ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்/முன்னுரை
பாளையங்கோட்டையில் இயங்கி வரும் ‘பண்பாட்டு ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனத்தார்’ அயோத்திதாசர் பற்றி ஒரு கட்டுரை படிக்க வேண்டுமென்று பணித்தபோது அதைத் தட்ட முடியாமல் ஏற்றுக் கொண்ட நான் அயோத்திதாசர் சிந்தனைகள் எனும் தலைப்பில் ஞான. அலாய்சியஸ் பதிப்பித்துள்ள மூன்று கட்டுரைத் தொகுதிகளையும் முதன் முதலாகப் படிக்கத் தொடங்கினேன். அப்பொழுது ஒரு பெரும்புயலால் தாக்குண்டது போலவும், ஓர் அசுர ஆற்றலின் விலக்க முடியாத இரும்புப் பிடியில் சிக்குண்டது போலவும், புத்தனே மறு பிறவியெடுத்து வந்து மீண்டும் மனித இனம் முழுவதன் மேலும் அருள்மழை பொழிவது போலவும் உணர்ந்தேன். “தாழ்த்தப்பட்ட எங்கள் இனம் உயர்வதும் எங்களுக்கு வஞ்சம் புரிந்து உயர்ந்தோர் தாழ்வதும் காலப்போக்கில் தவிர்க்க முடியாதவை; ஆயினும் எங்கள் இனம் அவர்களுக்கு எவ்விதக் கொடுமையும் செய்யாது, செய்யக் கூடாது” என்று தம் கட்டுரைகளில் அவர் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்வதும், மாந்தரின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அறவுரைகளைப் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் தந்து விளக்குவதும் என்னை அவர் பால் ஈர்த்தன. நம் நாட்டின் அரசியல், சமுதாயம், சமயம், இலக்கியம் ஆகியவற்றின் வரலாறுகள் பற்றி நான் கொண்டிருந்த முடிவுகளிலும் நம்பிக்கைகளிலும் சில மாற்றங்களும் திருத்தங்களும் செய்ய வேண்டிய நிலையேற்பட்டது.
இவற்றிற்காக, என்னை இவ்வாறு ஆற்றுப்படுத்திய பேராசிரியர் முனைவர் தே லூர்து, முனைவர் டி. தருமராஜன் ஆகியோர்க்கும் நூலை வெளியிடும் கல்லாத்தி ஆய்வு நிறுவனத்தார்க்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ப. மருதநாயகம்
09.02.2006