ஒரு கோட்டுக்கு வெளியே/ஓட நினைத்து…

6. ஓட நினைத்து…

ரு நாள் முழுதும் உலகம்மைக்கு நிம்மதியில்லை... லோகுவைச் சந்தித்ததால், திருமணம் நின்று போன செய்தி வந்தாலும் வரலாம் என்று உள்ளூரப் பயந்து கொண்டிருந்தவளுக்கு, இப்போது போன உயிர் வந்துவிட்டது. மாரிமுத்து நாடார் வீட்டில், கல்யாண வேலைகள் தங்குதடையின்றி நடந்துவந்தன. தினமும் காலையிலும், மாலையிலும், சரோஜாவைப் பார்த்து, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, வேலைவெட்டிக்குப் போகும் அவளால் நேற்றுப் போக முடியவில்லை. ஏதோ ஒரு குற்றம் செய்துவிட்ட உணர்வில் தவித்தாள். ஆனால் அவள் பயந்தது மாதிரி எதுவும் நடக்காததால், மாரிமுத்து நாடாரின் வயலுக்குப் புறப்பட்டாள். போகிற வழியில் அவர் மகளைப் பார்க்கலாம் என்று நினைத்தாள். பிறகு சாயங்காலம் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று தட்டிக் கழித்தாள்.

நார்க்கட்டிலில் ஒருக்களித்தவாறு படுத்துக்கொண்டு, மூட்டைப் பூச்சிகளை நசுக்கிக்கொண்டிருந்த அய்யாவின் தலையில், அவர் எதிர்பார்க்காத தருணத்தில், சட்டியில் காய்த்து வைத்திருந்த விளக் கெண்ணையை எடுத்து, அரங்கத் தேய்த்தாள். அவர், "பாத்தும்மா, தல புண்ணாயிடும்" என்று சொல்லிக் கொண்டார். உலகம்மை தலையைப் பிடித்தபடி, அவருக்குத் தன் தலை இன்னொரு மூட்டைப் பூச்சி போல் தெரிந்திருக்க வேண்டும்.

புறப்படப்போன உலகம்மை, அய்யா அவளை அர்த்தத்துடன் பார்ப் பதைக் கவனித்துலிட்டு, "என்னய்யா விஷயம்" என்றாள்..

"போறவள மறிக்கப்படாது, போயிட்டு வா."

"எதையோ சொல்ல வந்தியரு?"

"ஒண்ணுமில்ல, கலக்கமா இருக்கு."

"கலங்கலா? இனிமே ஒழுக்கு அதுக்குக் காசு கெடயாது. மெட்ராஸ்ல வார்னிலையோ எதையோ குடிச்சிட்டு நிறய முட்டாப்பயமக்க செத்துப் போயிட்டாங்களாம். இனிமே அந்தச் சமாச்சாரமே பேசப்படாது."

உலகம்மை வெளியேறினாள், 'விளக்குழிக்குள்' இருந்த கலையத்திற்குள் இரண்டு மூன்று ரூபாய் இருப்பது அய்யாவுக்குத் தெரியும் என்பது அவளுக்குத் தெரியும். அதே நேரத்தில் அய்யா, ஆயிரந்தான் கலக்கம் வந்தாலும், அவளிடம் கேளாமல் அதை எடுக்க மாட்டார் என்பதும், அவளுக்குத் தெரியும். சாயங்காலம் கலக்கலுக்குக் குடுக்கிற காசுக்கு ஒரு முட்டை வாங்கி அடைபண்ணி அய்யாவுக்குப் போடணும் என்று நினைத்துக்கொண்டு வயலைப் பார்த்து நடந்தாள்.

வயலில், இன்னும் மூன்று ‘தட்டுக்கள்’ நடாமல் கிடந்தன. அதோடு நாற்றங்கால் இருந்த ஒரு மரக்கால் விதப்பாட்டையும் இன்றைக்கு நடவேண்டும்.

கண்மாய்க்கு மேற்கே, குளத்துக்குள் குதித்துக்கொண்டிருந்த பெரிய பையன்களை ‘காப்பி’யடிப்பது மாதிரி, கிழக்கே முட்டளவு ஓடிக்கொண்டிருந்த நீரிலே விளையாடிய சின்னப் பையன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே அவள் நடந்தாள். அவளுக்கும் இப்டி ஒரு தம்பி இருந்தா எப்டி இருக்கும். அய்யாவுக்கும் காவலா இருக்கும்.

மடைவாய்க்குள் வலையை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவரிடம், “மாமா, நமக்கும் கொஞ்சம் மீன் குடுக்கக்கூடாதா? இன்னும் ஆறு மாசத்துக்கு ஒம்ம வீட்டில மீன் வாசனதான் இருக்கும். அப்பறம் கருவாட்டு வாசன” என்று கிண்டல் செய்துகொண்டே அவள் வயலுக்குப் போனபோது பத்துப் பன்னிரண்டு பெண்கள் நட்டுக் கொண்டிருந்தார்கள்.

“என்னழா இன்னிக்கு ஒனக்கு வந்தது? ஏன் சீக்ரமா வரல” என்று எல்லோருக்கும் பிரதிநிதிபோல் பேசிய ஒரு கிழவியின் கேள்விக்கு. “என்ன பாட்டி, கண்ணு வீக்கமா இருக்கு” என்று பதிலளித்துக் கொண்டே, அவள் வயலுக்குள் நுழைந்து, ஒரு மொட்டைப் பாத்தியில் அடுக்கப்பட்டிருந்த நாற்றுக் கட்டுகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு குனிந்தாள். “ஒலகு இந்தப் பக்கமா வா” என்று சில பெண்கள் தத்தம் பக்கம் அவளை இழுக்கும் முயற்சியை வார்த்தையாக்கினார்கள். ஏதோ ஒரு பக்கமாய் நின்று குனிந்து அவள் நட்டுக்கொண்டிருந்தாள்.

ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்.

“ஏய் உலகம்மா. ஒன்னத்தான் ஒன்னத்தான்” என்று கத்திக் கொண்டே வந்த வெள்ளைச்சாமி, குத்துக்காலில் சாய்ந்து கொண்டிருந்தான். அவன், எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. கரை வழியாய் வர்றவன் மாதிரியும் இல்லை. பம்ப் செட்டுக்குள் படுத்துக் கொண்டிருந்தவன் மாதிரியும் தெரியவில்லை. திடீர் இட்லி, திடீர் காபி மாதிரி திடுதிப்பென்று வந்து நின்றான்.

"என்ன பூ. உலவு, ஒனக்கு லக்கி அடிச்சி. அன்னிக்கி என்னடான்னா மாரிமுத்து மச்சான் கூப்புட்டாரு. இன்னிக்கு பிராந்தன் கூப்பிடுறான். ஒன்பாடு தேவல. குறுக்க நிமுத்த முடியாம கஷ்டப்படாண்டாம்" என்றாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.

"பிராந்தன அங்கயே போயி பாருக்கா. இங்க வந்தாமுன்னா வேலயில இல்லாத குறல்லாம் சொல்லுவான்” என்றாள் இளம்பெண் ஒருத்தி. அவள் கல்யாணமாகி, ஒரு, பிள்ளைக்குத் தாயானவள். கல்யாணமாகாத உலகம்மையை 'அக்கா' என்றழைத்து, தனக்கு இன்னும் இளமை இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்பவள்.

"ஒன்பாடு லக்கிதான். கிளம்பு ஒலவு. இந்த பிராந்துப்பய இங்க கத்தறது மெட்ராஸுக்குக் கேக்கும் போலிருக்கு. மாரிமுத்து கல்யாண வீட்ல இவன ஆடச்சொன்னா நல்லா ஆடுவான். செலவும் மிச்சம். என்ன ஒலவு, எதுக்குக் கூப்பிடுறான்?"

உலகம்மை, நாற்றுக்கட்டுத் தீரட்டும் என்று நினைத்தவள் போல், அவன் கூக்குரலைப் பொருட்படுத்தாமல் நட்டுக் கொண்டிருந்தாள். கட்டில் மிச்சத்தை மற்றவர்களிடம் கொடுக்க அவள் இஷ்டப்படவில்லை. "மாரிமுத்து மாமா வீட்ல இன்னிக்கு சொக்காரங்க ஆக்கிப் போடுறாவுளாம். அண்டா குண்டா கழுவ கூட்டிக்கிட்டு வரச் சொல்லியிருப்பார்" என்று உரக்கச் சொல்லிக் கொண்டே, வயல் நீரில் நாற்றுமீது படாமல், கையைக் கழுவிக் கொண்டிருந்தாள்.

வெள்ளைச்சாமியால், இப்போது குத்துக்காலில் இருந்து கத்த முடியவில்லை. தொண்டை வலித்திருக்க வேண்டும். வயலுக்கே வந்தான்.

"ஏய் உலகம்மா, நான் சொல்றது காதுல விழல?"

"இரேன், அப்பாவு. என்ன மாடுன்னு நினைச்சியா மனுஷின்னு நினைச்சியா?"

"நீ மாடும் இல்ல. மனுஷியும் இல்ல. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யுற திருட்டுத் தேவடியா. அடுத்துக்கெடுக்கற, பனையேறிச் செறுக்கிமவா. வயலுக்குள்ள ஏமுழா போன? ஒப்பன் வயலாளா? இல்லன்னா ஒன் வைப்பாளன் வயலாளா? எத்தனாவது சட்டத்துலழா வயலுக்குள்ள வரலாம்? வாரியா, இல்ல..."

உலகம்மை திகைத்துத் திக்குமுக்காடிப் போனாள். அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை. தலை விண்ணென்று தெரித்தது. நெஞ்சு அடித்துக்கொள்ளும் சத்தம் அவளுக்கு நன்றாகக் கேட்டது. அவன், வேறு யாரையோ பேசுவது மாதிரியும் அவளுக்குத் தோன்றியது. இந்த மாதிரி யாருமே, அவளைப் பேசியதில்லை. கிராமத்து வாலிபப் பெண்கள் ‘கெட்ட’ வார்த்தைகள் பேசுவதை, வெறுப்பவள் அவள். ‘நம்ம உலகுதான் நூத்துல ஒருத்தி. அவா வாயில மறந்துகூட ஒரு கெட்ட வார்த்த வராது’ என்று பல ‘கெட்ட வார்த்தை’ பெண்களாலேயே புகழப்பட்டவள். வெள்ளைச்சாமி பேசியதைக் கேட்டும் சாகாமல் இருக்கிறோமே என்று வருத்தப்பட்டாள். அப்படிப் பேசிய அவனை, சாகடிக்காமலும் இருக்கிறோமே என்று கோபப்பட்டாள். ஒன்ன ராத்திரில அவமானப்படுத்திட்டா என்று அவள் தந்தை சொன்ன நாளிலிருந்து, இடுப்பில் யாருக்கும் தெரியாமல் ஒரு சின்னக் கத்தியைச் செருகி வைத்திருக்கும் அவள், இப்போது அந்தக் கத்தியை எடுத்து அவன் தொண்டைக் குழியைக் குத்தி நெஞ்செலும்பைத் ‘தென்னி’ எடுக்கலாமா என்றுகூட நினைத்தாள். சில சினிமாப் படங்களைப் பார்த்திருக்கும் உலகம்மை, இத்தனை கலக்கத்திலும், லோகநாதன் அங்கே திடுமென்று வந்து, வெள்ளைச்சாமியை உதைப்பது போலவும், அவன் கழுத்தைப் பிடித்துத் திருகுவது போலவும், தேவடியா என்று சொன்ன அவன் உதடுகளைப் பனைமரத்தில் வைத்துத் தேய்ப்பது போலவும், அது முடிந்ததும் அழுதுகொண்டிருக்கும் அவளை அணைத்துக் கொள்வது போலவும் கற்பனை செய்து பார்த்தாள். பிறகு ‘இப்டி புத்தி கெட்டதனமா சரோசாவுக்குத் துரோகமா நெனக்கிற என்னை அவன் என்ன சொன்னாலும் தகும்’ என்று நினைத்துக் கொண்டாள். இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் பேசினாள்:

“ஒனக்கு நான் என்ன பண்ணுனேன் வெள்ளையா? ஏன் இப்டி அவமானமா பேசுற?”

“எனக்குப் பண்ணினா என்ன? எங்க பெரிய்யாவுக்குப் பண்ணினா என்ன? நாக்குமேல பல்லுப்போட்டுப் பேச ஒனக்கு வெக்கமா இல்லழா? வயல விட்டுவா நாய.”

இதர பெண்களும், ஸ்தம்பித்துப்போய், நாற்றுக்கட்டுகளை நீருக்குள் போட்டுவிட்டு எதுவும் புரியாதவர்களாய் நின்றார்கள். குளக்கரையில் மாரிமுத்து நாடார் மனைவி பேச்சி வந்து கொண்டிருந்தாள். வெள்ளைச்சாமி, பெரியம்மைக்குக் கேட்கவேண்டும் என்பதுபோல, தன்னைக் கதாநாயகனாய் நினைத்துக்கொண்டு, பேச்சியின் திருப்தியைச் சம்பாதிக்கும் முறையிலும் மேலும் மேலும் கெட்டகெட்ட வார்த்தைகளால் பேசிக்கொண்டே போனான். உலகம்மையால் பொறுக்க முடியவில்லை.

"வெள்ளயா, மரியாதி குடுத்து மரியாதி வாங்கு. முப்பத்திரண்டு பல்லும் உடஞ்சி போவும். ஜாக்கிரத."

"யாருக்கு உடையுதுன்னு பார்த்துடலாமுழா."

"என்ன எதுக்குல அவமானமா பேசுற?"

"நீ எதுக்கிழா சட்டாம்பட்டிக்குப் போன? எந்தக் கள்ளப்புருஷனப் பாக்கப் போனழா? இந்த ஊர்ல ஆம்புள கிடைக்கலன்னா அந்த ஊருக்குப் போன? எச்சிக்கல தேவடியா. எங்க பெரிய்யா வயலுல்ல நாய்மாதிரி வேல பாக்கிற 'வாங்கிக் குடிச்ச' கூலிவேல பாக்கிற செறுக்கிக்கு. இவ்வளவு திமுரு இருக்குமுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? வயல்ல ஏமுழா நிக்கிற? பனையேறிப்பய மொவள."

நாற்றுக்கற்றைகளைப் போட்டுவிட்டு, வாய் பிளந்தவாறு நின்ற 'பொம்பிளைகளால்' இதற்குமேல் பொறுக்க முடியவில்லை. 'தனக்கு வந்தாத் தெரியும் தலைவலியும் நோயும்' என்பது மாதிரி: "வாங்கிக் குடிச்சி", "கூலிவேல பாக்குற செறுக்கி" என்பன போன்ற வார்த்தைகள் தங்களையும் தாக்குவதை உணர்ந்திருந்தார்கள். சிறிதுநேரம் அந்த பிராந்துப் பூனைக்கு எப்படி மணிகட்டுவது என்று யோசிப்பதுபோல், கைகளை முஷ்டிகளாக்கி நெரித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில், ஒரு கிழவி போர்ப்பரணி பாடினாள்:

"ஏய் வெள்ளயா, அறிவிருக்காலா அவள ஏழுல அப்பிடித் திட்டுற? நாய்க்குப் பிறந்த பயல."

"ஒனக்கென்னழா சும்மா கெடயேன். கிழட்டுச் செறுக்கி."

இன்னொருத்தி பிடித்துக் கொண்டாள்; அவள் கிழவியின் அண்ண ன் மகள்.

"யாரப் பாத்துல செறுக்கின்ன? யாருல வாங்கித் தின்னவங்க? இருந்த சொத்தெல்லாம் சைக்கிள் ஓட்டப், பழகுறதாயும் 'பூதுக்கடையிலயும்' தொலச்சிட்டு நாயிலயும் கேடுகெட்ட நாயா, பெரியப்பன் ஊத்துற எச்சிக் கஞ்சிக்கு அலையுற பயலால செறுக்கின்னு கேக்குற? சோம்பேறிப்பய மவன."

"அந்தத் தேவடியாள பேசினா ஒனக்கென்னழா?" இன்னொருத்தி இடைமறித்தாள்:

“யார்ல தேவடியா? இந்த இருபது வயசுலயும் ஒருத்தர் ஒரு வார்த்த பேசாதபடி நடக்கறவா அவா. இவள் தேவடியாளாம். தேவடியாங்றிய, ஒன் தங்கச்சி கதை தெரியுமால அவள் மேலத்தெரு சுந்தரம்பய, ஒன் வீட்டுக்கு வந்து ஒன்னையே சிகரெட்டுவாங்கப்போகச்சொல்லிட்டு ஒன் தங்கச்சிய கட்டிப்பிடிச்சான். அவ தேவடியாளா? இவா தேவடியாளா? எச்சி சிகரெட்டுக்கு ஆசப்பட்டு சொந்த தங்கச்சிய கூட்டிக் குடுக்கிற பயலுக்கு வாய் வேறயால? இவ்வளவு பேசுறியே, ஒன் அக்கா எப்படின்னு ஒனக்குத் தெரியுமால?”

“விட்டுத் தள்ளுக்கா.”

“சும்மா இரு அலமு. நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். பிராந்துப்பயமவன் முழுத்த பொம்புளப்புள்ளயப் பாத்து வாய்க்கு வந்தபடி பேசுறான். எல, மாரியம்மா சத்தியமா சொல்லுறேன். உலகம்மையோட பாவம் ஒன்ன விடாதுல. நீ புழுத்துத்தான் சாகப்போறல, ஒம்மைய மாதிரி.”

“ஏழா, எம்மையப் பேகனின்னா ஒரே வெட்டா வெட்டி கிணத்துக்குள்ள ஆத்துப்புவேன்.”

இப்போது, மற்றொருத்தி சாடினாள்:

“ஏமுழா, கிறுக்குப்பய மவன்கிட்ட பேச்ச வளக்கிறிய மம்பெட்டிக் கனயவச்சி சாத்தலாம் வாங்க. ஏல பிராந்தா! நீ ஆம்புளன்னா அங்கேயே நில்லுல. ஒன்மேல சாணிய கரச்சி ஊத்தாட்டி சொல்லு.”

சில கிழவிகள் தடுத்தும் கேளாமல், பெண்கள், அவனை நோக்கி முன்னேறினார்கள். ஓடுவதா அல்லது சாடுவதா என்று தெரியாமல் வெள்ளைச்சாமி திண்டாடினான். “ஏல வெள்ளய்யா, உலகம்மா மோசம் பண்ணிட்டா. பனையேறிப்பய மவள வாய்க்கு வந்தபடி பேசி விரட்டுல” என்று பெரியய்யா சொன்னதை அமல் செய்ய வந்ததால் ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்தவன் போல், அவன் தவித்துக் கொண்டிருந்தபோது, விஷயத்தின் முதல் அத்தியாயத்தை அவன் ‘லெவலில்’ முடிக்க நினைத்த மாரிமுத்து நாடார், பிறகு ஒருவேளை விபரீதமாகிவிடும் என்று நினைத்து மனைவி பேச்சியை அனுப்பி வைத்தார்.

அவள் வருவதற்கு ஒரு நிமிடம் தாமதம் ஏற்பட்டிருந்தால், வெள்ளைச்சாமி பொம்பிளைகளிடம் அடிபட்டிருப்பான். “முறுத்த ஆம்புளைய அடிக்கப் போறியளா? பிராந்தங்கறதுக்காக இளக்காரமா" என்று சொல்லிக் கொண்டு வந்த பேச்சியைப் பார்த்ததும், முன்னேறிக் கொண்டிருந்த பெண் கூட்டம் பின்வாங்காமலும் முன்வாங்காமலும் அப்படியே நின்றது.

பேச்சி, இன்றுதான் அவர்களை நேருக்குநேராகப் பார்த்துப் பேசுகிறாள். கூலிக்கு வேலை பார்க்கும் அத்தனை பேரும், அவர்கள் எந்த நாட்டில் எந்தக் கண்டத்தில் இருந்தாலும், அவர்கள் வேலைக்காரிகளே - அதுவும் தனது வேலைக்காரிகளே - என்று நினைப்பவள் அவள். "வேலக்காரப்பய ஒம்ம முன்னால பீடி குடிச்சான். பேசாம இருக்கியரே. வேலக்கார நாயிங்க கிட்ட சரிக்குச் சமமா பேசுனா இப்படித்தான். நாயக் கொஞ்கனா மூஞ்ச நக்கும்” என்று புருஷனைக் கண்டிப்பாள். இந்த ‘சரிக்குச்சம' அதாவது சரி நிகர் சமத்துவத்தை தலைகீழாகப் பின்பற்றுவதில், தலைகீழாக நிற்கவும் தயங்காதவள். ஒரு சமயம் "ஏக்கா ஒங்க சரோசாவுக்கு எப்ப கல்யாணம்?" என்று எதேச்சையாகக் கேட்ட ஒரு விவசாயக் கூலிப்பெண்னை , "ஆமா ஒங்கிட்ட யோசன கேட்டுட்டுத்தான் முடிக்கணும்" என்று முரட்டுத்தனமாகக் கேட்டவள். அவள் 'நாட்டாமை நல்லச்சாமி நாடார் மவள்'. அவள் பிறந்த ஊரில், அவள் அய்யா நாட்டாண்மைக்காரர். அதுவும். இப்போது படித்த இளைஞர்களால் பறி போய்விட்டது. அந்தக் காலத்தில், ஊரில் அம்மங்கொடையோ, ஆத்தாக் கொடையோ நடக்கும்போது, குடித்தனக்காரங்க அவருக்கு கோயிலில் வெட்டிய ஆட்டுக்கிடாவில் தொடைக் கறியைக் கொடுத்துவிட வேண்டுமாம். குளத்தில் மீன் அழிந்தால், முதல் விரால் மீனும் அவருக்குத்தான். கல்யாணம் போன்ற நல்லது நடந்தால், அவரிடம் நாலுபடி அரிசியும், இரண்டு தேங்காயும் கொடுக்க வேண்டுமாம். கருமாந்திரம் மாதிரி கெட்டது நடந்தால். ஒரு துண்டுக் கருவாடும், பத்துப் பலக் கருப்புக்கட்டியும் கொடுக்க வேண்டுமாம். 'வாட்ச்மேன்' மாதிரி, சோவில் சாவியும் அவரிடம்தானாம்.

இப்படிப்பட்ட 'நாட்டாமைச்' சூழலில் வளர்ந்த பேச்சியமை ஐம்பதுக்குமேல் வயதாகியும், இன்னும் 'கர்நாடகமாகவே' இருந்தாள். இதர பணக்காரப் பெண்கள் ஓரளவு தங்களை மாற்றிக் கொண்டதைக்கூட அவள் வெறுத்து, "கெட்டாலும் மேன்மக்க மேன் மக்க தான்" என்று தமிழ்ச் செய்யுளுக்கு அனர்த்தம் செய்து. கெட்டு நொறுங்கிப்போன அய்யா நிலையை நியாயப்படுத்துபவள். சரோஜா கிழவியாகிப் போனதுக்கு இவளே காரணம். அப்படிப்பட்டவள். வேலைக்காரிகளின் எதிர்ப்பைக் கண்டதும், கொஞ்சம் திடுக்கிட்டாள். அவளைப் பார்த்ததும், அவர்கள், வயலுக்குள் விழுந்தடித்துப் போவார்கள் என்று நினைத்து, அப்படி எதுவும் நடக்காததால், அதிர்ந்து போனாள். பெருங்காய வாசனையை கைவிடாமல் அதட்டினாள்.

“அவன அடிக்கப் போறியள, அடிக்க முடியுமா உங்களால?”

ஆவேசமாகப் பதில் வந்தது:

“அவனயும் அடிப்போம். அத தடுக்கிறவளையும் அடிப்போம். ஏழ எளியவங்கன்னா கேவலமா?”

“உலகம்ம எங்களுக்குத் துரோகம் பண்ணிட்டா. அவள வயலுக்குள்ள விடுறதும் விடாததும் எங்க இஷ்டம். நீங்க யாரு அப்பனை?”

“ஒருத்தி பாதி நேரம் வேல பாத்தப்பிறவு அவள மாத்த அதிகாரம் இல்ல. அதுவும் தேவடியான்னு சொல்லுறதுக்கு திறந்து கிடக்கல.”

“அவா என் வயலுல மிதிக்க முடியாது.”

“அப்படின்னா நாங்களும் வேல பாக்கல. அவளுக்கு இல்லாத வயலு எங்களுக்கும் வேண்டாம். வாங்கழா போவலாம். இந்த வயலுல யார் வந்து நடுறான்னு பாத்துப்புடலாம். ஓஹோ.”

முப்பது நாழிகையில், இருபத்தெட்டை வீட்டுக்குள்ளே செலவழித்த பேச்சியம்மைக்கு உண்மை புரியத் துவங்கியது. ‘காலம் மாறிப் போச்சி. அதுவும் கெட்டதுக்கு மாறிப் போச்சி. அட்டய பிடிச்சிக் கட்டுலுல கிடத்துற மாதிரி. நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சதுமாதிரி தெருவில சுத்துற வேலக்கார நாயுவளும் சட்டம் பேசுற காலம் வந்துட்டு. விட்டுப் பிடிச்சாதான் வாழலாம்.’

இப்போதுதான் பேச்சியம்மை, அந்தப் பெண்களை முதன் முறையாக மனுஷிகளாகப் பார்த்தாள். இப்போதுதான். அவளுக்கு அவர்களும், சேலை ஏன் கட்டுகிறார்கள் என்பதற்கு முழு அர்த்தம் புரிந்தது. இதனால் கொஞ்சம் பயந்து கூடப் போனாள். அதே நேரத்தில், எப்படியாவது உலகம்மையை ‘டிஸ்மிஸ்’ செய்து விடுவதில் அவளுக்கு மட்டும் வயலை லாக்கவுட் செய்வதில் குறியாக இருந்தாள். அதற்காகச் சுருதியை மாற்றினாள்.“இத்தனை பேசுறியள! அவன் எதுக்காவ அவள அப்படிப் பேசியிருப்பான்னு நெனச்சிப் பாத்திகளா?”

"ஆயிரம் இருக்கும். அதுக்காவ தேவுடியாங்றதா? இவன் அம்மா மட்டும் யோக்கியமா?"

"சும்மா ஒங்களுக்குத்தான் பேசத் தெரியுங்றதுமாதிரி கத்தாதீங்க. ஆயிரம் பொய்யச் சொல்லி ஒரு கல்யாணத்த நடத்துன்னு சொல்லுவாக. இந்த உலகம்ம என்ன பண்ணினா தெரியுமா? சட்டாம்பட்டில நிச்சயம் பண்ணின மாப்பிள்ளகிட்ட போயி எதையோ பேசி கலைச்சிட்டா. என் பொண்ணு வயசுல இருக்கிறவளுக, மூணு பிள்ள, நாலு பிள்ள பெத்துட்டா. ஆனால், நான் பெத்த பொண்ணு முப்பது வயசுலயும் கன்னி கழியாம இருக்கா. இப்ப கூடி வந்ததையும் இந்தப் பாதகி கெடுத்திட்டா! சரின்னு சொல்லிட்டுப் போனவங்க, இன்னக்கிப் பொண்ணு வேண்டாமுன்னு சொல்லியனுப்பிட்டாங்க."

பேச்சியம்மைக்கு 'வேலைக்காரிகள்' மத்தியில் அழ விருப்பம் இல்லை. இருந்தாலும் அழுதாள். அந்த அழுகை, பெண்கள் மத்தியில் ஒருவித 'இரக்கத்தைக்கூட' ஏற்படுத்தியது. பேச்சியம்மை, தன் மகள் கல்யாணம் நின்று போனதுக்காக அழுவதாகத்தான் அந்தப் பெண்கள் நினைத்தார்கள். அது உண்மையுங்கூட. அதேசமயம், 'கூலிவேல பாக்குற பொம்பிளைங்கிட்ட சரிக்குச் சமமா பேசும்படியாய் ஆண்டவன் வச்சிட்டாரே' என்று அதற்கும் சேர்த்து அழுதாள். 'என்ன! உலகம்மயா கலச்சா?' என்று கசாமுசா என்று பேசிக்கொண்டே பெண்கள் அவளை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அதே நேரத்தில் உலகம்மை இல்லாமல் வயலுக்குள் போகவும் அவர்கள் விரும்பாதது மாதிரி தெரிந்தது. ஒருத்தி உலகம்மையிடமே, கேட்டாள்:

"நீ ஏம்மாளு கிடக்க முடியாம சட்டாம்பட்டிக்குப் போன?"

"போனாளோ போவலியோ? ஆயிரம் இருக்கும். அதுக்காக அவள வெளியேத்துறது நம்மள வெளியேத்துறது மாதிரி."

"இவளும் இப்படிப் போயிருக்கக்கூடாது. அதுக்காவ அவனும் அப்படிப் பேசியிருக்கக்கூடாது."

"இவா போயிருக்க மாட்டா. யாரோ கோள் சொல்லிட்டாங்க."

உலகம்மை, சக 'வேலைக்காரிகள்' கொஞ்சம் வீக்காகி வருவரைப் புரிந்து கொண்டாள். அதேசமயம் அவர்களிடம் விளக்கமாகச் செ ப அவள் விரும்பவில்லை சொல்லியும் அவள் விரும்பவில்லை. சொன்னாலும், அவர்களுக்குப் புரியாது. புரிந்தாலும், அவள் செய்ததை அங்கீகரிக்க மாட்டார்கள். ஏன் அவளே. இப்போது தான் செய்தது சரிதானா என்பதுபோல் நேசிக்கிறாள். லோகநாதன் மீது அவளுக்குக் கோபம் வந்தது. ‘படிச்சவன’ நம்பக்கூடாது என்பது எவ்வளவு உண்மை! ஈரத்துணியைப் போட்டு கழுத்தறுத்துட்டான், பாவி. சரோசாக்கா இப்போ எப்டி இருக்காளோ?”

பெண்கள் எந்த முடிவுக்கும் வர முடியாமல் தவித்தபோது. உலகம்மை ஒரு முடிவுக்கு வந்தாள். பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் பேசினாள்.

“நான் சட்டாம்பட்டிக்குப் போனது வாஸ்தவந்தான். அதுக்காவ வருத்தப்படவும் இல்ல, சந்தோஷப்படவும் இல்ல. ஏதோ என் போதாத காலம். இல்ளவும் நடந்த பிறவு நான் இவங்க வயலுல நுழையுறது தப்புத்தான். எனக்காக நீங்க வராண்டாம். நான் வாரேன்.”

உலகம்மை விருட்டென்று நடந்தாள். அதுவரை அழாமல், கோபத்தால் கன்றிச் சிவந்த அவள் விழிகள் நீரைக் கொட்டின. அவள், “சரோசாக்கா நம்மளப் பத்தி என்ன நினைப்பாள்!” என்றுதான் வருத்தப்பட்டாளே தவிர, வெள்ளைச்சாமியைப்பற்றி அவள் அதிகமாக அலட்டிக்கவில்லை. அதற்காக, அவன் வார்த்தைகள் மறந்து போகக் கூடியவை அல்ல. அவன் அப்படித் திட்டியபோது, இதர பெண்கள் தாயைப் போல பரிந்து பேசியது. அவள் இதுவரை அனுபவித்திராத புதிய பாசம், அவளையறியாமலே கண்ணீர் விட்டாள். ஐந்து வயதிலே அம்மாவை இழந்து தாய்ப்பாசத்தின் கனபரிமாணத்தை உணராத அவள், அந்தப் பெண்கள் அவளுக்காகப் பரிந்து பேசியபோது. அவள் அம்மாவே, பத்துக் கூறுகளாகி, ஒவ்வொன்றும் ஒரு தாயாக அங்கே நட்டுக் கொண்டிருந்ததுபோல், அவளுக்குத் தோன்றியது. அவளுக்காக அவர்கள் வேலையை விட்டுவிட்டு வரத் தயாராக இருந்ததும் அவளுக்குக் கொஞ்சம் இதமாகவே இருந்தது.

உலகம்மை, ஊருக்கருகே வந்து விட்டாள். என்ன நடந்தது என்பது தெரியாதவள் போலவும், என்ன நடக்கும் என்பது புரியாதவளைப் போலவும் தலையைக் கீழே தொங்கப்போட்டுக் கொண்டே நடந்தாள் “லோகு சொல்லியிருப்பாரோ? சேசே, சொல்லியிருக்க மாட்டாரு. சரோசாக்காவ கட்ட மாட்டேன்னுட்டாரா? அது அவரு இஷ்டம். தங்க ஊசின்னு கண்ணுல இடிக்க முடியுமா? பாவம் சரோசாக்கா, என்னப் பத்தி என்ன நினைப்பா? நான் செஞ்சது சரிதானா? அவங்கமட்டும் மாப்பிள்ளய ஏமாத்தப் பார்க்கலாமா? அவரும் பாவந்தான். அவளும் பாவந்தான். ஆனால் நான்தான் பாவி, பொறக்கக்கூடாத பாவி..”

தலைகுனிந்து நடந்தவள் 'கனைப்புச்' சத்தங்கேட்டுத் தலை நிமிர்ந்தாள். பலவேச நாடார் அவளைப் பார்த்துச் சிரித்தார்.

"உலகம்மா உன்னோட உதலிய மறக்க முடியாது. நீ உண்மையிலேயே புலிக்குப் பொறந்தவாதான். நான் உன்ன என்னமோன்னு நெனச்சேன். அவன் மாரிமுத்துக்கு பயப்படாண்டாம். சின்னய்யா இருக்கேன். தைரியமா இரு. வீட்ட காலி பண்ணாண்டாம். அவன் வயலு போனா, என் வயலு இருக்கு. சட்டாம்பட்டிக்கு எப்ப போன? மாப்பிள்ளக் கிட்டயே சொல்லிட்டியா?"

உலகம்மை அவரை வெறுப்போடு பார்த்தாள்.

"நான் ஒண்ணும் ஓமக்குப் பயந்து போவல, எனக்கு அநியாயமா பட்டுது. அதனாலே போனேன். சொன்னேன். அவ்வளவுதான்."

உலகம்மை அவரை ஏறிட்டுப் பார்க்காமல் நடந்தாள். ‘மானங்கெட்டவன், மானத்த வாங்குறதுமாதிரி 'தொழில் பண்ணலாமுன்னு சொல்லிட்டு, இப்ப அதே வாயால சின்னையாங்றான். மானங்கெட்டதனமா பேசுறதும், அப்புறம் மானங்கெட்டதனமா 'அலத்துறதும்', தூ-'

'இந்த ஊர்ல எப்டித்தான் காலந்தள்ளப் போறோமோ' என்று தன்னை அறியாமல் மெதுவாகச் சொல்லிக் கொண்டாள். என்னவோ ஒன்று பயங்கரமாக நடக்கப் போகிறது என்ற அச்சத்தை விரட்டியடிப்பவள் போலவும், அதிலிருந்து ஓட விரும்புபவள் போலவும், அவள் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போனாள்.