைதியும், அனுதாபமும் கொண்டிருந்த ஊர் ஜனங்கள். இதைப் பார்த்ததும் மீண்டும் கோபத்தில் தத்தளித்தார்கள். ஒரு மேல்ஜாதிப் பெண்னோட வீட்டுக்கு. பள்ளுப்பறையுங்க வருதுன்னா அதுவும் ஊர்க்கட்ட மதிக்காம வருதுன்னா அது பெரிய விஷயம் இது அந்த ஊரை மதிக்காமல் மட்டுமல்ல அவமரியாதையாகவும் நடத்தக்கூடிய செயலாகக் கருதப்பட்டது.

நிலமில்லாத சிலர், உலகம்மை வீட்டுக்குப் போகும் ஹரிஜனங்களையும் பகிஷ்கரிக்க வேண்டும் என்றார்கள். நிலமுள்ள மாரிமுத்து வகையறாக்கள். “ஊர் விவகாரம் வேற, வயல் விவகாரம் வேற” என்று சொல்லி விட்டார்கள். அவ்வளவு லேசான கூலிக்கு, அந்தச் சேரி ஆட்களை மாதிரி, வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில், ஒரு பெரிய விஷயமும் நடந்தது. பயங்கரமான வெள்ளத்தால், நெல்லை மாவட்டமும், இதர மாவட்டங்கள்போல பலமாகப் பாதிக்கப்பட்டது. குட்டாம்பட்டிக் குளத்திற்கு, ராமா நதியின் உபரி நீர் விரைவில் வெள்ளமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், குளம் உடையாமல் இருக்க, மதகைத் திறக்கும்படி ஹரிஜனங்கள் சொன்னதை ― அதனால் தங்கள் சேரி அழியும் என்று சொன்னதை ― நிலப்பிரபுக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. இதை ஆட்சேபித்து, அருணாசலம், மதகுக்கருகே ஒரு கட்டிலைப் போட்டுப் படுத்துக்கொண்டு, சேரி மக்களின் பேச்சையும் கேட்காமல், சாகும்வரை அல்லது மதகுகள் திறக்கப்படும் வரை, இந்த இரண்டில் எது முன்னால் வருகிறதோ அதுவரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, படுத்துக்கொண்டே அறிவித்தான். அந்த அறிவிப்பு இரண்டு தெருக்களுக்குமேல் பரவாமல் இருந்த சமயத்தில், எப்படியோ அதைப்பற்றிக் கேள்விப்பட்ட ஹெட்கான்ஸ்டபிள், வயதான சப் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி, அருணாசலத்தை அரசாங்க விருந்தாளியாக்கினார். இதுவரை “கிறுக்குப் பய மவன், எக்கேடாவது கெடட்டும். பட்டாத்தான் தெரியும்” என்று முனங்கிக்கொண்டிருந்த சில ‘பட்டுப்போன’ சேரிக்கிழவர்கள்கூட, கிளர்ந்தெழுந்தார்கள். ஒருவர்கூடப் பாக்கியில்லாமல், போலீஸ் நிலையத்தில், அருணா சலத்தைப் பார்க்கப் போனார்கள். அதை முற்றுகையாகக் கருதிய வயதான சப்-இன்ஸ்பெக்டர், ஒழுங்காக ரிட்டயராகக் கருதி அருணாசலத்தை விடுதலை செய்தார். அருணாசலம், மீண்டும் வந்து மதகுப் பக்கம் படுத்துக்கொண்டான். இப்போது சேரிமக்கள். அவன் பக்கத்திலேயே நின்றார்கள். சேரி அழியாமல் இருப்பதற்காக, அவன் தன்னை அழித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறான் என்பதை உணர்ந்ததும், அவர்களும் இரண்டிலொன்றைப் பார்த்துவிடுவது என்று தீர்மானித்தவர்களாக ஒன்று திரண்டு, அவனருகேயே நின்றார்கள். ஆனாலும் அவர்களுக்குக் கோஷங்கள் தெரியாது. சிலர், பண்ணையார்கள் வயல்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும்
துடித்தார்கள். மதகுகளை உடைக்கவேண்டும் என்றும் இளவட்டங்கள் வட்டமடித்தனர்.

மேல்ஜாதிக்காரர்களையும் சும்மா சொல்லக்கூடாது. பிள்ளைமார், நாடார், தேவர் என்ற ஜாதி வித்தியாசமில்லாமல், ஒருதாய் மக்கள்போல் ஒன்று திரண்டார்கள். வாயில்லாப் பூச்சிகளாய்க் கிடந்த சேரியர், விஷப்பூச்சிகளாய் மாறிய விந்தையை இன்னும் அவர்கள் ஜீரணிக்க முடியாமல் திண்டாடினாலும், “பறப்பய மக்கள ஓடோட விரட்டாட்டா நாம இருந்ததுல புண்ணியமில்ல” என்று சொல்லி, மரம் வெட்டும் தேவர்களையும், ஆடுமேய்க்கும் கோனார்களையும், பனையேறும் ‘சானார்’களையும், கிணறு வெட்டும் இதர மேல்ஜாதிக்காரர்களையும், நிலப்பிரபுக்கள் ஒன்று திரட்டினார்கள். மதகுகள் உடைக்கப்பட்டால் அவற்றை உடைக்கும் மண்டைகளை உடைப்பதற்காக மாரிமுத்து நாடார், பஞ்சாட்சர ஆசாரி, மாரிமுத்துச் செட்டியார் ஆகியோர் மண்வெட்டிகளையும், கோடரிகளையும், வெட்டரிவாட்களையும் விநியோகித்தார்கள்.

இதற்கிடையில், நெல்லையில் வெளியாகும் பத்திரிகை ஒன்று. அருணாசலம் கைதாகி விடுதலையானதையும். அவன் விடுதலையாகி, உண்ணாவிரதம் இருப்பதையும், ஊரில் பதட்ட நிலை நிலவுவதையும் ‘மூன்று காலத்திற்கு’ச் செய்தியாக வெளியிட்டது. பெட்டிஷன்களை ‘ரொட்டினா’க் கவனித்து வந்த மாவட்ட அதிகாரிகள், அந்தப் பத்திரிகையைப் பார்த்ததும் பதைபதைத்தார்கள்; படபடத்தார்கள். விஷயம் மந்திரிகளுக்கும், பெரிய அதிகாரிகளுக்கும் போகும் முன்னால் ஏதாவது செய்தாக வேண்டும்!

மாவட்டக் கலெக்டரே. அங்கு வந்துவிட்டார். பி.டபிளியூ. எஞ்சினியர்களும், குளத்து மதகைத் திறந்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். கொஞ்சம் திமிறிப் பார்த்த மேல்ஜாதி நேச ஒப்பந்தக்காரர்களை, ரிசர்வ் போலீஸுடன் வந்திருந்த கலெக்டர், இறுதியில் மிரட்டிப் பணிய வைத்தார். சாம, பேத, தானம் போய்விட்டால் அவர்கள் ‘தண்டத்திற்கு’ இருப்பதாகக் கருதப்பட வேண்டும் என்று சுருங்கக் கூறி விளங்க வைத்தார்.

எப்படியோ, தாசில்தார். அவருக்கு ‘அபிவியல் மச்சானான’ ஆர்.டி.ஓ. எஸ்.பி. டி.எஸ்.பி. ஆகியோர் புடைசூழ நின்ற கலெக்டர், படுத்துக்கிடந்த அருணாசலத்திற்கு ஒரு கண்ணாடி டம்ளரில் தயாராக இருந்த ‘ஆரெஞ்ச் ஜூஸை’ நீட்டினார். அருணாசலம், மடக்கென்று குடிக்கவும், மதகுகள் படக்கென்று திறக்கவும் சரியாக இருந்தது. உண்ணாவிரதம் நின்று விட்டதாகக் கேள்விப்பட்டு வீட்டில் இருந்து ஓடிவந்த உலகம்மை, கையில் வைத்திருந்த இரண்டு வாழைப்பழங்களை, அவனிடம் நீட்டினாள். அவன் ஒன்றை வாய்க்குள் வைத்துக்கொண்டு. இன்னொன்றை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டான்.

குட்டாம்பட்டிக்காரர்கள், உலகம்மையின் இந்தச் செயலை, மிக ஸீரியஸாக எடுத்துக்கொண்டார்கள். எதிரிகளுக்கு உதவும் ‘எட்டம்மையான’ அவளை, எப்படியாவது நிர்மூலப்படுத்திவிட வேண்டும் என்பதில் அவர்களுக்கு இப்போது கருத்து வேற்றுமை இல்லை. மேல்ஜாதியில் பிறந்து, மேல்ஜாதியில் வளர்ந்து, மேல்ஜாதியில் வாழும் ஒரு ‘பொம்பிளை’, மேல்ஜாதியினரைக் கிள்ளுக்கீரையாகக் கருதும் ‘கழுத களவாளிப் பய மவனும்’, ‘காவாலிப்’ பயலுமான அருணாசலத்திற்கு, எல்லார் முன்னிலையிலும், வாழைப்பழத்தைக் கொடுக்கிறாள் என்றால், அவளை வாழைக் குலையைச் சாய்ப்பதுபோல், சாய்க்கவில்லையென்றால், அவர்கள் இருந்ததில் பிரயோஜனமில்லை. குலத்தைக் கெடுக்க வந்த அந்தக் ‘கோடாரிக்காம்பை’, கோடாலியால்கூட வெட்டியிருப்பார்கள். அருணாசலத்தையும், அவன் பெட்டிஷன்களையும் கருத்தில்கொண்டு. உலகம்மையை வேறுவழியில் மடக்கப் பார்த்தார்கள்; நினைத்தார்கள். இப்போது ஊரே ஒரு மனிதனாகி, உலகம்மைக்கு ஜென்ம விரோதியாக மாறிவிட்டது. சேரி மக்களிடம் பட்ட அவமானத்தை, அவளிடம் பட்ட அவமானமாகக் கருதினார்கள். காககேட்டு. அது கிடைக்காத சிறுவன். கையில் இருக்கும் கண்ணாடியை வீசியெறிவது மாதிரி.

கொஞ்சம் மனமாறி வந்த பலவேச நாடார், ‘பள்ளுப் பறைகளோடு’ அவள் சேர்ந்து கொண்டதை அறிந்ததும், வெகுண்டார். “அருணாசலத்த வச்சிகிட்டு இருக்காள்” என்று இரண்டு மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரசாரத்தைக் கேள்விப்பட்ட மாரிமுத்து நாடார். பஞ்சாட்சர ஆசாரி, ராமையாத்தேவர் ஆகியோர் “வே, ஒமக்கு மூளை இருக்கா? அருணாசலத்த வச்சிக்கிட்டிருக்கான்னு சொன்னா நமக்குத்தான் அசிங்கம்! அடுத்த ஊருக்காரங்க, வச்சிக்கிட்டு இருந்தவள் உலகம்மன்னு அட்ரஸ்ஸா வச்சிக்கிட்டு இருப்பாங்க? மேல்ஜாதிப் பொண்ணக் கீழ்ஜாதிக்காரன் வச்சிக்கிட்டிருக்கான்னு எல்லாருடைய பொண்ணையும்தான் தப்பா நினைப்பாங்க! இது ஏன்வே ஒம்ம களிமண் மண்டையில் உரைக்கல?” என்று பலவேச நாடாரை நாயைப் பேசியது மாதிரி பேசி, அவர் வாயை ஆளுக்கொரு பக்கமாக அடைத்தார்கள். ‘புலி வருது புலி வருதுன்னு’ சொல்றது மாதிரி வச்சுக்கிட்டிருக்கான்னு சொல்லப்போய் அவள் நிஜமாகவே அருணாசலத்தை ‘வச்சிக்கிட்டு’ இருக்குத் துவங்கினால், கேவலம் உலகம்மைக்கு மட்டுந்தானா? அவளைச் சேர்ந்த ஜாதிக்கும் பங்கு கிடைக்காமலா போகும்? “மேல் ஜாதிக்காரங்க எங்களுக்கு மச்சினங்கன்னு சேரிப்பசங்க பேசினா சேதம் யாருக்கு”

ஆகையால், குட்டாம்பட்டியர், “பாம்பும் சாகனும், பாம்படிக்கிற கம்பும் நோகக்கூடாது” என்று நினைத்தவர்கள் போல், உலகம்மையை எதிர்த்து, பகிஷ்காரத்தைப் பலப்படுத்தினார்கள். சிலரை அதற்காகப் பலவந்தப்படுத்தினார்கள். உலகம்மை வட எல்லையான தோட்டத்துக் கிணற்றில் குளித்து வந்தாள். அங்கே அவள் குளிக்கக் கூடாது என்று தோட்டக்காரரைச் சொல்ல வைத்தார்கள். விரைவில், தோட்டச்சுவரை முள்வைத்து அடைக்க வேண்டும் என்றும், அவரிடம் ஆணையிடப்பட்டது. உலகம்மை சட்டாம்பட்டிக் கிணறுகளில் ஒன்றில் குளித்தாள். இரண்டுநாள் கழித்து, தோட்டக்காரர். அவள் அருகேயுள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். உலகம்மை அசரவில்லை. சேரிக்கினற்றில் போய்த் தண்ணீர் எடுத்தாள். ஊர்க்கிணற்றுக்குத் தண்ணீருக்காகப் போவதை, அங்கேயுள்ள பெண்களின் நிசப்தத்தைத் தாங்க மாட்டாது ஏற்கனவே விட்டுவிட்டாள்.

என்றாலும், ஊரில் நிலவிய பதட்ட நிலையைக் கருதி, ஹரிஜனப் பெண்கள் அவள் வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்கள். சேரியில் உள்ள சில கிழங்கள்கூட “எல்லாம் ஒங்களாலத்தான் நாடாரம்மா. நீங்கதான் ஊரோட ஒத்துப்போவாம தனிக்காட்டு ராணிமாதிரி நடக்கிய. எங்களை எதுக்கும்மா ஒங்க சண்டையில இழுக்கிய?” என்று தண்ணீர் எடுக்கப்போன அவளிடம், நேரிடையாகவே கேட்டு விட்டார்கள். உலகம்மைக்கு என்னவோ போலிருந்தது. அவர்களைப் பற்றி அருணாசலத்திடமோ, இதர பெண்களிடமோ சொல்ல அவள் விரும்பவில்லை. அப்படிச் சொன்னால், அந்தக் கிழங்கட்டைகளுக்கு, ‘செமத்தியாக’ வசவு கிடைக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும்.

உலகம்மை, சட்டாம்பட்டி வயக்காட்டுக்குப் போகும்போது, வீடடில் இருந்த ஒரே ஒரு செப்புக்குடத்தையும் கையோடு கொண்டு போனாள். இதையறிந்த குட்டாம்பட்டியார், சட்டாம்பட்டி நிலப்பிரபுக்களிடம், உலகம்மையை வயலில் சேர்க்கக்கூடாது என்று பக்குவமாகச் சொல்வதற்குத் தருணத்தை எதிர்பார்த்திருந்தார்கள்.

உலகம்மைக்கு மீண்டும் பயங்கரத் தனிமை வாட்டியது. மெட்ராஸுக்குப் போகலாம் என்று அய்யாவிடம் சொன்னபோது, அவர் மறுத்துவிட்டார். அவளும் சேரிமக்கள் காட்டும் அன்பில், கட்டுண்டவளாய் அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். இப்போது ஊர் நிலைமை காரணமாக, சேரி மக்கள் ஒதுங்கி இருப்பதால், தனிமைப்பட்ட அவள், அய்யாவிடம் மீண்டும் பட்டனப்பிரவேசத்தைப் பற்றிச் சொல்லும்போது, அவரோ, “எந்தவித பலமும் இல்லாமல், அழக மட்டும் வச்சிக்கிட்டு இருக்கிற ஏழப்பொண்ணு மெட்ராஸ்ல மானத்தோட வாழ முடியாது” என்று சொன்னார். அவள் மீண்டும் வற்புறுத்தியபோது, “நான் செத்த பிறவு என்னைக் குழிமுழிவிட்டு அப்புறமா வேணுமுன்னா போ! என் கண்ணால நீ மெட்ராஸ்ல மானத்துக்குப் போராடுறத பாக்க முடியாது” என்று இறுதியாகச் சொல்லிவிட்டு. வேறுபக்கமாக முகத்தை வைத்துக் கொண்டார். உலகம்மையால் அதற்குமேல் வற்புறுத்த முடியவில்லை. அதோடு ஒரு லெட்டர்கூடப் போடாத லோகு இருக்கும் மெட்ராஸுக்குப் போக, அவளுக்கு விருப்பமில்லை. அவனை நினைக்காமல் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை வலிய தன்னைமீறி வரவழைத்துக்கொண்டு, அதை இறுதியில் வீம்பாக மேற்கொண்டாள்.

இத்தனை அமளிக்குள்ளும், சரோஜா ― தங்கப்பழம் கல்யாணம், வாணவேடிக்கைகளோடும், கொட்டு மேளத்தோடும் நடந்தேறியது. கல்யாணமாகி பத்து நாட்களுக்குப் பிறகும், சரோஜா கண்ணைக் கசக்குவதைப் பார்த்து மாரிமுத்து நாடார் திடுக்கிட்டார். போகப்போகச் சரியாகிவிடும் என்று நினைத்தவர். மகள் களையிழந்து இருப்பதைப் பார்த்துக் கலங்கினார். முதலிரவிலேயே, தங்கப்பழம், ‘பட்டை’ போட்டுக்கொண்டு, அவளை நெருங்கினான் என்றும் சாராய நாற்றத்தைத் தாங்க முடியாத சரோஜா, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து அழுதாள் என்றும், தங்கப்பழமும் வெளியே வந்து, அவள் தலைமுடியைப் பலவந்தமாகப் பிடித்து, இழுத்துக்கொண்டு உள்ளே போனான் என்றும், மனைவி மூலம் கேள்விப்பட்ட மாரிமுத்து நாடாருக்கு, மார்பை என்னவோ செய்தது. இது போதாதென்று. மச்சினன் பலவேசம் “அத்தான். அடுத்த போகத்துல கரையடி வயலுல கடல போடப்படாது. தக்காளிதான் போடணும்” என்று, அவர் நிலத்துக்காரர் மாதிரியும். இவர் குத்தகைக்காரர் மாதிரியும் பேசி வருவது, அவரை வாட்டி வதைத்தது.

“இத்தனைக்கும் காரணமான அந்த உலகம்மை, இன்னும் உலாத்துறாள். காலை நீட்டி நீட்டி நடக்கிறாள். கையை ஆட்டி ஆட்டிப் போகிறாள். இனிமேயும் அவள விட்டு வைக்கது மகா தப்பு! விடமுடியாது, விடக்கூடாது!”

மாரிமுத்து நாடார், வட எல்லைத் தோட்டக்காரர் ஐவராஜாவிடம் தோட்டச்சுவரை அடைத்துவிட வேண்டும் என்று வாதாடி, ஊர்க்காரர்களை எதிர்த்த சேரிப்பயலுக்கு, உலகம்மை வாழைப்பழம் கொடுத்ததைப் புள்ளிவிவரமாகக் காட்டினார். “அது எப்டி மச்சான் முடியும்? அனார்கலி சினிமாவுல உயிரோட சமாதி கட்டுனது மாதிரி இருக்குமே” என்று இழுத்துப் பேசிய ஐவராஜாவிடம், தோட்டச்சுவரை அடைக்கவில்லையானால், அவர் வயலுக்குப் பச்சைத் தண்ணீர் போகாது என்று பச்சையாகச் சொல்லிவிட்டார். பொது வாய்க்காலில் இருந்து, நீர் போகமுடியாத ‘முக்கடி முனங்கடியில்’ மாரிமுத்து நாடார் வயல் ― வாய்க்காலை நம்பியிருக்கும் இடத்தில், ‘ரெண்டு மரக்கால்’ விதப்பாட்டை வைத்திருந்த ஐவராஜா. இறுதியில் இனங்கிவிட்டார். ‘எப்டி வெளில போவா? எப்டியும் போவட்டும். நம்ம தோட்டத்த நாம அடைப்போம்!’

மாரிமுத்து நாடாருக்கு, இன்னும் ஆத்திரம் தீரவில்லை. பலவேச நாடார் இப்போது அவரை மதிப்பதே இல்லை. உலகம்மையை, ஊரைவிட்டு விரட்டவில்லையானால், அவர் இருப்பதில் அர்த்தமில்லை. வீட்டுக்காரி வேறு “நீங்க ஒரு ஆம்புளயா? ஒரு அன்னக்காவடி பொம்புளய அடக்க முடியாத நீங்க ஒரு ஆம்புளயா?” என்று இரவில் கொடுத்த ‘அடி’ அவருக்குப் பகலிலும் வலித்தது.

அந்த வலி தாங்கமுடியாமல், அவர் பல்லைக் கடித்துக் கொண்டார். அவர் மூளை தீவிரமாகச் சிந்தித்து இறுதியில் ஒரு முடிவை மேற்கொண்டது.

‘ஒண்ணுக்கும் முடியாமல் போனால் பிராந்தன ஏவி அவள கற்பழிக்கச் சொல்லணும். இதனால் (பிராந்தனுக்கு) எட்டு வருஷம் ஜெயில் கிடச்சாலும் பரவாயில்ல!’