ஒரு கோட்டுக்கு வெளியே/ஒறுக்கப் பட்டு…

16. ஒறுக்கப் பட்டு…

ர் விதித்த தண்டனையின் கடுமையை, உணரத் துவங்கினாள் உலகம்மை. எந்தப் பெண்ணும் அவளிடம் பேசுவது இல்லை . எதிரில் சந்தித்த பல பெண்களிடம் இவளாக வலியப் பேசினாலும், அவர்கள் ஒதுங்கிப் போனார்கள். ஒரு சில பெண்கள், குறிப்பாக, 'அடியே, அடியே' என்று உரிமையோடு பேசும் பெண்கள், அவளைப் பார்த்ததும் அழுதுவிடுவதுபோல் முகத்தை வைத்துக் கொண்டார்கள். சிலர், அவளைப் பார்க்கும்போது கண்களைக்கூடத் துடைத்துக் கொண்டார்கள். ஆனால் யாரும் பேசவில்லை. பீடி ஏஜெண்ட் ராமசாமிக்கு இவர்கள் பேசுவது தெரிந்தால், பீடி இலை கிடைக்காது.

ஊர்க்கிணற்றுக்கு, வடக்குப்புறமாகச் சுற்றித்தான் அவள் தண்ணீர் எடுக்கப் போவாள். அங்கேதான், சில நிமிடங்களாவது கவலையை மறக்கும் அளவிற்கு, இதரப் பெண்களோடு அவள் சிரித்துப் பேசுவது வழக்கம். சில சமயம் 'நான் ஒண்ணும் இவங்க கஷ்டப்படுத்துறதுல அசறுறவள் இல்ல" என்று அவளை அறியாமல் எழும் உணர்வை வெளியே காட்டுபவள்போல், கொஞ்சம் அதிகமாகவே சிரித்துப் பேசுவாள். அவளுக்கு, ஊரின் ஆண்கள் மீதுதான் கோபமே தவிர, அவர்கள் மனைவிமார்கள் மீதல்ல. ஆனால் அங்கேயும் அவளைப் பார்த்தும் 'போழா ஒனக்குத் தோண்டி போட இடமுல்ல' என்று செல்லமாகப் பேசும் பெண்களில் ஒருத்திகூட, அவளிடம் பேசவில்லை அவளைப் பார்த்ததும், கிணற்றுச்சுவரில் போதுமான இடத்தை விட்டுக் கொடுத்தார்கள். ஒருநாள் அவள் 'தோண்டி' மூலப்படியில் மோதிக் கிழிந்துவிட்டது. பனை ஓலையில் செய்த அந்தத் தோண்டியில்'. நீர் ஏற முடியாத அளவிற்குப் பெரிய ஓட்டை விழுந்துவிட்டது. என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள் உலகம்மை. மற்ற சமயமாக இருந்தால், யாராவது தம் தோண்டியைக் கொடுத்திருப்பார்கள். இப்போது அவளுக்குக் கேட்க மனமிருந்தும், மார்க்கம் தெரியவில்லை . ஒரு பெண் அதுவும் மாரிமுத்து நாடாருக்குச் சொந்தக்காரப் பெண், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவளுக்குத் தன் தோண்டியைக் கொடுக்கப்போனாள். அதற்குள் 'பிராந்தன்' வந்துவிட்டான். உலகம்மையிடம் யாரும் பேசுகிறார்களா என்பதைப் பார்வையிட வந்தவன் போல், தன்னை , அடிக்கடி வரும் ஹெட் கான்ஸ்டபிளாக நினைத்துக் கொண்டு, ஊர்க் கிணற்றையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் புருஷனிடம் உதைபட விரும்பவில்லை. அதுவும், அவள் கருத்துப்படி - 'உருப்படியில்லாத பயல்' பிராந்தன்மூலமாக. உலகம்மையின் கண்ணீர் அந்தக் கிணற்று நீருக்குள்ளும் விழுந்தது. மௌனமாக, உடைந்துபோன தோண்டியைத் தோளில் போட்டுக்கொண்டு, வெறும் பானையுடன் வீட்டுக்குள் வந்தாள். தோண்டி அவளுக்குச் செய்யத் தெரியாது. செய்யத் தெரிந்த ராமையாத்தேவர், செய்து கொடுக்க மாட்டார். சட்டாம்பட்டிக்கு, எப்படியாவது ஒரு பனை ஓலையை எடுத்துக்கொண்டு போக வேண்டியதுதான்.

ஒருநாள் மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும், அடுப்புப் பற்ற வைக்கப்போனாள். வத்திப் பெட்டியில் ஒரே ஒரு குச்சிதான் இருந்திருக்கிறது. அதுவும் அணைத்துவிட்டது. தீப்பெட்டிக்கு எங்கே போவது? கடைக்காரர்களிடம் கேட்கமுடியாது. அக்கம் பக்கத்துக்காரர்களிடம் கேட்கவும் முடியாது. அப்படிக் கேட்குமளவிற்கு ரோஷங்கெட்டவளுமல்ல. இருட்டு வேறு துவங்கிவிட்டது. மாயாண்டி வேறு. பசியால் துவண்டு கொண்டிருப்பவர்போல், வயிற்றுக்குள் இரண்டு கைகளையும் அணையாகக் கொடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். ஒரே ஒரு தீக்குச்சி இருந்தால் போதும், எங்கே போவது?

அந்தச் சின்ன விஷயம், அவளுக்கு அன்றைய ஜீவனத்தின் பெரிய விஷயம். அதோடு இந்த இருட்டில், அந்த ஒற்றையடிப் பாதையில், இப்போது சரமாரியாக உட்கார்ந்திருப்பார்கள். எப்படியோ, அவர்கள் போவது வரைக்கும் இவள் காத்திருந்தாள், எழுந்து விட்டார்களா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவர் மாற்றி ஒருவராக உட்கார்ந்திருந்தார்கள். என்றாலும், அந்த அனாசாரம் பிடித்த வழியாக நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொண்டலப்பேரி கிராமத்திற்கு நடந்தாள், ஒரே ஒரு தீப்பெட்டிக்காக. அப்படி அவள் நடக்கும்போது, அவள் வயிற்றில் ஒரு தீக்குச்சியை வைத்திருந்தால், அதில் தீப்பிடித்திருக்கும்!

அவளுக்கு இரண்டே இரண்டு புடவைகள்தான். ஒரே ஒரு ஜாக்கெட், புடவைக்கு 'ஷிப்ட் டூட்டி': ஜாக்கெட் மார்க்கண்டேயர்; ஒரு புடவையைக் கட்டிக்கொண்டு, இன்னொரு புடவையைத் தோட்டத்துக் கிணற்றில் 'துவைத்து' விட்டு வந்து கொண்டிருந்தாள். தோட்டத்துச் சுவரில் தம்பிடித்து ஏறியபோது, ஏற்கனவே இற்றுப் போயிருந்த ஜாக்கெட் 'டார்ரென்று' கிழிந்து விட்டது. அவளுக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் இருந்தது. மாராப்பு முனையை எடுத்து இடுப்பைச் சுற்றி மறைத்துக்' கொண்டாள். அது வயிற்றைக் காட்டிக்கொண்டு vie ,நோயோக கண்டி இருந்தது என்னவோ போலிருந்தது. எப்படியோ யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக ஓடி வந்தாள். நல்லவேளை, அவள் வீட்டின் மூன்று பக்கமும் அடைக்கப்பட்டிருந்ததால், ஜாக்கெட்டால் அடைக்கப்படாமலிருந்த அவள் மேனியின் முதுகிற்கு அந்த வேலிக்காத்தான் செடிகளும், மூன்றடிச் சுவரும், அதன் மேலுள்ள முட்கம்பிகளும் கண்ணபிரான் போல் அபயமளித்தன. வீட்டுக்கு வந்ததும் இன்னொரு புடவையைச் சுற்றிக்கொண்டு, கிழிந்த ஜாக்கெட்டைத் தைப்பதற்காக ஊசியைப் பார்த்தாள். ஊசி இருந்தது, நூலில்லை. பொதுவாக அவள் நூல் வாங்கி வைப்பதில்லை. ஊரில் நாலைந்து டெய்லர் பையன்கள் இருக்கிறார்கள். பத்துப் பைசாவுக்கு 'ரப்' போட்டுவிடுவார்கள்.

இப்போதோ -

நூல் கொடுக்க ஆளில்லை. நாலைந்து தையல் மிஷின்கள் இருந்தாலும், மானத்தைக் காக்கும் அந்த ஒரே ஒரு ஜாக்கெட்டின் கிழிசலைத் தைக்க, அவற்றிற்கு 'ரோஷம்' கெட்டுப் போகவில்லை . ஒரு 'ஊக்கைப்' போட்டு, பின்புறத்தை மறைக்கலாமா என்றுகூட நினைத்தாள். முடியாது. ஊக்கு, இன்னொரு சின்ன ஓட்டையைப் போட்டு, அதுவும் இறுதியாகப் பெரியதாகிவிடும். என்ன செய்யலாம்? அவள் யோசித்தாள். வயக்காட்டிற்கும் போயாக வேண்டும். பானையில், அரைக்கால்படி அரிசிகூட இல்லை. ஜாக்கெட் இல்லாமல் போக முடியாது.

ஆனால் வயலுக்குப் போய் கூலி வாங்கி வந்தால்தான் அடுப்பு எரியும். அப்போதுதான் அய்யாவின் வயிறும் பசியால் எரியாது. ஏற்கனவே, நாலைந்து நாள் பெய்த மழையில், வேலைக்குப் போகாமல் வெட்டியாக இருந்தாயிற்று. ஆனால் வயிறு வெட்டியாக இருக்கவில்லை. 'பானையில் இருந்த அரிசியும் தீர்ந்து போச்சு. என்ன செய்யலாம்?'

மாயாண்டி. ஒரு யோசனை சொன்னார். அதன்படி. அவர், தான். கட்டியிருக்கும் வேட்டியின் முனையை. லேசாகக் கிழித்துவிட்டு, அதிலிருந்து நூலை உருவப்பார்த்தார். அது மிகக் கஷ்டமான காரியம். நெருக்கமாக இருந்த நூலிழைகள் வர மறுத்தன. அப்படி வந்தவை, ஓரங்குலம் வந்ததும் அறுந்து போயின. இற்றுப்போயிருந்த வேட்டியில் நூல்கள் ஏற்கனவே அற்றுப்போயிருந்தன. இயலாமை, கைகாலை நடுங்க வைக்க, "நீ இழுத்துப் பாரும்மா" என்று மகளிடம் வேட்டியைக் காட்டினார். நாற்றுக் கட்டுகளில் இருந்து ஒரு சின்னஞ்சிறு நாற்றைப் யாசித்தான் தியாகப் பொ இன்னொரு சிலை பக்குவமாகவும், வேகமாகவும் எடுக்கும் உலகம்மையால், நூலைப் பிரிக்க முடியவில்லை . அவளைப்போல், நூலிழைகளும் அற்றுக்கொண்டே போயின, நேரம் முன்னேறிக் கொண்டிருந்தது. இதற்கு மேலும் நேரங் கடந்தால் வயலில் சேர்க்க மாட்டார்கள்.

வந்தது வரட்டும் என்று நினைத்தவள்போல, ஜாக்கெட்டை எடுத்து 'விளக்குழியில்' வைத்துவிட்டு, புடவை முந்தானையை மார்போடு மார்பாக இழுத்துப் போர்த்தினாள். அது மார்பகத்தை மறைக்கும்போது, வயிற்றைக் காட்டியது, வயிற்றை அவள் மறைக்கப் பார்த்தால், அது மார்பகத்தின் மானத்தை வாங்கியது. எதை அதிகமாக மறைக்க வேண்டும். எதை குறைவாக மறைக்க வேண்டும், எந்த அளவிற்கு மார்பகமும். வயிறும் அந்தத் துணியால் மறைக்கப்பட வேண்டும் என்று விகிதாச்சார கணக்குப் போட்டாள். பிறகு வயிற்றைக் காட்டிக்கொண்டு அந்த வயிற்றுக்காக அவள் ஓடினாள். பிறர் கண்களில் இருந்து தப்புவதற்காக, வேகமாக ஓடினாள்.

அவள் மாலையில் திரும்பி வரும்போது, புளியந்தோப்பில் நின்று கொண்டிருந்த பிராந்தனும்' 'பொந்தனும்' மார்புச் சேலைக்குள் அடுத்தவக நிலத்தில் அவள் கட்டிய வீட்டைப் போல' மார்பகங்கள் விம்மிப்புடைத்திருப்பதைப் பார்த்தார்கள். மழைச்சாரல் வேறு. சேலை ஒட்டிக்கிடந்தது. பிராந்தனுக்கு நல்ல வெறிகூட. முண்டியடித்துக் கொண்டிருந்தவனை, பீடி ஏஜெண்ட் தடுத்தான். ஆனால், அவனும், 'பார்த்தால் முகம் தெரிவதுபோல் கண்ணாடி மாதிரி ஜொலித்த அவள் வயிற்றைப் பார்த்து கொஞ்சம் கிறங்கிப் போனான். அவள், சட்டாம்பட்டியில் பல சாமான்களை வாங்கி மடியில் போட்டிருந்ததால் மடியில் தோண்டி மாதிரி மாறிய புடவை முந்தானை, மார்புத்திரட்சிகளை அதிகமாக மறைக்கவில்லை. அந்த உடம்பு கிடைக்காமல் போன நிலையை நினைத்துக்கொண்டான் பொந்தன். அவனுக்குக் கோபம் தாங்க முடியவில்லை. ஜாடையாக லாவணி போட்டான்.

"ஏல இப்பல்லாம் ஜாக்கெட் போடாம போறாளுவள ஏமுல?"

பிராந்தன், இன்னும் வெறியில் இருந்ததால், அவனால் பதிலளிக்க முடியவில்லை. வெறி இல்லையென்றாலும், அவன் குதர்க்கப் பேச்சில் ஒரு பிச்சைக்காரன். அவனுக்கு, வெண்டை வெண்டையாகத்தான் பேச வரும். ஆகையால் பீடி ஏஜெண்டே, தான் போட்ட கேள்விக்குத் தானே பதிலளித்தான்.

"ஏன்னு தெரியுமால? இதுதான் வசதியா இருக்கும். ஜாக்கெட்டுன்னா இழுக்கணும் மூடணும். இதுன்னா ரொம்ப வசதி. நிறயப் பேரச் சமாளிக்கலாம்."

உலகம்மையின் முன்னால், அவள் தூக்கும் அளவிற்குள்ள பாறாங்கல் ஒன்று கிடந்தது. அதைத்தூக்கி. பொந்தன் மேல் எறிகிற தைரியம் இருந்தது. வீம்பு இருந்தது. சிறிது யோசித்து கீழே குனிந்தாள். "பொந்துப்பயல இன்னைக்கே தீர்த்துடலாம்" குனிந்தவள், அதன் விளைவுகளை நினைத்தவள்போல அவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டு எழுந்து, சிறிது நேரம் நின்றாள். அலிகள்மாதிரி அந்த இருவரும் வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள். இதைப் பார்த்ததும், உலகம்மாவுக்குச் சிறிது சிரிப்புக்கூட வந்தது.

வீட்டிற்கு வந்ததும், என்னென்ன பொருட்களெல்லாம் இல்லை என்று பார்த்தாள். ஒவ்வொரு பொருளையும் அவள் வெளியூரிலிருந்து வாங்கியாக வேண்டும். அதோடு, முன் எச்சரிக்கையாக 'ஸ்டாகி' வேறு வைத்திருக்க வேண்டும். பானை உடையலாம். இன்னொரு பானை இருக்க வேண்டும். தீப்பெட்டி மழையில் நனைந்து போகலாம். இன்னொன்றும் தயாராக இருக்க வேண்டும். முன்மாதிரி, 'சுள்ளி' பொறுக்க முடியாது. சோளத்தட்டையாவது இருக்க வேண்டும்.

உலகில், எந்த நாடுமே தன்னிறைவு பெறாத நிலையில், தொழில்துறையில் மேலோங்கி வரும் ஆனானப்பட்ட ஜப்பானே, கச்சாப் பொருட்களில் குறிப்பாக பெட்ரோலியத்தில், தன்னிறைவு இருக்கட்டும், ஓரளவுகூட இல்லாமல் இருக்கும் இந்தக் காலத்தில், அமெரிக்கா, ரஷ்யா முதலிய வல்லரசுகள்கூட எல்லா விஷயத்திலும் சுயதேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத தற்காலத்தில் பாரதம் முதலிய மேம்பாடு அடைந்துவரும் நாடுகள், தன்னிறைவு என்பதை 'எல்லாவற்றிலும் அல்ல பெரும்பாலானவற்றில்' என்று பிரத்யட்ச வியாக்கியானம் செய்துவரும் இந்தச் சமயத்தில் மேம்பாடடைய முடியாத அந்த ஒற்றைப் பெண், எல்லா விஷயத்திலும் தன்னிறைவு பெற வேண்டிய புதிய பொருளாதாரச் சிறையில் வைக்கப்பட்டாள். அதோடு, வீட்டுச் சாமான்கள், 'சர்பிளஸாகவும்' இருக்கவேண்டிய அவசியம். 'எகனாமிக் பிளாக்கேட்' வேறு.

நாட்டுக்கே முடியாத ஒன்றை, வீட்டுக்குச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டாலும், உலகம்மையால், அத்தனை கஷ்டங்களையும் தாங்கவும் முடிந்தது, தாக்குப்பிடிக்கவும் முடிந்தது. ஆனால் தனிமைப்படுத்தப் பட்டதைத்தான் அவளால் தாங்க முடியவில்லை. கொடிய இருக்கட்டும் பாருட்களில் குறிப்பு வரும் ஆன சிறைச்சாலையில் தனிமையில் இருந்து விடலாம். அத்துவானக் காடுகளில் தனிமையில் இருந்துவிடலாம். ஆனால் மனிதர்களுக்கு மத்தியில் வழிந்தோடும் மக்கள் பெருக்கத்திற்கு முன்னால், தனிமையில் இருப்பதென்பது, அதை அனுபவித்த உலகம்மைக்கு மட்டுமே தெரியும். அந்த ஜன சமுத்திரத்தில், அவளுக்குத் தனிமைத் தாகத்தைப் போக்க ஒரு மனிதத் துளிகூடக் கிடைக்கவில்லை . தனிமை என்றாலும் பரவாயில்லை, இது தனிமையாக்கப்பட்ட தனிமை. கண்ணுக்குப் புலப்படும் சுவர்களைவிடக் கெட்டியான புலனாகாத சிறைச்சாலை அது. ஒருவரும் பேசாமல் இருப்பது, அவளைப் பெரிதும் பாதித்தது. எப்போதும் பேசும் நாராயணசாமிகூட, லேசாகச் சிரித்தாரே தவிரப் பேசவில்லை . இந்தச் சமயத்தில் சரோஜாவிற்கும் பலவேச நாடார் மகன் தங்கப்பழத்திற்கும் நிச்சயதாம்பூலம் ஆகிவிட்டது. இதனால் சமாதானம் அடைந்த பலவேச நாடார், உலகம்மையைப் பற்றி அதிகமாக அலட்டிக்கவில்லை . ஆனால், "போயும் போயும் குடிகாரப்பய மவனுக்கு என் மவா ‘வாக்கப்பட வேண்டியதாயிட்டே!" என்று மாரிமுத்து நாடார் மனைவி, வாயிலும் வயிற்றிலும் அடித்ததோடு, அந்தப் பனயேறிப் பயமவா கடைசில பனயேறிப் புத்தியக் காட்டிட்டாளே காட்டிட்டாளே!" என்று தன் அழுகையைக் கணவனிடம் காட்டினாள். அவருக்கும், மனைவி சொல்வது சரியாகத் தெரிந்தது. 'எம்.ஏ. படிச்ச லோகு எங்கே எதுக்கும் உதவாத தங்கப்பழம் எங்கே? பட்டம் பெற்ற அவன் எங்கே? 'பட்டை ' தீட்டிய இவன் எங்கே?'

மாரிமுத்து நாடாருக்கு, ஆவேசமான ஆவேசம்! மகளைப் பாழுங்கிணற்றிலே தள்ளியதற்குக் காரணமான உலகம்மையை ஒழிக்காதது வரைக்கும், அவருக்கு உறக்கம் பிடிக்காது போல் தோன்றியது. பலவேச நாடாரின் காதை அடிக்கடி கடித்தார். உலகம்மையின் வீட்டுக்கு வடக்கே இருந்த தோட்டத்தின் சொந்தக்காரனைப் பார்த்தார்.

ஆனால் உலகம்மைக்கு, அந்தத் துன்பத்திலும் நிச்சயதாம்பூலம் ஒரு இன்பத்தைக் கொடுத்தது. 'பாவம் சரோசாக்கா, கடைசில அவளுக்கும் ஒரு வழி கிடச்சிட்டு, காலு, கையி கெதியா இருக்கணும்.'

உலகம்மைக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்பு லோகுவைப்பற்றி அப்போ இப்போவாக' நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, இந்த நிச்சயதாம்பூலத்திற்குப் பிறகு, அடிக்கடி அவன் நினைவு வந்தது. துன்ப அழுக்கை, அந்த இன்பச்சோப்பால் போக்கிக்கொண்டிருந்தாள். சட்டாம்பட்டியிலிருந்து. வீட்டுக்குப் புளியந்தோப்பு வழியாக வரும்போது, பொதுவாக வெளியே போகாமல், 'அரங்கு' வீட்டுக்குள்ளேயே முடங்கி முடங்கிக் குறுகிப்போன சரோஜா, அங்கே நின்றுகொண்டிருந்தாள். லோகுவுடன் நடக்கவிருந்த கலியாணம் நின்றுபோன பிறகு இப்போதுதான் இவள், அவளைப் பார்க்கிறாள். உலகம்மை, மான்குட்டி மாதிரி துள்ளிக்கொண்டு, சரோசாக்காவைப் பார்த்து ஓடினாள். இவ்வளவு நாளும் அக்காவைப் பார்க்க முடியாமல், அடக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி, இரண்டு இறக்கைகளாகி, அவள் இடுப்பின் இருமருங்கிலும் ஒட்டிக்கொண்டதுபோல் 'பறந்தாள்'!

ஆனால், ஈரோஜா இவளை முறைத்துப் பார்த்தாள். பிறகு "தூ வெட்கங்கெட்ட நாயிங்க! அடுத்துக் கெடுக்கிற முண்டைங்க மானங்கெட்ட கழுதைங்க!" என்று தன்பாட்டுக்குச் சொல்லிக்கொண்டே, மாறிமாறிக் காறித்துப்பினாள். உலகம்மையின் சிவப்புமுகம், கறுத்தது. வழியேபோன அவமானத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட பேரவமானத்தில், அவள் வீட்டைப்பார்த்து மெதுவாக நடந்தாள், அய்யாவிடம் சொல்லக்கூடாது என்று இருந்தாலும், அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. மாயாண்டி, சமாதானம் சொன்னார்:

"சரோசாள தப்பா நினைக்காத. தங்கப்பழத்த கட்டிக்கிட அவளுக்கு இஷ்டமில்லன்னு தெரியுது. அதனால், ஒன்னாலதான இந்த நிலமன்னு கோபப்பட்டிருப்பார் அவா ஒன்னத் துப்பல! தங்கப்பழத்தத்தான் துப்பியிருக்கா"

மாயாண்டிகூட, சொல்லிவிட்டு நெடுநாட்களுக்குப் பிறகு. வேதனையோடு சிரித்தார். அந்த வேதனையில் ஒரு பகுதி சரோஜாவிற்காகச் சேர்ந்து கொண்டது.

உலகம்மையும் ஓரளவு சமாதானம் அடைந்தாள். இருந்தாலும், சரோஜா, அவள் மதிப்பிலிருந்து நான்கைந்து குண்டுமணி தாழ்ந்துவிட்டாள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஏனோ அவள் லோகுவை சதா நினைத்தாள். "சரோசாக்காவுக்கு துரோகம் பண்ணப்படாது" என்று அடக்கி வைத்திருந்த காதல், இப்போது அவளுக்கு 'லைன்' கிளியராகிவிட்டதாகவும், காறித்துப்பிய சரோஜாவைப் பழிவாங்குவது மாதிரியும், பொங்கிவரும் காட்டாறாய் வெளிப்படுவது அவளுக்குத் தெரியாது. ஊரார் ஒதுக்குகிறார்கள் என்பதற்காக, நாளடைவில் தானாக ஒதுங்கிக்கொண்ட உலகம்மைக்கு, இப்போது தனிமை ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. லோகு. அவளோடு எப்போதும் இருந்தான். ஆடை உடுக்கும்போதுகூட, லோகு உற்றுப் பார்ப்பது மாதிரி அவளுக்குத் தெரியும். அவளை அறியாமலே, கன்னங்கள் சிவக்கும். மலக்காட்டுப் பாதையைக் கடந்து தோட்டத்துச் சுவரில் ஏறும்போது, ஏற்கனவே லோகு அதில் ஏறிக்கொண்டு, அவள் கையைப் பிடித்துத் தூக்கி விடுவதுபோல் நினைத்துக்கொள்வாள். சட்டாம்பட்டி ஜனங்கள் அனைவரையும், சொந்தக்காரர்களைப்போல் பார்ப்பாள். லோகுவின் அய்யாவை, அவருக்குத் தெரியாமல் தெரிந்து வைத்திருந்தாள். அவரைப் பார்க்கும் போதெல்லாம், இவள் வழிவிடுவதுபோல், மரியாதையாக ஒதுங்கிக் கொள்வாள்.

லோகு, அவளுக்குப் பட்டுச்சேலை எடுத்து வந்தான், அதை அவனே, கட்டிவிட்டான். அவனுக்கு அவள் சோறு போட்டாள். செல்லமாகச் சிணுங்கிய அவன் வாயில் ஊட்டிவிட்டாள். அவன், ஒரே தட்டில் அவளும் 'சாப்புடனும்' என்று அடம் பிடித்தான். அவள் இறுதியில் சம்மதித்தாள். உணவைப் பிடிக்கிற சாக்கில், அவள் கையைப் பிடித்தான். அவள் சிணுங்கினாள். 'சாப்பிட மாட்டேன்' என்று கையை வெளியே எடுத்தாள். அவன் உடனே, அவளுக்கு ஊட்டிவிட்டான். இருவரும் தங்கள் குழந்தைகளின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு குற்றாலத்திற்குப் போனார்கள். ஈரப்புடவையோடு எக்கச்சக்கமாக நின்ற அவளிடம், அவன் 'டிரங்க்பெட்டியில் இருந்த புடவையை எடுத்து நீட்டினான். "இவ்வளவு நேரமும் என்ன பண்ணுனிங்க?" என்று அவள் அதட்டினாள். இருவரும் கைகோத்தபடி, மலையருவிக்கு எதிரே இருந்த புல்வெளிக்குப் போனார்கள். குழந்தையைத் தோளில் வைத்துக்கொண்டு நின்ற அய்யாவையும், * நேரமாயிட்டு' என்று சொன்ன மாமனாரையும், செல்லமாகத் திட்டிக்கொண்டே. அவர்கள் எழுந்திருக்க மனமில்லாமல் எழுகிறார்கள், கிழவர்களுக்குத் தெரியாமல், அவள் இடுப்பைக் கிள்ளினான். அவள் சிணுங்குகிறாள். சிரிக்கிறாள். பிறகு அவளும் கிள்ளுகிறாள். அவன் பதிலுக்குக் கிள்ளுமுன்னால் கிழவர்களுக்கு முன்னால் போய் நின்றுகொண்டு, பின்னால் நிற்கும் அவனுக்கு 'அழகு' காட்டுகிறாள்!

வாழ்வே மாயம் என்கிறார்கள். மாயையான வாழ்வில் வாழும்போது, இன்னொரு மாயையான கற்பனையில் ஏன் அவள் வாழக்கூடாது? அதில் சூதில்லை, வாதில்லை , சுற்றுப்புற மலக்காடும் இல்லை; ஒற்றையடிப் பாதையில்லை. மூன்று பக்கம் முடக்கப்பட்ட குடிசையும் இல்லை. ஒதுங்கவும் இல்லை. நனவைப்போல், மாயையான கற்பனை நிலையில் ஏன் அவள் வாழக்கூடாது?

அவள் வாழ்ந்தாள்.

சில சமயம் அவளுக்குச் சந்தேகம் வருவதுண்டு. 'நாம இப்டி நினைக்கறமே. அவரும் இப்டி நினைப்பாரா? ஆமா அவருந்தான் எவ்ளவு ஆசையோட பாத்தாரு. அப்டின்னா, ஒரு லட்டரு போட்டிருக்கலாம். சீச்சி அது எப்டி முடியும்? போட்டா என்ன? ஆமாம் நீ எனக்கு எப்பவும் சரோஜாதான்னு சொன்னார். ஒருவேள சரோசா பேருக்கு ஜாபகமறதியா லட்டர் போட்டுருப்பாரோ? இருக்காது. அப்டி இருந்தா மாரிமுத்து வந்து இந்நேரம் குதிச்சிருப்பான். அவன் பொறுத்தாலும் பலவேசம் கத்தியிருப்பான். லெட்டர் போட்டிருக்கலாம். எப்டி? அவருதான் பூப்போட்ட ஆட்டுக்கடான்னு சொல்ல வேண்டியதச் சொல்லாமச் சொன்னபிறவு. எப்டி லெட்டர் போடுவாரு மொடவன் கொம்புத்தேனுக்கு ஆசப்பட்ட கததான் நம்ம கத. சும்மா எழுதியிருக்கலாம். சொகத்த மட்டுமாவது விசாரிச்சிருக்கலாம். ஒருவேள எழுதி அப்டி வந்த லட்டர போஸ்டாபீஸ் தடியன் கிழிச்சிருப்பானோ?'

சந்தேகங்களைத் தாங்க முடியாமல் அவள் மனம் அல்லோலகல்லோலப்பட்டது. அடிக்கடி, தபால்காரர் வருகிறாரா என்றுகூட எதிர்பார்த்தாள். அப்படி எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம் என்று அவளுக்கே தெரிந்தாலும், அந்தப் பைத்தியக்காரியால் அந்த எண்ணத்தைத் தடுக்கவும் முடியவில்லை. கிட்டத்தட்ட தபால்காரரைப் பார்த்ததும் லோகு கடிதம் வந்தாலும் வந்திருக்கும் என்று அவள் அனிச்சையாகவே நினைக்கத் துவங்கிவிட்டாள். வயக்காட்டில் இருந்து வரும்போது, லோகுவின் லெட்டர் வந்திருக்கும் என்ற இன்ப எதிர்பார்ப்புடன் வருவதும், அது இல்லாமல் போவதால் எதையோ பறிகொடுத்ததுபோல் ஏங்கிப் படுப்பதும் அவளுக்கு வழக்கமாகிவிட்டது.

ஆனால், அன்று லோகுவைக்கூட நினைக்க முடியாத இக்கட்டான சூழ்நிலை அவள் வீட்டின் வடக்குத் தோட்டத்துக்காரர், இனிமேல் அவள் அந்தத் தோட்டத்து வழியாக நடக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஊர்க்காரர்கள் அவரைக் குற்றஞ்சொல்கிறார்களாம். அவர் தோட்டத்துச் சுவரில் முள் கம்பி போடாட்டா அவர முள்ளா நெனச்சி தள்ளி வைக்கப் போறதா மிரட்டுறாங்களாம்! உலகம்மை, இன்னும் ஊர்க்காரங்க காலுல கையில விழாம இருக்கதுக்கு அவர் தோட்டத்துச் சுவரு சும்மா இருக்கதுதான் காரணமாம். தோட்டக்காரர் அவளிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டார். மாரிமுத்து நாடாரின் 'பிரஷ்ஷா' அதிகமானதை: அவர் பொருட்படுத்தாமல்தான் இருந்தார். இதனால், மாரி காரைக் கிளப்பி விட்டுவிட்டார். அதோடு தோட்டக்காரர், தன் பொண்ணுக்குப் பலவேச நாடார் மகன் துளசிங்கத்தைக் குறி வச்சிக்கிட்டு இருக்கார். மாரிமுத்து மூலமாத்தான் பலவேசத்தைப் பிடிக்க முடியும்.

கூண்டுக்குள் அடைபட்ட கிளிபோலவும், சிலசமயம் புலி போலவும் உலகம்மை அழுதுகொண்டும், உறுமிக்கொண்டும் இருந்தபோது. அவளே எதிர்பாராத அந்தச் சமயத்தில், தபால்காரப்பையன் 'ஒலகம்மா ஒனக்கு லெட்டர்' என்றான்.

உலகம்மைக்குப் பூமியோடு சேர்ந்து மேலே பறப்பது போல் தோன்றியது. தோட்டத்துக்காரர் சொன்னதுகூட இப்போது தூசி மாதிரி தோன்றியது. லோகுவே அங்கு வந்துவிட்டதுபோல் பரபரத்து தெற்குச்சுவரின் முட்கம்பியின் ஓட்டை வழியாகக் கையை நீட்டினாள்.

"குடு."

"கையெழுத்துப் போடணும்."

"லெட்டருக்கும் கையெழுத்து வேணுமா?"

"இது ரிஜிஸ்டர் லட்டர்."

உலகம்மை சிறிது யோசித்தாள். 'அவரு ஏன் ரிஜிஸ்டர்ல லெட்டர் எழுதணும்? இல்லேன்னா வேற யாராவது உடச்சிப் படிச்சிட்டா? தபால்காரன் குடுக்காம இருந்துட்டா? படிச்சவரு படிச்சவருதான்!'

'தபால்காரப்பையன் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு, உறையை வேகமாகப் பிரித்தாள். அப்படிப் பிரித்ததில் உள்ளே இருந்த காகிதங்கூடச் சிறிது கிழிந்தது. அவசர அவசரமாக எடுத்தாள்.

எழுத்து. இங்கிலிஷில் டைப் அடிக்கப்பட்டிருந்தது. அவளுக்கு ‘இங்கிலீஸ்' தெரியாது. ஆனால் எழுதியிருப்பது 'இங்கிலீஸ்' என்பது தெரிந்தது. 'டைப் ஏன் அடிக்காரு?'

உலகம்மை மீண்டும் சிரித்துக் கொண்டாள். 'அவரு ஆபீஸரு. அஞ்சாறு பத்தாப்பு படிச்ச' ஆட்கள கட்டி மேய்க்கலாம். அவங்க டைப் அடிச்சி குடுத்திருக்கலாம். இல்லின்னா இவரே அடிச்சிருக்கலாம்.

இவருக்குத்தான் எல்லாந் தெரியுமோ என்ன எழுதியிருப்பாரு சரோசான்னா...? ஒலகம்மான்னா?'

உலகம்மை, படிக்க முடியாத கடிதத்தைப் படிக்கத் துடித்தாள். முட்கம்பிக்கு வெளியே எட்டிப் பார்த்தாள்.

தபால்காரப் பையன், பத்து வரைக்கும் படித்தவன். உள்ளூர் பார்ட் டைம் போஸ்ட்மாஸ்டரின் சார்பில், தபால்களைப் பட்டுவாடா செய்து கொண்டிருக்கிறான். அவர் தயவில், போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக மாறிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருப்பவன். கழண்டு போன சைக்கிள் செயினை அவன் மாட்டிக் கொண்டிருந்தான், உலகம்மை அவனிடம் பேசினாள். அப்படிப் பேசும்போது நாணினாள்.

"அப்பாவு, இதுல என்ன எழுதியிருக்குன்னு படிச்சுக் காட்டேன்! சீக்கிரமாப் படி செயின அப்புறமா மாட்டலாம். ஒன்னத்தான, ராசா."

தபால் பையன், இதற்குள் செயினைப் போட்டுவிட்டு, 'ஸ்டாண்ட்' போட்ட சைக்கிளை உருட்டப்போனான். உலகம்மை சொன்னது கேட்காததுமாதிரி, சைக்கிள் பெடலில் கால் வைத்தான். உலகம்மை விடவில்லை .

"ஒன்னத்தான் தம்பி! என்ன ஒன் அக்காமாதிரி நெனச்சுக்க. படிப்பா !"

தபால் பையன். அவளைக் கூர்ந்து நோக்கினான்.

"என்ன நீ பேசுறது? ஒன்கிட்ட பேசுனாலே உத குடுப்பாவ. லட்டர வேற படிச்சிக்காட்டச் சொல்றியா? நான் ஊர்ல நல்லபடியா லாந்துறது ஒனக்குப் பிடிக்கலியா?"

தபால் பையன் பெடலை அழுத்தி, சைக்கிளில் ஏறினான். சக்கரங்கள் சுழன்றன - உலகம்மையைப் போல.

"யாரிடமாவது காட்டவேண்டுமே? யாரிடம் காட்டலாம்? பாவி மனுஷன் தமிழில் எழுதித் தொலைச்சா என்ன?"

‘சுயதேவைப் பூர்த்திக்கும்' 'தன்னிறைவுக்கும்' ஒரு யுகமே ஒரு நிமிடமாக வரவேண்டிய அளவிற்கு இயங்கி வந்த உலகம்மைக்கு, இப்போது ஒவ்வொரு நிமிடமும். ஒரு யுகமாகத் தோன்றியது.