ஒரு கோட்டுக்கு வெளியே/‘பாவி’ இறந்திட…

20. ‘பாவி’ இறந்திட...

யக்காட்டில், நீலப்பச்சை நிறத்தில் நின்ற நெற்பயிர்கள். இப்போது பஞ்சலோக நிறத்தில், லேசாகப் பழுத்தும், சிவந்தும் போயிருந்த கதிர் வயிற்றில், நெல் கருக்களைச் சுமந்துகொண்டு, பிரசவ வேதனையில் துடிப்பவைபோல ஆடின. கர்ப்பிணிப் பெண்களுக்குக் கண்டதைத்தின்ன ஆசை என்பதுபோல், ஆணென்று இல்லாமல் அத்தனையும் பெண்ணென்ற விதத்தில், சூல்கொண்ட நெற்பயிர்களுக்கும், இதரபெண்களைப் போல, உலகம்மையும், இடதுகையில் வைத்திருந்த ஒலைப்பெட்டியிலிருந்து, உரத்தை எடுத்துத் தூவிக் கொண்டிருந்தாள்.

அவளை ஜாடையாகப் பார்த்துக் கொண்டே ஒருத்தி, “நம்ம லோகு அடுத்தமாசம் வாரானாம். மெட்ராஸ்ல கல்யாணமாம்! பெரிய பணக்காரங்களாம். கார் இருக்காம். வீடு இருக்காம். பொண்ணும் படிச்சிருக்காம். முப்பதாயிரம் ருவாய் ரொக்கமாக் குடுக்காவளாம். சங்கர மாமாவுக்கு அடிக்கிது யோகம்” என்றாள்.

மற்றப் பெண்களும், உலகம்மையை ஜாடையாகப் பார்த்தார்கள். குட்டாம்பட்டி சங்கதிகள், இப்போது அவர்களுக்கு அத்துபடி. ‘தோட்டத்துல மோகினி மாதிரி’ என்று முன்பு சொன்னவர்கள், உலகம்மையுடன் பழகிய பிறகு, அவள் அப்படிப்பட்டவள் இல்லை என்பதை உணர்ந்ததுடன், அவள் அப்படிச் செய்ததிலும் ஒரு தர்ம நியாயம் இருப்பதை உணர்ந்து, அவளுக்கு ஒருவகை தனிப்பட்ட மரியாதையையும் கொடுத்தார்கள். உலகம்மை பேசுவாளா என்று அவள் வாயையே பார்த்தார்கள்.

உலகம்மை பேசவில்லை.

உடம்பில் ஏதோ ஒரு இடத்தில் வலிப்பதுமாதிரி தெரிந்தது. சின்ன வலியா, பெரிய வலியா என்று தெரியவில்லை. அவள். அந்த நெற்பயிர்களையே வெறித்துப் பார்த்தாள். முன்பு தொட்டால் துவண்டு விடுவதுபோல் இருந்த அதே பயிர்கள், இப்போது நிமிர்ந்து உறுதியோடு நிற்கின்றன. முன்பு குனிந்துகொண்டு பயிர்களுக்குக் களையெடுத்தவள். இப்போது நிமிர்ந்து நின்று உரம் போடுகிறாள். உரம் போடும் அவள் மனதும், ‘உரமாகியிருந்தது’, இலையும், செடியும், மண்ணும் மரமும், பூமிக்குள் ஒன்றோடொன்று மோதி அவை அற்றுப்போயும், இற்றுப்போயும், உரமாகி விடுவது போல், அவள் உள்ளத்து உணர்வுகள் ‘இனியொரு எண்ணம் விழ இடமில்லை’என்பதைப்போல், உள்ளத்தை நெருக்கமாக அடைத்திருந்த எண்ணங்கள். ஒன்றோடொன்று மோதி, உருக்குலைந்து, அற்றும், இற்றும். இறுதியில், அவள் உள்ளத்திற்கு உரமாகிவிட்டன. ஏமாற்றங்கள் ஏற்பட்டு ஏற்பட்டு, இப்போது ஏமாற்றம் இல்லாமல் வாழவே முடியாது என்கிற மாதிரி எதிர்மறையில் பழகிப்போன அவள், வேலையில் மும்முரமாக இருந்தாள். லோகுவை மனதில் இருந்து உதறுபவள்போல், உரத்தைக் கையிலிருந்து உதறிக்கொண்டே துவினாள்.

வேலை முடிந்ததும், வீட்டுக்குப் புறப்பட்டாள். சக பெண்கள் மத்தியில் தெரியாமல் இருந்த ஒருவித சோகம், லேசாக எட்டிப் பார்த்தது.

‘லோகுவுக்குக் கல்யாணமாமே! நல்லா நடக்கட்டும் ஒரே ஒரு தடவ அவரப் பாத்துட்டாப் போதும்! நிச்சயம் அவரப் பாக்கலாம். கல்யாண நோட்டீஸ் வீட்டுக்குக் கொண்டு வரத்தான் செய்வாரு அப்போ பாக்கலாம்!’

எண்ணத்தை விரட்டமுடியாத உலகம்மை, நடையை எட்டிப்போட்டாள். திடீரென்று அய்யா ஞாபகம் வந்தது. தோட்டக்காரனின் இறுதி எச்சரிக்கை வந்தது. பட்டச் சாராய விவகாரம் தோன்றியது. ‘பட்டகால்லயே படும்’ என்கிற எண்ணமும் வந்தது.

அவள் உள்ளத்திற்கே ஒரு தர்மசங்கடம். எந்த எண்ணத்திற்கு முதலிடம் கொடுப்பது? பட்டைக்கா? லோகுவுக்கா? வேலிக்கா? வம்பு பேசும் காலிகளுக்கா?

எந்த எண்ணத்திற்கும் முதலிடம் கொடுக்க முடியாமல் தவித்த அவள் உள்ளம், இறுதியில், ‘எதுக்குமே இடங்கொடுக்காண்டாம்’ என்று நினைத்து மரத்துப்போனது.

ஊர்முனைக்குச் சற்றுத் தள்ளி. மலேயாவில் பிரமுகராகவும், பிறந்த பூமியில் மாடு மேய்ப்பவராகவும் இருக்கும் ‘மலேயாக்காரர்’ மாடுகள் இல்லாமல் தன்னந்தனியாகப் பூவரசு மரம் ஒன்றில் சாய்ந்துகொண்டு நின்றார். உலகம்மையைப் பார்த்ததும் அவர் அவளிடம் ஓடிவந்தார். அவர் மூலமாகத்தான் மாரிமுத்து நாடாருக்குக் கொடுக்க வேண்டிய கடனை, உலகம்மை கொஞ்சங் கொஞ்சமாகக் கொடுத்து வந்தாள். கடன் அடைபட்டு விட்டது. மலேயாக்காரர் மூச்சை இழுத்துக்கொண்டே பேசினார்.

“ஒனக்காவத்தான் காத்திருக்கேன். ஒன் வீட்டு வாசல. அதுதான் தோட்டச்சுவர ஐவராஜா அடைக்கப்போயிருக்கான்! உடனே ஒங்க அய்யா ஊர்க்காரனுக கால்ல கையில விழாக்குறையா அழுது புலம்பினாரு! மாரிமுத்தயும் பலவேசத்தயும் பாத்துக்கூடக் கெஞ்சுனாரு. ஆனால் ஊர்க்காரன்ல ஒருத்தன்கூட ஆம்புளயா நடந்துக்கல! ஒரு பயகூட ஏன்னு கேக்கல! நீ அவங்க கால்ல விழணுமாம்! இதக் கேட்டதும் ஒய்யா வூட்டுக்குப் போயிட்டாரு! அவரு ஊர்க்காரங்களப் பாத்துக் கெஞ்சினத நினைச்சி இவ்ளவு நேரமும் அழுதேன். நான்கூட இங்க இருக்கப் போறதுல்ல! ரெட்டியார் பட்டியில மாடுமேய்க்கப் போவப்போறேன்! அங்கயாவது மனுஷங்க இருக்காங்களான்னு பாக்கப்போறேன்! ஒய்யாவ நினைச்சா, அவரு கெஞ்சினதப் பாத்தா இன்னும் ‘என் மனசு அடிச்சிக்கிறது என் மவா நடந்துபோற துசில அறுந்து போற தூசிக்குப் பெறுவியளாடா’ன்னு சொல்லிக்கிட்டே போனாரு!”

உலகம்மை, மலேயாக்காரர் சொன்னதை நம்பமுடியாதவள்போல, அங்கேயே ஸ்தம்பித்து நின்றாள். வேலி போடும் முயற்சியைவிட, அய்யா. ஊர்க்காரர்களிடம் சரணாகதி அடைந்ததை அவளால் பொறுக்க முடியவில்லை. அய்யாவுக்காகச் சிறிது வருத்தப்பட்டவள்போல் நின்றாள். பிறகு அவர்மீது சொல்லமுடியாத, தாங்க முடியாத கோபம் ஏற்பட்டது. எழுபது வயது வரைக்கும் வளையாத முதுகு வளைந்து விட்டதை நினைத்து கோபாவேசம் கொண்டாள். வளைந்ததா, அல்லது வளைக்கப்பட்டதா என்ற ஆராய்ச்சியில் இறங்காமல், ஊர்க்காரன் காலில் விழுந்த அய்யாமீது, அடங்காத சினத்தோடு, அவரை அடிக்கப் போகிறவள்போல் ஆத்திரத்தோடு நடந்தாள்.

வீட்டை நெருங்கியதும், தோட்டச்சுவரில் பாதி அடைபடாமல் இருப்பதைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. வீட்டுக்குள் போனவள், அய்யாவைப் பார்க்காதது மாதிரி பார்த்தாள். அவர் கட்டிலில் கிடந்தார். அவரை, எப்படி எல்லாமோ திட்ட வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டவளுக்கு இப்போது திட்டத் தோன்றவில்லை. ஆனால் கோபமும் அடங்கவில்லை. முகத்தைத் ‘தூக்கி’ வைத்துக்கொண்டு. சிம்னி விளக்கை ஏற்றினாள். அடுப்பை மூட்டி, ஒரு ஈயப் போணியை வைத்தாள். கொஞ்சம் கருப்பட்டியையும் எடுத்துப் போட்டாள். அய்யாவின் மொகத்தைப் பார்க்கவே அவளுக்கு இஷ்டமில்லை; அவர் பேசட்டும் என்று நினைத்தாள்.

அவர் பேசவில்லை.

மனங்கேளாத உலகம்மை, அடுப்பைப் பார்த்துக்கொண்டே, அய்யாவிடம் கேட்டாள்:

“எதுக்காவ ஊர்க்காரனுக காலு கையப் பிடிக்கனும் அடச்சா அடச்சிட்டுப் போறான்! செத்தாப் போயிடுவோம்? அப்படியே. செத்தாத்தான் என்ன? ஊர்க்காரன் கால்ல விழுவுறதவிட நாம சாவுறது எவ்ளவோ மேலு!”

மாயாண்டி பதில் பேசாமல் இருப்பதைப் பார்த்து, அவரால் துக்கத்தில் பேச முடியவில்லை என்று நினைத்து. அய்யாவைப் பார்த்தாள். அவர் ஆடாமல் கிடந்தார். “அய்யா அய்யா” என்று கூப்பிட்டாள். பிறகு அவரை நெருங்கி, நெற்றியில் கையை வைத்துக்கொண்டு, “ஒம்மத்தாய்யா” என்றாள். பிறகு திடுக்கிட்டு நிமிர்ந்தாள். தொட்டுப் பார்த்தாள்: அவர் உடம்பு. அவள் உள்ளம்போல், ‘ஜில்’லென்று இருந்தது.

எழுபது வயது மாயாண்டி, ஏறாத பனையெல்லாம் ஏறிய முதியவர். ‘பயினியில்’ கிடக்கும் ஈ எறும்புகளை எடுத்துப் போட்டுவிட்டு, வருவோர் போவோர்க்குப் பட்டை செய்து பயினி கொடுத்த அந்தப் பனையேறி, திறந்த வாயில் ஈ எறும்புகள் மொய்க்க, கைகளிரண்டும் வயிற்றில் இருக்க, உடம்பெல்லாம் விறைத்திருக்க, உதடுகள் லேசாகப் பிளந்து புன்னகை செய்து கொண்டிருக்க, ஒரு யோகி மாதிரி அடிவயிற்று நெருப்பை அடக்கி வைப்பதுபோல், வயிற்றின் மேல் கைகள் ஒன்றோடொன்று கோத்து நிற்க, செத்துக் கிடந்தார். மிரண்டு நிற்கும் கண்கள், மிரட்டுவதுபோல் காட்சியளிக்க, அவர், அந்த நார்க்கட்டிலில் மல்லாந்து கிடந்தார்.

உலகம்மை, அய்யாவையே பார்த்துக்கொண்டு நின்றாள். சிறிது நேரப் பிரமைக்குப் பிறகு “நான் திட்டுவேன்னு பயந்துபோயி செத்துட்டீரா? அய்யா, ஒம்ம மவள பாருமய்யா! பாக்க மாட்டிரா? அய்யா, என்னப் பெத்த அய்யா, கோழி மிதிச்சிக் குஞ்சு சாவாதுன்னா குஞ்சி மிதிச்சிக் கோழி சாவுமாய்யா? என் அய்யா, என்னப் பெத்த அய்யா?” என்று ஆவேசத்துடன் சொல்லிவிட்டு, அவர் காலில் தலையை வைத்துத் தேய்த்தாள். நார்க்கட்டிலில் தலையை மோதினாள். அய்யாவின் மார்பில் புரண்டாள். நெற்றியை அழுத்தினாள். உலகமே இறந்து விட்டது போலவும். அவள் மட்டும் தன்னந்தனியாக இருப்பதுபோலவும் தோன்றியது. பயிர் பச்சைகள் எல்லாம் பட்டுப்போய், வீடுகள் எல்லாம் இடிந்து, மலை, மலையோடு மோதி. கடல், கடலோடு மோதி பூமியெல்லாம் பொடிப்பொடியாய் ஆனது போல் தோன்றியது. பூமி பிளந்து, வானம் வெடித்து, அதில் விழுந்தது போல் ஒரு பிரமை ஏற்பட்டது. ஆறு வயதுக் குழந்தையாகவும். அறுபது வயதுப் பாட்டியாகவும், தன்னைத்தானே மாற்றிக்கொண்டு, அவள் அய்யாவைப் பார்த்தாள். “நான் இவ்வளவு தங்காரப் புள்ளியா இன்னும் சாவாம இருக்கனே” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். அந்த வீட்டோடு அவளும், அவள் அய்யாவும். கண்ணுக்கெட்டாத உயரத்தில், மனதுக்கு எட்டாத வேகத்தில், மனிதர்க்கெட்டாத தூரத்தில் பறப்பதுபோல நினைத்தாள். அந்த அறைக்குள். அவள் அம்மாவும் வந்து அவளை இடுப்பில் வைத்துக்கொண்டு, அய்யாவின் தோளில் தலையைச் சாய்த்துக்கொள்ள அந்த மூவரும், பூமியை, பந்தை உதைப்பது மாதிரி உதைத்துத் தள்ளிவிட்டு, உயரே போய்க்கொண்டிருப்பது போல், தோன்றியது. மனிதர்கள் தள்ளி வைக்க முடியாத பெருவெளிக்குள் – கனபரிமாணம் காண முடியாத பரவெளிக்குள் – வேலிபோட முடியாத வெற்றிடத்திற்குள் – வெற்றிடத்தையும் நிரப்பும் பரம்பொருளுக்குள், அவர்கள் போய்க்கொண்டிருப்பதாக நினைத்தாள். பிறகு புத்தி பேதலித்து விட்டதோ என்று, சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டாள். ‘அய்யா செத்துத்தான் போயிட்டாரா என்று தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் விதத்தில், அந்தப் பிணத்தை ஆட்டிப் பார்த்தாள். இப்போதும், அது அவள் இழுத்த இழுப்பிற்கு வந்து கொண்டிருந்தது.

‘அய்யா, எப்டி எப்டியெல்லாம் கெஞ்சியிருப்பாரோ?’ என்று நினைத்துப் பார்த்தாள். அப்படி அவர் கெஞ்சியது தனக்காகத்தான் என்று அனுமானித்துக் கொண்டாள். அப்படி நினைத்தபோது, அடக்க முடியாத ஆவேசம் ஏற்பட்டது. அந்த ஆவேச சக்தி, சிறிது நேரத்திற்குப் பிறகு, வெடிக்க விரும்பாத அணுசக்தியாக ஐக்கியமாகியது.

உலகம்மை தலையைச் சுருட்டிக் கட்டிக்கொண்டாள். ஊரில் சொல்லலாமா? வேண்டாம்; ஏற்கனவே அவர்களுக்கு நடைப்பிணமாகத் தெரிந்த அய்யா, இப்போது வெறும் பிணம். ‘ஐவராசாவுடைய குரல்வளைய நெரிக்கலாமா? வேண்டாம். இவன், அவ்வளவு சீக்கிரமாய்ச் சாவக்கூடாது. கை அழுவி, கால் அழுவி, உடம்பு முழுதும் கொஞ்சங் கொஞ்சமாக அழுவிச் சாவணும் சேரி ஜனங்களிடம் சொல்லலாமா? இன்னைக்கு வேண்டாம். சொன்னா இப்பவே அய்யாவைத் தூக்கிடுவாங்க.’ அய்யாவை இப்பவே அனுப்ப அவளுக்கு இஷ்டமில்லை. இரவு முழுவதும் அவரை வைத்திருந்து பார்க்க வேண்டும். இருபது வயது வரை. தாய்க்கோழி போல இறக்கைக்குள் வைத்துக் காத்த அந்த அய்யாவை – அந்த அம்மாவை – அந்த சிநேகிதனை – அந்தத் தெய்வத்தை – இன்று ஒரு இரவு முழுவதுமாவது பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அவள் மட்டுந்தான் அவருக்கு மகள். இந்த இரவு வேளையில், அவள் மட்டுமே அவரோடு இருக்க வேண்டும்.

உலகம்மை. அய்யாவையே பார்த்துக்கொண்டு நின்றாள். பின்பு காலில் தலையை வைத்துச் சாய்ந்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தக் கட்டிலில் அவளும் படுத்துக்கொண்டு. அய்யாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கண் மூடினாள். அவர் நெஞ்சைக் கண்ணீரால் குளிப்பாட்டினாள். பிறகு திடீரென்று எழுந்து கட்டிலின் முனையில் உட்கார்ந்து கொண்டு, அவர் தலையைத் தன் மடியில் வைத்தாள். பிறகு மீண்டும் எழுந்து, அவரை விட முடியாதவள் போல், அவர் கைகளோடு தன் கைகளை இணைத்துக் கொண்டாள். அவரை விட்டுத்தான் ஆக வேண்டும் என்பதுபோல், சிறிது விலகி நின்று பார்த்தாள். பிறகு அடியற்ற மரம்போல் அவர்மேல் விழுந்தாள். விழுந்தவள் எழுந்து, அய்யாவின் கன்னங்களுக்கு முத்தங் கொடுத்தாள். பிறகு மூலையில் போய் சாய்ந்தாள். அரைமணி நேரத்திற்குப் பிறகு, அய்யாவை வந்து கட்டிப் பிடித்தாள். அவர் காலை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொண்டாள்.

அதற்குள் இரவு முடிந்து, பொழுது புலர்ந்து விட்டது.